(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பொதிகை மலையிலிருந்து. தவழ்ந்து வந்த காற்று, தொன்மனின் மென்முகத்தைத் தழுவி, கலகலத்துச் சென்றது.
ஆயினும் அவன் தீர்மானம் தணிவதாய் இல்லை.
அவன் தன் குருவான குறுமுனியிடம் அதைக் கேட்பதென்றே முடிவுக்கு வந்திருந்தான்.
அவன், அவரிடம் சீடனாகச் சேர்ந்த நாளிலிருந்தே அதைக் கவனித்துக்கொண்டுதான் வருகிறான்.
எத்தனை நாள் அதைப் பற்றிக் கேட்க வேண்டும் என்று அவன் மனந்துணிந்தபோதும் ஏனோ, அவனால் அதை அவரிடம் கேட்க முடியாமல் போய்விடுகிறது.
இதற்குக் காரணம் என்ன?
சப்தரிஷிகளில் ஒருவரான அவரிடம் அதைக் கேட்பதென்பது அவரது அறியாமையைச் சுட்டுவதென்பதுபோல் ஆகிவிடும் அல்லவா? முக்காலம் உணர்ந்த சப்தரிஷிகளுக்கும் – பிறக்கும் போதே ஞான உருவாய் பிறக்கும் அவர்களுக்கும் – அறியாமை இருக்குமா? அவர்களது அறியாமை, அறிவுபற்றி ஏன் நீ கவலைப் படுகிறாய்? உன் அறியாமையால்தான் அதைக் கேட்கிறாய் என்று அவர் நினைக்கட்டுமே? அதனால், உனக்கென்ன வந்துவிடப் போகிறது?
எனக்கென்ன வந்துவிடப்போகிறதா?
அவன் மனம் அலை பாய்ந்தது. எனக்கென்ன வந்துவிடப் போகிறதா? என்னையே தலைமைச் சீடனாய் ஏற்றுக்கொண்ட அவரிடம், நானே இக்கேள்வியைக் கேட்பதா? இது குருத்துரோகம் ஆகாதா?
அப்படியேன் நான் நினைக்க வேண்டும்?
கொஞ்ச நாட்களாக இந்த எதிர்ப்புக்குரல் மேலாடிக்கொண்டு வரச்செய்வதே அவரின் வேலைதான் என்று ஏன் அவன் எடுக்கக் கூடாது? குருபக்தி இருக்கவேண்டும். அவரிடம் பயபக்தி இருக்க வேண்டும் என்பதெல்லாம் உண்மை. ஆனால், அந்தக் குருபக்தியும் பயபக்தியும் தன் ஆணவத்தைக் காப்பாற்றுவதற்காக, அதாவது, தன் நலன்களைக் காப்பாற்றி, ‘நல்ல சீடன்’ பட்டம் எடுப்பதற்காக என்றால், அதுவே குருத்துரோகம் ஆகிறது, இல்லையா? அப்படி யான நிலையில்தான், அவனோடு ரிஷியின் ஆச்சிரமத்துக்கு வந்த சகசீடர்கள் இருந்தார்கள்.
அவன் அவர்கள்பற்றிக் கவலைப்படவில்லை.
இன்று அவன் அதிகாலையிலேயே ஆச்சிரமத்துக்கு வந்து விட்டிருந்தான். அவன் வரும்போது தனது வீட்டுத் தோட்டத்தி லிருந்து கொண்டுவந்திருந்த மாங்கனியும் பலாவும் அந்தச் சிறு ஆச்சிரமக் குடிலை நறுமணத்தால் நிரப்பின.
இவனைக் கண்டதும் குறுமுனி, ஆச்சிரமத்தில் தன் மனை விக்குத் துணையாக விட்டுவிட்டு ஆற்றங்கரை செல்கிறார். அவர் ஆற்றங்கரையிலிருந்து திரும்பிவர நாழிகை பலவாகும். கதிரவன் கதிர்களில் இளஞ்சூடு பிடிக்கும்போதே அவர் திரும்பி வருவார். அப்போது, அவருக்கேற்படும் இளம் பசியாற்ற அவரது பத்தினி தினைக்கஞ்சி ஆக்கிக்கொண்டிருந்தாள்.
ஆனால், அவள் முகம் சோகமாய் இருந்தது.
இன்று மட்டுமா அவள் முகத்தில் சோகம்? தொன்மன் அந்த ஆச்சிரமத்திற்கு அவரது சீடனாக வந்தநாளிருந்தே அவள் முகத்தில் சோகம், கடற்காற்றில் உப்புக்கசிவதுபோல் கசிந்து கொண்டே இருந்தது. முதலில் அவனுக்கு அதன் காரணம் புரியவில்லை. பின்னர், தானாகவே அது உள்வெளித்தது. காரணம் என்ன? ஒருநாளாவது ரிஷி தன் மனைவியிடம் கனிவாக இருந்ததை அவன் கண்டதில்லை. ஆரம்பத்தில், ரிஷிக்கும் ரிஷிபத்தினிக்கு மிடையே இருந்த வயது வித்தியாசம் அவனை அசௌகரியப் படுத்திற்று. அவள் வயதை இருபதுக்குமேல் கணிப்பிட முடியாது. ஆனால், அவர் வயதோ அறுபதையும் தாண்டியிருந்தது. இதுதான், அவர்கள் வாழ்க்கையின் இடைவெளிக்குக் காரணமோ? அவரின் பற்றற்ற வாழ்க்கை அவளின் வாழ்க்கையில் பாலைவனமாகத் தகிப்பதுபோல் அவன் நினைத்தான்.
இது, அவனது ஆரம்பக் கணிப்பு.
ஆனால், அது பிழையென்பதை அவன் உணரக் காலம் எடுக்கவில்லை.
தன் கணவனான குறுமுனியைக் காணும்போதெல்லாம் அவள் கண்களில் ஆனந்தம் கூத்தாடுவதை அவன் காணத் தவறுவதில்லை. அவர் வெளியே போய் ஆச்சிரமம் திரும்பச் சுணங்கிவிட்டால், அவள் கண்களில் பதற்றம், ஏக்கம். அவர் திரும்பியதும் அவை ஆனந்தத்தை உள்வாங்கிய கருமணித் திணி வுகளாக மின்ன அவள் அமைதியாக வேலையில் ஈடுபடுவாள். அவளது ஒவ்வொரு வேலையும், அவரது அன்பைத் தன்பால் கவரும் நோக்குடனேயே நடைபெறுவதை அவன் படிப்படியாக அறிந்துகொண்டான்.
சாணம் போட்டு வீடு மெழுகுதல்போல், அவள் தன் கணவ னுக்கான ஒவ்வொரு செயலையும் அன்பினால் வார்த்து அர்ப் பணித்தாள். ஆனால், அவை ரிஷிபுங்கவரிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அவரைப் பொறுத்தவரை அவர் கருங்கல்லாகவே இருந்தார். கருங்கல்லில் உணர்வுகள் விழுதுவிடுவதில்லை.
அன்று காலையும், அவர் ஆற்றங்கரைக்குப் போவதற்கு முன்னரும் அதையே அவன் கண்டான்.
அதிகாலையிலேயே நீராடிய அவள், தன் கணவனுக்குரிய பணிகளைச் செய்வதற்குமுன் அவர் காலடியில் விழுந்து வணங்க முற்பட்டபோது, அவரது குரல் கர்ணகடூரமாகமாக ஒலித்தது.
“ஏய், லோபமுத்ரா, இனிமேல் என் கால்களைத் தொட்டு வணங்குவதை நிறுத்திவிடு.”
“ஏன் அப்பா, அப்படிச் சொல்கிறீர்கள்? இதுநாள்வரை உங்கள் கால்களைத்தொட்டு வணங்கிவிட்டுதானே மற்றக் கடமை களைச் செய்தேன்?”
“இதுகாலவரை இருக்கட்டும், இனிமேல் வேண்டாம்.” “மனைவிக்குக் கணவன்தானே கண்கண்ட தெய்வம்?” “இனிமேல் இந்தப் புராண ஒப்புவிப்புகள் வேண்டாம். உன் இஷ்டதெய்வத்தை வணங்கு.”
“என் இஷ்டதெய்வம் நீங்கள்தான்.”
“ஏய் லோபமுத்ரா, அடிமையாய் இருக்காதே, உன் விடுத லைக்கு வழி பார்.”
அதற்குமேல் குறுமுனி அங்கு நிற்கவில்லை.
விறுவிறுவென வைகையை நோக்கிப் புறப்பட்டுவிட்டார். அவன் பேசாமல் இருந்தான்.
உள்ளே லோபமுத்ராவின் விசும்பல் கேட்டது.
அவள் முகத்தின் பொலிவு, கீழ்வானில் இருந்து கிளம்பி வரும் முகில் திரளால் மறைக்கப்படும் நிலாப் போல் சோகக் கவிப்பால் இருண்டது.
என் குருதேவரான குறுமுனிக்கு இரக்கம் என்பதே இல்லையா?
ஏன் இப்படி நடந்துகொள்கிறார்? அவன் யோசித்தான்.
வழமையாக இளவயதினரை மணந்துகொள்ளும் முதியவர் களிடம் காணப்படும் சிடுசிடுப்புக்கும், குரோத உணர்வுக்கும் இவரும் விதிவிலக்கில்லையா? ஆனால், இங்கே ஒரு வித்தியாசம். வழமையாக முதியவரை மணந்துகொள்ளும் இளம் பெண்கள், தமக்குக் கணவனாக வாய்த்த முதியவர்களில் அடியோடிய வெறுப்பை உமிழ்பவராகவே இருப்பர். ஆனால், லோபமுத்ராவோ தன் கணவன்மேல் ஆறாக் காதல் கொண்டிருந்தாள் என்பதற்கு அவள் கண்களே சாட்சி. குறுமுனியின் வருகையைத் தூரக் காணும்போதே, அது, ஆனந்தக் கூத்தாடுவதை அவன் இந்த ஓராண்டு ஆச்சிரம வாழ்க்கையில் எத்தனைமுறை கண்டிருக்கிறான்.
ஆனால், அவளின் கட்டற்ற காதலை ஏன் குருதேவர் கௌரவிப்பதில்லை? கௌரவிக்கத்தான் வேண்டாம், ஓர் சிறு கனிவின் துளியையாவது அவள்மேல் தெளிக்க வேண்டாமா?
வைகை ஆற்றங்கரையை நோக்கி நடந்துகொண்டிருந்த சப்தரிஷிகளில் ஒருவரான குறுமுனிக்கு, பழைய நினைவுகள் ஓடி வந்தன.
ஒருமுறை வைகை நீரைத் தன் கமண்டலத்தில் ஏந்தியவாறு அந்த அரச சபைக்கு அவர் சென்றார். அவர் எல்லாம் தெரிந்தே சென்றார். நீண்ட காலமாகப் பிள்ளைப்பலன் இன்றி வருந்தும் அரசனுக்கும் அரசிக்கும் ஆறுதல் அளிக்கவே அங்கு சென்றார். குறுமுனிக்கு அங்கே ராஜமரியாதை. அரசனும் அரசியும் ரிஷியின் கால்களில் வீழ்ந்து வணங்கினர். தம் பிள்ளையில்லாக் குறையை நீக்கும்படி இரந்துநின்றனர்.
“கவலையை விடுங்கள். உங்கள் குறையைத் தீர்க்கவே வந்தேன்” என்று கூறிய குறுமுனி, நிலத்தில் ஒரு தர்ப்பையைப் போட்டு, தான் கமண்டலத்தில் ஏந்திவந்த வைகை நீரைத் தெளித்தார்.
அடுத்த வினாடி அங்கே, தங்கச்சிலை போன்ற அழகிய பெண் குழந்தை கிடந்து சிரித்தது. பேருவகை அரண்மனையை நிறைத்தது.
அதைத் தூக்கி, அரசனும் அரசியும் ஒருசேரக் கைநீட்ட அவர்களிடம் ஒப்படைத்த குறுமுனி, அங்கிருந்து கிளம்பினார்.
நீண்ட இருபது வருடங்கள் ஓடி மறைந்தன.
அதற்காகவே காத்திருந்த குறுமுனி மீண்டும் அதே அரச சபைக்குச் செல்கிறார்.
அரசனும் அரசியும் ஓடோடி வந்து அவரை வரவேற்கின்றனர்.
ஆனால், அடுத்த வினாடி குறுமுனி விடுத்த கோரிக்கை யினால் நிலை தடுமாறிப்போயினர்.
“உங்கள் மகளை எனக்கு மனைவியாகத் தாரைவார்த்துத் தாருங்கள்.”
குறுமுனி போட்ட கோரிக்கையோ நடுவானில் பெயர்ந்த இடியோசையாக, அங்கு ஏந்துவாரற்று நின்றது.
“என்ன சொல்கிறீர்கள்?” குறுமுனியின் அதட்டலான கேள்வி மீண்டும் ஒலித்தது.
கொடுத்தவனே பெண் கேட்கிறான்.
மறுத்தால் அவர்கள் அரச வாழ்க்கையே கேள்விக்குள்ளாகி விடும்.
“தருகிறோம் குருதேவரே” என்று ஒப்புக்கொண்ட அரசனும் அரசியும், தாம் இத்தனை காலம் வளர்த்த தம் பெண்ணைத் தாரைவார்த்துக் கொடுத்தனர்.
குறுமுனி அடுத்த கணமே, அங்கிருந்து தன் மனைவியுடன் ஆச்சிரமத்தை நோக்கிப் புறப்படுகிறார். மகளைப் போகவிட்டு ‘கன்றுபிரிகாராவின்’ துயரோடு அரசனும் அரசியும் நிற்கின்றனர். மகளோ விட்டுவிடுதலையாகிவிட்ட மான்குட்டிபோல் ரிஷியின் கைகளைப் பிடித்தவாறு துள்ளிக் குதித்தபடி செல்கிறாள்.
ஆற்றங்கரைக்குப் போன முனிவர், இளவெயில் உடலில் மினுக்கங்காட்ட ஆச்சிரமத்துள் நுழைகிறார். உடலில் வேர்வைத் துளிகளின் சிதறல். அதை ஒத்தி எடுப்பதற்கான துணியோடு நிற்கிறாள் ரிஷிபத்தினி.
‘என்னைத் தொடத் தேவையில்லை. துணியை அப்படி வைத்துவிட்டுப் போ” ஒருவித கடுகடுப்போடு முனிவரின் வார்த் தைகள் வெளிவருகின்றன.
முகத்தில் பொங்கிய ஆனந்தம் வற்றிப்போக, அவள் உள்ளே போகிறாள்.
சிறிது நேரத்தில் தினைக்கஞ்சிக் குடுவையோடு வருகிறாள். கையில் பலா இலைகள் கஞ்சி பருகுவதற்காகக் குவளைகளாக மடிக்கப்பட்டுள்ளன.
“அதை வாங்கிக் கொள். எனக்கு ஊற்றித் தந்து, நீயும் குடி” சீடனுக்குக் கட்டளையிடுகிறார் ரிஷி. அவள் துக்கத்தோடு கஞ்சிக் குடுவையை சீடன் முன்னே வைத்துவிட்டு, உள்ளே சென்று விம்முகிறாள்.
“இது பெரிய அநியாயம்!” தொன்மன் திடீரெனக் கத்தினான்.
கஞ்சியைப் பருகிக்கொண்டிருந்த ரிஷி, ஒரு கணம் விழிகளை உயர்த்தி, “எது அநியாயம் ?” என்கிறார்.
“நீங்கள் செய்வதுதான்” என்று கத்திய சீடன், “கட்டிய மனைவியிடம் ஒரு துளி அன்புகூடக் காட்ட முடியாதவர் முக்காலம் உணர்ந்த ரிஷியாக இருந்தும் என்ன பயன்? நான் உங்களின் சீடனாய் இருப்பதையிட்டு வெட்கப்படுகின்றேன்” என்று சீறினான்.
ரிஷி மெதுவாகச் சிரித்தார். சிரித்துவிட்டு, “நீ என்னிடம் எதற்காக வந்தாய்; அன்பு தேடியா அல்லது விடுதலை தேடியா?” என்று கேட்டார்.
“அதிலென்ன சந்தேகம், விடுதலை வேண்டியே வந்தேன்.”
“அப்படியானால், விடுதலை அன்பினால் ஆகுமென்று நினைக்கிறாயா?”
“அன்பினால் ஏன் ஆகக்கூடாது?”
“அப்படியானால், நீ உன் அம்மா அப்பாவோடேயே இருந்திருக்கலாமே, உலகில் அவர்கள் தரும் அன்புக்கிணையேது?”
“அப்படியானால், நீங்கள் பாவிக்கும் வன்முறைதான் விடுதலைக்கு வழி என்கிறீர்களா?” சீடன் திருப்பிச் சாடினான்.
“நான் வன்முறை பாவிக்கிறேனா?” முனிவர் சிரித்தார். “உண்மையைச் சுட்டாத, விடுதலைக்கு எதிரான எல்லாச் செய லுமே வன்முறைதான்; அன்பு உட்பட. அதைத்தான் நீ செய்கிறாய்; நானல்ல.”
மீண்டும் குறுமுனி சிரித்தார். சிரித்துவிட்டு மீண்டும் கூறினார். “விடுதலைக்கு வன்முறை மென்முறை என்ற ஒன்றில்லை. அது எல்லாவித முறைகளையும் கடப்பது. ஒரு நாடும் சரி, வீடும் சரி, நீயும் நானும் சரி ஒளிபெறுவது விடுதலையால்தான், தெரியுதா?”
அவன் கேட்டுக்கொண்டிருந்தான்.
ஆனால், ஆயிரமாயிரம் கேள்விகள் பாம்புமாதிரி படமெடுத் துப் படமெடுத்துத் தலைகவிழ்ந்தன.
அன்று காலையில் ரிஷி வைகையில் நீராட, தொன்மனையும் ஏனைய சீடர்களையும் ரிஷிபத்தினியையும் அழைத்துச் செல்கிறார்.
ரிஷி உட்பட எல்லோரும் ஆற்றில் இறங்கி நீராடுகின்றனர். சீடர்கள் ஒருவர்மேல் ஒருவர் நீரை எற்றி, தம்மை மறந்து நீராடு கின்றனர். ரிஷியருகே நீராடிக்கொண்டிருந்த ரிஷிபத்தினி திடீரென ஆழநீருக்குள் அள்ளுப்பட்டுச் செல்கிறார். ரிஷி கவனிக்காதது போல் நிற்கிறார். அவள் அந்தரப்பட்டுத் திக்குமுக்காடுவதை அவரது பிரதம சீடன் கவனித்துவிட்டான்.
“குருதேவா! உங்கள் பத்தினி ஆற்றிலே அள்ளுப்பட்டுப் போகிறாள்! அவரைக் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என்று பெரிதாகக் கத்துகிறான். ஏனைய சீடர்களும் சேர்ந்து கூக்குரல் வைக்கின்றனர்.
இத்தனைக்கும் குறுமுனி ஏதும் நடக்காததுபோல் நின்று கொண்டிருந்தார். இவர்களின் கூக்குரலைக்கூட அவர் பொருட் படுத்தியதாக இல்லை.
அவள் நீரில் அள்ளுப்பட்டுப்போய்க்கொண்டிருந்தாள். இடைக்கிடை தத்தளிப்பு. ஈற்றில் எல்லாம் அடங்கி ஆற்றோடேயே கலந்துவிட்டாள்.
நீராடி முடிந்த ரிஷி, ஆச்சிரமத்தை நோக்கி நடந்தார். சீடர் களும் அவர் பின்னால் சென்றனர்.
ஆச்சிரமத்தை அடைந்ததும் தலைமைச் சீடன் தொன்மன் பெருங்குரல் எடுத்துக் கத்தினான்.
“நீ ஒரு கொலைகாரன். இன்றோடு எங்கள் குரு-சீட உறவு முடிந்தது. ஒரு கொலைகாரனுக்குச் சீடனாய் இருப்பதைவிடச் சாவது மேல். நீ நாசமாய்ப்போக!” என்று திட்டிவிட்டு அங்கிருந்து புறப்படத் திரும்பினான்.
“நில்!” குருவின் குரல் மிகுந்த அழுத்தத்தோடு வந்தது.
“என்ன?” என்பதுபோல் சீடனின் பார்வை.
“நான் என் மனைவியைக் கொலை செய்யவில்லை; அவளுக்கு விடுதலை அளித்தேன்.”
“கொலைக்கு நீ வைக்கும் பேர் விடுதலையா?” சீடன் மீண்டும் சாடினான்.
“அவளை யாரென்று அறியாமல் பேசுகிறாய்.” குரு விளக்க முயன்றார்.
“யாராய் இருந்தால் என்ன, கொலைச்செயல் மாறிவிடுமா..?” சீடன் குறுக்கிட்டான்.
“ஆத்திரப்படாதே, கேள், அவள் யார் தெரியுமா?”
“யார் அவள்?” சீடனின் சினம், யார் அவள் என்று அறிய ஆவல் கொண்டது.
“அவள்தான் இந்த வைகையம்மை. நான் அவளை இந்நீரிலிருந்தே உருவாக்கினேன். எனக்காக மானிட உருத்தரித்த அவள், தான் யாரென்பதை மறந்து என்னில் பற்று வைத்தாள். அதை ஊக்குவிக்காது, அவளை யாரென்று உணரவைத்து அவளுக்கு இன்று விடுதலை அளித்தேன். இல்லையெனில் வைகை வற்றிப் போம்,நாடு பாழடைந்துவிடும்..” என்று ரிஷி சொல்லிவிட்டு, “இது மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாதது” என்றார்.
பிரளயம் முடிந்த பேரமைதி தொன்மனை விழுங்கிக்கொண் டிருந்தது.
“என்ன!” என்று தொன்மனின் நெஞ்சதிர, அவன் எங்கோ வீசப்பட்டுக்கொண்டிருந்தான். அவன் கண்களில் கண்ணீர் கசிந்தது.
“ஏன் அழுகிறாய்?” ரிஷியின் குரல் அசரீரிபோல் கேட்டது. “இன்றுதான் நான் ரிஷிமூலம் நதிமூலம் என்பவற்றின் விளக்கமாக ஒருவர் இருப்பதைக் காண்கிறேன்” என்றான்.
“இல்லை, நான் விடுதலைமூலமாக இருக்கிறேன்” என்று கூறிய ரிஷி, இப்பேரண்டத்தின் தனிமையையே தன்னில் தாங்கி, சீடர்களுக்குத் தினைக்கஞ்சி ஆக்க, ஆச்சிரமக் குடிலினுள் புகுந்தார்.
அப்போது வைகை கலகலத்து ஓடுவது தொன்மனின் காது களில் கேட்டுக்கொண்டேயிருந்தது.
– 2005
– முடிந்து போன தசையாடல் பற்றிய கதை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, தமிழியல், லண்டன்.