விடியல் வராதா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 24, 2024
பார்வையிட்டோர்: 440 
 
 

(2017ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எண்பது தொண்ணூறுகளில் அசோக் நகரில் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் ஒன்றில் எங்களுக்குச் சொந்தமான ஒரு பகுதி வீட்டில் வசித்து வந்தோம். அந்தக் குடி இருப்புகளுக்கு இரு பக்கம் பிரதான சாலைகள். ஒரு பக்கம் அரசினர் வாடகைக் குடியிருப்பு வீடுகள். மறு பக்கம் பல குடிசைகள். காலனி வீடுகளில் பகுதி நேரப் பணி செய்ய வரும் பெண்கள் எல்லாம் அனேகமாக அந்தக் குடிசைகளில் இருந்து வருபவர்களே. அந்தக் குடிசைகள் இருந்த பொது நிலத்தை அவர்களுக்கே உரிமையாக்கித் தந்திருந்தது அரசு.

அந்தக் குடிசைகளில் இருந்து வந்தவர்கள் தான் எங்கள் வீட்டில் பணி புரிய வந்த பாப்பாவும், ஆவின் டிப்போவில் இருந்து பால் பேக்கெட்டுகள் கொண்டு வந்து கொடுக்கும் ஆயாவும்.

சூரியன் உதிக்க மறந்தாலும் மறக்குமோ என்னவோ ஆயா ஒரு நாளும் விடுமுறை எடுத்துக் கொண்டதில்லை.

பாப்பாவின் கதையே தனி. சம்பளம் கொடுத்து ஒரு வாரம் கூட ஆகி இருக்காது.

“அம்மா இன்னிக்கி ரேசன்லெ அரிசி போடப் போறாங்களாம்மா.” என்பாள்.

“அதுக்கென்ன இப்போ?” இது என் மனைவி.

“ஒரு நூறு ரூவா அட்வான்சு குடுங்கம்மா. அடுத்த மாசச் சம்பளத்துலெ புடிச்சுக்கோம்மா.”

“இப்பொதானே சம்பளம் கொடுத்தேன். அதெ என்ன பண்ணே?”

“என் ரெண்டாம் மவன் என்னெ அடிச்சி புடுங்கிகிட்டுப் போயி குடிச்சு தீத்துட்டாம்மா”.

“அவன் வேலெ வெட்டி எதுவும் செய்யுறது இல்லியா?’

“செய்யுறாம்மா.”

“என்ன வேலெ?”

“ஊடுங்களுக்கு பெயின்டு அடிக்கிற வேலெம்மா.”

“அதுலெ வர காசெ என்ன பண்ணுவான்?”

குடிச்சே தீத்துடுவாம்மா. ஏண்டா இப்பிடிக் குடிச்சு அளியறேன்னு கேட்டா, ‘ஒனக்கு என்னா ஆத்தா தெரியும் நான் செய்யுற வேலெ என்ன பேஜாரான வேலென்னு? நாள் பூரா அந்தப் பாளாப் போற பெயிண்டு வாசெனெ புடிச்சீட்டு ராவுலெ சாராயம் குடிக்கலேன்னா மக்கா நாளு வேலெக்கிப் போவ முடிமா?’ ன்னு என்னியெத் திருப்பிக்கேப்பாம்மா.”

சாப்பாட்டுக்கு இல்லென்னுதான் கேக்குறா பாவம். நாங்களும் கொடுத்தோம் நூறு ருபாய்.

“இதெ ரெண்டு மாசமாக் களிச்சுக் கோங்கம்மா” என்பாள் கையில் பணம் வந்த உடன். வேறு வழி. “சரி” என்றோம்.

“ஒன் பெரிய புள்ளெ எங்கெ இருக்கான்?”

“அவன் இந்த ஊரிலேயேதான் இருக்காம்மா. ஆனா எங்கூட இல்லேம்மா. அவனுக்கு கண்ணாலம் கட்டியாச்சு. ரெண்டு பொட்டெப் புள்ளெங்க. அப்போப்பொ வருவான். ‘ஏ கௌவி ஒனக்கு வயசாயிடிச்சு. இந்த ஊட்டெ வெச்சிகிட்டு என்னா பண்ணப் போறெ?எம் பேருலெ எளுதிக் குடு’ ன்னு சண்டெ போடுவாம்மா. ‘நீ எளுதிக் குடுக்கலேன்னா நீ செத்து போனப் புறம் அரசே எடுத்துகிடுவாங்க’ ம்பான்.

“எளுதிக் குடுத்தூட்டு அவன் கூடயே போயி இருக்கறது தானே?”

“அவன் கூடயா? அங்கெ இருக்காளே ஒரு மவராசி, ஒரு வேளெக்கஞ்சி ஊத்துவா எனக்கூங்கெறெ? அப்பாலே என் சின்ன புள்ளெக்கு என்னம்மா கதி?”

இரண்டு மாதங்கள் கழிந்தன. ஒரு நாள், “அம்மா ஒரு ஐநூறு ரூவாக் குடும்மா. ஒரு ஆளு என் சின்ன மவனுக்கு ரேசன் கடேலெ வேலெ வாங்கித் தறேன்னு சொல்றாம்மா. மாசா மாசம் சம்பளமும் வரும். கூடவே அரிசி, சக்கரே, கிரிஷ்ணாயில்னு காசில்லாமெ கெடெய்க்கும்.”

அதையும் கொடுத்தோம். கொடுத்தோம் என்று சொல்வதா? கொடுத்துக் கெடுத்தோம் என்று சொல்வதா என்று எனக்குப் புரியவில்லை. காரணம் அடுத்த மாதமே பாப்பா ஆரம்பித்தாள் அவள் புலம்பலை.

“அந்த ஆளு எம் புள்ளெயெ ஏமாத்தீட்டாம்மா ரூவாயெ எடுத்துகிட் ஓடிட்டாம்மா.” ஏமாற்றியது யார்? ‘அந்த ஆளா’ அல்லது அவள் செல்ல மகனா? இன்று வறை எங்களுக்குப் புரியாத புதிர் இது.

“அம்மா எனக்கு சின்ன மருமவ வந்தூட்டாம்மா. நல்ல செவப்பும்மா அவொ. என்ன ஒண்ணு அவொ வேரெ சாதியாம்மா. துலுக்கப் பொண்ணுன்னு சொல்லுறான் பையன். வெள்ளெ அடிக்கப் போன எடத்துலெ அவளுக்கும் இவனுக்கும் ஒரு இது வந்திடிச்சாம்மா. என்ன சாதியானா என்னம்மா? அவுங்க நல்லா இருந்தாசரி. ஊட்டுக்கு புதுசா வந்தவளுக்கு விருந்து சமையல் பண்ணண வாணாம்மா. ஒரு நூறு ரூவாக் குடேம்மா.”

“சரி.”

எந்த ஒரு மாசமும் அவள் முழுச் சம்பளம் வாங்கியதாக எனக்கு நினைவில்லை.

வேரொறு நாள் “அம்மா ஒரு நூறு ரூவா குடும்மா. எம் பேத்தி பெரியவளா ஆயிருக்காளாம். சீரு செய்யணும்மா.”

பிள்ளையோடு பேச்சு வார்த்தை இல்லை. பேத்திக்கு சீரு செய்யணுமாமே? அதனால் என்ன? நல்ல காரியந்தானே? கொடுத்தோம் பணம்.

ஒரு நாள்,”அம்மா ஒரு நூறு ரூவாக் குடும்மா.”

“இப்பொ எதுக்கு?”

“எங்க தெருலெ ஒரு கௌவி போய்ட்டாம்மா. அவளுக்கு மருவாதி செய்ய வாணாம்? மாலெ வாங்கிப் போடணும்மா.”

“எந்தக் கெளெவி செத்துப் போயிட்டா?”

“அதாம்மா எப்பொ பாத்தாலும் கெட்டெ வார்த்தெய்ங்க சொல்லி யாரு கூடெயாவது சண்டெ போட்டுகிட்டே இருப்பாளே அவம்மா.”

“நியாயம் தானே. இறந்தவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டுமே. இல்லா விட்டால் அவர்கள் ஆவி வந்து நமக்குத் தீங்கிழைத்து விட்டால்!!!”

கை மாறியது நூறு ரூபாய்.

பாப்பாவின் குடிசை வாசலிலும் அங்கிருந்த மற்ற குடிசைகளின் வாசலில் எல்லாமும் முருங்கை மரங்கள். அவற்றுக்கு அவர்கள் தண்ணீர் ஊற்றுவதாக் கூடத் தெரியவில்லை. ஆனால் சடைசடையாய்க் காய்கள் அந்த மரங்களில் எங்கள் வீட்டருகேயும் ஒரு முருங்கை மரம் வைத்தோம். அதில் இலைகள் மண்டிடுமே தவிர காய்கள் காய்ப்பதில்லை.

பாப்பாவைக் கேட்டோம் ஒரு நாள், “அதெப்படி. நாங்க வெச்ச முருங்கை மரத்ததுலெ காய்ங்க வரதில்லெ. உங்க வீடுங்க கிட்டெ இருக்குற மரங்கள்லெ மட்டும் அப்பிடிக்காய்க்குது?”

“நாங்க அதுக்கு கவுச்சு வெப்போம்மா.”

“என்னது? கவுச்சு வெப்பாளாமே? அடுத்த வேளெக் கஞ்சி எங்கெ கெடெய்க்கும்னு இருக்குற இவொ முருங்கைக்கு கவுச்சு வெப்பாளாமே?” இது என் மனதில் எழுந்த மற்றொரு சந்தேகம்.

அதற்கடுத்த மாதம் இரண்டு மூன்று நாட்கள் பாப்பா வரவில்லை வேலைக்கு. பின் அவள் வந்த போது கேட்டாள், “அம்மா ஒரு ஐநூறு ரூவாக் குடும்மா.”

“எதுக்கு?”

“எம் மவனே போலீசுலெ அடிச்சு இளுத்துகிட்டு போயிட்டாங்கம்மா. ‘நீ ஐநூறு ரூவாக் குடு. உடறேங்’ கறாங்கம்மா.”

“எதுக்கு அவனெ போலீசுலெ புடிச்சு இழுத்துகிட்டுப் போனாங்க?”

“கிளியாட்டம் வந்திருக்கா எனக்கு சின்ன மருமவன்னு சொன்னேன் இல்லெ. அவொ நாலு நாளு முன்னெ மண்ணெண்ணெயெ ஊத்திகிட்டு பத்த வெச்சுகிட்டாம்மா. ஆசுபத்திரிக்குத் தூக்கிட்டு போனோம். ‘அவொ செத்து போயாச்சு’ ந்னு சொல்லீட்டாங்கம்மா. அவொ அப்பா அம்மாக்கு சொல்லி அனுப்சேன். அவங்க போலீசோட வந்து எம் புள்ளெய அடிச்சு இளுத்து கிட்டுப் போயிட்டங்கம்மா.”

“பாப்பாவுக்கு விடிவு காலமே வராதா?” என் மனத்துள் ஒரு கேள்வி.

பலமாடிக் குடியிருப்புகளுக்கே உரித்தான சிலெ கஷ்டங்கள் வந்ததால் 1995 ல் தனி வீடு கட்டிக் கொண்டு குரோம்பேட்டைக்குக் குடி பெயர்ந்தோம்.

பதினைந்து வருடங்களுக்குப் பின் சென்ற வருடம் அசோக் நகருக்குச் சென்றிருந்தேன் எனது பகுதிக் குடியிருப்பில் நடந்து வந்த சிறு மராமத்துப் பணிகளைப் பார்வையிட ஒரு பக்கம் இருந்த குடிசை வீடுகளுக்குப் பதிலாக இரட்டை மாடிக்கட்டிடங்களும் ஓட்டு வீடுகளும் வந்திருந்தன். என்ன ஒரு மாற்றம்!

வழக்கம் போல மூன்று காலனி காவல்காரர்கள் தலையைச் சொரிந்து கொண்டு வந்து நின்றனர். “அய்யா இங்கெ இருந்தப்போ பொங்கலு, திவாளின்னு எனாம் கொடுப்பீங்க.’ சொரிந்த தலைகள் ஒவ்வொன்றுக்கும் பத்து ரூபாய் கொடுத்து விட்டு, அவர்களுள் மூத்தவரை, “பாப்பா இருந்தாக் கூட்டி வாப்பா” என்றேன்.

“அவொவர மாட்டா சார்.”

“ஏன் வர மாட்டா? எங்க மேலெ கோவமா?”

“இல்லே சார். அவொ போயிட்டா சார்.”

“எங்கெ? மொத புள்ளெயோடெயா?”

“இல்லே சார். திரும்ப வரவே முடியாத எடத்துக்குப் போய்ச் சேந்தூட்டா சார் அவொ”

“பால் ஆயா?”

“அவ இப்போ வயச்சாயி வீட்டொட படுத்துக் கெடெக்கா சார்”.

என் கேள்விக்கு விடை கிடைத்து விட்டது. பாப்பாவுக்கும், பால் ஆயாவுக்கும் விடியல் வந்து விட்டது.

– அபலைகள், முதற் பதிப்பு: ஜூலை 2017, மின்னூலாக்கம்: தனசேகர் (tddhanasekar@gmail.com), மின்னூல் வெளியீடு: http://FreeTamilEBooks.com.

என்னைப் பற்றி சில (பல?) வரிகள்: எழுதும்படியாக ஒன்றுமே இல்லை. இருப்பினும் எழுதுகிறேன். பிறந்தது சிதம்பரத்தில், 1929 ஜூன் 15 அன்று. தந்தை தென் இந்திய ரயில்வேயில் அதிகாரியாக இருந்தார். நான்கு அண்ணன்கள். நால்வரும் இன்று இல்லை. மூன்று தங்கைகளில் இருவர் இன்று இல்லை. பெற்றோர்கள் நரசிம்மன், ராஜலக்ஷ்மி - படம் கீழே சாந்த ஸ்வ்ரூபிகள். சுற்றத்தாரையும் அரவணைத்துக் கொண்டு, குழந்தைகளையும் வளர்த்து முன்னுக்குக் கொண்டுவர தனக்கென ஒரு சுகமும்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *