இந்த உலகத்தின் கண் காணாத தேசம் ஒன்றின் அதிபராக இருக்கும் நான் அன்று இரவு தூக்கம் வராமல் எனது மாளிகையில் மல்லாந்து விட்டத்தை பார்த்தபடி படுத்து கிடக்கிறேன். திடீரென்று மேல் சுவரில் கரிய நிழல் ஒன்று படிந்தது.மனித உருவமும் இல்லாமல் விலங்கினதும் இல்லாமல் குழப்பமாக இருந்தது.
யார் நீ ? இந்த கேள்வி என்னிடமிருந்து வெளீப்பட்டாலும், உதடுகள் அசைந்ததாக தெரியவில்லை. மனது இந்த கேள்வியை கேட்டிருக்குமோ?
என்னை தெரியவில்லையா? இல்லை தெரியாதது போல் இந்த கேள்வியை கேட்கிறாயா? நிழல் பதில் சொல்லவும் எனக்குள் ஆச்சர்யம், உதடுகள் அசையாமல் ஒலிகள் எழும்பாமல் எப்படி கேள்விக்கு பதில் சொல்கிறது.
உன்னை தெரிந்து கொள்ள எனக்கு விருப்பமில்லை, அதற்கு நேரமுமில்லை, இந்த நாட்டின் அனைத்து அதிகாரங்களும் கொண்ட அதிபர் நான், இத்தனை பாதுகாப்பையும் மீறி நீ எப்படி என் எதிரில் வந்தாய்?
கெக்கலிட்டு சிரித்தது நிழல், உனக்கு பாதுகாப்பா?.இன்னும் எத்தனை காலம் இந்த பாதுகாப்பில் காலம் தள்ளிக்கொண்டிருக்கப்போகிறாய்?
இங்கு பார் உன்னிடம் பேசிக்கொண்டிருக்க எனக்கு நேரமில்லை, இப்பொழுதே என் பாதுகாவலர்களை கூப்பிடுகிறேன்,
தாராளாமாக கூப்பிடு, அவர்களிடம் என்னை மிரட்டுகிறான் இவன் என்று சொல். அவர்களும் புரிந்து கொள்வார்கள் அதிபரின் கடைசி காலத்தில் எதை கண்டோ பயந்து போயிருந்தார். அதற்கு சாட்சியாக நாங்கள் இருந்தோம் என்பார்கள்.
பயமா ! எனக்கா, இந்த உலக நாடுகள் என்னை எப்படி அழைக்கின்றன தெரியுமா? சர்வதிகாரி என்றுதான் அழைக்கின்றன. எதற்கும் பயப்படாதவன், இதுதான் இந்த நாடு என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை.
அப்படியா, ஆச்சர்யாம்தான், நிழலை கூட கண்டு பயந்து சாகும் உன்னை எதற்கும் பயப்படாதவன் என்று சொல்வதும் சரிதான்.
கிண்டல் செய்கிறாயா? சரி உனக்கு என்ன வேண்டும்?
நிழல் விழுந்து விழுந்து சிரித்தது, நான் எதை கேட்டாலும் கொடுத்து விடுவாயா?
ஆம் பணம், பொருள் எது வேண்டும், சர்வ அதிகாரம் படைத்த நான் நீ எது கேட்டாலும் கொடுக்கிறேன்.
அப்படியானால் உன் உயிரை கொடுத்து விடுகிறாயா.
உயிரா விளையாடுகிறாயா? இந்த இடத்துக்கு வர நான் எழுபது வருடங்களுக்கு மேல் உழைத்திருக்கிறேன் தெரியுமா? இந்த இடத்துக்கு வந்து ஐந்து வருடங்கள் கூட ஆக வில்லை, நானே சாகும் வரை அதிபராக இருக்க முயற்சிகள் செய்து கொண்டிருக்கும் போது நீ என் உயிரை கேட்கிறாயா?
உழைப்பு என்று எதை சொல்கிறாய்? சூழ்ச்சி, பித்தலாட்டம், துரோகம், கொலை, ஆட்சி கவிழ்ப்பு, இவைகள் எல்லாம் உழைப்பு என்று சொல்லுகிறாயா?
இப்படியெல்லாம் செய்வதுதான் அரசியலில் யதார்த்தம், இதை எல்லாம் செய்யாமல் அரசியலும் செய்ய முடியாது, அப்படி முயற்சித்தால் நம்மால் தாக்கு பிடிக்கவும் முடியாது.
சரி இப்படி எல்லாம் செய்து எண்பது வருடங்களுக்கு மேல் வாழ்ந்து விட்டாயே, அப்புறம் என்ன? வா என்னுடன்.
ஐயோ என்னை இன்னும் கொஞ்ச நாள் வாழ விடு.
உண்மையை சொல், இப்பொழுது நீ வாழ்வது வாழ்க்கையா? பிறர் தயவு இல்லாமல் உன்னால் நடக்க முடியுமா? இல்லை பரிபூரண உணவுகளாவது உன்னால் உண்ண முடியுமா? வெறும் கஞ்சியைத்தானே தினமும் அருந்துகிறாய். இவ்வளவு சிரமப்பட்டு இந்த உடலை வைத்து ஏன் சிரமப்படுகிறாய்?
இது உனக்கு புரியாது, இந்த பதவியில் இருந்து பார்த்தால் இதன் ருசி உனக்கு தெரியும். சமூகம் கொடுக்கும் மதிப்பு, மரியாதை, எல்லாம் அனுபவிப்பவனுக்குத்தான் தெரியும். இன்னும் கொஞ்சம் நாள் அனுபவிக்க விடு.
சரி இந்த மதிப்பும், மரியாதையும் இருக்கும்போது மரணத்திற்கு பின் உன் உடலுக்கு பெரும் மரியாதை கிடைக்கும் அல்லவா? அதனால்தான் என்னுடன் இப்பொழுதே வந்து விடு என்கிறேன்.
பதவியில் இருப்பது அனுபவிக்கத்தானே தவிர சாவதற்கு அல்ல. நாளை நான் ஐரோப்பிய நாடுகளுக்கு தனிப்பட்ட பயணமாக போகிறேன். எனக்கென்று தனி விமானம், வசதிகள் எல்லாம் உண்டு. இவ்வளவும் அனுபவிப்பதை தடுக்க நினைக்காமல் தயவு செய்து இங்கிருந்து போய் விடு.
நல்லது நீ கொடுத்து வைத்தது அவ்வளவுதான், எண்பதை கடந்தவர்களுக்கு இயற்கை ஒரு வாய்ப்பை கொடுக்கிறது, அவர்களாக விரும்பி விட்டால் அவர்களை மரணத்திற்கு அழைத்து போகலாம். பூமியில் அவர்கள் பூத உடலுக்கு மரியாதை கிடைக்கும். அதை நீ உதறி விட்டாய், வருகிறேன். நிழல் மறைந்தது.
மறு நாள் மாலை மூன்று மணி அளவில் நம் நாட்டு அதிபர் சென்ற தனி விமானம் விபத்துக்குள்ளாகி பசிபிக் பெருங்கடலில் விழுந்து விட்டது. அதில் பயணம் செய்த விமான ஓட்டிகள் இருவரும், உதவியாளர்கள் இருவரும் மீட்கப்பட்டார்கள். அதிபரை தேடும் படலம் நடந்து கொண்டிருக்கிறது.
கடைசி வரை அவர் உடல் கண்டெடுக்கப்படவில்லை. அவர் மரணித்து விட்டதாக அறிவிப்பு செய்யப்பட்டது.