வாழத் தெரிந்தவர்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 141 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

லண்டன்லேயிருந்து வந்திருக்கிற சிங்கிங் லயன்சுக்கு [பாடும் சிங்கங்களுக்கு] டின்னர் பார்ட்டி அதுக்குத்தான் கிளம்புறோம் என்று என்னைப் பார்த்துச் சொல்லிக்கொண்டே வாசற்படியில் இறங்கினார் நண்பர் ஜே லிங்கம் பெருமைகொடி கட்டிப் பறந்தது அவர் முகத்திலே!

நான்குமுழ வேட்டியும் அரைக்கைப் பனியனும் கையில் புத்தகமுமாகச் சாய்வு நாற்காலியில் உட்காரப்போன நான் ஒரு கணம் தயங்கி நின்றேன், வேலை முடிந்து வீடு திரும்பிய பிறகு பொழுதைப் போக்குவதற்கு என்னைப்போல் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர் அல்லர் அவர்,

முடங்கிக் கிடக்க நினைத்தாலும் அவர் உடுத்தும் உடுப்பு அவரை முடங்க விடாது!

உடம்பில் சூட்டும் கோட்டும் பளபளத்தன. காதுகளைக் கவ்விக்கொண்டு மூக்கில் கண்ணாடி தொங்கியது. கழுத்தைத் தொத்தியபடி ஒரு வண்ணத்துப் பூச்சி-அதற்குப் பெயர் போவாம்! காலில் கிடக்கும் சப்பாத்துகளில் முகம் பார்க்கலாம். அவ்வளவு தகதகப்பு! விரலில் ஒருநாகரிகமான முத்துமோதிரம்.

ஜம் மென்று துரை மாதிரி தோற்றம். சும்மா சொல்லக் கூடாது – அந்த ஆடை அணிகலன் வகையறாக்கள் அவரு டைய உடம்புக்கு அருமையாகப் பொருந்தியிருந்தன.

நிறம் மட்டிலும் தான் கொஞ்சம் வித்தியாசம். அதைப் பற்றித்தான் இவரைப் போன்றவர்களுக்கும் தீராக் கவலை எது எதற்கோ என்னென்னமோ செய்யும் ஆராய்ச்சியாளர்கள் தோல் நிறம் மாற்றும் திரவம் ஒன்று கண்டு பிடித்து இவர்களை அவர்களாக்கி உதவமாட்டார்களா என்று சிந்தித்துக்கொண்டு அவரைத் தலையிலிருந்து கால் வரை கூர்ந்து நோக்கினேன்.

என்ன இப்படிப் பார்க்கிறீங்க? என்று அவரும் என்னை மேலும் கீழுமாய்க் கவனித்தார். இலேசாகச் சிரித்தார். அவர் நிற்கும் கோலம் எனக்கு அலங்கோலம், நானிருக்கும் நிலைமை அவருக்கு விசித்திரம்!

லாஸ்ட் வீக்லே ஹாலிவுட் ஆக்டருக்குக் காக்டெயில் நடந்தே…… நான் யாங் ரெஸ்டாரண்ட், அங்கே தான் இன்றைக்குப் பார்ட்டி! என்று குதூகலம் பொங்கும் குரலில் அவராகவே கூறினார்.

அப்போது தான் பக்கத்து வீட்டு சீன நண்பர் சியா தன் கழுத்துக்கட்டி (டை)யை ஒழுங்கு செய்தபடியே வந்து சேர்ந்தார் ‘நமது சிக்கனக்கார நண்பருக்கு நான்யாங் ரெஸ்டாரண்ட் இருக்குமிடமாவது தெரியுமா‘ எனறார் அவர் என்னை இளக்காரமாக சுட்டிக் காட்டிக் கொண்டே.

இந்தமாதிரி கிணற்று தவளைகளுக்கு அந்த இடங்கள் எல்லாம் தெரிந்திருக்கவே வழியில்லை. என்று கேலிகுரல் கொடுத்தவாறு பரபரப்போடு வெளியே வந்தார். எதிர்த்த வீட்டிலிருக்கும் மலாய்காரான அவாங் அவர் பார்வை கை கடிகாரத்தில் இருந்தது.

‘சரியான பேச்சு’ என்று அதை ஆமோதித்தார்கள் அங்கு வந்து சேர்ந்த மற்றுமிருவர்.

எல்லாரும் என்னைப் பார்த்துக் ‘கடகடவென கடகடவென சிரித்துக் கொண்டே கிளம்பினார்கள் அவர்களுக்குத் தலைவன் போல் கத நாயக நடை போட்டார் ஜே.லிங்கம் தன்னுடைய படகு போன்ற பெரிய காரை நோக்கி.

சந்தேகமில்லை இந்தக் காலமும் இன்றைய உலகமும் அவரை போன்றவர்களுக்குதான்.

எதிரும் புதிருமாகவும் அக்கம் பக்கமாகவும் அங்குள்ள ஏழெட்டு வீடுகளில் குடித்தனம் நடத்துகிறவர்கள் எல்லோரும் ஒரே கம்பெனி ஊழியர்கள் கிட்டதட்ட சம அளவான வருவாய் பெறுகிறவர்கள்

நண்பர் ஜே.லிங்கத்துக்கு என்னை காட்டிலும் பத்து வெள்ளிதான் மாதம் கூடுதலாக கிடைக்கும் ஆனால் வாழ்க்கை நடப்பில் நான் எங்கே? அவர் எங்கே?

நான் தரையில் நகரும் கட்டைவண்டி. அவர் ஆகாயத்தில் பறக்கும் போயிங் விமானம்!

ஆண்டுக்கு ஒருமுறைதான் வீட்டுச் சுவர்களுக்கு வெள்ளை பூசுவது என் வழக்கம், அவர் வீட்டுச் சுவர்களில் மாதம் ஒரு வண்ணம் துலங்கும், சென்ற மாதம் இளமஞ்சள் நிறம். இந்த மாதம் எழில் நீலம் அடுத்த மாதம் அழகு பச்சை|

அரை வருடத்துக்கு மேல் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை வைத்திருக்கமாட்டார் புது மாடல் மாற்றிவிடுவார்.

வானொலிப் பெட்டி வாங்குவார். மறுவாரம் அதைக் கொடுத்துவிட்டு ரேடியோ கிராம் கொண்டு வருவார். சில வாரங்களில் அதையும் தள்ளி விட்டு ரேடியோ, கிராம், டேப் ரிக்கார்டர் எல்லாம் அடங்கிய பெரிய பெட்டி தூக்கி வருவார்!

பகட்டான நாற்காலிகள், ஆடம்பரமான மேசைகள், எடுப்பான அலமாரிகள் அலங்காரமான கட்டில்கள்…… அவற் றையும் கூடப் புத்தம் புதியனவாக அடிக்கடி மாற்றிக் கொண்டுதானிப்பார்,

வீட்டுச் சாளரங்களில் இன்று காலையில் கைத்தறித்துணி தொங்கும். நாளைக் காலையில் நைலான் துணி நெளியும். நாளை மறுநாள் பட்டுத்துகில் அசைந்தாடும் வண்ண வண்ண மின் விளக்குகள் சரஞ்சரமாக வீடு நிறையப் பூத்துக்கிடப்பதும், வாசற்படியில் சில ஒளிக் குமிழ்கள் கண்சிமிட்டிச் சிரிப்பதும் 4 அன்றாடம் கண்கொள்ளாக் காட்சியாயிருக்கும்.

விட்டில் சமையலுக்கும் பழக்கத்துக்கும் உரிய பாத்திரங்கள் சகலமுமேகருக்காததை துருபிடிக்காதவை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்!

மேனாட்டுக் காய்கறிகள்: மேனாட்டு பாணியிலான சமையல். மேனாட்டுக்காரர்கள் மாதிரி கரண்டியாலும் முள்ளாலும் தான் சாப்பாடு.

அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அந்தப் பக்கம் நான் தலைகாட்டினால், வாய்யா, கத்தரிக்காய், முருங்கைக் காய்! என்று நையாண்டி செய்வார் ஜே, லிங்கம்.

சீனக்கிழவன் ஒருவன் நாளொன்றுக்கு இரண்டு தகரம் கோழித் தீனி, பன்றிச் சாப்பாடு அள்ளிப் போவான்: அவர் வீட்டிலிருந்து கழித்துக் கொட்டுவது அவ்வளவு வீட்டில் சமையலுக்கு ஒரு பட்லர், துணி துவைக்கத் தனி ஆள் எடு பிடிக்கு வேலைக்காரன்…

அடுப்படியே ஒரு ரெஸ்டாரண்டாயிருக்கும். வருகிறவர்க ளுக்குத் தட்டு நிறைய கேக் வகைகள். கிளாஸ் நிரம்பமணக்க மணக்க மிலோ அல்லது கொக்கோ!

ஐஸ் பெட்டியை திறந்தால் அடுக்கடுக்காகப் போத்தல்கள். மாலை நேரம் அல்லது இரவு நேர விருந்தாளிகளை மகிழ்வுட்டுவன அவை!

ஆங்கில, அமெரிக்க வார, மாத பத்திரிகைகள் முன் கூடத்தில் குவிந்து கிடக்கும்.

அவர் வீட்டு வானொலி தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குக் கூட மேற்கத்திய மொழிகள் மாத்திரமே பேசத் தெரியும்!

அவருடைய காற்சட்டைப் பைக்குள் கையைவிட்டார் என்றால் உயர்ந்த சிகரட் பாக்கெட் வெளிப்படும் அல்லது கத்தை கத்தையாகப் பண நோட்டு வெளிவரும்!

எங்கள் வட்டாரத்துக்கு அமைச்சர்களோ அரசாங்க . அதி காரிகளோ, பெரிய புள்ளிகளோ வருகை புரிந்தால் போதும் வரவேற்பு ஏற்பாடுகளில் வலியச் சென்று தலையைக் கொடுத்து கழற்றித் தொலைத்து விட முடியாத முக்கிய மனிதராகி விடுவார். பார்க்கிறவர்களுக்கு அவர்தான் பகீரதப் பிரயத்தன ங்கள் செய்து அந்த நிகழ்ச்சியை நடத்துவதாகத் தோன்றும் அப்படி அலைவார். நடிப்பார்!

பொதுநலத் தொண்டு அல்லவா?

மாதத்திற்கு ஓரிரு காக்டெயில் விருந்துகள், இரண்டு மூன்று வரவேற்பு வைபவங்கள் நான்கைந்து டின்னர் பார்ட்டி கள்,ஏழெட்டு இதரபுரோகிராம்கள் ஜே.லிங்கத்துக்கு ஓய்வு ஏது? ஓழிச்சல் ஏது?

அந்தப் பகுதியில் உள்ள சீனர்களும் மலாய்க்காரர்களும் சட்டைக்காரர்களும் மற்றவர்களும் அவரோடுதான் பழகுவார்கள். அவரைச் சுற்றிச் சுற்றி வருவதற்கு ஆசைப்படுவார்கள். அவரை நண்பராக்கிக் கொண்டு பெருமைப்படுவார்கள். தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கூத்தாடாத குறைதான் . அவ்வளவு மதிப்பு, கியாதி!

மனுசன் விவரம் புரிந்தவர், வாழத் தெரிந்தவர்!

நாலு இனத்தவர்களுக்கு மத்தியிலே மதிப்போடு வாழணும்னா அப்படித்தான் நடந்துக்கணும். உங்க மாதிரியிருந்தா யார் மதிப்பாங்க? என்று என் மனைவி கூடச் சில சமயங்களில் மோவாயால் தோளில் இடித்துக் கொண்டு கழுத்தை நொடிப்ப துண்டு. அவர் மாதிரி எல்லாரும் வாழ? முடியுமோ?

நான் யாங் ரெஸ்டாரண்ட் பார்ட்டிக்கு மறுநாள் ஜே. லிங்கம் என்னைக் தனியே சந்தித்தார் அவர் சுற்றும் முற்றும் கனித்த விதம், எதோ ஒரு முக்கிய சேதி பேச விரும்புகிறார் என்பதைக் காட்டியது பேசினார்:

நம்ம மனுசனச்சேன்னு உங்ககிட்ட இதை ரகசியமாகச் சொல்றேன். யாருக்கும் தெரியவேண்டாம். ரூரல் போர்டு ஏரியாவிலே அருமையான பங்களா ஒண்ணு விலைக்குவருது. இருபத்தி இரண்டாயிரம் சொல்றாங்க. இருபதாயிரத்துக்கு முடிக்கலாம். என்கிட்ட பத்தாயிரம் இருக்கு. நீங்சு பத்தாயிரம் போடுங்க இரண்டு பேருமாக அதை வாங்குவோம் வாங்கி வாடகைக்கு விட்டால் மாசம் நாநூறு வெள்ளி சுளையாகக் கிடைக்கும், என்ன சொல்றீங்க?

நான் திகைத்துப்போய் நின்றேன். எதையோ நினைத்து நான் தயங்குவதாக எண்ணிக்கொண்டு அவர் மேலும் தொடர்ந்தார்:

பணத்தைச் சும்மா பெட்டிக்குள் வைச்சிருந்தால் என்ன புண்ணியம்? எதிலாவது எப்படியாவது போட்டுப் புரட்டினால் தான் ஏதாவது ஆதாயம் வரும். நீங்க எதுக்கும் அலைய வேண்டாம். பத்தாயிரத்தை இன்றைக்கு என்கிட்டக் கொடுத்துவிட்டுப் பேசாமல் வீட்டிலே இருங்க. எல்லா வேலையையும் இரண்டே நாளில் முடிச்சுப் பத்திரத்தை உங்ககிட்டச் சேர்க்கிறேன். ம்? எப்போ தர்றீங்க?

நான் சிறிதும் யோசிக்கவில்லை. நம்ம சம்பாத்தியத்திலே ஆயுள் பூராச் சேர்த்தாலும் இவ்வளவு பெரிய தொகையை என்னாலே சேர்க்க முடியாது வேறே வகைகளில் பணம் சேர்க் கவும் வழி தெரியாதவன் நான், ‘மன்னிக்கவும் ‘ என்று முடிவாகச் சொல்லி விட்டேன்.

முகவாட்டத்தோடு திரும்பிச் சென்றார் ஜேலிங்கம்.

மறுவாரம் காலை எட்டரை மணியிருக்கும். நான் ஆபீசுக்குக் கிளம்பிக் கொண்டிருந்த சமயம் பக்கத்து வீட்டு சீன நண்பர் சியாவும் எதிர்த்த வீட்டு மலாய்க்காரரான அவாங்கும் மற்றும் சிலரும் என் வீட்டுக்குள் திமுதிமு வென்று புகுந்தார்கள்,

அன்றைய ஆங்கிலத் தினசரியை என்னிடம் நீட்டியவாறே இதிலே பாரும். நமது அருமைநண்பர் ஜே.லிங்கம் செய்திருக்கும் காரியத்தை என்றார் சிவா. அவர்கள் எண்ணிப் பார்க்காததும் நான் எதிர்பார்த்திருந்ததுமான காரியத்தைத்தான் செய்திருந் தார் ஜே. லிங்கம், வங்கிராப்டு ஆன காரியம்!

‘மாதம் முந்நூறு வெள்ளி சம்பளம் வாங்கும் ஊழியருக்கு நாற்பதாயிரம் வெள்ளி கடன்’ என்று அறிவித்தது செய்தி தலைப்பு.

நான் மூவாயிரம் வெள்ளி கைமாற்றாக கொடுத்தேன் ஐயா! என்று கதறினார் சியா.

‘என்னிடமிருந்து இரண்டாயிரம் வாங்கி ஒரு மாதம் கூட ஆகவில்லையே’ என்று புலம்பினார் அவாங்.

லேவாதேவிக்காரர்களிடம் ஆயிரக்கணக்காகக் கடன் வாங்கி உதவியதாக மற்றவர்கள் அழுதார்கள்.

அப்போது எதுவுமே நடக்காதது போல் மிகச் சாதாரணமாக நண்பர் ஜே.லிங்கம் தனது வீட்டின் வாசற்படியில் இறங்கினார்.

நண்பர்கள் சியாவும் அவாங்கும் மற்றவர்களும் என் வீட்டில் நிற்பதை பார்த்துக் கொண்டே அவர் தெருவில் இறங்கிப் பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தார். அவருடைய படகு போன்ற பெரிய கார் அங்கில்லை.

அவர் நடையிலும் கை வீச்சிலும் வழக்கமான அதேமிடுக்கு உடையில் அதே ஆடம்பரம் தோற்றத்தில் அதே கம்பீரம்! ஆனால் முகம் மட்டும் வேதனையால் வாடியிருந்தது. கவலையால் இருண்டிருந்தது. முன்பு இருந்த உற்சாகத்தை காணோம். உல்லாசத்தை காணோம். புன் முறுவலைக் காணோம். பெருமிதத்தைக் காணோம்.

அவர் முகத்தில் மட்டுமா அவற்றைக் காணேம்? கிணற்றுத் தவளையான என்னைச் சுற்றிலும் இப்போது நிற்கின்ற நண்பர்கள் முகத்திலும் தான் ஒன்றையும் காணோம்!

– சிங்கப்பூர்க் குழந்தைகள் (சிறுகதை தொகுப்பு), முதற் பதிப்பு:1989, சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம், சிங்கப்பூர்.

சிங்கை பெர்னாட்ஷா சே.வெ.சண்முகம் சே.வெ.சண்முகம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நெய்வாசலில் 1933ல் பிறந்தார். 1951ல் சிங்கப்பூருக்கு வந்த இவர், துறைமுகத்தில் பணியாற்றினார். 1961ல் கிடங்குப் பொறியாளராகப் பதவி உயர்வு பெற்று 1991ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 1949ல் எழுதத் தொடங்கிய இவரது முதல் சிறுகதை “வேறு வழியில்லையா?” மதுரையிலிருந்து வெளியாகும் “நேதாஜி” இதழில் மலர்ந்தது. அதைத் தொடர்ந்து இவர், சிறுகதைகள், தொடர்கதைகள், குட்டிக்கதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், கவிதைகள், மேடை நாடகங்கள், வானொலி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *