வால் பாண்டி சரித்திரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 5,803 
 
 

கால்சட்டை பை நிறைய கோலிக்காய்கள் ஜெயித்த சந்தோசத்துடன் வேகமாய் வீட்டிற்கு நடந்துகொண்டிருந்தேன். கோலிக்காய்கள் ஒன்றுடன் ஒன்று உரசும்போது ஏற்படும் சத்தம் சந்தோஷம் தருவதாய் இருந்தது.வீட்டை நெருங்கும்போதுதான் வேதக்கோவில் மணிச்சத்தம் ஆறுமுறை கேட்டது. ஆறுமணி தாண்டிய பின் வீட்டிற்குள் நுழைந்தால் அடி பின்னிவிடுவார் அப்பா. அடிவாங்குவது எனக்கு பழக்கமானதுதான்.ஆனாலும் வலிக்குமே?

வேகமாக லட்சுமி அக்காள் வீட்டிற்கு ஓடினேன்.எங்கள் வீட்டின் பின்புறம்தான் அவர் வீடிருக்கிறது. அவர் வீட்டு வேலியை தாண்டிக்குதித்தால் எங்கள் வீடு. அதன் பின் மெதுவாய் புறவாசல் வழி உள்நுழைந்துவிடலாம்.

மாட்டிற்கு புண்ணாக்குத்தண்ணீர் வைத்துக்கொண்டிருந்த லட்சுமி அக்கா என்னைப் பார்த்தவுடன் சத்தம்போட்டு கத்த ஆரம்பித்தார்.

“எலேய் பாண்டி! நெதமும் என் வீட்டு வேலிய பிரிச்சு பிரிச்சு திருட்டுத்தனமா வீட்டுக்கு போறியே ஒருநாளாவது வெளக்கு வைக்கிறதுக்கு முன்னால வீட்டுக்கு போயிருக்கியா? அப்படி என்னதான் வெளையாட்டோ! உங்கப்பன்கிட்ட சொல்லி உன் காலை ஒடைக்க..” அவர் முடிப்பதற்குள் நான் என் வீட்டுத் திண்ணையில் ஏழாம் வகுப்பு கணக்கு புத்தகத்துடன் உட்கார்ந்திருந்தேன்.

திண்ணைக்கு பக்கத்தில் வேப்ப மரத்தடியில் கட்டியிருந்த ஜானி என்னைக் கண்டதும் வாலாட்டியது. ஜானி நான் வளர்க்கும் நாட்டுநாயின் பெயர்.(நாட்டு நாய்குட்டிபோல் தெருவில் சடைநாய்குட்டி கிடைப்பதில்லையே ஏன்?)

கணக்கு புத்தகத்தையும் ஜானியையும் பார்த்தவுடன் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. எல்லாம் ஜானியின் பெயரால் வந்த சிரிப்புதான். கணக்கில் எப்பொழுதும் பத்து மார்க்கை தாண்டியதில்லை என்பதால் என் பின்புறம் வலிக்க வலிக்க பிரம்பால் அடிப்பார் எங்கள் கணக்கு வாத்தியார். அவர் பெயரும் ஜானிதான். அவரை சங்கிலியால் கட்டமுடியவில்லை என்கிற ஏக்கத்தில்தான் இந்த நாய்க்குட்டிக்கு ஜானி என்று பெயர் வைத்தேன்.

“குக்கூ குக்கூ” வீட்டிற்கு வெளியிலிருந்து சத்தம் கேட்டதில் திடுக்கிட்டேன். இது எங்களது சங்கேத சத்தம். என் நண்பர்கள் கார்த்தி,மைக்கேல் மற்றும் டேவிட்டுக்கு மட்டுமே தெரிந்த சத்தம். இந்த நேரத்தில் எதற்கு கூப்பிடுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டே மெல்ல படலையை விலக்கிக்கொண்டு வெளியே வந்து பார்த்தேன். கார்த்தியும் டேவிட்டும் என்னை பார்த்தவுடன் ஓடிவந்தார்கள்.

“பாண்டி,நம்ம காம்பவுண்ட்காரர் வீட்டு பூவரசமரத்துல ஒரு அணில்கூடு இருந்துச்சுல்லா அதுல இருந்து அணில்குட்டி கத்துற சத்தம் கேக்குது. நீதான் வந்து எடுக்கணும்.மூணு குட்டி இருந்தா ஆளுக்கு ஒண்ணொன்னா எடுத்துட்டு போயி வளர்க்கலாம்.சீக்கிரம் வாயேன்” கண்கள் மின்ன சொன்னான் கார்த்தி. மரம் ஏறுவதில் நான் கில்லாடி என்பதால் என்னை தேடி வந்திருந்தார்கள்.

“நமக்கு நாளைக்கு முழுப்பரிட்சை இருக்கே அணில் பிடிக்க போனா எங்க அப்பா வைய்வாருடா” வீட்டு வாசலை பார்த்தபடியே பதில் சொன்னேன்.

“பரிட்சை எழுதறதுக்கு முன்னாலயே மார்க்கு தெரியுற ஒரே ஆளு நீதாம்ல.எப்படியும் பத்துக்கு மேல எடுக்க போறதில்ல. அப்புறம் என்ன?” நக்கலாய் சிரித்தான் டேவிட்.

“மொகறகட்டையை பேத்துபுடுவேன்,முழுப்பரிட்சையில பெயிலானா அப்புறம் எட்டாப்புக்கு எப்படி போறது? உனக்கென்ன உங்க அய்யா கடை வச்சிருக்காரு,போயி பொட்டுக்கடல மடிக்க போயிருவ. எனக்குதான பிரச்சினை.அரையாண்டுல பெயிலானதுக்கே மூணு நாளு கல் உப்புல முழங்கால் போட வச்சுட்டாரு எங்கப்பா. முழுப்பரிட்சையிலயும் பெயிலான முதுகு தோலை உரிச்சுபுடுவேன்னு சொல்லியிருக்காரு,நான் வரல ஆள விடுங்க” சொல்லிவிட்டு வீட்டுத்திண்ணையில் வந்து உட்கார்ந்து கொண்டேன்.

மீண்டும் பத்து நிமிடத்திற்கு “குக்கூ” கேட்டுக்கொண்டிருந்தது. அதன்பின் வேப்பங்கொட்டையால் திண்ணை நோக்கி எறிந்துவிட்டு போய்விட்டார்கள் இருவரும். அப்பா எங்கேயோ கிளம்பிக்கொண்டிருந்தார். செருப்பை மாட்டியவர் என்னை பார்த்துக்கொண்டே அம்மாவிடம் கேட்டார் “இவனை படிக்க வைக்கிறதுக்கு பதில் நாலு எருமை வாங்கி மேய்க்க அனுப்பலாம்.முழியை பாரு..திருட்டுப்பய காடை வாங்கிட்டு வரச்சொன்னதுக்கு காக்கா வாங்குன பயதான இவன்” அம்மா ஏதோ சொல்லி சமாதானபடுத்தியபின் முணுமுணுத்துக்கொண்டே வெளியில் போனார் அப்பா.

அப்பாவுக்கு காடை கறி என்றால் கொள்ளை இஷ்டம். ஒருமுறை காடை வாங்க இருபது ருபாய்த்தாளை தந்தார். அப்பொழுதுதான் முதன் முதலாய் இருபது ரூபாய் நோட்டை பார்த்தேன். சரி எதற்கு அதை வீணாக்க வேண்டுமென்று கவுட்டையை எடுத்துக்கொண்டு இரண்டு காக்காவை தெறித்துவிட்டேன். யாருக்கும் தெரியாமல் கழுத்தை திருகி எறிந்துவிட்டு தோலை உரித்து அம்மாவிடம் கொடுத்தேன். இன்னைக்குதான் காடை கறி அம்சமா இருக்கு என்றபடியே அப்பாவும் ஒரு பிடிபிடித்துவிட்டார். காக்காவின் உரித்த தோலை வீட்டிற்கு பின்புறம் கொய்யா மரத்தடியில் புதைத்திருந்தேன். என் வீட்டுச் சனியன் புசுக்குட்டி(பூனை) அதை தோண்டி வெளியில் எடுத்து என்னை காட்டிக்கொடுத்துவிட்டது.

கையிலிருந்த கணக்கு புத்தகம் காற்றில் படபடத்தபோது,”என்னை மடியில் வைத்துக்கொண்டு ஏதேதோ நினைக்கிறாயே” என்று சொல்வது போலிருந்தது. அதற்கு மேல் படிக்க விருப்பமில்லை. நண்பர்களிடம் வரமாட்டேன் என்று சொன்னாலும் மனசு
முழுக்க அணில்குட்டியை நினைத்துக்கொண்டே இருந்தது. புத்தகத்தை மூடி அழிக்கம்பி வழியாக வீட்டுக்குள் வைத்துவிட்டு ஓசை படாமல் எழுந்து வெளியே வந்தேன். ஒரே ஓட்டமாக காம்பவுண்ட்காரர் வீட்டுக்கு வந்துவிட்டேன்.

கார்த்தியும் டேவிட்டும் என்னை பார்த்தவுடன் சந்தோஷமாக ஓடிவந்தனர்.

“பாண்டி,நீ வருவன்னு தெரியும் அதான் இங்கேயே நிக்கிறோம். சீக்கிரமா சுவத்துல ஏறி மரத்துமேல ஏறிடு. காம்பவுண்ட்காரர் வீட்ல இல்ல. பஜாருல நின்னு பேசிக்கிட்டு இருக்காரு. வெரசா ஏறு” என்ற சொல்லிவிட்டு குனிந்து நின்றுகொண்டான் கார்த்தி.
அவன் முதுகில் ஏறி சுவற்றுக்கு தாவினேன். விறுவிறுவென்று பூவரச மரத்தில் ஏறி அணில்கூட்டை பிரித்தேன். கண்திறக்காத இரண்டு குட்டிகள் என் கை பட்டதும் “கீச்,கீச்” என்று சத்தம்போட ஆரம்பித்தது. மரத்திலிருந்து இறங்கும் போது இரண்டு பூவரச இலை பறித்துக்கொண்டு சுவற்றில் கால்வைத்து தரைக்கு வந்தேன்.

“சூப்பருடா,பாண்டி இரண்டு குட்டிதான இருக்கு இப்ப என்ன செய்ய?” மெதுவாய் காதோரம் கிசுகிசுத்தான் கார்த்தி.

அணில்குட்டிகளை ஆசையுடன் பார்த்துக்கொண்டிருந்தான் டேவிட்.

கால்சட்டைக்குள் பறித்துவைத்திருந்த பூவரச இலையை எடுத்து இரண்டு பீப்பீ செய்து டேவிட்டின் கைகளில் கொடுத்தேன்.

“எலேய் டேவிட்டு நக்கலா வுடுற நக்கலு? ஒனக்கு அணில்குட்டியும் கெடயாது ஒண்ணுங்கெடயாது. இந்தா இந்த பீப்பீயை ஊதிக்கிட்டே ஓடிரு” அவன் கைகளிலிருந்த அணில்கூட்டை பறித்துக்கொண்டு நடந்தோம் நானும் கார்த்தியும்.

“அணில்குட்டி இருக்குன்னு சத்தம்கேட்டு சொன்னவன் நாந்தான். எனக்கு ஒரு குட்டி தாங்கடா” கொஞ்சநேரம் கெஞ்சிவிட்டு கிடைக்காததால் வழக்கம்போல் கெட்டவார்த்தையால் திட்டிவிட்டு “எழுதி வச்சுக்கல நீ பெயிலுதான்” என்று சாபம் தந்துவிட்டு போய்விட்டான் டேவிட்.

“குட்டிக்கு நீ என்ன பேருல வைக்க போற?” வரும்வழியில் கேட்டான் கார்த்தி.

“ராமருக்கு உதவிசெஞ்ச நல்ல பிராணியில்லா, அதனால நல்ல பேராதான் வைக்கணும்…ம்ம்ம்… பாண்டின்னு வச்சுறலாமா? ஏன்னா உலகத்துலேயே நல்லவன் பாண்டி ஒருத்தன் தான..என்ன சொல்ற?” சிரித்துக்கொண்டே கேட்டேன்.

“என் குட்டியை கொடு” என்றவன் என்னிடமிருந்து ஒரு குட்டியை எடுத்துக்கொண்டு கொஞ்சம் தூரம் சென்றான். பின் திரும்பி “எலேய் பாண்டி! ராமருக்கு அதிகமா உதவி செஞ்சது குரங்குதான் அப்போ நீ குரங்குதானா?..ஹாஹா” பழிப்புக்காட்டிவிட்டு ஓடியே போய்விட்டான்.

உலகிலேயே எனக்கு பிடிக்காத ஒரே விலங்கு குரங்குதான். அதற்கும் காரணமிருக்கிறது. எங்கள் பள்ளியில் எல்லோரும் பயந்து நடுங்கும் ஒரே வாத்தியார் எங்கள் பி.டி. வாத்தியார் ராமர்தான்.

காலையில் ஸ்டடி ஹவரில் கையில் நீண்ட செங்கோட்டை பிரம்புடன் வலம் வருவார். அமைதியாக படிக்காமல் யாராவது பேசிக்கொண்டிருந்தால் வகுப்புக்கு வெளியே அழைத்து சுவற்றை பிடித்துக்கொள்ள சொல்வார். ஆறாம் வகுப்பு சேர்ந்த புதிதில்
ஒருநாள் வசமாக சிக்கினேன் நான்.

“ஸ்டடி அவர்ல படிக்காம பேசிகிட்டே இருக்க,இங்க வந்து சுவத்தை பிடில” பிரம்பை உருட்டியபடியே கேட்டார்.

எதற்காக சுவற்றை பிடிக்கவேண்டும் என்று அப்போது எனக்கு தெரியாது. வெறும் சுவற்றிலேயே விறுவிறுவென்று ஏறும் சிங்கம் நான் என்று நினைத்துக்கொண்டே சுவற்றை பிடித்து நின்றேன். “மடார்,மடார்” என்று சத்தம் வர வர என் பின்புறத்தில் அடி பின்னி எடுத்துவிட்டார். வலி உயிர்போனது. கண்ணீருடன் என் இடத்தில் வந்து உட்கார்ந்தேன். வகுப்பு மொத்தமும் சிரித்துக்கொண்டிருந்தது. இரக்கமே இல்லாத மனசுடன் அவர் அடித்ததால் அவருக்கு “கல்ராமர்” என்று பெயர் வைத்துவிட்டேன். காட்டுத்தீபோல் எங்கள் பள்ளி முழுவதும் அந்தப் பெயர் பரவி விட்டது. நான் தான் பெயர் வைத்தேன் என்பதை எப்படியோ தெரிந்து கொண்டவர் அஸெம்ப்ளி நடந்து முடிந்தவுடன் மைக்கில் என்னை கூப்பிட்டார். எனக்கு அடிவயிறு கலங்க ஆரம்பித்தது. குனிந்துகொண்டே அவர் முன்னால் போய் நின்றேன். மொத்த பள்ளியும் என்னை பார்த்துக்கொண்டிருந்தது.

“மாணவர்களே ராமருக்கு கல்லை எடுத்து பாலம் கட்ட உதவிய விலங்கின் பெயர் என்ன?” மைக்கில் கேட்டார் கல்ராமர்.

மொத்த பள்ளியும் “குரங்கு” என்றது. இப்படித்தான் பால்பாண்டியாக வீரநடை போட்ட என் பெயர் வால் பாண்டியாக மாறிப்போனது. அன்றிலிருந்து குரங்கை தவிர எல்லா விலங்கையும் நேசிக்க ஆரம்பித்தேன்.

வீட்டுக்குள் நுழைந்து மாட்டுக்காடியில் கிடந்த நார்பெட்டியில் அணில்குட்டியை வைத்து மூடிவிட்டு திண்ணைக்கு வந்து உட்கார்ந்துகொண்டேன்.

பரிட்சை முடிவு வெளியான அன்று என் துணிகளை எடுத்து பெட்டியில் அடுக்கிக்கொண்டிருந்தாள் அம்மா. வீட்டு முற்றத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார் அப்பா. அம்மாவின் கண்கள் கலங்கி இருந்தன. தூணுக்கு பின் தலை குனிந்து நின்றிருந்தேன் நான். அப்பா பேச ஆரம்பித்தார் “எத்தன தடவ சொல்லி இருப்பேன் படி படின்னு…எப்ப பாரு நாயி,அணிலு,குருவின்னு கவுட்டையை எடுத்துக்கிட்டு அலையவேண்டியது..ஒரு நாளாவது படிச்சு பாத்திருக்கியா உம்புள்ளைய? இனியும் இந்த ஊர் ஸ்கூலும் சரிப்படாது இந்த ஊரும் சரிப்படாது. பேசாம தட்டப்பாறையில கொண்டு போயி போர்டிங்ல சேத்துர வேண்டியதுதான். அப்பதான் இவனுக்கெல்லாம் புத்தி வரும்” அம்மாவிடம் பெட்டியை வாங்கிக்கொண்டு என் கைகளை பிடித்து தரதரவென்று இழுத்துக்கொண்டு வாசல் நோக்கி நடக்க ஆரம்பித்தார் அப்பா.

அந்த டேவிட் பய சாபம் கொடுத்ததாலதான் பெயிலாகிட்டேன்னு அப்பாகிட்ட சொல்ல நெனச்சேன்,ஆனா இந்த பால்பாண்டியோட பெருமை புது ஸ்கூலுக்கும் புது ஊருக்கும் தெரியணுங்கற ஆசையில எதுவும் சொல்லாம கால்சட்டைக்குள்ள வச்சிருந்த கடலை உருண்டையை எடுத்து கடிச்சுக்கிட்டே வீரன் மாதிரி நடக்க ஆரம்பிச்சேன்.

– Wednesday, March 4, 2009

Print Friendly, PDF & Email
நிலாரசிகன் ஒரு தமிழ்க் கவிஞர் மற்றும் எழுத்தாளர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை எழுதி வருகிறார். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிந்து வரும் இவரது படைப்புகள் ஆனந்த விகடன், வார்த்தை, உயிர்மை, கல்கி, புன்னகை, அகநாழிகை, நவீன விருட்சம், உயிர் எழுத்து, கல்குதிரை, கொம்பு போன்ற அச்சிதழ்களிலும், கீற்று, கூடல்திணை, அதிகாலை, உயிரோசை, திண்ணை, தமிழோவியம் போன்ற இணைய இதழ்களிலும் வெளியாகி இருக்கின்றன.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *