வாலறிவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 15, 2018
பார்வையிட்டோர்: 7,236 
 
 

யாழ்ப்பாண நூலகம், அதன் வாசலில் கலைத்தேவி சரஸ்வதி, “ஆயகலைகள் அறுபத்திநான்கினையும் ஏய உணர்விக்கும் என் அன்னை” அனாதையாக வீற்றிருப்பாள்-காரணம், வண்ணங்கள் எதுவும் இல்லா வெறும் வெள்ளைநிறத்தில் தோய்ந்திருப்பாள்-ஒருவேளை அனைத்து வண்ணங்களையும் தன்னுள் அடக்கிய திமிரோ, ச்சா, இன்றைய கல்விமான்கள் போல் கற்ற திமிர் அவளுக்கில்லை. ஒரு மேகம் மட்டும் கீழிறங்கி, மின்குமிழின் அருகில் வீற்றிருந்தது போல் இருந்த அவளை, கடந்து சென்றது ஒரு கறுப்பு கார். அற்பமான வீதிவிளக்கு வெளிச்சங்கள் குடை சூழ, இருள் ஆட்சி நடத்திய அந்த இரவில், அந்தக் கறுப்புக் கார், கிட்டத்தட்ட கண்களுக்குத்தெரியாத வண்ணம், இருளோடு இருளாய் இசைவாக்கம் அடைந்திருந்தது. முன் எரிந்த மஞ்சள் வெளிச்சமும், பின் எரிந்த சிவப்பு ஒளியும், வயதான என் அன்னைக்கு சரியாகப் புலப்படவில்லை. அந்தக் காரும், அதில் செல்பவனும் குறைந்த பட்சம் கனவு, அதிக பட்சம் வெறும் பிரம்மை என்றெண்ணி நிம்மதியாய் உறங்கிக்கொண்டிருக்கிறாள். ஆனால் இந்த பூமியில் வாழும் எமக்கு, அவனே நித்திய சத்தியம், பிரம்மனின் பிரதி-ஆனால் என் அன்னை எவ்வாறு பிரம்மனோடு ஒரு காலத்தில் கோபித்துக்கொண்டாளோ, அதுபோலவே நாமும் இவனோடு இப்போது கோபித்துக்கொள்கிறோம். ஏன்?

“இஞ்ச பாருங்க, சர்ஜரிக்கு 1 ரூபா குறைக்கேலாதுண்டு அந்த ஆள்ட்ட தெளிவா சொல்லிடுங்க, எதாவது காரணம் சொல்லுங்க, ஐ டோன்ட் கேயார், அப்பிடி முடியாட்டி பெரியாஸ்பத்திரில பதிஞ்சுட்டு வெயிட் பண்ணட்டும்” அவனுடைய சொந்த மருத்துவமனை முகாமையாளரிடம் கைபேசியில் சொன்னான்.

“உங்களுக்கு A லெவெல்ல பயோ படிப்பிச்சன், தான் கொஞ்சம் உங்ககூட பேசப்போறன்னு கேக்கிறாரு”

“வெயிட் வெயிட் அந்த மனுஷன்ட போனக் குடுக்காதேங்க, ஓம் படிப்பிச்சாரு, அதுக்காண்டி, இப்ப இவருக்கு சலுகை பண்ணா, நாளைக்கு கெமிஸ்ரி வாத்தி, ப்ய்சிக்ஸ் வாத்தினு முதலாம் ஆண்டில ஆனா ஆவன்னா படிப்பிச்ச ரதிதேவி மிஸ் வரைக்கும் வந்து நிப்பாங்க, அப்புறம் நானும் ஒரு காலத்தில இவரமாதிரி யார்கிட்டையாவது போய் பிச்சையெடுக்க வேண்டியதுதான், அன்ட் படிப்பிச்சன் படிபிச்சன்னு வந்து நிக்கிறாங்க, காக்காகூடத்தான் பழத்த சாப்பிட்டு விதைபோடுது, ஆனா நாளைக்கு அந்த விதை பெரியமரமானா, அந்த காக்காக்கா நன்றி சொல்லும், அதுக்கு பசிச்சுது, திண்ணிச்சு. இன்னைக்கு நான் நம்பர் வன் ஹார்ட் சர்ஜனா இருக்கன்னா, அதுக்கு நான்தான் காரணம், நான் மட்டும்தான் காரணம்”

இதுக்கு யார் காரணம். ஆணவமும் பேராசையும் நிறைஞ்ச கல்விமான்கள் உருவாக யார் காரணம். வெறும் மதிபெண்கள மட்டும் சம்பாதிக்க நாமதானே கற்றுக்கொடுத்தம். இப்ப காச அவங்க மதிப்பெண்களா பார்க்கிறாங்க. ஒரு பத்துவயசுக் குழந்தைய புலமைப்பரிசில் மாதிரி பரீட்சைகள்ள, ஒவ்வெரு ஞாயிறும் கட் அவுட்ட விட குறைஞ்ச ஒவ்வெரு புள்ளிக்கும் ஒரு அடி வாங்க விட்டுட்டு, டியூஷனுக்கு வெளில மற்ற பெற்றோர்களோட அலட்டிட்டு இருந்தது நாமதானே. பத்து வயசுல விளையாட நேரமில்லாத ஒரு கல்விமுறை, இருபதுவயசுலையும் காதலிக்கநேரமில்லாத ஒரு பட்டப்படிப்பு, அப்புறம் அவன் இந்த சமூகத்த காதலிக்கனும்னா எப்பிடி? ஒரு ஐஞ்சு மணித்தியால பரீட்சைக்கே, மூணுவருஷ பயிற்சி தேவைப்படுது, இன்னொரு மனுஷன நேசிக்க பயிற்சி தேவையில்லையா. எல்லாரோட இதயத்திலையும் நல்லதுக்குரிய விதையும் இருக்கு கெட்டதுக்குரிய விதையும் இருக்கு, நாம கல்வின்ற விவசாயாத்த தப்பு தப்பா பண்ணி, கள்ளிவிதைய முளைக்க விட்டுட்டு, இப்ப குத்துது குடையுதின்னா. “தீதும் நன்றும் பிறர் தர வாரா”.

வேகமா பெரியாஸ்பத்திரிய நோக்கி போயிட்டிருந்த அந்தக் கார், மஜெஸ்டிக் கட்டிடத்தொகுதிகிட்ட சடார்னு நின்னிச்சு. அந்த நேரத்தில, அந்த இடத்தில யாருமே இல்லை. அவன் தன் இடப்பக்க கார் கண்ணாடில யாரையோ பார்த்தான். கார் மெதுவா பின்னோக்கி வந்திச்சு. காற்றில நடுவீதில பூச்சாடிகள்ள சிறைபட்டுக்கிடந்த செடிகள் மட்டும் லேசா ஆடிச்சு. ஒரு பத்தடி பின்னுக்கு வந்து அந்தக் கார் நின்னிச்சு. இடப்பக்க கதவோட யன்னல் கண்ணாடிய கீழ இறக்கினான். நிலத்தில கீழ இருந்திட்டு, சுவர்ல முதுக சாயவிட்டுட்டு, ஒரு வயதான பிச்சைக்காரர் ரொம்ப முடியாம தொடர்ந்து இருமிட்டேயிருந்தாரு. இந்த ஏவிளம்பி வருஷம் நாம என்ன பாவம் பண்ணமோ? நரகத்தோட தண்டனை மாதிரி மாசிப்பனி மூசிப்பெய்திட்டு இருந்திச்சு. அந்தப் பொல்லாத பனில, ஒரு கிழிஞ்சுபோன சட்டையோட அந்த வயதான பிச்சைக்காரர், சூரியன் உதிக்கிறதுக்கிடனம் சாகப்போறமாதிரி இருமிட்டேயிருந்தாரு. யன்னல திறந்ததுள, பனிக்காற்று காருக்குள்ளையும் வந்திச்சு. கார் என்ஜின நிப்பாட்டினான். மனசோட இடைவிடாத நச்சரிப்புமாதிரி கேட்டுட்டிருந்த அந்த கார் சத்தம் ஓய்ஞ்சிச்சு. ஒரு தியான-மயான அமைதி படர்ந்திச்சு.

காரவிட்டுக் கீழ இறங்கி, தன் விலையுயர்ந்த பிரீப் கேசையும் எடுத்திட்டு அந்த முதியவர்கிட்ட வந்து, அவர் பக்கத்தில லேசா குந்தியிருந்தான். யாரோ தனக்கு பிச்சைபோடா வந்திருக்காங்கன்னு நினைச்ச அந்த முதியவர், தன்னடோ கைகள நீட்ட முயன்றார், ஆனா அவரால முடியல்ல. உடனே இவன் தன் விலையுயர்ந்த பிரீப் கேசை அந்த வெறும் நிலத்தில வைச்சிட்டு, அதத்திறந்து தன் ஸ்டெதாஸ்கோப்ப எடுத்து அந்த முதியவரரோட இதயத்துக்குகிட்ட வைச்சு சிலவினாடிகள் அந்தப் புரியாத மொழிய புரிஞ்சுக்க முயற்சித்தான். பிறகு கண்ணக் கட்டி காட்டில விடப்பட்டவனப் போல, முள்ளந்தண்டுக்கு பக்கத்திலையும் அந்த சப்தத்தை தேடினான். பின் அவன் கோர்ட்டோட உள்பொக்கெட்ல இருந்த ஒரு வித்தியாசமான டோர்ச் லைட்ட எடுத்து ஓன் செய்தான். வீதிவிளக்கு வெளிச்சங்கள் குடை சூழ, ஆட்சி நடத்திட்டிருந்த இருளுக்கு, அந்த டோர்ச்லைட் வெளிச்சம் மகுடம் போல இருந்திச்சு. அதால அந்த முதியவரோட கண்ணுக்குள்ளையும் எதையோ தேடினான். அவன் தேடினது கிடைச்சிச்சா இல்லையான்னு எனக்குத் தெரியாது வாசகரரே, நான் பெருசா படிக்காதவன், ஆனா நான் தேடினது கிடைச்சிட்டுதின்னே நம்புறன்.

தன் பிரீப் கேசில இருந்து ஒரு மருந்துகுலுசைகள் நிறைந்த சின்னப் போத்தில எடுத்து பெரியவரோட கையில வைத்தான்.

“ஐயா மூணு வேளையும் சாப்பாட்டுக்கு பிறகு இதில ஒரு குலுசைய போடுங்கோ”

அதைக்கேட்டு அந்தப்பெரியவர் விழுந்து விழுந்து சிரித்தார்.

“குலுசையப் போடுறன் தம்பி, ஆனா சாப்பாட்டுக்கு முதலா, பிறகான்றத அந்த ஆண்டவன்தான் தீர்மானிக்கனும்”

அவருக்கு காசு எதாவது குடுக்க அவன் நிச்சயம் எண்ணியிருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இபொழுது உள்ளது. ஒருவேளை அனைத்தும் ஐயாயிரம் ரூபாய் தாள்களாக இருந்திருக்கும். இல்லை அவனிடம் டெபிட் அட்டைகள் மட்டுமே இருந்திருக்கும்.

“மூணு நாளைல பெரியாஸ்பத்திரிக்கு வாங்க, உங்களுக்கு சில டெஸ்டுகள்…அ…பரிசோதனைகள் செய்யனும். வார்டுல இருந்து செய்யனும், அங்க உங்களுக்கு சாப்பாடும் தருவாங்க”

என்று சொல்லிவிட்டு, தன் பர்ஸ்ஸிலிருந்து தன் விசிட்டிங் கார்டை எடுத்து அந்த முதியவரிடம் கொடுத்தான்.

“இதக் காட்டினீங்களின்னா நேரா என்கிட்ட விடுவாங்க”

அந்தமுதியவர் தன் இரண்டு கைகளையும் நெற்றிக்கு மேல தூக்கிக் கும்பிட்டார்.

இவன் இலேசாகப் புன்னகைத்துவிட்டு புறப்படத் தயாரானான்.

“தம்பி எனக்கு என்ன வியாதி?”

“சொன்னா உங்களுக்கு புரியாதையா”

“நான் அந்தக்காலத்தில பெரதேனியால என்ஜினியரிங் முடிச்சவன்”

அதைக்கேட்டு அவன் திகைத்து நின்றான். ஒருவேளை இவர் பைத்தியமாக இருப்பாரோ என நினைத்துக்கொண்டான்.

“அப்புறம் எனக்கு கவிதை எழுதத்தான் புடிச்சிருந்திச்சு, வேலையவிட்டன், வீட்டுல பொண்டாட்டி புள்ளைங்க எல்லாம் சேர்ந்து துரத்திவிட்டாங்க”

இவ்வாறு சொல்லிவிட்டுதன் மூட்டையிலிருந்து ஒரு கொப்பியை எடுத்து அவனிடம் நீட்டி

“இத வாங்கிகப்பா, ஏதோ என்னால முடிஞ்சது”.

அவன் இதயத்தில் என்ன நிகழ்ந்தது என நான் அறியேன். ஆனால் அந்தக் கொப்பியை வாங்கியவன், மீண்டும் ஒரு பாடசாலை மாணவனைப் போல், அந்தக் கொப்பியை கண்களில் ஒத்திவிட்டு, தன் பிரீப் கேசினுள் பத்திரமாக வைத்தான். யாருடைய பாதங்களாக அவற்றை எண்ணிக்கொண்டான்?

“கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். “
(திருக்குறள் அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:2)

“கற்றதனால் ஆய பயன் என் – எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவாள் ஆய பயன் யாது?; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் – மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்?”

-பரிமேலழகர் உரை

வால்-தூய்மையாகிய; அறிவன்-அறிவுடையவன்

– இச்சிறுகதை இலங்கையில் வெளியாகும் உதயன் பத்திரிகையில் 8/4/2018 அன்று வெளியானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *