வாய்ப் பார்த்தான்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 9, 2024
பார்வையிட்டோர்: 647 
 

(2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வழக்கம் போல் முச்சந்தி இலக்கிய வட்டம் அந்த ஞாயிற்றுக் கிழமையும் நடைபெற்றது. காலை பதினோறு மணியளவில் கவிஞர் கவிபாலா வரவேற்புரை நிகழ்த்திக் கொண்டு இருக்க சத்தமில்லாமல் உள்ளே நுழைந்தனர் ஆரியாவும், ஆதவனும்.

ஆரியா… எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்கவர். இயற்கை மீதும் இந்த மக்கள் சமூகம் மீதும் தீராத அன்பு கொண்டவர். தாய்மொழியாம் தமிழில் அளவில்லாத மோகம் கொண்டவர். அவருடைய எழுத்து ஏதாவது ஒரு விடியலை நோக்கியதாகவே இருக்கும்.

ஆதவன்… மேல்நிலைப்பள்ளி ஆங்கில பாட ஆசிரியர் எழுதுவது பேசுவதும் இவருக்கு ரொம்ப தூரம். ஆரியா தனது பாலிய சினேகிதன் என்பதால் இருவரும் எந்த நிகழ்ச்சிக்கும் ஒன்றாகத்தான் செல்வார்கள். தமிழ்க் கவிதைகளை விரும்பி படிப்பார். இலக்கிய சுவை பருகுவதற்காகவே ஆரியாவை விட்டுப் பிரிவதே இல்லை.

அன்று எப்போதும் போல் தனது கவிதைகளுடன் ஆரியா பேசத் தொடங்கியதும் ஒரு வித அமைதியும் சிறு சலசலப்பும் தென்பட்டது.

“நமது படைப்புகள் வேற்று மொழிகளில் அதிகமாக மொழிபெயர்க்கப்படும் போதுதான் தாய்மொழியின் வளர்ச்சி தொடரும். மொழிபெயர்ப்புகள் நம் மொழியில் தொடர வேண்டும். யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி தான் சிறந்தது என்று பாரதியால் எப்படி சொல்ல முடிந்தது. அதற்கான பணியில் எழுத்தாளர்கள் களம் அமைத்தால் தான் தமிழை உலகெங்கும் உணரச் செய்யமுடியும்” பேசி முடித்தார் ஆரியா.

“ஏம்பா இவ்வளவு வேகமா இருக்கே. ஒருத்தன் எழுதுனத இன்னொருத்த மொழிபெயர்த்து வெளியிடுறது எல்லாம் நடக்குற வேலையா. அவனவன் வேலைய பாக்குறதுக்கே நேரமில்ல.

எதுக்குப்பா இல்லாத ஊருக்கு வழி கேட்குற

“ஆதவா. இங்க ஒரு இந்திக்காரனோ, இங்கிலீஸ்காரனோ ஒரு பேராசியராகவோ, விரிவுரையாளராவோ இல்ல. தமிழன் தானே இருக்கான் ஏன்? அரசு வேலையில இல்லாதவன் கூட ஆங்கிலத்துல பேச, எழுத தெரிஞ்சுருக்கான். பலபேரு தமிழ்ல பேசுறத பாவம்னு நெனச்சு அடுத்தவன் மொழியில தான் ஆரவாரம் பண்ணுறான்”.

“ம்.. நியாயம் தான்…”

“எத்தனையோ நல்ல நூல்கள் தமிழ்ல நெறஞ்சு கிடக்கு. ஆளுக்கு ஒன்னுனு மொழிபெயர்த்தாலே நம்ம மொழிய இன்னும் தூக்கி நிறுத்திடலாம். சாகத்தானே போறோம் அதுக்குள்ள தாய்மொழிக்கு ஏதாச்சும் நல்லது பண்ணனும்னு ஒவ்வொருத்தரும் நினைக்கனும்.

“சரி. வண்டிய நிறுத்து, நிக்காம போயிக்கிட்டு இருக்க. “ஆதவனின் குரல் கேட்டு வண்டியை நிறுத்தினார் ஆரியா.

வண்டிச் சத்தம் கேட்டு வெளியே வந்தாள் மணிமேகலை.

“என்னப்பா இப்பதான் கூட்டம் முடிஞ்சுச்சா. லீவுல கூட வீட்ல தங்க மாட்றீக. ரெண்டு பேருக்கும் சீக்கிரம் கால்கட்டு போட்டாதான் அடங்குவீங்க” சொல்லி முடித்தாள் ஆதவனின் அம்மா மணிமேகலை.

“அம்மா… எத்தன கட்டு போட்டாலும் இந்தக் காலு ரெண்டும் வீட்ல தங்காது”

“அது சரிப்பா… இவன் ஏதாவது அங்க பேசுறானா… இல்ல எல்லாரு வாயையும் பாத்துக்கிட்டே இருக்கானா” “என்னைய இழுக்கலனா எங்க அம்மாவுக்கு தூக்கமே வராதே”

“சும்மா வெளையாட்டக் கேட்டேன் கோபிச்சுக்கிட்டியா…”

“பேசலனா என்னம்மா இவனுக்கு ரசிக்கிற ஆர்வம் இருக்குல… அது போதும்.”

“நா வேற வெளில நிக்க வச்சே பேசுறேன். உள்ள வாப்பா. சாப்பிட்டு போகலாம்…”

“இன்னொரு நாளைக்கு சாப்டுறேமா… வாய்ப்பாத்தியானு அவன கிண்டல் பண்ணாதீங்க. அவரு வாத்தியாருங்கிற நெனப்பு இருக்கட்டும் என்ன மாதரி விவசாயி கிடையாது.”

“ம்… நண்பன விட்டுக் கொடுக்க மாட்டீயே …பாத்துப் போயிட்டு வாப்பா…”

“நிலாப் பெண் கதிரவனை அடக்கி ஆள தயாரானாள். தெருவில் வாகனச் சத்தம் குறையத் தொடங்கியது. மின்விசிறி வேகமாய்ச் சுழல போர்வைக்குள் குடிகொண்டனர் பலரும்…”

மின்விசிறியை விட வேகமாகவே ஓடிக்கொண்டிருந்தது ஆதவனின் எண்ண ஓட்டம். ஆரியாவின் ஆதங்கம் அவனை தூங்கவிடாமல் துரத்திக்கொண்டே இருந்தது.

இருபத்து எட்டு வயதை கடந்துவிட்டோம். நல்ல வருமானத்தில் ஆசிரியர் பணி என்னத்த சாதிச்சேன்..

குழப்பத்தில் இருந்தவனை செல்போன் அலாரம் எழுந்திருக்க வைத்தது. மணி ஐந்து என்பதை நினைவூட்டியது.

சன்னலைத் திறந்து எட்டிப் பார்த்தான். இருட்டாகவே இருந்தது. வெளிச்சம் வரும் என்ற நம்பிக்கையில் அவரவர் வேலைகளை வழக்கம் போல் பார்க்கத் தொடங்கினர்.

அன்றைய ஆங்கில வகுப்பு இலக்கிய தமிழாகவே அமைந்தது.

நாட்கள் மெல்லக் கடந்தன…

முச்சந்தி இலக்கிய வட்டம் ஆரம்பமானது. அனைவருக்கும் ஆங்கில இதழ் ஒன்றின் பக்கத்தை நகல் எடுத்து கவிஞர் கவிபாலா வழங்கிக் கொண்டு இருந்தார்.

கவிச்சிற்பி கவிவர்மன் பேசத் தொடங்கினார்.

“சில கூட்டங்களுக்கு முன்ன தம்பி ஆரியா தன்னுடைய ஆதங்கத்த பதிவு செய்தாரு. எப்புடியோ யாரோ காதுல விழுந்துருக்கு. தம்பி ஆரியாவோட பொதுவுடைமைக் கவிதையும் கவிஞர் சங்கீதாவோட பெண்ணியம் சார்ந்த கவிதையும் அந்த ஆங்கில இதழ்ல மொழிபெயர்த்து போட்டுருக்காங்க. இது நம்முடைய தாய்மொழிக்கு கிடைத்த மற்றொரு வெற்றி”.

ஆவலோடு அந்த நகலை அனைவரும் பார்த்தனர். அதில் மொழிபெயர்ப்பாளர் பெயர் “வாய்ப்பார்த்தான்” என்றிருந்தது.

அவர் மேலும் பேசத் தொடங்கினார். “வாய்ப்பார்த்தான்” என்பவர் நமது படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். அவருக்கும் அந்த இதழுக்கும் நமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

யார் இந்த “வாய்ப்பார்த்தான்” எவரிடமும் பதில் வரவில்லை.

“என்னப்பா உன் ஆசை நிறைவேறிடுச்சு போல…”

கண்களால் பேசிய ஆதவனுக்கு கண்சிமிட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ஆரியா.

“யார் அந்த எழுத்தாளர்…” சிந்தனையில் மூழ்கியபடி வண்டியை ஓட்டத் தொடங்கினார்.

“நண்பா..எப்பவும் போல பேசிக்கிட்டே போ…”

“ம்…”

ஆதவனின் வீடு வந்தது. வாசலில் மணிமேகலை நின்று கொண்டு இருந்தாள்.

“இன்னைக்காவது சாப்பிடுப்பா…”

“ம்… சாப்டுறேமா…”

“என்னப்பா இன்னைக்கும் வாய்ப்பாத்தானா”

“என்னம்மா கேட்டீங்க…”

“வாய்ப்பார்த்தான்…மனசுக்குள் சொல்லிப் பார்த்தான்.”

தன் நண்பனின் பக்கம் கண்களை திருப்பினான்.

“நான் தான்” கண்மூடி ஆமோதித்தன், ஆதவன்.

அப்போது உச்சி வெயிலும் குளிரத் தொடங்கியது.. கைகோர்த்தபடி உள்ளே செல்ல அம்மாவைப் போலவே அழகாய் வரவேற்றன அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த புத்தகங்களும்…

– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தனம் பதிப்பகம், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *