தம்பீ, என்னாலே முடியலைனுதான் உன்கிட்டே கொடுக்கின்றேன்.இந்த லிஸ்ட்டில் உள்ளபடி பேப்பரை எல்லாம் போடணும், யார்கிட்டேந்தும் எந்த குறையும் வரக்கூடாது. பேப்பர்களுக்கான காசைக் கூட நீ வாங்க கூடாது. மாதாமாதம் நான் போய் வாங்கிக்கொள்கிறேன். என ரவியிடம் பல கண்டிப்புகளைப் போட்டுத்தான் பேப்பர்போடும் வீடுகளின் விலாசங்களை அளித்தார், பத்திரிக்கை ஏரியா நிர்வாகி.
கொடுத்த வீடுகள் எல்லாம் மூன்று , நான்கு மாடி கட்டிடத்திற்கு மேலத்தான் இருந்தன. படிகளை ஏறித்தான் பேப்பர் போடனும். லிஃப்ட் இருக்கு, ஆனால் பயன்படுத்த அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம் தடை போட்டுள்ளது. கரண்ட் பில் எகிறுதாம். சொற்ப சம்பளமே ஆனாலும் வீட்டின் வறுமை போக்கவே இந்த காலைநேர வேலை. இவன் விடியற்காலை நாலு மணிக்கு பேப்பர் எடுத்து போட ஆரம்பித்தால் முடிய காலை ஒன்பதாகிடும். பிறகு ஒரு டீ கடையில் வேலை, ஆனாலும் இந்த வேலையை ரசித்து செய்யத் துவங்கினான். மழையே பெய்தாலும் அவன் வருவதில் காலதாமதமில்லாமல் பார்த்துக்கொண்டான்.
இப்படி பரபரப்பாக இருந்த ரவியின் வாழ்க்கையில் திருப்பம் ஒன்று எதிர்பாராத விதமாக வந்தது.
சிவா அபார்ட்மென்டில் எட்டாவது மாடியில் ஒரு வயதான தம்பதியினர் தனது மகன் வாங்கிப்போட்ட பிளாட்டில் அவர்களது ஓய்வு காலத்தை வாழ்ந்துக்கொண்டு இருந்தனர்,
இவன் பேப்பர் போட வந்தபோது, தம்பீ, எனக்கு ஒரு உதவி செய்கிறாயா? ஒன்றும் அவசரமில்லை, நாளை வரும் பொழுது எங்களுக்கான மாத்திரைகளை வாங்கி வருகிறாயா? எனக் கேட்டு மருந்து சீட்டும் ஆயிரம் ரூபாயையும் இவனை நம்பிக் கொடுத்தாள்.
சரிங்க! வாங்கி வருகிறேன், என்று பெற்றுக்கொண்டான் ரவி.
மாதம் பூரா இந்த பேப்பரை எல்லாம் போட்டாக்கூட சம்பளம் இவ்வளவு இல்லையே, நாளை முதல் பேப்பர் போட போகாவிட்டால் யார் நம்மை தேடப்போகிறார்கள். என யோசித்தது ஓர் மனம்.
என்னை நம்பி கொடுத்தார்களே, இதற்கு பதில் நான் அப்படி செய்யலாமா? மாத்திரையை எதிர்பார்த்து காத்து இருந்து உயிர் நீங்கிவிட்டால் பாவம் இல்லையா? என யோசித்தான்
பாவம்! என முடிவெடுத்து வேண்டிய மாத்திரைகளை இரவே வாங்கி வைத்துக் கொண்டான். மறுநாள் அதை அவர்களிடம் சமர்பித்தான், அவர்களும் பாக்கி பைசாவை சரிபார்த்து வாங்கிக்கொண்டு அவனுக்கு ஐம்பது ரூபாயை நன்றி சொல்லி கொடுத்தார்கள்.
பெற்றுக்கொண்டது முதல் அவன் எண்ணம் மேலோங்கிட ஒரு தொழிலதிபாராக முடியும் எனத் திடமான நம்பிக்கையுடன்
கீழே படிக்கட்டுகளில் இறங்கினான் – வாழ்க்கையில் மேலே ஏறுவதற்கான வாய்ப்புடன்.
அடுத்து இரண்டு ஆண்டுகளில் நடந்தது எல்லாம் விக்ரமன் படத்தில் வரும் காட்சி போல,
இப்பொழுது அவனுக்கு கீழ் இருபது பேர் வேலை செய்கிறார்கள்.
‘Door Needs’ சேவை மையம் எனும் நிறுவனம் ஆரம்பித்து அடுக்குமாடி குடியிருப்புகளின் தேவைகளை குறிவைத்து தனது இலக்கினை திருப்பினான்,
அனைவர்களின் தேவைகளை குறித்து வைத்துக்கொண்டு மறுநாள் காலையிலே சேர்பித்தான், பேப்பர் நிர்வாகியிடம் சம்பளம் வாங்கிய ரவி, அந்த ஏரியாவின் உரிமையை பெற்றான். தனியாக ஆப் உருவாக்கி அதன் மூலம் சேவைகள் பெருக்கி நன் மதிப்பை பெற்று இன்று நகரத்தில் தவிர்க்கமுடியாத நபராகிப்போனான் ரவி.
அந்த ஆயிரம் ரூபாயில் திருப்தியடைந்து இருந்தால் இந்த வளர்ச்சி சாத்தியமா?
வாய்புகள் வாழ்வில் வந்த வண்ணம் இருக்கும். நாம்தான் அதை சரிவர கண்டுக்கொண்டு பயன்படுத்துகிறோமா? என்பதினிலே இருக்கிறது நம் மீத வாழ்க்கை.
வாய்புகள்தான் வாழ்க்கையை கட்டமைக்கின்றன.
அருமையான கதை. உங்கள் கதை மனதில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்துகின்றது. மிக்க நன்றி அய்யா.