தன் சைக்கிள் கடை முன் வந்து நின்ற கைனடிக் ஹோண்டாவிலிருந்து இறங்கிய அந்த இரண்டு பெண்களும் தன்னை நோக்கி வேகவேகமாக வருவதை குழப்பத்துடன் பார்த்தான் ஆறுமுகம். ‘யாரு இவளுக?..எதுக்கு இத்தனை வேகமா வர்றாளுக?’
‘இங்க…ஆறுமுகம்ங்கறது….யாரு?’ செம்பட்டைத்தலையுடனிருந்த சுடிதார்க்காரி மிரட்டல் தொனியில் கேட்க,
‘ஏன்?…நான்தான்’
எங்க மாதர் சங்கம் சார்புல அஞ்சு முக்கு ரோட்டுல நாங்க வெச்சிருந்த பேனரைத் திருடினது நீயா?’
ஒரு சிறிய யோசனைக்குப்பின் ‘ம்ம்ம்…திருடலை…எடுத்திட்டு வந்தேன்…அவ்வளவுதான்’
‘அதுக்குப் பேரு திருட்டில்லாம வேறென்ன?’
‘அப்படியா?…எனக்குத் தெரியாமப் போச்சே’ என்றான் ஆறுமுகம் வெகு அலட்சியமாக,
‘என்னா மேன் பேனரைத் திருடினதுமில்லாம…தெனாவெட்டாப் பேசறே?…உன்னோட ஆம்பளைத் திமிரையெல்லாம் வேற எங்கியாச்சும் காட்டு..எங்ககிட்ட வெச்சுக்காதே’
‘த பாருங்கம்மா ..என்ன நோக்கத்தோட நான் அதை எடுத்தேன்னு…..’
அவனைப் பேச விடாமல் இடையில் புகுந்த சுடிதார்க்காரி ‘அந்த விளக்கமெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை…நீ எடுத்தியா?…’
‘ஆமாம் எடுத்தேன்’
அவன் பதிலில் கோபமுற்ற இன்னொரு பெண்மணி ‘அட..படிப்பறிவில்லாத முண்டமே..அந்த பேனரோட மதிப்பு தெரியுமா உனக்கு? ..அட்லீஸ்ட் அதுல என்ன எழுதியிருந்ததுன்னாவது தெரியுமா உனக்கு?’ கத்தலாய்ச் சொல்ல.
‘சரி..நீங்களே சொல்லிடுங்களேன்..அப்படி என்னதான் எழுதியிருந்ததுன்னு’
‘உங்களை மாதிரி திமிர் பிடிச்ச ஆண்வர்க்கம் காலங்காலமா எங்க பெண் இனத்தை அடிமைப் படுத்தியிருக்கறதை தடுக்கற வாசகங்கள்… எங்க பெண் இனத்தோட உரிமை கோஷங்கள்…’
”ப்பூ..அவ்வளவுதானா?’ வெகு சாதாரணமாய் சொன்ன ஆறுமுகத்தை எரித்து விடுவது போல் பார்த்த சுடிதார் சுந்தரி,
என்னய்யா… எங்களைப் பார்த்தா உனக்கு நக்கலாயிருக்கா?..பொம்பளைங்கதானே!ன்னு சாதாரணமா நெனச்சிட்டியா?..நாங்க நெனச்சா….’
‘ப்ரியா…எதுக்கு இவன்கிட்ட அநாவசியப் பேச்சு….த பாருய்யா…எங்களோட பேனரைத் திருப்பித் தரப் போறியா…இல்லை போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணவா?’
சில நிமிடங்கள் அமைதியாய் யோசித்த ஆறுமுகம் ‘சரி வாங்க அது இருக்கற எடத்தைக் காண்பிக்கறேன்…முடிஞ்சா எடுத்திட்டுப் போங்க’
சொல்லிவிட்டு வேகவேகமாக நடந்த ஆறுமுகத்தின் பின்னால் ஓட்டமும் நடையுமாகச் சென்றனர் அந்தப் பெண்களிருவரும்.
‘அதோ…அங்க இருக்கு உங்க பேனர்…போய் எடுத்துக்கங்க’
அவன் காட்டிய திசையில் திரும்பிப் பார்த்த அப் பெண்களிருவரும் அதிர்ச்சி வாங்கி நின்றனர்.
மாநகராட்சி பெண்கள் கழிப்பிடத்தின் ஒரு பக்கச் சுவராய் நின்றிருந்தது மாதர் சங்கத்தின் பெண்ணுரிமை பேனர்.
‘என்னம்மா முழிக்கறீங்க…அது பொம்பளைக் கழிப்பிடம்…போன தடவை அடிச்ச மழைல அதோட அந்தப்பக்க சுவர் மொத்தமா விழுந்திடுச்சு. பாவம்..இந்த ஏரியா பொம்பளைக..அதிலிருந்து பகல்ல போக முடியாம…ராத்திரி வரைக்கும் பொறுத்துக்கிட்டு…வெளிப்படையா சொல்லனும்னா..ராத்திரி வரைக்கும் அடக்கிக்கிட்டு..இருட்டானதும் மட்டுமே போய் வந்திட்டிருக்காங்க..கார்ப்பரேஷன்ல சொல்லிச் சொல்லி ஓய்ஞ்சு போச்சு..சரி..நம்ம பொம்பளைகளோட சிரமத்த இப்படியாவது தீர்ப்போம்னு நான்தான் உங்க பேனரை எடுத்துட்டு வந்து வெச்சேன்… அது தப்பா?’
அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.
‘த பாருங்கம்மா…சும்மா… ‘பெண்ணினத்தைக் காப்போம்’.. ‘பெண்ணுரிமைக்காகப் போராடுவோம்’ன்னு பேனர் எழுதி வெச்சாப் பத்தாது…இது மாதிரி அவங்களோட அடிப்படைப் பிரச்சினைகளைப் புரிஞ்சுக்கிட்டு..அதைத் தீர்க்கறதுக்கு வழி பண்ணனும்…வெறுமனே மேல் மட்டத்தை மட்டுமே பார்த்தாப் பத்தாது..கீழ் மட்டத்துக்கும் இறங்கி வரணும்’
அவர்களிருவரும் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர,
ஆறுமுகம் தலை நிமிர்ந்தபடி நடந்தான்.