வானவர்கள் செல்லும் இடங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 26, 2022
பார்வையிட்டோர்: 6,036 
 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

இறந்துவிட்ட, வெளியூர்வாசியான ஷேக் அப்துல்லா மகன் அஹமது கபீர் என்பவருடைய மய்யம் அடக்கம் செய்வது தொடர்பான ஜமாஅத் (ஊர்) நிர்வாக சபை முதலில் இரண்டுமுறை கூடியது. முதல் இரு முறை நடந்த பேச்சு வார்த்தையிலும் எந்த முடியும் ஏற்படாமல் கூட்டம் கலைக்கப் பட்டதால் மூன்றாவது சுற்றுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. ஜமா அத் தலைவரும் செயலாளரும் முரண்பாடான கருத்துக்களுடையவர் களாகியிருந்ததின் நிமித்தம், உறுப்பினர்களில் பலர் இரு அணிகளாக நின்று காரசாரமாக விவாதித்தனர். காலையில் நடந்த முதல் கூட்டத்தில் கடுமையான விவாதங்கள் நடந்ததே தவிரப்பேச்சில் முன்னேற்றம் ஏதும் ஏற்படாமல் கூட்டம் கலைக்கப்பட்டது. இறந்துவிட்ட அஹமது கபீரின் பேரில் அனுதாபம் கொண்ட சிலருடைய வேண்டுகோளின்படி மதிய உணவுக்குப் பின் மீண்டும் நடந்த இரண்டாவது சுற்றுக் கூட்டத்தில் உறுப்பினர்களில் சிலர் திடீரென அணி மாறிவிட்டனர். மாலைவரை நடந்த இரண்டாவது சுற்றுக் கூட்டத்தில் அணிமாற்றம் ஏற்பட்டதினால் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் சபை மீண்டும் கலைக்கப்பட்டது. சில நடுநிலை உறுப்பினர்கள் விடுவித்த வேண்டுகோளையும், இறந்தவருடைய உறவினர்களின் தாழ்மையான விண்ணப்பத்தையும், இறந்தவர்களின் மகன் கொடுத்த மூன்றாவது மனுவையும் கருத்தில் கொண்டு காலையில் முதல் சுற்றுக் கூட்டம் நடந்த அலுவலக முதல் மாடியில் மூன்றாவது சுற்றுக் கூட்டமும் நடந்து கொண்டிருந்தது.

பெருநகர ஜமா அத் ஆனதால் நிர்வாக அலுவலகம் இரண்டு மாடிகள் கொண்ட கட்டடமாக இருந்தது. சபை கூடியது முதல் மாடியில். அங்கு நடந்த விவாதக் குரல்கள் வெளியே திரண்டிருந்த ஊர் மக்களுக்கும் வெளியூரிலிருந்து வந்து, ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் அகப்பட்டுத் தவித்தவர்களுக்கும் கேட்கும்படியாக இருந்தன.

திரண்டிருந்தவர்களில் பலரின் முகங்கள் சோர்ந்து காணப்பட்டன.

இறப்பு முந்தைய இரவு 10 மணிக்கு நிகழ்ந்ததால் அதிகாலையில் அடக்கம் நடைபெறும் என நம்பி பறந்தடித்து வந்த உறவினர்கள் உண்ணாமலும் பருகாமலும் ஒரே நிலையாக நின்று அலுத்துப் போயினர். நடந்து கொண்டிருக்கும் மூன்றாவது சுற்றுப் பேச்சில் எப்படியாவது ஜமாஅத் நிர்வாகிகள் சாதகமான முடிவுக்கு வருவார்கள் என்ற

எதிர்பார்ப்பு, இறந்தவரின் உறவினர்களிடையே நிலவியது.

ஜமா அத் தலைவர் ஆளும்கட்சியின் வட்டச் செயலாளரும், வார்டு உறுப்பினரும் என்ற ஒரே காரணத்தினால், நகர சாலைவிளிம்புகளில் வியாபாரம் செய்யும் சில உறுப்பினர்கள் தலைவர் பக்கம் சேர்ந்து வாதாடினார்கள்.

அடக்கம் செய்ய முடியாது.

எக்காரணம் கொண்டும் ஜமாஅத் கபர்ஸ்தானில் அடக்கம் செய்யக் கூடாது என்பதில் தலைவர் பிடிவாதமாக இருந்ததற்கு அவருக்கே உரிய சில காரணங்களை முன்வைத்தார். அக்காரணங்களைத் தவிர வேறு காரணங்கள் தலைவர் பக்கம் நின்று பேசியவர்களுக்கும் சொல்வதற்கில்லை.

அரசியல் சார்பு இல்லாவிட்டாலும் ஆளும் கட்சி அரசின் சில கொள்கைகளோடு உடன்பாடு உடையவரல்ல புதியதாகத் தேர்வு செய்யப்பட்ட காரியதரிசி தினமும் காலையில் டீக் கடை பெஞ்சில் கால்மேல் கால் போட்டு, இரண்டு மூன்று தினசரிகளை வரிவிடாமல் வாசித்துவிட்டுப் பள்ளிவாசல் வேம்படியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் தொழுகையாளிகளிடம் ஆளும் கட்சியினரின் ஊழல்களையும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசைத் தாக்கிப் பேசுவதையும் விளக்குவது, தலைவரை மறைமுகமாகத் தாக்குவதாக இருக்கும். இருந்தாலும் காரியதரிசி மீது மதிப்புக்குறைவும் கோபமும் இல்லாதவரைப் போல் நடந்து கொள்வார் தலைவர்.

ஜமாஅத் நிர்வாக அரசியலில் குறிப்பாக, மய்யங்கள் அடக்கம் செய்ய இட ஒதுக்கீடு செய்யும் தலைவரின் தனி அதிகாரத்தில் காரியதரிசியின் குறுக்கீடு அதுவரை இல்லாததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

ஆனால், இந்த மய்யம் அடக்கம் செய்யும் விஷயத்தில் மட்டும் காரியதரிசியின் திடீர் குறுக்கீடு தலைவரின் நோக்க

நிறைவேற்றத்திற்கு ஒரு முட்டுக்கட்டையை ஏற்படுத்தியது.

உயர்தர மக்களை அடக்கம் செய்யும் வடபக்கம் உள்ள கபர்ஸ்தானில் இடம் வாங்கி இந்த மய்யத்தை நல்லடக்கம் செய்ய வேண்டுமென்ற காரியதரிசியின் அடம்பிடிப்பு தலைவரை மனக்குழப்பத்திற்கு உள்ளாக்கியது.

நடுநிலையாளர்களான உறுப்பினர்கள், வடபக்கம் இல்லாவிட்டாலும் நடுத்தர மக்களை அடக்கம் செய்யும் தென்புற கபர்ஸ்தானிலாவது இடங்கொடுக்க வேண்டுமென்ற கருத்தை முன்வைத்தனர். அதை மூன்றாவது சுற்றுக் கூட்டத்தில் பரிந்துரைக்கவும் செய்தனர்.

தலைவர் தரப்பினர் அதையும் ஒப்புக்கொள்வதாக இல்லை.

பெரிய மருத்துவமனையில் இறந்த அனாதைகள், யாசகர்களாக வந்து பள்ளிவாசலில் தங்கி இருக்கையில் திடீரென இறந்துவிடுகிற முஸாபிர்கள், ஜமாஅத்தில் உள்ள அடிமட்ட ஏழைகள் முதலியோரை அடக்கம் செய்யும் கீழ்ப்புறமுள்ள அனாதை கபர்ஸ்தானிலாவது இடங்கொடுக்க வேண்டுமென ஒரு முதிய உறுப்பினர் சொன்ன யோசனையும் நிராகரிக்கப்பட்டது.

வாத எதிர்வாதங்களின் வால் நீண்டு நீண்டு, இறந்துபோன முந்தைய இரவு நேரமான மணி பத்தைத் தொட்டது. வெளியூரிலிருந்து ‘துட்டிக்கு’ வந்தவர்களில் சிலர் ஒரு முடிவும் ஏற்படாததால் கடைசி பஸ்களைப் பிடித்து தத்தம் ஊர்களுக்குப் புறப்பட்டுப் போயினர். நெருங்கிய உறவினர்களில் சிலர் மட்டுமே சோகமுகங்களுடன் ஜமாஅத் அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் இடையே தேராபாராவென்று நடந்து கொண்டிருந்தனர்.

இறந்தவருடைய சொந்த ஊரில் கொண்டு போய் அடக்கம் செய்யட்டுமே, என்று காலையில் நடந்த முதல் சுற்று கூட்டத்தில் எதிர்பாகம் தெரிவித்த கருத்தின்படி இறந்தவருடைய மகன் 70 மைலுக்கு அப்பால் உள்ள பாட்டனார் பிறந்த ஊருக்கு வாடகைக் காரில் பறந்தார். பரிச்சயமில்லாத ஊரும் முகங்களும்.

ஊரை அடக்கி ஆளும் ஜமாஅத் காரியதரிசியிடம், விண்ணப்பம் கொடுத்துவிட்டுக் கைகட்டிப் பணிவாக நின்றார், சாதகமான பதிலை எதிர்நோக்கி.

காரியதரிசி தண்டியான திருமணப் பதிவேடு, சுன்னத் பதிவேடு, பிறப்பு இறப்புப் பதிவேடு போன்ற ஆவணங்களைப் புரட்டிப் பார்த்தார். ஷேக் அப்துல்லா மகன் அஹமது கபீர் என்ற ஒரு பெயர் காலம் கருமையாக்கிய அந்த ஆவணக் காகித வரிகளில் எங்குமே தென்படவில்லை.

“உன் வாப்பாவின் பெயர் எங்கள் ஊர் ரிக்கார்டில் இல்லப்பா” என்று சொல்லிக் கைவிரித்தார்.

“என் பாட்டனார் ஊர் இதுதான் ஆஜியாரே.”

“இறந்தது உன் பாட்டனாரா?”

“வாப்பா”

“உன் வாப்பா எங்கள் ஜமாஅத்தை சேர்ந்தவரல்ல. அவர் பெயரில் ஊர் தலைக்கட்டு வரி இல்லை, மீலாது விழாவிற்கு நன்கொடை கொடுத்த ரசீது இல்லை. காதர் வலியுல்லா சந்தனக்கூடுக்கு நேர்ச்சை கொடுத்தவர்கள் பேரில் அவர் பெயர் இல்லை. இப்படி இருக்க எங்கள் ஜமாஅத் கபர்ஸ்தானில் அடக்கம் செய்ய எப்படி இடம் தருவோம்?”. காரியதரிசியின் பதிலைக் கேட்டுவிட்டுத் திரும்பி வந்து சில உறுப்பினர்களை மீண்டும் அணுகிய பிறகுதான் இரண்டாவது சுற்றுக் கூட்டம் நடந்தது.

இரண்டாவது சுற்றுக் கூட்டத்தில்தான் இறந்த அஹமது கபீருடைய தகப்பனார் ஷேக் அப்துல்லா வெளியூர் ஜமாஅத்தைச் சார்ந்தவர் என்றும், வியாபாரத்திற்காக இங்கு வந்து தங்கினாரே தவிர ஜமாஅத்தில் சேரவில்லை என்றும் தலைவர் சொல்ல, ஊர் மக்களுக்குத் தெரியவந்துள்ளது. அஹமது கபீர் மலபார் போனபோது அங்கிருந்து நிக்காஹ் செய்தவரென்ற ரகசியத்தையும் அம்பலப்படுத்தி அதை ஒரு குற்றச்சாட்டாக முன்வைத்தார். ஆனதால் அவருடைய மனைவி ஊரான மலபாரில் கொண்டுபோய் அடக்கம் செய்யட்டும் என்று இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் தலைவர் எடுத்த முடிவோடு காரியதரிசியும் சில உறுப்பினர்களும் உடன்படவில்லை.

600 கி.மீ. தொலைவிற்குக் கொண்டு போவதா?

மௌத்தாய்ப்போன அஹமது கபீர் கடந்த 50 ஆண்டு காலமாக இந்த ஜமாஅத்திலே தங்கி வருபவரென்றும், பள்ளிவாசல் விஸ்தரிப்புக்கு நன்கொடை வழங்கியது மட்டுமல்லாது, வடபக்கம் உள்ள கபர்ஸ்தானை விரிவுபடுத்த நிலம் வாங்கப் பணம் வசூல் செய்யும் கமிட்டியுடன் சேர்ந்து பல ஊர்களில் வசூலுக்குப் போனது ஊராருக்கும் தனக்கும் தெரியும் என்று மூன்றாவது சுற்றில் காரியதரிசி அடித்துப் பேசினார். அதனால் அவர் மய்யத்தை வடபக்கம் உள்ள கபர்ஸ்தானில் அடக்கம் செய்ய வேண்டுமென்றார்.

தலைவர் படம் தாழ்த்தியதைக் கண்டு இறந்தவர்களின் உறவினர்களுடைய முகங்களில் நம்பிக்கை துளிர்த்தது. உடன் அடக்கம் செய்ய அனுமதி கிடைக்குமென்ற எதிர்பார்ப்பில் அனைவரும் நின்று கொண்டிருந்தனர்.

தலைவர் அணியைச் சார்ந்த உறுப்பினர் ஒருவர் சடாரென எழும்பினார். பள்ளிவாசல் விஸ்தரிப்பிற்கு நன்கொடை வழங்கியதும், வடபுற கபர்ஸ்தானுக்கு நிலம் வாங்க வெளியூர் சென்று பணம் வசூல் செய்ய ஒத்துழைத்ததும் உண்மைதான். அதற்காக வெளியூர்வாசியான இவரை இங்கு அடக்குவதற்கும் இடம் கொடுக்க முடியுமா? ஆனால் இறந்தவருடைய மகன் செய்த குற்றத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த ஜமாத்தில் உள்ள ஒரு விதவைப் பெண்ணைக் கடத்திக் கொண்டுபோய்ப் பதிவுத் திருமணம் செய்தது இந்த ஜமா அத்தையும் ஷரீஅத்தையும் மீறின செயல் என்று உரக்கச் சொன்னபோது தலைவருக்குத் தெம்பு ஏற்பட்டது.

இதுக்குப் பதிலென்ன?

தலைவர் பார்வையால் எழுப்பிய கேள்விக்கு உடன் பதில் கிடைக்கவில்லை.சிறிது சிந்தனைக்குப்பின் காரியதரிசி எழும்பினார். ஜமா அத்தையும் ஷரீஅத்தையும் மீறியது இறந்தவரல்ல. மீறிய அவருடைய மகன் அப்துந் நாசர் இறந்திருந்தால், இந்தக் கேள்வியை எழுப்ப வேண்டியதுதான். மகன் செய்த தவறுக்காக ஒரு முஸ்லிம் மய்யத்தை இப்படிப் போட்டு வைப்பது ஷரீயத்படி ஆகுமா? கோபாவேசக் குரலாகயிருந்தது காரியதரிசியுடையது. காரியதரிசியின் சட்டக் கேள்விக்குப் பதில் தெரியாமல் தலைவர் அணி உறுப்பினர்களும் மற்றவர்களும் திணறி முழித்தபோது முதிய உறுப்பினர் ஒருவர் தனக்கு உடன் தோன்றிய ஒரு யோசனையைப் படக்கென்று சொன்னார்.

மெளலானா மெளலவி அப்துல் ஹை காதிரியை கூப்பிட்டு இந்த சிக்கலுக்கு ‘பத்வா’ (தீர்ப்பு வழங்கச் சொல்வோம்.

பள்ளிவாசல் இமாமும் மேடைப் பிரசங்கியுமான மெளலானா மெளலவி அப்துல் ஹை காதிரி அவர்களை உறக்கத்திலிருந்து தட்டி எழுப்பி அழைத்து வந்த நேரம் அலுவலகச் சுவரில் தொங்கி, நாக்கு ஆட்டிக் கொண்டிருந்த வட்ட மணி 12 என உணர்த்தி மூச்சு அடக்கியது.

“பத்வா”, சொல்ல வந்தவரானதால் அரச தோரணையில் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு சபையோரைப் பார்வையால் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள் என்றார். முன்பு பல பத்வாக்கள் கொடுத்த பரீட்சயம் இருந்ததால் மௌலானா மெளலவி பத்வா கொடுக்கத் தயாரானார்.

“மெளலவி சாப், ஒரு சிக்கலான பிரச்சினை! தாங்கள் ஒரு பத்வா தரவேண்டும். மகன் செய்த தவறுக்கு, நேற்று இரவு பத்து மணிக்கு இறந்த முஸ்லிமான ஒரு தகப்பனாரின் மய்யத்தை வெளியூர்க்காரர் என்று சொல்லி இன்று இரவு பன்னிரண்டு மணிவரை அடக்கம் செய்ய இடம் கொடுக்காமல் போட்டு வைத்திருப்பது ஷரீயத் சட்டப்படி ஆகுமா? ஆகாதா? முதல் கேள்வி எழுப்பியது காரியதரிசி.

மெளலானா மெளலவி தாடி தடவினார். தொப்பியை எடுத்துவிட்டு தலையைச் சொறிந்தார். ஆகும் என்று சொல்வதா? ஆகாதென்று சொல்வதா? ஒன்றும் பிடிபடவில்லை. தலைவரா? காரியதரிசியா? சிங்கத்திற்கும் கரடிக்கும் இடையில் மாட்டிக் கொண்ட அச்ச உணர்வு அவரை வரிந்து கட்டியது.

சரி, உங்கள் தரப்புக் கேள்வி?

பள்ளிவாசல் புத்தகத்தில் பதிவாகாமல் இரண்டு முஸ்லிம் சாட்சிகளின் முன்னிலையில் மெளலவி நிக்காஹ் செய்து கொடுக்காமல் இறந்தவரின் மகன் பதிவுத் திருமணம் செய்து கொண்டதை ஷரீயத் சட்டப்படி ஏற்றுக் கொள்ளலாமா, கூடாதா?

தலைவர் கேள்வி எழுப்பியதும் காரியதரிசி அணியிலுள்ள ஓர் உறுப்பினர் குதித்து எழுந்து சொன்னார். “பதிவுத் திருமணம் செய்தாலும் தனியாக மெளலவியை வைத்து நிக்காஹ் செய்து கொண்டால் ஷரீயத்படி ஏற்றுக் கொள்ளத்தக்கதுதானே?”

உறுப்பினர் கூறியபடி இறந்தவரின் மகனுடைய நிக்காஹ் இந்த ஜமாஅத்தில் பதிவாகவில்லை. எந்த ஜமாஅத்தில் வைத்து நிக்காஹ் நடந்ததோ அந்த ஜமாஅத்தாரின் கடிதம் கொண்டு வரட்டும். தலைவர் சொன்ன விளக்கம் காரியதரிசியை வாய் மூடவைத்தது.

’’மெளலவி சாப், இதற்கு உங்கள் பத்வா என்ன?”

மெளலானா மெளலவி அப்துல் ஹை காதிரி எப்போதும் பத்வா கொடுப்பதற்கு முன் சற்று மெளனமாக இருப்பது போல் இருந்துவிட்டு சபையோரைப் பார்த்தார். நிர்வாகிகளும், நிர்வாகிகளின், மூன்றாவது சுற்றுக் கூட்டத்தில் எடுக்கும் முடிவு தெரிய ஆவலோடு நின்று கொண்டிருந்த மக்களும், இறந்தவரின் மகன் அப்துந் நாசரும் பத்வா கேட்க ஆவலாக மெளலானா மெளலவியின் முகத்திலிருந்து விழிகளை எடுக்கவில்லை. சடலத்தை, வெகு நேரம் போட்டு வைப்பதும், அடக்கம் செய்ய இடம் கொடுக்க மறுப்பதும் தவறெனத் தெரிந்தும், இது ஒரு சிக்கலான சட்டப் பிரச்சினை’என்று துவங்கி, கிதாப்பு (நூல்) பார்க்காமல் பத்வா சொல்ல முடியாது என்று கூறி மெளனமானார், மெளலானா மெளலவி.

“அப்படியானால் உடன் கிதாபு எடுத்து வரவும், என்றார்கள் நிர்வாகிகள்.”

“மன்னிக்கவும், கிதாபு கையில் இல்லை . தலாக் சொல்லிவிட்ட என்னுடைய முதல் மனைவியின் வீட்டில் மாட்டிக்கொண்டது”என்று கூறி பொந்திலிருந்து தலையை உருவி எடுக்க முயன்றார்.

“மெளலவி சாப், என்னுடைய கேள்விக்கு பத்வா சொல்லுங்கள்”என்றார் தலைவர்.

“உங்கள் கேள்வி சம்பந்தப்பட்ட கிதாப்பை என்னுடைய இறந்துபோன இரண்டாவது மனைவி யாருக்கோ இரவல் கொடுத்துவிட்டாள்.”

“அப்படியானால் இந்த மய்யத்தை என்ன செய்வது?”முதிய உறுப்பினர் கேட்ட கேள்விக்கு, ஜமாஅத் நிர்வாகம் முடிவு செய்யட்டும் என்று கூறி மெளலானா மெளலவி இருக்கையை விட்டு எழும்பினார்.

கூடி நின்ற மக்களிடைய ஒரு சலசலப்பு. நெரிசலுக்கு இடையிலிருந்து திமிறிக்கொண்டு இறந்தவருடைய மகன் ஜமாஅத் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து கத்தினார்.

“மெளலவி சாப், கிதாபு பார்க்காமல் உங்களுக்கு ஒரு பத்வா சொல்ல முடியாது. இருக்கட்டும். என்னுடைய ஒரு கேள்விக்கு மட்டும் பத்வா சொல்லுங்கள். பள்ளிவாசலை ஒட்டிய கபர்ஸ்தானில் அல்லாமல் வெளியே அடக்கம் செய்யப்படுவோரின் புதைகுழிக்குள் கேள்வி கணக்கு கேட்க முன்கர், நக்கீர் (வானவர்கள்) வருவார்களா?”

வழியில் ஒளிகாட்ட டார்ச் விளக்கு கொண்டு முன்னால் சென்றவருக்குப் பின்னால் செல்ல முற்படும் போது மௌலானா மெளலவி மெல்லச் சொன்னார், “எங்கும் வருவார்கள்.’’

மெளலானா மெளலவியின் எதிர்பாராத மெல்லிய பதில் சுளீரென்று இருந்தது தலைவருக்கு தலைவர் வெடுக்கென்று இருக்கையை விட்டு எழும்பினார்.

“முடிவு?”

முதிய உறுப்பினர் கேட்டார்.

“நமது ஜமாஅத் கபர்ஸ்தானில் வெளியூர்வாசிகளின் மய்யங்களை அடக்கம் செய்ய முடியாது.”

“தீவிலிருந்து நோய் சிகிச்சைக்கு இங்கு வருபவர்கள் இறந்து விட்டால் இந்த மய்யங்களை அடக்கம் செய்ய இடம் கொடுக்கிறீர்களே? 50 ஆண்டுகளாக இந்த ஜமாஅத்திலே வாழ்கின்ற ஒருவடைய மய்யம் அடக்கம் செய்ய ஏன் இடம் கொடுக்க மறுக்கிறீர்கள்?”

எந்த அணியிலும் சாராத நடுநிலையாளரான ஓர் இளைஞர் கேட்டது, தலைவரின் முகத்தில் அறைந்தாற்போல் இருந்தது.

“அதற்கெல்லாம் இங்கு விளக்கம் தர முடியாது. மணி ஒன்றாகி விட்டது. இப்போதாவது போய் படுத்தால்தான் சுபுஹ் தொழுகைக்கு எழும்ப முடியும். இத்துடன் கூட்டம் கலைக்கப்படுகிறது”

தலைவர் வெடுக்கென்று எழும்பி நடந்தார்.

அப்துந் நாசர் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டை நோக்கி நடந்தார் என்றாலும் அவரால் நடக்க முடியவில்லை. தலைக்குள் பல நூறு கேள்விகள். பள்ளிவாசல் விஸ்தரிப்புக்கு இரவு பகலாகப் பணியாற்றியவரும், வடபுறமுள்ள கபர்ஸ்தானத்தில் இடப்பற்றாக்குறை வந்தபோது பக்கத்து தோப்புக் காரனிடமிருந்து இடம் வாங்கப் படாதபாடுபட்டவருமான வாப்பாவின் உடலை எங்கு, எப்படி

அடக்கம் செய்வது?

ஒரு கை தோளைத் தொட்டதை உணர்ந்த அப்துந் நாசர் திரும்பிப் பார்த்தார். பரிச்சயமானவர்தான். பிளாட்பாமில் செருப்பு கடை வைத்திருப்பவர்.

“விபரம் தெரியாத பிள்ளையாய் இருக்கிறீயே. ஜமாஅத் நிர்வாகம் தாமதப்படுத்தினால் வீச்சம் வெச்சிருப்பா. தலைவரை இரவே தனியாய் போய்ப்பாரு. நாளை காலை 8 மணிக்கெல்லாம் வடபுறமுள்ள கபர்ஸ்தானில் உன் வாப்பா மய்யத்தை சிறப்பாக அடக்கம் செய்யலாம். தீவுக்காரங்களல்லாம் தனியாய் போய் பாப்பாங்க”

தனியாய்ப் போய் பார்க்கிறேன் என்று கூறி அப்துந் நாசர்

அவரை மடக்கிவிட்டார்.

தனியாகச் சந்திக்க வரும் அப்துந் நாசரை எதிர்நோக்கி தலைவர் சுபுஹ் (காலை) பாங்கு சொல்லும் வரை வீட்டுத் தலைவாசலைத் திறந்திட்டுக் கொண்டு விழித்திருந்தார்.

முன்கர், நக்கீர் எங்கும் வருவார்கள்!

வீட்டிற்கு நடக்கையில் மெளலானா மெளலவி சொன்னது அப்துந் நாசரின் மனதில் வியாபித்துக் கொண்டிருந்தது.

எங்கும் வருவார்களானால் அங்கும் வருவார்கள்.

கடற்கரை புறம்போக்கில் ஒரு மண்திட்டையும் தலைப்பக்கமும் கால்பக்கமும் இரு மீசான் பலகைகள் நாட்டப்பட்டிருப்பதையும் விடிந்த பொழுதில் ஜமாஅத்தார் கண்டதைத் தலைவரிடம் சொன்னார்கள், சொன்ன அன்றைய லுகர் தொழுகைக்கு இமாமாக நின்று தொழ வைத்தவர் உடனடியாக தலைவரால் நியமனம் பெற்று வந்த மவுலவி அப்துல் ஜப்பார் உலவி அவர்கள்!

– சலாம் இஸ்லாம், சமீபத்திய இசுலாமியச் சிறுகதைகள், திரட்டு: களந்தை பீர்முகம்மது, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 2002

– மின்னூல் வெளியீட்டாளர: http://freetamilebooks.com

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *