வாத்ஸ்யாயனர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 14, 2021
பார்வையிட்டோர்: 4,006 
 

(இதற்கு முந்தைய ‘ஈருடல் ஓருயிர்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது).

வேலைக்குப்போய் சம்பாதிக்கும் பெண்களுக்கு இன்றுள்ள சுதந்திரத்தைப் போல ஆயிரத்துஎழுநூறு ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் இருந்துள்ளது. மேல்நாட்டில்கூட இப்படி இருந்திருக்குமா என்பது பெரிய கேள்விக்குறி. ஏனெனில் இந்தியப்பெண்கள் ஓட்டுபோடும் உரிமை பெற்ற பின்னரே மேலைநாட்டுப் பெண்கள் ஓட்டுரிமை பெற்றனர்.

குப்தர் காலம்முதல் நாயக்கர் காலம்வரையுள்ள கல்வெட்டு, செப்புப் பட்டயங்களைப் பார்த்தால் எவ்வளவு பெண்கள் கோயில்களுக்கும் நன்கொடை கொடுத்துள்ளனர் என்பது தெரியும்.

மூன்றாவது நான்காவது நூற்றாண்டுகளில் ஆந்திரப்பிரதேசத்தை ஆண்ட இட்சுவாகு வம்சத்தவர்கள் கொடுத்த நன்கொடைகள் கல்வெட்டுகளில் உள்ளன. அதில் வியப்பான செய்தி என்னவென்றால் நன்கொடை கொடுத்தவர்களில் இருபது சதவீதம்பேர் பெண்கள்.

நாகார்ஜுனகொண்டாவில் இந்தக் கல்வெட்டுகள் உள்ளன. அரசவம்ச பெண்கள் மட்டுமின்றி சாதாரணப் பெண்களும் இந்த நன்கொடைகளை அளித்துள்ளனர்.

குப்தர்கால கல்வெட்டுகளிலும் பெண்கள் நன்கொடை கொடுத்ததை அறியலாம். ஆனால் அப்பெண்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. சோழர்கால கல்வெட்டுகளில் செம்பியன்மாதேவி, குந்தவை ஆகியோர் கொடுத்த தானங்களைப்பற்றி பெருமளவில் காணமுடிகிறது. ராஜராஜ சோழனின் தமக்கையான குந்தவை. தனது சகோதரனையும் ஏராளமான அறப்பணிகளில் ஈடுபடுத்தினாள்.

பல்லவர்கால ராணி ரங்கபதாகா நிறைய தானங்கள் செய்ததை செப்பேடுகள் சொல்கின்றன. இதேபோல் சாணக்கியர், பாண்டியர், நாயக்கர் கால கல்வெட்டு, செப்பேடுகளிலும் ஏராளமான செய்திகள் உள்ளன. பெண்களுக்கு எவ்வளவு பொருளாதாரச் சுதந்திரம் இருந்தது என்பதையும் அவர்கள் எவ்வளவு சுயமாகச் சிந்தித்து செயல்பட முடிந்தது என்பதையும் இதிலிருந்து அறியலாம்.

முதலாவது சந்திரகுப்தன் வெளியிட்ட தங்கநாணயத்தில் அவன் பெயரும், மனைவி குமாரதேவியின் பெயரும் உள்ளன. குப்தர்கால தங்க நாணயங்களில் அதிகமாக தேவியர் உருவங்கள்தான் காணப்படுகின்றன.

இந்தியநாட்டின் பலபகுதிகளில் எதிலுமே பெண்களுக்கு முதலிடம். இதை விளக்க சுவாமி தேஜாமயானந்தா ஒருகதை கூறினார்… ஒருமுதியவர் பேருந்து நிலையத்தில் உட்கார்ந்துகொண்டு ராமாயணம் படித்தாராம். காத்திருக்கும் நேரத்தை அவர் பயனுள்ளமுறையில் பயன்படுத்த எண்ணினார் போலும்! இதை ஒரு இளைஞர் பார்த்து ஏளனமாக பரிகாசம் செய்தார். சிறிதுநேரத்தில் பெரும் கூட்டத்துடன் பேருந்து வந்தது. எல்லோரும் முண்டியடித்துக்கொண்டு பேருந்தில் ஏறினர். அந்த இளைஞரும் ஏறினார். சிறிது நேரத்தில் பேருந்தை உடனே நிறுத்தும்படி அந்த இளைஞர் கூச்சல்போட்டார். எல்லோரும் திகைத்து காரணம் கேட்டார்கள்.

காரணம் அவர் தன் மனைவியை விட்டுவிட்டு தான் மட்டும் பேருந்தில் ஏறிவிட்டார். பேருந்து நின்றதும் அந்த இளைஞர் இறங்கிச்சென்று மனைவியிடம் அன்பாக, “நீ ராமாயணம் படித்திருந்தால் இப்படிப்பட்ட ஒரு அவசரகோலம் நடந்திருக்காது. படகில் ஏறும்போதுகூட சீதையை முன்னால் ஏற்றிவிட்டு பின்னரே ராமலக்ஷ்மணர்கள் ஏறியதை ராமாயண ஆசிரியர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். இதைப் படித்திருந்தால் நீயும் அப்படிச் செய்திருப்பாய் அல்லவா?” என்று வழிந்தாராம்…

பெண்களுக்கு முன்னுரிமையும், முதலிடமும் கொடுப்பது பாரத பண்பாடு.

பெண்களைக் குறைகூறுவோருக்கு எதிர்கேள்வி போடுகிறார் வராஹமிஹிரர். பல ஜோதிட, வானசாஸ்திர நூல்களை எழுதிய இந்த அறிஞர் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார்.

“உண்மையைச் சொல்லுங்கள், பெண்கள் பற்றி நீங்கள் சொல்லும் குறைகள், ஆண்களிடத்தில் இல்லையா? பெண்களிடம் கூடுதல் குணங்கள் இருந்தபோதும், ஆண் தங்கள் அகந்தையால் பெண்களைக் குறைகூறுகிறான்; திருமண உறுதிமொழியை மீறுபவன் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் பாவம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனால் ஆண்கள் இந்த சாஸ்திரங்களை மதிப்பதில்லை; பெண்கள் மதிக்கிறார்கள். ஆகவே பெண்களே மேல்…” என்கிறார் வராஹர்.

வராஹமிஹிரர் இவற்றையெல்லாம் சம்ஸ்க்ருத மொழியில் எழுதி வைத்ததால் பலருக்கும் தெரியவில்லை. இது உண்மைதான் என்பதை பெண்களின் விரதப்பட்டியலைப் பார்த்தால் புரியும்.

கணவனின் நீண்ட ஆயுளுக்காக தமிழ்நாட்டில் வரலட்சுமி; குஜராத்தில் ஜெய்பார்வதி; மஹாராஷ்டிரத்தில் மங்களகெளரி; பஞ்சாபில் கர்வாசொத்; , பண்டேல்கண்டு பகுதியில் சுககனே; காஷ்மீரில் சந்தன்சஷ்டி போன்ற விரதங்கள் கடைபிடிக்கப்படுகிறது.

மனைவியின் நீண்ட ஆயுளுக்காக விசேஷவிரதம் எதையும் ஆண்கள் அனுஷ்டிப்பது இல்லை. ஆண்கள் உழைத்துச் சம்பாதித்து உணவு படைத்தனர் என்பது உண்மையே!

காளிதாசன் என்ற உலகப் புகழ்பெற்ற கவிஞன் பெண்களை உயர்த்தி எழுதியது போல் வேறுஎவரும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியது இல்லை.

பெண்களை நண்பன், தத்துவஞானி, வழிகாட்டி என்று பாராட்டுகிறான். பாரதியார் பாடல்களில் கண்ணபெருமானை தாய், தோழன், காதலி, சேவகன் என்றெல்லாம் வர்ணிப்பதைப் போலவே, சம்ஸ்க்ருதக் காவியங்கள் பெண்களை பலகோணங்களில் வர்ணிக்கின்றன. காளிதாசனின் ரகுவம்ச காவியம்; சாகுந்தலம் நாடகம் போன்றவற்றில் வரும் வர்ணனைகளை அனைவரும் படிக்கவேண்டும். க்ருஹினி, சசிவ, சஹி, மிதா, ப்ரிய, சிஷ்யா, லலிதே, கலா, விதவ் என்று பலசொற்களை பெண்களுக்கு சூட்டுகிறான் காளிதாசன்.

முன்பின் தெரியாத பெண்களையும்கூட தாயாகவும், சகோதரியாகவும் காணும் மனோபாவத்தை இந்தியா முழுதும் காணலாம். தமிழ்நாட்டிலும் பெண்கள் பெரிய சாதனைகளைச் செய்ததை இரண்டு சம்பவங்கள் காட்டுகின்றன. பாண்டியமன்னன் நெடுமாறன் வழிதவறிப்போய் கோவில் குளங்களை பாழாகப் போகவைத்தான்.

அவனை மீண்டும் சைவநெறிக்குத் திரும்பி வரச்செய்யும் அரிய பணியை அவனது மனைவி மங்கையர்க்கரசியார் செய்தார். அப்பர் சுவாமிகள் மதம்மாறி தடுமாறியபோது அவரது சகோதரி திலகவதியார் அவரைக் காப்பாற்றினார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு விசாகதத்தன் என்னும் கவிஞன், ‘முத்ராராஷஸம்’ என்ற சம்ஸ்க்ருத நாடகத்தை எழுதினான். அந்த நாடகத்தில் சூத்ரதாரன் தன் மனைவியை அறிமுகப்படுத்தும் அழகே தனி. அக்காலத்தில் பெண்கள் எவ்வளவு உயர்வான நிலையில் வைக்கப்பட்டனர் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு!!

‘குணவதி உபாய நிலையே’ என்ற பாட்டில் “குணவதி நீதான் என் வாழ்க்கைக்கு வழிகாட்டி; குடும்பத்தை நிர்வகிக்கும் கலையை அறிந்த தலைவி; இல்லத்துறை தெய்வம்; ஆன்மீக உண்மைகளை அறிய உதவும் உத்தமி; அறிவும் அனுபவமும் ஒருங்கே வாய்ந்த பெண்மணி…” என்று விசாகதத்தன் புகழ்பாடுகிறான்.

காளிதாசன், விசாகதத்தன் ஆகிய இருவரும் பாடியதோடு, மனுவையும் சேர்த்தால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எவ்வளவு உயர்ந்த நிலையில் பெண்கள் இருந்தனர் என்பதை அறியலாம்.

‘பெண்கள் மகிழ்ச்சியோடு இருக்கும் இடத்தில்; மதிக்கப்படும் இடத்தில்தான் தெய்வம் இருக்கும்’ என்று சொன்ன மனுதர்மநூலில், ‘பெண்கள் அழும்வீடு வேரோடு அழியும்’ என்று எச்சரிக்கையும் விடுகிறான். அதுமட்டுமல்லாமல் ‘பெண்களுக்கு சகோதரர்கள் துணி மணிகளையும், நகைநட்டுக்களையும் வாங்கிக்கொடுத்து மகிழ்ச்சிக் கடலில் மிதக்க வைக்கவேண்டும்’ என்கிறான்.

‘ஆயிரமாண்டு அன்பிலா அன்னியர் ஆட்சிதான்’ (பாரதிவரிகள்) பெண்களின் நிலையைத் தாழ்த்திவிட்டது. யாரேனும் ஒருவர் இந்தியப் பெண்கள்பற்றி எழுதுவதானால், அதேகாலத்தில் பெண்களை மற்ற கலாச்சாரங்கள் எப்படி நடத்தின என்பதைப் பார்க்கவேண்டும்.

“அழகும் காமமும் உடைய பொம்மைகள் என்றும் அடிமைகள்” என்று அன்னியர்கள் சொன்னார்கள். குறிப்பாக முஸ்லீம் படையெடுப்புகளுக்கு முன்னர், இந்துப்பெண்கள் பரிபூர்ண சுதந்திரத்துடன் உலாவந்தனர். மாற்றானின் கை பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு பல பாதுகாப்புகள் சேர்க்கப்பட்டன. இதை அவர்கள்மீதான அடக்குமுறை என்று கருதிவிடக்கூடாது.

பெண்கள் முகத்திரை போடும் வழக்கத்தை ‘இது தில்லித் துளுக்கர் செய்த வழக்கமடி…’ என்று பாரதி சாடுகிறான்.

மேலும் புராதன இந்தியாவில் பெண்களை மணந்துகொள்ள ஆண்கள் வரதஷினை கொடுத்தார்கள் அல்லது காளைகளை அடக்கியோ; ஸ்வயம்வரத்தில் தனது வீரதீர பிரதாபங்களைச் சொல்லியோ மணமகளுக்காக ஏங்கி நின்றார்கள். ரகுவம்ச காவியத்தில் ஒவ்வொரு மன்னர் பற்றியும் இந்துமதிக்குத் தோழி சொல்லும் அறிமுகவரிகள் இதைத் தெளிவாகக் காட்டும்.

பெண் என்றால் பேயும் இரங்கும் என்பது தமிழ்ப் பழமொழி. பெண்களைக் கொலைசெய்தல் மிகப்பெரிய பாவம் என்று இந்துமத நூல்கள் கூறுகின்றன. தாடகை ஒருபெண் என்று கூறி கொல்ல மறுக்கிறான் ராமன். ஆனால் அவளிடம் பெண்மையோ தாய்க்கே உரித்தான கருணையோ இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி, ராட்சசியை வீழ்த்தச் சொல்கிறார் விஸ்வாமித்திர முனிவர்.

திரவுபதியை அவமானப்படுத்திய கெளரவர்களை கொடும்பாவி (ஆத்தாயி) என்று திட்டுகிறான் அர்ஜுனன். இப்பேர்ப்பட்ட ஆத்தாயிகளைக் கொல்வது தவறு இல்லை என்று மனு கூறுகிறார்.

நன்னன் என்ற சங்ககால மன்னன் ஒரு அப்பாவிப் பெண்ணைக் கொன்றதற்காக சங்கப் புலவர்கள் அவனைச் சாடினார். அவன் பரம்பரையில் வந்தவரைக்கூட மறுத்துவிட்டனர்.

ஒரு நீரோடையில் மிதந்துவந்த மாம்பழத்தை ஒன்றும் அறியாத ஒரு அப்பாவி கிராமப்பெண் தின்றுவிட்டாள். மாந்தோட்டக்காரன் நன்னனிடம் தெரிவித்தான். உடனே அப்பெண்ணுக்கு மரணதண்டனை என்று அறிவித்தான் நன்னன். ஊர்ப்பெரியோர்கள் கூடி நன்னனிடம் வாதாடினர். அப்பெண்ணின் எடைக்கு எடை தங்கம் தருவதாகவும், அவளுக்கு கருணை காட்டவேண்டும் என்றும் கூறினர். கோரிக்கையை ஏற்க மறுத்த நன்னன் அப்பெண்ணைக் கொன்றதாகப் புலவர்கள் அவனை திட்டித் தீர்த்தனர். இராயிரம் ஆண்டுகள் ஆகியும் அந்தப் பாடல்களும், நன்னன் மீதான அவப்பெயரும் அழியவில்லை.

ராமாயணத்திலும்கூட கைகேயி மீதும் கூனியான மந்தரை மீதும் கோபம்கொண்ட பரதனும், லட்சுமணனும் அவர்களைக் கொல்ல எண்ணிய போதும் பெண் என்கிற ஒரேகாரணத்தால் கொல்லாமல் விடுகின்றனர்.

உலகில் வேறு எந்த சமுதாயமும், பாலியல் காமஉறவு பற்றிப்பேச அஞ்சிய நாட்களிலேயே பாலியலைக் கொச்சைப் படுத்தாமல் காமசூத்ரம் நூலை இயற்றினார் வாத்ஸ்யாயனர். இவரையும் இந்துக்கள் ஒரு ரிஷியாகவே போற்றுகின்றனர். இதுஒரு வயது வந்தோருக்கான புத்தகம் என்றாலும், இதில் ஆபாசமே இல்லை என்று கூறமுடியாது. ஆனாலும் அப்போதிருந்த சுதந்திரச் சிந்தனையை இது காட்டுகிறது.

திருக்குறளை மிகவும் புகழ்ந்து அதை மொழிபெயர்த்த வெள்ளைக்கார துரைகூட காமத்துப்பாலை ஒதுக்கித் தள்ளிவிட்டார். அதைத் தீண்டத்தகாத பாடலாகக் கருதினார்.

இத்தாலியில் புகழ்பெற்ற கலைஞர் பெர்னினி இரண்டு பளிங்குச் சிலைகளை செய்திருந்தார். ஒன்று சத்தியதேவதை; இன்னொன்று தர்மதேவதை. இரண்டு சிலைகளும் உடையின்றி முலைகளைக் காட்டிக் கொண்டிருக்கும். சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்ட சிலைகளை ஆபாசம் என்று கருதி 1863ல் வெண்கலத் தகடுகளை அடித்து மறைத்துவிட்டனர்.

திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டு 2002ம் ஆண்டு அக்டோபர் 22ல் மக்கள் பார்வைக்குத் திறந்துவைத்தனர். ஏனெனில் இத்தாலி ஒரு ரோமன் கத்தோலிக்க நாடு. இந்தியக் கோவில்களிலோ இதுபோன்ற ஆயிரக்கணக்கான சிலைகள் உள்ளன. பெண்கள் விஷயத்தில் மேலைநாடுகள் இந்தியாவைவிட ஆயிரம் ஆண்டுகள் பின்தங்கியிருக்கின்றன.

காமத்தை கொச்சைப்படுத்தாமல், தெய்வீக அந்தஸ்துக்கு உயர்த்தியது இந்துப்பண்பாடு. திருக்குறள் காமத்துப் பாலையும், வாத்ஸ்யாயனர் மகரிஷியின் காமசூத்திரத்தையும் இன்றுகூட மேலைநாட்டினரால் ஜீரணிக்க முடியாது…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *