(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒன்பதாவது வகுப்பில் அன்பையனுக்கு நான்காமது அமர்வு. கடைசியாகப் படித்த உயர்நிலைப்பள்ளியில் மாறுதல் சான்றிதழ் கொடுத்து வல்லந்தமாக அனுப்பிவிட்டனர். உள்ளூரில் ஆரம்பப்பள்ளி, ஊருக்கு மேற்கே இரண்டு மைல் நடந்து நடு நிலைப் பள்ளி, ஊருக்குக் கிழக்கே ஒன்றரை மைல் நடந்து உயர் நிலைப்பள்ளி. அடுத்த பள்ளி ஊரில் இருந்து நான்கு மைல் தொலைவில் இருந்தது. தகப்பனுக்கு தன்னைப்போல வாழ்நாள் பூராவும் மகன் தாராக்கோழி மேய்ப்பதில் பிரியமில்லை. வாசி வாசி என்று வாசித்தும் அன்பையனுக்கு கணக்கும் விஞ்ஞானமும் ஏறவே இல்லை. எத்தனை முறை திருத்தினாலும் மதிப்பெண்கள் இரட்டை இலக்கம் வரவில்லை.
தினமும் எட்டு மைல் போகவர, நடந்து போய்ப் படிக்க முடியாதென்றான். தன்னுடன் வாசித்தவர்கள் கல்லூரிக்குப் போகின்றனர் என்றான். தாராக்கோழி மேய்ப்பது அவனுக்கு சுவாரசியமாகவும் இருந்தது. விடுமுறை நாட்களில் மேய்த்தும் இருக்கிறான். வாத்துகள் மிகுந்த மனித நேயமுடையவை. ‘களக் புளக்’ என்ற அவற்றின் சத்தம் நான்மறைகளின் ஓதல் போல்தான் நாதன் செவிகளில் விழும்!
வாத்து நடப்பதும் அழகுதான். அன்னம் நடப்பது மட்டுமே அழகெனக் கவிஞர் பாடுவதில் அர்த்தமில்லை. அதன் குரலும் இனிமைதான். குயில் மாத்திரமே இனிமை என்பதல்ல. அது கழுத்தை நீட்டிப் பார்ப்பதும் ஒயில் தான். மயில் மாத்திரமே ஒயிலானதல்ல.
அன்பையன் வீட்டில் நூற்றறுபது வாத்துகள் இருந்தன. வீட்டு முற்றத்தில் சூரல் வேலிப் பட்டியில் அடைபட்டு, இரா முழுக்க சௌக்கிய நடையில் வாசிக்கப்படும் தோல் வாத்தியம் போல அவற்றின் மென்குரல்கள். பெரும்பாலும் எல்லா வாத்துக்களும் பட்டியில் கிடக்கும்போது முட்டையிடும். சில அந்த ஒழுக்கம் இல்லாமல் வயலில் மேயும்போது ‘பொதுக்’கென்று போட்டு விட்டுப் போய்விடும். மேயும் வாத்துக்களின் பின்னால் ஒதுக்கி நடக்கும்போது நாலைந்து கிடைக்கும். அப்படியும் கண் தப்பி, வாத்து மேய்ந்த வயல்களில் தப்பரவிப் பார்ப்பவருக்கு ஒன் றிரண்டு கிடைக்கும்.
ஆவணி மாதம் வயலறுத்த நீர் தேங்கித் தரிசடிப்புக்குக் கிடக்கும் போதும் மறுத்துப் போட்டிருக்கும் போதும், முச்சால டித்து மொழுக்கக் கிடக்கும் போதும் வாத்து மேய்க்கலாம். வாத்து மேய்வதால் சம்சாரிக்கு சேதம் ஒன்றுமில்லை என்றாலும் சிலர் முனகுவார்கள். வாத்து மண்புழுக்களைப் பொறுக்கித் தின்று விடுகிறது என. வாத்துக்கு ஆகாரம் புழு பூச்சிகள், சிறு தவளைகள், நத்தைகள், சிப்பிகள், மீன்கள், நெல்மணிகள். மண்புழு தின் றாலும் வாத்துகள் வயல் முழுக்க எச்சமும் போடும் என்பதால் சிலர் பொருட்படுத்துவதில்லை. சிலர் பகரம் வாத்து முட்டை கேட்பார்கள், எப்போதாவது நாலோ ஐந்தோ கறிக்கு என.
வயலில் மேய வழி இல்லை என்றால் வாய்க்கால் ஓரம், ஓடையோரம், ஆற்றங்கரையோரம், நீர்ப்பாங்கான சேறுள்ள பகுதியில் மேயவிடலாம். கூட்டமாக நட்டாற்றைக் கடந்தால் துவைக்க, குளிக்க, குடத்தில் கோரிப்போக வரும் பெண்கள் முனகுவார்கள். “தாராக்கோழியை விட்டுத் தண்ணியைக் கலக் கிப் போட்டான்” என்று. சிலசமயம் தண்ணீர் தெளியவும் கடந்து போகவும் காத்தும் நிற்பார்கள். கலங்கல் மட்டுமன்றி, வாத்து மேய்ந்த தண்ணீருக்கு ஒரு உலும்பு வாடையும் உண்டு.
குளத்தங்கரையோரம், ஏரிக்கரையோரம் மேய்க்கலாம். பெருங்குளத்தில் தாரா வெகுதூரம் நீந்துவது ஓரழகு. முக்குளி போடுவது பேரழகு. சிலசமயம் வாத்துக்காரன் குளத்தில் இறங்கி, நீந்திப்போய், வாத்துகளை மடக்கிக் கொண்டுவர வேண்டும். கோடைகாலத்தில் தண்ணீர் வற்றிய ஏரி, குளம், குட்டை, குண்டு எனில் வாத்துகளுக்கு மேய்ச்சல் கோள்தான்.
சரியாக மேய வாய்ப்பற்ற நாட்களில், பெரிய வாயகன்ற மண் சட்டிகளில் அண்டை அயலில் சேகரித்த சோறு வடித்த கஞ்சி, பழஞ்சித் தண்ணீரில் தவிடு கரைத்து வைக்க வேண்டும். அல்லது மலிவாகக் கிடைக்கும் அரிசிக் குருணை வாங்கிவந்து பெரும் பானையில் போட்டுக் காய்ச்சி ஆறியதும் வைக்கலாம்.
வாத்து மேய்ப்பதை ஏன் கேவலமாகத் தகப்பன் கருதினான் என்று அன்பையனுக்கு அர்த்தமாகவில்லை.
வாத்து முட்டை, கோழி முட்டையை விடவும் பெரியது. சாராயக்கடை வாசல்களில் வேகவைத்து விற்க மொத்தமாக வாங்கிக்கொண்டு போவார்கள். உப்பும் நல்லமிளகும் நுணுக்கி வைத்து, வாத்து முட்டையை வேகவைத்து, தோலுடைத்து, சுடச்சுட தொட்டுச் சாப்பிட்டால் தேவலோகத்து அமுதம் ஈயினும் வேண்டா. ஆறிப்போனால் தாராமுட்டை சற்று அதிகமான உலும்பு வாடை அடிக்கும். எனினும் மிலிட்டரி ஓட்டல்களில் தாரா முட்டை ரோஸ்ட்டுக்கு ஏகக்கிராக்கி.
சில நோய்களுக்குத் தாராமுட்டை நாட்டு வைத்தியம். குறிப்பாக மூலநோய், பின்னர் க்ராணி நோய். சொல்லிவைத்து, வீட்டுக்கு வந்து கேட்டு வாங்கிப் போவார்கள். வெள்ளை லகான் கோழி முட்டை ஒன்றரை ரூபாய் எனில், நாட்டுக்கோழி முட்டை இரண்டு ரூபாய் எனில், தாரா முட்டை இரண்டரை ரூபாய்.
துக்க வெள்ளி எனப்படும் பெரிய வெள்ளி முடிந்தபின்பு வரும் ஞாயிற்றுக்கிழமையை ஈஸ்டர் என்பார்கள். கிறிஸ்துவர் களின் பெருநாள், உயிர்த்தெழுந்த நாள் அன்று தாராக்கோழிக்கு நல்ல விலை கிடைக்கும். வளர்ப்பதற்கல்ல, கறிக்குத்தான்.
இன்று பெரும் பணக்காரர் பங்களாக்களில் வீட்டு முன்னால் இருக்கும் தோட்டத்திலும், புற்றரையிலும் அழகுக்காக நடமாட விட தினுசு தினுசான நிறங்களில் வாத்துக்களை வாங்கிப் போகிறார்கள்.
ஏழைக்கு நாட்டு நாய் அல்லது மோட்டுப் பூனை செல்லப் பிராணி எனில், பணக்காரனுக்கு ஆறங்குலம் முதல் ஆறடி வரை யிலான நாய்கள், உயர் சாதிப் பூனைகள், முயல், வாத்து, மயில், கருடன், மலைப்பாம்பு, சாரைப்பாம்பு, பல்வகைக் கிளிகள், காதல் சிட்டுகள், புறாக்கள், பச்சோந்தி, உடும்பு, கீரிப்பிள்ளை, அணில்… பகட்டோ அல்லவோ, பிராணிகளிடம் செல்லம் பாராட்டுவது மேம்பட்டதுதான்.
அன்பையன் புதிய பள்ளிக்கு கூனிக்குறுகியே போனான். அவன் வயது, வளர்த்தி, வகுப்பு யாவும் அவனை நோட்டப் புள்ளியாக ஆக்கின. நடந்து போகமாட்டேன் என அடம் பிடித்த தால், மூன்றாம் கை லொடக்கு சைக்கிள் ஒன்று வாங்கித் தந்திருந் தார் தகப்பன்.
கேரியரில் புத்தகக் கட்டும் ஹாண்டில் பாரில் பித்தளைத் தூக்குப்போணியுமாக முக்கால் ஆளான அன்பையன் பள்ளிக்குப் போனான். அங்கெல்லாம் பள்ளிப்பிள்ளைகள் தண்ணீர் போத்தல் சுமப்பதில்லை. தாகம் எடுத்தால் ஆறு, குளம், பஞ்சாயத்து பைப்பு அல்லது எவர் வீட்டு நடை முற்றம் நின்றும் வாங்கிக் குடிக்கலாம்.
பள்ளி தொடங்கிய மறு ஞாயிறன்று பள்ளி வளாகத்தைச் சுத்தம் செய்ய ஆறு முதல் பன்னிரண்டு வரை படிப்பவரை வரச் சொன்னார்கள். அரசு உயர்நிலைப்பள்ளி, மாவட்டக் கல்வி அதிகாரி வருவாராக இருக்கும்.
பள்ளியோ புதரடைந்து குப்பைக் காடாகக் கிடந்தது. சிறிய கட்டை மண்வெட்டி, கருக்கரிவாள், வெட்டுக்குத்தி, பிரம்புக் கூடை, தண்ணீர்க்குடம், வாளி சகிதம் மாணவர் பட்டாளம். பள்ளிக்கூடத்தில் தோளில் துண்டு போட்டு நிற்பது சுவாரசியமாக இருந்தது.
குப்பை பொறுக்குவது, சுற்றுச் சுவரோரம் காடடைந்து வளர்ந்திருந்த பீநாறி, எருக்கு, குருக்கு, ஊமத்தை, பெருந்தும்பை, காட்டுத் துளசி, மஞ்சணத்தி, நாயுருவி என வெட்டி மாற்றுவது. வகுப்பறைகளை அடித்துப் பெருக்கிக் கூட்டி தூத்து வாருவது. ஆண்,பெண் மூத்திரப் புரைகளில் தண்ணீர் கோரி அடித்து ஊற்றி சுண்ணாம்புப் பொடி தூவுவது, பள்ளி முகப்பில் பாறிப்போய் நின்ற குரோட்டன் செடிகளைக் கவாத்து செய்து, பாத்தி சீர் பார்த்து தண்ணீர் ஊற்றுவது, பள்ளி வளாகத்தில் நின்ற வேம்பு, பன்றி வாகை, மருதமர மூடுகளில் வட்டமாகப் பண்ணை பிடித்து நாலைந்து குடம் தண்ணிர் ஊற்றுவது, பட்டுப்போன பாறிப்போன கிளைகளை வெட்டுவது…
உற்சாகமாக இரண்டாள் வேலை செய்தான் அன்பையன். மாட்டு வண்டியில் ஏற்றி சுக்குக்காப்பி வந்தது இடைவேளை ஓய்வின்போது.இருபது தம்ளர்கள் இருக்கும். தம்ளர்களைக் கைப்பற்ற ஏக ரகளையாக இருந்தது. மாணவருக்கும் மாணவிய ருக்கும் தனித்தனி. ரகளைகள், இரைச்சல், கூச்சல்,இடிப்பு, நெரிப்பு, தள்ளல், தோள் வலித்தல்.
பனங்கருப்பட்டி, சுக்கு, கொத்துமல்லி, நல்ல மிளகு தட்டிப் போட்ட கொதிக்கும் சுக்குக் காப்பியின் வாசம் காற்றில் பரவிக் கிடந்தது.
மாணவரை வரிசைப்படுத்தவோ ஒழுங்கு படுத்தவோ யாருக்கும் முன்யோசனை இல்லையோ, அல்லது வெறும் சுக்குக்காப்பி தானே என்றெண்ணினார்களோ? ஆசிரியர்களுக்கு தனியறையில் சாயாவும் பருப்பு வடையும் தின்னக் கிடைத்தன.
அலுமினிய தம்ளரில் கோரிக்கோரித் தந்தனர். அண்டாவுக் குள் விழுந்து விடுவார்களோ என்று அச்சமாக இருந்தது. காலித் தம்ளர் வாங்கப் பெரும் போட்டி. எச்சில் அந்தப் பருவத்தில் ஒரு பொருட்டல்ல என்றாலும் அண்ணாந்து குடிக்கவேண்டும் என்பதூ விதி. குடித்தபின்பு, தெரிந்த, நட்பான, வகுப்புத் தோழனை, ஊர்க்காரரான மாணவனைத் தேடித்தேடி தம்ளர்கள் கைமாறின.
அன்பையன் பள்ளிக்குப் புதியவன். பள்ளித்தோழன், வகுப்புத் தோழன் என்று பழக அவகாசம் இருக்கவில்லை. ஊர்த் தோழன் எவனும் அவ்வளவு தூரம் வந்து அவனுடன் பயிலவும் இல்லை. சிலமுறை முயன்று பார்த்துத் தோற்றபின், கிடைக்கிற போது கிடைக்கட்டும் என ஒதுங்கி நின்றான். தம்ளரைப் பிடித்துப் பறிப்பதும் அவன் ஆகிருதிக்கு சாத்தியம்தான். ஆனால் அறைப் பாகவும் இருந்தது.
களேபரம் ஓய்ந்து, இரைச்சல் அடங்கி, கும்பல் தணிந்து, தள்ளலின்றி அன்பையனுக்கு ஒரு தம்ளர் கிடைத்தது. சுக்குக் காப்பி வாங்கத் தம்ளரை நீட்டியபோது, வடை தின்று சாய் குடித்து பெருமீசை ஒதுக்கிவந்த ஆசிரியர் ஒருவர் அவன் கையை எட்டிப் பிடித்தார்.
“என்ன அலவலாதித்தனம்? எத்தன மட்டம் லே குடிப்பே?” என்று அதட்டினார்.
அன்பையனுக்கு அவர் எந்த வகுப்புக்கு ஆசிரியர் என்பது எல்லாம் பிடி கிடைத்திருக்கவில்லை. ஆனால் எரிச்சலும் கோபமும் வந்தது.
“முதல்ல குடிச்சதை நீரு பாத்தேரா?”
பளீரெனக் கன்னத்தில் அறைந்தார்.
“எதுத்துப் பேசுகயாலே?”
அன்பையனுக்கு அறை வலித்தது. அவமானமாகவும் இருந்தது. மாணவிகள் திகைத்துத் திரும்பிப் பார்த்தனர். கோபம் கொதித்து உயர்ந்தது.
“என்னை அடிப்பியாலே தாய்ளி?” என்று அவர் நெஞ்சில் தலையால் மோதித் தள்ளினான்.
அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர் ஏற்கனவே
நெஞ்சுவலிக்காரர் என்று. “யம்மா” என்றலறிச் சாய்ந்தார்.
ஒரு ஆசிரியரை அநியாயமாகச் சாகடிக்க இந்தக் கதாசிரிய னுக்கு மனமில்லாததால், மேலும் சில வரிகள்.
பிறகென்ன? தலைமை ஆசிரியர் அறையில் பஞ்சாயத்து.
“என்ன ஆனாலும் படிக்கப்பட்ட பய வாத்தியாரை எதுத்து அடிக்கலாமா வே?”
“நல்ல காலம். செத்துக்கித்துப் போனாருண்ணா யாரு பதிலு சொல்லுகது? செயிலுக்கில்லா போகணும்?”
மறுபடியும் மாறுதல் சான்றிதழ். தகப்பனைக் கேரியரில் வைத்து மிதித்தவாறு அன்பையன் வீடு நோக்கிப் போனான்.
நெஞ்சுவலிக்கு தவிடு வறுத்து ஒத்தடம் கொடுக்கிறார் என்றும் கோழிக்குஞ்சு இடித்துப் பிழிந்து சூப் வைத்துக் குடிக்கிறார் என்றும் வெந்தயக்காடி வைத்து முன்னிரவில் ஆற்றி ஆற்றிக் குடிக்கிறார் என்றும் தெரிந்து சங்கடப்பட்டான் அன்பையன்.
நாலைந்து நாட்கள் சென்று அரை டஜன் தாரா முட்டை களோடு ஆசிரியரை வீட்டில் பார்க்கப் போனான். அவரது பேச்சில் நெஞ்சுவலியை விடவும் அன்பையன் படிப்பில் மண்வாரிப் போட்ட வலி அதிகமாகத் தொனித்தது.
என் செய?
விதி வலியது! பிடர் பிடித்து உந்தவும் வல்லது!!
இப்படித்தான் அது ஆடு மேய்க்கவும் மாடு மேய்க்கவும் வாத்து மேய்க்கவும் ஆட்களைத் தயார் செய்கிறது.
– ஓம்சக்தி தீபாவளிமலர், நவம்பர் – 2008.
நன்றி: https://nanjilnadan.com/2011/03/07/வாத்துக்காரன்/