கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 7, 2024
பார்வையிட்டோர்: 946 
 
 

அங்கம் 1 – காட்சி 1 | அங்கம் 1 – காட்சி 2

இடம்: மங்களபுரியில் ஒரு வீதி.

மாதவராயருடைய மாளிகை எதிரில் காணப்படுகின்றது.

பொழுது இரவு ஏழரை மணி சமயம்.

ஸோமேசன் : (மாதவராயருடைய மாளிகையின் வாசலில் நின்று கொண்டு தனக்குள்)
ஸோமேசா! நீ எவ்வளவு கேவல நிலைமைக்கு வந்துவிட்டாய் மாதவராயர் பெருத்த தனவந்தராய் இருந்த காலத்தில் நீ எப்படி இருந்தாய்! ஆகா! என்ன போஜனம் என்ன பரிபக்குவ பதார்த்தங்கள்! என்ன உபசரணை! என்ன தாம்பூலம்! இந்த மாளிகைக்கு வரும் விருந்தினர் எத்தனை பேர் எல்லாம் கனவோ நினைவோவென்று நினைக்கும்படி ஒழிந்து போய்விட்டனவே! நான் கோயிற் காளையைப் போல, மூக்கின் வழியாக நெய்யும், பருக்கையும் வரும் வரையில் உண்டு, மதோன்மத்தனாய் இந்தத் திண்ணையில் உள்ள திண்டில் ஒய்யாரமாய் சாய்ந்தும் படுத்தும் புரண்டிருந்த நாட்கள் இனித் திரும்பி வருமோ? அப்பொழுது எனக்கு என்ன குறைவாயிருந்தது? பசியும் மனக் குறையுமே குறைவாய் இருந்தன. இப்பொழுது என் கதி எப்படி இருக்கிறது? ஒரு நெல் எவ்விடத்தில் அகப்படுமோ என்று நாள் முழுதும் அலைந்து திரியும் பறவையைப் போல, எவன் போஜனத்திற்கு அழைப்பான். எப்படி ஒரு வேளை கழியும் என்பதே நினைவாகவும், பசியே நீங்காத் துணைவனாகவும் பெற்று வருந்தி அலைகிறேன். என்ன செய்கிறது எல்லாம் கால வித்தியாசம் என்னுடைய ஆப்தமித்திரராகிய மாதவராயருடைய செல்வம் எல்லாம் எவ்விதம் குறைந்த போதிலும், அவரிடத்தில் எனக்குள்ள அன்பும், ஆசையும் நிமிஷத்திற்கு நிமிஷம் அதிகரித்துக் கொண்டே வருகின்றன எந்நன்றி கொன்றவர்க்கும் உய்யும் வழி உண்டு. செய்ந் நன்றி கொன்ற அந்தப் பாவத்தைத் தொலைப்பதற்கு வழி ஏது? என் நண்பரிடத்தில் போய் அவருக்கு ஆறுதல் சொல்லுகிறேன். அவர் குடும்ப தெய்வங்களுக்குப் பூஜை செய்யும் சமயமாய் இருக்கலாம் (உள்ளே நுழைகின்றான்),

(மாதவராயரும், கோமளவும் பூஜைத்தட்டு முதலியவற்றை எடுத்துக் கொண்டு வருகின்றனர்).

தேவாரம்: தேசிகதோடி – ரூபகம்

மாத :
(1) வீடலால வாயிலாய் விழுமியார்க ணின்கழற்
பாடலால வாயிலாய் பரவநின்ற பண்டனே!
காடலால வாயிலாய் கபாலிநீள் கடிம்மதிட்
கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே!

(2) பட்டிசைந்த மேனியாள் பாவையாளோர் பாகமா
யொட்டிசைந்த தன்றியும் முச்சியா ளொருத்தியாக்
கொட்டிசைந்த வாடலாய்க் கூடலால வாயிலா
யெட்டிசைந்த மூர்த்தியா யிருந்தவாறி தென்னையோ!

மாத: (பெருமூச்சுவிட்டு) ஆகா! என்ன காலவித்தியாசம்! என்னுடைய உன்னத திசையில் நான் கொடுத்த பலி பிண்டத்தை எத்தனையோ காகங்களும், அன்னங்களும், மற்றப் பறவைகளும் என் மாளிகை வாசலில் வந்து நிறைந்து வாறிக் கொண்டு போய்க் குதுகலமாகத் தின்றன. இப்பொழுது நான் அர்ப்பணம் செய்வது புல்லில் இருக்கும் எறும்புகளுக்கும் போதாமல் அவ்வளவு அற்பமாய்ப் போய்விட்டதே! ஈசுவரா இதுவும் உன் அருளோ (கீழே உட்காருகிறார்)

ஸோமே : ஸ்வாமி! நமஸ்காரம்!

மாத: மங்களம் உண்டாகட்டும். மித்திர ரத்தினமே! வா; உட்கார்.

ஸோமே: ஆக்ஞை, (உட்காருகிறான். மாதவராயர் ஏதோ யோசனை செய்கிறார்) என்ன யோசனை செய்கிறீர்கள்?

மாத: மித்திரா!

விருத்தம் : சங்கராபரணம்

என்னென வுரைப்பே னன்பா! இன்மையின் கொடுமைதன்னை
முன்னுள புகழை நட்பை மொழிகளின் மதிப்பை நீக்கும்
உன்னினு முடலைத் தீய்க்கு மொண்மையு மிளமை போக்கும்
அன்னையும் பகைமை கொள்ளும்; அலகிலாச் சிறுமை நல்கும்.

துக்கத்தை அடுத்தாற்போலத் தொடர்ந்து வரும் சந்தோஷம், இரவிற்குப் பின் சூரியப் பிரகாசம் உண்டாகி அதை ஓட்டுவதைப் போல் இருக்கிறது. ஆனால், செல்வத்தில் இருந்து தரித்திர நிலைமையை அடைபவன், பார்வைக்கு மனிதனைப் போல் இருந்த போதிலும் அவன் நடைப் பிணமே ஒழிய வேறில்லை. இந்நிலைமையைக் காட்டிலும் கொடியது வேறு என்ன இருக்கிறது!

ஸோமே : அப்படியானால் தரித்திர நிலைமையில் இருப்பவர்கள் யாவரும் உயிரை விட்டு விட வேண்டும் என்றா நினைக்கிறீர்கள்?

மாத: என் விருப்பத்தின்படிக் காரியம் நடப்பதாய் இருந்தால், இவ்விதம் உயிர் வாழ்தலைக் காட்டிலும், உயிரைத் துறப்பதையே உத்தமமாகக் கொள்வேன். பிராணனை விடுவது சொற்பக் கஷ்டமேயாகும். தரித்திரனாய் இருப்பது ஆயுட்காலம் முழுதும் ஒழியா வேதனையைத் தரக் கூடியதல்லவோ

ஸோமே : ஸ்வாமீ!

விருத்தம்: தோடி

உயிரினு மரிய நண்பீர்! உருகிநீர் வானங் காணாப்
பயிரினு மதிகம் வாடிப் பரிபவ முறுத லென்னோ?
செயிரினை யடையா நன்மைச் செல்வமே நிதிக்கு மேலாம்;
துயரினை விடுப்பீர் கானத் துடித்தனே னினிய அன்பீர்!

நீங்கள் இதைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்? நீங்கள் ஏழ்மை நிலைமையை அடைந்ததினாலேயே உங்களுக்குத் தாழ்மையும் இகழ்ச்சியும் உண்டாய் விடுமோ? நண்பர்களுக்கும் இல்லை என்று வந்த யாசகர்களுக்கும் வாறி வாறிக் கொடுத்து, ஐசுவரியத்தை எல்லாம் இழந்ததினால் உங்களுடைய கீர்த்தி அதிகரித்ததே ஒழிய அதனால் உங்களுக்கு யாதொரு மானஹானியும் உண்டாக வில்லை. சந்திரன் தேய்ந்து, தேய்ந்து, அற்பத்திலும் அற்பமாய்த் தோன்றும் சமயமாகி மூன்றாம் பிறையில்தானே அது மிகவும் நேத்திரானந்தமாய்க் காணப்படுகிறது.

மாத: நண்பா என்னுடைய சொந்த உபயோகத்திற்கு ஐசுவரியம் இல்லை என்று நான் சிறிதும் விசனிக்கவில்லை.

விருத்தம்: மோகனம்

கருப்பைக்குள் முட்டைக்கும் கல்லினுள் தேரைக்கும்
விருப்புற் றமுதளிக்கு மெய்யன்-உருப்பெற்றால்
ஊடடி வளர்க்கானோ? ஓகெடுவா யன்னாய்! கேள்
வாட்ட முனக்கேன் மகிழ்.

என்று யாவராலும் ஸ்தோத்திரம் செய்யப் பெற்ற ஸர்வேசுவரனுடைய மகிமையை நீ அறிய மாட்டாயா? நாம் பத்து மாத காலம் அன்னையின் வயிற்றில் இருந்தோமே; அப்பொழுது நமக்குத் தேவையான ஆகாரத்தையும், பிறவற்றையும் சமயம் பார்த்துக் கொடுத்துக் காப்பாற்றியது யார்? பிறகு நாம் குழவியாய் இருந்தோம்; குழந்தைக்குப் பல் இல்லையே. அதன் வாய் புஷ்பத்திலும் மிருதுவானது அல்லவா. அதற்குத் தகுந்த உணவைச் சேகரம் செய்து, சுலபமாக ஊட்டுவிக்க வேண்டும் என்று கவலை கொண்டு, அன்னையின் தேகத்தில் மிருதுவான ஓரிடத்தில் தேக ஆரோக்கியமான பாலை உண்டாக்கி வைப்பவன் யார்? நம்முடைய வேண்டுகோள் இல்லாமலே நம்மைப் பற்றி இவ்வளவு கவலைப்பட்டு, நம்மைக் காப்பாற்றிய ஸர்வேசுவரன் நாம் பெரியவர்களாய் விட்டவுடன் நம்மை மறந்து விடுவான் என்று நினைக்கிறாயா? ஆகையால் நான் என் சொந்த விஷயத்தைப் பற்றிச் சிறிதும் கவலைப்படவில்லை. முன் போலவே அநேகருக்கு உதவி செய்து பல ஆன்மாக்களுக்கும் ஆனந்தத்தை உண்டாக்கக் கூடிய நிலைமையில் நான் இல்லாததே என்னுடைய விஸன காரணம். இதற்கு முன் கும்பல் கும்பலாக வந்து கொண்டிருந்த விருந்தினர், இப்போது இந்த மாளிகையைத் தேடி வராமல் இருப்பதே எனக்குப் பெரிதும் வேதனையை உண்டாக்குகிறது. தேன் வற்றி உலர்ந்து போன மலரை நன்றி கெட்ட வண்டுகள் எப்படித் தேடிப் போவதில்லையோ அப்படியே முடிந்தது என்னுடைய நண்பரின் அன்பும்.

ஸோமே : இப்பொழுது தானென்ன? அவர்கள் இங்கு வர மாட்டோம் என்கிறார்களா? நீங்கள் போஜனம் அளிப்பதாய் இருந்தால் முதல் பந்திக்குத் தயாராக வந்து விடுவார்கள். அதைப் பற்றி நீங்கள் சந்தேகித்தலே தேவையில்லை. மாடு மேய்ப்பவன் புதிது புதிதான புல், பூண்டுகளின் பேரில் மாடுகளை மேய விட்டுக் கொண்டே போவதைப் போல, இவர்களும் பசுமையாய் இருக்கும் இடத்திலேயே தங்கள் மனத்தைச் செலுத்திச் செல்கிறார்கள். இலாபம் இல்லாத காரியத்தை யார் தாம் செய்வார்கள்? இதில் என்ன குற்றம்?

மாத: ஆம்! உண்மை தான்; இலாபத்திலும், சுய நலத்திலுமே கண்ணும் கருத்துமாய் இருப்பவருக்கு உற்றார், பெற்றார், அன்பினர், பகைவர் என்னும் பேதமெப்படி உண்டாகும்! கல்லினும் அல்ல எஃகினுங் கடிய அவர் மனது எவ்விதமான பற்றினாலும் இளகுமோ? ஒரு நாளும் இல்லை.

ஸோமே : அவர்கள் விஷயத்தில் நம்முடைய பொருட்களைச் செலவழித்தது போதாதென்று இவ்விதம் நம்முடைய பொழுதையும் அவர்களைப் பற்றி நினைப்பதில் வீணாக்குவானேன். கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி பதக்காகுமோ? தினந் தினம் இதைப் பற்றி ஓயாமல் வருந்தி மனத்தை ஏன் வதைத்துக் கொள்ளுகிறீர்கள்?

மாத : ஆஹா என்ன செய்வேன்?
(சிவலோக நாதனைக்கண்டு’ என்ற பட்டின் வர்ணமெட்டு)

செஞ்சுருட்டி – ரூபகம்

ப. இதுவோ நின் சோதனை?
இன்னம் ஏன் இக்கொடுமை? ஈசா!
அ. விதிவயம் இதுவாமோ? – பவ
விதைகள் அளித்த பயனாகுமோ? (இது)
ச. பணமே தெய்வம் பாழுமுலகில்; பாதகங்களைச் செய்யும்;
பிணமே தனமில்லாமல், ஏனோ பிறந்தே னில்லாதவன். (இது)

இல்லான் முகமில்லான் முதல் எவரும் விரும்பிப்பாரார்;
சொல்லார் மொழி; விலகி நடப்பார்,
பொல்லாத விஷமெனவே வெறுப்பர். (இது)

விசனம் நெருப்பைப் போல என் மனத்தை வேக வைத்து என்னை வதைக்கிறதே ஒழிய, என் தேகத்தை எரித்துச் சாம்பலாக்காமல் இருக்கிறதே! சே! தரித்திரக் கொடுமையினும் கொடிது வேறொன்றுமே இல்லை. நம்மிடத்தில் பரம ப்ரீதி கொண்டவர்களைப் போல் நடித்தவர்கள் எல்லோரும் இப்பொழுது நம்மை அவமதித்து ஏளனம் செய்வதைக் காண, மனிதனுக்கு உண்மையில் ஒரு யோக்கியதையும் இல்லை என்பதும், பெருமையும் சிறுமையும் செல்வத்தினாலேயே ஏற்படுகிறது என்பதும் நன்றாய் விளங்குகிறது. மனிதர்களுடைய குணம் எப்படி இருக்கிறது? ஒருவன் தனவந்தனாய் இருந்தால் அவனைப் பார்த்துப் பிறர் பொறாமை அடைந்து வயிற்றெரிச்சல் கொள்வது; அவன் ஏழையாய் விட்டால் அவனைப் பார்த்து ஏளனம் செய்வது. அதிருக்கட்டும், தயவு செய்து இந்தப் பலி பிண்டத்தை எடுத்துக் கொண்டு போய் முச்சந்தியில் வைத்து விட்டு வா.

ஸோமே : ஸ்வாமி! நான் போக மாட்டேன்.

மாத: (புன்சிரிப்புடன்) ஒரு நாளும் இப்படிச் சொல்ல மாட்டாயே! இன்றைய தினம் ஏன் இப்படிச் சொல்லுகிறாய்?

ஸோமே :
இல்லையோ புவியில் தெய்வ மிதுவரை நீவிர் பாழுங்
கல்லையோ தொழுதீர்? செய்த காரியம் விழலுக் கீத்த
தில்லையோ? கடவுள் செய்தி யிங்ஙணமாக, மாந்தர்
புல்லியோ ராதல் சாலப் புதுமையோ! விடுப்பீர் யாவும்

இதனால் என்ன பலன். நீங்கள் எவ்வளவோ காலமாகத் தெய்வங்களை ஆராதனை செய்து கொண்டிருக்கிறீர்களே, அவைகள் உங்களுக்கு என்ன நன்மை செய்தன? மனிதருக்கு நன்றி இல்லையென்று சொன்னோமே. தெய்வங்களுக்கே நன்றி இல்லாத பொழுது, மனிதர் விஷயம் ஒரு பொருட்டா? தெய்வங்களை ஆராதிப்பது விழலுக்கு இறைத்த நீரே ஒழிய வேறு இல்லை.

மாத : அப்பா ஸோமேசா தெய்வங்களைத் தூஷிக்காதே! நமக்குத் துன்பம் உண்டாவதற்கு நாமே காரணமின்றி அது தெய்வத்தின் குற்றமன்று. நாம் நன்மை செய்தால் நன்மையைப் பெறுகிறோம். தீமை செய்தால் தீமையையே கைம்மாறாய்ப் பெறுகிறோம். தெய்வத்தை ஆராதிப்பது வீணாகுமென்று நினையாதே. மாரடித்த கூலி மடிமேலே என்பார்களே அவ்விதம் இதில் நாம் உடனே பலனை விரும்பலாமோ? அரசன் அன்று தரும்! தெய்வம் நின்று தரும். நமக்கு எது நன்மையோ அது கடவுளுக்கு நன்றாய்த் தெரியும். அவர் அதை அவசியம் செய்வார். நேரமாகிறது. இருள் அதிகமாகச் சூழ்கிறது. சீக்கிரம் போய் விட்டு வந்து விடு.

ஸோமே : இந்த இருளில் வெளியில் போக எனக்கு மிகவும் அச்சமாக இருக்கிறது. ஊரில் துஷ்டர்களும், துன்மார்க்கர்களும், திருடர்களும் அதிகரித்து விட்டனர். இப்பொழுது அவர்கள் அலைந்து திரியும் சமயம். நான் இந்த இருளில் வெளியில் போவேனாகில் தேரைக்காகக் காத்துக் கொண்டிருந்த பாம்பின் வாயில் வந்து விழுந்த சுண்டெலியைப் போல நான் துன்பப்பட வேண்டி வரும்.

மாத : சரி. அப்படியானால் கொஞ்ச நேரம் உட்கார் ஜெபம் செய்து விட்டு நானும் வருகிறேன். இரண்டு பேருமாய்ப் போகலாம்.

ஸோமே : அப்படியே!
(இருவரும் ஒரு பக்கமாய் போகிறார்கள்.)
(அந்தத் தெருவில் வஸந்தஸேனை முன்னால் ஓடி வர, அவளைத் துரத்தியவண்ணம் வீரஸேனனும், அவன் தோழனும் சேவகனும் வருகின்றனர்.)

வீர: அடி வஸந்தஸேனை! ஓடாதே! நில் நில்.

தோழ: வஸந்தஸேனை ஏன் இந்தப் பாடுபட்டு ஓடுகிறாய்! இப்படி ஓட உனக்கு நாணம் இல்லையா? பரத நாட்டியத்தில் அழகாய் உபயோகப்படுத்த வேண்டிய உன்னுடைய பாதங்களை ஏன் இப்படி வதைத்துக் கொள்கிறாய்? வேடனால் துரத்தப்படும் மான் நாற்புறங்களையும் பார்த்துப் பயந்து மருண்டு ஓடுவதைப் போலச் செல்கின்றாயே! நில் நில்! பயப்படாதே.

வீர : ஆஹா ஒவ்வொரு அடியிலும் தடுமாறி விழுகிறாயே! ஐயோ பாவம்! ஏன் உனக்கு இவ்வளவு சிரமம்? நான் பேயா? பூதமா? என்னைக் கண்டு ஏன் இவ்விதம் அஞ்சியோட வேண்டும். நான் உன்னைத் தின்று விடுவேனா? உன் பேரில் நான் கொண்ட மோகத்தினால் அல்லவோ இவ்விதம் வருகிறேன். உன் நினைவினால் என் மனம் தணலாய் எரிய, அனலில் இடப் பட்ட புலாலைப் போல என்தேகம் முழுதும் கருகுகிறதே! அடி வஸந்தஸேனா ஓடினது போதும். நில்! நில்!

சேவன் : அடியாத்தே! என்னமா ஓடியாறாங்கறேன் பய மவ! ஏகுட்டி! எம்பிட்டு துரந்தான் ஓடினே! ஒன்னை உட்டுடுவாங்கன்னு நெனைக்காதே! ஏன் சொம்மா ஓட்றே நில்லு! நில்லு! வீணாக் கெட்டுப் போவாதே!

வீர: அடி சுந்தரி இப்படி ஓடினால் புஷ்பத்திலும் மெல்லிய உன்னுடைய பாதங்கள் எப்படி வருந்தா! உன்னையே நினைந்து உருகும் காதலை வெறுத்து விலக்கி ஏன் இப்படி ஓடுகிறாய்? பகலிலோ எனக்கு நித்திரையே இல்லாமற் செய்து விட்டாய். இரவிலோ என் கண்ணில் படாமல் தப்பித்துக் கொள்கிறாய். என்றைக்கும் உன் தந்திரம் பலிக்கும் என்று நினைக்காதே! என்னிடத்தில் நீ ஒருகாலும் தப்ப மாட்டாய். இராவணன் கையில் திரெளபதி அகப்பட்டுக் கொண்டது போல நீ எப்படியும் என்னிடத்தில் அகப்பட்டுக் கொள்வாய். ஏன் வீண் முயற்சி செய்கிறாய்?

தோழ : கருடனைக் கண்ட நாகம் ஓடி ஒளிவதைப் போல இப்படி ஏன் பெருத்த அச்சத்தை அடைய வேண்டும்? கரும்புத் தின்னக் கூலி கேட்பாரும் உண்டோ? இராஜாவின் மைத்துனர் இச்சிக்கும் பாக்கியம் யாருக்காயினும் எளிதில் கிடைக்கக் கூடியதா? உனக்கு என்ன பைத்தியமா? நீ படித்தவள் அல்லவா? நன்றாய் யோசித்துப் பார் ஓடினது போதும்.

வீர : கீசகனைக் கண்டு சாவித்ரி ஒடுவதைப் போல நீ எவ்வளவுதான் ஓடிய போதிலும் சுபத்திரா தேவியின் பேரில் அநுமான் பாய்ந்து பிடித்துக் கொண்டதைப் போல நான் உன்னை இதோ பிடித்துக் கொள்கிறேன் பார்.

வஸந்தஸேனை : (தனக்குள்) ஐயோ! இப்படி எவ்வளவு துரந்தான் ஓடுவேன். இந்தச் சண்டாளர்கள் விடாமல் துரத்திக் கொண்டு வருகிறார்களே! என்னுடன் ஓடி வந்த பணிப் பெண்களைக் கூடக் காணேனே! அடி மல்லிகா! அடி வத்சலா! எங்கே போய் விட்டீர்கள்? நான் இதோ இருக்கின்றேன்; ஒடி வாருங்கள்; ஒடி வாருங்கள்.

வீர : அடே நண்பா அவள் யாரோ ஆட்களை உதவிக்கு அழைக்கிறாள்! நாம் என்னடா செய்கிறது?

தோழ : பயப்பட வேண்டாம். நானிருக்கிறேன்.

வஸ : அடி மல்லிகா! எங்கே மாயமாய் மறைந்து விட்டீர்கள்?

தோழ : நல்ல புத்திசாலி! தன் பணிப்பெண்களை யல்லவா கூப்பிடுகிறாள்.

வீர : அப்படியா! நல்லவேளை தான்; நான் நூறு மனிதரை அடிக்கக் கூடிய வீரன் அல்லவா? அதனால் தானே நான் பிறந்த பொழுதே எனக்கு வீரஸேனன் என்று பெயர் கொடுத்தார்கள். இந்த ஸ்திரீகள் என்னை என்ன செய்யக் கூடும்? வரட்டும் ஒரு கை பார்க்கிறேன்.

வஸ : (கைகளைப் பிசைந்து கொண்டு) ஐயோ! என் பணிப் பெண்களில் ஒருத்தியாயினும் வரக் காணேனே என் செய்வேன்! இன்னமும் ஓடித்தான் தப்ப வேண்டும். (ஓடுகிறாள்.)

வீர : நீ எங்கு ஓடினாலும் உன்னை நான் விடப் போகிறதில்லை.

வஸ : பெரிய மனிதர்களே! நான் சக்தி இல்லாத அபலை ஸ்திரீ என்னை ஏன் இப்படி உபத்திரவிக்கிறீர்கள்?

வீர : உன்னை நான் கொல்ல நினைக்கவில்லை. சுகமாய் என்னுடன் வாழலாம். ஏன் பயந்து ஓடுகிறாய்?

தோழ : ஓடுவது உன்னுடைய குற்றமல்லவா? உன்னை நாங்கள் ஓடச் சொன்னோமா?

வஸ : (தனக்குள்) என்ன நற்குணமப்பா! இவர்களுடைய உபசார வார்த்தைகளே இவ்வளவு பயங்கரமாய் இருக்கின்றனவே! இவர்களுக்குக் கோபம் வந்தால் அது எப்படி இருக்குமோ? (அவர்களை நோக்கி) ஐயா! உங்களை வேண்டிக் கொள்கிறேன். தயவு செய்து என்னை விட்டு விடுங்கள். உங்களுக்கு என்னுடைய ஆபரணங்கள் தேவையானால் இதோ யாவற்றையும் கொடுத்து விடுகிறேன். வாங்கிக் கொண்டு போங்கள்.

தோழ : சே! உன்னுடைய ஆபரணங்கள் எங்களுக்கு எதற்காக வேண்டும்? பூங்கொடியில் அழகாய் மலர்ந்திருக்கும் புஷ்பங்களை அழகின் மகிமையை அறியாத மூடர்கள் அல்லவோ பறிப்பார்கள்.

வஸ : அப்படியானால் உங்களுடைய தேவைதான் என்ன?

வீர : பேஷ் வழிக்கு வந்தாயா சரி. இதோ பார், நான் யாரைப் போல் இருக்கிறேன்? அந்த மன்மதனும் அழகில் எனக்கு இணையாக மாட்டான். அவ்வளவு மேன்மை பொருந்திய நான் உன்னுடைய பிரியத்தைத்தான் வேண்டுகிறேன்.

வஸ : அழகு! அழகு போதும், நில்லுங்கள். இது வீண் பேச்சு ஒரு நாளும் என்னிடத்தில் செல்லாது.

தோழ : அடி வஸந்தஸேனை நீ உன்னுடைய ஜாதிக் கிரமத்திற்கு விரோதமாக நடக்கிறாயே! வேசியின் வீடு பால்யர்களுக்குப் புகலிடம் அல்லவோ நீங்கள் பாட்டைக்கு அருகில் படரும் கொடிக்குச் சமானமானவர்கள் உங்களுடைய தேகமும், பிரியமும் விலைக்கு அகப்படக் கூடிய பொருள்கள் அல்லவோ? நீங்கள் சந்நியாசியையும், பைத்தியக்காரனையும், பிராம்மணனையும், பறையனையும், அழகுடையவனையும், குரூபியையும், சிறுவனையும், கிழவனையும் ஒரே விதமான ஆசையோடு விரும்பக் கூடியவர்கள் ஆயிற்றே! அப்படி இருக்க நீ அன்னிய புருஷர் முகம் பாராத குல ஸ்தீரியைப் போலவும், படி தாண்டாப் பத்தினியைப் போலவும் ஆண் வாடை அடிக்கக் கூடாதென்று ஒடுகிறாயே!

வஸ: ஐயா! நீர் சொல்வதெல்லாம் உண்மையாய் இருக்கலாம். ஆனால் ஒரு ஸ்திரீயினுடைய பிரியத்தை யோக்கியதையினால் சம்பாதித்துக் கொள்ள வேண்டுமே ஒழிய மிருகத்தின் முரட்டுத் தன்மையை உபயோகித்துப் பெற முடியுமா?

வீர : அடே உண்மை இன்னதென்று நீ அறிந்து கொள்ளவில்லை. இந்த வேசி நித்திய தரித்திரனாகிய மாதவராயன் பேரில் மோகம் கொண்டிருக்கிறாள் என்று நான் கேள்விப் பட்டேன். அவனுடைய வீடு இதோ சமீபத்தில் இருக்கிறது. அதனாலே தான் இவ்வளவு தைரியமாய்ப் பேசுகிறாள். தப்பித்துக் கொண்டு இந்த வீட்டிற்குள் நுழைந்து கொள்ளப் போகிறாள்; ஜாக்கிரதை.

தோழ : (தனக்குள்) மூடர்களில் இவனுக்குத்தான் முதல் தாம்பூலம் கொடுக்க வேண்டும். அவளுக்குத் தப்பிப் போகும் வழியை இவனே சொல்லிக் கொடுக்கிறான்.

வஸ : (தனக்குள்) ஆஹா! அப்படியா என் துரை மாதவராயருடைய மாளிகை இதுவா? அவரை நான் சந்திக்கும்படி இவர்கள் செய்ததும் நன்மை தான். இந்த மாளிகைக்குள் போகிறேன்.

வீர : அடே நண்பா எங்கே அவளைக் காணோமே? இந்த இருளில் எப்படி அவளை அடையாளங் கண்டுபிடிக்கப் போகிறோம்?

தோழ : அவளுடைய ஆபரணங்கள் கலீர் கலீரென்று ஒலிப்பதினாலும், அவளுடைய உடம்பில் அணிந்து கொண்டிருக்கும் பரிமள கந்தம், புஷ்பம் முதலியவற்றின் வாசனையினாலும் அறிந்து கொள்ளலாம்.

வீர : அவளுடைய புஷ்பமாலையின் வாசனையை மாத்திரம் இந்த இருளில் என் நாசி முகருகிறது! ஆபரணங்களின் ஒளி கண்ணிற்குப் புலப்படவில்லையே! எங்கு போய் விட்டாளோ தெரியவில்லையே. அவளை எப்படிக் கண்டுபிடிக்கப் போகிறோம்?

வஸ : ஆஹா அப்படியா என்னுடைய மாலையைக் கழற்றி எறிந்து விடுகிறேன். சப்திக்கும் ஆபரணங்களையும் வாங்கிக் கையில் வைத்துக் கொள்கிறேன். அதுதான் மாளிகையின் கதவு. (கதவைக் கையால் தடவிப் பார்க்கிறாள்.) கதவு சாத்தப் பட்டிருக்கிறதே! என்ன செய்யப் போகிறேன் வேறு ஏதாவது வாசலில் இருக்கிறதோ பார்க்கிறேன்.

மாத : (மாளிகைக்குள்) ஸோமேசா ஜெபம் செய்தாய் விட் டது. நானும் அவசியம் வரத்தான் வேண்டுமோ? நீ போகக் கூடாதா?

ஸோமே : நான் உண்மையை முன்னமேயே தெரிவித்தேனே!

மாத : ஆஹா ஈசுவரா என்னுடைய நிலைமை இப்படியா ஆய்விட்டது மற்ற நண்பர்தாம் என்னை அலட்சியமாய் செய்து விட்டதாக நின்னத்தேன். நீயும் அப்படியே செய்கிறாய். இது உன்னுடைய குற்றமல்ல இது தரித்திர நிலைமையின் சுபாவம். தரித்திரனுடைய வார்த்தைக்கு மதிப்பேது? பூலோகத்தில் அவனை யார் மதிக்கப் போகிறார்கள்? ”இல்லானை இல்லாளும் வேண்டாள்” என்றால் பிறரைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா இந்தப் பயனற்ற உடலைச் சுமந்து பூமிக்குப் பாரமாய் இருத்தலைவிட, உயிரை விட்டு விடுவதே உத்தமம்.

ஸோமே : ஸ்வாமி! நீங்கள் வருத்தப்பட வேண்டாம். நான் இதோ போகிறேன். என்னுடன்கூட உங்களுடைய பணிப் பெண் கோமளாவை ஆயினும் அனுப்புங்கள்.

மாத : கோமளா இவருடன் கூடப் போய்விட்டு வா.

கோம : உத்தரவுப்படி செய்கிறேன்.
(ஸோமேசன் கையில் ஒரு தடியை எடுத்துக் கொள்கிறான். மாளிகையின் கதவைத் திறந்து வைத்து விட்டு இருவரும் வெளியில் போகிறார்கள்.)

வஸ : (தனக்குள்) இதுவும் நல்ல அதிர்ஷ்டந்தான். இவர்கள் சமயத்தில் கதவைத் திறந்து வைத்தார்கள். மெதுவாய் நான் உள்ளே போகிறேன்.

( வஸந்தஸேனை மாளிகைக்குள்ளே போய் விடுகிறாள்; ஸோமேசனும், கோமளாவும் இருளில் நடந்து வெளியில் போகிறார்கள்.)

தோழ : போங்கள் போங்கள் நிற்க வேண்டாம்.

வீர : (தேடுகிறான்) எந்த இடத்திலும் காணோமே ஆஹா இதோ அகப்பட்டாள் (இருளில் தோழனைக் கட்டிக் கொள்கிறான்.)

தோழ : அடடா! எவ்வளவு சாமர்த்தியமாய் என்னைப் பிடித்துக் கொண்டீர்கள். விட்டு விடுங்கள். விட்டு விடுங்கள். என்னைப் பிடித்த மாதிரி வஸந்தஸேனையைக் கட்டிப் பிடித்திருந்தால், அவளுடைய உயிர் போயிருக்கும் போதும் முதலில் என்னை விடுங்கள்.

வீர : அப்படியானால் போ அப்பால். இது யார்? அகப்பட்டாள்! அகப்பட்டாள்! இதோ அகப்பட்டாள்! (சேவகனைப் பிடித்துக் கொள்கிறான்.)

சேவ : ஐயோ! எசமாங்களே! என்னைல்ல கட்டிக்கிட்டீங்க இது என்னாங்கிறேன் வெக்கக் கேடு! உடுங்க, உடுங்க, நசுக்காதிங்க, ஐயோ செத்தேன்!

வீர : அடடா! நீயா போ; (விட்டு விடுகிறான்) இப்படித் தானே போனாள் எங்கே போயிருப்பாள்? ஆஹா! இப்பொழுது தான் அந்தச் சிறுக்கியைப் பிடித்தேன். (முன்னாக வந்த கோமளாவின் தலை மயிரைப் பிடித்துக் கொள்கிறான்.) ஓடவா பார்க்கிறாய்! நான் சூரப்புலி என்பது உனக்குத் தெரியாதோ! உன் சாமர்த்தியம் என்னிடத்திலா செல்லும்! அடே நண்பா! இதோ அகப்பட்டாள் வேசி! கிருஷ்ணன் சீதையின் தலைமயிரைப் பிடித்துச் சபைக்கு இழுத்து வந்ததைப் போல, நான் இவளைப் பிடித்துக் கொண்டேன்.

தோழ : ஸ்திரீயே! பால்யர்களான நாங்கள் ஓடி வரும்போது எங்களை ஏமாற்ற உன்னால் முடியுமா?

கோம : ஆகா இதென்ன அநியாயம் என்னை ஏன் பிடித்துக் கொண்டீர்கள்? விடுங்கள் விடுங்கள் ஒய்! ஸோமேசரே? வாரும்! வாரும்!

தோழ : இதென்ன ஆச்சரியம்! வேறு குரலாய் இருக்கிறதே!

வீர : பூனை வெண்ணெயைத் திருடப் போகும் சமயத்தில் பல விதமாகத் தன் குரலை மாற்றிக் கொள்வதைப் போல ஸ்திரீகளுக்கும் தம் குரலை மாற்றிக் கொள்ளும் வல்லமை உண்டு அல்லவா!

(ஸோமேசன் கையில் தீபத்துடன் வருகிறான்.)

ஸோமே: (தனக்குள்) காற்றில் விளக்கு அணைந்து விடும் போல் இருக்கிறதே! இருளாய் இருக்கிறதென்று தீபத்தை எடுத்து வரப் போனேன். அதற்குள் கோமளா முன்னால் போய் விட்டாளே! (யாவரையும் பார்த்து விட்டு) யார் இவர்கள்? இங்கென்ன செய்கிறார்கள்? (உரக்க) கோமளா! கோமளா!

வீர : அடே யாரோ மனிதன் வந்து விட்டான்!

ஸோமே : ஆஹா! கோமளா! இதென்ன இது?

கோம : ஸோமேசரே! வாரும் வாரும்! இவர்கள் என்னை உபத்திரவிக்கிறார்கள்.

ஸோமே : யாரையா நீங்கள்? இதென்ன அநியாயம்? மாதவராயர் ஏழ்மை நிலைமைக்கு வந்து விட்டதினாலேயே அவரை இவ்விதம் அவமானப்படுத்தலாமா? இதென்ன அக்கிரமம்?

கோம : ஸோமேசரே! இதோ பாரும் என்னை இவர்கள் அவமானப்படுத்துகிறார்கள்.

ஸோமே : இது உனக்கு மட்டுமல்ல; எங்களையும் அவமானப்படுத்திய மாதிரி அல்லவா! இவர்களுக்கு எவ்வளவு துணிவு! நம்முடைய வீட்டு வாசலிலே இப்படி அக்கிரமமான காரியம் செய்யும் இவரைத் தக்கபடி தண்டிக்கா விட்டால் நமக்கென்ன யோக்கியதை இருக்கிறது. ஒரு நாய்கூடத் தன் கொட்டத்து அருகில் வருபவர் பேரில் குலைத்துக் கொண்டு போய் விழுகிறதே. பிராம்மணனாகிய நான் இதைப் பார்த்துக் கொண்டு பேசாமல் இருப்பேனா! – (தன் கையில் இருந்த தடியை ஓங்கிக் கொண்டு) சே! நான் இதை ஒரு க்ஷணமும் சகிக்க மாட்டேன்! என்னுடைய அதிர்ஷ்டத்தைப் போலக் கோணிக் குறுகி இருக்கும் இந்தத் தடியால் இத்துஷ்டர்களின் மண்டையைச் சுக்கல் சுக்கலாய் உடைத்து எறிகிறேன் பார்.

ஸோமே : (தோழனைப் பார்த்துத் தனக்குள்) குற்றவாளி இவனல்ல. துன்பம் செய்பவன் அதோ நிற்கிறான். அடே துஷ்டா அந்தப் பெண்ணை விடுகிறாயா அல்லது ஒரே அடியில் உன் மண்டையை உடைக்கட்டுமா? அடாடா? இவன் இராஜனுடைய மைத்துனன் அல்லவோ! ஐயா! பெரிய மனுஷ்யாளுடைய யோக்யதை இது தானோ? மாதவராயர் எவ்வளவு தான் ஏழையாய்ப் போன போதிலும், அவரைச் சேர்ந்தவர்களை இப்படி அவருடைய மாளிகை வாசலிலேயே வருத்தி அவமதிக்க எப்படித் துணிந்தீர்? துரதிர்ஷ்டமும், ஏழ்மைத் தனமும் உண்டாவது அவமானமல்ல! இவ்விதமான கெட்ட காரியம் செய்வதே கேவலம் அவமானத்தை உண்டாக்கக்கூடிய விஷயம். ஒருவன் தனவந்தனாய் இருந்தாலென்ன? அவனிடத்தில் கண்ணியம் இல்லாவிட்டால், அவன் ஒரு நாளும் பெரிய மனுஷ்யனாக மாட்டான். அவனை எவ்விதம் இகழ்ந்தாலும் குற்றமாகாது.

தோழ: ஓய் பிராமணரே! மன்னித்துக் கொள்ளும். அடையாளம் தெரியாமையால் செய்து விட்டோம். உங்களை அவமானப் படுத்த வேண்டுமென்று நாங்கள் மனதில் நினைக்கவில்லை. நாங்கள் ஒரு ஸ்திரீயைத் தேடி வந்தோம்.

ஸோமே : இவளையா?

தோழ : இல்லை இல்லை. எங்களை ஏமாற்ற நினைத்து, இங்கு ஓடி வந்த வேறொரு மங்கையை நாடி வந்தோம். இருட்டில் ஆள் மாறாட்டமாய் இவளைப் பிடித்தோம். க்ஷமிக்க
வேண்டும். இது மனதாரச் செய்த குற்றமல்ல. நீர் எங்களை எவ்விதம் வேண்டுமானாலும் தண்டிக்கலாம். (தன் கத்தியை நீட்டி அவரை மண்டியிட்டு வணங்குகிறான்.)

ஸோமே : நீ மிகுந்த புத்திமான். எழுந்திரு. நான் முதலில் உன்னுடைய நற்குணத்தை அறிந்து கொள்ளாமல் துடுக்காய்ப் பேசி விட்டேன். போதும் எழுந்திரு.

தோழ : ஸ்வாமி! நான் கேட்பதற்கு சம்மதிப்பதானால் எழுந்திருக்கிறேன்.

ஸோமே : என்ன வேண்டும்? தெரிவி.

தோழ : வேறொன்றுமில்லை! நடந்தவைகளை மாதவராயரிடம் தெரிவிக்காமல் இருத்தல் வேண்டும்.

ஸோமே சரி. அப்படியே ஆகட்டும். நான் அவரிடம் ஒன்றும் சொல்வதில்லை.

தோழ : பிராம்மணரே இந்த உபகாரத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். சகல விதமான உத்தம குணங்களையும் நீர் ஆயுதமாகத் தரித்திருக்க, உம்மை வெல்லக் கூடிய ஆயுதம் வேறு என்ன இருக்கிறது!

வீர : (கோமளாவை விட்டு விடுகிறான்) அடே நண்பா! என்ன இது! கைகளைக் கூப்பிக் கொண்டு கேவலம் தரித்திரனான இவன் காலில் விழுகிறாயே!

தோழ : எனக்கு மிகவும் பயமாய் இருக்கிறது.

வீர : எதற்காக?

தோழ : மாதவராயருடைய நற்குணங்களுக்காக.

வீர : உண்மைதான்! வருபவருக்கு ஒரு வயிறு சோறு போடும் வல்லமை இல்லாதிருப்பது உத்தம குணந்தான்!

தோழ : அப்படிச் சொல்வது தவறு. அவர் தன்னுடைய உதார குணத்தினாலேயே ஏழையானார். வழிப் போக்கர்களின் தாகத்தைத் தீர்ப்பதினாலேயே கோடை காலத்தில் ஏரி வற்றிப் போவதைப் போலானார். அவர் தனவந்தராய் இருந்த காலத்தில் அப்படி இருந்தமையாற்றான், அவரை இப்பொழுதும் மரியாதைப் படுத்தாதவரே இல்லை. இந்த நகரத்தில் அவரைப் போற்றாதவரும் உண்டோ!

வீர : அவனைப் பற்றி நான் கேட்கவில்லை. இந்தத் துரும்பு யார்! இவனென்ன பெருத்த போர் வீரனா? இவன் சீதையின் புத்திரன் துரியோதனனா! அல்லது இராவணனுடைய மகன் தரும புத்திரனோ?

தோழ : ஆகா! நல்ல புத்திமான்! போதும் நாம் போவோம் வாரும். மாதவராயருடைய யோக்கியதையை இந்த ஊரில் அறியாதவர் இல்லை. அவர் வயதில் மிகவும் பாலியராய் இருந்த போதிலும் அவருடைய முதிர்ச்சி யாருக்கு வரும்! நல்லோரைத் தன் உயிரைக் கொடுத்துக் காப்பாற்றுபவர். புத்திமான்களுக்குக் கண்ணாடி போன்றவர். தீமை செய்தவருக்கும் நன்மையே செய்பவர். நற்குணங்கள் நிறைந்த பொக்கிஷ சாலை. மரியாதைக் கடல். பக்திக்கு உறை கல். புருஷரில் உத்தமன். புத்திமான். தயாளு. தரும புத்திரன். அணுவளவும் சத்தியம் தவறாதவர். இந்த ஊரில் அவர் ஒருவரே ஸ்தோத்திரத்திற்கு அருகமானவர். அவ்வளவு சிறந்த யோக்கியரை நாம் அவமானம் செய்தது பெரும் பிழை. நாம் இனி இவ்விடத்தில் நிற்பது தவறு போகலாம்.

வீர : என்ன வஸந்தஸேனையை விட்டு விட்டா?

தோழ : அவள்தான் எங்கேயோ காணாமல் போய் விட்டாளே!

வீர : அவள் எப்படி காணாமல் போய் விடுவாள். பார்க்கலாம் ஒரு கை. அவளைக் கண்டுபிடிக்கிற வரையில் நான் இவ்விடத்தை விட்டு வரமாட்டேன்.

தோழ : என்ன பிரயோசனம் நாம் எந்த அருமையான காரியத்தையும் செய்து விடலாம். காட்டானையைப் பிடித்து அடக்கி விடலாம். சிங்கம், புலி முதலிய துஷ்ட விலங்குகளைப் பிடித்துக் கட்டிப் பழக்கிவிடலாம். ஆனால் ஸ்திரீகளின் பிரியத்தை மாத்திரம் அவர்களுடைய மனதிற்கு விரோதமாகத் திருப்ப முடியாது என்பது தெரியாதா? இதனாலே காரியம் ஒரு நாளும் பலிக்காது. பழம் தானாய் பழுக்க வேண்டுமே யொழியத் தடியால் அடித்தால் பழுக்குமா? போகலாம் வாரும்.

வீர : உனக்கு விருப்பமானால் நீ போகலாம். நான் இங்கே தான் இருப்பேன்.

தோழ : நல்லது நான் போகிறேன். (போகிறான்)

வீர: இவன் போனால் போகட்டும். கோழி கூப்பிடா விட்டால் பொழுது விடியாதோ! என்ன பிரமாதம்! (ஸோமேசனை பார்த்து) அடே! முஷ்டி வாங்கும் பிராம்மணா! என்ன சொன்னாய்? உன் பல்லை உடைக்கிறேன். ஒரே உதையில் உன்னைக் கீழே வீழ்த்துகிறேன் பார்.

ஸோமே : நாங்கள்தாம் ஏற்கெனவே கீழே வீழ்த்தப் பெற்றிருக்கிறோமே!

வீர : யாரால்?

ஸோமே : தலை விதியால்.

வீர : அப்படியானால் எழுத்திரு; பார்க்கலாம்.

ஸோமே : எழுந்திருக்கத்தான் பார்க்கிறோம்.

வீர : எப்பொழுது?

ஸோமே : நல்ல காலம் திரும்பி வரும் பொழுது.

வீர : அப்படியானால் அதுவரையில் அழு.

ஸோமே : அப்படித்தான் செய்கிறோம்.

வீர : எதற்காக அழுகிறீர்கள்?

ஸோமே : எங்களுடைய கால கதியை நினைத்து அழுகிறோம்.

வீர : அப்படியானால் சிரி முட்டாள்.

ஸோமே : அப்படியே ஆகட்டும்.

வீர: எப்பொழுது?

ஸோமே : மாதவராயர் திரும்பவும் தனவந்தராகும் பொழுது ஆகட்டும்.

வீர : அடே ஸபிண்டி போதும் வாயை மூடு எனக்கு கோபம் வரும் போல் இருக்கிறது. கடைசி முடிவாக நான் ஒரு வார்த்தை சொல்லுகிறேன். நீ போய் அதை மாதவராயனிடம் தெரிவி! கேவலம் விலைமகளாகிய வஸந்தஸேனையை நாங்கள் எவ்வளவு பலவந்தப்படுத்தியும் அவள் எங்களுக்கு இணங்கவில்லை. இவ்வளவு தூரம் துரத்திக் கொண்டு ஓடிவரும் சிரமத்தை அவள் எங்களுக்குக் கொடுத்து, நித்திய தரித்திரனாகிய மாதவராயன் வீட்டிற்குள் போய் நுழைந்து கொண்டிருக்கிறாள். அவன் மீதே அவள் காதல் கொண்டிருக்கிறாளாம். நாங்கள் அவள் மனதிற்குப் பிடிக்கவில்லையாம். யாதொரு ஆக்ஷேபனையும் இல்லாமல் உடனே அவளை அவனே நேரில் என்னிடத்தில் கொண்டு வந்து ஒப்புவித்தால் தப்பினான். இல்லாவிட்டால், எப்பொழுதும் தீராத என்னுடைய பகைக்கு அவன் அருகனாக வேண்டும். அவனிடம் போய் இதைத் தெரிவி. நான் அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருப்பேன். நீ என்னை ஏமாற்றப் பார்த்தால் பாக்கைக் கதவின் மூலையில் வைத்து நெரிப்பதைப் போல உன் தலையை என் பல்லால் நெரித்து விடுவேன். தெரியுமா?

ஸோமே : தெரியும். அப்படியே ஆகட்டும்.

வீர : சரி! போ; நான் இந்த மூலையில் இருக்கிறேன்.
(அவனும் சேவகனும் ஒரு மூலையில் மறைகிறார்கள்)

ஸோமே : கோமளா இராஜாவின் மைத்துனன் உன்னை இங்கு அவமானப்படுத்தியதை மாதவராயரிடம் சொல்ல வேண்டாம். அவர் ஏற்கெனவே தன் சொந்த விஷயங்களைப் பற்றி வருந்திக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த சங்கதியையும் கேள்விப்படுவாரானால் அவருடைய துக்கமும், துன்பமும் இரட்டிக்கும்.

கோம : ஸோமேசரே! எனக்குத் தெரியாதா! இதைப் பற்றி சொல்லவும் வேண்டுமா! இதை அவரிடம் தெரிவிப்பதில் இலாபம் என்ன? அவருக்கு இதனால் வியாகூலந்தான் உண்டாகும்.
(இருவரும் வீட்டிற்குள் போகிறார்கள்.)

மாத : (உள்ளே வந்த வஸந்தஸேயனையைப் பார்த்துத் தனக்குள்) கோமளா என்ன இதற்குள் வந்து விட்டாளே இவள் ஸோமேசனுடன் போகவில்லையோ (உரக்க) கோமளா குழந்தை சிசுபாலன் குளிர் காற்றில் நெடுநேரமாய் நித்திரை செய்து கொண்டிருக்கிறான். அதிகக் குளிர் உண்டாவதற்குள் இவனை எடுத்துக் கொண்டுபோய் உள்ளே படுக்கையில் விடு.

வஸ : (தனக்குள்) ஒகோ என்னை இவர் தன்னுடைய பணிப்பெண் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். நான் என்ன செய்வேன்! நான் இன்னாள் என்று எப்படித் தெரிவிப்பேன்! ஒருவருக்கும் தெரியாமல் நான் உள்ளே வந்ததைப் பற்றி இவர் என் மீதில் என்ன அபிப்பிராயம் கொள்வாரோ! என்ன இவருடைய பேரழகு கோமளாங்கன் என்றாலும் இவருக்கே தகும். இவருடைய தேகத்தின் அழகிற்கு ஒத்தவாறு இவருடைய குணமும் புகழத் தக்கதாய் இருக்கிறது! இவரைக் கணவனாய் அடைபவளே உண்மையில் பாக்கியசாலி.

மாத : என்ன? கோமளா நான் சொன்னது காதில் படவில்லையா? ஏன் பேசாமல் நிற்கிறாய்? சீக்கிரம் குழந்தையை எடுத்துக் கொண்டு போ.

வஸ : (தனக்குள்) ஐயோ! என்னை இன்னாளென்று அறிந்து கொள்ளாமல் இவர் சொல்லுகிறாரே. நான் பிராமணர் வீட்டின் உட்புறத்தில் போகக் கூடாதவளாய் இருக்கிறேன். இதென்ன தரும சங்கடமாய் இருக்கிறது! ஈசுவரா! நீதான் இந்த சமயத்தில் என் மானத்தைக் காப்பாற்ற வேண்டும்.

மாத : கோமளா என்ன மெளனமாக நிற்கிறாய்? ஆகா! இதுவும் கால வித்தியாசமோ? நீயும் என்னை ஏழை என்று அவமதிக்க ஆரம்பித்து விட்டாயோ? உன்னுடைய பிரியமும் வெறுப்பாய் மாறிவிட்டதோ? கொடிது கொடிது இல்லாமையே கொடிது. தரித்திரத்தைக் காட்டிலும் பெரிய துன்பம் உலகத்தில் வேறு ஒன்றுமில்லை.

(ஸோமேசனும் கோமளாவும் வருகிறார்கள்)

ஸோமே : ஸ்வாமி உத்தரவை நிறைவேற்றி விட்டு வந்தோம். கோமளாவை ஜாக்கிரதையாய் இதோ கொண்டு வந்து சேர்த்தேன்.

மாத : இதென்ன ஆச்சரியம் கொஞ்ச நேரத்துக்கு முன் இங்கிருந்தவள் யாவள்? அவளை இன்னாள் என்று அறிந்து கொள்ளாமல், குழந்தையை எடுத்துக் கொண்டு போகும்படிக் கட்டளை இட்டேனே! என்ன என்னுடைய புத்திக் குறைவு! ஒருவரும் நாடாத என் மாளிகையைத் தேடி வந்து என்னைக் கெளரவப்படுத்திய ஸ்திரியை நான் அவமரியாதையாய் நடத்தினேனே ஆகா!

வஸ : (தனக்குள்) இது அவமரியாதையா இந்தப் பாக்கியம் யாருக்குக் கிடைக்கும்! இந்தப் பணிவிடை என்னுடைய ஆயுட் காலம் முழுதும் கிடைக்காதா? என்று நான் இராப் பகலாய் என் குலதெய்வத்தை வேண்டித் தவம் செய்கிறேனே!

ஸோமே : அவள் வேறு யாரும் இல்லை. நம்முடைய நகரத்திய எல்லா மடந்தையரிலும் அழகில் சிறந்தவள் என்று புகழப்படும் வஸந்தஸேனை என்னும் ஸ்திரீ ரத்னம். அவள் வேறு யார் மீதிலும் இச்சை கொள்ளாமல் தங்கள் நற்குணத்தைப் பற்றிக் கேள்விப்பட்டுத் தங்களையே அடைய வேண்டும் என்று காதல் கொண்டிருக்கிறாளாம்.

மாத : உண்மையில் வஸந்தஸேனையா வந்தவள். என்ன ஆச்சரியம்! அவள் என்னை விரும்பவாவது அவளுடைய செல்வ மென்ன! சிறப்பென்ன! கேவலம் தரித்திரனாகிய என்னை அவள் எதற்காக நாடப் போகிறாள். தவிர நான் ஏற்கெனவே ஒரு ஸ்திரீயை மணந்து கொண்டிருப்பவன் ஆயிற்றே! நான் பிரம்மசாரி அல்லவே! நீ சொல்வதில் ஏதோ பிசகிருக்கிறது!

ஸோமே : நான் சொன்னது உண்மையே! அதில் யாதொரு பிசகுமில்லை. இராஜாவின் மைத்துனன் தங்களுக்கு என் மூலமாய் ஒரு சங்கதி சொல்லி அனுப்பி இருக்கிறார்.

மாத : எனக்கா? என்ன சங்கதி?

ஸோமே : கேவலம் விலை மகளாகிய வஸந்தஸேனையை நாங்கள் எவ்வளவு பலவந்தப்படுத்தியும் அவள் எங்களுக்கு இணங்கவில்லை. இவ்வளவு தூரம் துரத்திக் கொண்டு ஓடி வரும் சிரமத்தை அவள் எங்களுக்குக் கொடுத்து, நித்திய தரித்திரனாகிய மாதவராயன் வீட்டிற்குள் போய் நுழைந்து கொண்டிருக்கிறாள். அவன் மீதே அவள் காதல் கொண்டிருக்கிறாளாம். நாங்கள் அவள் மனதிற்குப் பிடிக்கவில்லையாம். யாதொரு ஆக்ஷேபனையும் இல்லாமல் உடனே அவளை அவனே நேரில் என்னிடத்தில் கொண்டு வந்து ஒப்புவித்தால் தப்பினான். இல்லாவிட்டால் எப்பொழுதும் தீராத என்னுடைய பகைக்குப் பாத்திரனாதல் வேண்டும். அவனிடம் போய் இதைத் தெரிவி. நான் அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருப்பேன். நீ என்னை ஏமாற்றப் பார்த்தால் பாக்கைக் கதவின் மூலையில் வைத்து நெரிப்பதைப் போல் உன் தலையை என் பல்லால் நெரித்து விடுவேன். தெரியுமா? என்று இராஜாவின் மைத்துனன் சொன்னான்.

மாத : ஆஹா! என்ன ஆச்சரியம்! அப்படியா சொல்லி அனுப்பினான்! வஸந்தஸேனையின் குணமல்லவோ குணம்! நற்குணமில்லை என்று அரண்மனையையே அவள் வெறுக்கிறாளே! இந்த உலகத்தில் பணத்தைக் காட்டிலும் குணத்தை விசேஷமாய்க் கொள்பவரும் இருக்கிறார்களா! இது பெரிதும் விந்தையாய் இருக்கிறது! இவளைக் கோவிலில் வைத்துத் தெய்வமாகக் கொண்டாடினாலும் தகும். இவள் பொருட்டாகத் தானே அவன் என்னை அவ்வளவு ஏளனமாய்ப் பேசினான். அதனால் எனக்கு யாதொரு குறைவுமில்லை! (அவள் இருந்த இடத்திற்குப் போய்) வஸந்தஸேனா! உன்னை இன்னாள் என்று அறிந்து கொள்ளாமல், என்னுடைய பணிப்பெண் என்று நினைத்து ஏவினதை மன்னித்துக் கொள்ள வேண்டும். அரண்மனையைப் போன்ற உன்னுடைய மாளிகையை விட்டு நீ இவ்வளவு தூரம் இந்தக் குடிசையை நாடி வந்தது அபூர்வமாக இருக்கிறதே!

வஸ : பிரபு! நானல்லவோ தங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். மேன்மைக்கு இருப்பிடமாகிய இவ்விடத்தில் ஒரு யோக்கியதையும் இல்லாதவளான நான் தங்கள் அனுமதியின்றி நுழைந்ததற்குத் தாங்கள் என்னை க்ஷமிக்க வேண்டும்.

ஸோமே : நீங்களிருவரும் ஒருவருக்கு ஒருவர் செய்து கொள்ளும் உபசாரம் நன்றாய் இருக்கிறது. நன்றாய் முற்றித் தலை வணங்கும் நெற்கதிரைப் போல இருவரும் குனிந்து நிற்கிறீர்கள். ஒட்டகத்தின் முழங்காலைப் போன்ற வளைக்க முடி யாத என் சிரத்தால் தாழ்ந்து நானும் வணங்குகிறேன். போதும் உபசாரம் நிமிர்ந்து நில்லுங்கள்.

மாத : ஆம்! உண்மைதான். அதிக உபசாரம் எதற்கு?

வஸ : (தனக்குள்) ஆகா!

விருத்தம்: ஆனந்த பைரவி

எண்பெறு பிறவி கோடி யியற்றிய தவங்கள் கூடிக்
கண்பெறு விருந்தே யென்ன அளித்தவோ குமர வேளைப்
பெண்பெறு துறக்க மீதோ? பெறலரு குணத்தின் குன்றோ?
புண்பெறு மனத்தி னாட்குப் புகலெனத் தோன்றி னாரோ!

என்ன குணம்! என்ன தோற்றம்! கை நிறைந்த பணத்தைக் காட்டிலும் கண் நிறைந்த கணவனே மேல் என்று சொல்வது உண்மை என்று இப்பொழுதே தெரிகிறது! இவரைவிட்டு எப்படிப் பிரிந்து என் வீட்டிற்குப் போவேன்! போனால் இத்தகைய சமயம் திரும்ப எப்பொழுது வாய்க்கும்! என்னுடைய மாட மாளிகை, ஆபரணங்கள் முதலிய சகலமும் போவதாய் இருந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன். இவருடன் சதா காலமும் இருக்கப் பெற்றால் அந்த ப்ரும்மானந்தம் ஒன்றே போதும். பிறவிக் குருடன் திடீரெனக் கண்ணை பெற்று உலகத்தில் உள்ள வினோதக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, திரும்பவும் பார்வையை இழக்க நேர்ந்ததைப் போலானதே என் கதி! இருக்கட்டும் ஒரு தந்திரம் செய்கிறேன். (உரக்க) ஸ்வாமி! நான் உங்களுடைய கருணா கடாட்சத்தைப் பெற்றது உண்மை யானால் என்னுடைய ஆபரணங்களை இப்பொழுது இவ்விடத்திலேயே வைத்து விட்டுப் போக அனுமதி தர வேண்டும். இவற்றை அபகரிக்கும் பொருட்டே இத்துஷ்டர்கள் என்னைத் தொடர்ந்து துரத்திக் கொண்டு வந்தார்கள்.

மாத : ஸ்திரீ ரத்னமே! அவ்விதமான நம்பிக்கையை வைப்பதற்கு இந்த வீடு அருகமானது அல்லவே! என்ன செய்கிறது!

வஸ : பிரபு நாம் நம்புவது மனிதரையே அன்றி வீட்டை அல்லவே! ஆகையால் நீங்கள் இவ்விதம் சொல்லக் கூடாது. தயவு செய்ய வேண்டும்.

மாத : ஸோமேசா! அப்படியானால் இந்த ஆபரண மூட்டையை வாங்கிக் கொள்.

வஸ : இந்த உபகாரம் செய்தீர்களே இதுவே போதும். உங்களுக்கு ஸ்வாமி ஒரு குறைவையும் வைக்க மாட்டார்.

ஸோமே : (வாங்கிக் கொண்டு) ஸ்திரீயே இந்த உபகாரத்தை நான் ஒரு நாளும் மறக்க மாட்டேன். இனி எங்களுக்கு என்ன குறைவு இருக்கிறது?

மாத : ஸோமேசா! உனக்கே கொடுத்து விட்டதாக நினைக்கிறாயோ! நீ மிகவும் சமர்த்தன்தான்! இன்றிரவு முழுதும் இவற்றைப் பாதுகாத்துத் திரும்பவும் சொந்தக்காரரிடத்தில் ஒப்புவித்தல் வேண்டும்.

ஸோமே : (இரகசியமாக) நம்மிடத்தில் இருப்பது நம்முடைய பொருள்தானே?

மாத : போதும் விளையாட்டு.

வஸ : (வணக்கமாக) எனக்கு இன்னொரு உதவி செய்தல் வேண்டும். உங்களுடைய நண்பராகிய இவரை என்னுடன் கூடத் துணையாக என் வீடுவரையில் தயவு செய்து அனுப்ப வேண்டும்.

மாத : அதுதானா பிரமாதம்! ஸோமேசா! கூடப் போய் விட்டு வா.

ஸோமே ; இதற்குத் தகுந்தவர்கள் நீங்களே! அன்னப் பேடையோடு துணை செல்வதற்குக் காக்கைக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? நான் ஏழைப் பிராமணன். எலும்புத் துண்டை நாய் கெளவுவதைப் போல என்னை இந்தக் காமாதூரர் பிடித்துப் பொடியாக்கி விடுவார்கள்.

மாத : சரி, நானே போகிறேன். வேலைக்காரனைக் கூப்பிட்டுப் பந்தம் தயார் செய்யச் சொல்லு.

ஸோமே : அடே குணசீலா!

குண : ஸ்வாமி!

ஸோமே : சீக்கிரம் பந்தம் கொளுத்து.

குண : எண்ணெய் இல்லாமல் பந்தம் எரியுமானால், கொளுத்தத் தடை இல்லை.

ஸோமே : (மாதவராயரிடத்தில் தனிமையில்) நம்முடைய வீட்டுப் பந்தம் வேசியின் குணத்தை உடையது. அது ஏழைகள் வீட்டில் பிரகாசிப்பது இல்லை. தனவந்தரைத்தான் அது மதிக்குமே யன்றி நம்மை மதிக்காது.

மாத : சரி! அப்படியானால் அதையும் நாம் மதிக்க வேண்டாம். மிகவும் பிரகாசத்தோடு ஆகாயத்தில் அதோ சந்திரன் இருக்க, நமக்கு என்ன கவலை? அவன் ஏழையையும்
தனவந்தனையும் சமமாக மதிப்பதனாலே அவனுக்கு மதி என்று பெயர் வந்திருக்கிறது. வாருங்கள் போவோம்.

(மூவரும் நடந்து வெளியில் போகிறார்கள்.)

– தொடரும்…

– 1920களில் வெளிவந்த நாவல்.

– வஸந்த கோகிலம், முதற் பதிப்பு: 2006, ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை.

நன்றி: https://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *