அங்கம் 2 – காட்சி 3 | அங்கம் 2 – காட்சி 4 | அங்கம் 3 – காட்சி 1
இடம் : உத்தியான வனத்திற்குச் சமீபத்தில் இருந்த அரசனுடைய சோலை.
மகிபாலன் காஷாயம் பெற்றுச் சந்நியாசியாக வருகிறான்.
காலம் : மேற்படி காலை.
மகி : (தனக்குள்)
பண் செஞ்சுருட்டி – ஆதி
- தலையே! நீ வணங்காய் தலை-மாலை தலைக்கணிந்து
தலையாலே பலிதேருந் தலைவனைத் தலையேநீ வணங்காய் (த) - கண்காள் காண்மின்களோ கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோள் வீசிநின் றாடும்பிரான்றன்னைக் (கண்) - செவிகாள் கேண்மின்களோ – சிவன் எம்மிறை செம்பவளம்
எரிடோல் மேனிப்பிரான் றிறமெப்போதும் (செ) - வாயே வாழ்த்து கண்டாய்-மத யானை யுரிபோர்த்துப்
பேய் வாழ் காட்டகத்தாடும் பிரான்றன்னை (வா) - கைகால் கூப்பித் தொழீர் கடிமாமலர் தூவிநின்று
பைவாய் பாம்பரை யாத்தபரமனைக் (கை) - நெஞ்சே நீ நினையாய் நிமிர் புன்சடை நின்மலனை
மஞ்சாடும்மாலை மங்கை மணாளனை (நெ). - தேடிக்கண்டு கொண்டேன் திருமாலொடு நான் முகனுந்
தேடித் தேடொனாத் தேவனை யென்னுள்ளே (தே)
நான் சந்நியாசியான பிறகு என் மனக் கவலை எவ்வளவு குறைந்து விட்டது! தெரியாமலா யாரும் இந்த நிலைமையைப் புகழுகிறார்கள். புதியதாய்க் காவியில் நனைந்த இந்த வஸ்திரம் மிக பளுவாக இருக்கிறது. இந்தச் சோலையில் ஒரு நீரோடை இருக்கிறது. அதில் இதை நனைத்துக் கசக்கிவிட்டால் பிறகு இலேசாக இருக்கும். இந்தச் சோலை மனத்திற்கு எவ்வளவு இரமணியமாக இருக்கிறது. ஆகையினாலே தான் இராஜாவின் மைத்துனன் வீரசேனன் இதிலேயே எப்பொழுதும் குடியாக இருக்கிறான். அவனுக்குச் சந்நியாசி என்றால் மிகவும் கோபம் உண்டாவது வழக்கம்; உடனே கத்தியால் அவனுடைய மூக்கை அறுத்து விடுவான். நான் நீரோடையில் வஸ்திரத்தை கசக்கிக் கொண்டு அவன் கண்ணில் படாமல் அப்பால் போய் விடுகிறேன். (சற்று துரம் போகிறான்)
(விரசேனன் உருவிய வாளுடன், தன் தோழன் சேவகன் முதலியோருடன் வருகிறான்)
வீர : (மகிபாலனை நோக்கி) அடேதுஷ்டா நில்லடா! எங்கே போகிறாய்? இதை விட்டு நகர்ந்தால் முள்ளங்கியின் இலையை ஒடிப்பதைப் போல, உன் தலையை முறித்து எறிவேன்.
தோழன் : வேண்டாம்; வேண்டாம். சந்நியாசியை வருத்துவது பெருத்த பாவம். இருக்க இடம் அற்றவர்களுக்கு நிழலைத் தர மரங்களையும், இங்கு வருபவர்களுக்கு இன்பந்தர வேண்டும் என்னும் எண்ணத்துடன் இந்தச் சோலையையும் ஏற்படுத்திய நீங்கள் இப்படிச் செய்வது அடாது. வேண்டாம், ஏழையை ஏன் ஹிம்சிக்க வேண்டும். பாவம்.
மகி : ஐயா! இந்த நகரத்திற்கே நீர் இரக்ஷகன். யாதொரு புகழும் இல்லாத இந்த ஏழைச் சந்நியாசியின் பேரில் கோபிக்க வேண்டாம்.
வீர : இந்த போக்கிரி என்னை வைவதைக் கேட்டாயா!
தோழ : பலே! உங்களுக்கு நல்ல காது. மதுரைக்கு வழி ஏதென்றால் குதிரைக்குச் சுழி நன்றாயில்லை என்பதைப் போல் இருக்கிறதே. இவன் தன்னை மன்னிக்கும்படி அல்லவோ உங்களை நயந்து வேண்டிக் கொள்ளுகிறான்.
வீர :அடே !முண்டனம்! உன் தலை எப்பொழுது மொட்டை ஆயிற்று? உன் புருஷன் இறந்து எத்தனை நாளாயிற்று? மொட்டை அடித்துக் கொண்டால்தான் சந்நியாசியோ? அப்பொழுதுதான் சுவர்க்கம் நேரில் தெரியுமோ? முட்டாள் உனக்கு இந்தச் சோலையில் என்ன வேலை? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
சந்நி : ஐயா! இந்த நீரோடையில் என்னுடைய காஷாய வஸ்திரத்தை அலசும் பொருட்டு வந்தேன். வேறு எதற்கும் வரவில்லை.
வீர: ஓகோ! இந்த இழி தொழிலுக்காகத்தான் இந்தச் சோலை ஏற்பட்டதோ? உன் ஆபாசக் கந்தையைக் கசக்க இதுதான் இடமோ?
சந்நி : பிரபு! நான் இப்போது சமீப காலத்திலே தான் சந்நியாசியானேன். தெரியாமல் செய்த பிழையை மன்னித்துக் கொள்ள வேண்டும்.
வீர : ஏன் இப்படிச் செய்தாய்? ஏனடா போக்கிரிப் பயலே! நீ பிறக்கும் பொழுதே சந்நியாசியாய்ப் பிறக்கவில்லை? (அடிக்கிறான்)
சந்நி : ஹா! ஈசுவரா இதெல்லாம் உனக்கு சம்மதியானால் சரிதான்!
தோழன் : (விலக்கி விட்டு) அடே சந்நியாசி! ஓடிப்போ! இங்கே நிற்காதே. (வீரசேனன் உதைக்கிறான்; சந்நியாசி போய் விடுகிறான்)
வீர: அடே! இந்தச் சோலைக்கு வரும் போதெல்லாம் எனக்கு அந்த வஸந்தஸேனையின் நினைவே உண்டாகிறதே! என்ன செய்வேன்? நம்முடைய உடம்பில் உண்டாகும் புண் எப்படி நோகுமோ, அப்படி அல்லவோ அவளுடைய நினைவு என்னை வருத்துகிறது! இந்தச் சோலைக்கு அவளை அழைத்து வர எத்தனை நாட்களாய் முயன்றும் அது பலிக்கவில்லை! அவள் இங்கு வந்து விட்டால், ஒன்று அவள் என் சொற்படி இணங்க வேண்டும். அல்லது அவளை இவ்விடத்திலேயே வெட்டிப் புதைத்து விடவேண்டும்.
தோழ : (தனக்குள்) ஒரு நாளும் அவ்விதம் நடக்கப் போகிறதில்லை.
(வஸந்தஸேனை இருந்தப் பெட்டி வண்டியை ஓட்டிக்கொண்டு பத்மநாபன் வருகிறான்)
வீர : அடே பத்மநாபா? வந்தாயா?
பத்ம : ஸ்வாமி வந்தேன்.
வீர : ஏன் வந்தாய்?
பத்ம : வண்டி கொண்டுவர உத்தரவானதே.
வீர : எங்கே வண்டி?
பத்ம : அதிலேதான் உட்கார்ந்திருக்கிறேன்.
வீர : எருதுகள்?
பத்ம : இதோ நிற்கின்றனவே.
வீர : நீ?
பத்ம : பிரபு! நாமெல்லோரும் ஒன்றாய்த் தானே இருக்கிறோம்.
வீர : அப்படியானால் சந்தோஷம்; ஓட்டு உள்ளே!
பத்ம : எந்த வழியில் ஓட்டுகிறது?
வீர: அதோ தெரிகிறதே இடிந்த சுவர்; அதன் பேரில் ஓட்டு.
பத்ம : அது எப்படி முடியும்? எருதுகளின் உயிர் போய் விடும்; வண்டி ஒடிந்து நொருங்கிப்போம்; என்னுடைய கழுத்தும் முறிந்து போம்.
வீர: அந்தக் குட்டிச் சுவருக்கு அவ்வளவு தைரியமா? நான் இராஜாவின் மைத்துனன் என்று உனக்குத் தெரியாது? எருதுகள் செத்தால் வேறு வாங்கிடலாம். பழைய வண்டி ஒடிந்தால் புது வண்டி வருகிறது. உன்னுடைய கழுத்து ஒடிந்தால் வேறொரு கழுத்து வாங்கித் தருகிறேன். பயப்படாதே; ஒட்டு!
பத்ம : சரிதான். பழையவற்றிற்குப் புதியவை சம்பாதித்து விடலாம். எனக்குப் பதில் என் பெண்சாதி பிள்ளைகள் என்னை எப்படிச் சம்பாதிப்பார்கள்?
வீர: அதற்கு நான் இருக்கிறேன்; நீ ஒருவன் போனால் ஒன்பது மனிதரை நான் உன் மனைவிக்குச் சம்பாதித்துத் தருகிறேன். பயப்படாதே; அதெல்லாம் உனக்கென்ன கவலை? ஓட்டு.
பத்ம : சரி? அப்படியானால் ஓட்டுகிறேன்! இதோ வந்து விட்டேன். நல்ல வேளை ஒரு கெடுதலும் உண்டாகவில்லை.
வீர : போக்கிரிப் பயலே! முதலில் பொய் சொன்னாய் அல்லவா?
பத்ம : நிஜன்தான் மகாப் பிரபு!
வீர : (தோழனைப் பார்த்து) அடே! நீ முன்னால் ஏறிக் கொள்.
தோழ : சரி! அப்படியே ஏறுகிறேன்.
வீர : நில்! நில்! நானல்லவோ வண்டியின் சொந்தக்காரன். உனக்கா முதல் மரியாதை? நான் முதலில் ஏறுகிறேன். நீ முதலில் ஏறக் கூடாது.
தோழ : நீங்கள் கட்டளை இட்டபடியால் நான் ஏறப் போனேன். மன்னிக்க வேண்டும்.
வீர : இருக்கலாம். ஆனால் முதலில் நான் ஏறும்படி நீ என்னை வேண்டிக் கொண்டிருக்க வேண்டும்.
தோழ : மகாப் பிரபு! நீங்கள் தயவு செய்து முதலில் ஏறிக் கொள்ளுங்கள்.
வீர: அதுதான் சரி ஏறுகிறேன். (வண்டிக் கதவைத் திறந்து ஏறி, உடனே வேகமாய்க் கீழே இறங்கித் தோழன் கையைப் பிடித்துக் கொண்டு) ஐயையோ மோசம் வந்தது. பேயோ! பிசாசோ திருடனோ எதுவோ வண்டியில் இருக்கிறது! திருடனாக இருந்தால் நம்முடைய சொத்தைக் கொள்ளையடித்து விடுவான். பேயாயிருந்தால் நம்மை இப்படியே விழுங்கி விடும்.
தோழ : என்ன ஆச்சரியம்! திருடனாவது பேயாவது வண் டிக்குள் வரவாவது!
வீர : நீயே போய்ப் பார். அது ஒரு பெண்ணைப் போல் இருக்கிறது.
வஸ : (தனக்குள்) இதென்ன மோசமாய் இருக்கிறதே! இங்கே அந்தப் பாதகன் வீரசேனன் அல்லவோ இருக்கிறான்! எவ்விடத்திலும் என் துரதிருஷ்டம் முன்னால் வந்து நிற்கிறதே! இவனால் என்ன துன்பம் சம்பவிக்குமோ தெரியவில்லையே! ஈசுவரா என்ன செய்வேன்?
தோழ : (உள்ளே பார்த்து) இதென்ன அதிசயம்? புலிக் கூண்டிற்குள் இந்த மான் எப்படி வந்தது? பேடன்னம் தன் அழகிய ஜோடியை விடுத்துக் காக்கையை நாடி இங்கு வந்ததோ? இது என் மனத்திற்கு நன்றாகத் தோன்றவில்லையே இலாபத்தின் பேரிலேயே கண்ணுங் கருத்துமாய் உள்ள, உன் தாயின் உபத்திரவத்தைப் பொறுக்க முடியாமல் அருவருப்புடன் வந்தாயோ? பிறரிடத்தில் வெறுப்பைக் கொண்டிருந்தாலும் உங்கள் ஜாதி வழக்கம் அதை வெளியில் காட்டுகிறது இல்லை. அப்படியே நீயும் செய்யத் துணிந்தாயே?
வஸ : ஐயா! என்னைப் பற்றி அப்படி நினைக்க வேண் டாம். என் தாய் மூலமாக இவர் எவ்வளவோ ஐசுவரியத்தைத் தருவதாய்ச் சொல்லி அனுப்பி எவ்வளவோ முயன்றும் அதற்கு நான் சிறிதும் இணங்கவில்லை. வண்டி தவறி இதில் ஏறி விட்டேன் போல் இருக்கிறது! அதனால் இந்தப் பெரும் பிழை நேர்ந்தது. நீர்தான் இந்த சமயத்தில் எனக்கு உதவி செய்து என்னைக் காப்பாற்ற வேண்டும். ஐயா! உமக்கு அநேக கோடி நமஸ்காரம். மிகவும் புண்ணியமுண்டு.
தோழ : பயப்பட வேண்டாம்; நான் பார்த்துக் கொள்ளுகிறேன். ஒரு நொடியில் இந்த மடையனை நான் ஏமாற்றி விடுகிறேன், (வீரசேனனிடம் வந்து) ஆம்! இதில் உண்மையில் ஒரு பெரும் பேய் தானிருக்கிறது! அப்பாடா! எவ்வளவு பயங்கரமாய் இருக்கிறது!
வீர : இருக்கட்டும். அது பேயாய் இருந்தால் உன்னை விழுங்காமல் எப்படி விட்டது?
தோழ : உங்களை விட்ட மாதிரி என்னையும் விட்டது. அது எப்படியாவது போகட்டும். இங்கே இருந்து நம்முடைய அரண்மனை வரையில் இரு பக்கங்களிலும் குளிர்ந்த நிழலைத் தரும் மரங்களைக் கொண்ட பாட்டை இருக்கிறது; நாம் சுகமாக நடந்து போகலாம் வாருங்கள்.
வீர : ஏன் நடக்க வேண்டும்.
தோழ : நடந்தால் நமக்கும் தேக ஆரோக்கியம்; களைத்துப் போன எருதுகளுக்கும் ஒருவித ஆறுதல்.
வீர : ஆனால் அப்படியே செய்வோம்! பத்மநாபா வண்டியைப் பின்னால் ஓட்டிக் கொண்டு வா! (சற்று நடக்கிறான்) சே! நில்! நான் ஒரு நாளும் நடந்ததே கிடையாதே. இன்று ஏன் நடப்பேன்? நான் யார் தெரியுமா? நான் இராஜாவின் மைத்துனன் அல்லவா? ஏழையைப் போல நான் பாட்டையின் வழியாக நடப்பதா? சீ! அது அவமானம். ஜனங்கள் என்னைப் பற்றி என்ன சொல்லிக் கொள்வார்கள். நான் வண்டியிலே தான் வர வேண்டும்.
தோழ : (தனக்குள்) இந்த ஆபத்துக்கு என்ன செய்கிறது; மார்க்கம் ஒன்றும் தோன்றவில்லையே! இருக்கட்டும் ஒன்று செய்யலாம். (பலமாக) நான் விளையாட்டுக்குச் சொன்னேன். நீங்கள் அதை இப்படித்தானா நம்புகிறது? நீங்களாவது நடப்பதாவது தங்களை நடக்கச் சொல்ல யார் துணிவார்கள்? வண்டியில் இருப்பது பேயல்ல. வஸந்தஸேனை தங்களைப் பார்க்க வந்திருக்கிறாள். அந்த சந்தோஷத்தினால் வேடிக்கையாக ஒரு பொய் சொன்னேன்.
வீர : அப்படியா பலே! இன்றைக்கு எனக்கு நல்ல வேட்டை தான் அன்றைக்கு ஓடினவள் இப்பொழுது தானாக வந்திருக்கிறாள். பார்த்தாயா என்னுடைய சாமர்த்தியத்தை? நான் அனுமானைப் போல எவ்வளவு அழகாயிருக்கிறேன் பார்?
தோழ : சந்தேகம் என்ன! உங்கள் புத்திக்கு நீங்களே இணை! ஏன், உங்கள் அழகுக்கு அனுமானே இணை!
வீர : அதனாலேதான் இணையே இல்லாத இந்தத் தேவ ரம்பை என்னை நாடி வந்திருக்கிறாள். நான் அன்று இவளுக்கு அதிருப்தியாக நடந்து கொண்டேன். அதைப் பற்றி இவளுக்கு மனதில் வருத்தம் இருக்கலாம். நான் போய் இவள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
தோழ : நல்ல யோசனை அப்படியே செய்யுங்கள்.
வீர : (போய் முழந்தாள் இட்டு வணங்கி) ஏ, தெய்வ மாதா! நான் சொல்வதைக் கேட்டருள வேண்டும் தாமரை மலர் போன்ற உன் கண்களால் என்னைப் பார். ஏ, கந்தர்வ ஸ்திரீயே! உன் பேரில் நான் கொண்ட மோகத்தினால் நான் செய்த குற்றத்தை மன்னித்து என்னை உன் அடிமையாகவும் வேலைக்காரனாகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும். கண்மணி!
வஸ: போம்போம்! உம்முடைய உபசரணைகள் எல்லாம் எனக்கு முற்றிலும் வெறுப்பைத் தருகின்றன. எழுந்து அப்பால் நடவும்.
வீர : (கோபத்துடன் எழுந்து) ஆகா! தெய்வத்தைக்கூட ஒரு நாளும் வணங்கியறியாத நான் உன்னை வணங்கினேன். அதற்குப் பதிலாக நீ இப்படியா அவமதிக்கிறாய்? அட பத்மநாபா இவளை எங்கிருந்து வண்டியில் ஏற்றி வந்தாய்? .
பத்ம : ஸ்வாமி உண்மையைச் சொல்லுகிறேன். நான் வந்த போது வெற்றிலை பாக்கை எடுத்துக் கொண்டு வர மறந்து விட்டேன். வண்டியை மாதவராயருடைய வீட்டின் வாசலில் சற்று நிறுத்தி விட்டு, சமீபத்தில் இருந்த கடைக்குப் போய், வெற்றிலை முதலியவற்றை வாங்கிக் கொண்டு வந்தேன். அந்தச் சமயத்தில் அவர் வீட்டிற்கு உள்ளேயிருந்து இந்த ஸ்திரீ வந்து தவறுதலாய் வண்டியில் ஏறிக் கொண்டாள் போல் இருக்கிறது!
வீர : தவறுதலாகவா வந்தாள்? ஆனால் என்னை நாடி வர வில்லையா? அடி வஸந்தஸேனை கீழே இறங்கு, இந்த வண்டி என்னுடையது என்பது தெரியாதோ? நான் மாத்திரம் உனக்குப் பிடிக்கவில்லை. என் வண்டி மாத்திரம் நன்றாய் இருக்கிறதா? இறங்கு கழுதை, இல்லாவிட்டால் எட்டி உதைப்பேன்.
வஸ : ஐயா! மன்னிக்க வேண்டும். நான் மாதவராயருடைய சோலைக்குப் போகிறேன். இது அவருடைய வண்டி என்று ஏறி விட்டேன்.
வீர : அந்த நித்திய தரித்திரனிடம் போக என் வண்டியை உபயோகித்துக் கொண்டாயோ நாயே? இறங்கு கீழே!
வஸ : எது உமக்கு இகழ்வாகத் தோன்றுகிறதோ அது எனக்கு மிகவும் மேன்மையாகத் தோன்றுகிறது. அவரவர்களின் விருப்பம்! எல்லாம் தலை விதியின்படி நடக்கிறது.
வீர : விருத்தம் – மோகனம்
வேசையே வஸந்தசேனை! பிடிவாதம்விடுத்தா யில்லை,
காசையே மதிக்குந் தாஸி யகத்தினிலுதித்துங் கற்பி
லாசையே வைத்தாயென்று மன்னியர் வதனங் காணக்
கூசுமோர் நீர்மை பெற்ற குலமக ளெனவே சொற்றாய்!
ஜெடாயு பலியின் மனைவியினுடைய தலை மயிரைப் பிடித்திழுத்ததைப் போல இதோ உன்னை வெளியில் இழுத்து விடுகிறேன் பார்!
தோழ : பிரபு! பொறுத்துக் கொள்ள வேண்டும். கூந்தலில் கையை வைக்க வேண்டாம். மரத்தைச் சுற்றிக் கொண்டிருக்கும் புஷ்பக் கொடியை யாராவது பிடித்திழுத்து அறுப்பார்களா? இவளை விட்டு விடுங்கள்; நான் கீழே இறக்கி விடுகிறேன். இவள் தேவையான இடத்திற்குப் போகட்டும். நாம் வண்டியில் ஏறிக் கொண்டு அரண்மனைக்குப் போவோம். (அவளைக் கீழே இறக்கி விடுகிறான்)
வீர : (தனக்குள்) ஆகா! இவள் என்னிடம் எவ்வளவு அவமதிப்பாய்ப் பேசுகிறாள். இவள் பேரில் என் மனதில் எழுந்து பொங்கும் கோபத்தை எப்படி அடக்குவேன்? அவளுக்கு ஒரு அடியாவது, குத்தாவது, உதையாவது கொடுக்காவிட்டால் என் கோபம் கொஞ்சமும் தணியாது. இவள் உயிரை வாங்க வேண் டும். அடே நண்பா! இவளை உடனே கொன்று விட்டு மறு வேலை பார்.
தோழ : (காதை மூடிக் கொண்டு) ஆகா! நன்றாய்ச் சொன்னீர்கள் இந்த மங்களபுரிக்கே பெருமையாய் விளங்கி ஒப்பற்ற அழகு, நற்குண நல்லொழுக்கம் முதலியவற்றைக் கொண்டுள்ளவளும் யாதொரு குற்றமும் செய்யாதவளுமான இந்த யெளவன மங்கையையா கொல்லுவது? இருந்திருந்து ஸ்திரீ ஹத்தியா செய்ய வேண்டும்! இதனால் ஆயுட்கால முழுவதும் நான் அனுபவிக்க வேண்டிய மனோ வேதனையையும், இதனால் உண்டாகும் பாபமுமாகிய பெரிய சமுத்திரத்தையும் எப்படிக் கடப்பேன்?
வீர : பயப்படாதே! உனக்கு நான் ஒரு தெப்பம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்கிறேன். சீக்கிரம் ஆகட்டும்; தனிமையாக இந்த இடத்தில் உன்னை யார் பார்க்கப் போகிறார்கள்.
தோழ : பிரம்மனுடைய சிருஷ்டிப் பொருள்கள் யாவும், அவற்றிற்கு மத்தியில் உள்ள இடைவெளியும், இந்த வனத்தில் உள்ள தேவதைகளும், சூரியனும், பஞ்சபூதங்களும், நமது மனமும், எங்கும் நிறைந்த கடவுளும் நாம் செய்யுங் காரியத்திற்குச் சாட்சியல்லவோ? இவைகளுக்குத் தெரியாமல் நாம் இந்தக் காரியத்தை எப்படிச் செய்ய முடியும்?
வீர: அப்படியானால் இவள் பேரில் ஒரு துணியைப் போட்டு மறைத்து விடுகிறேன். பிறகு வேலையை முடித்து விடு. இவளை ஒருவரும் பார்க்க முடியாது.
தோழ : இது பைத்தியந்தான்.
வீர : நீ ஒரு முட்டாள்! உனக்கொன்றும் தெரியாது. நீ போ அப்பால். பத்மநாபனைச் செய்யச் சொல்லுகிறேன். அடே பத்மநாபா எங்கே ஆகட்டும். உனக்குத் தங்கக் காப்பு இனாம் தருகிறேன்.
பத்ம : மகாப் பிரபு! சந்தோஷம்; கொடுங்கள் கையில் அணிந்து கொள்ளுகிறேன். –
வீர : தவிர, உனக்கு இன்று என்னுடன் முதல் தரமாக போஜனம் அளிக்கிறேன்.
பத்ம : வஞ்சனை இல்லாமல் வயிறு நிறைய போஜனம் செய்கிறேன். அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.
வீர : உன்னை வேலைக்காரர்களுக்கு எல்லாம் எஜமானன் ஆக்குவேன்.
பத்ம : அப்படியானால் தங்கள் தயவினால் நான் பெரிய மனிஷ்யனாகிறேன்.
வீர : நான் சொல்வதைச் செய்ய வேண்டும்.
பத்ம : தடை என்ன! சொல்லுங்கள் அவசியம் செய்கிறேன்.
வீர : இந்த வஸந்தஸேனையை உடனே கொன்று விடு.
பத்ம : மகாப் பிரபு! இதுதானா ஒரு பிரமாதம். இதைத் தவிர நீங்கள் எந்தக் காரியம் செய்யச் சொன்ன போதிலும் நான் செய்யாமல் இருப்பேனோ? அப்படி இருந்தால் என்னைக் காட்டிலும் நன்றி கெட்டவன் யார்?
வீர : அடே போக்கிரிப் பயலே! நான் உன்னுடைய எஜமானனல்லவா?
பத்ம : ஸ்வாமி உண்மைதான். தாங்கள் என் சரீரத்திற்கு எஜமானே. ஆனால் என்னுடைய பாவ புண்ணியத்திற்கு நான் தானே எஜமான். இதைச் செய்ய என் மனமும் கையும் துணிய வில்லை. மன்னிக்க வேண்டும்.
வீர : என்னுடைய வேலைக்காரனாகிய நீ வேறு எவனுக்கு இப்படிப் பயப்படுகிறாய்?
பத்ம : வருங்காலத்திற்கு.
வீர : வருங்காலமென்பவன் யாரடா அவன்? பத்ம அவன் நம்முடைய நன்மை தீமைகளுக்குத் தகுந்த விதம் நமக்குப் பதில் செய்பவன்.
வீர : நன்மை செய்தால் என்ன பதில் கிடைக்கும்?
பத்ம : தங்களுடையதைப் போன்ற செல்வமும் சிறப்பும் கிடைக்கும்.
வீர : தீமைக்கு?
பத்ம : என்னைப் போல அடிமைத் தொழில் செய்வதே அதற்குப் பலன். ஆகையால் மேலும் தீமை செய்ய மாட்டேன்.
வீர: உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவரை அது அடிமையாக்கும். நீதான் அடிமையாய் இருக்கிறாயே. உன்னை அது என்ன செய்யப் போகிறது? பயப்படாதே. நான் சொல்வதைச் செய்.
பத்ம : நல்ல ஸ்திதியில் இருப்பவர்கள் அடிமையானால் அடிமை இன்னும் எந்த விதமானதாழ்ந்த நிலைமைக்குப் போக வேண்டுமோ! அதை நாம் ஊகித்துக் கொள்ள வேண்டாமா?
வீர : (அடிக்கிறான்) போக்கிரி மறுத்து மறுத்துப் பேசுகிறாயா? உனக்கு அவ்வளவு துணிபா
பத்ம : என்னை அடித்தாலும் சரி! கொன்றாலும் சரி! செய்யத் தகாத காரியத்தை நான் ஒருக்காலும் செய்ய மாட்டேன்.
வஸ (தோமுனைப் பார்த்து) ஐயா! இந்த ஆபத்தில் நீர் தான் என்னைக் காப்பாற்ற வேண்டும். (வணங்குகிறாள்)
தோழ : மகாப் பிரபு கோபிக்க வேண்டாம். பத்மநாபன் சொல்வது சரியான விஷயம். எவ்வளவோ புண்ணியம் செய்து பெற்ற இந்த மேன்மையை ஏன் இழக்கப் பார்க்கிறீர்கள்?
வீர : (தனக்குள்) இந்த இரண்டு கழுதைகளும் இதைச் செய்ய அஞ்சிப் பின் வாங்குகிறார்கள். இராஜாவின் மைத்துனனாகிய என்னை எதிர்காலம் என்ன செய்யப் போகிறது. (கோபத்தோடு)
அட பத்மநாபா! என் முன்பாக நிற்காதே போ அப்பால்! (உதைக்கிறான்)
பத்ம : இதோ போய் விடேன். (அப்பால் போகிறான்)
வீர : (தன் அங்க வஸ்திரத்தை இறுகக் கட்டிக் கொண்டு) அடி வஸந்தஸேனை! வா இப்படி; விடு உன் பிராணனை: (அவளைப் பிடிக்கப் போகிறான். தோழன் அவனைத் தடுக்கும் பொருட்டு பிடிக்கிறான்; அவன் கீழே விழுகிறான்).
வீர : (எழுந்து) அடே! துஷ்டா! உன் எஜமானைக் கொல்லவா நினைக்கிறாய்? இவ்வளவு காலம் என்னுடைய அன்னத்தைத் தின்று வளர்ந்த நீ எனக்கு விரோதமாக நடக்கிறாய் அல்லவா?
(தனக்குள்)இவன் இருந்தால் காரியம் முடியாது. இவனையும் அனுப்பி விடுகிறேன். – அடே பைத்தியக்காரா நான் சொன்னது இன்னதென்பதை நீ சரியாக உணரவில்லையே! இதுதானா உன்னுடைய புத்திசாலித்தனம் இவ்வளவு உயர்ந்த குலத்தில் பிறந்த நான் கேவலம் இந்த இழிவான காரியத்தைச் செய்ய உண்மையில் விரும்புவேனோ என்பதை அறிந்து கொள்ளக் கூடவில்லையே! இவள் பயந்து கொண்டு என் இச்சைக்கு இணங்கட்டும் என்று இப்படிச் சொன்னேன். இவ்வளவுதானா உன் புத்தி கூர்மை?
தோழ : உயர் குலத்திற்குத் தகுந்த குணவொழுக்கம் இல்லா விட்டால், மேலான பிறப்பைப் பற்றி புகழ்ந்து ஆத்ம ஸ்துதி செய்து கொள்வதில் பயனென்ன?
வீர : உண்மை என்னவென்றால் நீ இங்கிருப்பதனால் இவள் வெட்கப்படுகிறாள். கொஞ்ச நேரத்திற்கு எங்கள் இருவரையும் தனியாக விட்டுப் போ. அந்த முட்டாளும் எங்கேயோ ஓடிப் போய் விட்டான். நீ போய் அவனையும் தேடி அழைத்து வா. அதற்குள் இவள் இணங்கி விடுவாள்.
தோழ : (தனக்குள்) அப்படியும் இருக்கலாம். நான் சற்று நேரம் அப்பால் போகிறேன். ஐயா! உத்தரவுபடி நான் போகிறேன்.
வஸ : (அவன் வழியை மறைத்து) ஐயா! என்னை இங்கு தனியாக விட்டுப் போக வேண்டாம். உம்மைத் தவிர இங்கு எனக்கு வேறொரு துணையுமில்லை. காப்பாற்ற வேண்டும்.
தோழ : நீ எதற்கும் பயப்பட வேண்டாம். நான் இருக்கிறேன். (வீரசேனனைப் பார்த்து, ஐயா! வஸந்தஸேனையை உம்மிடம் ஒப்புவித்துப் போகிறேன். நான் திரும்பி வரும் போது ஜாக்கிரதையாக இவளை என்னிடம் ஒப்புவிக்க வேண்டும்.)
வீர : சரி. அப்படியே ஆகட்டும்.
தோழ : உண்மைதானா?
வீர : சத்தியம்.
தோழ (தனக்குள்) இவன் ஒருவேளை என்னை ஏமாற்றினாலும் ஏமாற்றி விடுவான்; நான் மறைவில் இருந்து இவன் செய்வதைக் கவனிக்கிறேன். (போய் மறைந்து கொள்கிறான்)
வீர : (தனக்குள்) போய் விட்டான்; இனி இவளை ஒழித்து விடுகிறேன். (நான்கு பக்கங்களையும் சுற்றிப் பார்க்கிறான்.) ஓகோ இவன் ஒளிந்து கொண்டிருக்கிறானா? அப்படியா என்னை ஏமாற்றவா பார்க்கிறாய்? உன்னை நான் ஏமாற்றுகிறேன் பார்! (வீரசேனன் புஷ்பங்களை எடுத்துத் தன் பேரில் அணிந்து கொள்கிறான்.) வஸந்தஸேனை! என் அருகில் வா கண்மணி! ஏன் என் பேரில் உனக்கு இவ்வளவு கோபம் வாவா! போதும்! என் கண்ணாட்டி அல்லவோ! எங்கே ஒரு முத்தம் கொடு.
தோழ : (தனக்குள்) சரி அவள் பேரில் காதலைத்தான் காட்டுகிறான்; சந்தேகமில்லை! நான் இனிமேல் நிற்பது பிசகு; போகிறேன். (போப் விடுகிறான்)
வீர : அடி வஸந்தஸேனை, உனக்கு எவ்வளவு ஐசுவரியம் தேவையான போதிலும் சரி, மழைப் போல வருவிக்கிறேன்; உன்னையே என் குலதெய்வமாக மதித்துக் கொண்டாடுகிறேன். என் தலைப் பாகையை உன் காலடியில் வைத்து வணங்குகிறேன். எங்கே என் அருகில் வா!
வஸ: விருத்தம் – தோடி
ஐயனே! வீணிலென்னை யலைத்துநீர் வருத்து கின்றீர்!
தையலர் மனதை நீவிர் சற்றெனு மறியீர் போலும்.
வைதெனை யுரப்பியென்ற னன்பினைப் பெறுத லாமோ?
கைதவ நினையா திந்த ஆசையை விடுப்பீ ரின்றே.
ஐயா! நீர் எவ்வளவுதான் தெரிவித்த போதிலும் எனக்கு உம்மீது சற்றும் விருப்பம் உண்டாகவில்லை. உம்முடைய செல்வம் யாருக்கு வேண்டும்? தாமரைப் புஷ்பத்தின் இதழ்களில் சேறு படிந்து அழுக்கடைந்து இருந்த போதிலும், வண்டுகள் அந்தப் புஷ்பத்தை விட்டு அகலாது அல்லவோ! அதைப் போல ஏழ்மைத் தன்மையோடு கூடியிருந்த போதிலும் யோக்கியதா பட்சம் யாரிடத்தில் இருக்கிறதோ அந்தப் பூமானையே என் மனம் நாடுகிறது! அவருக்கு நான் ஒருக்காலும் வஞ்சம் செய்ய நினைக்க மாட்டேன். என்னை வீணில் வருத்துவதில் என்ன பயன்?
வீர :ஆகா! அப்படியா கேவலம் நித்திய தரித்திரனாகிய மாதவராயனை என்னைக் காட்டிலும் அதிகமாய் விசேஷித்தா பேசுகிறாய்? உனக்கு இவ்வளவு அகம்பாவமா? அவன் பேரில் உனக்கு அவ்வளவு ஆசையா?
வஸ : என் ஹிருதயத்திலேயே குடியிருக்கும் அவரை நான் எப்படி மறப்பேன்?
வீர: நீ சொல்வது நிஜந்தானா சமீபத்தில் வா. உன்னுடைய ஹிருதயத்தில் அவன் இருக்கிறானா என்று பார்க்கிறேன். அடி! வஸந்தஸேனை! பிச்சை எடுக்கும் பிராம்மணனுடைய பிரிய சகியல்லவோ நீ!
வஸ : ஆகா! கர்னாமிருதமான மொழிகள்! என்னுடைய பெருமையே பெருமை! அவரைப் பற்றி நீர் பேசப் பேச என் மனதில் பிரம்மானந்தம் உண்டாகிறது. இன்னம் பேசலாம்.
வீர: அவனால் இந்த சமயத்தில் உன்னை பாதுகாக்க முடியவில்லை. அப்பேடியை நீ மிகவும் புகழ்ந்து பேசுகிறாயே!
வஸ : அவர் இங்கிருந்தால் எனக்கு இந்த அவமானம் நேர அவர் பார்த்துக் கொண்டிருப்பாரா? எனக்கு மாத்திரமல்ல; இன்னும் யாராயிருந்த போதிலும், அநாதைகளுக்குத் தீங்கு சம்பவித்தால் தன் உயிரைக் கொடுத்தாயினும் அவர்களைக் காப்பாற்றுவாரே!
வீர : ஆகா! அவன் அவ்வளவு பலசாலியா! அவனல்ல அவன் பாட்டன் வந்த போதிலும் உன்னைத் தப்புவிக்க முடியாது. பாஞ்சாலியை இராமர் பிடித்ததைப் போல இதோ உன்னை நான் பிடித்துக் கொல்லுகிறேன் பார்.
(அவளுடைய கழுத்தைப் பிடித்துக் கொள்ளுகிறான்)
வஸ : ஐயோ! இங்கு ஒருவருமில்லையா? இங்கு அநாதையாகத் தவிக்கிறேனே! இந்தக் கொலை பாதகன் என்னை ஹிம்சிக்கிறானே! ஹே! பிராண துரையே! நீர் எங்கிருக்கிறீரோ தெரியவில்லையே! என்னுடைய மனோரதம் இன்னம் நிறைவேறவில்லையே; இதற்குள் என்னுடைய உயிர் போய் விடும் போல் இருக்கிறதே ஒரு நாளாயினும் உம்மோடு கூடி வாழவில்லையே! இப்பொழுது இறந்தால் என் மனம் வேகுமோ ஹே! சுந்தராங்கா! இங்கு வர மாட்டீரா! இந்தக் கொலை பாதகனுக்குத் தக்க சிட்சை விதிக்க மாட்டீரா! ஏ, பக்ஷிகளா! ஏ, வண்டினங்களா! நீங்களாயினும் என் பேரில் இரக்கம் கொண்டு உடனே அவரிடம் போய்ச் சொல்லி அழைத்து வர மாட்டீர்களா? என் மனதைக் கொள்ளை கொண்ட என் துரையை நான் எப்படி மறந்து இறப்பேன்? நேற்று இரவெல்லாம் தங்களுக்குப் பணிவிடை செய்த அந்தப் பாக்கியம் திரும்பக் கிடைக்குமா என்று நினைத்திருந்தேனே! ஹா! தெய்வமே நீதான் ஏழையைக் காப்பாற்ற வேண்டும்.
வீர.: இன்னம் அவனை நினைக்கிறாயா? எங்கே இனிமேல் நீ வாயைத் திறந்து பேசுவதைப் பார்க்கிறேன். (அவளுடைய கழுத்தை இரண்டு கைகளாலும் இருகப் பிடித்து மூச்சுவிட முடியாமல் அழுத்துகிறான். வஸந்தஸேனை பேச முடியாமல் துடி துடித்துக் கீழே விழுகிறாள்.)
வீர: ஓகோ இன்னம் துடிக்கிறாயா? ஒழிந்து போ! வேசிக் கழுதை (கைகளால் மேலும் தொண்டையை இறுகப் பிடித்து அழுத்துகிறான். அவள் மூர்ச்சித்து கீழே விழுகிறாள்.)
வீர : ஒழிந்தாள் வேசி; முடிந்தது காரியம்; என் கவலையும் தீர்ந்தது! இந்தப் பாப மூட்டை இந்த வஞ்சக மண்டபம் கடைசியில் அழிந்தது. என்னைக் கையாலாகதவன் என்றா நினைத்தாய்? இப்பொழுது எப்படி இருக்கிறது? நான் இராஜாவின் மைத்துனன் என்னுடைய தயவிற்கு எத்தனையோ ஸ்திரீகள் காத்திருக்கிறார்கள்; நான் எவ்வளவு நயந்து வேண்டியும் என்னை அவமதித்தா பேசுகிறாய்! நீ எந்த விஷயத்தில் மற்ற ஸ்திரீகளைக் காட்டிலும் உயர்ந்தவள்? கந்தருவ ஸ்திரீயோ? அல்லது தேவ ரம்பையோ? எனக்கு உபயோகப்படாத உன் தேகம், பூச்சி புழுக்களுக்கு உபயோகப்படட்டும். எவ்வளவோ பெரிய மனுஷ்யனான எனக்கு ஒரு முத்தம் கொடுக்க மாட்டேனென்றாயே. இனி நாய் நரிகளெல்லாம் உன்னைத் தேவையான வரையில் முத்தமிடப் போகின்றன. இங்கு எவரும் இல்லை. நான் உன்னை அனுபவித்து ஆனந்தப்பட நீ சம்மதிக்கவில்லை அல்லவோ நீ அருமையாய் வளர்த்த உன்னுடைய மாமிசத்தை நாய் நரி கழுகுகள் சந்தோஷமாய்த் தின்பதையாயினும் மறைவில் இருந்து பார்த்து ஆனந்தம் அடைகிறேன். இந்தப் பிணத்தை யாரும் அறியாமல் இங்கே உதிர்ந்து கிடக்கும் சரகுகளால் மறைத்து விடுகிறேன்.
(மிகுதியிருந்த அவளுடைய ஆபரணங்களைக் கழற்றிக் கொண்டு அவளைச் சருகுகளால் மறைத்து விடுகிறான்.)
(தோழனும் பத்மநாபனும் வருகிறார்கள்)
தோழ : மகாப் பிரபு! பத்மநாபனை இதோ அழைத்து வந்தேன். வஸந்தஸேனையை ஒப்புவித்தேனே! அவள் எங்கே இருக்கிறாள்? காணோமே!
வீர : அவள் அப்பொழுதே போய் விட்டாளே!
தோழ : எங்கே போனாள்?
வீர : உனக்குப் பின்னால் வந்தாளே!
தோழ : அந்தத் திக்கிலேயே அவள் வரவில்லையே!
வீர : நீ எந்தத் திக்கில் இருந்தாய்? தோழ நான் கிழக்குத் திக்கில் இருந்தேன்.
வீர : அப்படியானால் சரிதான்; அவள் தெற்குத் திசையில் அல்லவோ போனாள்.
தோழ : நான் தென் புறத்திலும் போனேனே!
வீர : அப்படியானால் அவள் வடக்குப் பக்கமாய்ப் போய் இருக்க வேண்டும்.
பத்ம : நான் வடக்குப் பக்கத்திலேயே இருந்தேனே! ஒருவரையும் காணவில்லையே!
வீர : மிகுதி இருப்பது மேற்குத்தானே சரிதான் அப்படித்தான் போனாள். இப்பொழுது தான் நினைவிற்கு வருகிறது! இந்தச் சோலையில் சூரியனிருக்குமிடம் தெரியாமையால் கிழக்கு மேற்கு தெரிகிறதில்லை.
தோழ : என்ன இது? நீங்கள் சொல்வது எனக் கொன்றும் விளங்கவில்லையே! நன்றாய்த் தெரிவியுங்கள்.
வீர : உன் தலை, என் கால், சாட்சியாகச் சொல்லுகிறேன். நீ கவலைப்பட வேண்டாம். உனக்குப் பயமென்பதே தேவை இல்லை. நான் அவளை அனுப்பி விட்டேன்.
தோழ : எங்கே அனுப்பினர்கள்?
வீர : அவள் இந்த உலகத்தையே விட்டுப் போய் விட்டாள்.
தோழ: இதென்ன ஆச்சரியம்!
வீர: ஆச்சரியம் ஒன்றுமில்லை. இச்சருகின் கீழ் சயனித்துக் கொண்டிருக்கிறாள் பார். (பிரித்துக் காட்டுகிறான்)
தோழ : ஆகா! என்ன அக்கிரமம் (மூர்ச்சித்து விழுகிறான்)
வீர : இதென்ன! இவனும் இறந்து விட்டானா என்ன? அவளிடத்தில் இவனுக்கென்ன இவ்வளவு பிரியம்? இவர்கள் இருவருக்கும் ஒரு வேளை ஸ்நேகம் இருக்குமோ? ஆம், ஆம்! அப்படித்தான் இருக்க வேண்டும்.
பத்ம : (தோழனைப் பார்த்து) ஐயா! எழுந்திரும்! இத்தனைக்கும் நானே காரணம்! இவளை நான் அல்லவோ இங்கு அழைத்து வந்தேன். இந்தப் பழி எனக்கு அல்லவோ வந்து சேரும்.
தோழ :(மிகவும் விசனத்து) ஐயோ வஸந்தஸேனா! அன்பாகிய ஆறு வறண்டு போய் விட்டதோ? அழகானது, இந்தத் தேசத்தை விட்டுத் தனது இருப்பிடத்திற்குப் பறந்து போய் விட்டதோ? ஆகா! என்ன சாந்த குணம் என்ன குதூகலமான மொழி குழந்தையைப் போல் விளையாடுவாயே! இன்பங்களே நிறைந்த பெட்டியைத் திருடன் உடைத்து விட்டானே! இந்தப் பழி வீண் போகுமோ? ஸ்திரீ ஹத்தி தோஷம் விலகுமோ? அழகான யெளவன ஸ்திரீயை யாதொரு குற்றமும் இன்றி கொல்வது என்றால், தெய்வம் இந்த ஊரில் இருக்குமோ? தலையில் இடி விழாதோ? (தனக்குள் இந்தக் கொலை பாதகன் இந்தக் குற்றத்தை என் பேரில் சுமத்தினாலும் சுமத்துவான். இங்கிருப்பது பிசகு, நான் போய் விடுகிறேன். (விரசேனன் அவனைப் பிடித்துக் கொள்ளுகிறான்) என்னை ஏன் தடுக்கிறீர்! உம்முடன் நான் தோழனாக இருந்தது போதும்; நான் போகிறேன். இனி உமக்குத் தகுந்த வேறொருவனை வைத்துக் கொள்ளும். நான் போகிறேன்.
வீர : அப்படியா! நீ மிகவும் சாமர்த்தியசாலியாய் இருக்கிறாயே! இந்த ஸ்திரீ ரத்னத்தை இங்கு கொன்றதுமன்றி நான் கேட்டால் என்னைத் தூஷிக்கிறாயா?
தோழ : அழகு! அழகு! யோக்கியமான காரியம்! இவ்வளவு மேலான குணம் யாருக்கு வரும்?
வீர: வாவா! கோபிக்காதே கோபம் பொல்லாதது அல்லவா? அதில் இவ்விதமான காரியம் செய்வது மனிஷ்ய ஸ்வபாவந் தானே உனக்குத் தேவையான பொருள் தருகிறேன். வா போக லாம்.
தோழ : ஐயா! போதும்! உம்முடைய வெகுமதியும் வேண்டாம்; உம்முடைய நட்பும் வேண்டாம்! இனிமேல் நாம் இருவரும் விரோதிகளாக இருப்போம். அவமானத்தை உண்டாக்கும் நட்பு எனக்குத் தேவையில்லை. நாம் இருவரும் இனி ஒருக்காலும் சேருவது இல்லை. இத்துடன் நமது ஸ்நேகம் ஒழிந்தது.
வீர : பிரிய நண்பா! என்ன இப்படிக் கோபித்துக் கொள்கிறாய்! நேரமாகிறது; ஸ்நானத்திற்குப் போவோம் வா!
தோழ : நீர் குற்றமற்றவராய் இருந்த போது உமக்கு நான் எவ்வளவோ பணிந்து நடந்தேன். குற்றவாளியை இனி நான் ஒருக்காலும் பணிய மாட்டேன். அதிலும் ஸ்திரீயைக் கொன்றவனோடா நட்புக் கொள்ள வேண்டும். ஆகா வஸந்தஸேனா உன்னுடைய நற்குணத்திற்கு நீ அடுத்த ஜென்மத்திலாவது சுகம் பெறுவாய். உன்னைக் கொலை செய்ததற்கு ஈசுவரன் எப்படியும் பழி வாங்கி விடுவான். (போகிறான்)
வீர : கொலை செய்து விட்டு எங்கே ஓடப் பார்க்கிறாய்? இராஜாவினிடம் போக வேண்டும். வா என்னுடன்; அங்கு வந்து உன்னுடைய நியாயத்தைச் சொல்லித் தப்பித்துக் கொள். (பிடிக்கிறான்)
தோழ : முட்டாளே! போ அப்பால். (கோபத்தோடு தன் கத்தியை உருவுகிறான்.)
வீர : (அஞ்சிப் பின் வாங்கி) சரி, சரி உனக்கு அச்சமாய் இருந்தால் நீ போய் விடு. இங்கே நிற்காதே.
தோழ : (தனக்குள் நான் இந்த நகரத்தில் இருந்தால், இந்தப் படுபாவி என் பேரில் இந்தக் குற்றத்தைச் சுமர்த்தி என்னைப் பல துன்பங்களுக்கு ஆளாக்குவான். நான் இந்த ஊரை விட்டுப் போய் பிரதாபனுடன் சேர்ந்து கொள்ளுகிறேன். (போய் விடுகிறான்)
வீர : அடே பத்மநாபா என்ன நீ கூடவா பயப்படுகிறாய்?
பத்ம : ஸ்வாமி! இது மிகவும் கொடிய விஷயம் அல்லவா?
வீர : நீயும் என்னைத்தூஷிக்க ஆரம்பித்தாயா? இதோ இந்த ஆபரணங்களை வெகுமதியாக எடுத்துக் கொள். நான் நன்றாய் அலங்காரம் செய்து கொண்டிருக்கையில் நீயும் எனக்குத் தகுந்த படி இருக்க வேண்டாமா? நேரமாகிறது, நீ வண்டியை ஓட்டிக் கொண்டு அரண்மனைக்குப் போ; நான் பின்னால் வருகிறேன்.
பத்ம : அப்படியே செய்கிறேன். (போய் விடுகிறான்)
வீர : (தனக்குள்) இந்த இரண்டு கழுதைகளையும் அரண்மனைக்குப் போனவுடன் ஒருவரும் அறியாமல் சிறைச்சாலையில் அடைத்து விடுகிறேன்; பிறகு இந்த இரகசியம் எப்படி வெளியில் வரப் போகிறது. இவள் உயிர் போய் விட்டதா அல்லது இன்னம் நன்றாய்க் கொல்ல வேண்டுமோ பார்க்கிறேன். சரி ஒழிந்துப் போய் விட்டாள்! சருகுகளை நன்றாய்ப் போட்டு மூடுகிறேன். நான் உடனே நியாயாதிபதியினிடம் போய் வஸந்தஸேனையின் ஆபரணங்களை அபகரிக்கும் பொருட்டு மாதவராயன் இவளைக் கொன்று விட்டதாகப் பிராது கொடுக்கிறேன்! நல்ல யோசனை நல்ல தந்திரம் மாதவராயனும் ஒழிந்து விடுவான் சரி போகிறேன். (போப் விடுகிறான்)
(ஈர வஸ்திரத்துடன் சந்தியாசி வருகிறான்.)
(தனக்குள்) சனியன் ஒழிந்தான்! இவ்விதமான துஷ்டர்களை அந்தக் கடவுள் ஏன் படைக்கிறானோ தெரியவில்லை! சந்நியாசி என்றால் இவனுக்கு எவ்வளவு கோபம் உண்டாகிறது! இவன் போகட்டும் என்று இதுவரையில் ஒரு மறைவில் இருந்து, இப்பொழுதே என்னுடைய காஷாய வஸ்திரத்தைக். கசக்கினேன். இவன் இனித் திரும்பி வர மாட்டான். வஸ்திரத்தை இந்த மரக்கிளையில் கட்டி உலர்த்துகிறேன். சே! குரங்குகள் இருக்கின்றன; கிழித்தாலும் கிழித்து விடும். கீழே தரையில் காய வைத்தால் மண் ஒட்டிக் கொள்ளும். என்ன செய்கிறது? அதோ இலைச் சருகுகள் முட்டாகக் குவிந்திருக்கின்றன. அதன் பேரில் காய வைக்கிறேன். (வஸந்தஸேனை கிடந்த இடத்தின் பேரில் துணியை விரித்து விட்டு அருகில் உட்காருகிறான்.
ஆகா! இந்த உலகத்தில் என்ன இருக்கிறது)
திருவருட்பா – தோடி
விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்து கிடந்தழுது
விம்முகின்ற குழவியினு மிகப்பெரிதுஞ் சிறியேன்
அளக்கறியாத் துயர்க்கடலில் அழுந்தி நெடுங்கால
மலைந்தலைந்து மெலிந்து துரும் பதனின் மிகத்துரும்பேன்.
கிளக்கறியாக் கொடுமையெலாம் கிளைத்த பழுமரத்தேன்
கொடுமதியேன் கடுமையினேன் கிறிபேசும் வெறியேன்
களக்கரியாப் புவியிடை நானேன் பிறந்தே னந்தோ!
கருணை நடத்தரசே! நின் கருத்தை யறியேனே.
ஆழ்ந்து நினைத்துப் பார்த்தால் இவ்வுலகில் துன்பத்தையும் துயரத்தையும் தவிர வேறு ஒன்றும் இல்லை. இங்கு நாம் இருப்பதும் அநித்தியம். இந்த அற்ப வாழ்வும் மோசம் நாசம் கம்பளி வேஷமாக இருக்கிறது. சே! இது யோக்கியர்கள் இருப்பதற்கே தகாத உலகம். கொஞ்சங் கொஞ்சமாய் ஆகாரத்தைக் குறைத்து தேகத்தை ஒடுக்கிக் கடைசியில் என் பிராணனை விட்டு விடுவதே நல்ல முடிவு. ஈசுவரனுடைய திருவடியையே சதா காலமும் நினைத்த வண்ணமிருப்பதே நமக்குப் பெருத்த தனம்; அதுவே பாக்கியம். அதுவே பேரானந்தம்; அதுவே யாவும். இந்த உலகில் யாதொரு பற்றுமில்லை. யாரை விட்டுப் போவதில் என்ன விசனம்? ஒருவரும் இல்லை. ஆனால் எனக்குக் கடைசியாக உதவி செய்த அந்த வஸந்தஸேனையை மாத்திரம் நான் ஒரு நாளும் மறந்ததில்லை. அவளுக்கு ஏதாவது ஒரு பதில் உதவி செய்து விட்டால் போதும்; என்னுடைய கடைசி விருப்பம் நிறைவேறிப் போம். அவளுக்கு எவ்விதமான உதவி செய்யப் போகிறேன் (திடுக்கிட்டு) இதென்ன ஆச்சரியம்! இந்தத் துணியின் கீழ் புஸ் என்று பெரு மூச்சு விடும் சத்தத்தைப் போலக் கேட்டதே! ஒருவேளை ஸர்ப்பம் கடித்து நான் இறந்தால் நல்லதுதான். (ஒரு கையை வெளியில் நீட்டுகிறான்) ஓகோ ஸர்ப்பத்தைப் போலத் தான் இருக்கிறது. ஸர்ப்பமல்ல! தந்தத்தினால் செய்யப்பட்டகையைப் போல் இருக்கிறதே! (வஸ்திரத்தை எடுத்து விட்டு) இதென்ன ஆச்சரியம்! ஒரு ஸ்திரீயின் அழகிய கரமல்லவோ தெரிகிறது! இது விநோதமாக இருக்கிறதே! (சருகுகளை விலக்குகிறான்) ஆகா! என்ன காந்தி! ஒரு பெண்மணி அல்லவோ படுத்துக் கொண்டிருக்கிறாள்! என்ன வஞ்சகமோ தெரியவில்லையே! எந்தப் பாதகன் இப்படிச் செய்தானோ தெரியவில்லையே. உயிர் இருக்கிறது. (நன்றாய்ப் பார்த்து) ஆகா! எனக்கு உதவி செய்த உத்தமியான வஸந்தஸேனையைப் போல் இருக்கிறது. என் மனதின் பொய்த் தோற்றமோ! சீ இல்லை! இல்லை! அந்த மாதுசிரோன் மணியே இவள்! இங்கு வந்த காரணம் என்ன? அதோ திரும்புகிறாள்? கண்ணைத் திறக்கிறாள்!
(தண்ணீர் வேண்டும் என்று சைகை செய்கிறாள்)
சந் : (தனக்குள்) சமீபத்தில் நீரோடை இருக்கிறது. ஜலத்தை எப்படி எடுத்துக் கொண்டு வருகிறது? திருவோடு கூட என்னிடத்தில் கிடையாது; இதோ மாமரம் இருக்கிறது. அதன் இலைகளைத் தொன்னையாகத் தைத்து அதில் எடுத்து வருகிறேன்.
(போய் ஜலம் கொணர்ந்து அருந்துவித்து ஈரத் துணியால் முகத்தைத் துடைத்து அதனால் விசிறுகிறான்.)
வஸ : (எழுந்து) ஸ்வாமி நமஸ்காரம்! இந்த உதவி செய்த தங்களை ஈசுவரன் அவசியம் காப்பாற்றுவார்.
சந் : அம்மா! நான் யார் என்று உங்கள் நினைவிற்கு வரவில்லையா?
வஸ் : (யோசனை செய்து ) அடையாளம் தெரியவில்லையே! சொல்லுங்கள்.
சந் : முன்னொரு நாள் இரண்டு சூதாடிகளுக்குப் பத்து ரூபாய் கொடுத்து என்னை மீட்டது நினைவிற்கு வருகிறதா?
வஸ : ஆம், ஆம்! ஞாபகம் இருக்கிறது! அதற்குப் பின் காஷாயம் வாங்கிக் கொண்டாற் போல் இருக்கிறது!
சந்: ஆம். நீங்கள் இவ்விதம் இங்கிருக்க வேண்டிய காரணம் என்ன? எந்தப் பாதகன் இப்படிச் செய்தான்? விவரத்தைத் தெரிவிக்கலாமோ? .
வஸ : எனக்கு இப்பொழுது மிகவும் களைப்பாய் இருக்கிறது. எல்லாவற்றையும் என் வீட்டிற்குப் போய்ப் பிறகு தெரிவிக்கிறேன். தயவு செய்து என்னை என் வீட்டிற்கு கொண்டு போய்ச் சேர்த்தால் உமக்குப் பெருத்த புண்ணியம் உண்டாகும்.
சந் : அப்படியே செய்யலாம். மெதுவாக நடந்து வாருங்கள். அருகில் உள்ள நீரோடைக்கு முதலில் போய் ஜலம் அருந்தி மரத்தடியில் சிறிது உட்கார்ந்து சிரமப் பரிகாரம் செய்து கொள்ளுங்கள். மெதுவாக நடந்து இப்படி வாருங்கள்.
– தொடரும்…
– 1920களில் வெளிவந்த நாவல்.
– வஸந்த கோகிலம், முதற் பதிப்பு: 2006, ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை.