கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 7, 2024
பார்வையிட்டோர்: 302 
 
 

அங்கம் 2 – காட்சி 1 | அங்கம் 2 – காட்சி 2 | அங்கம் 2 – காட்சி 3

இடம் : மாதவராயருடைய மாளிகை.

காலம் : மறுநாள் காலை.

(வஸந்தஸேனை ஒரு சயனத்தில் நித்திரை செய்யத் தோழி அருகில் நிற்கிறாள்.)
தோழி : அம்மா பொழுது விடிந்து நெடுநேரமாய் விட் டதே! விழித்துக் கொண்டு பாருங்கள்.

வஸ : (கண்ணைத் துடைத்துக் கொண்டு விழிக்கிறாள்) ஆகா! இப்பொழுது தானே சயனித்துக் கொண்டேன். இதற்குள் பொழுது விடிந்து இவ்வளவு நேரமாகி விட்டதே! என்ன வெட்கக் கேடு! நான் இவ்வளவு நேரம் துயிலுவதைக் கண்ட நமது எஜமானர், என்னைப் பற்றி எவ்விதமான அபிப்பிராயம் கொண் டாரோ தெரியவில்லையே! அவர் தேகம் எப்படி இருக்கிறதோ தெரியவில்லையே! இரவில் அவரை மூர்ச்சை தெளிவித்துச் சயனத்தில் படுக்கச் செய்து நெடுநேரம் நான் அவருக்கு அருகில் சைத்தியோபசாரம் செய்து கொண்டிருந்தேன். நான் நிற்பதைப் பொறாமல், என்னையும் நித்திரை செய்யும்படி அனுப்பினார். அவரைத் திரும்பவும் பாராமல் நான் நெடுநேரம் தூங்கி விட் டேனே! நீ உடனே போய் அவர் விழித்துக் கொண்டாரா என்று பார்த்து விட்டு வா! (தோழி போகிறாள்)

வஸ : (தனக்குள்) ஆகா! என்ன இவருடைய மனோவுறுதி! இவர் ஏக பத்தினி விரதத்தைப் பூண்டவராக இருக்கிறாரே! இவர் மனதை நான் எப்படி மாற்றப் போகிறேன்? ஈசுவரா! திக்கற்ற ஏழையான எனக்கு நீர்தான் துணை இருந்து என் இச்சையைப் பூர்த்தி செய்விக்க வேண்டும். (தோழி வருகிறாள்)

தோழி: அம்மா! அவர் நம்முடைய நகரத்திய பூஞ்சோலைக்கு அருகில் இருக்கும் தன்னுடைய உத்தியான வனத்திற்குப் போய் விட்டார். நீங்கள் இரவில் அவருக்குச் செய்த உபசரணைகளுக்கு அவர் பெரிதும் நன்றி பாராட்டுகிறாராம். வெளியில் போகுமுன் உங்களுடன் தெரிவித்துப் போக நினைத்தாராம். நித்திரையில் இருந்த உங்களை எழுப்ப மனம் இல்லாதவராய்ப் போய் விட்டாராம். நீங்கள் அவரைப் பார்க்க விரும்பினால் தனது பெட்டி வண்டியில் வைத்து அவ்விடத்திற்கு அழைத்து வரும்படி தன்னுடைய வேலைக்காரனுக்குக் கட்டளை இட்டுப் போய் இருக்கிறாராம்.

வஸ : மிகவும் சந்தோஷம். அவருடைய தேஜோ மயமான அழகை நான் இன்னம் பூர்த்தியாக என் கண்ணாரப் பார்க்க வில்லை. இன்று என் கண்களுக்கு நல்ல விருந்து செய்கிறேன். இது எந்த இடம்? பொக்கிஷம் வைக்கும் இடத்தைப் போலக் காணப்படுகிறதே! ஆகா! அவர் என் பேரில் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார் மிகவும் அந்தரங்கமான இடத்தில் அல்லவோ நுழைந்து சயனித்துக் கொண்டிருக்கிறேன்.

தோழி : அந்தரங்கமான இடத்தில் மாத்திரம் அல்ல: ஒவ்வொருவருடைய ஹிருதயத்திற்குள்ளும் நுழைந்து விட்டீர்கள்!

வஸ: இல்லை, இல்லை. இவரைச் சேர்ந்தவர்கள் என் பேரில் கோபம் கொண்டிருப்பார்களோ என்னமோ தெரியவில்லை!

தோழி: அவர்களுக்கு இனிமேலேதான் ஒரு வேளை வருத்தம் உண்டாகும்.

வஸ : ஏன்?

தோழி : நீங்கள் புறப்பட்டுப் போவதினால்.

வஸ : ஆகா! அப்படியா! மற்றவர்களும் என்னை அவ்வளவு விரும்புகிறார்களா அதுவும் ஒரு பாக்கியந்தான். அவருடைய மனைவியாகிய உத்தமி என்னை இரவில் பார்த்த பொழுது, என்னிடத்தில் அன்பான முகத்தைக் காட்டி எனக்கு எவ்வளவு உபசாரம் செய்தார்கள். புருஷனுக்குத் தகுந்த மனைவியே! நற்குணமே நிறைந்த இவர்களை விட்டுப் பிரிந்து போக சகிக்கவில்லை. அடி ஸகி! இதோ இந்த வைர ஸரத்தை எடுத்துக் கொண்டு போய் என்னுடைய அரிய சகோதரியாகிய கோகிலத்தினிடம் சேர்ப்பித்து, நான் மாதவராயருடைய பணிப் பெண் என்றும், கோகிலத்தின் அடிமை என்றும் தெரிவித்து, இந்த மாலை எந்தக் கழுத்திற்கு உரியதோ அதை இந்த ஸரத்தால் அலங்கரித்துக் கொள்ள நான் வேண்டியதாய்க் கேட்டுக் கொள்.

தோழி : நமது எஜமானருக்கு இது திருப்தியாய் இராதே.

வஸ : அவர் என்மீது ஒருகாலும் வருத்தப்பட மாட்டார். நான் சொல்வதைச் சொல். .

தோழி : ஆக்ஞை! (போய்த் திரும்பி வருகிறாள்)

தோழி: அம்மணி ஸரத்தை வாங்கிக் கொள்ளவே மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள். தான் தன் கணவனையும் கற்பையுமே ஆபரணங்களாக மதிப்பதாகவும், இதைப் பற்றிச் சிறிதும் கவலைப் படவில்லை என்றும் சொல்லித் தடுத்தார்கள் நான் வற்புறுத்திக் கொடுத்து விட்டு வந்திருக்கிறேன். அதோ பார்த்தீர்களா நம்முடைய எஜமானரின் குழந்தை வருகிறார்!
(சிசுபாலன் என்னும் குழந்தை விசனத்துடன் வருகிறான். கோமளா ஒரு மண் வண்டியை இழுத்துக் கொண்டு வருகிறாள்)

கோம : குழந்தாய்! வண்டியில் உட்கார்ந்து கொள் நான் இழுக்கிறேன்.
குழந்தை : (கோபத்துடன்) எனக்கு இந்த வண்டி வேண்டாம் போ! அடுத்த வீட்டு வாஸுதேவன் பொன் வண்டி வைத்திருக்கிறான் எனக்கு மாத்திரம் மண் வண்டியோ! எனக்கு வேண்டாம் போ. (அழுகிறான்)

கோம : குழந்தை! அழாதே அப்பா! அடுத்த வீட்டுக்காரன் கோடீசுவரன். அவனுக்கு பொன் நிறைய இருக்கிறது. பொன் வண்டி செய்து கொடுத்திருக்கிறான். பொன்னுக்கு நாம் எங்கே போகிறது? உன்னுடைய தந்தை மறுபடியும் தனவந்தராகும் வரையில் பொறுத்துக் கொள். உடனே உனக்கும் பொன் வண்டி வாங்கிக் கொடுப்பார். அழாதே! வேண்டாம்! அதோ பார்; அங்கே யார் நிற்கிறார்கள் பார் அவர்களை உனக்குத் தெரியுமா?

குழ : (கோபத்தோடு) நான் பார்க்க மாட்டேன் போ.

வஸ : ஆகா! என்ன அழகு! யாரே அழகுக்கு அழகு செய்வார்? சரியான ஆடை ஆபரணங்கள் ஒன்றும் இல்லா விட்டா லும் இவனுடைய இயற்கை அழகும் முகவசீகரமும் யாருக்கு வரும்? (கைகளை நீட்டி) கண்ணே! இங்கே வா! (எடுத்து மடி யில் வைத்துக் கொண்டு முத்தமிடுகிறாள்) ஆகா! தன் பிதாவைப் போலவே இருக்கிறானே! குழந்தை எங்கே ஒரு முத்தங் கொடு.

குழ : (கோபத்தோடு) மாட்டேன் போ.
கோம : அவனுக்கு இப்பொழுது கோபவேளை; அடுத்த வீட்டு வாஸுதேவன் வைத்திருக்கும் பொன்வண்டியைப் போலத் தனக்கும் வேண்டுமாம். அதற்காக அழுகிறான். நான் செய்து கொடுத்த அந்த மண் வண்டி வேண்டாமாம்.

வஸ :பெற்றோரின் ஏழ்மையை குழந்தை எப்படி அறியப் போகிறது! கண்ணே! அழாதே; உனக்குப் பொன் வண்டி தானே வேண்டும்? நான் வாங்கித் தருகிறேன். எங்கே ஒரு முத்தங் கொடு.

குழ : அம்மா! இந்தம்மாள் யார்?

வஸ : நான் உன் பிதாவின் மேன்மைக் குணமான ஐசுவரியத்தினால் விலைக்கு வாங்கப்பட்ட பணிப்பெண்.

கோம : குழந்தை! இவர்களும் உன்னுடைய அம்மாள்தான்.

குழ : நீ பொய் சொல்லுகிறாய். என்னுடைய அம்மாளாய் இருந்தால், அழகான இத்தனை ஆடையாபரணம் இருக்காதே!

வஸ : ஆகா! நம்முடைய எஜமானர் செல்வாக்கில் இருந்ததை இவன் கண்டதில்லை அல்லவா! ஏழ்மை நிலைமையிலேயே பிறந்து வளர்ந்தவன். (தன்ஆபரணங்களை எல்லாம் கழற்றி விடுகிறாள்) இப்பொழுது பார்த்தாயா என்னை? இப்பொழுது உனக்கு நான் அம்மாளைப் போல இருக்கிறேனா? இந்த ஆபரணங்களை நீ எடுத்துக் கொண்டு போய் பொன் வண்டி வாங்கிக் கொள். (அவனை மார்பில் அனைத்து முத்தமிட்டு ஆனந்தக் கண்ணீர் விடுகிறாள்)

குழ: நீதான் நகைகளைக் கொடுக்கிறதற்காக அழுகிறாயே! எனக்கு வேண்டாம் போ!

வஸ : (கண்ணைத்துடைத்துக் கொண்டு) கண்ணே! பாக்கியமே! நான் அழவில்லை. நீ இவைகளை எடுத்துக் கொண்டு போய் பொன் வண்டி வாங்கிக் கொள். (நகைகளை வண்டியில் நிறப்புகிறாள்)

குழ: நீ இப்பொழுது கொடுப்பாய்; திரும்பக் கேட்பாய்; எனக்கு வேண்டாம்.

வஸ : நான் இனிமேல் கேட்கவே மாட்டேன். நிச்சயம்.

குழ : இந்த நகைகளால் வண்டி எப்படிச் செய்கிறது! என்னுடைய அம்மாள் கோபித்துக் கொள்வாள். எனக்கு வேண்டாம். நீயே எடுத்துக் கொள்.
வஸ : அம்மாள் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். இவைகளைத் தட்டானிடம் விற்று விட்டுப் பொன் வாங்கி வண்டி செய்து கொள்ளலாம். எடுத்துக் கொண்டு போ.

குழ : சரி; அப்படியானால் எடுத்துக் கொண்டு போகட்டுமா? நீ அழ மாட்டாயே. அழுதால் எனக்கு வேண்டாம்.

வஸ : ஆகா! பிதாவைப் போலப் பிறர் மனம் வருந்த சகியாதவன். – கண்ணே! நான் அழவில்லை. நீ எடுத்துக் கொண்டு போ! நான் மறுபடி வரும் போது நீ எனக்கு பொன் வண்டியைக் காட்ட வேண்டும்! காட்டுகிறாயா?

குழ : (சந்தோஷத்துடன்) காட்டுகிறேன். இதை அம்மாளிடம் காட்டப் போகிறேன்.

(ஆபரணங்களுடன் வண்டியை இழுத்துக் கொண்டு வேகமாய்ப் போய் விடுகிறான். கோமளாவும் அவனைத் தொடர்ந்து சென்று சற்று நேரத்தில் திரும்பி வருகிறாள்.)

கோம : அம்மா! வாசலில் குணசீலன் பெட்டி வண்டியைத் தயார் செய்து வைத்திருக்கிறான்.

ഖஸ : என்னுடைய உடைகளைச் சீர்திருத்திக் கொண்டு இதோ வந்து விட்டேன். (மறைவில் போகிறாள்)
(வீட்டு வாசலில் குணசீலன் வண்டியுடன் நிற்கிறான்)

குணசீலன் : (தனக்குள் அடாடா! வண்டிக்குள் போடும் மெத்தையைப் போட்டுக் கொண்டு வர மறந்து விட்டேன்; நல்ல வேளை; சமயத்தில் நினைவிற்கு வந்தது. எருதுகள் ஓடுவதற்குத் துடிக்கின்றன. வண்டியை நிறுத்தி விட்டுப் போக முடி யாது, என்னுடைய வீட்டிற்குப் *போய் மெத்தையைப் போட்டுக் கொண்டு இதோ வந்து விடுகிறேன். (வண்டியை ஓட்டிச் செல்கிறான்)
அந்த சமயத்தில் வீரசேனனுடைய வேலைக்காரன் பத்மநாபன் வேறொரு பெட்டி வண்டியை ஒட்டிக் கொண்டு மாதவராயருடைய வீட்டு வாசலிற்கு வருகிறான்.

பத்ம : (தனக்குள்) என்ன என்னுடைய முட்டாள்தனம்! எஜமான் அவசரமாகப் பூஞ்சோலைக்கு வண்டியைக் கொண்டு வரச் சொன்னதையே நினைத்துக் கொண்டிருந்தேன். வெற்றிலை புகையிலை எல்லாம் எடுத்துக் கொண்டு வர மறந்து விட்டேன். வாய்க்கு ஒன்றும் இல்லாமல் பித்துப் பிடித்த மாதிரி இருக்கிறது. கொஞ்சதூரத்தில் ஒரு கடைஇருந்ததைப் பார்த்தேன். இதோ மாதவராயருடைய மாளிகை இருக்கிறது. இதன் வாசலில் வண்டியை நிறுத்தி விட்டுக் கடைக்குப் போய் வருகிறேன்.
(வண்டியை மாதவராயர் வீட்டு வாசலில் நிறுத்தி விட்டுப் போகிறான். அந்த சமயத்தின் வஸந்தஸேனையும் கோமளாவும் அதற்கு அருகில் வருகிறார்கள்.)

கோம: அம்மா! இதோ வண்டி தயாராக நிற்கிறது, ஏறிக் கொள்ளுங்கள். (வண்டியின் கதவைத் திறக்கிறாள்)

வஸ: (ஏறிக் கொண்டு) சரி! நீ உள்ளே போ; நான் கதவை மூடிக் கொள்கிறேன். நகைகளைக் கொடுத்ததைப் பற்றி என் னுடைய சகோதரி கோபித்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள். அடி தோழி! நீ நம்முடைய வீட்டிற்குப் போய், நான் கூடிய சீக்கிரம் வருவதாகச் சொல்.

கோம : சரி! உத்தரவுப்படி செய்கிறேன். கதவை மூடிக் கொள்ளுங்கள்.
(வஸந்தஸேனை கதவை மூடிக் கொள்ள, கோமளா வீட்டிற்குள் போய் விடுகிறாள்.)
(பத்மநாபன் திரும்பி வருகிறான்)
(தனக்குள்) அப்பா இந்த வெற்றிலை போடா விட்டால் என் பாடு ஆபத்தாய் விடுகிறது! நான் கடைக்குப் போனதினால் கால தாமஸமாய் விட்டது. எஜமான் கோபித்துக் கொண்டு அடிக்க வருவான்; வேகமாய் ஓட்டலாம். (வண்டியில் ஏறிக் கொள்கிறான்)
(அந்த சமயத்தில் ஒருவன் அடியில் வருமாறு பறை சாற்றுகிறான்)

”துடும், துடும், துடும், துடும். சிறைச் சாலையில் விலங்கிடப் பட்டிருந்த பிரதாபன் என்னும் இடையன் காவற்காரனைக் கொன்று விட்டுத் தப்பி வெளியில் ஓடி வந்தவன் எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கிறான். அவனைக் காண்போர் உடனே பிடித்து, அரசனிடம் ஒப்புவித்தல் வேண்டியது. அப்படிச் செய்பவர்களுக்குப் பெருத்த வெகுமதி அளிக்கப்படும். துடும், துடும், துடும், துடும்.”

பத்ம : (தனக்குள் இங்கு என்னமோ பெருத்த குழப்பமாய் இருக்கிறது. இந்தப் பறையின் சத்தத்தைக் கேட்டு எருதுகள் பயந்து துடிக்கின்றன. நான் வேகமாய் வெளியில் போய் விடுவதே நல்லதே.

(வண்டியை ஓட்டிக் கொண்டு போய் விடுகிறான்)

(அறுபட்ட சங்கிலியுடன் பிரதாபன் ஓடி வருகிறான்)

பிரதா : (தனக்குள்) அப்பா இந்தச் சங்கிலியுடன் ஓடி வருவது எவ்வளவு கடினமாக இருக்கிறது! கொடுங்கோல் மன்னனாகிய இந்த அரசனுடைய சிறைச் சாலையில் இருந்து என்னை அந்தச் சசிமுகனே விடுத்தான்! அவன் அல்லவோ உண்மையான நண்பன்! இவ்வித அக்கிரமம் எந்தத் தேசத்தில் நடக்கும் எவனோ ஒரு ஜோஸியன் நான் அரசனாகப் போகிறேன் என்று சொல்லி விட்டானாம்! அதற்காக என்னைச் சிறையில் அடைத்து விடுவதாம்! நன்றாய் இருக்கிறது ஜோஸியன் சொல்லி விட்டால் அதற்கு நான் என்ன செய்வேன்? இது என் பேரில் எப்படி குற்றம் ஆகும்? நான் என் குடிசையில் சுயேச்சையாக இருந்தேன். இப்பொழுது காராக்கிரக வாசம் கிடைத்ததே; இதுதான் கை கண்ட பலன். நான் விதிவசத்தினால் அரசனானால் என் விதியை அல்லவோ சிறைச்சாலையில் அடைக்க வேண்டும். அல்லது இந்த தேசத்தரசன் தன் அரசை இழக்க நேர்ந்த தன்னுடைய தலைவிதியை நினைத்து அல்லவோ அழ வேண்டும். நல்ல காரியம் செய்தான்! நான் இப்பொழுது எங்கே ஒளிந்து கொள்கிறது என்னைத் துரத்திக் கொண்டு பின்னால் அநேகர் ஓடி வருகிறார்கள் இந்தப் பெருத்த மாளிகையின் வாசல் திறந்திருப்பது என்னை உள்ளே வரும்படி அழைப்பதைப் போல் இருக்கிறது. இதில் நுழைந்து கதவின் மூலையில் சற்று மறைந்து கொள்ளுகிறேன். துரத்திக்கொண்டு வருபவர் போய் விடட்டும்.

(மாதவராயருடைய வீட்டின் கதவு மூலையின் மறைந்து கொள்கிறான். சற்று நேரத்தில் குணசீலன் வாசலில் பெட்டி வண்டியுடன் வந்து நிற்கிறான்.)

குண : (உரக்கக் கூவி) கோமளா வண்டி வந்து விட்டது! வஸந்தஸேனை அம்மாளை வரச்சொல் நேரமாகிறது. எஜமானர் பங்களாவில் காத்துக் கொண்டிருப்பார்.

பிரதா : (தனக்குள்) சரி! நல்ல வேளைதான். இதோ இந்த மூடு பெட்டி வண்டி நமக்காகத்தான் கடவுளால் அனுப்பப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது. இதுவும் பாக்கியந்தான். நல்லது ஒரு காரியம் செய்கிறேன். இதில் யாரோ ஒரு ஸ்திரீ ஏறிக் கொண்டு ஊருக்கு வெளியில் இருக்கும் பங்களாவிற்குப் போகிறாள் போல் இருக்கிறது! நான் இதற்குள் ஏறி உட்கார்ந்து கொள்கிறேன். அவள் வந்து ஏறினால் என்னை ஊருக்கு வெளியில் கொண்டு போய் விடும்படி மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். (பிரதாபன் பின்புறமாக வண்டிக்குள் ஏறிக் கொள்கிறான். அவன் பேரில் இருந்த சங்கிலியின் ஓசையைக் கேட்ட குணசீலன், வஸந்தவேனை ஏறிக் கொண்டதாக நினைக்கிறான்.)

குண: (தனக்குள்) இந்த வஸந்தஸேனையின்பேரில் எத்தனை ஆபரணங்கள் கலீர் கலீர் என்னும் சப்தம் எவ்வளவு தூரம் கேட்கிறது! ஐசுவரியம் இருந்தால் என் பெண்சாதிக்குக்கூட உச்சி முதல் உள்ளங்கால் வரையில் நகைகளை மாட்டி விடுவேன். ஏழையாய் இருக்கும் நம்முடைய எஜமானருக்கு இது நல்ல காலந்தான். நல்ல கறவைப் பசு வந்து வலையில் அகப்பட்டது. சரி நேரமாகிறது, ஓட்டிக் கொண்டு போகிறேன்.

(வண்டியை ஓட்டிக் கொண்டு வேறொரு தெருவிற்கு வருகிறான். அங்கு காவற்காரர்களின் தலைவன் வீரகனும் சில காவற்காரர்களும் வருகிறார்கள்.)

வீரகன் : அடே! ஓடி வாருங்கள்! சீக்கிரம் ஓடி வாருங்கள்! அந்தத் துஷ்டன் எங்கே போன போதிலும் விடக்கூடாது. நீங்கள் கோட்டையின் நான்கு வாசல்களிற்கும் போய் வளைத்துக் கொள்ளுங்கள். அவன் எப்படி நகரை விட்டு வெளியில் போகிறான் பார்க்கலாம்.

(காவற்காரர்கள் போய் விடுகிறார்கள். இன்னொரு காவல் தலைவன் சந்தானகன் வேறு சிலருடன் இன்னொரு புறமாக வருகிறான்.)

சந்தா : ஓடுங்கள்! ஓடுங்கள்! நாம் இராஜ்யத்தை ஒரு நாளும் வேறொருவனுக்கு விடக்கூடாது. வீதிகள், தெருக்கள், சந்துக்கள், தோட்டங்கள் முதலிய எந்த இடத்தையும் பாக்கி விடாமல் தேடுங்கள். அவனைக் கண்டுபிடிப்பவனுக்கு நல்ல சன்மானமும் வாங்கித் தருகிறேன்.

வீர : அவன் தனியாக எப்படித் தப்பித்துக் கொண்டு போகக் கூடும். அவனுடைய யாராவது துணைவர் இருந்திருக்க வேண்டும்.

சந்தா : அவன் இராத்திரியே போயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இதற்குள் மாயமாய்ப் பறந்தா போய்விட்டான்.
(குணசீலன் வண்டியை ஓட்டிக் கொண்டு வருகிறான்)

சந்தா : ஆகா! அதோ ஒரு பெட்டி வண்டி போகிறதைப் பார்த்தாயா? அது யாருடையது; எங்கே போகிறதென்று விசாரி.

வீர : அடே! வண்டிக்காரா நிறுத்து. அது யாருடைய வண்டி? உள்ளே இருப்பது யார்? எங்கே ஒட்டிக் கொண்டு போகிறாய்?

குண : ஐயா! இது மாதவராயருடைய வண்டி! இதற்குள் வஸந்தஸேனை இருக்கிறாள். அவருடைய பங்களாவிற்கு அழைத்துப் போகிறேன்.

சந்தா : சரி! அப்படியானால் போகட்டும்.

வீர : என்ன! சோதனை செய்து பார்க்கலாமா?

சந்தா : ஏன் சோதனை செய்ய வேண்டும்?

வீர :என்ன நம்பிக்கையின் பேரில் விடுகிறது?

சந்தா :மாதவராயருடைய யோக்கியதையே போதுமான நம்பிக்கையல்லவோ அவர் சம்பந்தப்படும் விஷயத்தில் சந்தேகப்படலாமோ?

வீர : மாதவராயராவது, வஸந்தஸேனையாவது! நல்ல காரியம் செய்தாய்! நம்முடைய உத்தியோகம் சம்பந்தப்பட்ட வரையில் எவராயிருந்த போதிலும் நமக்கென்ன? நாம் கண்டிப்பாய் இருக்க வேண்டியதே நம்முடைய கடமை.

சந்தா : நல்ல கடமையைக் கண்டு விட்டாய்! மனுஷ்யாளுடைய யோக்கியதையைக் கூடப் பாராமலே நாம் நம் கட மையை நிறைவேற்றினால் தலைக்குக் கல் வந்து சேரும். அவருடைய பெருமை என்ன வஸந்தஸேனையின் மேன்மை என்ன அவர்கள் இருவரையும் அறியாதவர்கள் யார்? அவள் போகும் வண்டியை நாம் சோதனை செய்யவாவது! உனக்கு என்ன பைத்தியமோ அந்தக் காரியத்தை நான் செய்ய மாட் டேன். இராஜனுக்கு நீ மிகவும் வேண்டியவன். எது சம்பவித்த போதிலும் உனக்குப் பயமில்லை. நீயே வண்டிக்குள் சோதனை செய்.

வீர : அதென்ன அப்படிச் சொல்கிறாய்? இராஜனுக்கு நீ வேண்டியவனில்லையோ! நீயே வண்டிக்குள் பார்; இதில் ஏதாவது துன்பம் நேரிட்டால் அதற்கு நான் உத்தரவாதியாய் இருக்கிறேன். நீ அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.

சந்தா : அடே வண்டியை நிறுத்து!

பிரதா : (தனக்குள்) இதுவும் துரதிர்ஷ்டமா! ஆகா! இவ்வளவு பிரயாசைப்பட்டுத் தப்பித்து வந்ததும் பயனில்லாமல் போய் விடும் போல் இருக்கிறதே! என்னிடத்தில் ஒரு கத்திகூட இல்லையே! திரும்பவும் கைதியாகச் சிறைச்சாலையில் அடைப்பட்டிருப்பதைவிட உயிரை விடுவதே மேலானது. நல்லது வரட்டும். பீமசேனனைப் போல என் கைகளால் முஷ்டி யுத்தம் செய்கிறேன்.

(சந்தானகன் வண்டிக்குள் எட்டிப் பார்க்கிறான்)

பிரதா : (கைகூப்பி மெதுவான குரலில், ஐயோ! அபயம்! காப்பாற்ற வேண்டும் இப்பொழுது என்னுடைய உயிர் உம்முடைய கையில் இருக்கிறது.

சந்தா : பயப்பட வேண்டாம் அபயம் என்றவரை அவசியம் காப்பாற்ற வேண்டியது நமது கடமை அல்லவா! (தனக்குள்) புறாவானது இராஜாளிப் பட்சியினிடத்தில் தப்பித்து வேடனுடைய வலையில் விழுந்ததைப் போல இவன் இங்கே வந்து அகப்பட்டுக் கொண்டான். நல்ல வேளையாக வீரகன் என்னைப் பார்க்கத் தூண்டினான். இதுவும் தெய்வச் செயல்தான். (கதவை மூடி விட்டு விரகனிடம் வந்து வீரகா நான் பிரதாபனை – இல்லை – வஸந்தஸேனையைப் பார்த்தேன். வண்டிக்காரன் சொன்னது உண்மைதான். மாதவராயர் காத்திருப்பார்; வண்டியைத் தாமசப்படுத்தாமல் ஓட்டிக் கொண்டு போகட்டும்.

வீர : சந்தானகா! கோபித்துக் கொள்ளாதே; நீ சொல்லிய விதத்தில் இருந்து எனக்கு ஒருவித சந்தேகம் உதிக்கிறது.

சந்தா : என்ன சந்தேகம்?

வீர : வண்டியில் இருந்து நீ திரும்பிய போது உன் முகம் மாறுபட்டது. தவிர, முதலில் நீ பிரதாபன் என்றாய்; பிறகு அதை வஸந்தஸேனை என்று மாற்றினாய். நீ இதைச் சொன்ன பொழுது உன்னுடைய குரல் தடுமாறியது.

சந்தா : நன்றாய் இருக்கிறது! அதற்காகத்தான் நீயே போக வேண்டுமென்று முதலிலேயே சொன்னேன்! நாம் பிரதாபனைத் தேடுகிறபடியால் அவன் அகப்படவில்லை என்று சொல்ல ஆரம்பித்தேன்; இதில் சந்தேகமென்ன? பெட்டி வண்டிக்குள் தனியாய் இருந்த ஸ்திரீயை நான் பார்த்ததைப் பற்றி அவள் என்னைக் கடிந்து கொண்டாள். அதனால் என் முகம் மாறுபட்டிருக்கலாம்.

வீர : அப்படியானால் அவளை நான் ஒரு தரம் பார்க்கிறேன். அரசனுடைய கட்டளையை நிறைவேற்றும் நம்மைக் கோபித்துக் கொள்வதாவது நான் போகிறேன். என்ன செய்கிறாள் பார்க்கலாம்.

சந்தா : அடே முட்டாள்! நான் பார்த்தாய் விட்டதென்று சொல்லுகிறேன். நீ எதற்காகத் திரும்பவும் பார்க்கிறது? என்னை விட யோக்கியதையிலும், உண்மை பேசுவதிலும் நீ மேலானவனோ? என்னைப் பற்றி சந்தேகப்பட நீ யாரடா?

வீர : என்னைக் கேட்க நீ யாரடா? அடே வண்டிக்காரா! நிறுத்து. ஓட்டாதே; நான் வண்டியைப் பார்க்க வேண்டும்.

(வீரகன் வண்டிக்கு அருகில் போகிறான். சந்தானகன் அவனுடைய தலை மயிரைப் பிடித்து இழுத்துப் பின்புறமாகத் தள்ளி உதைக்கிறான்.)

வீர : (கோபத்துடன் எழுந்து) அடே இப்படிச் செய்ய உனக்கு அவ்வளவு துணிவா! இதோ இப்பொழுதே நான் இராஜனிடம் தெரிவித்து உன் சிரசை அடுத்த க்ஷணத்தில் வாங்கா விட்டால் நான் வீரகன் அல்ல. (போகிறான்)

சந்தா : சீக்கிரம் போடா! நாயே! நீ சொல்வதை யார் கேட்கப் போகிறார்கள்! நீ மிகவும் பெரிய மனுஷ்யன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயோ? (குணசீலனைப் பார்த்து வேகமாய் ஓட்டிக் கொண்டு போ; வேறு யாராவது தடுத்தால் வண்டியை வீரகனும் சந்தானகனும் சோதனை செய்தாய் விட்டது என்று தெரிவி. (வண்டியைத் திறந்து)
அம்ம வஸந்தஸேனை! நீங்கள் இந்த அடையாளத்தை வைத்துக் கொள்ளுங்கள். (தன் வாளைப் பிரதாபனிடம் கொடுக்கிறான்) (இரகசியமாக ஐயா! சந்தானகனை மறக்க மாட்டீர் என்று நினைக்கிறேன். இதைப் பிரியத்தினால் கேட்கிறேனே ஒழியப் பிரதி பலனாகக் கேட்கவில்லை.

பிரதா : என்பூர்வ புண்ணியத்தின் பலனே நீ இன்று எனக்கு உதவி செய்தாய். அந்த ஜோசியன் சொன்னது உண்மையானால் நீ எனக்கு உயிர் கொடுத்ததற்குத் தகுந்த கைம்மாறு அப்பொழுது செய்து விடுகிறேன்.

சந்தா : உமக்கு ஈசுவரன் உதவி செய்து உம்முடைய இடர்களை நீக்குவான். நேரமாகிறது நான் போகிறேன்.

(வண்டியை மூடிவிட்டு வண்டிக்காரனுக்குச் சைகை செய்ய, அவன் வண்டியை ஓட்டிக் கொண்டு போய் விடுகிறான்.)

சந்தா : (தனக்குள் வீரகன் இப்பொழுது இராஜனிடம் போகிறான். அவனுக்கு முன்னால் நான் போய் அவன் பேரில் குற்றம் சாட்டுகிறேன். (போய் விடுகிறான்)

– தொடரும்…

– 1920களில் வெளிவந்த நாவல்.

– வஸந்த கோகிலம், முதற் பதிப்பு: 2006, ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *