கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 7, 2024
பார்வையிட்டோர்: 840 
 
 

அங்கம் 1 – காட்சி 2 | அங்கம் 1 – காட்சி 3 | அங்கம் 1 – காட்சி 4

இடம் : மாதவராயருடைய மாளிகை.

காலம்: மறு நாள் இரவு.

குணசீலன் : (தனக்குள்) ஏழையாய் இருந்த போதிலும் யோக்கியதையும் நற்குணமுடைய எஜமானரிடத்தில் சேவகம் செய்வதே வேலைக்காரர்களுக்குப் பரம சந்தோஷம். அகங்காரமும் கடுகடுப்பும் உள்ளவனும், பணத்தைத் தவிர மற்ற எவ்விதமான யோக்கியதையும் இல்லாதவனுமான தலைவனிடத்தில் வேலை செய்வதைக் காட்டிலும் ஓயாத் துன்பம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை. எதை மாற்றினாலும் மாற்றலாம். பிறவிக் குணத்தை எப்படி மாற்ற முடியும்? நாம் எவ்வளவுதான் முயன்றாலும் பட்டி மாடு வயலில் நுழைந்து பயிரைத் தின்பதையும், பிறனுடைய மனைவியின் பேரில் மனத்தை வைப்பவன், குடிப்பவன் முதலியோரின் குணத்தை மாற்ற யாரால் முடியும்? இப்பொழுது நேரம் எவ்வளவு இருக்கலாம், நடு இரவாய் விட்டதே! இன்னும் எஜமானர் திரும்பி வரவில்லையே! பாட்டுக் கச்சேரி இன்னும் முடியவில்லையோ? எனக்கோ நித்திரை வருகிறது; அவர் வருமுன் தூங்குவதும் தவறு. அதோ கதவு தட்டுகிற சப்தம் கேட்கிறது. வந்து விட்டார்கள்.

(மாதவராயரும் ஸோமேசனும் சம்பாஷித்த வண்ணம் வருகிறார்கள்.)

மாத : ஸோமேசா! திலோத்தமா எவ்வளவு மாதுரியமாய்ப் பாடினாள் வீணையைப் போன்ற வாத்தியம் வேறு என்ன இருக்கிறது! ஆப்த நண்பர்களைப் போல, அது விசனத்தினால் வருந்தும் மனதிற்கு எவ்வளவு மகிழ்ச்சியைத் தருகிறது! அதைத் தேவர்களின் வாத்தியம் என்பதற்குத் தடையேயில்லை.

ஸோம : சங்கீதத்தின் இன்பத்தில் பொழுது போனதே தெரியவில்லை! ஆஹா எவ்வளவு நேரமாய் விட்டது! சந்திரன் அஸ்தமனமாகப் போகிறதே! நாய்கள் கூடக் குலைக்காமல் நித்திரை செய்கின்றனவே! நீங்கள் இனிமேலும் தாமதிக்காமல் சயனித்துக் கொள்ளுங்கள் அதிகம் கண் விழித்தால் உங்கள் தேகத்திற்குக் கெடுதலாய் முடியும்.

மாத : ஐயோ பாவம் நமக்காகக் குணசீலனும் நெடு நேரமாய் நித்திரை இல்லாமல் இருக்கிறான். (அன்போடு) அடே குணசீலா! நேரமாகிறது; நீ போய்ப் படுத்துக் கொள். கதவுகளை ஜாக்கிரதையாகப் பார்த்து மூடித் தாளிட்டு விட்டுப் படுத்துக் கொள்.

குண : ஸோமேசரே! இந்த நகை மூட்டையைப் பகலெல்லாம் நான் வைத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது உம்முடைய முறை. இதோ வாங்கிக் கொள்ளும். (கொடுக்கிறான்)
ஸோமே : நல்ல வேளையாய் இன்று பகல் ஜாக்கிரதையாய்க் கழிந்தது. இந்த இரவு எப்படிக் கழியப் போகிறதோ தெரியவில்லை. இந்த மங்களபுரத்தில் திருடர்கள் இல்லாமல் இருந்தால் இப்பொழுது எனக்கு இவ்வளவு கவலை இராது; நானும் நன்றாய்த் தூங்கலாம். இனி எனக்கு நித்திரை எங்கு வரப் போகிறது? போய்ப் படுத்துப் பார்க்கிறேன்.

மாத : மித்திரா! இது நம்பிக்கையின் பேரில் நம்மிடத்தில் வைக்கப்பட்டது. இது சொந்தக்காரரிடத்திற் போய்ச் சேரும் வரையில், இதை நாம் ஜாக்கிரதையாகக் காப்பாற்ற வேண்டும், பார்த்துக் கொள். (சயனித்துக் கொள்கிறார்)
(தனக்குள் ஆகா! அந்த சங்கீதம் இன்னமும் என் காதில் சப்தித்துக் கொண்டிருக்கிறதே! எவ்வளவு இனிமை (தூங்குகிறார்)

(ஸோமேசனும் வேறொரு பக்கத்திற் படுத்துத் துயிலும் பொழுது கனவு கண்டு உளறுகிறான்.)

ஸோமே : (தனக்குள் ஆகா! என்ன பாட்டு! நல்ல வீணை! திலோத்தமாவின் அழகே அழகு! திலோத்தமா! உன் தேகத்தில் உள்ள ஆபரணங்கள் பத்திரம்! திருடன்! திருடன்; பிடியுங்கள்! பிடியுங்கள்! ஆகா!! ஓட முடியவில்லையே? கால் பூமியை விட்டுக் கிளம்பவில்லையே! (சற்று மெளனம்)

(சசிமுகன் என்னும் திருடன் கையிற் கன்னக் கோலுடன் மெதுவாக மார்பினால் நகர்ந்துகொண்டு வருகிறான்.)
(தனக்குள் மெதுவாக) அப்பா தோட்டத்தின் சுவரைத் தாண்டி உள்ளே வந்து சேர்ந்தேன். (மேலே பார்த்து)
சரி! சந்திரன் அஸ்தமனமாகும் சமயத்தில் இருக்கிறது; இதுவும் அதிர்ஷ்டந்தான்! சந்திரனும் திருடருக்கு அனுகூலமானவன்தான்! என்னைப் போன்ற புண்ணியவான்களுக்கு இரவானது இருளைக் கொடுத்து உதவுவதைப் போல, ஒரு தாய் கூடத் தன் குழந்தைக்கு உதவி செய்ய மாட்டாள். தோட்டத்திற்குள் வந்தது ஒரு பெரிய காரியம் அல்ல. இனி இந்த மாளிகைக்குள் நுழைவதே அருமையான விஷயம். பிறர் தூங்கும் பொழுது ஜெயம் பெறுவதும், தந்திரத்தினால் பொருளை அபகரிப்பதுமான இந்த உத்தியோகத்தைக் கெட்ட தொழில் என்று ஜனங்கள் சொல்லுகிறார்களே! முட்டாள் ஜனங்கள்! இது அவ்வளவு வீரத் தனமல்ல என்றாலும் பிறருக்கு அடிமைத் தொழில் செய்யாமல் சுவதந்திரத்தோடு இருக்கக் கூடிய அலுவல் என்பதைப் பற்றி சந்தேகமில்லை. பாரத யுத்தத்தில் இரவில் தூங்கிக் கொண்டிருந்த பகைவரை அசுவத்தாமன் இரகசியமாகப் போய்க் கொன்று வெற்றி அடையவில்லையோ! ஆகையால் இது குற்றமாகாது. (நாற்புறங்களையும் உற்று நோக்கி) எங்கே கன்னம் வைக்கலாம்! எங்கே துளை போட லாம்! ஈரத்தினால் எந்த இடம் தளர்ந்து உப்புப் பூத்திருக்கிறதோ பார்க்கலாம். மனிதர் சமீபத்தில் இல்லாத இடமாக இருக்க வேண்டும். கல், மண் முதலியவை விழுவதின் ஒசை ஒருவருக்கும் காதிற்படக் கூடாது. (சுவற்றைத் தடவிப் பார்க்கிறான்.)

பேஷ் இதுதான் சரியான இடம்! இங்கு உப்பறித்திருக்கிறது! அதோடு ஒரு எலி வளையும் இருக்கிறது! இது நல்ல சகுனந்தான். சொத்து நிச்சயமாய் அகப்படும்; தடையில்லை. கன்னம் வைப்பதில் நான்கு வகைகளுண்டு. சுட்ட செங்கல்லைப் பெயர்த் தெடுப்பது, சுடாத கற்சுவரைக் கடற்பாறையால் தோண்டுவது, மண் சுவராய் இருந்தால் தண்ணிர் விட்டுத் தோண்டுவது, மரப் பலகை உட்புறத்தில் வைக்கப்பட்ட சுவராய் இருந்தால், அதை வாளினால் அறுப்பது, இது சுட்ட செங்கற் சுவர். கற்களை ஒவ்வொன்றாய் பெயர்த்து எடுத்து விடுகிறேன். இதில் என்னுடைய சாமர்த்தியத்தைக் காட்டுகிறேன். துளையைத் தாமரைப் புஷ்பத்தைப் போலச் செய்யலாமா? அல்லது பூரண சந்திரனைப் போலச் செய்யலாமா? இல்லாவிட்டால் தண்ணீர்ப் பானையைப் போலச் செய்யலாமா? இதைப் பார்த்து விட்டு வீட்டுக்காரர்கள் மூக்கில் கையை வைத்து ஆச்சரியப்பட வேண்டும். திருடப் போனாலும் பிராம்மணன் சாஸ்திரப்படியும் புத்திசாலித்தனமாயும் தன் வேலையைச் செய்வான் என்று இதைக் காண்போர் சொல்ல வேண்டும் நான் உள்ளே போய்த் திருடிக் கொண்டு வெளியில் வருகிற வரையில் அந்தக் கந்தனே என்னைக் காப்பாற்ற வேண்டும்! (கை குவித்து) ஊர்த் தெய்வங்களை எல்லாம் வணங்குகிறேன். எனக்கு இந்த அருமையான வித்தையைக் கற்றுக் கொடுத்தவரான குருவின் பாதமே துணை! அவர்தாம் எனக்கு இந்த மாத்திரைக் கோலை கொடுத்தவர். இதை வைத்துக் கொண்டு போனால் என்னை எவரும் பிடிக்க முடியாதாம். சே! என்ன வெட்கக்கேடு? அளப்பதற்குத் தேவையான நூலை எடுத்துக் கொண்டுவர மறந்து விட்டேனே! (யோசித்து நல்ல வேளையாய்ப் பிராம்மணன் ஜாதியிற் பிறந்தேன். என்னுடைய பூணுலை நான் இத்தனை வருஷமாய்த் தூக்கிச் சுமந்ததற்கு இந்தச் சமயத்திற்குத்தான் அது உபயோகப்படப் போகிறது. என்னைப் போன்ற உத்தமப் பிராம்மணருக்குப் பூணூல் இல்லாவிட்டால் என்ன யோக்கியதை இருக்கிறது. சுவற்றின் உயரம், கனம் முதலியவை எவ்வளவு இருக்கின்றன என்பதை சுலபத்தில் இதனால் அறிந்து கொள்ளலாம். காப்பு முதலிய கெட்டியான நகைகளை இழுத்து விலக்குவதற்கும், துளைக்குள் விட்டுத் தாழ்ப்பாளைத் திறப்பதற்கும், பாம்பு கடித்து விட் டால் விஷம் ஏறாமல் உடனே இறுகக் கட்டுவதற்கும் இதைப் போல உதவி செய்யக் கூடிய சமய சஞ்சீவி வேறு என்ன இருக்கிறது?

(பூணூலால் சுவரை அளக்கிறான்)

சரி இன்னும் ஒரே செங்கல் மிகுதி இருக்கிறது! இதோ எடுத்து விட்டேன். (உள்ளே பார்க்கிறான்) ஒரே விளக்கு மங்கலாய் எரிகிறது. அதைப் பற்றிக் கவலையில்லை. உள்ளே போகிறேன். என்னைப் பாதுகாக்க அந்தக் கார்த்திகேயன் இருக்க எனக்கு என்ன கவலை?

(உள்ளே நுழைகிறான்)

யாரோ இரண்டு மனிதர் தூங்குகிறார்கள். நானோ ஒருவன். தப்பித்துக் கொண்டு வெளியில் ஓடுவதற்கு அநுகூலமாக முதலில் வெளிக் கதவைத் திறந்து வைக்கிறேன். (கதவைத் திறக்கிறான்) அடாடா! கோமுட்டி வீட்டுக் கதவைப் போல் கிரீச் என்று ஓசை செய்கிறதே! இதற்கு என்னிடத்திலா மருந்தில்லை! இரும்பு துருப்பிடித்திருக்கும் இடத்தில் கொஞ்சம் தண்ணிரை விட்டால் சப்தம் இல்லாமல் போகிறது. (எதிரில் இருந்த தண்ணீரில் கொஞ்சம் எடுத்து விடுகிறான்) சரி இப்பொழுது சரியாய்ப் போய்விட்டது இவர்கள் உண்மையில் நித்திரை செய்கிறார்களா அல்லது பாசாங்கு செய்கிறார்களா என்று பரீட்சை செய்து பார்க்கிறேன். இவர்கள் குறட்டை விட்டு தூங்குகிறார்கள். மூச்சை அவசரம் இல்லாமல் ஒழுங்காய் விடுகிறார்கள். கண்களை இறுக மூடிக் கொள்கிறார்கள். உடம்பு சோர்ந்து கிடக்கிறது, கணுக்கள் எல்லாம் தளர்ந்திருக்கின்றன. (நெருப்புக் குச்சியைக் கிழித்து அவர்களின் முகத்திற்கு நேரில் பிடிக்கிறான்) பொய்த் தூக்கமாய் இருந்தால் வெளிச்சம் முகத்தில் பட்டவுடன் அதைப் பொறுக்கக் கூடாமையால், முகத்தில் சலனம் உண்டாகும். கண்களிலும் அசைவுண்டாகும். சரி. இவர்கள் நன்றாய் நித்திரை செய்கிறார்கள் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் சந்தேகம் இல்லை. எல்லாம் சரியாய் இருக்கிறது! இதென்ன தம்புரு, வீணை, புஸ்தகங்கள் முதலியவை இருக்கின்றனவே! இது தாசியின் வீடோ அல்லது பாடகன் வீடோ தெரியவில்லை. இதை ஒரு பிரபுவின் வீடென்று நினைத்தல்லவோ மதிமோசம் போய் இதற்குள் நுழைந்து விட்டேன். இல்லாவிட்டால் வேறு எங்கேயாயினும் போயிருப்பேனே! விடியா மூதேவிக்கு வேலை அகப்பட்டாலும் கூலி அகப்படுவதில்லை என்பதைப் போலாயிற்றே என்னுடைய பிழைப்பு. இது வாஸ்தவத்தில் ஏழ்மைத் தனமா? அல்லது வெளி வேஷமா அல்லது திருடனுக்காவது அரசனுக்காவது பயந்து தன் சொத்தை எல்லாம் ஒளித்து வைத்திருக்கிறானோ தெரியவில்லையே! பூமிக்குள் புதைத்து வைத்திருப்பானோ? இந்த மணிகளைக் கீழே உருட்டிப் பார்த்தால் மேடு பள்ளம் இருப்பதும், சமமாய் இருப்பதும் தெரியும். அதனால் பூமி வீடு கட்டப்பட்ட பிறகு தோண்டப் பட்டதா என்பது நன்றாய்த் தெரியும். (உருட்டுகிறான்) சீ! இவன் நித்திய தரித்திரன்! இங்கே ஒன்றும் அகப்படாது! இவ்வளவு வீண் பாடுதான். வேறு எங்கேயாவது போகிறேன். (போக ஆரம்பிக்கிறான்)

ஸோமே : (கனவு கண்டு தானே உளறுகிறான்) ஒ மாதவராயரே! திருடர்கள் கன்னம் வைக்கிறார்கள் நகை மூட்டையைத் திருட வருகிறார்கள்! இதோ இந்த மூட்டையை நீரே வைத்துக் கொள்ளும்.

சசிமுகன் : (திடுக்கிட்டு) உண்மையில் விழித்துக் கொண்டானோ? என்னைப் பார்த்து விட்டானோ? ஒன்றுந் தெரியவில்லையே! இது மாதவராயருடைய வீடா தான் மிகுந்த ஏழை என்பதை எனக்குத் தெரிவிக்க இவ்விதமாகப் பரிகாசம் செய்து இடித்துக் காட்டுகிறானோ? (நெருங்கிப் பார்க்கிறான்) இல்லை. இல்லை. இவன் கனவு காண்கிறான் போல் இருக்கிறது. இவன் தலையின் கீழ் ஏதோ ஒரு துணி மூட்டை இருக்கிறது! சே! ஏற்கெனவே பரம தரித்திர நிலைமையில் இருக்கும் இவனுடைய சொத்தைத் திருடி இவனை மேலும் வருத்துவது பாவம். வேறு எங்கேயாவது போகிறேன். (போக ஆரம்பிக்கிறான்)

ஸோமே : ஐயா! நீர் இதை உடனே எடுத்துக் கொள்ளும். இல்லாவிட்டால் இது போய்விடும். பிறகு என்னைக் கேட்கக் கூடாது.

சசி: மிகவும் அந்தரங்க விசுவாசத்துடன் இவ்வளவு வேண்டிக் கொள்ளும் இவனுடைய வார்த்தையை மரியாதை படுத்தாமல் நான் எப்படி மறுத்துப் போகிறது? நான் இந்தக் காணிக்கையை அவசியம் பெற்றுக் கொண்டு இந்தப் பரம பக்தனை இரட்சிக்க வேண்டும். இந்த விளக்கின் வெளிச்சம் நம்மை ஒருவேளை காட்டிக் கொடுத்துவிடும். ஆனால் விளக்கு இவர்களுக்கு அருகில் இருக்கிறது. இந்தச் சிமிழில் அடைத்துக் கொணர்ந்திருக்கும் விட்டிற் பூச்சிகளை இதோ பறக்க விடுகிறேன். (பூச்சிகளைப் பறக்க விடுகிறான்) பலே! அதோ விளக்கின் அருகில் போய்விட்டன! உம் ஆகட்டும் சீக்கிரம், பலே! அதோ அணைத்து விட்டன! என்ன இருள்! என்னுடைய உயர் குலத்தின் பிரகாசம் இந்தக் கேவலத் தொழிலினால் எப்படி மழுங்கிற்றோ அப்படி அல்லவோ இருள் மூடிக் கொண்டது. நான் பிராம்மணனுடைய புத்திரன். நான்கு வேதங்களையும் படித்தவன். பிறரிடத்தில் நான் என்ன நிலைமைக்கு வந்து சேர்ந்தேன்! என்ன தொழிலில் அமர்ந்தேன்! மல்லிகாவை எப்படியாவது நான் அடைய வேண்டும் என்னும் ஆசை அல்லவோ என்னை இப்படித் தூண்டுகிறது. என்ன செய்கிறது! இதெல்லாம் பூர்வஜென்ம வாசனை! இது தவறென்று தெரிகிறது. என் மனது இதைச் செய்யக் கூடாது என்று தடுத்த வண்ணமிருக்கிறது. தேகம் மாத்திரம் தானாக இவைகளைச் செய்து கொண்டே போகிறது! அதைத் தடுக்க என்னால் முடியவில்லையே. ஆகா! இந்த பிராம்மணன் நமக்கு எவ்வளவு மரியாதை செய்து நம்மை உபசரிக்கிறான்! வேதங்களைப் படித்த திருடன் சம்பாதனை இல்லாமல் வெறுங் கையனாய்த் திரும்பக் கூடாதென்னும் நல்ல எண்ணம்! என்ன இவனுடைய மேன்மைக் குணம்! (அருகில் போகிறான்)

ஸோமே : (அரைத் துக்கத்தில் திருடனுடைய கையைப் பிடித்துக் கொண்டு) நண்பரே! என்ன உம்முடைய கை இவ்வளவு குளிர்ச்சியாய் இருக்கிறது?

சசி : (தனக்குள்) சே! நான் சுத்த முட்டாள் தண்ணீரில் கையை வைத்ததினால் என் கை குளிர்ந்திருப்பதை மறந்து விட்டேன். (கைகளை ஒன்றோடு ஒன்றைத் தேய்த்துச் சூடு உண்டாக்கிக் கொண்டு நகை மூட்டையை எடுக்கிறான்.)

ஸோமே : (அரை நித்திரையில்) மூட்டையை எடுத்துக் கொண்டீரா? .

சசி : (தனக்குள்) ஆகா இந்தப் பிராம்மணோத்தமரின் உபகாரத்தை என்ன என்று சொல்வேன்! (உரக்க) ஆம்! எடுத்துக் கொண்டேன்.

ஸோமே : (தித்திரை மயக்கத்தில்) அப்பா கவலை ஒழிந்தது! இனி நன்றாய்த் துங்குகிறேன். (தூங்குகிறான்)

சசி : (தனக்குள்) பிராம்மணோத்தமரே! தூங்கும்! இப்படியே நூறு வருஷம் எழுந்திருக்காமல் நன்றாய்த்துங்கும். சரி! எனக்கு நேரமாகிறது. இந்த மூட்டையை வஸந்தஸேனையின் வீட்டிற்குக் கொண்டு போய் மல்லிகாவின் கிரயத்தைக் கொடுத்து அவளுடைய அடிமைத் தன்மையை நீக்கி அவளை மீட்டுக் கொண்டு போகிறேன். (திடுக்கிட்டு) இதென்ன காலடியோசை கேட்கிறதே! யார் வருகிறார்கள்? அதோ யாரோ ஒருவன் வருகிறான். அவன் கூச்சலிடுமுன் அவனைக் குத்திக் கொன்று விடுகிறேன். (கோமளா வருகிறாள்)

கோமளா : (தனக்குள்) இதென்ன ஓசை இது திருடனாய் இருக்குமோ! எங்கும் இருளாய் இருக்கிறதே விளக்கை ஏற்றுகிறேன். (விளக்கை ஏற்றுகிறாள்)

சசி : (தனக்குள்) இவள் யாரோ ஒரு ஸ்திரீயல்லவோ சே! இவளைக் குத்தக் கூடாது! என் வேலை முடிந்து விட்டது. மெதுவாகப் போய் விடுகிறேன். (மறைந்து விடுகிறான்)

கோமளா : கூ! கூ! திருடன்! திருடன்! வாருங்கள் திருடன்! திருடன்! ஒடுகிறான்! ஒடுகிறான்!

ஸோமே : (திடுக்கிட்டு எழுந்து) என்ன அது! என்ன அது! கோமளா! ஏன் அப்படிக் கூச்சலிடுகிறாய்?

கோமளா : திருடன்! திருடன்! வாரும்! வாரும்!

ஸோமே : திருடனாவது இங்கு வருவதாவது! என்ன கனவோ?

கோமளா: இல்லையில்லை! இதோ பாரும் வாசற்கதவு திறந்திருக்கிறது!

மாதவ : ஸோமேசா! இதென்ன இங்கே இவ்வளவு கூச்சல்!

ஸோமே : திருடன் வந்துவிட்டுப் போயிருக்கிறான்!

மாத: எப்படி உள்ளே வந்தான்?

ஸோமே : இதோ பாருங்கள் துவாரத்தை!

மாத : ஆகா! இந்தத் துளை எவ்வளவு அழகாய் இருக்கிறது! திருடன் மிகவும் சாமர்த்தியசாலியாய் இருக்கிறானே!

ஸோமே : நல்ல இடம் பார்த்துத் திருட வந்தான் முட்டாள்!

மாத : இவன் இந்த ஊர்த் திருடனாய் இருக்க மாட்டான். இவன் அந்நிய தேசத்தான். இந்த வீட்டின் வெளித் தோற்றத்தைக் கண்டு ஏமாந்து நுழைந்திருக்கிறான். நான் ஏழ்மை நிலையில் இருக்கிறேன் என்பது இந்த ஊரில் யாருக்குத்தான் தெரியாது! திருட்டிலும் அதிர்ஷ்டம் வேண்டும். நான் நல்ல ஸ்திதியில் இருந்த பொழுது இவன் திருட வந்திருக்கக் கூடாதா! இவன் சிரமத்திற்கு ஏதாவது பொருள் கிடைத்திருக்குமே! இவன் தன்னுடைய நண்பரிடத்தில் என்னை இகழ்ந்தல்லவோ பேசுவான். ”இவ்வளவு இடம்பமாக வீடு கட்டிக் கொண்டிருக்கிறான். உள்ளே ஓட்டைச் சட்டிக்கும் வழி இல்லை” என்று சொல்லுவானே!

ஸோமே : ஐயோ பாவம்! அவன் இவ்வளவு பாடுபட்ட தும் வீணாய்ப் போயிற்றே என்று விசனப்படுகிறீர்களே! நான் உங்களிடம் கொடுத்த வஸந்தஸேனையின் நகை மூட்டையில் தாம்பூலம் வைத்து அவனுக்குத் தத்தங் செய்து விடுகிறது தானே!

மாத : நகை மூட்டையை என்னிடத்தில் கொடுத்தாயா? என்ன விளையாடுகிறாய்?

ஸோமே : (சந்தோஷமாக) நல்ல வேளை! நான் அதை உங்களிடம் கொடுக்காமல் இருந்தால், அதை அடித்துக் கொண்டு போயிருப்பான். எருமைக் கடாவைப் போல நான் தூங்கி விட்டேன் என்று சொல்லுவீர்கள்; தப்பினேன்.

மாத : என்ன ஸோமேசா? இன்னமும் தூக்கக் கலக்கமா? இதுதானா பரிஹாஸம் பண்ணும் சமயம்? நகை மூட்டை ஜாக்கிரதையாய் இருக்கிறது அல்லவா? என் மனதிற் கவலை உண்டாய் விட்டது. ஹாஸ்யம் செய்யாமல் உண்மையாய்ப் பேசு.

ஸோமே : இதென்ன ஆச்சரியம்! நீங்கள் தான் பரிஹாஸம் செய்கிறீர்கள்! வீணில் என்னோடு வாக்குவாதம் செய்யாமல் நகை மூட்டை இருக்கிறதா என்று முதலிற் பாருங்கள்.

மாத : நீ என்னிடத்தில் எப்பொழுது கொடுத்தாய்?

ஸோமே : உங்கள் கை குளிர்ச்சியாய் இருக்கிறதென்று சொல்லிக் கொண்டே சற்று முன்பாகக் கொடுத்தேனே!

மாத : (தனக்குள்) ஓகோ! அப்படித்தான் இருக்க வேண் டும் (நான்கு பக்கங்களையும் சுற்றிப் பார்த்து) மித்திரா! உன்னுடைய உபகாரத்தை நான் மறக்கவே மாட்டேன்.

ஸோமே : ஆபத்து சமயம் என்பதை அறிந்து மூட்டையை உங்களிடத்தில் கொடுத்தேன். இது ஒரு உபகாரமா?

மாத : நீ செய்தது உபகாரமல்ல. ”தரித்திரன் வீட்டிற்குள் நுழைந்தேனே, ஒன்றும் அகப்படவில்லையே” என்று திருடன் என்னைத் துஷிக்காமல் இருக்கச் செய்தாயே! அதுதான் உதவி! (யோசனை செய்கிறார்)

ஸோமே : என்ன ஆச்சரியம்? மூட்டை திருட்டா போய் விட்டது! எப்படிப் போயிற்று? நம்மை நம்பி அவள் நம்மிடத்தில் ஒப்புவித்தாளே!

மாத : (பெரிதும் விசனத்துடன்) ஆஹா! நம்பிக்கை மோசம் செய்து விட்டேனே! அவள் வந்து கேட்டால் என்ன சொல்வேன்? ஈவரா! (மூர்ச்சிக்கிறார்)

ஸோமே : ஸ்வாமி! வருத்தப்பட வேண்டாம். நகைகளைத் திருடன் கொண்டுபோய்விட்டால் அதற்கு நாமென்ன செய்கிறது? இதைப் பற்றி நீங்கள் இவ்வளவு விசனப்படுவானேன்?

மாத : அடே மித்திரா! திருட்டுப் போய் விட்டதென்று சொன்னால் என்னை யார் நம்புவார்கள்! எனக்கு என்னமோ பெருத்த துன்பம் சம்பவிக்கப் போகிறது! தரித்திரனிடத்தில் சந்தேகம் உதிப்பதே இந்த உலக இயற்கை. இதுவரையில் நான் ஏழ்மைத் தன்மையினால் வருந்தி இருந்தேன்! இப்பொழுது என்னுடைய பரவிய கீர்த்திக்கும் அழிவு காலம் வந்துவிட்டதே!

விருத்தம்: முகாரி
போனதோ பெருமை யின்று! புகழெலா மழியக்கால
மானதோ! பொருளிலான் சொல் யாவரே மதிப்பர்? தீமை
யானதோ புரிந்தே னிந்த அலக்கணிற் கருக னாத
லேனிதோ முன்னாட் டீமை? எங்ஙணம் பொறுப்பே னேழை.

ஐயோ! தெய்வமே! என்ன செய்யப் போகிறேன்?

ஸோமே : இதைப் பற்றி உங்களுக்குக் கொஞ்சமும் கவலை வேண்டுவதில்லை. அவள் நம்மிடத்தில் ஒப்புவித்ததை பார்த்தவர் யார்? அதற்கு ஸாஷியும் இல்லை ஒன்றும் இல்லை. நம்மிடத்திற் கொடுக்கவில்லை என்று நான் சொல்லி விடுகிறேன். நீங்கள் பயப்பட வேண்டாம்.

மாத : (செவிகளை மூடிக் கொண்டு) ஆகா!
விருத்தம்: மோகனம்
என்னசொன் மொழிந்தாய் என்னுயி ரழிந்திட்டாலும்
இன்னமு மனைத்து நீங்க இழிதக வெய்திட்டாலும்
முன்னுள துறக்க மென்னு முயர்கதி மொழிந்திட்டாலும்
சொன்னசொன் மறுப்பதுண்டா? உன்னலும் பாவ மன்றோ!

எத்தகைய பாவ மொழிகளைச் சொல்லுகிறாய்! இவ்விதம் பொய் சொல்ல நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன். இதனால் என் உயிர் போனாலும் கவலையில்லை. வீடு வீடாய்ப் பிச்சை எடுத்தாயினும் இந்தக் கடனைத் தீர்ப்பேனே யொழியப் பிறரை நான் இவ்விதம் ஒரு நாளும் வஞ்சிக்க மாட்டேன்.

(பெருத்த விசனத்துடன் ஒரு புறமாகப் போய் விடுகிறார்)

ஸோமே : (ஒரு புறமாக) ஐயோ! என்ன ஆபத்து வந்து விட்டது! பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பது சரியாய்ப் போய் விட்டதே! அதோ யார் வருகிறார்கள்? ஓகோ! எஜமானி அம்மாள் வருகிறார்கள் (கோகிலமும் கோமளாவும் வருகிறார்கள்)

கோகி : அடி கோமளா! என் பிராணபதி எங்கிருக்கிறார்? அவருடைய திருமேனிக்கு யாதொரு துன்பமும் சம்பவிக்கவில்லையே! அவர் செளக்கியந்தானே? அவருடைய நண்பர் ஸோமேசருக்கு யாதொரு கெடுதலுமில்லையே?

கோமளா : தாயே! இருவரும் க்ஷேமமே! ஆனால் தாசியினால் ஒப்புவிக்கப்பட்டிருந்த நகை மூட்டை மாத்திரம் திருட்டுப் போய்விட்டது.

கோகி : ஆகா! என்ன ஆச்சரியம்! நகை மூட்டை போய் விட்டதா அவர் தேகத்திற்கு யாதொரு விபத்துமில்லாமல், தப்பித்ததுகூட எனக்கு சந்தோஷமாகத் தோன்றவில்லையே. பிராணனிலும் மானம் அல்லவோ பெரிது! அவருக்கு இதனால் பெருத்த அபவாதம் வந்து விடுமே தன் ஏழ்மைத் தனத்தினால், நகைகளை அவரே எடுத்துக் கொண்டதாய் அல்லவா ஜனங்கள் நினைப்பார்கள். பொழுது விடிந்ததும் இந்த அபவாத மொழியைக் கேட்பதைவிட இப்பொழுதே நாங்கள் இருவரும் நாவைப் பிடுங்கிக் கொண்டு உயிரை விடுவதே நல்லது (சிறிது யோசனை செய்கிறாள்) ஓகோ! இதோ என் கழுத்தில் ஒரு வைர ஸரம் மிகுதியாய் இருக்கிறது. என்னுடைய ஆபரணங்கள் எல்லாம் போயும், இது விலை மதிப்பற்றது என்று இதை மாத்திரம் விலக்காமல் வைத்திருக்கிறேன். திருட்டுப் போன நகைகளுக்குப் பதிலாக இதைக் கொடுத்து விடுகிறேன். அதோ ஸோமேசர் நிற்கிறார்! அவர் மூலமாக இதை அனுப்புகிறேன்! ஓய்! ஸோமேசரே! நம்முடைய எஜமானர் எங்கிருக்கிறார்?

ஸோமே : அம்மணி! அவர் சகிக்க முடியாத விசனத்துடன் தன் சயன அறைக்குப் போய்விட்டார்.

கோகி : (தனக்குள்) தன் வாலின் மயிரில் ஒன்று முள்ளில் மாட்டிக் கொண்டாலும், அந்த அவமானத்தைப் பொறுக்க முடி யாமல், அதன் பொருட்டு உயிரை விடும் கவரி மான் அல்லவோ என் பிராண காந்தர்! அவர் என்ன செய்து கொள்வாரோ தெரியவில்லை. நான் நேரில் அவரிடம் போய் இந்த வைர சரத்தைக் கொடுத்தால் அவர் வாங்கிக் கொள்ள மாட்டார். (உரக்க) ஸோமேசரே! நாம் பேசாமல் இருந்தால் நம்முடைய எஜமானர் தன் உயிருக்கு ஹானி தேடிக் கொள்வார். ஆகையால் உடனே இந்த வைர ஸரத்தை அவரிடத்திற் கொண்டு போய்க் கொடுத்துத் திருட்டுப் போன நகைகளுக்குப் பதிலாக இதை அனுப்பச் சொல்லும். இதை அவர் எப்படியாவது ஏற்றுக் கொள்ளும்படி செய்யும்.

ஸோமே : (சந்தோஷத்தோடு வங்கிக் கொண்டு) அப்படியே ஆகட்டும். (கோகிலமும் கோமளாவும் போய் விடுகிறார்கள்)

மாத :(தனக்குள்) (பாதிமதிநதி போதுமணிசடை – என்ற திருப்புகழின் மெட்டு)

  1. பூமி நிறைபல தீமைகளில்மிடி போலலுதை துயர் எதுவேறு?
    போக செறிபுகழ் யாவரொருமொழி கூறவருபவர் புவிமீது?
  2. மான மணியென நாடுமனிதர்கள் வாழ இடமிது சரியாமோ?
    தான தவமெனு மோது பலவகை யான அறியவை உளவாமோ.
  3. மாது வயிறுறு காலமுதலிது வாதுதருதுயர் நிலையாகும்?
    மாலை தனிலுறு காலன் வரும்வரை யாவரிடரினில் அழிவாரோ?
  4. பாவியெனையினி யாவதளியொடு பாதமலருற அருளீசா?
    பாவவுலகினில் வாழல்பெருமிடர் போதுமடி யிணைதருவாயே.

“மானமழிந்த பின் வாழாமை முன்னினிதே!” என்று சொன்னவர் அதிமேதாவியென்பது இப்பொழுதே பரிஷ்காரம் ஆயிற்று. ஸோமேசன் தன்னுடைய மனோ வேதனையில் ஏதாவது அக்கிரமமான காரியத்தைச் செய்துவிடப் போகிறானோ என்று என் மனம் கவலைப்படுகிறது! ஸோமேசா! ஸோமேசா! அங்கு என்ன செய்கிறாய்? (ஸோமேசன் வருகிறான்.)

ஸோமே : ஸ்வாமி! களவு போன நகைகளுக்குப் பதில் நகை செய்கிறேன்.

மாத : என்னுடைய மூடத்தனத்திற்காக நகை செய்கிறாயோ? அல்லது என் விதியை நினைத்து நகை செய்கிறாயோ?

ஸோமே : நம்மை அவமானப்படுத்த எண்ணும் விதியைப் பார்த்து இந்த வைர ஸரம் நகை செய்கிறதைப் பாருங்கள்.

மாத : (திடுக்கிட்டு) ஸோமேசா இதென்ன இது? என்ன காரியம் செய்தாய்? எங்கிருந்து இந்த நகையை அபகரித்துக் கொண்டு வந்தாய்?

ஸோமே : நான் எங்கிருந்தும் அபகரிக்கவில்லை. புருஷனுடைய யோக்கியதைக்குத் தகுந்த உத்தம குண மனைவியர் செய்யக் கூடிய காரியமே இது! காணாமற் போன நகைகளுக்குப் பதிலாய் இதை அனுப்பும்படி தங்கள் பிராண பத்தினி இதை அனுப்பினார்கள். தயவு செய்து பெற்றுக் கொள்ளுங்கள்.

மாத : ஆகா!

விருத்தம்: காம்போதி
வறுமையிற் சிறிதுமாறா அன்பினையுடைய பெண்டீர்
உறுகணி லுதவுநேயர் உயரற நெறியிற் சேறல்
பெறுபவ ரெனைய பொல்லாங் கெய்தினும் வறியராகார்
சிறுமையு மலக்கண்யாவு மென்செயு மகன்று போமால்.

நான் ஒரு ஏழையென்றல்லவோ என்னை மதித்து வருந்தினேன். நான் ஒரு நாளும் ஏழையாக மாட்டேன். புருஷனுடைய செல்வம் எல்லாம் அழிந்தும், தன் அன்பைத் துறக்காத மனைவியும், நம் சுகதுக்கங்களைத் தன்னுடையவையாகப் பாவிக்கும் உண்மை நண்பனும், ஏழ்மைத் தனத்தினால் மழுங்காத நீதி நெறியும் ஆகிய மூன்றும் எனக்கிருக்க, நான் எப்படி ஏழையாவேன்? என்றாலும் நான் இந்த வைர ஸரத்தை வாங்கிக் கொள்ள மாட்டேன். ஆகா ஒரு ஸ்திரீயினிடத்தில் பொருள் உதவி பெறும் படியாக வந்து விட்டதா என் கதி? அவளுடைய பொருள் எனக்கு வேண்டாம்.

ஸோமே : ஸ்வாமி! இந்த சமயத்தில் தாங்கள் இப்படிச் சொல்லக் கூடாது. எஜமானி அம்மாளே தங்களுடைய பொருள் ஆயிற்றே. அப்படியிருக்க, அவர்களுடைய பொருளெல்லாம் உங்களுடையவை தாமே. தவிர எவ்வளவோ விலை உயர்ந்த காணாமற் போன நகைகளின் பெறுமானத்தை நாம் இந்தக் கேவல நிலைமையில் எப்படிச் சம்பாதிக்க முடியும்? ஆகையால் இதை வாங்கிக் கொள்ளுங்கள்.

மாத : (சிறிது யோசனை செய்து) சரி! நீ சொல்வதும் நியாயந்தான்! சீக்கிரம் நீரே வஸந்தஸேனையிடம் போய், நான் அவளுடைய நகைகளைச் சூதாடித் தோற்று விட்டதாகவும், அதற்குப் பதிலாக இந்த ஸரத்தை எடுத்துக் கொள்ளும் படிக்கும் தெரிவித்துக் கொடுத்துவிட்டு வாரும்!

ஸோமே : முழு ஸரத்தையுமா கொடுக்கச் சொல்லுகிறீர்கள்? நன்றாய் இருக்கிறதே! அவளுடைய நகைகளை நாம் தின்று விட்டோமா? அல்லது நாமே அபகரித்துக் கொண்டோமா? திருடன் கொண்டு போய்விட்டால் அதற்கு நாம் என்ன செய்கிறது? சூதாடி இழந்து விட்டதாகச் சொல்லுவானேன்? திருட்டுப் போய் விட்டதென்று சொல்லி அதற்குப் பதில் நாலைந்து வைரங்களை அனுப்பினால் போதுமே ஏழு சமுத்திரங்களையும் கடைந்தெடுத்த சாரத்தை யொத்த இந்த ஸரம் முழுவதையுமா அவளிடத்திற் கொடுக்கிறது?

மாத : ஸோமேசா! என்ன நீ உலோபியைப் போலப் பேசுகிறாயே!

ஸோமே : தரித்திரன் எப்படி உலோபியாவான்?

மாத : சரி நேரமாகிறது! நான் சொன்னதைச் செய்! பொழுது விடியும் சமயமாய் விட்டது; நான் நித்திய கர்மானுஷ்டானம் செய்யப் போகிறேன்.
(போகிறார்)

ஸோமே : (தனக்குள்) கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பது என்றேனும் பொய்க்குமோ? ஒரு நாளும் இல்லை.

– தொடரும்…

– 1920களில் வெளிவந்த நாவல்.

– வஸந்த கோகிலம், முதற் பதிப்பு: 2006, ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை.

வடுவூர் துரைசாமி ஐயங்கார் (1880-1942) தமிழ் எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய வணிகக் கேளிக்கைப் படைப்புகளை எழுதிய முன்னோடிகளில் ஒருவர். திகம்பரச் சாமியார் என்னும் துப்பறியும் கதாபாத்திரத்தை உருவாக்கியவர். 1942-ல் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் காலமானார். தமிழில் பிரிட்டிஷாரால் நவீன காவல்துறையும், நீதிமுறையும் உருவாக்கப்பட்டதை ஒட்டி குற்றங்களை காவலர் நவீன முறையில் துப்பறிவதன் மீது வாசகர்களின் ஆர்வம் உருவாகியது. தொடக்ககால தமிழ் பொதுவாசிப்பு எழுத்துக்கள் பெரும்பாலும் துப்பறியும் மர்மக் கதைகளாகவே அமைந்தன.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *