கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 7, 2024
பார்வையிட்டோர்: 908 
 
 

அங்கம் 3 – காட்சி 1 | அங்கம் 3 – காட்சி 2-3

இடம் : இராஜ வீதி.

இரண்டு சண்டாளர் மாதவராயரைக் கழுமரம் இருக்கும் இடத்திற்கு அழைத்துப் போகும் சமயம்.

ஜனங்கள் நெருங்குகிறார்கள்.

மாதவராயர் பாடிக் கொண்டு வருகிறார்.

நாதநாமக்கிரியை – திரிபுடை
ப. இதுவோ தலைவிதியோ? எனது காலகதியோ?
அ. பொதுளும் பொரு ளிழந்தும் உறுவோர் தலையிழந்தும்
துதியும் புகழிழந்தும் மதியாச் சிறுமைதன்னில்
பதியும் மனையும் சேயும் அகலக் கொலைஞனானேன்;
கதியே திணிக் கருணாநிதியே யெனது துணை (இது)

1 சண் : இதென்ன இம்பிட்டுக் கூட்டம் போங்கையா அப்பாலே. ஒங்கிளுக்கெல்லாம் இங்கிட்டு என்னய்யா சோலி?

2 சண் : பட்டிக்காட்டான் முட்டாயிக் கடையெப் பாக்கராப்புலே என்னையா இப்படிப் பார்க்கிறீங்க? என்னமோ பாவம் பெரிய வீட்டுப்புள்ளே தலைவிதியினாலே போறாரு. கூட்டங்கூட வாணாம் போங்கய்யா.

மாத : (ஒருபுறமாக மனிதனுடைய சத்ருவாகிய கர்ம வினையின் மாறுபாட்டை யார்தாம் அறிவர். எனக்கு இவ்விதமான கால வித்தியாசம் ஏற்படப் போகிறதென்று நான் ஒரு நாளும் நினைக்கவே இல்லை; வீதியின் வழியாகக் கட்டி இழுக்கப்படும் நிலைமைக்கு வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் என்னைக் காணும் நகரத்தினர் யாவரும் கண்ணிர் விட்டு அழுகின்றனர். நரகத்தின் மத்தியில் ஒரு துளி தேன் வாயில் விழுந்ததைப் போல, இதைக் காண என் மனம் சற்று ஆறுதலடைகிறது. யாவரும் என்னைக் காப்பாற்றும்படி ஈசுவரனைப் பிரார்த்திக்கிறார்கள்.

1 சண் : அடியாத்தே! ஊர்ச்சனங்கள்ளாம் இப்படியா அளுவும் கண் கொண்டுதான் பார்க்க
முடியலியே!

2 சண் : அடே அந்தாலே பாருடா! ஊட்டு சன்னல்லே நிக்கிற பொட்டச்சிகள்ளாம் அளுவுறாங்கடா!

1 சண் : (தண்டோராப் போடுகிறான் துடும், துடும், துடும், துடும். ஊரு ஜனங்களுக்கு எல்லாம் தெரிவிப்பது என்னமெண்டால், நகராதிபதி ஊட்டு மாதவராயரு, தேவிடியா
வஸந்தஸேனையைக் கொன்னுப்புட்டு, அவளொட நவையெல்லாம் எடுத்துக்கிட்டாராம். அதுக்காவஅவரைநம்ம மவராசா கொன்னுட ஆக்கினைப் பண்ணிப் புட்டாங்க. இந்த மாதிரி பண்ணறவங்களுக்கு இப்படியே தலை போயிடும்.துடும், துடும், துடும், துடும்.

மாத : (காதில் கைகளை வைத்து மூடிக் கொண்டு) ஹா! ஈசுவரா!

விருத்தம் – முகாரி
ஈசனே! யேழை யிந்தத் தூஷணை பெறவோ வந்தேன்?
மாசிலா நெறியே நின்றேன், மரித்திடல் மதியே னிந்த
ஏசுறு மொழியைக் கேட்க எங்ஙனஞ் சகிப்பேன்றாழ்ந்த
நீசரா லிறக்குங் கால நேர்ந்ததோ? சதியே யாமோ?

என்ன கதிக்கு ஆளாக்கினாய்! என்ன கர்ன கடூரம்! இம் மொழிகள் என் காதில் விழ நான் என்ன மகா பாவம் செய்தேனோ என் தந்தை தன் கச்சேரிக்குப் போனது வீதியில் அவர் வரவைக் கட்டியக்காரர் புகழ்ந்து தெரிவித்ததற்குப் பதிலாக எனக்கு இவ்விதமான கீர்த்தி ஏற்பட்டதோ! ஹா! புண்யாத்மாவாகிய என்னுடைய தந்தையின் பெயரைக் கெடுக்கப் பாதகனாகிய நானேன் பிறந்தேன்? கம்பீரச் சின்னங்களுடன் என் பிதா இந்த வீதியில் போன காலத்தில், தன் மகனுக்கு இதே இடத்தில் இவ்வித மரியாதை கிடைக்கப் போவதை அறிந்திருப்பாரானால், அவருடைய பெருமையும் குதூகலமும் எங்கு போயிருக்கும்! ஓகோ! அதோ என் மித்திரன் ஸோமேசனும், என்னருமைக் குழந்தை சிசுபாலனும் வருகிறார்கள். (சண்டாளரிடம்) நண்பர்களே! நீங்கள் எனக்கு ஒரு அனுமதி தரவேண்டும்.

1 சண் : என்னையா ஓனும்? சொல்லையா ஒடனே தாரோம். உங்க நல்ல கொணம் ஒண்ணே போதுமே! நம்ம ராசாவுக்குக் கூட ஒன்னொட ரோக்கிதே வருமா? கேளையா.

2 சண் : எத்தினி தரம் எங்களுக்குக்கூட! சோறு துணியெல்லாம் ஒங்க வளவலேந்து கெடச்சதே! அதெல்லாம் மறப்பமா? நாங்க சின்ன சாதிப் பறையராய் இருந்தாலும், நீங்க சேஞ்ச ஒவகாரம் நெனைக்காமப் போனா குடிக்கிற கஞ்சீலே ஆண்டவன் மண்ணு போட மாட்டாரா?

மாத : அதோ என் குழந்தை வருகிறான், அவனுடன் கடைசியாக ஒரு முறை பேச அனுமதி தரவேண்டும்.

1 சண் : இத்தானா பெரமாதம்! பேசுங்க சாமி! செனங்கள் எல்லாம் அப்பாலே போங்க, கொழந்தைக்கு வளி வுடுங்க.
(ஸோமேசனும் சிசுபாவனும் வருகிறார்கள்)

ஸோ : குழந்தாய்! அதோ பார் உன் பிதாவை.

சிசு : ஹா! அப்பா! அப்பா! (ஆவலோடு தகப்பன் பேரில் விழுகிறான்)

மாத : வாடா! என் செல்வமே. (வாரி அணைத்து அவன் கையைப் பிடித்துக் கொண்டு) ஆகா,
விருத்தம் – ஸஹானா

சேயனே! கண்ணே! இந்தச் செவ்விளங் கரத்தினால் நீ
தீயெனக் கிடவோ பாவி யென்சுத னாக வந்தாய்?
மாய நீ யென்செய் வாயோ! மலிபுகழ் செல்வம் யாவும்
நீ யென மதித்தே வந்த நினைவினி யகன்ற தையோ!

அழகிய இந்தச் சிறிய கையால் எனக்குக் கொள்ளி வைக்கப் போகிறாயா? ஐயோ! குழந்தைப் பருவத்திலேயே என்னை நீ இழந்து விட்டால் இன்னும் சில வருஷங்களில் என்னுடைய நினைவே இல்லாமல் போய் விடுமே! ஒரு தகப்பன் இருந்தான் என்பதை உனக்கு நினைப்பூட்ட நான் உனக்கு என்ன பொருளை வைத்திருக்கிறேன்! பொருள்களை வாரிக் கொடுத்து ஊரில் யாவருக்கும் நன்மை செய்தேன். அதனால் உனக்கு மாத்திரம் மீளாத் துன்பத்தைக் கொடுத்தேன். ஆகையால், நான் உனக்கு மாத்திரமே விரோதியானேன். நீ பிற்காலத்தில் தரித்திரத்தால் வருந்தும் போது, இந்தப் பாவி வயிற்றில் ஏன் பிறந்தேன் என்று துஷிப்பாய். அதையெல்லாம் கேட்க நான் கடமைப்பட்டவனே இப்பொழுது நான் என்னுடையது என்று உனக்குத் தரக் கூடியது என்னுடைய பூணுரல் ஒன்றுதான். இதைத் தருகிறேன். தங்கம், நவமணி, முதலியவற்றால் செய்த ஆபரணங்கள் எல்லாம் பிராம்மணனுக்கு பூணூலைப் போல அவ்வளவு பெருமையான பூஷணம் அல்ல. இதனால் நாம் தெய்வங்களுக்கும் இருஷிகளுக்கும் ஆராதனை செய்யும் மேன்மையைப் பெறுவதால் இது ஒன்றே நமக்குப் போதுமான ஐஸ்வரியம் சாஸ்திரக் கிரகப்படி நான் உனக்குப் பூணுரல் கல்யாணம் செய்து வைக்கக் கொடுத்து வைக்காப் பாவியான போதிலும் இப்பொழுது இதைக் கழுத்தில் தரித்துப் பார்க்கிறேன்.

(தன் பூணூலை எடுத்து அவன் கழுத்தில் போடுகிறார்)

1 சண்: சாமி நேரமாவுது; ராசா கோவிச்சுக்குவாரு போதும், போவலாம்.

சிசு : அடே! சண்டாளப் பயலே! என் அப்பாவை எங்கே கூப்பிடுகிறாய்?

மாத : அப்பா! கண்மணி! நான் உயிரை விடப் போகிறேன். இமயன் வந்து காத்துக் கொண்டிருக்கிறான். என் காலம் முடிந்து விட்டது. என்னை இனி பார்க்க மாட்டாய். எங்கே என்னைக் கட்டிக் கொண்டு ஒரு முத்தங் கொடு.

2 சண் : அடே கொளந்தே! சின்ன சாதிலே பொறந்தவங்கள்ளாம் சண்டாளர் ஆவமாட்டாங்க; நல்ல புண்ணியவாங்களை வதைக்கறாங்க பாரு அவங்கதான் சண்டாளரு.

சிசு : அப்படியானால் என்னுடைய அப்பாவை ஏனடா கொல்ல நினைக்கிறாய்?

1 சண் : அது ராசா உத்தரவு! நாங்க என்ன பண்ணுவம்? பாவ புண்ணியம் அவுருது.

சிசு : அப்படியானால் நான் வருகிறேன்; என்னைக் கொன்று விடு. அப்பாவை விட்டு விடு. அப்பாவைப் பார்க்காமல் போனால் அம்மா சாப்பிடாமல், அழுது உயிரை விட்டு விடுவாள். அப்பாவைக் கொல்லக் கூடாது. என்னை அழைத்துக் கொண்டு போங்கள்.

2 சண் : ஆகா! புலி வவுத்துலே பூனை பொறக்குமா? கொளந்த என்ன தகிரியசாலி! நீ சேனா நாளைக்கு சொகமாய் இருக்க அந்த சாச்சாத்துக் கடவுளு செய்வாரப்பா!

மாத: (குழந்தையை அணைத்து) ஆகா! தன்யனானேன்! இதுவல்லவோ உண்மைச் செல்வம்! உற்றார் உறவினர் நம்மிடத்தில் காட்டும் ஆசாபாசத்தைக் காட்டிலும் இன்பம் தரக் கூடிய பொருள் வேறு என்ன இருக்கிறது!

ஸோ : ஹே நண்பர்களே! என்னுடைய சிநேகிதரை விட்டு விடுங்கள். உங்களுக்கு ஒரு சரீரந்தானே வேண்டும்; இதோ என்னுடைய தேகத்தை உங்கள் வசம் ஒப்புவித்தேன்; என்னைக் கொண்டு போங்கள்.

1 சண் : இதென்ன பைத்தியம்! ராசா ஆக்கினையை மீறி வேறே மனிசரைக் கொண்டு போவ முடியாது; நேரமாச்சு; போவலாம்.

(யாவரும் போகின்றனர். மறுபடியும் ஒருதரம் முன்மாதிரி பறை சாற்றுகின்றனர்)

(அதற்கருகில் இருந்த அரண்மனை மேன் மாடியில் ஒரு அறையில் அன்டபட்டிருந்த பத்மநாபன் தனக்குள்) இதென்ன ஆச்சரியம்! இப்படியும் அநியாயம் செய்வதுண்டா ஒரு பாவத்தையும் அறியாத மாதவராயரைக் கொல்வதா? நான் சோலையில் இருந்து வந்தது முதல் என்னை வஞ்சித்து இந்த அறையில் போட்டு அடைத்து இருக்கிறான் கொலை பாதகன். நான் இந்தச் சமயம் எப்படி வெளியில் போவேன்? (உரக்க) நில்லுங்கள்! நில்லுங்கள்! வஸந்தஸேனையைப் பாவியாகிய நானே சோலைக்கு அழைத்துப் போனேன். அங்கே வீரசேனன் சொல்லிற்கு அவள் இணங்கவில்லை. ஆதலால் அவனே கொன்றவன். இந்த புண்ணியவான் அல்ல; இவரை விட்டு விடுங்கள். (தனக்குள்) நான் சொல்வது இவர்கள் காதில் விழவில்லையோ? போகிறார்கள்! நான் இந்த சமயத்தில் சும்மா இருந்தால் நிரபராதியான ஒரு பெரிய மனிதருடைய உயிர் போய் விடும். நான் எப்படி வெளியில் போவேன்? கதவை வெளியில் பூட்டியிருக்கிறானே. இந்த ஜன்னலின் வழியாகக் குதிக்கிறேன். இதனால் இறந்தாலும் சரி. நல்ல விஷயமானதால் மோக்ஷமாயினும் கிடைக்கும். (கீழே குதிக்கிறான்) ஹா! உயரம் அதிகமானதால் நன்றாய் அடிபட்டு விட்டது! ஐயோ! எழுந்திருக்க முடியவில்லையே! அவர்கள் போய் விடுகிறார்களே! என்ன செய்வேன்? என் உயிர் இதனால் போனாலும் போகிறது. (மெதுவாக எழுந்திருக்கிறான்)
ஓடிப் போய் உண்மையைத் தெரிவித்து அவரை விடுவிக்கிறேன். அதன் பிறகு என் உயிர் போவதானாலும் கவலையில்லை. (அடிபட்டு வருந்தும் தேகத்துடன் மெதுவாக எழுந்து தட்டித் தடுமாறிக் கொண்டு ஓடி வருகிறான்.)

1 சண் : சற்று தூரத்தில்) என்ன ஆச்சரியங்கறேன்! நம்பளே ஆரோ அளெக்கிறானே! என்னாத்துக்கோ தெரியலையே!

பத்ம : நான் சொல்லுவதைக் கேளுங்கள். மாதவராயர் குற்றவாளி அல்ல. நானே வஸந்தஸேனையைப் பூஞ்சோலைக்கு அழைத்துப் போனவன். அங்கே என் எஜமானனே அவளைக் கொன்றவன்.

2 சண்: அடியாத்தே! புதுமையாக்கீதே! நீ சொல்றது. நெசந்தானாய்யா?

பத்ம : சத்தியம்; நான் நியாய ஸ்தலத்திலேயே இதைச் சொல்லியிருப்பேன். என்னை என் எஜமானன் ஒரு அறைக்குள் விட்டுப் பூட்டி விட்டார்.
(வேறொரு பக்கமாக வீரசேனன் ஏப்பம் விட்டுக் கொண்டு வருகிறான்)

வீர : (தனக்குள்) இன்றைக்கு முதல் தரமான சாப்பாடு! வயிற்றைத் தூக்கிக் கொண்டு நடக்க முடியவில்லையே! என் விருப்பத்திற்கு இணங்காத வஸந்தஸேனையை ஒழித்தேன்! அவள் ஆசை வைத்த மாதவராயன் பேரில் பழியைச் சுமத்தினேன். இது ஸுதினமானதால், நல்ல விருந்து சாப்பிட்டேன். அதோ சண்டாளர் அவனை அழைத்துக் கொண்டு போகிறார்கள். நானும் அவனைக் கொல்வதைப் பார்த்து என் கண்களுக்கும் விருந்து செய்விக்கிறேன். (கொஞ்சதுரம் போய்) அதோ பத்மநாபன் போகிறானே அவனை நான் சிறையில் அல்லவோ அடைத்து வைத்திருந்தேன்! அவன் உண்மையை வெளியில் சொல்லி விடுவானோ என்னவோ தெரியவில்லையே! நானும் போய் சமயத்திற்குத் தகுந்த விதம் நடந்து கொள்ளுகிறேன். (வருகிறான்)

பத்ம : இதோ வந்தார் என் எஜமானர்!

1-2 சண் : சாமி தெண்டம்!

வீர: அடே பத்மநாபா நீ எங்கே போகிறாய்? வா என்கூட.

பத்ம : நல்ல யோக்கியர்! வஸந்தஸேனையை கொன்றதும் அன்றி, மகா உத்தமரான மாதவராயரையும் கொல்ல வழி தேடினீரோ)

வீர : அடே! எவ்வளவோ யோக்கியனான நானா ஒரு ஸ்திரீயைக் கொல்வேன்? .

ஜனங்கள் : ஆம்! நீதான் அவளைக் கொன்றவன்; மாதவராயர் அல்ல.

வீர : அப்படி எவன் சொன்னவன்?

ஜனங்கள் : இந்த நற்குணமுள்ள மனிதனே சொல்லுகிறான். நீதான் கொன்றிருப்பாய்.

வீர : ஜனங்களே! நான் சொல்வதைக் கேளுங்கள். இவன் என்னுடைய அடிமை! இவனுக்குத் திருட்டுக்கை அதிகம்! அதற்காக இவனைத் தண்டித்து ஒரு இடத்தில் தனியாக பூட்டி வைத்திருந்தேன். இந்த குரோதத்தை வைத்துக் கொண்டு இப்படிச் சொல்லுகிறான். அடே! பத்மநாபா! உண்மையைச் சொல்; நான் சொல்வது சரிதானே (தன் விரலிலிருந்த ஒரு மோதிரத்தை அவருக்குத் தெரியாமல் கழற்றிக் கொண்டு அவனுக்கு அருகில் போய் அதை அவன் கையில் இரகசியமாகக் கொடுத்து) இதை நீ எடுத்துக் கொள். முன் சொன்னதை மாற்றிச் சொல்லி விடு.

பத்ம : (மோதிரத்தை ஜனங்களுக்குக் காட்டி) இதோ பாருங்கள். இந்த மோதிரத்தை இலஞ்சம் கொடுத்துப் பேசாமல் இருக்கச் சொல்லுகிறார்.

வீர : (மோதிரத்தை பிடுங்கி) பார்த்தீர்களா! பார்த்தீர்களா! இதுதான் திருட்டுப் போன மோதிரம்! இதற்காகத்தான் இவனைத் தண்டித்தேன். இவன் முதுகைப் பாருங்கள்; இவனுக்கு எத்தனை அடி வாங்கிக் கொடுத்திருக்கிறேன்.

1 சண் : சரிதாங்க! இவன் பொய்தான் சொல்றான்

பத்ம : ஆகா! அடிமையாய் இருப்பதன் இகழ்வு இதுதான்! நான் நிஜத்தைச் சொன்ன போதிலும் ஒருவரும் நம்ப மாட் டேன் என்கிறார்கள். (மாதவராயர் காலின் விழுந்து ) பிராம்மணோத்தமரே! என்னாலான பாடுபட்டேன். ஒன்றும் பலிக்கவில்லை. குற்றமற்ற உங்களைக் கொண்டு போகிறார்களே! என்ன செய்வேன்? உங்களை அந்த ஈசுவரனே காப்பாற்ற வேண்டும்.

மாத : நல்ல மனிதனுக்கு அநியாயமாய் ஆபத்து வந்து விட் டதே என்று மனதிரக்கம் கொண்டு உன்னாலான உதவியைச் செய்ய முயன்றாய். என் தலைவிதி குறுக்கே நின்று வழி மறிக்கிறது. நீ அதற்கென்செய்வாய்? கவலைப்படாதே! எழுந்திரப்பா! நீ மகா யோக்கியன்! ஸ்வாமி உன்னுடைய நற்குணத்திற்குத் தகுந்த நற்கதி அளிப்பார். உன் கடமையை நீ செய்து விட்டாய்; எழுந்திரு.

வீர : ஹே! சண்டாளப் பயல்களா! ஏன் இப்படித் தாமசம் செய்கிறீர்கள்? உடனே அழைத்துப் போய் இராஜனுடைய கட்டளையை நிறைவேற்றுங்கள். இனித் தாமதித்தால், நீங்களும் தண்டனை பெறுவீர்கள்.

சிசு : ஐயோ! என் தந்தையை விட்டு விடுங்கள். அவருக்குப் பதிலாக நான் போகிறேன்.

வீர : இரண்டு பேரையும் கொன்று விடுங்கள். அப்பனும் மகனும் கூண்டோடு கைலாசம் போகட்டும்.

மாத : இவனுடைய இச்சைப்படியே எல்லாம் நடக்கிறது! அப்பா கண்மணி! நீ உன் தாயாரை அழைத்துக் கொண்டு இந்த ஊரை விட்டு என்னால் உண்டான இந்த அவமானம் காதில் படாத வேறோரிடத்திற்குப் போய் செளக்கியமாக இருங்கள். மித்ரா இவனை அழைத்துக் கொண்டு போ.

ஸோமே : (விசனத்துடன்) ஐயா! உமக்குப் பிறகு நான் உயிருடன் இருப்பேன் என்று நினைக்க வேண்டும்.

மாத : ஸோமேசா! ஜீவாத்மா நம்முடைய கைக்குட்பட் டது அல்ல. உன்னுடைய உயிரை விடவும், வைத்துக் கொள்ளவும், நீயா அதற்கு நாதன். அதற்கு அதிகாரி வேறு ஒருவன் இருக்கிறான். இந்த உலகத்திற்கு வந்த காரியம் முடியும் வரையில் எவனும் இதை விட்டு ஈசுவரனுடைய அனுமதியின்றிப் போக முடியாது. அவசரப்படாதே. நன்றாய் யோசனை செய்து பார். அநாதையான இவர்களை, நீ காப்பாற்ற வேண்டும். என் னுடைய கடைசி வேண்டுகோளைச் செய். நேரமாகிறது, போ!

ஸோமே : (தனக்குள்) இவர் சொல்வது நியாயமாய் இருந்த போதிலும், இவர் இறந்தபின் நான் இதை எப்படி சகித்துக் கொண்டிருப்பேன்? முதலில் இவருடைய மனைவியைத் தேற்றி விட்டுப் பிறகு என் உயிரை விடுகிறேன். (அவரை நோக்கி) சரி ஸ்வாமி! இதுதான் கடைசியாக உங்களுடைய சுந்தர முகத்தை நான் பார்ப்பதோ?
(அவரை ஆலிங்கனம் செய்து குழந்தையை எடுத்துக் கொள்ளுகிறேன். குழந்தை அப்பா அப்பா! வென்று அழுகிறான்.)

வீர : அடே நான் அந்தப் பையனையும் கொல்லச் சொன்னேனே!

1 சண் : (அழுத்தமாக) ராசா உத்திரவில்லீங்க; நாங்க கொல்ல மாட்டோம். இவரை மட்டுந்தான் கொல்லச் சொன்னாரு. (ஸோமேஸன் குழந்தை இருவரை விட்டு மற்றவர் மேலும் போகின்றனர்)

2 சண்: சரி! இதுதான் எடம். களுவு மரம் அதோ பாத்தியா? இதுலே தூக்கிப் போட்றது ஒன்னொட மொறை.

1 சண் : என்னொட மொறையானா நான் மெதுவாத்தான் போடுவேன். எங்கப்பன் செத்துப் போனப்ப என்னெக் கூப்பிட்டு, அப்பா ஆரெனாச்சும் கொல்ல உத்தரவானா, அவசரப்படாமே நிதானி. ராசாவுக்குப் புள்ளே கிள்ளே பொறந்திச்சின்னா, குத்தவாளியெ உடச் சொல்லிப் புடுவாங்க. அப்படி இல்லேன்னா, குத்தவாளி தப்புதம் செய்யல்லேன்று ஏதாச்சும் நல்ல சாக்கி கெடச்சு உட்டுட உத்தரவாவலாம். அப்படி இல்லாமெப் போனா ஒரு ராசா போயி இன்னொரு ராசா வரலாம். அதுக்காவ உட்டுடலாம் இன்று எங்கப்பன் சொன்னான்.

வீர: (ஒரு புறமாக) ஓகோ இராஜன் மாறப் போகிறானோ! சண்டாளப் பயலே! இருக்கட்டும்.

1 சண் : சரி சேனா நேரமாச்சு ஆவட்டும் நிக்காதே.

2.சண்: கைகுவித்து ஐயரே! நாங்க ராசா உத்தரவைச் செய்யரோம். எங்க பேருலே தப்புதமில்லே; எங்க பேருலே வருத்தப் படாதே! ஏதாச்சும் சொல்லிக்கினுமானா சொல்லிக்க. நாங்க ஒரு பாவத்தையும் அறியாதவங்க. குத்தங் கொறையிருந்தா மன்னிச்சுக்கோ மவராசா! (வணங்குகிறான்)

மாத: ஆகா! என்ன இவர்களுடைய நற்குணம் பலரைக் கொன்று, ஹிருதயம் கல்லாய் இருக்கப் பெற்ற சண்டாளரே ஆயினும், என் விஷயத்தில் நிரம்ப இரக்கம் உடையவராய் இருக்கிறார்கள்! நான் குற்றவாளியல்ல என்பது சாதாரணப் பாமர ஜனங்களுக்கு எல்லாம் இயற்கையிலேயே தெரிந்து போயிருக்கிறது! அந்த நியாயாதிபதிக்கும் அரசனுக்கும் மாத்திரம் உண்மையை அறிந்து கொள்ளும் திறமை இல்லாமற் போனது தான் ஆச்சரியம் தருமமே ஜெயமென்பது பொய்யாகுமோ? இதோ என்னைக் கொல்லப் போகிறார்கள். அதர்மமே ஜெயமடையும் போல் இருக்கிறது. விதியானது என்னைப் பலமாக இழுத்துச் செல்லும் பொழுது நான் எவ்வளவு முயன்ற போதிலும் என்ன பயன்? இந்தக் கழுமரத்தில் என்னைப் போடப் போகிறார்கள்! ஆகா! ஈசுவரா!

திருவருட்யா – எதுகுலகாம்போதி

பதியேயெம் பரனேயெம் பரமனே யெமது பரா
பரனே-யானந்த பதந்தரு மெய்ஞ்ஞான
நிதியே மெய்ந்நிறைவே மெய்ந்நிலையே மெய்யின்ப
நிருத்தமிடும் தனிமை நிபுண மணிவிளக்கே
கதியே யென்கண்ணே யென்கண்மணியே யெனது
கருத்தே என் கருத்திலுற்ற கனியே செங்கனியே
துதியே யென்றுரையே! யென்றோழா வென்னுளத்தே
சுத்த நடம்புரிகின்ற சித்த சிகாமணியே!

உயர் குலத்தில் பிறந்ததும், நகராதிபதியின் புதல்வனாய் உதித்ததும், நற்குண நல்லொழுக்கத்தைப் பெற்று யாவரும் துதிக்கும் பாக்கியத்தை அடைந்ததும், இந்தப் பெருமையைப் பெறுவதற்குத் தானோ? ஆகா! கொடிது கொடிது!! மேலான நிலைமையில் பிறந்து, பற்பல புகழைப் பெற்று இவ்விதம் பாதாளத்தில் வீழ்வதைவிட, ஒரு ஏழையாய்ப் பிறந்து, யாதொரு இடைஞ்சலும் இல்லாமல் இருப்பது எவ்வளவு மேலான பதவி. மலையின் பேரில் ஆகாயத்தை அளாவி பெருத்த மரமாய் வளர்ந்து புயற்காற்றால் முறிபட்டுப் பாதாளத்தில் விழுவதைக் காட்டிலும் தரையில், கட்டைப் புல்லாயிருந்து பலர் கால்களாலும் மிதிப்படும் தன்மையில் இருப்பது மேல். ஏனென்றால், அந்தப் புல் காய்ந்து கட்டையாய் இருந்த போதிலும் அதற்கு அழிவில்லை. ஒரு மழை பெய்தால், அழகாய்த் துளிர்த்துக் கொள்ளும் அல்லவா! மகா பாவியான நான் ஏன் நல்லவர்கள் வயிற்றில் பிறந்தேன்? என்னால் அவர்களுக்கும் அல்லவோ என்றும் மாறாத அவமானமும் இழிவும் உண்டாயின.

(அப்படியே கண்களை மூடி விசனித்து நிற்கிறார்)
(வஸந்தஸேனையும் சந்தியாசியும் வருகிறார்கள்)

சந்: அம்மா! நகருக்கு சமீபத்தில் வந்தோம். எங்கே அழைத்துப் போக வேண்டும்?

வஸ : என் ஆருயிர்க் காதலராகிய மாதவராயருடைய வீட் டிற்கு முதலில் போக வேண்டும். சந்திரனைக் கண்டு அல்லி மலர்வதைப் போல, அவர் முகத்தைக் கண்டால் என்னுடைய உயிர் திரும்பி வரும்.

சந் : சரி இப்படியே போகலாம். இதென்ன சமுத்திர கோஷத்தைப் போல் இருக்கிறதே!
வஸ: பெருத்த கூட்டமாக இருக்கிறதே காரணம் என்ன என்று விசாரியும்.

1 சண் : சரி! கடைசி முறை பறை சாற்றுகிறேன்; துடும், துடும், துடும், துடும்; ஊரு சனங்களுக்கு எல்லாம் தெரிவிப்பது என்னமெண்டால் நகராதிபதி ஊட்டு மாதவராயரு தேவிடியா வஸந்தஸேனையைக் கொன்னுப்புட்டு அவளொடெ நகை எல்லாம் எடுத்துக்கிட்டாரு; அதுக்காவ, அவரை நம்ப மவராசா கொன்னுப்புட ஆக்கினை பண்ணிப்புட்டாங்க. இந்த மாதிரி பண்ணறவங்களுக்கு இப்படியே தலே போயிடும். துடும் துடும் துடும்.

வஸ: ஆகா இதென்ன இது? என் செவிகள் எதைக் கேட்டன.

சந் : அம்மணி! இதென்ன அதிசயம்! உங்களை மாதவராயர் கொன்றாராம். அதற்காக அவருடைய உயிரை வாங்கப் போகி றார்களாமே!

வஸ : ஆகா! பாதகி என்னால் என் துரைக்கு என்ன ஆபத்து நேர்ந்தது சீக்கிரம், சீக்கிரம்! என்னை அங்கே அழைத்துப் போம்.

சந் : இப்படியே வாருங்கள். வேகமாய் வாருங்கள்!

வஸ : விலகுங்கள். விடுங்கள்.

(மாதவராயர் முதலியோர் இருந்த இடத்திற்கு வருகிறார்கள்)

(மாதவராயரைக் கழுவிலிடத் துக்குகிறான்)

வஸ : நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்! கொல்லப்பட்டவள் இதோ வந்தேன்! நிறுத்துங்கள்.

2 சண் : ஆருடா இது?

வஸ : ஆகா! ஸ்வாமி! பாவியாகிய என்னால் உங்களுக்கு இந்தக் காலகதி வந்ததோ! (வந்து அவர் மார்பில் விழுந்து ஆலிங்கனம் செய்ய, அவர் சற்று அப்படியே இருந்து விலகுகிறார்)

ஜன : வஸந்தஸேனை! வஸந்தஸேனை!!

2 சண் : வஸந்தஸேனையா? என்ன ஆச்சரியம்!

சந் : நல்ல காலந்தான் இவர் இதுவரையில் உயிரோடு இருந்தது!

1 சண் : ஐயா இன்னும் நூறு வருசம் உயிரோடெ இருக்கட்டும்.

வீர : இதென்ன அதிசயம்; வஸந்தஸேனை எப்படியோ உயிருடன் வந்து விட்டாளே! நான் இனிமேல் இங்கிருப்பது பிசகு, ஓடிப் போக வேண்டும். (ஓடுகிறான்)

1 சண் : அண்ணே அவனெ உடாதே! ஓடறான்!
(இருவரும் ஜனங்களும் அவனைத் தொடர்ந்து ஓடுகிறார்கள்)

மாத : காயும் பயிரில் மழை பெய்ததைப் போல் கழுவிற்கு மேல் உயர்த்தப்பட்ட என்னைக் காப்பாற்றியது யார்? இவள் வஸந்தஸேனை தானோ? அல்லது அவளைப் போல ஒரு உருவம் என்னைக் காக்கும் பொருட்டே ஆகாயத்தில் இருந்து குதித்ததோ! நான் விழித்துக் கொண்டு இருக்கிறேனோ? அல்லது கனவு காண்கின்றேனோ! என் புத்தி மாறாட்டம் அடைந்ததோ! என்னை இந்த விபத்தில் இருந்து விலக்கும் பொருட்டு அவளே தெய்வலோகத்தில் இருந்து மனித சுவரூபத்துடன் தோன்றினாளோ?

வஸ : (அவர் பாதத்தில் விழுந்து) எவ்வளவோ மேன்மையைப் பெற்ற தங்களுக்கு, இந்தத் தீங்கு சம்பவிக்கக் காரணமாய் இருந்தவள் எவளோ அவளே வந்தனள்!

மாத : ஆகா! கடைசியில் தருமமே ஜெயமடைந்ததோ! ஈசுவரனுடைய மகிமையே மகிமை! இந்தச் சந்நியாசி யார்?

வஸ : இவரே என் உயிரைக் காப்பாற்றியவர்.

மாத : அப்படியா! ஸ்வாமீ! நமஸ்காரம்! தங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்.
(அருகில் பெருத்த சத்தம் உண்டாகிறது)
”பிரதாப ராஜனுக்கு ஜெயம் உண்டாகட்டும். புதிய அரசன் நீடுழி வாழ்வாராக.”
(சசிமுகன் வருகிறான்)

(தனக்குள்) இந்த தேசத்து அரசன் செய்த அக்கிரமச் செயல்களுக்கெல்லாம் பிராயச்சித்தமாக அவனை இந்தக் கைகளே கொன்றன. மூவுலகத்தையும் கவரக்கூடிய வல்லமை பெற்ற பிரதாபனுடைய குணமே குணம்! அவன் சிம்மாசனம் ஏறியவுடன் செய்த முதல் காரியத்தில் இருந்தே அவனுடைய மனதின் மேன்மை நன்றாகத் தெரிகிறது. இதுதான் இடம். மாதவராயர் இங்குதான் இருப்பார்! ஆகா! அதோ வஸந்தஸேனையும் நிற்கிறாளே! (மாதவராயரை வணங்கி) ஸ்வாமி நமஸ்காரம்.

மாத: ஐயா! தாங்கள் யார்?

சசி :உங்கள் மாளிகையில் கன்னம் வைத்து, உங்களிடம் வஸந்தஸேனையால் ஒப்புவிக்கப்பட்டிருந்த நகைகளைத் திருடியவன் நான்தான். என்னுடைய குற்றத்தைத் தங்களிடத்தில் ஒப்புக் கொண்டு, தங்களுடைய மன்னிப்பைப் பெற வந்தேன்.

மாத :அப்படியா! சந்தோஷம்! நீர் செய்தது குற்றமல்ல! நல்ல காரியமே செய்தீர். வேறு ஏழையின் வீட்டில் திருடி அவனை வருத்துவது இதனால் இல்லாமல் போயிற்றல்லவோ.

சசி : ஆகா! எப்பொழுதும் மேன்மைக் குணமே! ஸ்வாமி! தங்களுக்கு ஒரு சந்தோஷ சமாசாரம் கொண்டு வந்திருக்கிறேன். யாவருக்கும் தீமை செய்து வந்த நமது கொடுங்கோல் அரசனைக் கொன்று விட்டோம். அவனுக்குப் பதிலாகப் பிரதாபன் சிம்மாசனம் ஏறிவிட்டான். உயர்குலப் பிறப்பும் நற்குணமும் பெற்ற தங்களுக்குத் தன் மரியாதையைச் செலுத்த என்னை அனுப்பினான்.

மாத : அதிசயம்! என்ன இதுதான் சர்வ வல்லமை உடைய கடவுளின் செயலோ?

சசி : கடைசியாக உங்களுடைய வண்டியில் ஏறிப் போன அந்த உதவியை அவன் மறக்கவே இல்லை; இனி எப்போதும் மறப்பதில்லை என்றும் தெரிவித்தான். நீங்கள் செய்த பேருதவிக்குச் சன்மானமாகத் தங்களை முதல் மந்திரியாக்கி இருக்கிறான்.

மாத: ஹா! கருணாநிதியே! உன்னுடைய திருவிளையாட்டை என்ன என்று சொல்லுவேன்?
ஜனங்கள் : அவனை இப்படி இழுத்துக் கொண்டு வாருங்கள்; இப்படி இழுத்து வாருங்கள், துஷ்ட ராஜனுக்குத் தகுந்த மைத்துனன்; உதையுங்கள்; கொல்லுங்கள், குத்துங்கள்.

(ஜனங்கள் வீரசேனனைக் கட்டி இழுத்து வருகிறார்கள்)

வீர : ஐயோ! ஐயோ! நாயை அடிப்பதைப் போல அடிக்கிறார்களே! கொல்லுகிறார்களே! என்ன செய்வேன்? யாரிடத்தில் உதவிக்குப் போவேன்? விரோதிகள் எல்லாரும் ஒன்றாய்ச் சேர்ந்து கொண்டார்களே! ஒன்றும் தோன்றவில்லையே! அதோ மாதவராயர் இருக்கிறார்! அவரை வேண்டிக் கொள்கிறேன். (அவர்காலில் விழுந்து) ஐயா! என்னை நீரே காப்பாற்ற வேண்டும். இவர்கள் என்னைக் கொல்லுகிறார்கள்.

ஜனங்கள் : ஸ்வாமி! அவனை இப்பால் உதைத்துத் தள்ளுங்கள். துஷ்டனை ஒழித்து விடுகிறோம்.

வீர : ஒ மாதவராயரே! இந்தச் சமயத்தில் எனக்கு உம்மைத் தவிர யாவரும் துணை இல்லை. காப்பாற்ற வேண்டும்! அபயம்!

மாத :வீரசேனா பயப்படாதே! நீ என்னை விரோதியாக மதிக்கிறாய். நான் உன்னை அப்படி நினைக்கவே இல்லை.

சசி : இந்தக் கொலைப் பாதகனை அப்பால் இழுத்துக் கொண்டு போங்கள். ஸ்வாமி! இந்தப் பரம பாதகனை ஏன் காப்பாற்ற வேண்டும் – ஜனங்களே! இவனைக் கட்டி யானைக் காலில் உருட்டி விடுங்கள். இல்லாவிட்டால் வாளால் இவன் தேகத்தை இரண்டாய்ப் பிளவுங்கள். இவன் உயிருடன் இருந்தால், எத்தனையோ ஏழை ஜனங்களை வயிறெரியச் செய்வான்.

மாத : பொறுங்கள்! பொறுங்கள்! நான் சொல்வதைத் தயவு செய்து கேளுங்கள்.

வீர : நற்குணமே நிறைந்த உத்தமரே! உம்மையே அடைக்கலமாய் நம்பி வந்தேன். என் உயிரைக் காப்பாற்றும். இனி உமக்கு நான் யாதொரு தீங்கும் நினைப்பதே இல்லை.

ஜனங்கள் : இவனைக் கொல்லுங்க; மகா பாவியாகிய இவனை உயிருடன் விடக்கூடாது.

(மாதவராயருடைய கழுத்தில் இருந்த எருக்க மாலையை வஸந்தஸேனை கழற்றி வீரசேனனுடைய கழுத்தில் போடுகிறாள்)

வீர : ஹா! வஸந்தஸேனை பெண்மயிலே! என் பேரில் இரக்கம் கொள். இனி நான் உன்னை நினைப்பதே இல்லை.

சசி : இவனை உயிருடன் விட்டால் நகரத்திற்குப் பெரிதும் துன்பம் உண்டாகும். இன்னம் யாருக்கு இவன் எவ்விதத் தீமை செய்வானோ இவனுடைய உயிரை வாங்குங்கள்.

மாத : ஐயா! இப்படி வாரும் சொல்வதைக் கேட்பீரா?

சசி ஆட்சேபனை என்ன?

மாத : அப்படியானால் இவனை விட்டு விடுங்கள்.

சசி: நல்ல காரியம்; வஸந்தஸேனையை கொல்ல *நினைத்ததும் அல்லாமல் உங்களுடைய உயிருக்கும் உலை வைத்தானே! இந்தப் படுபாவியையா உயிருடன் விடுகிறது?

மாத : எவ்வளவு விரோதியான போதிலும் இவன் மனப் பூர்வமாக அபயம் என்று நம்முடைய காலில் விழுந்த பிறகு இவன் பேரில் நம்முடைய வாள் படலாமா? நான் இவனுக்குக் காட்டும் தயையே இவனுக்குப் பெருத்த தண்டனையாகும். ஆகையால் இவனை ஒன்றும் செய்யாமல் விட்டு விடுங்கள்.

சசி : ஆகா! இதுவல்லவோ உத்தம குணம்! சரி. உங்கள் சித்தம் போல ஆகட்டும். (ஆட்களை நோக்கி) இவனை விட்டு விடுங்கள். (வீரசேனன் விடப்படுகிறான்)

வீர : அப்பா தப்பிப் பிழைத்தேன்! (தனக்குள்) இந்த நித்திய தரித்திரப் பார்ப்பானுக்கு இவ்வளவு பெருமையா!

(சந்தானகன் ஓடி வருகிறான்)

சந்தா: ஸ்வாமி! மோசம் வந்து விட்டது! உடனே புறப்பட வேண்டும். ஒரு க்ஷணம் தாமதித்தால் விபத்து சம்பவிக்கும்.

மாத : சந்தானகா என்ன இது!

சந்தா : என்னோடு வாருங்கள்; உங்கள் மாளிகைக்குப் போக ஒரு கூடிணம் தாமதமானால் பதிவிரதா சிரோன்மணியான உங்கள் நாயகியை உயிரோடு காண முடியாது.

மாத : ஆகா! என் ஆருயிரே! என் பொருட்டு என்ன காரியம் செய்ய நினைத்தாய்!

(யாவரும் தாறுமாறாப்ப் போப் விடுகிறார்கள்)

அங்கம் 3 – காட்சி 3

மாதவராயருடைய மாளிகை.

அக்னி வளர்க்கப் பட்டு இருக்கிறது.

அதற்கு அருகில் மஞ்சள் புடவை உடுத்திக் கொண்டு கோகிலம் நிற்கிறாள். குழந்தை சிசுபாலன் அவளுடைய இடுப்புப் புடவையைப் பிடித்துக் கொண்டு நிற்கிறான். ஸோமேசன் வேறொரு புறமாக நிற்கிறான்.

கோகி : அப்பா! கண்ணே! என்னை விட்டு விடு! நான் சொல்வதைக் கேள். உன் பிதாவுக்கு இவ்வளவு மான ஹானி வந்தபின் நான் இந்த உடம்பை வைத்திருக்கக் கூடாது. வீணாய்த் தடுக்காதே.

சிசு : அம்மா! அப்பாவும் போய் விட்டார். நீங்களும் நெருப்பில் விழுந்து விட்டால் நான் என்ன செய்வேன்? இனி நான் யாரை அம்மாவென்று கூப்பிடுவேன்? நீங்கள் இல்லாமல் நான் எப்படி உயிரோடு இருப்பேன்? என்னை இனிமேல் தினம் யார் கூப்பிட்டு, ஆகாரம் பட்சணம் எல்லாம் கொடுப்பார்கள்! அம்மா! நீங்கள் நெருப்பில் விழக்கூடாது.

ஸோ : அம்மணி! பொறுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்ய உத்தேசிக்கும் காரியம் பாவத்தைத் தரும். பிராம்மணனுடைய மனைவி தனிக்காஷ்டம் ஏறுவது தவறு என்று நம்முடைய சாஸ்திரங்கள் முறையிடுகின்றன.

கோகி : என்னுடைய நாதனுக்கு வந்த பழிச் சொல்லை கேட்பதைவிட நான் இந்த பாவத்தைச் செய்வதே உத்தமமானது. என்னுடைய குழந்தையை மாத்திரம் தயவு செய்து நீர் அப்பால் அழைத்துக் கொண்டு போம். இவன் என்னைத் தடுக்கிறான்.

ஸோ : அம்மணி! மன்னிக்க வேண்டும். நீங்கள் உயிரை விடத் தீர்மானித்தால், முதலில் நான் விழுவதற்கு அனுமதி தாருங்கள்.

சிசு : அம்மா! நான் முதலில் விழுந்து விடுகிறேன். எல்லாரும் என்னைத் தனியாக இங்கே விட்டுப் போகப் பார்க்கிறீர்களோ?

கோகி : கண்மணி குழந்தாய்! பிடிவாதம் செய்யாதே, நான் சொல்வதைக் கேள். இறந்து போன உன் பிதாவுக்கும், எனக்கும் நீ உயிருடனிருந்து கவனிக்க வேண்டிய கிரியைகள் எவ்வளவோ இருக்கின்றன. நீ இருந்து அவைகளைச் செய்யா விட்டால், எங்களுக்கு நல்ல கதி கிடைக்காது. என் தங்கமே! போ! அப்பால்! நான் சொல்வதைக் கேள்.

(மாதவராயர் முதலிலும் வஸந்தஸேனை, சந்தானகன், கோமளா முதலியோர் பின்னாலும் ஓடி வருகிறார்கள்.)

மாத : (தன் குழந்தையை வாரி அணைத்து முத்தமிடுகிறார்) அப்பா கண்ணே! உன்னைத் திரும்பவும் காணக் கிடைத்ததே!

கோகி : ஆஹா! இவர் யார்? அவர்தானே! (உற்றுப் பார்த்து)ஆம், அவரே! என் ஆருயிர்க் கணவரே வந்து விட்டார்.

குழந்தை : (சந்தோஷத்தோடு) அம்மா! இதோ பார் அப்பா வந்து விட்டார். இனிமேல் அழாதே! சந்தோஷமாயிரு!

மாத : (தன் மனைவியை அணைத்துக் கொண்டு) பிரிய சுந்தரி கோகிலம் உன் நாதன் உயிருடன் இருக்கும் பொழுது, நீ உயிரைவிட நினைத்தாயே! என்ன பைத்தியம்! சூரியன் ஆகாயத்தில் பிரகாசிக்கும் வரையில் தாமரைப் புஷ்பம் தன் இதழ்களை மூடுவது உண்டோ?

கோகி : சூரியனைக் கிரஹணம் பிடித்தமையால் அவனை இனிக் காண முடியாது என்னும் எண்ணத்தினால் தாமரை தன் இதழ்களை மூடப்பார்த்தது; அதற்குள் நல்ல காலமாய்க் கிரஹணம் நீங்கியது; இனி அதன் வாட்டமும் ஒழிந்தது.

ஸோமே : இதென்ன கனவோ! என் கண்கள் நிஜமாகவே பார்க்கின்றனவோ! என் ஆப்த நண்பர்தாமோ இவர்! மேன்மை பொருந்திய மனைவியின் பதிவிரதா தர்மம் தலை காத்ததோ? இவள் நெருப்பில் விழ நினைத்ததே இவளைத் தன் புருஷ னுடன் சேர்ப்பித்ததோ! ஆகா!

மாத : ஸோமேசனையும், ஆலிங்கனம் செய்து கொண்டு அப்பா ஸோமேசா! மெச்சினேன்! உன்னைப் போல ஆபத்தில் உதவும் நண்பன் கிடைப்பானோ? உன்னைப் பெற்ற எனக்கு வேறு என்ன பாக்கியம் வேண்டும்!

கோம : ஸ்வாமீ! நமஸ்காரம். (காலில் விழுகிறாள்)

மாத : கோமளா! எழுந்திரம்மா! (அவள் தோள் மேல் கை வைக்கிறார்) நான் உயிருடன் திரும்பி வராவிட்டால் என் பேரில் பிரியம் வைத்த இத்தனை பேர்களின் நிலைமை என்ன ஆகுமோ! ஈசுவரன் சர்வேக்ஞன் அல்லவா; நல்லது கெட்டது அவனுக்குத் தெரியாதா?

கோகி : (வஸந்ஸேனையைப் பார்த்து) வஸந்தஸேனா! பிரிய சகோதரி! நீ வந்திருப்பதை நான் பார்க்கவில்லை! ஆகா! உயிருடன் திரும்பி வந்தாயே! உன் பேரழகைத் திரும்பவும் நான் பார்க்கப் போகிறேனா என்றல்லவோ ஏங்கி இருந்தேன்.
(இருவரும் ஆலிங்கனம் செய்து கொள்ளுகிறார்கள்)

கோகி : வஸந்தஸேனா! உன்னுடைய விருப்பம் இன்னது என்பதை நான் நன்றாய் அறிவேன். அன்றிரவு உனக்கும் என் கணவருக்கும் நடந்த சம்பாஷணை எனக்கு முற்றிலும் தெரியும்.

வஸந்த : அக்காள்! தங்கள் நற்குணத்தைப் போல இந்த உலகில் வேறு எவரிடத்திலும் இருக்குமோ! எந்த விஷயத்திலும் தங்கள் மனம் கோணக் கூடாது என்பதே என்னுடைய ஓயாக் கவலை. என்னைத் தங்களுடைய பணிப்பெண்ணாக நீங்கள் இனி மதிக்க வேண்டுகிறேன்.

கோகி : ஆகா! நல்ல வார்த்தை சொன்னாய். நீ எனக்கு அருமையான சகோதரி அல்லவா! நாம் இருவரும் ஈனி நமது நாதனுக்குப் பணிப்பெண்கள். (வஸந்தஸேனையின் கரத்தைப் பிடித்து மாதவராயர் வலக் கரத்தில் வைத்து) ஸ்வாமீ. வஸந்த ஸேனையையும் இனி என்னைப் போல மனைவியாக ஏற்றுக் கொண்டு எங்கள் இருவரையும் பணிப்பெண்களாக மதிக்க வேண்டும்.

மாத : எல்லாம் வல்லவனும் சர்வ மங்கள ரூபியான சர்வ ஜெகதீசனுக்கு அல்லவோ நாமெல்லோரும் பணம் செலுத்த வேண்டியவர்கள். வாருங்கள். நாம் எல்லோரும் அவருடைய பெருமையைப் பற்றி ஸ்தோத்திரம் செய்து விட்டு பிறகு நம்முடைய புதிய அரசனிடம் போவோம். எனக்கு இந்த இராஜ்யத்தில் முதல் மந்திரி உத்தியோகம் கிடைத்து இருக்கிறதாம்.

கோகி : ஆகா! அப்படியா எல்லாம் ஜெகதீசன் செயல்!

(காட்சி முடிகிறது)

நிறைந்தது

– 1920களில் வெளிவந்த நாவல்.

– வஸந்த கோகிலம், முதற் பதிப்பு: 2006, ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை.

வடுவூர் துரைசாமி ஐயங்கார் (1880-1942) தமிழ் எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய வணிகக் கேளிக்கைப் படைப்புகளை எழுதிய முன்னோடிகளில் ஒருவர். திகம்பரச் சாமியார் என்னும் துப்பறியும் கதாபாத்திரத்தை உருவாக்கியவர். 1942-ல் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் காலமானார். தமிழில் பிரிட்டிஷாரால் நவீன காவல்துறையும், நீதிமுறையும் உருவாக்கப்பட்டதை ஒட்டி குற்றங்களை காவலர் நவீன முறையில் துப்பறிவதன் மீது வாசகர்களின் ஆர்வம் உருவாகியது. தொடக்ககால தமிழ் பொதுவாசிப்பு எழுத்துக்கள் பெரும்பாலும் துப்பறியும் மர்மக் கதைகளாகவே அமைந்தன.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *