மனம் புனிதமற்றது. குழந்தைகளுக்கு விலக்கு அளிக்கலாம்.
கொலை, பாலியல் வன்முறைகள், வஞ்சனைகள், திருட்டுகள் என பல குற்றச் செயல்கள் கணத்துக்கு கணம் முளைவிடும் அநியாய பூமி எமது மனவெளியே. அங்குதான் புவியில் நடக்கும் அநியாயங்களின் விதைகள் முளைப்பதற்கான தருணம் பார்த்துக் காத்திருக்கின்றன. மனத்தில் குமிழ்விட்டு உடையும் அழுக்கான எண்ணங்களுக்கு மதம், நாகரிகம், கலாச்சாரம், சட்டமெல்லாம் உறைபோட முடியாது. மனத்தில் ஏற்படும் எண்ணங்களை மறைக்க நாம் நினைத்தாலும் முடியாது. நாம் எல்லாருமே வெள்ளை வேட்டி கட்டிய விலங்குகளே.
அடிக்காவிற்கு வருவோம். பெண்களில் ஒரு கிலோ கூடிவிட்டால் உண்ணாவிரதம், உணவு மாற்றம், ஜிம்னாசியம்… என ஓடித்திரிபவர்கள் பலரை எனக்குத் தெரியும். உடலமைப்பில் மாற்றம் செய்வதற்கு எவ்வளவு பணம் செலவிடுவார்கள்! புதிதாக, அறுவைச் சிகிச்சைப் பிரிவே உள்ளது. அதுபோன்று எடை குறைப்பு, உலகில் கப்பல் போக்குவரத்து, விமான சேவை போன்று ஒரு முக்கியத் தொழிலாகி விட்டது. வைத்தியர்கள், நியூறிசனிஸ்ட் உட்பட கோடிக் கணக்கானவர்கள் வேலைசெய்யும் பன்னாட்டு வர்த்தகமாக மாறியுள்ளது.
அதேபோன்று எந்தக் கவலையற்றும் இருவரது எடையைத் தனி ஒருவராகச் சுமந்தபடி நடமாடுபவர்களையும் கண்டிருக்கிறேன். அவர்களுக்கு உணவு, மன அழுத்தம், ஓமோன் என பல காரணங்கள் உள்ளது என அறிந்தாலும் மனத்தில் அவர்கள் எதிரே வரும்போது “அட இப்படியா” என்ற எண்ணம் தோன்றும். என்போன்று சிறிது மருத்துவ அறிவுள்ளவர்களாக இருந்தால், தலையின் உள்ளே அவசரமாக ஒரு சிறிய ஆய்வுக்கூடம் அமைத்து, அங்கு ஓமோன்களையும் அவர்கள் உணவுகளையும் ஆய்வுசெய்து காரணத்தை அறிய முயல்வோம்.
ஆனாலும் உடல் பருமனுக்கும் நான் சொல்லவரும் கதைக்கும் நேரடி சம்பந்தம் இல்லை. அடிக்கா, உடல் பருமனைத் தவிர மற்றும்படி அழகான பெண். வட்டமான சிரித்த முகம், நீலக் கண்கள், செந்நிறமான கூந்தல். மூழ்கவிருக்கும் படகிலிருந்து அவசரமாக நீரை வெளியே அள்ளிக் கொட்டுவது போன்ற பேச்சு. மற்றும்படி எல்லாவற்றிலும் சாதாரணப் பெண்ணாகவே தோன்றினாள்.
இதுபோல் சிறிய மிருகவைத்திய சாலையில் நேர்சாக வருவதற்கு மாடல் அழகிபோல் உடல் இருக்கத் தேவையில்லை. மிருகங்கள்மீதான நேயமே முதற் தகுதி. மற்ற விடயங்களைக் காலப்போக்கில் கற்றுக் கொள்ளலாம். இந்த நேர்சிங் தொழிலில் நாய்களை உயரமான மேசைகளுக்குப் பரிசோதனைக்குத்
தூக்குவதற்கும், தனியறைகளுக்குக் கொண்டு செல்வதற்கும் உடற்பலம் தேவை. சில இன நாய்கள் அறுபது கிலோ இருக்கும். அவற்றுடன் வேலைசெய்ய குறைந்தபட்ச உடற் பலமிருந்தால் போதுமானது என்ற எண்ணத்துடன் அவளுடன் உரையாடினேன்.
ஒரு கிழமையில், ஒரு நாள் மட்டும் நான் வேலை செய்யும் சிறிய விலங்கு மருத்துவ சிகிச்சை நிலையம். நான் முக்கியமான சத்திர சிகிச்சைகள் செய்தாலும், நானும் அந்தப் பெண்போல மணித்தியாலத்திற்கு வேதனம் என வேலை செய்பவன் என்பதால், உடன் வேலை செய்பவர்களுடன் பேச்சு கொடுத்து அவர்களை நட்புடன் அறிந்துகொள்ள வேண்டும். அவுஸ்திரேலியா… வயதோ, பதவியோ வித்தியாசமற்றுப் பெயரிட்டு அழைத்துக்கொள்ளும் சமத்துவ பூமி.
நான் வார்த்தைகளால் தூண்டில் போட்டு அடிக்கா என்ற அந்தப் பெண்ணிடமிருந்து அறிந்தவை அதிகமில்லை. அவளது பூர்வீகமான வேலை பற்றி அறிந்தேன். இதுவரை விடுமுறையில் போவோரின் பூனைகளைப் பராமரிக்கும் ‘கற்றறி’ என்ற இடத்தில் வேலை செய்தவள். நாய்களிலும் பார்க்க பூனைகளை நேசிப்பவள். அவளிடம் ‘கிளியோ’ என்ற கருப்பு வெள்ளைப் பூனை ஒன்று உள்ளது. எவரும் விடுமுறைக்குச் செல்லாத கொரோனா காலத்தில் அங்கு ஆட்குறைப்பு செய்ததால்,
அவளது வேலை போய்விட்டது. புதிதாக வேலை தேடியபோது, இந்த மிருகவைத்திய சாலையில் பகுதிநேர வேலை, ஒரு ஏஜென்சி மூலம் கிடைத்தது.
மிருகங்களுக்கு வைத்தியம் பார்க்கும்போது மனிதர்களிடம்போல கேள்வி கேட்டு விடயங்களை அறிந்துகொள்ள முடியாது. அவற்றின் உடல்மொழியில் தெரியும் மாற்றங்களை, அதன் உரிமையாளரிடம் கேட்டறிந்தும், நாம் அவதானித்தும் அறிந்துகொள்ள வேண்டும்.. பல வருடங்கள் மிருகவைத்தியராக வேலை செய்ததால் பெற்றுக்கொண்ட அறிவை வைத்து, மனிதர்களை அவதானிக்கும் தன்மை என்னையறியாது என்னில் தஞ்சமடைந்து விட்டது. மனிதர்கள் அடிப்படையில் இன்னமும் இரண்டுகால் மிருகங்கள் தானே?
நான் ஒருமுறை பாத்ரூம் போனபோது அங்கிருந்து என்னெதிரே இரண்டு கண்களில் விளக்கு எரியும் பிரகாசமான முகத்துடன் அடிக்கா வந்தாள். இதுவரை உபாதையை அடக்கியபடி வேலை செய்துவிட்டு வந்திருக்கிறாள் என நினைத்தேன். அதன்பின்பு சிலமணி நேரத்தில் இருமுறை பாத்ரூம் போய் வந்ததை கவனித்தேன். சாதாரணமானவை என என் மருத்துவ மூளையால் புறந்தள்ள முடியவில்லை. ஒன்று சலரோகமாக இருக்கலாம் அல்லது ஏதாவது மருந்துகளது பக்கவிளைவாகவும் இருக்கலாம்.
அன்று காலையில் ஒரு சிறிய மால்ரிஸ் இனநாயை ஒரு இளம் தாயும் இரு பிள்ளைகளும் கொண்டு வந்தார்கள். ‘பிங்கோ’ என்ற பெயருள்ள அந்த நாய் திடீரென வாந்தி எடுப்பதாகச் சொன்னார்கள்.
பிங்கோவின் வயிற்றை விரல்களால் தடவிப் பரிசோதித்துப் பார்த்துக்கொண்டே ‘ஏதாவது கொடுத்தீர்களா?’ என்று தாயிடம் கேட்டபோது ‘இல்லை’ என்றார். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது அங்கு இரண்டங்குல அளவில் செம்மறி ஆட்டின் கால் எலும்புத் துண்டு என்னைப் பார்த்துச் சிரித்தது. எக்ஸ்ரேயைக் காட்டிக் கேட்டபோது, தாயும் மகனும் எலும்பு கொடுத்ததை மறுத்துவிட்டதுடன் எங்காவது குப்பைக் கூடையைக் கிளறி அங்கிருந்து பொறுக்கி யிருக்கலாம் என்றனர். நாங்கள் சுத்தமான சூசைப் பிள்ளைகள், என்பது அவர்கள் கதை!
சில கணங்களில் அமைதி பளிங்குத் தரையில் விழுந்த கண்ணாடிப் போத்தலாகச் சிதறி உடைந்தது. அந்தத் தாயுடன் வந்திருந்த ஏழுவயதான சிறுமி, திடீரென, பாடசாலையில் ஆசிரியருக்கு உயர்த்துவதுபோல் இரண்டு கைகளையும் உயர்த்தி “பாட்டி கொடுத்ததை நான் பார்த்தேன். நான் தடுத்தேன். ஆனால், அது ஒன்றும் செய்யாது என்று பாட்டி சொன்னார்கள்” எனத் திருவிழாக் கூட்டத்தில் யாரோ ஊசியால் குத்திய பலூனாக வெடித்தாள்.
நான் சிரித்தேன். குழந்தைகளுக்குப் பொய் சொல்லத் தெரியாது என்ற எண்ணம் மின்னி மறைந்தது.
“எனது அம்மா கொடுத்திருக்கலாம். எங்களுக்குத் தெரியாது.” ஒப்புதல் வாக்குமூலம் தாயிடமிருந்து வந்தது.
“இந்த எலும்பு பெரிதானது மட்டுமல்ல, அதன் முனைகளும் கூரானது. குடலை வெட்டித் தாமதிக்காது எடுக்க வேண்டும்,” என்றேன்.
அவர்கள் சம்மதித்து எங்கள் பொறுப்பில் பிங்கோவை விட்டுச் சென்றார்கள்.
ஏற்கெனவே வழமையாக வேலை செய்யும் ஷரன் கடமைக்கு வந்தபோதிலும் பிங்கோவைப் பரிசோதனை அறையிலிருந்து சேர்ஜரி தியேட்டருக்குள்ளே எடுத்து வரும்படி அடிக்காவிடம் கூறினேன். அவள் அதனது கழுத்தில் வலது கையை வைத்துத் தூக்க முனைந்தபோது, “பூனைகளைக் கழுத்தில் பிடித்துத் தூக்கலாம். ஆனால், நாய்களைக் குட்டியாக இருந்தாலும் அவ்வாறு தூக்கக் கூடாது. அவற்றின் கழுத்தில் வலிக்கும். சில நேரத்தில் கழுத்தே முறிந்துவிடும்” என்றேன். அப்போது அடிக்காவின் கன்னக்கதுப்பு பழுத்துச் சிவந்தது .
அவள் பூனைகளை மட்டும் தூக்கிப் பழகியதால் வந்த பழக்கம் என நினைத்து, பிங்கோவின் வயிற்றின் கீழ் எனது ஒரு கையை வைத்து மறுகையை முதுகில் வைத்துத் தூக்கிக் காட்டி, இவ்வாறு தூக்கிக்கொண்டு தியேட்டருக்கு வரும்படி அடிக்காவிடம் சொன்னேன்.
தனக்கு நடக்கப்போவதை அறியாத பிங்கோ அந்த மேசையில் வாலை ஆட்டியபடி எனது கையை நக்கியது. தியேட்டர் மேசையில் வைத்து ஊசியிலிருந்த மயக்க மருந்து கொடுத்து மயக்கினோம். தொடர்ச்சியாக வாயு மயக்க மருந்தும் ஒட்சிசனும் கொடுப்பதற்கு அதன் தொண்டைக்குள் சுவாசத்திற்கான குழாயை உட்செலுத்த முயன்றபோது அங்கும் தவறாக அதன் கழுத்தை அடிக்கா உயர்த்துவதைக் கண்டதும், அடிக்காவிடம் நாயின் வாயைத் திறந்து மேல் கடைவாயில் விரல்களால் பிடித்துக் கழுத்தை உயர்த்தும்போது தொண்டை, வாய் என்பன நேர்கோட்டில் வருமென விளக்கினேன்.
அப்படியே அவள் செய்தபோது குழாயைச் செலுத்தி ஒட்சிசனைக் கொடுத்தேன். சத்திர சிகிச்சைக்குரிய மற்றைய விடயங்களை நான் செய்துவிட்டு, வயிற்றுப்பகுதி மயிரை இப்பொழுது வழிக்க வேண்டும் என்றேன். அங்கும் எப்படித் தோலோடு சமாந்திரமாக கிளிப்ரைப் பிடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தேன்.
ஏற்கெனவே நான் செய்யச்சொன்ன விடயங்களைச் செய்ததால் அடித்து வெளுத்தபின் சுருங்கிய பருத்தி சேலையாக அடிக்காவின் முகம்.
அவளைப் பார்த்துப் பரிதாபப்பட்டு, சிரித்துவிட்டு “இன்று உன்னைத் துன்புறுத்திவிட்டேன். இதுவரையும் செய்தது போதுமானவை. மிகுதியை அடுத்த கிழமை பார்க்கலாம்.”
வயிற்றுப் பகுதியை அல்ககோல் கொண்டு சுத்தப்படுத்த மட்டும் ஷரனை அழைத்தேன். வயிற்றைச் சுத்தமாக்காது போனால் நோய்த் தொற்று வந்துவிடும் என்பதால் அந்த வேலையை அடிக்காவிடம் சொல்லவில்லை.
“முதல் நாளிலே உன்னைக் கஷ்டப்படுத்திவிட்டேனா,” என மீண்டும் கேட்டு, எனது குற்ற உணர்வில் சிறிது தைலம் தடவினேன்.
மெதுவான சிரிப்புடன், “பழக வேண்டிய விடயங்களே..” என்றாள்.
இப்போது அந்த நாய் பிங்கோ, மேசையில் மயங்கிய நிலையில் ஒழுங்கான சுவாசத்துடன் எனது சேர்ஜரிக்குத் தயாராக இருந்தது.
நான் எனது கையைக் கழுவிச் சுத்தப்படுத்தி விட்டு, பிளேட் தரும்படி மீண்டும் அடிக்காவைப் பார்த்தேன்.
அடிக்கா திருதிரு என முழித்தாள்.
அப்பொழுது ஷரன் பிளேட்டை எடுத்து உறையை இரண்டாக விரித்து எனது கையில் பிளேடை, அவள் கைபடாது என்னிடம் தந்தபோது “அடிக்கா, இப்படித்தான் தர வேண்டும்” என்றேன்.
அதன் பின்பு எனது கருமத்தில் கண்ணாக இருந்தேன். நான் பிங்கோவின் வயிற்றில் வெட்டி அதனது பெரும் குடலின் ஆரம்பத்தில் அடைத்திருந்த எலும்புத் துண்டை எடுத்தபோது அது இரண்டு துண்டுகளாக வந்தது. நல்லவேளையாக குடலில் எதுவித பாதிப்பும் இல்லை. புதிய நேர்ஸாக அடிக்கா இருந்ததால் வழமையான நேர்ஸான ஷரனும் உதவியாக நின்றாள்.
அடிக்காவுக்கு பயிற்சியளிக்க, எனக்குத் தேவையான சேர்ஜரிக்கான பல உபகரணங்களை அவளிடமே தொடர்ந்து கேட்டபடி யிருந்தேன். எலும்பை எடுத்துவிட்டு இறுதியில் குடலைத் தைப்பதற்கு நூலைக் கேட்டேன்.
அதை எடுத்துத் தந்ததும், அதனது அலுமினியம் உறையைப் பிரித்துத் தைத்துவிட்டுத் தொடர்ந்து தசை, தோல் என்பவற்றை வேறாகத் தைத்தேன். கிட்டத்தட்ட எனது வேலையைத் திருப்தியுடன் முடிக்கும் நேரத்தில், அடிக்கா “குடலைத் தைப்பதற்குச் சரியான அளவுள்ள நூலைத் தந்தேனா”
என்றபோது அவள் முகத்தில் குழப்பம் கரிக் கோடுகளை பிக்காசோபோல் வரைந்திருந்தது.
“அப்படித்தான் நினைக்கிறேன். இல்லையென்றால் உறையைப் பிரித்தபோது எனக்குத் தெரிந்திருக்கும். உடனே திருப்பிக் கேட்டிருப்பேன்” என்றேன் உறுதியாக.
அடிக்கா கண்களை அகலமாக விழித்தபடி, “எனக்கு சந்தேகமாக உள்ளது” என்றபோது குளிரூட்டப்பட்ட அந்த தியேட்டர் அறையில் வேர்வைத் துளிகள் அவளது முகத்தில் உழுது விதைத்த வயலாக விளைந்திருந்தன.
அதைப் பொருட்படுத்தாது நான் எனது வேலையை முடித்துவிட்டு, வேறு எதாவது எலும்பு தங்கியிருக்கிறதா எனப் பார்ப்பதற்கு, மார்ஸ்சை மீண்டும் எக்ஸ்ரே எடுத்தேன். அதைச் செய்வதற்கு ஷரன் உதவினாள்.
இரண்டு மணித்தியால வேலையை முடித்துவிட்டு, ஒரு கோப்பியைத் தயாரித்துக் குடித்தபடி மீண்டும் தியேட்டருக்கு வந்தபோது அடிக்கா, நான் குப்பைகளைப் போட்ட அந்தக் கூடையைக் கிளறியபடி நின்றாள்.
“என்ன தேடுகிறாய்?”
“ இல்லை… நான் தந்த நூலின் மேலுறையைத் தேடுகிறேன்” என்றாள் அடிக்கா. “குடலைத் தைப்பதற்குச் சரியான அளவுள்ள
நூலைத் தந்தேனா..?” எனத் தொடர்ந்து கேட்டாள். அவள் முகத்தில் குழப்பம் கோடுகள் வரைந்திருந்தது.
“அப்படித்தான் நினைக்கிறேன். இல்லையென்றால் உறையைப் பிரித்தபோது எனக்குத் தெரிந்திருக்கும். உன்னிடம் திருப்பிக் கேட்டிருப்பேன்,” என வார்த்தைகளை அழுத்தமாக அடிக்கோடிட்டுச் சொன்னேன்.
கண்களை அகலமாக விரித்தபடி என்னைப் பார்த்து “எனக்கு சந்தேகமாக உள்ளது” என்றபோது அவளது கண்களின் இமைகள் அடிபட்ட பறவையின் சிறகுகளாகத் துடித்தன.
ஏன் இவள் இப்படி இருக்கிறாள் என்ற எண்ணம் ஏற்பட்டபோதும், அதைப் புறந்தள்ளி எனது வேலையை முடித்துவிட்டு நான் செய்தவற்றை கம்பியூட்டரில் எழுதினேன். அதை முடித்து அரைமணி நேரத்தில், மீண்டும் தியேட்டருக்கு வந்தபோது அடிக்கா நான் குப்பைகளைப் போட்ட அந்த பிளாஸ்ரிக் கூடையை மீண்டும் கிளறியபடி நின்றாள்.
“என்ன தேடுகிறாய்?”
“இல்லை, நான் தந்த நூலின் மேலுறையைத் தேடுகிறேன்” என்றாள் மீண்டும்.
நான் எனது குரலில் மெதுவான கோபத்தைப் படரவிட்டபடி “அதைப்பற்றிக் கவலைப்படாதே. வேலை முடிந்தது. நீ தவறு
விட்டிருந்தால் நான் கண்டுபிடித்திருப்பேன். அதற்கும் மேலாக ஏதாவது தவறு நடந்திருந்தால் அதற்கு நானே பொறுப்பேற்பேன். நீ கவலைப்படாதே” என்றேன்.
இதைக் கேட்டபடி அங்கு நின்ற ஷரன், ஒரு புன்னகையைப் பல்லிடுக்குகளின் வழியாக உதிர்த்தாள்.
எனது பதிலில் அடிக்காவுக்குத் திருப்தி இல்லை என்று தெரிந்தது.
நான் எனது வேலையை முடித்துக்கொண்டு வெளியேறும் தருணத்தில் “என்னை மன்னிக்க வேண்டும். நான் மீண்டும் ஒருமுறை என்னை உறுதிப்படுத்த விரும்புகிறேன்” என்றாள்.
அதுவரையும் பொறுமையாக பதில் சொன்ன எனக்கு மனத்தில் எரிச்சல் வந்தது. ஆனாலும் பொறுமையுடன் “கவலைப்பட வேண்டாம்” என்று பதில் கூறிவிட்டு வெளியேறினேன்.
எனது மனத்தில், இந்தப் பெண்ணிடம் ஏதோ குறையுள்ளது எனத் தோன்றியது. ஆனால் அதன்பின்பு அடிக்காவை நான் நினைக்கவில்லை.
அடுத்த கிழமை நான் மீண்டும் வேலைக்குச் சென்றபோது எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்தப் பெண்ணைத் தேடினேன். “ஏன் அடிக்கா இன்று வரவில்லை?” என்று ஷரனிடம் கேட்டேன்.
ஷரன் “அது சேக்ஷ்யரின் துயர நாடகமாக அரங்கேறியது” என்றபடி விவரித்தாள்.
“நான் வேலைமுடித்துப் போவதற்கு வெளியே போய், வாகனத்திலிருந்து எனது மகனுக்கு போன் பண்ணிக் கொண்டிருந்தபோது, கிளினிக் திறந்திருந்தது போன்ற உணர்வு ஏற்பட்டதால் திரும்பிவந்தேன். அப்போது அடிக்கா மீண்டும் வெளியே போடப்பட்ட குப்பையைக் கிளறியபடி யிருந்தாள். என்னைக் கண்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.
“அடிக்கா என்ன நடந்தது?”
தயங்கியபடி “நான் சரியானதைக் கொடுத்ததாகத் தெரிந்தாலே நான் இன்று தூங்கமுடியும். அதற்காகவே முயற்சி செய்கிறேன்.”
“ஏன் இப்படி பதற்றப் படுகிறாய்? கவலைப்படாதே. இது பிரச்சினையல்ல.”
“தற்பொழுது நான் சில மருந்துகள் எடுக்கிறேன். அந்த மருந்தின் காரணமாகச் சில விடயங்கள் நினைவில் நிற்பதில்லை. எனது தவறால் ஒரு பிரச்சினையும் வரக்கூடாது” என்று அவள் சொன்னபோது கண்களில் கண்ணீர் நிரம்பியது.
“கவலைப்பட வேண்டாம்” எனச் சொல்லி அனுப்பினேன்.
அதன் பின்பு, நான் அவளது நிலையை அறிவதற்கு அவளது வீட்டுக்கு போன் பண்ணினேன்.
“நான் உனது கணவருடன் பேசமுடியுமா?”
“மத்தியூ இப்பொழுது நித்திரை. ஏன்?”
“கொஞ்சம் உனக்கு ஆறுதலாகப் பேசச்சொல்ல வேண்டும்.”
“அதுபற்றிக் கவலைப்பட வேண்டாம்,” என்றாள்.
அடுத்த நாள் எடுத்தபோது, மீண்டும் மத்தியூவைக் கேட்டேன்.
மத்தியூ தூங்குவதாகச் சொல்லிவிட்டு, அவள் தனது சிமாட் போனில் வீடியோ காட்டியபோது ஓர் உருவம் தெரிந்தது. ஆனால், அந்த உருவத்தின் மீது ஒரு கறுப்பு வெள்ளைப் பூனை படுத்திருந்தது. அத்துடன் அந்த உருவம் மாஸ்க் போட்டிருந்தது.
எனக்கு சந்தேகம். அப்படி ஒரு கணவன் இருப்பது உண்மையா? ஆனால், உறுதிசெய்ய முடியாது.
அந்த விடயத்தை நான் பொஸ்சிடம் (கிளினிக் உரிமையாளரிடம்) சொல்லியபோது இருவரும் அடிக்காவை அழைத்துப் பேசினோம்.
தனது இம்பொஸ்ரர் சிண்ரோம் (Imposter Syndrome) என்ற மனவியாதிக்கு மருந்தெடுப்பதாகக் கூறினாள்.
இங்கு பல மருந்துகளோடு வேலை செய்வதும், மிருகங்களுக்கு மருந்துகள் கொடுப்பதுமான இடத்தில் வேலைக்கு வைத்திருப்பது கடினமானது எனச் சொல்லியதால் அழுதபடி விலகிச் சென்றாள்” என ஷரன் முடித்தாள்.
இந்தளவு விடயங்கள் ஒருநாளில் நடந்திருக்கிறதே என எனக்கு ஆச்சரியமாக இருந்தது. முந்திய கிழமை போன்று இலகுவாக அடிக்காவை மறக்கமுடியவில்லை.
இம்பொஸ்ரர் சிண்ரோம், என்பது என்னவென அறிந்தபோது, செய்யும் விடயங்களில் நம்பிக்கை ஏற்படாத மனநிலை. அத்துடன் தற்காலச் சமூகத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நான் இல்லை, என்பதே. அத்துடன் தொடர்ச்சியாக இந்த மனநிலை மனஅழுத்தத்தில் கொண்டு தள்ளும் என்று அறிந்தேன்.
பூனைகளுக்கு உணவளிப்பது, சுத்தம் செய்வது என்று கற்றரியில் தொடர்ச்சியாக ஒரேமாதிரி வேலையைச் செய்துகொண்டிருந்தால் இந்தப் பிரச்சினை அடிக்காவிற்குப் பெரிதாகியிராது.
அந்த வேலையிலிருந்து இங்கு வந்தபோது, நான் பெரிய வேலைகளைச் செய்வித்து அதன்மூலம் அவளைப் பயிற்சியளிக்கிறேன் என நினைத்து முன்னே எம்பித் தள்ளியதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் பெரிதாக எதிர்பார்க்கும்போது அது எதிர்விளைவைக் கொடுக்கிறது. பிள்ளைகளால் பெற்றோர் எதிர்பார்ப்பைச் சமாளிக்க முடியாது போய்விடுகிறது.
அடிக்காவின் நிலைக்குக் கொரோனாவால் வேலையற்றுப் போனது காரணமா அல்லது புதிய வேலையில் அவளை உடனடியாக இறக்கிய நான்தான் காரணமா?
அடிக்கா என்ன நினைப்பாள்? இதுவரை வஞ்சகமில்லாது வளர்ந்திருந்த அவளது உடலை மனத்தில் ஆய்வுசெய்த நான், அவளது மனத்தை அறிய முனைந்தேன்.
ஒவ்வொருவரது மனக்குகையிலும் எப்படியான வவ்வால்கள் குடியிருக்கும்? அவை செட்டை விரித்துப் பறக்குமா? ஒரே இடத்தில் குந்தியிருக்குமா? ஒன்றுடன் ஒன்று மோதுமா? இல்லை, ஒன்றோடு ஒன்று புணருமா? அந்தக் குகைக்குள் என்னால் நுழைய முடியுமா?
நான் ஏன் இந்த வேலைக்குப் போயிருக்க வேண்டும்? மீண்டும் கற்றறி திறக்கும் மட்டும் அரசின் உதவிப்பணம் கிடைத்திருக்கும். வீணாக அவசரப்பட்டேன்? உதவிப் பணம் கிடைக்குமென எப்படி இருபத்திநாலு மணிநேரமும் வீட்டிலிருப்பது? நான்
குப்பையைக் கிளறாது இருந்தால் இந்த வேலை போயிராது. ஏன் செய்தேன்? எனது மருந்துகள் என்னைக் கைவிட்டுவிட்டனவா?
இப்படி அவள் சிந்திப்பாளா?
அடிக்காவின் நினைவுகள் என் மனத்தில் தொடர்ச்சியாக அரித்துக்கொண்டிருந்தன.
சில நாட்களின்பின்பு நான் கிளினிக் சென்றபோது அடிக்கா தனது வீட்டைக் கொளுத்தி விட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறாள் என்ற செய்தியை அறிந்தபோது ஆச்சரியத்தில் முழுக் கதையையும் சுரண்டினேன்.
இரவு அவசரசேவைப் பிரிவுக்கு ஒரு செய்தி வந்தது. வீட்டில் நெருப்பு பற்றிவிட்டது. அங்கு சென்றவர்கள் நெருப்பை அணைத்துவிட்டு, உள்ளே ஆராய்ந்தபோது பெரிய ரப்பர் பொம்மை பாதி கருகியபடி கட்டிலில் இருந்தது. அது எப்படி நடந்தது என விசாரித்தபோது “எனது கணவன் என்னைத் தாக்கியதால் நான் அவரைக் குத்திவிட்டேன். அவரது உடலை எரித்து அழிக்க முயன்றேன்” என பதில் வந்தது. அதன்பின் விசாரணையில் எக்காலத்திலும் அடிக்காவுக்கு ஆண் துணை இருக்கவில்லை என்பது தெளிவாகியது.
“அப்படியாயின் மத்தியூ என்பது யார்?”
“ அடிக்கா அப்படியான ஒரு கற்பனையில் வாழ்ந்துள்ளாள்.”
“அடிக்காவிற்கு என்ன நடக்கும்?”
“வைத்தியசாலையில் வைத்துள்ளார்கள்.”
“உறவினர்கள்?”
“பெற்றோர் இருக்கிறார்கள். ஆனால், அவர்களால் ஏதும் செய்யமுடியாது.”
“இது எப்போது நடந்தது?”
“கடந்த புதன்கிழமை. அதாவது எங்களிடம் வேலை செய்தபின்னர் வந்த அடுத்த புதன்கிழமை.”
எனது மனத்தில் தொடர்ச்சியாக வவ்வால்கள் பறக்கத் தொடங்கின.