வழி திறக்கவில்லை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 2, 2022
பார்வையிட்டோர்: 5,360 
 
 

வாகனத்தின் வானொலியை இயக்கினான்.’ குட்டிக்கதை’ ஒன்றை ஒலிப்பொருப்பாளர் பவானி கூறிக் கொண்டிருக்கிறார். இதில் இடம் பெறுகிறது ‘மனம்’ என்ற இத்தூணித்துண்டு. அது தலையிலே, நெஞ்சிலே எங்கையாச்சும் இருந்துட்டு போகட்டும். “ஒரு ராஜா….” ஏன் அவரை இழுக்கிறார்கள். பிரபலங்கள் வர வேண்டும் போல இருக்கிறது. அவர் ஒவ்வொரு நாளும் சந்தனக் கட்டைகள் விற்கிற கடைக்கு முன்னால் நடந்து போகிறார். என்ன, நடை பயில்கிறாரா?. எளிமையாகப் போகிராராம். ஊரிலே தெரு, கிருவெல்லாம் நடக்கிறார் போல இருக்கிறார். நாட்டார்க்கதைகள் லொஜிக் மீறல்களுடன் தான் ஆரம்பிக்கிறது, நடக்கிறது, முடிகிறது. ஏன்?. அழுத்த‌ம் கொடுக்க…மனதிலே ஒருவர் தோன்றுகிறார். அவரின் அடுத்த நகர்வு என்ன?, தெரியாது. எனவே எளிமையாக தொடர்வது. அதுவும் ஒருவிதத்திலே…சரி போலவே தோன்றுகிறது. இன்று லொஜிம் மீறலையே கதைக்கருவாக எடுத்து, கற்பனைக் குதிரைகளை பறக்க வைத்து ஃபான்டாசிக் கதையாக…கதிரையின் நுனியில் இருக்க வைத்து விடுகிறார்கள். தொழினுற்பம் கதை சொல்லி. சிலநேரம் அதற்கு விஞ்ஞானக் கதை என்ற தலைப்பும் இடப்படுகிறது.

கதை இது தான். ராஜா கடைக்குமுன்னால் நடந்து போகிறார். கடைக்காரர், முதலை எல்லாம் போட்டு சந்தனக்கட்டைக் கடை திறந்திருக்கிறார். பூஜைப் பொருட்கள் விற்கிற கடை இருக்கிறது.விறகாலை இருக்கிறது. இந்தியாவில்…சந்தனக்கட்டை வெட்டின‌ வீரப்பன் புகழ் அந்த மாதிரி பறக்கிறது. ஆனால் நிஜத்தில்…இந்தக்கடை இருக்கிறதா?. சவ இல்லம் இருக்கிற போது, வாங்கிறவர் இருக்கலாம் தான். கதை நம் காலத்தில் நடக்கவில்லை. அரசர் காலம். இன்று தடை செய்யப்பட்டவை சில அன்று விடுதலைப் பெற்றிருந்தன. அப்பவும் சாதாரணர் வாங்க முடியாது. அப்படியென்றால் விலையான பண்டம். ஏன் அந்தக் கடையைப் போய்த் திறந்தார்?. அரசர் போறார் எனத் தெரிகிறது. இவர் மனதில்,” அரசன் செத்துத் தொலைத்தால் நம்கட்டைகள் அத்தனையும் விற்பனையாகி விடுமே!” என்ற நினைப்பு எழுகிறது.அரசரை சந்தனக்கட்டைகளை அடுக்கியே எரிப்பார்கள். ஒரு லோடு போகும். திரும்ப வாங்கி விற்கிற போது…என்ன யோசிப்பாராம்?. கதையைக் கேட்கிற போது கேள்விகள் கேட்கக் கூடாது. இலங்கை அரசு , வடக்கு, கிழக்கு இணைப்பையோ, சுயாட்சியையோ… ஏன் மாகாணவரசையோ நடைபெற விடவில்லை?. இந்திய அரசு வரும் வரையில் மாவட்டசபைகள், அதிலும்யாழ் மாவட்டசபைகளை தமிழ்க்கட்சிகள் கைப்பற்றி விட்டது என்று அன்றைய இலங்கை ஜனாதிபதி கலவரத்தை ஏற்படுத்தி தமிழ்ப் பொருளாதாரத்தையே சிதைத்தார்; உயிர்களைப் பறித்தார். இந்திய அரசால் தான் மாகாணவரசு ஒப்பந்தத்தையே எழுத முடிந்தது. நம் அரசியல்வாதிகளுக்கு எதன் பெறுமதி தான் தெரிகிறது. சந்தையிலே கூச்சல் போட மட்டும் தெரிகிறது. அப்பப்ப மக்களின் தலைகள் உருளும். உருப்படியாக கவனிக்க அவர்களுக்கு கற்றுக் கொடுத்தாலும் தலையிலேறுமா?

அரசர் அக்கடை முதலாளியின் முகத்தைப் பார்க்கிற போதெல்லாம்” இவனை சிறையில் போட வேண்டும்”, அரசர் காலத்தில் கழுவேற்றுவது சர்வசாதாரணம்,”இவனை தூக்கிலே போடவேண்டும்” …இப்படியே …. அவருக்கு சிந்தனை பறக்கிறது. அதேசமயம் கடை முதலாளியும் “இந்த அரசர் செத்தால் கட்டைகள் விற்பனையாகுமே” என ஒரே நேரத்தில் யோசிக்கிறான். இது தான் சங்கதி. மனம் யோசிக்கிறதை இருவருமே ஒருத்தருக்கொருத்தர் கொஞ்சுண்டு புரிந்து கொள்கிறார்கள். அரசருக்கு குழப்பம். அவர் ஒரு பாரதி. மக்களை நேசிப்பவர். மரண தண்டனை அளிக்க விரும்பாதவர். எனவே தன் பிரதான அமைச்சரிடம் கவலைப்பட்டுக் கூறுகிறார். அமைச்சர் அறிவுடையவர். என்ன காரணம் என அறிய விழைகிறார். “சரி,நான் பார்த்துக் கொள்கிறேன். எனக்கு இரண்டு, மூன்று நாள்கள் வேண்டும்” என்கிறார். அரசனும் சம்மதிக்கிறார். “நான் நல்ல மாதிரி நினைக்கிறதாக மாற‌ வேண்டும், ஆனால், இதற்காக போறதை விட மாட்டேன். போவேன், வருவேன்” என்கிறார். அமைச்சர்புன்சிரிப்புடன் போகிறார். இரவு போல கடைக்கு மாறு வேடத்தில் போகிறார்.” சந்தனக்கட்டை விலை என்ன?” என்று கேட்கிறார்.” வாங்கிற மூஞ்ஜியைப் பாரு. இந்த வழியாலே போற அரசர் இறந்தாலாவது…விற்பனை ஆகும்” என பதில் இறுக்கிறார். “அரசர் தான் என்னை அனுப்பினார். என்ன விலை?” கேட்கிறார். கடை முதலாளியின் முகம் மலர்ச்சி அடைகிறது.’ நம் மன்னர் என் கஸ்டத்தை புரிந்திருக்கிறார்’ என்று மகிழ்கிறார். அரசர் என்பதால் விற்கிற விலையை உயர்த்தவில்லை. “இங்கே பார் விற்கிற விலை போட்டிருக்கிறது” என்று தொங்கிற பட்டியைக் காட்டுகிறார். ஒன்றை வாங்கிற போது…இந்த விலை. ஐந்தை வாங்கிற போது ஐந்து வீதம் கழிவு, பத்திற்கு பத்து வீதம் கழிவு…” என்கிறார். அத்தனையும் வாங்கினால் கடையை மூட வேண்டி வரும். கடை மூடப்படக் கூடாது. எத்தனை விசயங்கள் இருக்கின்றன, இரண்டு வரியிலே குட்டிக்கதை என்றாலும்…முடித்து விட முடியாது பாருங்கள். கணிசமான கட்டைகளை வாங்கி விட்டு “நீ அரசருக்கே கழிவு விலையில் தருகிறாய். பாராட்டுக்கள். தற்போது அரசருக்கு இவ்வளவு…தான் வேண்டி இருக்கிறது. அவரிடம் உன் மனக்குறையையும் தெரிவிக்கிறேன். மற்றவர்களும் வாங்க ஆவன செய்வார். கவலைப்படாதே” என்றவர், “நீ சொன்னதை விட அரசர் உன்னிடம் கொடுக்கத் தந்த பணம் அதிகம். மறுக்காமல் வாங்கிக் கொள்” என இரண்டு மடங்குப் பணத்தைக் கொடுத்து விட்டு, “உன்னுடைய வண்டியிலே ஏற்றி பவானி சத்திரத்திலே இறக்கி விடு” என்று விட்டுப் போகிறார். கடைக்காரரும் உடனேயே மகனைக் கூப்பிட்டு வண்டியில் ஏற்றி அனுப்பி விடுகிறார்.

அடுத்த நாள் அரசர் வருகிறார். அவர் மனதில் அன்று அவன் மேல் வெறுப்பு ஏற்படவில்லை. ஆச்சரியமாகவிருக்கிறது. அதே சமயம் ” அரசர் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும்” என அவன் மனசிலே வாழ்த்துகிறான். இந்த மன அலைகள் விஞ்ஞானபூர்வமாக பயணிக்கின்றன எனக் கண்டறிந்திருக்கிறார்கள். பழைய நாட்டார் கதைகளில், எவ்வளவு துல்லியமாக கருப்பொருளாக…வைத்து குட்டிக்கதைகளாக்கி இருக்கிறார்கள். ஏதோ நாம் நினைக்கிறோம். இப்ப தான்…எல்லாம் நடப்பதாக. அது கிருஸ்துக்கு முதலே தொடங்கி விட்டிருக்கிறது.

என்ன நம்ம செல்வனுக்கு பிரச்சனை என்றால் நாம் சிங்களவர்களை நினைத்த மாத்திரத்திலே வெறுக்கிறோம் . சிங்களவர்களும் தமிழர்களை வெறுக்கிறார்கள். ஏன்?. நம் இருவர் மனத்தில் ஓடும் எண்ணங்களை இருவருமே புரிந்து கொள்கிறோம். அதனால் தான் ஏற்படுகிறதா?. அவனுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அப்ப நாம் மாறி சிந்தித்தால், அங்காலப் பக்கமும் மாறும் சிந்தனை வருமா?. புத்தர்,யேசு, காந்தி எல்லோரும் இதற்காகத் தான் அகிம்ஸையைப் போதித்தார்கள். கரடு முரடான சூழலிலும் காந்தியின் ஒளிர்வை வெள்ளைக்காரர்கள் இனம் கண்டிருக்கிறார்கள். சதா காந்திக்கு வில்லனாக இருந்த இங்கிலாந்து முன்னாள் பிரதமரான வில்லியம் சேர்ச்சில், காந்தி இறந்த போது “நாங்கள் காந்தியைக் காப்பாற்றி இருந்தோம். நீங்கள் விடுதலையை அளிக்கிறோம் என்று கூறி கொஞ்ச நாளிலே சுட்டுக் கொன்று விட்டீர்களே” என்கிறார். கொன்றவனும் காந்தியின் மனதில் ஓடுறதைக் கண்டிருக்கிறான். “முஸ்லிம் மக்கள் சகோதரர்கள்”. அது பிடிக்காமலே தான் கொன்றிருக்கிறான். சாதாரண சிங்கள மக்களுடன் நம்மால் நிபந்தனையற்று மனிசர்களாக பிழங்க, பழக முடியுமா? அப்படி பழகினால் தான் இந்த அலைகள் வேலை செய்யும். முடியக் கூடியக் காரியமா? செல்வனுக்கு வழி திறக்கவில்லை. நோ எக்ஸ்சிட். டெட் என்டிலே நிற்கிறான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *