ரவீந்திர நாத டாகூருடைய வங்காளிப் பாட்டை இங்கிலீஷ் படுத்திய நூல்களில் ”வளர்பிறை” என்பதொன்று. குழந்தைகளைப் பற்றிய பாட்டு. மிகவும் சாமர்த்தியமாக எழுதியிருக்கிறார்.
சில மொழி பெயர்ப்புகள் காட்டுகிறேன்:
”நான் எங்கிருந்து வந்தேன்? நீ என்னை எங்கே பொறுக்கியெடுத்தாய்?” என்று குழந்தை தாயினிடம் கேட்டது. அதற்குத் தாய் சொல்லுகிறாள்.
”என் செல்வமே.
எனது நெஞ்சிடை விருப்பமாய் மறைந்து நீ நின்றாய், நான் விளையாட்டுப் பெண்ணாக விளையாடிய பொம்மைகளிலே நீ இருந்தாய்.
களி மண்ணாலே நான் ஸ்வாமி பண்ணிப் பண்ணியழித்தபோது உன்னைத்தான் பண்ணினேன்.
வீட்டுக் குலுதெய்வத்துடன் நீ கோயில் கொண்டிருந்தாய், அதனை வணங்குகையில், நின்னையே வணங்கினேன்”
”விளையாட்டுப் பண்டங்கள்” என்று மற்றொரு பாட்டு. அதில் தந்தை சொல்லுகிறான்:
”குழந்தாய், குச்சிகளையும் மண்பண்டங்களையும் வைத்துக் கொண்டு அவற்றுடனே கலக்கும் வித்தையை நான் மறந்து விட்டேன். எனது விளையாட்டுக்கு விலையேறிய பண்டங்கள் வேண்டிப் பொன்னும் வெள்ளியும் திரளாகக் குவிக்கிறேன். நீ கண்ணிலகப்பட்ட பொருளையெல்லாம் வைத்துக் கொண்டு ரஸமான விளையாட்டுக்கள் படைக்கிறாய், என்றும் பெறக்கூடாதனவற்றை வேண்டி நான் வலிமையையும் நேரத்தையும் செலவிடுகிறேன்!”
”மேகங்களும் அலைகளும்” என்பதொரு பாட்டு.
அதிலே குழந்தை சொல்லுகிறது:
”அம்மா! அலைக்குள்ளே வாழ்வோர் என்னைக் கூப்பிடுகிறார்கள்.
”காலை முதல் இரவு வரை பாடுகிறோம். திக்குத்திசையில்லாமல் எங்கும் சுற்றி வருகிறோம்” என்று சொல்லி என்னையழைக்கிறார்கள்.
”எப்படி உம்முடன் சேரலாம்?” என்றால்
”கரையோரத்துக்கு வந்து கண்ணை மூடிக் கொள்ளு. அலைகள் வந்து உன்னைக் கொண்டு போகும்” என்கிறார்கள்.
அதற்கு நான்: ”வீட்டில் அம்மா என்னை மாலையில் தேடுவாள். அவளை எப்படி பிரிந்து வருவேன்?” என்று கேட்டால் அவர்கள் சிரித்துக்கொண்டு ஓடிப் போகிறார்கள்.
அம்மா, அதைக் காட்டிலும் நல்லதொரு விளையாட்டு எனக்குத் தெரியும், நான் தான் அலையாம் நீ ஏதோ ஒரு தேசத்துக் கடற்கரையாம்; நான் உருண்டுருண்டு வந்து சிரிப்புடன் உன்மடிமேல் மோதுவேன்”
”செண்பகம்பூ” என்பதொரு பாட்டு.
அதில் ஒரு குழந்தை தான் தாய்க்குத் தெரியாதபடி செண்பகப் பூவாக மாறி உச்சிக் கொம்பின் மேல் ஏறியிருப்பதாகக் கற்பனை பண்ணி அதைத் தாயினிடம் ரஸமான கதையாகச் சொல்லுகிறது.
”வீரன்” என்ற பாட்டு மிகவும் நயமானது.
அதில் குழந்தை தனது தாயை நோக்கிப் பின்வரும் கற்பனையாய் சொல்லுகிறது. காட்டு வழியில் தாய் பல்லக்கில் ஏறிவர, அருகே தான் குதிரையேறி வருவதாகவும், போரில் தான் அத்தனை கள்ளரையும் வெட்டிக் கொன்று துரத்தி யொழித்து விடுவதாகவும் அப்போதுதாய், இந்தப் பிள்ளையைக் கூட்டி வந்ததனாலே பிழைத்தோம். என்றெண்ணுவதாகவும், ஊரார் உவப்பதாகவும், தமயன் கேட்டு இந்த வலிமையற்ற பிள்ளை இத்தனை செய்தானா என்று வியப்பதாகவும், கற்பனை மிகவும் நன்றாக அமைந்திருக்கிறது.
தெய்வமே தாயென்று நம்பி எவன் குழந்தைபோல் நடக்கிறானோ அவனே ஞானி யென்பது மேற்படி நூலின்கருத்து.
– கதைக் கொத்து (சிறுகதை தொகுப்பு), முதற் பதிப்பு:1967, பாரதி பிரசுராலயம், சென்னை.
நன்றி: https://www.projectmadurai.org