(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கொழுந்து மடுவத்திலிருந்து லயத்திற்குச் செல்லும் குறுக்குப் பாதையில் இறங்கிக் கொண்டிருந்தான்; கறுப்பையா. அந்திக் கொழுந்தும் நிறுக்கப்பட்டு; சாக்குகளில் நிரப்பி; ஆள் தலையில் ஸ்டோருக்கு அனுப்பியாகிவிட்டது.
சற்று நேரத்தின் முன்னர், மாலை அங்காடியாக விளங்கிய கொழுந்து மடுவம் இப்பொழுது வெறிச்சோடிப் போய்க்கிடக்கிறது. வானம் அளந்து நிற்கும் மலைக்கு மேற்கே சூரியன் இறங்கிவிட, சில்லென்று வீசும் குளிர் காற்றும், வெண்தேவதை என பவனி வரும்பனிப்புகாரும் கண்ணாமூச்சு விளையாட இருளை துணைக்கழைக்கின்றன. கருமையைப் பூசிக்கொண்ட வானம் இரவை அரங்கேற்ற மெல்ல மெல்ல கவிந்து கொள்கின்றது.
கொழுந்து தராசு, தட்டு என்பனவற்றைத் தூக்கிச் செல்லும் “சாக்குக்காரன்’ ஸ்டோருக்குச் செல்லும் பாதையில் வாகை ரோட்டு முடக்கில் மறைய , “இனிப் போகலாம்” என்று திருப்பியடைந்த கொழுந்து கணக்குப் பிள்ளையும், ‘சுப்வைசரும் தத்தம் பாதையில் விரைகின்றனர்.
“என்னங்க தலைவரே… அவசரமாய் போறாய் போல…இருக்கு” கறுப்பையா திரும்பிப் பார்த்தான். அந்த ஒற்றையடிப் பாதையில் சீரில்லாமல் கிடக்கும் கற்களில் காலைப்பதித்து தாவித்தாவி; வேகமாக இறங்கிக் கொண்டிருந்தான் சின்னையா கிழவன்.
“பெரியவரே பார்த்துவாங்க கல்லு மானனட்டியா கிடக்கு”
சின்னையாக் கிழவன் அதிக உயரமில்லை. தொக்கையான உடம்பு. சிவந்த நிறம், வேகமாக நடக்கும் கறுப்பையாவை பிடித்து விட வேண்டும் என்ற நினைப்பில் கிழவன் மலைச்சரிவில், தேயிலை இடுக்கில், அந்த செம்மண் பாதையில் தன் தளர்ந்து போன கால்களை ஊன்றி, ஊன்றி வரும் போது கொழுந்துக் கம்பியில் நிறை சாக்கு ஆடி ஆடி இறங்குவதைப் போலிருந்தது.
“பெரியவரே அவசரமில்லை…ஆறுதலாக வாங்க” களைப்பில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க தவழ்ந்து கொண்டிருக்கும் கிழவனை நோக்கி மீண்டும் குரல் கொடுத்தான் கறுப்பையா.
“தம்பி தலைவரே இந்த கன்டக்டரை மாத்துறதுக்கு ஒரு வழி செய்யமாட்டீங்களா….? இரணியன் மாதிரி வந்து கொண்டுமைப் படுத்துறானே…” இரண்டு மைல் தொலைவிற்கு அப்பால் உள்ள தேயிலைத் தொழிற்சாலைக்கு கொழுந்துச் சாக்கைத் தூக்கிச் சுமந்து சேர்த்துவிட்டு, வந்த களைப்பில் பொரிந்து கொட்டினார் கிழவர்.
கிழவனின் முகத்தை உற்று நோக்கினான் கறுப்பையா. கழுத்து நரம்புகள் ஜிவ்வென புடைந்து நிற்க நரைத்த தலைமயிர்கள் படிந்து கிடக்கின்றன. தலைப்பாரத்தின் சுமை கிழவனின் உடலை மட்டுமன்றி உள்ளத்தையும் அழுத்திவிட்டிருந்தது. “பெரியவரே மாவட்ட பிரதிநிதி மூலமா நடவடிக்கை எடுத்துக்கிட்டுத்தான் இருக்கோம் கூடிய விரைவில் ஒரு நல்ல முடிவு கிடைக்குமின்று நினைக்றோம் ஒரு சின்ன விசயத்தை சாதிக்கிறதுன்னா கூட ரொம்ப கஸ்டமா இருக்கு கருங்கல்லுல நார்உரிக்கிற மாதிரி ” கிழவனின் படபடப்பு தலைவருக்கு பெரும் அதிர்ச்சியினைத்தந்தது. எதற்கெடுத்தாலும் தெய்வத்தின் மீது பாரத்தைப் போடும் பெரியவரா இப்படி ஆத்திரப்பட்டு பேசுகிறார் என கறுப்பையா தலைவரை வியக்கவைத்து விட்டது.
பொறுமைக்கு ஓர் எல்லை உண்டு. தானே! முதுமையும், வறுமையும், கொடுமையும் வாட்ட, சின்னையா கிழவனின் மனசாட்சி “இந்த அநியாயமா என ஏங்கி சத்தியாவேசம் கொண்டு துடிக்கின்றது.
“ஆமா தம்பி எப்படியோ சாதிச்சிருங்க…. நெஞ்சிலே கொஞ்சம் கூட ஈவ இரக்கமில்லாத பயலுக கொழுந்து மடுவத்தில் இருந்து ஸ்டோருக்கு கொழுந்து சாக்கை தூக்கிக்கிட்டு போய் கொட்டிட்டு வர்றதுக்குள்ள உயிர் போயிறுது. “என்ன செய்யிறது பெரியவரே இது தொடர்பா நாங்களும் பல தடவை பேசிட்டோம் அவனுக ஒன்றுக்கும் மசியிறாப்புல இல்ல கொழுந்து மடுவத்தில இருந்து ஸ்டோருக்கு கொழுந்து சாக்கை தூக்கிட்டு வரமுடியாது மலைகளுக்கு லொறிய அனுப்பி ஏத்தி போங்கன்னு கேட்காத கொன்புரன்ஸ் இல்லை ஒவ்வொரு கூட்டத்திலேயும் அதுதான் வற்புறுத்திக்கிட்டு வாறோம். ஒவ்வொரு தடவையும் ஏதாவது ஒரு சாக்கு போக்கு கூறி தட்டிக் கழிச்சிக்கிட்டே வர்றானுக”
“ஆமா தம்பி கிட்டத்து மலையினா பரவாயில்லை. இப்ப கொழுந்து மடுவத்திலிருந்து ரெண்டு மையில் தூரம் ஸ்டோருக்கு கொழுந்து தூக்கிட்டு நடக்க வேண்டியிருக்கு. இனி போய் இந்த தண்ணி இல்லாத காலத்தில சமையலை தொடங்கிறக்குள்ள இரவு மணி ஏழாகிறது கண்ணு சரியா தெரியாத இந்த வயசில நான் சமைச்சி முடிஞ்சி சாப்பிடுறதற்குள்ள சிவனறிஞ்சிப் போகுது எல்லாம் அவன் செயல்” கிழவன் அலுத்துக் கொண்டான்.
“என்ன தாத்தா செய்யிறது நம்ம காலம் அப்படியாகிறிச்சி சாண்ஏறுணா முழம் சறுக்குது’ கசக்கும் அனுபவங்களை புரட்டியபடியே இருவரும் நடந்தனர். “தலைவரே இந்த புல்லுக்கட்டை ஒரு கை தூக்கி விட்டுட்டு போங்க இருவரும்குரல் வந்த திக்கை நோக்கினர். அங்கே கான் வங்கிச் சரிவில் புல்லுக் கட்டுடன் நின்று கொண்டிருந்தான் மாணிக்கம்.
“என்ன மாணிக்கம், ஆளையே காணல்ல…வவுனியாவுக்குப் போயிருந்தீங்களாமே…” தலைவர் கறுப்பையா விசாரித்தபடியே தேயிலை நிறையில் இறங்கினான்.
“அடிக்கடி வந்து உங்களுக்கு தொல்லதர விரும்பல தொழில் கோட்ல வழக்கிற்கு தேதி வந்திச்சிங்களா…”
“ஆமா மாணிக்கம் இந்த மாதம் இருபதாம் தேதி கண்டியில் விசாரணை நடக்க இருக்கு உன் வீட்டுக்காரிக்கிட்ட இன்னானக்கி மலையில் வச்சி சொல்லி அனுப்பினேன் இப்ப உன்னய நேரில் கண்டது நல்லாத போச்சி”
“என்னமோ தலைவரே முயற்சி பண்ணுங்க இப்பவும் எனக்கு வேலை நிப்பாட்டி மாசம் ஆறாகப் போகுது”.
“பேச்சுவாத்தையிலும் ஒரு முடிவையுங் காணல்ல… வீட்டு நெலமையை நான் உங்களுக்கு சொல்லத் தேவை இல்லை. இருந்த ஒன்னு ரெண்டையும் கொள்ளையிலப் போவானுக தீயை வச்சிகொளுத்திப் புட்டானுக” இந்த மாடு கன்னு இருக்கிறதுனால, பாலதண்ணியை ஊத்திக் கிட்டு, எப்படியோ என் காலம் ஓடுது”
“கவலைப்படாத மாணிக்கம், வானத்துக்கு கீழே இருந்து கிட்டு மழைக்குப் பயந்தா ஆகுமா? எல்லாம் மனுசனுக்குத்தான் தொழில் கோட்ல வழக்கிற்கு தேதிவந்திரிச்சி இனிகவலை படாத நம்ம மாவட்ட தொழில் உறவு அதிகாரி இராமநாதன் ஐயா இருக்கிராரு இல்ல…. ரொம்ப நல்ல மனுசர் நீ பார்த்துக்கிட்டு இருவே தொழில் கோட்ல தொரைய என்னா வாங்கு வாங்கப் போறார்ற” “என்னமோ தலைவரே எல்லாம் நல்லபடியா முடிஞ்சா சரி வழக்கில் ஒரு நல்ல முடிவு கிடைக்கலனா நான் தேறி எழுந்து மனுசனா வாழ முடியாது. நம்பிக்கையின் பேர்ல பெரிய புள்ள சடங்கிற்கு ஈட்டுக்கடையில ஐஞ்சி பவுண் நகையை கொடுத்திட்டு கொஞ்சம் பணம் வாங்கி இருந்தேன். இப்ப போய் கேட்டா கலவரத்தோட எல்லாம் சரின்னு கையை விரிச்சிட்டு மனுசன் இந்தியாவிற்கு போயிட்டார். நம்ம கெதியை யாருகிட்ட சொல்லுவோம் வழக்கு முடிஞ்சி திரும்பவும் வேலை கிடைச்சாத்தான் கொஞ்சமாவது நிம்மதி கிடைக்கும் போல இருக்கு”
“மாணிக்கம் அப்படி உன்னைய நாங்கள் எல்லாம் கைவிட்டிடுவமா? இன்றைக்கு உனக்கு நடந்தது நாளைக்கு எனக்கு நடக்காலம் தானேநீ பார்த்துக்கிட்டே இருவே வழக்கு நல்லபடியா முடிஞ்சி வேலை நிறுத்திய காலத்திற்கும் சேர்த்து சம்பளத்தோட மீண்டும் உனக்கு வேலை கிடைக்கத்தான் போவுது தலைப்பாகை சரியா கட்டிக்க…ம்…தூக்கு தூக்கு அப்பாடா என்னம்மா கனக்குது. இந்தா அறுவாள்பத்திரமா போய் சேர்”
தலைவரின் பேச்சில் தைரியமும் உற்சாகமும் அடைந்த மாணிக்கம் மனச்சுமை குறைய தன் லயத்தை நோக்கி நடக்கின்றான்.
ஆறு மாதங்களுக்கு முன்னர் ஒருநாள் காவத்து மலையில் தன்னுடைய நிறையை முடித்து விட்டு, பக்கத்து நிறையில் பிந்தி நிற்கும் சந்தனத்தில் நிறையை மறித்து வெட்டிக் கொண்டிருந்தான் மாணிக்கம். எதிரும் புதிருமாக விழும் வெட்டும் வீச்சில் ‘மளமளவென்று வாதுகள் சரிய’ நிறைய முடிந்தசுருக்கு தெரியவில்லை. இருவரும் நிறைக்கு மேலே மண்றோடு ஓரமாக இருக்கும் குத்துக்கல்லில் அமர்ந்தபடி எஞ்சியிருந்த துண்டு பீடியில் ஆளுக்கொரு “தம்” இழுந்தனர்.
அப்பொழுது அங்கு பூனை போல் பதுங்கி வந்த கன்டக்டர், மாணிக்கம் தனக்கு மரியாதை வைக்காது புகைப்பிடித்ததுடன் நிறைவிட்டு நிறை வந்து ஒழுங்கு தவறி நடந்த வேலைத் தலத்தைப் குளப்பினான்” என்று தாறுமாறாக ஏசவே இதில் வந்த வாக்கு வாதத்தில் மாணிக்கத்திற்கு வேலை நிறுத்தி விட்டார்கள். மாணிக்கம் இப்போது ஆறு மாதங்களாக வேலை இல்லை. தொழில் நீதிமன்றத்தின் முடிவை எதிர்பார்த்தபடி காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறான்.
“என்னங்க பெரியவரே இன்னைக்காவது மழை வருமா..” தன்னைத் தொடர்ந்து குறுக்குப் பாதையில் வந்து கொண்டிருக்கும் சின்னய்யா கிழவனுடன் பேச்சுக் கொடுத்தான் கறுப்பையா..”ம்…..? சொல்ல முடியாது காத்து புளுக்கமா இருக்கு…” கிழவனின் அனுபவ முத்திரை வானிலையில் பதிந்தது.
இருவரும் லயத்தை நெருங்கினர்.
“என்னங்க பெரியவரே தொங்க வீட்டில ஒரே சத்தமா இருக்கு…” காதைத் தீட்டிக் கொண்ட தலைவர் நடையை துரிதமாக்கினார்.
“ஆமா தம்பி என்னமோ தெரியல்லை. மாரி மகமாரி எங்கள சோதிக்காத தாயே” கிழவனும் விழுந்து, எழுந்து கூடவே ஓடினான்
குறுக்கில் விரைந்த இருவரும் தொங்க லயத்துக் கோடியில் குதித்தனர். “கொச்சிக்காய் புகைபிடிங்க…ம் நெருப்பு அள்ளிக்கிட்டு வாங்க…சுருக்கா..சுருக்கா…” ஒரு கிழடு நெருப்பாய் பறந்தது.
“ஐயோ…தெய்வானை என்னை ஏமாத்திப்புட்டு போட்டியே” “பொன்னான மேனியிலே ஒரு பொல்லாத நோய்வந்ததென்ன” பரிதவிப்போடு ஓப்பாரிவரி மாத்திரை நீண்டு நீண்டு விசும்பியது. ஐயோ அம்மா…அம்மா சிறுசுகள் குய்யோ முறையேவென குரலெடுத்துக் கத்தின.
“…அட காத்துவர வழி விடுங்க….ஆளுகளா இப்பதான் ஒரேடியாக வேடிக்கைப்பார்த்துகிட்டு ஐயோ பாவம் நிறைமாதக் கர்ப்பிணிக்கு இப்படி ஆச்சே… வாயும் வயிறுமா இருக்க நேரம் குரல்கள் கதம்பமாக ஒலித்தன.
“இந்தா தலைவரும் வந்திட்டாரு அவருக்கு வழி விடுங்க ஒருகுரல் அதட்டியது. என்ன நடந்தது இப்ப ஏன் இப்படி பொறுப்பில்லாமல் ஆள் ஆளுக்கு சத்தம் போடுறீங்க…தலைவர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னுக்கு வந்தார்.
அங்கே சாக்குக் கட்டிலில் சுயநினைவற்றுக் கிடக்கும் நிறைமாதக் கர்ப்பிணியைக் கிடத்தியிருந்தார்கள்.
அப்பா தலைவரே இந்த அநியாயத்தைப் பாரு தெய்வானை கொழுந்து மடுவத்தில் அந்திக் கொழுந்த தூக்கிட்டு ஸ்டோருக்குபோயி இருக்கு பாவம் புள்ளத்தாச்சி இந்த வரக்கட்டுல வயித்து சுமையோட தலைப்பாரத்தையும் தூக்கிக்கிட்டு எப்படி போவா? இடையில மயங்கி விழுந்து பேச்சி மூச்சில்லாம கிடக்கா. வயித்தில் பலமான அடிபட்டிருக்கும் போல
“லொறிக்கு சொல்லி அனுப்பினீர்களா? ” தலைவர் “ஆமா இடையில் ஸ்டோருக்கு ஆள் போயி கேட்க”, முடியாது உங்க சங்கத்தில்போய்வாங்கிக்கன்னு சொல்லிட்டானுக. நாங்க கைத்தாங்கலாதூக்கிட்டு வந்தோம்” இளைஞனின் குரல் கனன்று ஒலித்தது.
“சரி பிறகு அதைப்பத்தி பேசுவோம். இப்ப நாலு இளந்தாரிக இப்படி வாங்க. இப்படியே இந்த படங்கு கட்டிலோட மெயின் ரோட்டிற்கு தூக்குங்க ஒரு ஆள் சைக்கிளை எடுத்துக்கிட்டு போய் கந்தநுவர சந்தியில் “பேக்கரி வேன்’ இருக்கும். உடனே கொண்டுவாங்க அதற்கிடையில் காரோ, பஸ்சோ வசதியா கிடைச்சா நாங்க ஆஸ்பத்திரிக்கு போறோம் ” சைக்கிலில் விரைந்தவன் பேக்கரி வேனுடன் வந்துசேரும் போது தோட்டம் உறங்கிவிட்டது.
தெய்வானையை வைத்தியசாலையில் அனுமதித்து விட்டு தலைவர் மறுநாளே வீடு திரும்பக் கூடியதாக இருந்தது. அன்று மலையே அவர் தோட்டத்திலுள்ள சக முக்கிய தொழிலார்களை அழைத்து கலந்துரையாடினர். அதன்படி பின்னவரும் முடிவுகள் எடுக்கப்பட்டன. ஸ்டோருக்கு மலைகளிலிருந்து கொழுந்தைக் கொண்டு செல்ல வாகனத்தை ஏற்பாடு செய்ய நிர்வாகத்தை வற்புறுத்துவது அதுவரை கர்ப்பணிகளதும் முதியர்வகளினதும் கொழுந்துச் சாக்கை வசதியினைப்போல் சகதொழிலாளர்கள் அல்லது அவர்கள் சார்பில் வீட்டில் எவரேனும் கொண்டு செல்வது என்பனவாகும்.
தோட்டம் கம்பெனியாக இயங்கிய காலத்தில் இந்தப் பிரச்சனைக்கு இடமே இருக்கவில்லை. தோட்டத்துக்கு ஒரு ஸ்டோர்; கொழுந்து இழுக்க லொறி; பெட்டி பூட்டிய டிரக்டர் என சீராக இயங்கியது. தோட்டங்களில் பெரும்பகுதி பக்கத்திலுள்ள கிராம வாசிகளுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்ட பின்னர் எஞ்சிய பகுதியைத் தனித்தோட்டமாக இயங்கச் செய்ய முடியாமல் அடுத்தடுத்த தோட்டங்களுடன் இணைத்து நாலைந்து தோட்டங்களுக்கு ஒரு தொழிற்சாலைக்கு கொழுந்தை தொழிலாரை சுமக்கச் செய்து கொண்டு வந்து சேர்ப்பது சிரமாமதாகிவிட்டது.
தோட்டத்திற்கு இரண்டு வாகனமென பெற்றோல் தண்ணீராய் செலவாகின்றது. இப்படி பல பெருச்சாளி ஓட்டைகளில் நட்டமாகும் தோட்டத்தின் வருமானத்தை நிர்வாகம் தொழிலாளியின் தலையில் சுமத்தி இவ்வாறு அடைக்கப்பார்க்கின்றது.
மறுநாள் பத்தாம் நம்பர் மலை. ஸ்டோருக்கும் மலைக்கு இரண்டு மைல்களுக்கு குறையாத தூரம் கொழுந்து மடுவத்தில் நிறுத்தமுடிந்த கொழுந்தை இளவட்டங்கள் முதியோர்களுக்குமாக சுமந்து செல்கின்றனர்.
சிலர் பெயர் பதிய முடியாத நிலையில் இருக்கும் தமக்கு உதவி செய்யும் பிள்ளைகளிடம் கொடுத்துவிட்டு வீட்டிற்குச் செல்கின்றனர்.
கொழுந்துசாக்குடன் அவர்கள் மலைகளை சுற்றிகிடக்கும் பாதையில் வரிசை வரிசையாக நடந்து ஸ்டோர்படிகளில் ஏறி வாட்டம் போடும் மெத்தைக்கு வரிசையில் விரைகின்றனர். “ஸ்டோர் மெத்தைக்கு செல்கிறோம்” என்ற களிப்பில் பிள்ளைகள் தலைச்சுமையினை மறந்து துள்ளும் நடையுடன் படியில் மிதக்கின்றனர்.
குளுகுளுவென வீசும் அந்திக் காற்றின் குளுமையோடு; தேயிலை அடுப்பிலிருந்துசுழலும் காற்றாடி கொண்டு வரும் தேயிலை பதமாகும் மணமும் சேர்ந்து சூழலுக்கு ரம்மியமூட்டுகிறது.
சிறுவர்கள் கொழுந்து சாக்குடன் படியேறுவதை நோட்டம் விட்ட கன்டக்டர் சில்வா புகையும் கண்களுடன் அவர்களை அழைத்து விசாரித்து பின்னர் கன்னத்தில் அறைந்து? உதைத்து ஓடும்படி விரட்டுகின்றான்.
தனக்கு சவால்விட இந்த தோட்டத்தில் யார் இருக்கின்றார்கள்? ஆவேசமாக செயல்படுகின்றான் கன்டக்டர்.
“தோட்டத்தில் பேர்பதிந்தும் செக்றோல்வைத்து லேபர்ஸ் வைத்திருப்பது என்னத்திற்கு வரவர டிசிபிலினே இல்லாமல் போச்சி” திட்டியபடியே பின்னர் மோட்டார் சைக்கிளில் துரையின் பங்களாவிற்கு விரைகின்றான்; கன்டக்டர். உற்சாகம்மேலிட விரைந்து வந்த சிறுவர்கள் வெலவெலத்துச் சிதறி ஓடுகின்றனர். முழுத்தோட்டமும் ஆத்திரத்தில் பொங்கி குமுறுகிறது. அடுத்த நாள் தலைவர் மாவட்டத் தலைவரை கண்டு பேசுகிறார்.
நியாயம் கேட்டு வேலை நிறுத்தம் செய்வதென முடிவு செய்து வேலை நிறுத்தத்தில் குதிக்கின்றனர். பேச்சு வார்த்தைகள் தொடருகின்றன. நீதி கிடைக்கவில்லை வேலை நிறுத்தம் தொடருகின்றது.
வேலை நிறுத்தம் மூன்று வாரங்களாக! வேலை நிறுத்தக் காரர்களுக்கு பங்கீட்டு உணவுப் பொருட்களை வழங்க மறுக்கின்றது நிர்வாகம். முதல் வாரம் எப்படியோ “ஒப்பேத்தி விட்டார்கள்” மறுவாரம் பசிபசியென சின்னஞ் சிறுசுகள் ஆளாய்ப் பறக்க தோட்டமே பஞ்சடைந்த கண்களில் கிறங்குகின்றது.
தலைவர், துரையை சந்தித்து உணவுப் பொருட்களை வழங்கும்படி வேண்டுகோள் விடுக்கின்றார். அரிசிக் காம்பிராவின் நீண்ட இரும்புக்கதவினைப் போன்று; துரையின் இதயம் கருணையின்றி மூடிக் கொள்கின்றது.
குறுக்கு வழிகளைக் கையாண்டு நப்பாசை காட்டி போராட்டத்தை முறியடிக்க நிர்வாகம் முயலுகின்றது. அவை உணர்வு பெற்ற தொழிலாளர் மத்தியில் எடுபடாமல்போக, சூழ்ச்சி செய்து வஞ்சகம் புரிகின்றது நிர்வாகம்.
அன்றிரவு…!
தோட்டம் உறங்கி விட்ட அகால வேளையில்; அரிசிக் காம்பிராவை கபளீகரம் செய்த லொறி ஒன்று அனர்த்திக் கொண்டு கிளம்ப; அதன் முன்னே மாத்தளை வீதி விரிகின்றது. எப்பொழுதும் போல லயங்கள் பசியுடன் விழிக்க பொழுது புலருகின்றது. அரிசிக் காம்பிரா உடைக்கப்பட்டு…
அதிலுள்ள உணவும் பொருள்கள் கொள்ளையிடப் பட்டுள்ளன! துரையின் டெலிபோன் அழைப்பிற்கு பொலீஸ் ஜீப்வண்டி தோட்டத்தினுள் புகையைக் கக்கிக் கொண்டு விரைந்து வருகின்றது. தேயிலை மலை எரிமலையாகின்றது.
நேற்று மாலை தமக்கு அரிசி மாவு ஆகிய உணவுப் பொருட்களை வழங்கும்படி பலாத்காரம் செய்த தலைவர் கறுப்பையா, மாணிக்கம் உட்பட தொழிலாளர்களின் வேலையாகத்தான் இது இருக்குமென்ற துரையின் கூற்றை ஏற்றுக்கொண்ட பொலிசார் அவர்களை சந்தேகத்தின்பேரில் கைதுசெய்து விலங்கிட்டு ஜீப்பில் ஏற்றிச் செல்கின்றனர்.
முழுத் தோட்டமும் தேற்றுவாரின்றி ஒப்பாரி வைத்து அழுது புலம்புகின்றது “ஐயோ…. ஐயோ”… என்ற அவலக்குரலே சுப்பரபாதமாக எங்கும் ஒலிக்க…
பொழுது புலர்ந்து; கீழ்வானம் சிவந்து; கதிரவனின் ஒளிபரவ; புலரிக் காலத்து மென் இருட்டும் தலைகவிழ்ந்து ஓட, பூபாளம் ஒலிக்கும் அந்தக் காலைப் பொழுதில் உண்மைமட்டும் உறங்கி விட்டது.
துயிலெழுப்புவது யார்?…
– அட்சய வடம், முதற் பதிப்பு: 2012, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.