வலி நிவாரணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 7, 2024
பார்வையிட்டோர்: 535 
 
 

ஏன்டி… நீ இங்கனையா இருக்க… எங்கெங்க தேடுறது… என்ற கலாவின் குரல் கேட்டு ஏதோ சிந்தனையிலிருந்த ராசாத்தி திரும்பிப் பார்த்தாள். கண்ணீர் வழிய முகமெல்லாம் வீக்கத்தோடு இருந்த அவளின் பரிதாப நிலையைப் பார்த்துவிட்டு, ஏன்டி… இன்னும் அப்படியே இருந்தா எப்படி… வயித்தில இருக்கிற புள்ளைக்காவது உம்மனச தேத்திக்கடி… என்றாள் கலா.

எதக்கா மறக்கச் சொல்ற… கல்யாணமாகி பத்துமாசங்கூட ஆகல… இப்படி அனாதையா விட்டுவிட்டுப் போயிட்டானே… இதப் பெத்து வளத்து எப்படிக்கா… என்று வழிந்த தன் கண்ணீரை முந்தானையால் துடைத்தபடியே தேம்பி அழுதாள் ராசாத்தி.

இந்த ஊர்லயே… நீதான் கட்டிக்கிட்டு வரும்போதே நாலெழுத்துப் படிச்சவளா வந்தவ.. நாங்கெல்லாம் அப்படியா?… என்றாள் கலா.

படிச்சி என்னக்கா பண்ணறது… வேலைக்கா போக முடிஞ்சது… நானும் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டுப் பார்த்தேன். அது என்னைய வேலைக்குப் போவேணாமுன்னு சொல்லிடுச்சி… ராசாத்தி… நாயிருக்கும் போது நீ ஏன் கவலப்படுற… நா ஒருத்தன் சம்பாதிச்சா போதாதா… வீட்டு வேலையே அம்புட்டு கெடக்கும் போது வேலைக்குப் போறாளாம் வேலைக்கு… என்று அவன் சொன்ன போது எனக்கெப்படி இருந்துச்சி தெரியுமா?… என்றாள் ராசாத்தி.

என் படிப்பு… இல்லை என் அப்பாவின் கனவு… என்னைப் படிக்க வச்சு… நல்ல உத்தியோகத்துக்கு அனுப்பனுமுன்னு சொல்லிகிட்டே இருப்பாரு.

சரி… அதவுடு… இப்புடியே இருந்தா உன் உடம்புதான் கெட்டுப் போயிரும். இன்னைக்குப் பத்து மணிக்கு ஏதோ ஆபிசர்ல்லாம் வர்ராகலாம்… நம்மளையயல்லாம் அங்கன மந்தைகிட்ட வரச் சொன்னாகலாம்… அதான் சொல்லிட்டு உன்னையும் கூட்டிக்கிட்டுப் போலாமுன்னு வந்தேன்…

சரிக்கா… நீ முன்னப்போ… நா… பொறத்தால வாரேன்… என்று சொல்லிவிட்டு மறுபடியும் விட்டத்தைப் பார்த்து உட்கார்ந்துவிட்டாள் ராசாத்தி. கையறுநிலையில் மனம் செல்லும் தூரத்திற்கு அளவேயில்லை.

ராசாத்தி… நீ இன்னுமா கிளம்பள… அப்படியயன்ன அறுபதடி கூந்தலா இருக்கு. சீக்கிரம் கிளம்புடி… தொண மாப்பிள்ளையே லேட்டா போலாமா? மாப்பிள கோவிச்சிக்குவான்டி… என்றான் ராசாத்தியின் கணவன் முத்துச்சாமி.

ம்ம்… கிளம்புன என்ன… புள்ளத்தாச்சியின்னு பாக்காம ரெண்டு வாட்டி குளிக்கவச்சிப்புட்டு… இப்ப வந்து அவசரப்பட்டா எப்படி?… ஏன் கொஞ்சம்

லேட்டா போனா தொண மாப்பிள வரலைன்னு பொண்ணு கோவிச்சுக்குமா?… என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் ராசாத்தி.

அடியே… ஒன்னு சொல்ல மறந்துட்டேன்… தங்கச்சி செல்வி வீட்டுக்குப் போன அப்பனும் ஆத்தாளும் கல்யாணத்துக்கு வந்துட்டு அப்படியே மறுபடியும் அங்கன போவாம… இங்க கூட்டியாரலாம்னு நௌக்கேன்… நீயும் செத்த எடுத்துச் சொல்லுடி…

ஏய்யா… நானும் அடுத்தவாரம் பிரசவத்துக்கு எங்க ஆத்தாவீட்டுக்குப் போயிருவேன்… இங்கன ஒங்க அப்பனும் ஆத்தாளும் வந்தா… அதுகளுக்குக் கஞ்சிகாச்சி கொடுக்கிறது யாராம்… புள்ள பொறந்த பொறவு வந்தாலும் ஒத்தாசையா இருக்கும். வளைகாப்பு முடிஞ்ச கையோட போவலாம்னா… நீ வுட்டியா…? என்ற ராசத்தியைப் பார்த்து, இப்பகூட ஒன்னவுடமாட்டேன். நம்ம ஊர்ல மாத்திரம் ஆஸ்பத்திரி இருந்துச்சின்னு வச்சிக்க… இங்கனயே புள்ள பொறக்கட்டுமுன்னு வச்சிருந்திருப்பேன்… என்றான் முத்துச்சாமி.

இது ஒரு ஊரு இதுக்கு ஒரு பேரு….அவசர ஆத்திரத்துக்கு ஒரு ஆஸ்பத்திரி உண்டா?… அட… குடிக்க ஒரு நல்ல தண்ணி இருக்கா?…. நல்ல தண்ணி வேணுமுன்னா… அஞ்சு மயில் தொலைவு போகணும்… அதவுடு… ஒரு பள்ளிக்கூடம் இருக்கா?… என்று ராசாத்தி சொல்லிக் கொண்டிருக்கும் போதே முத்துச்சாமியின் நண்பர்கள் வந்துவிட்டனர்.

ஏலே… சாமி… என்ன பொறப்புட்டியா..? இல்லையா?… பொண்டாட்டி முந்தானைய புடிச்சிகிட்டே திரிடா… என்றான் முத்துச்சாமியின் நண்பன் ஆதவன்.

டேய்… இருடா… என்று சொல்லிக் கொண்டே, இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு திருமணத்திற்குக் கிளம்பினார்கள்.

திருமண வீடே களைக்கட்டியிருந்தது. கிராமத்திற்கே உரிய திருமண உபசரிப்புகள். நலம் விசாரிப்புகள் எல்லாம் நடந்து கொண்டிருந்தது. அத்தையையும் மாமாவையும் பார்த்த ராசாத்தி ஆவலில் அவர்களைக் கட்டிக் கொண்டாள்.

ஏன் அத்த இப்புடி மெலிஞ்சி போயிட்ட… செல்வி என்ன கவனிக்கிறாளா… என்ன? செல்வி கல்யாணத்துக்கு வரலையா..? என்று பாசம் காட்டிய மருமகளைப் பார்த்து மாமியாருக்கு அழுகையே வந்துவிட்டது. திருமண வீட்டார் எல்லோரையும் வரவேற்று திருமண ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். தாலி கட்டிய கையோடு எல்லோரும் பந்திக்கு முந்திக் கொண்டிருந்தனர்.

ராசாத்தி… நீ என்ன பண்ற… அப்பனையும் ஆத்தாளையும் கூட்டிகிட்டு வீட்டுக்குப் போ… நா… கொஞ்சம் வேலையா போறேன்… இப்ப வந்துருவேன்… என்றான் முத்துச்சாமி.

பந்தி போட்டாச்சு… சாப்பிட்டு போவியா…. இப்ப எங்க அவசரமா கெளம்புற… என்றாள் ராசாத்தி.

ச்ச… சொன்னா கேப்பியா… இப்பத்தான்… எங்க போற… இங்க போறன்னு… ஆயிரம் வேலயிருக்கும் ஆம்பளைக்கு…. எல்லாத்தையும் சொல்லிக்கிட்டே இருக்கணுமா…? போ… போய் சாப்பிட்டு கிளம்புங்க… என்று சொல்லிவிட்டு அவளின் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் அவசர அவசரமாகக் கிளம்பினான் முத்துச்சாமி. அவனோடு சேர்ந்து அவனுடைய நண்பர்களும் கிளம்பினார்கள். அவர்கள் மறைகின்ற வரை அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த ராசாத்தி, என்னமோ… பண்ணு… போய்த் தொல…ன்னு சொல்லிவிட்டு மாமனார் மாமியாரை அழைத்துக்கொண்டு பந்திக்கட்டுப் பக்கம் போனாள் ராசாத்தி.

வீட்டுக்கு வந்து சற்று கண்ணயரலாம் என்று படுத்திருந்த ராசாத்தியை மாமியாரின் குரல் எழுப்பியது. ஆத்தா ராசாத்தி… செத்த இங்கிட்டு என்னன்னு பாராம்மா… என்று மாமியார் சொன்னதும், வாசல் பக்கம் வந்து எட்டிப் பார்த்தாள் ராசாத்தி. ஊர் சனங்கள் எல்லோரும் ஓடிக் கொண்டிருந்தார்கள். அடியே… பஞ்சு செத்த நில்லுடி… என்னாச்சு ஏன்டி எல்லாரும் ஓடுறாங்க… என்று கேட்டாள் ராசாத்தி.

அடி ஒனக்கு விசயம் தெரியாதா?… நம்ம அழகரய்யா தான்… நல்லா இருந்த மனுசன் பேச்சு மூச்சு இல்லாம கிடக்காராம்… அதான் டவுன் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போறாகலாம்…. என்றாள் பஞ்சு. பஞ்சுவிடம் விசயத்தை வாங்கிக் கொண்டிருக்கும் போதே மாமியாரும் ராசாத்தியின் அருகில் வந்துவிட்டாள்.

ஏத்தா… அவனுக்குப் போன் பண்ணியா?… மத்தியானம் போன புள்ள இன்னும் காங்கல…

இல்லத்த…. அவரு போனு சுவிட்ச் ஆப்ல இருக்கு… என்னாச்சின்னு தெரியல…

எங்க போயித் தொலைஞ்சானோ… என்ற மாமியாரைப் பார்த்து, அத்த… வீட்டப் பாத்துக… மாமா எந்திரிச்சதும் விசயத்தச் சொல்லு… நா…போயி என்ன ஏதுன்னு சாரிச்சிட்டு வாரேன்னு… சொல்லிவிட்டு மந்தைக்குச் சென்றாள்.

அங்கே சென்ற போதுதான், மேலும் நான்கைந்து பேர் வாந்தி மயக்கத்தில் இருந்தது தெரிந்தது. எல்லோரையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஊரே ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தது. வவுத்துவலின்னு சொன்னானே… கண்ணு தெரியலைன்னு சொன்னானே… எம்புள்ளைக்கு என்னாச்சோ… என்று ஒருத்திக் கதறிக் கொண்டிருந்தாள். ராசாத்திக்கு மயக்கம் வருவதுபோல் இருந்தது.

ஒருவிதமான பதட்டம் ஊருக்குள் தொற்றிக் கொண்டது. புள்ளத்தாச்சி நீ… இங்கன இரு… நாங்க போயிட்டு வாரோம்னு சொல்லிவிட்டு மற்றவர்கள் டவுன் ஆஸ்பத்திரிக்குக் கிளம்பினார்கள். இவளுக்கு இருப்பு கொள்ளவில்லை. அதற்குள் செய்தி ஊர்முழுக்கப் பரவிக் கொண்டிருந்தது. ராசாத்தியும் ஒருவனின் பைக்கில் ஏறி டவுன் ஆஸ்பத்திரிக்குப் போனாள்.

அங்கு சென்ற பிறகு தான் நிலைமை இன்னும் மோசமாக இருந்தது அவளுக்குத் தெரிந்தது. கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்துப் பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்த செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. அப்பொழுதுதான் முத்துச்சாமியும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கிறான் என்ற செய்தி கேட்டு அதிர்ந்து போனாள் ராசாத்தி.

போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்ட பிணங்கள் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருந்தன. அரை மணிக்கொருமுறை மாவட்ட ஆட்சியர் பிணங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டிருந்தார். நாற்பத்தைந்தாவது பிணமாக முத்துச்சாமி அறிவிக்கப்பட்டான்.

யாருக்கு யார் ஒப்பு சொல்வது என்றறியாமல் கிராமமே ஒப்பாரியை ஓலமிட்டுக் கொண்டிருந்தது. பிணங்களை அவரவர் மதச்சடங்கு செய்து அடக்கம் செய்ய ஏற்பாடாகியிருந்தது.

நாடகக்காட்சிகளைப் போல் அரங்கேறிய சாவுச்சடங்குகள் யாவும் முடிவுற்று, நாட்களின் நீண்ட பயணத்தில் மனக்காயங்களின் மீது காலக்களிம்பு தடவப்பெற்று எல்லாமே ஒருவிதமான இயல்புத் தன்மைக்குத் திரும்பியிருந்தது.

மந்தையில் மக்கள் கண்ணீரும் கம்பலையுமாக வரிசையாக நின்று கொண்டிருந்தனர். அதிகாரிகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவரின் பெயரை வாசித்து, இறப்புக்கான நிவாரணத் தொகையாக ரூபாய் பத்து லட்சத்துக்கான காசோலையை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

ராசாத்தியின் முறையும் வந்தது. என்னம்மா… பாக்குற… இதுல கையயழுத்துப் போட்டுட்டு வாங்கிக்க… என்ற அதிகாரியைப் பார்த்தபடியே நின்றாள். நிவாரணத்தை வாங்காமல் நின்ற ராசாத்தியை அதிகாரிகள் வாங்குவதற்கு வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள்.

எதுக்கையா பணம்… இந்த பணம் எங்களோட வலியப் போக்கிருமா?… எங்க வலிக்கு இதுயில்ல நிவாரணம்…. தாலிக்கும் பணம்… தாலி அறுத்தாலும் பணமா…? கொத்துக் கொத்தா செத்தா தான் பணம் கொடுப்பிங்களா?… இந்த பாழாப் போன குடியால ஊர் ஊருக்குத் தெனம் ஒருத்தி தாலிய அறுத்துக்கிட்டுத்தான் இருக்கா… எங்களுக்குத் தேவை இந்தப் பணமில்ல… இந்த பணத்த வச்சிக்கிட்டாவது இந்த ஊருக்கு ஒரு ஆஸ்பத்திரி, குடிக்க நல்ல தண்ணி… ஒரு பள்ளிக்கூடம்… முடிஞ்சா விதவைகளுக்கு ஒரு மறுவாழ்வு

மையம்… இதச் செஞ்சி கொடுங்கையா… மொதல்ல இந்த சாராயத்த ஒழிங்கையா… இது எங்க வலிக்கு நாங்க கொடுக்கிற நிவாரணம்… என்று சொல்லி காசோலையை அதிகாரிகளிடம் வாங்க மறுத்தாள் ராசாத்தி. இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்களும், ஆமாம்…. எங்க ராசாத்தி சொல்றதுதான் சரி… என்று அனைவரும் அதிகாரிகளிடம் காசோலையைத் திருப்பிக் கொடுத்துவிட்டு கண்ணீருடன் வீட்டிற்குச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *