கனடாவின் வடமேற்கு பிரதேசத்தை வலசை வரும் பறவைகள் வந்தடையும் வசந்த காலத்தில், பறவைகளை விரும்பும் பலரது மனமும் அங்கு சென்றடையும்.
கனடாவின் வடமேற்கு பிரதேசத்தின் பிராதான நகரம் யெல்லோ நைவ்.
முதற் குடி மக்களது மொழி வழக்கில் பணம் கொழிக்கும் பட்டினம் என்பது அர்த்தம்.
கனிமங்களும் தனிமங்களும் நிறைந்த பகுதி.
அதன் புற நகர் பகுதி எங்கு தோண்டினாலும் வைரங்களும் தங்கங்களும் குறைவின்றி கிடைக்கும் சுரங்கங்கள் நிறைந்த நிலப்பரப்பு.
வடமேற்கு பிரதேசத்தில் 44 000 மக்கள் வாழ்கின்றனர். அவர்களிளுள்ளும் 25 000 பேர் யெல்லோ நைவ்வில் உள்ளனர். பதினொரு மொழிகள் உத்தியோகபூர்வமானவை. எண்பதிற்கும் மேலான பூர்வீக மொழிகள் இன்னமும் பேசப்படுகின்றன.
காதுக்குள் அலைபேசி இருப்பதை மறந்தவராக மூத்த தம்பி் மாஸ்டர் யாருடனோ உரத்த குரலில் கதைத்துக் கொண்டிருந்தார்.
இணைய வசதி அவரை இலகுவாக உலகத்துடன் இணைக்கின்றது என்பது அவரது எண்ணம்.
தினமும் பன்னிரண்டு மணி நேரத்துக்கும் குறையாமல் அலைபேசி அவர் காதுக்குள் இருக்கும்.
மிகுதி நேரத்தில் அவர் ‘சார்ஜ்ஜில்’ இருப்பார். அல்லது அலைபேசி ‘சார்ஜ்ஜில்’ இருக்கும்.
நாராய் நாராய் செங்கால் நாராய் பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன என சக்தி முத்திப்புலவர் கூறிய நாரைகள் கனடாவில் உண்டு என்பார் முதியவர்களிடம்.
முதன் முதல் சரித்திர நூலை எழுதிய ஹெரோடோடஸ் தெரிவித்த இரு துருவங்களுக்கிடையே சென்று திரும்புவதற்காக நாற்பதாயிரம் கி.மீ நீண்ட தூரத்தை வருடந்தோறும் பறக்கும் வட துருவ ஆலாக்களும் கனடாவில் உண்டு என்பார் இளைஞர்களிடம்.
நாரைகளுக்கும் கொக்குகளுக்கும் எப்படி வித்தியாசம் காண்பது? என எவருமே கேட்காவிடின் “உங்களுக்குத் தெரியுமா? பறக்கும் பொழுது கொக்கின் கழுத்து நேராகவும் நாரையின் கழுத்து ‘எஸ்’ வடிவில் வளைந்தும் காணப்படும்” என்பார்!
ரொரன்ரோவில் உள்ள உறவுகள் பொதுவாக அவரிடம் கேட்கும் கேள்வி “ஏனப்பா உந்தத் தொங்கலிலை என்னத்தைப் பார்க்கலாம்?” என்பதாகத்தானிருக்கும் என நினைத்துக் கொள்வார்.
“வசந்தகாலத்தை வரவேற்க வான் முட்டும் பறவைகள்.
மரங்கள், குளங்கள், வயல்கள், வெளிகள், வீதிகள், வீடுகள் என எங்கும் பறவைகள் மயம்.
சுமார் இருபதாயிரத்திலிருந்து முப்பதாயிரம் வரையிலான பறவைகளை ஒரே நாளில் பார்க்கலாம் என்பதில் மனம் சந்தோஷமாகச் சிறகடிக்கும்.
அருகிவரும் அன்னங்கள் பெருகிவருவதை அருகிலிருந்து பார்ப்பதற்காகவே கோடை காலத்தில் இங்கு பறப்பவர் பலர்.
அதிலும் வெள்ளை அன்னங்கள்தான் ஏராளம். ஆங்காங்கே கறுப்பு அன்னங்களும் அழகுக்கு அழகூட்டும்.
உலகின் உச்சி. கனடாவின் பெரிய நதியான மக்கன்ஸி, அலெக்சாண்ட்ரா நீர் வீழ்ச்சி, ஹே நதி, கீல் ஆறு, எரிமலைகள், வட துருவத்துக்கு கூட்டிச் செல்லும் 870 மைல் நீளமுள்ள ஐஸ் றோட் , தண்ணீரில் மேலாகாவும் கீழாகவும் சாகசம் புரியும் விமானங்கள், ஊசி இலைகாடுகள், கண்டபாட்டுக்குத் திரியும் கடமான்கள், கரடிகள், காட்டெருமைகள், ஓநாய்கள் மற்றும் துருவக்கரடிகள் நீர்நாய்கள் என இத்தனையும் பார்க்க வேண்டும் என்றால் இங்கு வர வேண்டும் என்பார்.
பின்னர் எதனையோ மறந்துவிட்டது போல் சிறிது நேரம் மௌனித்துவிட்டு உலகின் மிகவும் வடக்கில் பாவனையில் உள்ள நதி இங்குள்ள தொம்ஸன் நதியாகும். நயாகரா நீர் வீழ்ச்சியை விட இரு மடங்கு பெரியதும் கவர்ச்சியும் கொண்ட வேர்ஜினியா நீர்வீழ்ச்சி இங்குள்ள அடர் காடுகளை ஊடுருவும் நஹன்னி ஆற்றில் உண்டு். – பார்க்க ரம்மியம்.
ஸமரில் நள்ளிரவு சூரியனையும் பார்க்கலாம்.வின்டரில் இயற்கையாகவே வட வானில் வர்ண ஜாலம் புரியும் வட துருவ ஒளியையும் பார்க்கலாம். – பரவசம்.
குட்டிப் பிரசங்கம் செய்த நிறைவு முகத்தில் தெரியும்.
“என்ன கோதாரிக்கு உந்தக் கடுங்குளிருக்கை நீ கிடக்கிறாய்?” என இலங்கை இந்தியா போன்ற நாடுகளில உள்ள அவர் வயதொத்தவர்கள் கரிசனை காட்டுவதாக சில வேளை தோன்றும்.
பறக்கும் பழக்கம் எனது பேரனிடம். அவன் கடலடி எண்ணெய் எரிவாயு கள சேவை பொறியிலாளர். வீட்டு வாசலிலே தினமும் ஹெலிக்கொப்டர்
ஏற்றி இறக்கும். பெற்றோலியம், ரேடியம், யுரேனியம், வெள்ளி, செப்பு குறைவின்றி கிடைக்கும் சுரங்கங்கள் நிறைந்த நிலப்பரப்பு. அதனால்தான் அதற்கு வசதியாக அயலில் எவருமற்ற தனிமையில் வீடு. வார இறுதியிலோ அல்லது நேரம் கிடைக்கும் வேளைகளிலோ பறந்து பறந்து ஊர் பார்க்கும் வசதி என்னை இங்கு நிலை கொள்ள வைத்துள்ளது.
ஓரே ஒரு குடும்பம் மட்டுமே உள்ள ஓரே ஒரு ஊர் என எண்ணும் வகையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வேறு வீடுகளே தென்படாத பகுதியில்தான் நான் இருக்கின்றேன்.
யெல்லோ நைவ்விலிருந்து வடக்கே வெகு தூரம். இதன் பெயர் வாயினுள் நுழையவே நுழையாது. தொல்குடி வைத்த தொன்மையான பெயர்.
உவன் வெள்ளைக்காரனைப் பிடித்து சிவனொளிபாதமலை என்றோ தாமிரபரணி ஆறு என்றோ பிசிறாமல் சொல்லச் சொல்லு. பேந்து நான் இந்த ஊரின்ரை பேரை சொல்லுறன் என முடிப்பது அவரது பாணி.
இந்தப் பதிலில் அவர் பலமாகச் சிரிக்க மறுமுனையும் பலமாகச் சிரித்திடும் என்பது அவரது கற்பனை.
“கனடாவில் மாகாணங்கள் அல்லாத மூன்று பிரதேசங்களிலும் மாகாண அரசுகள் இல்லை. முதற்குடி மக்கள் நிறைந்த பூமி. மத்திய அரசின் மேலதிக நேரடிக் கண்காணிப்பு.
கனடா மத்திய அரசின் முடிக்குரியோர் – முதற்குடியினர் நலன் பேணும் அமைச்சராக உள்ள மாண்புமிகு சத்தியசங்கரி ஆனந்தசங்கரி அவர்கள் கனடாவில் அமைச்சராக திகளும் முதலாவது தமிழர் என்ற பெருமைக்கும் உரியவர்.
எமது நலனை எமது அபிவிருத்தியை நன்கு கவனிக்கும் அமைச்சர் அவர்.” இவ்விதம் அவர் சொல்லாத நாளில்லை.
இரு வேறு பிரதேசங்களுக்கோ, பிறதேசங்களுக்கோ மீண்டும் மீண்டும் சென்று திரும்புவதே வலசை எனப்படும் என்று சொல்கின்றார் எனின் வலசை என்றால் என்ன யாராவது கேட்டிருக்கலாம் என்பதை நாமாகவே கிரகித்துக் கொள்ள வேண்டும்.
வசந்த காலம் ஆரம்பமானாலே காணும். கனடாவின் பல் வேறு பகுதிகளை நாடி வலசையும் ஆரம்பமாகிவிடும்.
அவற்றுள் இந்த வட மேற்கு பிரதேசமும் ஒன்று.
அன்னங்கள், ஆலாக்கள், ஆந்தைகள், கழுகுகள், ராஜாளிகள், வல்லூறுகள், கடற்புறாக்கள், கூகைகள், வாத்துகள் என மிக நீண்ட தூரம் பறக்கும் பறவைகள் பல வட துருவத்தை இலக்காகக் கொண்டிருக்கும். குறுகிய தூரம் இடம் பெயரும் பறவைகள், மிருகங்கள், வண்ணாத்திப்பூச்சிகள், வெட்டுக்கிளிகள், மீன்கள் இடையிலேயே தமது எல்லையை நிவர்த்தி செய்திடும்.
பருவகால நிலை மாற்றம், உணவு, இனப்பெருக்கம், இருப்பிடம் போன்ற காரணங்களால் வலசை இடம் பெறும்.
வலசை செல்லும் பறவைகளின் பாதை மாறாத பயணத்திற்கு சூரியனும் நட்சத்திரங்களும் புவியீர்ப்பு காந்த சக்தியும் தடம் காட்டும்.
தலைமையை பின்பற்ற வேண்டும் என்பதனாலும் பறப்பதை இலகுவாக்கும் என்பதனாலும் நீண்ட தூரப்பறவைகள் ஆங்கில எழுத்தான ‘வி’ வடிவில் பறக்கின்றன.
இலையுதிர் காலம் ஆரம்பமாகும் பொழுது கனடாவின் பல் வேறு பகுதிகளிலிருந்து வலசையும் புறப்படத் தொடங்கிவிடும்.
இந்த வட மேற்கு பிரதேசமும் அவற்றுள் ஒன்று.
மிக நீண்ட தூரம் செல்லும் பறவைகள் தென் துருவத்தை இலக்காகக் கொண்டிருக்கும். குறுகிய தூரம் இடம் பெயரும் பறவைகள், மிருகங்கள், வண்ணாத்திப்பூச்சிகள், வெட்டுக்கிளிகள், மீன்கள் இடையிலேயே தமது எல்லையை நிவர்த்தி செய்திடும்.
மழைக்கு ஒதுங்கும் எமக்கு பறவைகளின் எச்சங்களே மழை போலானால்?
அதற்காகவே கழுவிக்காயவிடாமல் கழட்டி எறியும் காகித மேலங்கியினை நாடுவோரும் உளர். புதர்களுக்குள் சிக்குப்படும் அவர்களது தொப்பிகள் பறவைகளின் கூடுகளாக மாறுவதும் உண்டு.
மனிதரில் கணிசமான தொகையினரின் வலசைக்கு பறவைகளின் இடைவிடா ஒலிகளும் எச்சங்களும் காரணம்.
கனடாவில் எங்கள் தமிழினத்துக்கு வலசை உண்டு என்பது தெரியுமா? என்கின்றார் எனின் இதென்ன புதுக்கதையாகக் கிடக்கு என்று குழம்பக் கூடாது.
புதிர் போடுகின்றார் பதிலையும் அவரே சொல்வார் என புரிந்து கொள்வது புத்திசாலித்தனம்.
கனடாவிற்கு வெளியே ஆறு மாத காலம் சட்டபூர்வமாகவே தங்க முடியும் என்பதால் அங்கு சென்றாலும் ஓய்வு கால கொடுப்பனவு இங்கு தடைப்படுவதில்லை.
பிறகென்ன?
ஊர்ப்பற்று மிக்க எமது முதிய தமிழினமும் புதிதாக வலசை செல்வதை வழக்கமாக்க ஆரம்பித்துள்ளார்கள்.
வருடந்தோறும் இரண்டு கோடை காலங்களை காணும் அவர்கள் பாக்கியசாலிகள்.
மனச்சோர்வு, படபடப்பு, தொடர்ந்து சோகநிலை, தகுதியற்ற உணர்வு, உதவியற்ற உணர்வு, பொழுதுபோக்கில் நாட்டமின்மை, சக்தியின்மை,
மிகக் களைப்பு, நரம்பு நோய்கள் என்பன பறவைகளை தொடர்து பார்ப்பதால் பறந்திடுமாம்.
அடுத்த வருடம் வானம் சீராக இருந்தால் பறந்துதான் பாருங்களேன்!
கனடாவின் வடமேற்கு பிரதேசத்தில் சன நடமாட்டம் குறைவு. ஆனால் களம் பெரிது!
– இந்தக் கதையைப் போல!
– இக்கதை அவுஸ்திரேலியா அக்கினிக்குஞ்சில் (10.10.2024 ) வெளியாகியது.