வயிறுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 22, 2022
பார்வையிட்டோர்: 1,479 
 

(1974 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பள்ளியை அடுத்துள்ள தனது பள்ளியறைக்கு’ ஆமை வேகத்தில் வந்து சேர்ந்தார் ‘காக்கே’. சுவரோடு நெருங்கியிருந்த ‘ச(வ)ந்தூக்கின்’ மூடியின் மேல் அவரது பாய் சுருண்டு கிடந்தது.

மனுஷன் மேல் மூச்சு வாங்க பாயை மெதுவாக இழுத்தெடுத்து, கீழே விரித்தார். சாரத்தொங்கலில் சுற்றப்பட்டிருந்த ‘பட்டர்பிஸ்கோத்’ இரண்டையும் மடியிலிருந்து எடுத்து அருகேயிருந்த பிய்ந்த பெட்டிக்குள் போட்டுவிட்டு, ‘அல்லாஹு…’ என்று காலை நீட்டி அமர்ந்து கொண்டார்.

மூச்சை இழுக்கும் ஒவ்வொரு முறையும் கிழவன் செத்துப் பிழைத்துக் கொண்டிருந்தார். விலா எலும்புகள் தோலைக் கிழித்துக்கொண்டு வெளிவர எத்தனித்தன. கால்மாட்டு சாரத்தை மெல்லத் தூக்கிவிட்டு முழங்காலுக்குக் கீழ் வரியப்பட்டிருந்த நெடும்பிடவைப் பட்டியை மெதுவாக அவிழ்க்கலானார். இடைக்கிடை நகங்களால் சொறிந்து கொள்ளும் போது தான் எவ்வளவு சுகம்? இந்தத் தருணம் பார்த்துத்தானா கொசுக்கூட்டமும் படையெடுத்து வரவேண்டும்? கால்களை மூடிக்கொண்டு சாய்ந்துவிட்டார் காக்கே. அவரது கந்தல் பொட்டணி தலையைத் தாங்கிக் கொண்டது.

‘காக்கே’ என்றால் தாத்தா என்று மலாய்ப் பாஷையில் அர்த்தம். இந்த மலாய்க் கிராமத்திலே காக்கே குடியிருக்க வந்து எவ்வளவு காலமிருக்கும் என்பது அவருக்கு ஞாபகமில்லை. பிறந்து வளர்ந்த கொழும்பை விட அந்தக் கிராமம் அவருக்கு பிடித்து விட்டது. இனசனத்தர் என்று யாரும் அவருக்கு இல்லை. எவர்தான் ஏழைக் கிழவனுக்கு உறவு சொல்ல முன் வருவார்கள்?

அந்தக் கிராமத்தை வளப்படுத்தும் ஜீவ நதியான வளவை 1969 – ஆம் வருஷம் டிசம்பர் மாதத்தில் சீறிக் சினந்து என்ன பாடு படுத்திவிட்டது? பெரிய கல்வீடுகளே பிடுங்குண்ட மரமாகச் சிதறுண்டு போனால் காக்கேயின் சின்னஞ்சிறு ஓலைக் குடிசையின் கதி என்னவாயிருக்கும்?

அந்தக் குடிசையிருந்த இடத்தையும் காண முடியவில்லை. பாவம்! அதன்பின் கிழவனுக்கு தஞ்சம் அந்தப் பள்ளியின் கூடம் தான்.

வெள்ளம் வடிந்து ஒருமாத காலம்வரை உணவும், உடையுமாக உதவிகள் தாராளமாய்க் கிடைத்தன. இப்போதெல்லாம் யாரும் அப்பகுதிக்கு வருவதில்லை.

போக இடமின்றி நடுத்தெருவில் நின்ற காக்கேக்கு பள்ளியில் சாயம் பூசும் வேலை கிடைத்தது ஒருவகையில் வாசியாகி விட்டது. ஆள் பழைய பாஸ்’ காலில் புழுக்கடியோடு போராடிய காக்கேயை ஆஸ்த்மா வியாதியும் வந்து தொற்றி அவஸ்தைப் படுத்தியது. கிழவன் என்பதால் வயிற்றுப் பசி மட்டும் சும்மா விடுமா?

வயிற்றைக் கழுவுவதற்காக நோயையும் பொருட்படுத்தாது பள்ளி வேலையைப் பாரமெடுத்தார். வேலை முடிந்ததும் காக்கே பள்ளியை விட்டுப் போய்விடவில்லை. பள்ளி அறையில் தங்கும் ஆலிம்ஸாவுக்குத் தனிக்குத் துணையாக காக்கே அங்கேயே தங்கிவிட்டார். கிடைத்த கூலியால் ஒரு மாதத்தை ஒருவாறு தள்ளி விட்டார்.

இப்போதோ ஒரு நேரத்தைத் தள்ளுவதென்றால் ஊருக்குள் ஒரு ரவுண்’ அடிக்க வேண்டியுள்ளது. மனுஷன் யாரிடமும் கைநீட்டாதபடியால் அவரது அபிமானிகள் அவரைக் கவனித்துக் கொள்வார்கள்.

ஆலிம்ஸாவுக்கோ வருஷத்தில் முந்நூறு ‘ப்ரி சோறு படும் அதில் இரண்டொன்று காக்கேக்கும் கிடைக்கும்.

ஆலிம்ஸா அதே ஊர்க்காரர். வயல், ட்ரக்டர் எல்லாம் சொந்தமாக வைத்திருக்கிறார். பராத் மாதம் வந்துவிட்டால் ஆலிம்ஸாவின்பாடு உசார்தான். முட்டையும், ரொட்டியும் வெள்ளம் போல அவரின் அறையில் பெருகும். ஊருக்குள் பாத்திஹா கத்தம் ஓதி வேறு, ஒரு நூறு ரூபாவைத் தட்டிக் கொள்வார். –

இவற்றில் பத்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் காக்கேயின் பெட்டியிலும் ரொட்டிகள் நிறையும். ஒரு கிழமை வயிற்றுப் பாட்டைப் போக்கலாம் தான். என்றாலும் அந்த ரொட்டி மாதம் வருடம் ஒரு முறைதானே வரும்,

இன்று ……?

இரண்டே பிஸ்கட்டுடன் பகற் பொழுதைக் கழித்துவிட்ட காக்கே, தேயிலைப் போத்தலும் சீனிப் போத்தலும் காலியாகக் கிடப்பதைக் கண்டு வெறும் சுடுதண்ணீரை உள்ளே அனுப்பி விட்டு படுத்துக் கொண்டார்.

முந்தநாள் இரவு பள்ளிக்கு எதிரில் ஹாசீம் மத்திச்சம் வீட்டில் கோழி அறுத்துப் பெரிய கந்தூரி. காக்கே போன்ற எளியதுகள் வந்தால் மௌலிது கலரி ‘மஸந்தாக இருக்காது என்பது அவரது கருத்து. ஏழைகளைக் கூட்டிவந்து கொடுப்பதுதான் அன்னதானம் என்பதை மத்திச்சம் அறிந்திருந்தும் ‘புளியேப்பக்காரரை’ அழைப்பதில் ஒரு பிஸ்னஸ் ட்ரி’ இருப்பதாக ரகசியமாகச் சிலரின் காதில் வைப்பதுண்டு,

என்ன இருந்தாலும் காக்கே ஒரு ரோஷக்காரன். அழையா விருந்துக்கு நுழைவது அவரது அகராதியில் இல்லாததொன்று. நேற்றிரவு அவருக்கு புரிச்சரிஸ்கு ஒரு கோப்பைத் தேத் தண்ணீர்தான். ‘அல்ஹம்து லில்லாஹ் என்று அதோடு படுத்துக் கொண்டார்.

பள்ளியில் அஸருக்கு பாங்கு சொல்லும் சத்தம் கேட்கிறது. காக்கே மெதுவாக எழுந்து பாயில் உட்கார்ந்து கால்களைச் சொறிந்து கொண்டிருந்தார். உடலுக்கு றாஹத்தில்லை. வயிறு வேறு குத்பா ஓதிக்கொண்டிருந்தது.

அடுத்த அறையில் முனகல் ஒலியொன்று கேட்கிறது. காக்கே முக்கி முக்கி நடந்து சென்று அறைக்குள் எட்டிப் பார்த்தார்.

கட்டிலில் குப்புறப் படுத்து புரண்டு கொண்டிருந்தார் ஆலிம்ஸா.

என்ன ஆலிம்ஸா, என்னா நடந்தது?’ முகத்தைச் சுழித்துக் கொண்டே கட்டிலிலிருந்து கழுத்தை நிமிர்த்தினார் அவர்.

“இரவு” ஹாசிம் மத்திச்சம் ஊட்டில் கோழி இறச்சால கொஞ்சம் கூடத் திண்டிட்டன். அப்பவே வஹுத்தில கொஞ்சம் பாரமாயிருந்தது. பகல் பழய ஆலிம்ஸா ஊட்டில கத்தம் திண்டிட்டு வந்து சாஞ்சன் வஹுத்துவலி தாங்கேலா காக்கே…

தலையணையை வயிற்றிலே இறுக்கிக் கொண்டு மறுபடியும் புரண்டார் ஆலிம்ஸா. திடீரென்று எழும்பி சட்டைப் பையில் கையை விட்டார். நாணயங்கள் சலசலத்தன. ஐம்பது சதக் குத்தியொன்றைக் காக்கேயின் கைக்குள் திணித்து ‘ஆப்தீன் காக்கட கடேயில ஆனச் சோட ஒண்டு வாங்கீட்டு வாங்கோ’ என்றார்.

இரண்டு பிஸ்கட் போதாதென்று அடம்பிடித்த வயிற்றையும் தாங்கிக் கொண்டு ஆமை நடை போட்டார் காக்கே, ஆப்தீன் காக்காவின் கடையை நெருங்கும்போது அவரது தலைசுற்றுவது போன்ற ஒரு பிரமை. வேகத்தைக் குறைத்துப் பார்த்தார். கண்கள் இருண்டன. அவரது நினைவுப் புலன்கள் செயலிழந்தன, அதன்பின் நடந்தவை……..?

காக்கே கண்விழிக்கும் போது தான் படுத்திருப்பது ஆப்தீன் காக்கா கடையின் முன்வாங்கு என்பதை ஒருவாறு உணர்ந்து கொண்டார். எதிரில் ஐந்தாறு பேர் சுற்றி வளைத்து புதினம் பார்த்து நின்றனர். ஆலிம்ஸா கூட அங்கே நின்றிருந்தார். தாடியைத் தடவிக்கொண்டே அவர் சொன்னார்:

‘ஸலீம் மொதலாளி விடேலாத மனுஷன். அவரு புதுசா எடுத்த வயல்ல இண்டக்கி மொதல்ல அறுவட செஞ்சதுக்கு ஒரு பாத்திஹா ஓதோணுமாம். இப்ப அதுக்குத்தான் போறன். சோடாவை காம்பிராவில வைங்கொ…. அல்லா சொகத்தத் தருவான்

அந்தக்குரல் எங்கோ தூரத்திலே கேட்டது காக்கேக்கு. அங்கிருந்த புண்ணியவான் ஒருவர் வாங்கிக் கொடுத்த கோப்பியைக் குடித்துவிட்டு காக்கே சோடாவுடன் பள்ளிவாசலை வந்தடைந்தார்.

உள்ளே பள்ளியில் தஃலீம் வாசிக்கும் சத்தம் கனவுபோல் கேட்கிறது.

‘நபிகள் நாயகம் கூறினார்கள்…தனவந்தரைக் காட்டிலும் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே ஏழைகள் சுவர்க்கம் புகுவார்கள். ஆயிஷாவே ஒரு பேரீச்சம் பழப்பாதியேயாயினும் சரியே கொடுக்காமல் ஏழையை திருப்பி அனுப்பவேண்டாம்…

பள்ளிக்கு வெளியே ‘யா அல்ல’ என்ற குரல் எழுந்தது. ‘தஃலீம் நடத்திய வணக்கவாளிகள்’ ஓடிவந்து பார்த்தனர். காக்கேயின் வெளிறிய உடல் சரிந்து கிடந்தது!

– மல்லிகை, ஏப்ரல் – 1974, சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *