(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
டிராம் வண்டியில் போய்க்கொண் டிருந்தேன். என்னுடைய பக்கத்தில் உட்கார்ந்திருந்தவன் தன்னுடைய முழங்கையால் அவனுக்குப் பக்கத் தில் இருப்பவனை மெள்ள இடித்து, “அதோ பார், அந்த மூலையில் இருக்கிறாரே, வெற்றிலையை மென்றுகொண்டு, அந்தக் கிழவர் எவ்வளவு தி ருஷ்டசாலி, தெரியுமா? அவர்தான் ஒரு பெயர் பெற்ற ஸ்திரீக்கு இங்கிலீஷில் மேற்படிப்புச் சொல் லிக் கொடுக்கிறாராம். அதனால் அவளுடன் தினம் ஒரு மணிநேரம் பேசுகிற பாக்கியம் இந்தக் கட்டுப் பெட்டிக்குக் கிடைத்திருக்கிறது” என்றான்.
“அந்த ஸ்திரீ யார்?”
“வனமாலா.”
“சினிமா நக்ஷத்திரம் வனமாலாவா?”
“வேறே யாராக இருந்தால் இதை ஒரு விஷயமாக உன்னிடம் சொல்லப் போகிறேன்? அது இருக்கட்டும். எதற்காக ஹாலிவுட் பாஷையில் நக்ஷத்திரம் என்று சொல்லவேண்டுமாம்? உனக்குக் காது இல்லையா? அவள் பாடுகிறதைக் கேட்டால், கந்தர்வ ஸ்திரீ என்று சொல்லலாம் என்று உனக்குத் தோன்றவில்லையா?”
“அப்படிப் பார்க்கப் போனால், உனக்குக் கண் இல்லையா? அவளுடைய உருவத்தையும் நடனத்தையும் பார்த்தால் ஏன் அப்ஸரஸ்திரீ என்று சொல்லக் கூடாதாம்?”
இதற்குள் வண்டி நிற்கவே, அவர்கள் இருவரும் இறங்கிச் சிரித்துப் பேசிக்கொண்டு போனார்கள். நானும் இறங்கி வீடு சென்றேன். வழி முழுவதும் இந்தச் சம்பாஷணையே என்மனத்தில் வேலை செய்துகொண்டிருந்தது. வீட்டை அடைவதற்குள் ஒரு விதமாக என் மனத்தைத் தைரியப்படுத்திக் கொண்டேன். வனமாலாவுடன் எனக்குப் பரிசயம் இல்லாது போனாலும், இவ்விதம் அவளுக்கு ஒரு கடிதம் எழுதத் துணிந்தேன்:
ஸ்ரீமதி வனமாலா அவர்களுக்கு, கொனஷ்டை உபயகுசலோபரி, வெகு ஆவலுடன் எழுதியது. உங்களுக்கு இங்கிலீஷில் மேற்படிப்புச் சொல்லிக் கொடுப்பதற்காக ஓர் ஆசான் தேவை என்று அறியலானேன். அது வாஸ்தவமானால் என்னையே டியூடராக நியமிக் கும்படி கோருகிறேன்.
இங்கிலீஷில் ஆகட்டும், இதரக் கல்விகளில் ஆகட்டும், எனக்கு உள்ள பாண்டித்தியத்தைக் குறித்து அநேக நற்சாட்சிப் பத்திரங்கள் எனக்கு வலுவில் கிடைத்திருக்கின்றன. அவற்றிலிருந்து நானாகப் பொறுக்காமல், கண்களை மூடிக்கொண்டு தொட்டெடுத்துச் சிலவற்றை மட்டும் இதனடியில் சேர்த்திருக்கிறேன். இவற்றை நீங்கள் படித்தவுடனே என்னையே திட்டம் செய்வீர்களென்று எனக்குப் பூர்ண நம்பிக்கை இருக்கிறது. அநுகூலமான பதிலை மறு தபாலில் எதிர்பார்த்துக்கொண் டிருக்கிறேன். அவ்விதம் கிடைக்காவிட்டால், இன்னும் சில சர்ட்டிபிகேட்டுகளை நான் அனுப்பவும், நீங்கள் படிக்கவும் அவசியம் நேரிடும்.
இப்படிக்கு கொனஷ்டை.
அடக்கம், நற்சாட்சிப் பத்திரங்கள்.
(1) ஓ! கொனஷ்டை மாமாவுக்கு நன்றாய் இங்கிலீஷ் தெரியுமே! லலிதா அம்மாமியோடு, தாட்டு பூட்டுன்னு பேசுவாரே! (ஒப்பம்) விநோதினி, பரிமள ரங்கன் (அடுத்த வீட்டுக் குழந்தைகள்.)
(2) மலயமாருதம் ஆபீஸு:-கொனஷ்டைக்கு இங்கிலீஷ் நன்றாய்த் தெரியும். எங்களுக்கு அவர் சில தமிழ்க் கதைகளை அனுப்பியிருக்கிறார். அவை களிலிருந்து அவருக்கு என்னவோ, தமிழ் சுத்தமாய்த் தெரியாது என்பது பிரத்தியக்ஷமாக இருக்கிறது.
ஆகையால் வேறே ஒரு பாஷையாவது நன்றாய்த் தெரியாமற் போனால் அவர் இத்தனை நாளாக எப்படி வயிறு வளர்த்திருக்கக்கூடும்? அது வும் இந்தக் காலத்திலே! ஆகையால் அவருக்கு இங் கிலீஷ் தெரிந்துதான் இருக்கவேண்டும். (ஒப்பம்) மார்க்கண்டேயர், மலய மாருதப் பத்திராசிரியர்.
(3) திருப்பல்லாணி : கொனஷ்டையை எனக்கு நேரில் தெரியாது. ஆனால் அவருடைய ஜாதகத் தைப் பார்வையிட்டிருக்கிறேன். அவருக்கு வாக்கு ஸ்தானத்தில் அசுர குருவாகிய சுக்கிரன் இருக்கிற படியால், நீசபாஷையாகிய இங்கிலீஷைப் படிப்புச் சொல்லிக்கொடுக்கக் கூடியவர் என்றே தோன்றுகிறது.
அதற்கு மேலாக உறுதியாய்க் கேட்டால் அது அவரிடம் படிப்புச் சொல்லிக் கொள்ளுகிறவர் களுடைய அதிருஷ்டத்தைப் பொருந்தி இருக் கிறது. வேண்டுமானால் அவர்களுடைய ஜாதகத் தைப் பார்க்கிறேன். ஜாதகம் ஒன்றுக்கு ரூபாய் ஒன்றே. நாலு கேள்விகளுக்கு உத்தரம் அளிக்க, அணா 6. தபால் சார்ஜ் பிரத்தியேகம். (ஒப்பம்) பராசரஜோஸியர், சுக்ரீவோபாஸனை, ஜ்யோதிர் நிலயம், திருப்பல்லாணி.
(4) என் சிநேகிதன் கொனஷ்டையைப் பார்க் கும் பொழுதெல்லாம், நீறு பூத்த நெருப்பு என்று சொல்லுவார்களே, அந்த வசனம் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. வெளிக்குப் பார்த்தால் சாம்பல்மாதிரி இருப்பான். ஆனால் அவனிடத்தில் வஞ்சனை இல்லை. உள்ளேயும் அதே சாம்பல் தான். (ஒப்பம்) பலராமன்.
(5) உங்களுடைய சாமர்த்தியத்தைக் குறித்து என் கைப்பட ஒரு நற்சாட்சிப் பத்திரம் இப் பொழுதே வேணுமா? நிஜமாகவா? அப்படியா னால் வாஸ்தவத்தை எழுதிவிடுவேன்! எழுதட்டுமா? (ஒப்பம்) லலிதா.
வனமாலா சென்னையிலேயே நுங்கம்பாக்கத்தில் வசிப்பதாக அறிந்தேன். அவளுடைய விலாசத்தை டெலிபோன் புஸ்தகத்திலிருந்து கண்டுபிடித்து இந்தக் கடிதத்தைத் தபாலில் போட்டுவிட்டுப் பொறுமையுடன் காத்திருந்தேன். மூன்றாம் நாள் பதில் கிடைத்தது.
“உங்களுடைய கடிதம் அதிகப்பிரசங்கித் தனமா, சாமர்த்தியமா என்று எனக்கு இன்னும் நிச்சயம் ஏற்படவில்லை. அதைத் தீர்மானிப்பதற் காகவே, உங்களைப் பார்க்கச் சம்மதிக்கிறேன். அடுத்த சனிக்கிழமை சாயங்காலம் ஐந்து மணிக்கு உங்களைக் காண்பதற்கு எனக்குச் சௌகரியப் படும் ‘” என்று கண்டிருந்தது.
இதைப் பெருமையுடன் பலராமனிடம் காண் பித்தேன். “நானும் வருகிறேன்” என்றான். என்றேன். நாங்கள் இருவரும் குறிப்பிட்ட மணிக்கு வனமாலாவின் வீட்டை அடைந்தோம். அவளுடைய தாய் எங்களை வரவேற்று, ஹாலில் உட்காரச் செய்துவிட்டு, உள்ளே போய் விட்டாள்.
ஐந்து நிமிஷம் சென்றன. பத்து நிமிஷம் கால் மணி கழிந்தது. வனமாலாவின் சென்றன.
நிழலைக்கூடக் காணவில்லை. “நீ வந்தால் ஒரு காரியமும் கேட்டேன்.
கைகூடாதா?” என்று பலராமனைக் “உன் ஜாதகத்தை மறுபடியும் பராசர ஜோஸியருக்கு அனுப்பிக் கேளு” என்று அவன் யுக்தி சொன்னான்.
ஐந்தரை மணி அடித்தது. “நாம் பேசாமல் புறப்பட்டுப் போய்விடலாம் ” என்றேன்.
“அதுதான் சரி” என்றான் பலராமன்.
“ஆனால், நாம் திருடர்கள் மாதிரி இப்படி நழுவி விட்டால், பிற்பாடு வீட்டிலிருந்து ஏதாவது சாமான் காணாமற் போனால் நம்முடைய பேரில்தானே சந்தேகம் விழும்?”
“நம்முடைய பேரில்’ என்று எதற்காக இரட் டைப்படியாகப் பேசுகிறாய் ? நீதான் இவளுக்கு எழுதியது. உன்மேல்தான் சந்தேகம் ஏற்படும். உன் விலாசம் இவளுக்குத் தெரியும். உன் வீட்டில் தான் சோதனை போடுவார்கள். எனக்கு ஒரு பயமும் இல்லை. ஆகையால் மேஜை மேல் இருக்கிறதே இவளுடைய படம். இதை நான் எடுத் துக்கொண்டு போகப் போகிறேன் என்று பல ராமன் வெட்கமில்லாமல் கையை நீட்டினான்.
“அட! சும்மா இரு! இதை உன் வீட்டுக்குக் கொண்டுபோனால் சந்திரமதி என்ன நினைப்பாள்? என்னிடம் கொடு, நான் கொண்டுபோகிறேன்”.
“உனக்கு மாத்திரம் பரவாயில்லையோ? லலிதா என்ன சொல்லுவாள்?”
அவன் எடுத்துக் காட்டினது சரிதான். சந்திர மதி என்ன நினைப்பாள், லலிதா என்ன சொல்லு வாள்; இரண்டைக் குறித்தும் ஆலோசிக்க வேண்டியதுதான். முடிவில் படத்தை யோக்கியமாய் மேஜை மேலேயே வைத்துவிட்டோம்.
மணி ஐந்தே முக்கால் ஆயிற்று. கடைசியாய், ஐந்து நாற்பத்தேழுக்கு, ஒரு செக்கண்டுகூடப் பிசகாமல் வனமாலா உள்ளே நுழைந்தாள். டிராம் வண்டிப் பிரயாணிகள் இருவர் சொன்ன தும் சரிதான் என்று தோன்றிற்று.
“உங்களை அதிக நேரம் காத்திருக்கச் செய்து விட்டேன். மன்னிக்க வேண்டும்” என்றாள்.
சாதாரண மனிதர்கள் மாதிரி நீங்களும் மன்னிப்புக் கேட்டுப் போதாது. ஏனென்றால் உங்களையொத்தவர்களுக்காகக் காப்பதானால் ஒவ் வொரு நிமிஷமும் ஒரு யுகம் மாதிரி அல்லவா தோன்றுகிறது?” என்றேன்.
இதற்குள் பலராமன் தன்னுடைய சாதுர்யத் தைக் காண்பிக்கத் தொடங்கினான். நாங்கள் காத்துத் தவித்தது என்னவோ வாஸ்தவந்தான். ஆனால் எல்லாம் உங்களைக் கண்டவுடன் பறந்து போய்விட்டது என்றான். அவள் முறுவலித்தாள்.”
நான் பலராமனைக் கடிந்து நோக்கினேன். என்னோடு போட்டியாய்ப் பேசுவதற்கா அவனை அழைத்து வந்தேன்? “அவன் சும்மா சொல்லு கிறான். நாங்கள் ஒன்றும் தவிக்கவில்லை. நாங் களே இப்பொழுதுதான் வந்தோம். நீங்கள் வரு வதற்கு இரண்டு விநாடி முன்புதான் வந்தோம். நாற்காலியில் இன்னும் உட்காரக்கூட இல்லை, பாருங்கள்” என்றேன்.
“அப்படியா! நீங்கள் ஐந்து மணிக்கு வந்த தாக எங்கம்மா என்னிடம் சொன்னாளே ?”
“அப்படிச் சொன்னாளா என்ன? இந்த நாளைத் தாயார்களுக்கே என்ன சொல்லலாம், என்ன சொல்லக் கூடாது என்று தெரிகிறதில்லை. குழந்தைகள் தாயார்களைச் சரியாய் வளர்க்காத குற்றம்” என்றேன். இதைக் கேட்டுக்கொண்டே அவளுடைய தாய் யசோதா அம்மாள் உள்ளே நுழைந்தபடியால், “இந்தப் பேச்சை மாற்று வதற்கு இது சரியான சமயம் என்று எனக்குத் தோன்றுகிறது” என்று நான் விளம்பினேன்., அவர்கள் சிரித்தார்கள்.
உங்கள் இருவர்க்குள் எவர் கொனஷ்டை என்று ஊகிக்க முடிகிறது. மற்றவர் யாரோ, தெரியவில்லையே?” என்று யசோதா கேட்டாள்.
நான் பலராமனை ‘இன்ட்ரொடியூஸ்’ செய் தேன். அவனுடைய பெயரைக் கேட்டவுடன், ‘கொனஷ்டைக்கு அந்த ஸர்ட்டிபிகேட்டு கொடுத் தவரா? உங்களைப் பார்க்க வேண்டும் என்று நாங்கள் ஆவல் பட்டோம். வந்தது வெகு சந்தோஷம்” என்றாள்.
வேலைக்காரன் தின்பண்டங்களைக் கொண்டு வந்தான். யசோதா அம்மாளுக்குச் சங்கீத ஞான மும் உயர்ந்த அநுபவத்தால் மட்டும் கிடைக்கக் கூடிய பேச்சுச் சாமர்த்தியமும் ஏராளமாக உண்டு. மேஜையைச் சுற்றி உட்கார்ந்து, நாலு பேர் மத்தி யில் சம்பாஷணை பொதுப்படையாக நடக்கையில், காலம் வெகு விரைவாகக் கழிந்தது. எழுந்து விடைபெற வேண்டிய சமயம் நெருங்கியது.
“எனக்கு இங்கிலீஷ் வாத்தியார் தேவை என்று உங்களுக்கு யார் சொன்னது?” என்று வனமாலா கேட்டாள். டிராம் வண்டியில் என் காதில் பட்ட சம்பாஷணையை விவரித்தேன்.
“ஆமாம், அந்தக் கிழவரைத்தான் திட்டம் செய்தாகிவிட்டது என்று உங்களுக்குத் தெரிந்து விட்டதே. அதற்கு மேல் எனக்கு அப்ளிகேஷன் அனுப்புவானேன்?” என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்.
இந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வது? வம்புக்காக எழுதினேன் என்று ஒப்புக்கொள் வதா ? தவிர இந்தத் தத்துவத்தை இதற்குள்ளே அவள் உணர்ந்திருக்க மாட்டாளா? ஆகையால் அவள் எதிர்பார்க்கிற பதிலையும் மன்னிப்புக் கோரிக்கையையும் சொல்லவாவது என்று எண்ணி, அதற்குப் பதிலாக நாக்கில் முதலில் வந்ததைச் சொல்லிவைத்தேன்.
“உங்களுக்குத்தான் ஏற்கனவே இங்கிலீஷ் தெரிந்திருக்கையில் இனிமேலும் அதைப் படிப்ப தென்றால் என்ன அர்த்தம்? ஒருவேளை ஆங் கிலப் படங்களில் நடிப்பதாக உங்களுக்கு உத் தேசம் இருக்கலாம் என்று ஊகித்தேன். அப்படி இருந்தால் அதற்கு வேண்டிய இங்கிலீஷம் பொதுக் கல்வியும் புகட்டுவதற்கு அந்தக் ‘கட்டுப் பெட்டி’ க்குத் தெரியுமா? இதற்கெல்லாம் என் னைப்போல் ஓர் ஆனர்ஸ் பீ. ஏ., அல்லவா வேண்டியது-?”
என்னுடைய மனோரதத்தை எப்படியோ கண்டு பிடித்து விட்டீர்களே !” என்று பிரமித் தாள். அது வாஸ்தவமோ, நடிக்கும் சக்தியோ, அவளுடைய விஷயத்தில் சொல்ல முடியாது. பிர மித்த மாதிரியே இருந்தது. அதற்குமேலே சொன் னாள்: “காரியந்தான் உங்களுக்குத் தெரிந்து விட்டது. இது சம்பந்தமாக உங்களுடைய புத்திமதியை ஏன் கேட்டுக் கொள்ளக் கூடாது என்று யோசிக்கிறேன்.”
“அடேயப்பா! எனக்கு அவ்வளவு கௌரதை கிடைக்கப் போகிறதா! ஆகவேண்டியது என்ன? சொல்லுங்கள்.”
“இங்கிலீஷில் படம் தயார் செய்கிறவர்களுக்கு எழுதலாமா என்று உத்தேசிக்கிறேன். ஆனால் என்னைப்பற்றி. நானே என்னமாய்ப் புகழ்ந்து எழுதுகிறது?”
“இதுதானா கஷ்டம்! உங்களைக் குறித்துப் பல பத்திரிகைகளில் எத்தனையோ குறிப்புகளும் பிரசுரங்களும் வந்திருக்குமே, அவைகளை அனுப் பினால் போதுமே?”
“அந்த யோசனை எனக்கும் தோன்றிற்று. ஆனால் அத்தனையுமா அனுப்புகிறது? அவை களுக்குள் எவை ‘முதல் கிளாஸோ’, எவற்றை ஓர் இங்கிலீஷ் ‘ப்ரொடியூசர்’ ரஸிப்பானோ அவற்றை மாத்திரம் உங்களைப் போல் விஷயம் தெரிந்தவர் ஒருவர் பார்த்துப் பொறுக்கிக் கொடுத்தால் உபகாரமாக இருக்கும். இதுவரைக்கும் வெளிவந்த குறிப்புக்கள் எல்லாவற்றையும் கத்தரித்து ஒரு நோட்டு புக்கில் ஒட்டி வைத்திருக்கிறேன்-.”
“இதுதானா பிரமாதம்! அந்த நோட்டுபுக்கு எங்கே?”
“அதோ அந்த மேஜையின் மேல் இருக்கிறதே, அதுதான் ” என்று காட்டினாள்.
“அதுவா?” என்று மலைத்தேன். அகலமும் நீளமுமாய் அது ஒரு பிடி உயரம் இருந்தது.
“ஆமாம். உங்களுக்கு ரொம்ப சிரமம் கொடுக் கிறேன் என்று சொல்லி, ‘குந்தல விருஷ்யர் ‘ படத்தில் அந்த என்னவோ ஒரு பெயருள்ள ரிஷியை மயக்குகிற கட்டத்தில், எத்தனையோ ஆயி ரம் ஜனங்கள் கண்டு களிக்கும்படி இவள் உபயோ கித்த பார்வையையும் குரலையும், தற்சமயம் என்னு டைய தனிப்பிரயோ சனத்திற்காக உபயோகித்தாள்.
அதற்கு மேல் கேட்பானேன்! “சிரமமாவது கிரமமாவது! ஒரு சிரமமும் இல்லை” என்று சொல்லிவிட்டு, கஷ்டத்துடன் அந்தப் புஸ்தகத்தை வீட்டிற்குத் தூக்கிக்கொண்டு போனேன்.
இரவு போஜனம் செய்தவுடன் குறிப்புக்களைப் படிக்க உட்கார்ந்தேன். ஐந்தாறைப் புரட்டிப் பார்த்துவிட்டு, லலிதா தூங்கப்போய்விட்டாள். சரி யாகப் பன்னிரண்டு மணி அடித்தது, கடைசிப் பக்கத்திற்கு நான் வந்து சேர்ந்தபொழுது. இது வரை முதல் தரமாக ஆறு குறிப்புக்களே கிடைத் திருந்தன. அந்தப் பக்கத்தின் அடியில் நாலு விரல் அகலமுள்ள இடத்தின்மேல் ஒரு துண்டுக் கடிதத் தைத் தவறிப்போய், எழுத்துக்கள் உள்பக்கம் அகப்பட்டுக்கொண்ட விதத்தில், அதாவது கவிழ்த்து ஒட்டியிருப்பதைக் கண்டேன். இவ்வளவு வேலை செய்த பிறகு இந்த அல்பத்தைப் பாக்கியில் வைப்பானேன் என்று எண்ணி, ஜாக்கிரதையாக ஜலத்தைச் சொட்டவிட்டு, ஊற வைத்து அந்தத் துண்டுக் கடிதத்தைப் பிரித்து எடுத்துப் படித் தேன். அதில் இவ்விதம் எழுதியிருந்தது:
“உங்களுடைய ஐந்து நற்சாட்சிப் பத்திரங் களை என்னைப் படிக்கும்படி செய்தீர்கள். அதற்குப் பழியாக என்னுடைய நற்சாட்சிப்பத்திரங்கள் ஐம் பதுக்குக் குறையாமல் உங்களைப் படிக்கும்படி செய்துவிட்டேன். இப்பொழுது நம் இருவருடைய கணக்கு நேர் என்று எனக்குத் தோன்றுகிறது. உங்களுடைய அபிப்பிராயம் எப்படியோ? அதை அடுத்த சனிக்கிழமை சாயங்காலம் ஐந்து மணிக்கு நேரில் கேட்க அவாக் கொண்டிருக்கிறேன்- வனமாலா.”
ஓகோ! அப்படியா சமாசாரம்! எனக்கு அப் பொழுதே தெரியும். ஆனால் அது இப்பொழுது தான் ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு ஸ்திரீ, அவ்வ ளவு நயமாய்த் தேனொழுகும் குரலில் பேசினால், அவள் சொல்வதை நம்பவே கூடாது. ஆனால் அதை இப்பொழுது நினைத்துக்கொண்டு என்ன பிரயோசனம்? இருக்கட்டும் ! எப்படியாவது பழிக் குப் பழி வாங்கும் வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்.
இன்னொரு சமாசாரம். அன்று அவள் எங்க ளைக் காக்கcவைத்தாள் அல்லவா? தான் ஒரு சினிமா நக்ஷத்திரம் என்கிற காரணத்தைக் கொண்டுதானே? சினிமா உலகத்துடன் ஏதோ சுவல்ப சம்பந்தம் எனக்கும் இப்பொழுது ஏற்பட்டு விட்டதல்லவா? ஆகையால் குறிப்பிட்ட காலம் தப்பி ‘லேட்’டாக வருவதற்குச் சிறிது உரிமை எனக்கும் உண்டே? சனிக்கிழமை ஐந்து மணிக்கு வரச்சொல்லியிருக்கிறாள். நான் சரியாக ஐந்து நாற் பத்தெட்டுக்குத்தான் போய்ச் சேரப் போகிறேன்.
இதைப் பலராமனிடம் சொன்னேன். “சே! சே! ‘லேட்’டாக வருகிற உரிமை ஸ்திரீகளுக்கு மாத்திரம் உண்டு. அவர்கள் அலங்காரம் செய்து முடிவதற்குள் காலம் ஓடிவிடுகிறது. உனக்கு என்ன அலங்காரம் உண்டாம்? புருஷர்கள், ஒப் புக்கொண்ட காலத்திற்கு முந்தியேதான் தயாராக இருக்க வேண்டும்” என்றான்.
அவனும் பிடிவாதமாய்ப் பேசினான். நானும் பிடிவாதம் பிடித்தேன். கடைசியில் இருவருக்கும் மத்தியஸ்தமாக லலிதா சொன்னபடி, சனிக்ழமை ஐந்து மணிக்குப் பதிலாக, வெள்ளிக் கிழமை ஐந்து நாற்பத்தெட்டுக்கு நாங்கள் போவது என்று தீர்மானித்தோம். அப்படியே வனமாலாவுக்கு எழுதிவிட்டேன்.
எனக்குத் தோன்றுகிறது: நடந்ததையெல்லாம் எழுதி வனமாலாவின் பொல்லாத்தனத்தை உலகத்தார் அறியும்படிச் செய்வதே சரியான பழிக்குப் பழியாகும் என்று. ஆகையால் அவ்விதமே செய்துவிடுகிறேன்.
– கொனஷ்டையின் கதைகள், முதற் பதிப்பு: மே 1946, புத்தக நிலையம், திருச்சி.