(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
முருகன் கோயிலில் மயில் ஒன்றிருக்கிறது. நாள் முழுதும் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து விட்டு பொழுது சாய்ந்ததும் கோபுரத்து உச்சாணியில் இருக்கும் யாளியின் தலையில் வந்து உட்கார்ந்து விடுகிறது – இரவைக் கழிக்க.
அந்திக் காற்று மயிலின் மீது வீசும் பொழுது, தோகை கடலலை போல் விசித்திர வனப்புடன் புரளுகிறது. அப் பொழுது அது உட்கார்ந்திருக்கும் உல்லாசத்தைப் பார்த்தால் தன் அழகுக்கு உன்னத ஸ்தானமும் கோபுரக் காற்றும் அத்யாவசியம் என்று உணர்ந்திருப்பது போல் தோன்று கிறது. கோபுரத்திலிருந்து கொண்டே இரவு முழுதும் ஜாமத்துக்கு ஜாமம் கூவுகிறது.
ஆமாம். மயில் நினைப்பது மனிதனுக்கும் பொருந்தும். சந்தைக் கூட்டத்திலே வயிற்றைக் கழுவும் வல்லடி வழக்கில் மனிதன் ஈடுபட்டிருந்த போதிலும் உள்ளத்தின் வனப்பு குறையாமல் இருக்க வேண்டுமானால் தனிமையின் கோபுரத்து உச்சியில் சற்று உட்கார்ந்துதான் ஆக வேண்டும். அதோடு
அதோடு நில்லாமல் விழிப்புடனும் இருக்க வேண்டும்- மயில் ஜாமத்தில் கூவுவதைப் போல.
– மனநிழல் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.