மாடத்தி அம்மாள் நெஞ்சில் அறைந்து கதறி அழுத போதுதான் அது நடந்தது.
பெரும் உறுமலோடு தன் இயக்கத்தை நிறுத்திய, அந்த சிஎன்சி மிஷின் லேசான அதிர்வோடு நின்றுவிட, பதற்றத்தோடு ஓடி வந்தான் கல்யாணசுந்தரம். இயந்திரத்தின் மேனி பெரும் கொதிப்பெடுத்துச் சூடாய் இருந்தது. உற்பத்தியாகி வெளித் தள்ளப் பட்டிருந்த குவியலைப் பார்த்தான். பேனல் போர்டுக்கு ஓடினான். ஏகத்துக்கும் சிவப்பு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.
“அடடா. என்னமோ ஆயிடுச்சு மிஷினுக்கு. என்னான்னு தெரியலையே” என்று பயத்தோடும், பதற்றத்தோடும் அங்கும் இங்கும் ஓடினான். இவன் அங்கும் இங்கும் பதற்றத்தோடு ஓடுவதைப் பார்த்த பக்கத்து மிஷின்காரர் விரைந்து வந்தார்.
“என்ன கல்யாணி? என்னா ஆச்சு?” என்று வினவினார்.
“என்னான்னு தெரியலைண்ணே? ஏதோ பலமாச் சத்தம் வந்துச்சு. மிஷினு நின்னுடுச்சி. என்னான்னு தெரியலைண்ணே?”
“மொதல்ல போயி மெயின ஆஃப் பண்ணு. அப்பொறம் என்னாச்சுன்னு பார்க்கலாம்” என்றவுடன் கல்யாணி ஓடிப்போய் மெயினை ஆஃப் செய்தான்.
“கல்யாணி வெர்னியர எடுத்து போல்ட்டோட மெசர்மெண்ட் சரியா இருக்குதான்னு பாரு” என்றவுடன், கல்யாணி ஓடினான். டூல்ஸ் பாக்ஸிலிருந்த வெர்னியரை எடுத்து வந்தான். உற்பத்தி செய்யப்பட்டு வெளித் தள்ளப் பட்டிருந்த போல்ட் குவியலில் இருந்து ஒரு போல்ட்டைக் கையில் எடுத்தான். அளந்து பார்த்தான். அளந்த போதுதான் உள்ளுக்குள் வதக்’கென்றது. பதறி நடுங்கிய குரலில்,
“அண்ணே, பாடில ரெண்டு எம்எம் அவுட் அடிக்குதுண்ணே” கலவரத்தோடு சொன்னான்.
“அய்யய்யோ. மெசர்மென்ட் மாறியிருக்குதே. அம்புட்டும் டேமேஜ்ன்னு மெமோ குடுத்துருவானே நாறவாயன். கல்யாணி ஓடிப்போயி, சூப்ரேசரு நாறவாயனைக் கூட்டியாந்து காமுச்சுடுப்பா”. என்றவாறே, தன் மெஷினை நோக்கி நகர்ந்தார்.
தன் மெஷின் சரியாக இயங்குகிறதா? என்ற சந்தேகத்தோடு ஒருமுறை சரி பார்த்துக் கொண்டார். வெர்னியரை எடுத்து அளந்து பார்த்தார். சரியாக இருக்க திருப்தியானார். கண் இமைக்கும் நேரத்தில் ‘வத வத’வென்று போல்ட்டுகளை வெளித் தள்ளிக் கொண்டிருந்தது இயந்திரம்.
சூபர்வைசர் சிவசண்முகம் வந்து பார்த்தார். ஒரு போல்ட்டை எடுத்து அளந்து பார்த்தார். அளக்கும் போது, அவரின் கை நடுங்கியது. உதட்டைப் பிதுக்கினார். பக்கத்தில் பதற்றத்தோடு அவர் அளவெடுப்பதையும், உதட்டுப் பிதுக்கலையும் பார்த்தபடி, கைகளைப் பிசைந்து கொண்டு நின்று கொண்டிருந்தான் கல்யாணி.
“ஏம்ப்பா. அளவெல்லாம் சரியா ஃபீட் பண்ணுணியா?”
“சரியாத்தான் சார் ஃபீட் பண்ணுனேன்”
“அப்புறம் எப்படி அவுட் அடிக்குது? சரி அந்த ஜாப் கார்டை எடு”
“கல்யாணி எடுத்துக் கொடுத்ததும், ஜாப் கார்டில் உள்ள அளவுகளும் ஃபீட் செய்யப்
பட்டிருந்த அளவுகளும் ஒத்துப்போய் மிகச் சரியாக இருக்க குழம்பினார்.
“சரியாத்தான் ஃபீடாயிருக்கு. அப்பொறம் எப்படி அவுட் அடிக்குது?” என்று தனக்குள் பலமாக யோசித்தவர் கல்யாணியை அழைத்தார்.
“எதுக்கும் ஒரு தடவெ மெஷின ஆஃப் பண்ணி ஆன் பண்ணு” என்று கட்டளையிட்டார். மீண்டும் ஒரு முறை ஜாப் கார்டில் இருந்த அளவுகளை மறு பதிவு செய்தார். உற்பத்தியாகி வெளியே விழும் பாய்ண்ட்டிற்கு வந்து நின்று கொண்டார். கையில் புத்தம் புதிய வெர்னியர் அளவுகோல் ஆலை விளக்கொளியில் மின்னியது.
“மெஷின ஆன் பண்ணுப்பா. நான் சொன்னதும் நிறுத்திடு. தெரியுதா?” என்றவாறு, மெஷினை இயங்கும்படி சைகை செய்தார்.
கல்யாணி மெஷினை இயக்கியதும், அது வழக்கத்திற்கு மாறாக வினோதமான ஒளியை எழுப்பியது. ‘பட பட’வென்று நாலைந்து போல்ட்டுகள் வெளியில் விழுந்ததும், மெஷினை நிறுத்தும்படி சைகை செய்தார். இயந்திரம் மெலிதாக ஆடி அடங்கியது.
“உள்ளுக்குள்ள ப்ராப்ளம் இருக்கு. அதான் வித்தியாசமா சத்தம் வருது. மிஷினு வேற ஹீட்டாகுது” என்றபடியே, புதிதாக வந்து விழுந்த போல்ட்டுகளில் ஒன்றைக் கையில் எடுத்தார். அளந்து பார்த்தார். மீண்டும் உதட்டைப் பிதுக்கினார்.
“என்னது. அப் நார்மலா இருக்குது?” என்றவர், “கல்யாணி. மெஷின ஆஃப் பண்ணு. போயி மெயின்ட்டனன்சுல சொல்லிக் கூட்டியா” என்று அடுத்த இயந்திரம் நோக்கி நகர்ந்தார் சிவசண்முகம்.
கையில் பீடித் தட்டோடு வாசலுக்கு வந்தாள் கோமதி. வட்டமான முறத்தால் செய்யப்பட்டிருந்த பீடித்தட்டில் அளவாக நறுக்கி வைக்கப்பட்டிருந்த அகலமான புகையிலை அடுக்கிற்கு அருகில், கூம்பாக பீடியின் உள்ளடைக்கும் புகையிலைத் தூள் குவிக்கப் பட்டிருந்தது. சுருட்டப்பட்ட பீடியைக் கட்டுவதற்காக சிவப்பு நூல் கண்டு ஒரு ஓரத்திலும், கைக்கு அடக்கமான கத்தரி ஒன்றும் கிடந்தது. தட்டை மடியில் வைத்துக் கொண்டு பீடியைச் சுற்ற ஆரம்பித்தாள் கோமதி.
“என்னா மயினி எப்ப வந்தீய?” என்ற குரல் கேட்டு தலை நிமிர்ந்து பார்த்தாள்.
காந்திமதி வந்து அருகில் அமர்ந்து கொண்டாள். குரலில் கொஞ்சம் ஆதரவுத் தொனியைக் கலந்து கேட்டாள்.
“மாடத்தி அத்தெக்கு இப்ப எப்படி இருக்கு மயினி?” காந்திமதி கேட்டதும், குபுக்கென்று கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது. குரல் தளுதளுத்தது.
“நா என்னத்தெட்டீச் சொல்றது. எல்லாம் கெரகம் புடுச்சு ஆட்டுது” கிட்டத்தட்ட அழும் நிலைக்கு வந்து விட்டாள் கோமதி.
“அளாதீய மயினி. ஆசுபத்திரியில என்னான்னு சொல்லுதாவ”
“இருதயத்துல கோளாறாம். இருதயத்தச் சுத்தி சவ்வு ஒன்னு படர்ந்துட்டுதாம். அது சுருங்கி சுருங்கி இருதயத்தையே இறுக்கி அமுக்கிக்கிட்டு வருதாம். ரொம்ப டேஞ்சரான நெலயில இருக்கா. ஒடனடியா ஆப்பரேசன்ஞ் செஞ்சா ஒரு வேள பொளக்கலாமா. அதக் கூட கரெக்டாச் சொல்ல முடியாதாம். அரெ கொறயாச் சொல்லுதாவ. நா என்னாத்தட்டீச் செய்ய?” கோமதியின் கண்களில் இருந்து பெருக்கெடுத்த கண்ணீர்த் துளிகள் பீடித்தட்டில் விழுந்து, அகலமான புகையிலையின் மீது முத்து முத்தாகத் திரண்டு நின்றது.
“அளுவாதீய மயினி. அளுவாதீய. எல்லாத்தையும் அந்த தாணுமா மலையாம் மேலப் பாரத்தப் போடுங்க. ஆமா. ஆப்பரேசனுக்கு ரொம்பச் செலவாவுமோ?”
“ஆமாட்டீ. ரெண்டு மூணு லெச்சம் ஆவுமாம். அம்புட்டுப் பணத்துக்கு நா எங்க போக. ஏதோ இந்த பீடி சுத்துற வருமானத்தெ வச்சுக்கிட்டு வவுத்தக் களுவிக் கிட்டுருக்குறம். ரெண்டு மூணு லெச்சத்துக்கு எங்க போக?”
“கவுருமெண்டு ஆசுபத்திரிக்குப் போலாமுல்ல மயினி”
“அங்கல்லாம் இதுக்கு வசதி கெடையாதாம். இது வித்தியாசமா வந்திருக்குற வியாதியாம். பெரவேட்டாத்தாம் பாக்கணும்முன்னு சொல்லுதாவ”. அழுகை ஒருவாறு கட்டுக்குள் வந்திருந்தது கோமதிக்கு. ஆனால் குரல் மட்டும் இயல்புக்கு வரவில்லை.
“போன வாரம் அண்ணணெ பேட்டப் பக்கம் பார்த்தேன்ங்”
“நீ வேறட்டீ. வவுத்தெரிச்சலக் கௌப்பாதே. எல்லாம் அந்த ஆம்பள மூதி ஒழுங்கா இருந்தா நா இப்படிச் சீப் படுவேனா?” மீண்டும் அழுகை வெளிக் கிளம்பியது.
“மனச வுட்றாதீய மயினி. நா ஒரு ரோசனை சொல்லவா?” காந்திமதி சொன்னதும், கண்களை முந்தானையால் துடைத்துக் கொண்டு ஆர்வத்தோடு ஏறிட்டுப் பார்த்தாள்.
“நம்ம சொடல மாடந் தெரு இருக்குல்லா. அங்ஙென வாசுதேவங்குற ஆசுபத்திரி புரோக்கரு ஒருத்தரு இருக்குறாரு. அவரப் போயிப் பாத்தா ஒரு வழி சொல்லுவாரு”
“பாத்து……” இழுத்தாள் கோமதி.
“நம்மள மாதிரி இல்லாத பொல்லாதவங்கள நம்பி யாரு மயினி அம்புட்டுப் பணம் தருவாவ” என்றபடி ரகசியமாக அருகில் வந்தாள் காந்திமதி.
“நாஞ் சொல்லுற ஆளு கிட்னி புரோக்கரு. அதுல கொஞ்சம் பெரச்சனையாயிட்டுதுன்னு இப்ப வேறதச் செய்யுறாரு”.
புரியாமல் ஏறிட்டுப் பார்த்தாள் கோமதி.
“கிட்னி விக்குறதெல்லாங் பின்னாடி நம்மளுக்கே ஆபத்தாயிடுது மயினி. அதெ விடச் சுளுவா ஒண்ணுருக்கு. புள்ள பெத்துக் குடுக்குறது. புள்ளெ குட்டிகெ இல்லாத பெரிய பெரிய பணக்காரவுக இருக்காவுல. அவியளுக்கு வாடகத் தாயா இருந்து, புள்ளயப் பெத்துக் குடூத்துட்டு, நாம பாட்டுக்கு வந்துடலாம். நீங்க எதிர் பாக்குற காசு அதுலதான்ங் கெடைக்குது இப்ப. புள்ளெ பெக்குறது பொம்பளப் பெறவிககுப் புதுசா என்ன?”
ப்ரொடக்சன் பிளானிங் கண்ட்ரோல் ஆபிசர் நேரடியாக ஷாப் ப்ளோருக்கே வந்து விட்டார். வேக வேகமாக வந்தவர், அந்த சிஎன்சி மெஷினைச் சுற்றி நின்று கொண்டிருந்தவர்களைப் பார்த்து ஏகத்துக்கும் கோபமாகக் கத்தினார்.
“என்னப்பா. என்ன செய்யுறீங்க இன்னும்? மிஷின் நின்னு ரெண்டு நாளாவுது. இன்னும் ஒண்ணும் பண்ணல்ல. டார்க்கெட் முடிக்கணும். டயத்துக்கு டெலிவரி பண்ணணும். டயத்துக்கு டெலிவரி பண்ணலன்னா கஸ்டமரு நஷ்ட ஈடு கேட்குறான்யா இப்ப. அதுக்கு வேற அழுது தொலைக்கணும். மேலருந்து ஒரே டார்ச்சர் மேல டார்ச்சர். நீங்க என்ன பண்ணுவிங்களோ? ஏது பண்ணுவிங்களோ? எனக்குத் தெரியாது. எனக்கு இன்னிக்குள்ள மிஷினு ஓடியாகணும். ப்ரொடக்ஷன் வந்தாகணும். ஏற்கனவே கொறஞ்சு போன நார்ம்ஸ ஈடு கட்டியாகணும்”.
அவர் பட படவென்று பொறிந்து தள்ளியதைக் கேட்டதும் தளர்வானார்கள் அனைவரும். முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு றின்றார்கள். ஆயிலும் கிரீசும் கலந்து, கரி அப்பிப் போயிருந்த ஸ்பானர்கள் மெஷினைச் சுற்றி இறைந்து கிடந்தன. கொஞ்சம் இயல்புக்கு வந்தார் பிபிசி அதிகாரி.
“என்னப்பா வில்சன். என்னதான் ஆச்சு? எதுவும் ரெமிடி இல்லியா?”
“சார் ஜாவோட சேந்துருக்குற மெயின் ஸ்பிண்டில் ஒடஞ்சுடுச்சு சார். வேற மாத்தணும்”. சட்டென்று ரத்தம் சூடேறியது அதிகாரிக்கு.
“என்னப்பா. மெயின் ஸ்பிண்டில் ஒடஞ்சுடுச்சுன்னு ரொம்பச் சாதாரணமாச் சொல்லுற. மெஷின்ல பாதி விலைப்பா அது. ரொம்ப ரொம்பக் காஸ்ட்லிப்பா. ஏற்கெனவே காஸ்ட் ரிடக்ஷன், ஸ்பேர் ரிடக்ஷன்னு மேல போட்டுத் தாளிக்கிறான். இதுல வேற, ஸ்பேர்ஸ் அலாட்மெண்ட் அலக்கேஷன் ஏற்கனவே முடிஞ்சுடுச்சு. இப்பப் போயி ‘ஈ’யின்னு நிக்க முடியாதுப்பா. ஏதாவது வெல்டு கில்டு வச்சு அட்ஜஸ்ட் பண்ண முடியுமான்னு பாரு?” பட படத்துத் துடித்தார் அதிகாரி.
“அது மெயின் ஸ்பிண்டில் சார். எல்லா லோடையும் தாங்குறது. வெல்டு வக்கிறது அவ்வளவு நல்லதுக்கில்ல”.
“பரவாயில்லப்பா. இப்போதைக்கு ஏதாவது செஞ்சு சமாளி. மொதல்ல மெஷின ஓட்டி விடப்பாருப்பா. புரடெக்ஷன் எடுக்கணும்”. மீண்டும் கொஞ்சம் இயல்புக்கு வந்தார் அதிகாரி.
“சார் அது ஹார்டனிங் மெட்டீரியல் சார். வெல்டெல்லாம் நிக்காது. சீக்கிரம் விட்டுரும். கியாரண்டில்லாஞ் சொல்ல முடியாது சார்”.
“விடுற வரைக்கும் மிஷின ஓட்டுப்பா. எனக்கு புரடெக்ஷன் வேணும்” அதிகாரி அவசரப்பட,
“நம்ம ஆன்ஸரில்ல குடுத்து முடிஞ்ச வரைக்கும் ரெடி பண்ணுறேன் சார். நம்ம லக்கு
ஒரு வாரத்துக்கும் நிக்கலாம். ஒரு மாசத்துக்கும் நிக்கலாம். பத்து மாசத்துக்கும் கூட நிக்கலாம்”.
“மொதல்ல அதெச் செய்யுப்பா. கமான் க்விக்” என்று வில்சனின் தோளில் தட்டிய வேகத்தோடு, பட படவென்று தன் அலுவலகம் நோக்கி நடந்தார்.
கோமதியை பிரசவ அறைக்குள் கொண்டு சென்றிருந்தார்கள். வாசலில் மாடத்தி அம்மாள் கவலை தோய்ந்த முகத்தோடு அமர்ந்திருந்தாள்.
மாடத்தி அம்மாளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை முடிந்து, இப்போதுதான் கொஞ்சங் கொஞ்சமாக உடல் நிலை முன்னேறிக் கொண்டிருந்தது. சேலை முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொண்டு, அந்த கருப்பு நிற வலைக்கண் இருக்கையில் அமர்ந்திருந்தாள். மெலிதான இருமல் கூட அவளைப் பாதிக்கக் கூடும் என்று மருத்துவர் எச்சரித்திருந்ததால், பாரத்தோடு தள்ளிய முன் வயிற்றோடு, உள்ளங் கைக்குள் வைத்து தாங்கிக் கொண்டிருந்தாள் கோமதி.
கோமதியை நினைக்க நினைக்க மாடத்தி அம்மாளுக்கு அழுகை அழுகையாய் வந்தது. தனக்காக தனக்குத் தானே வலி ஏற்படுத்திக் கொண்டவள் கோமதி. இப்போது பிளந்து எடுக்கப் போகும் வலியை எதிர் கொள்ள உள்ளே போயிருக்கிறாள். தன் குல தெய்வம்தான் தனக்கு மகளாக வந்து பிறந்திருக்கிறாள் என்று மனசுக்குள் கும்பிட்டுக் கொண்டாள் மாடத்தி அம்மாள்.
திடீரென்று பர பரப்பாக நர்சுகள் ஓடினார்கள். மருத்துவர்கள் உடன் ஓடினார்கள். சற்று நேரத்திற்கெல்லாம் அக்குளில் கருப்புப் பையை இடுக்கிக் கொண்டு, அந்த புரோக்கர் வாசுதேவன் வந்து சேர்ந்தான். அந்தப் புரோக்கர் வந்த சிறிது நேரத்தில், கைகளிலும் கழுத்திலும் தங்கம் மின்னிட, கண்களில் இருந்த குளிர் கண்ணாடியைக் கழற்றிய படியே வந்த ஒருவர், புரோக்கரைக் கூப்பிட்டு ஏதோ பேசினர். சற்று நேரத்திற்கெல்லாம் தலைமை மருத்துவர் வர, உடன் சென்றார்கள்.
மாடத்தி அம்மாளுக்கு அடி வயிற்றில் ‘வதக்’கென்றது. வயிற்றைக் கலக்கியது. ஏதோ பிரச்சனை போல. என்னவென்று தெரியலையே? யாரிடமாவது கேட்கலாமென்றால் ஒருவரும் தன்னைச் சட்டை செய்யாமல், வேக வேகமாய்ப் பறந்து கொண்டிருக்கிறார்களே. என்ன செய்வது? யாரிடம் கேட்பது? பயமும் கலக்கமும் ஒன்று சேர மாடத்தி அம்மாள் மயங்கும் நிலைக்கு வந்து விட்டாள்.
உள்ளே தலைமை மருத்துவர் கைகளைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தார். அந்த தங்கம் மின்னியவர், ஏகத்துக்கும் கோபத்தோடு வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். சற்று தள்ளி, முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு புரோக்கர் நின்று கொண்டிருந்தார்.
“சார். சத்தம் போடாதிங்க. நாங்க எல்லாத்தையும் ஒழுங்காத்தான் செக்கப் செஞ்சோம். இங்க பாருங்க. ஸ்கேன் ரிசல்ட்டெல்லாம். ஆனா, இப்ப பிரச்சனை எப்படி வந்துச்சுன்னுதான் தெரியல. ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா? நம்ம எல்லாத்துக்குந்தான் பிரச்சனை’’.
“என்னா? ஒண்ணு ஆச்சுன்னா? ரெண்டு ஆச்சுன்னா? நா ஏற்கனவே காசத் தண்ணியா எறச்சு வுட்ருக்கேன். எனக்கு எம் பொருளு வந்தாகணும் முழுசா”.
“என்னங்க. புரியாம பேசுறிங்க. பெரிய உயிருக்கு ஆபத்துங்க. சின்ன உயிரா? பெரிய உயிரான்னு இருக்குங்க”.
“அதுக்கு நான் என்ன டாக்டர் செய்யுறது. பெரிசுக்காக பெரிசு பெரிசா பணத்தெ அள்ளி எறச்சுருக்கேன். ஒத்த ரூவா ரெண்டு ரூவா இல்லீங்க. லச்ச லச்சமாக் கொட்டிருக்கேன். எங் காசுக்கு ஈடா பொருளு வந்தாகணும் எனக்கு”.
“அப்ப பெரிய உயிரு போனா போகட்டுங்கிறிங்களா?”
“நா அப்பிடிச் சொல்லல. ஆனா, எனக்கு எம் பொருளு வேணும் முழுசா”
படாரென்ற பெருஞ் சத்தத்தோடு அந்த கம்ப்யூட்டர் அடிப்படையிலான உயர் ரக சிஎன்சி மிஷின் அதிர்ந்து, தன் இயக்கத்தை நிறுத்திய போதுதான் அது நடந்தது.
மாடத்தி அம்மாள் பலவீனமாய் இருந்த தன் நெஞ்சில் அறைந்து கொண்டு, அலறி அழுது பெருங் குரலெடுத்துக் கதறினாள்.
“அடப் பாவிகளா. எம் புள்ளயக் கொன்னுட்டீங்களேடா. பாவிகளா. கொன்னுட்டீங்களே. அவ என்ன பொம்பளயா? இல்ல புள்ள பெக்குற மிஷினாடா? நாசமாப் போக. இப்பிடித் துள்ளத் துடிக்க எம் புள்ளயக் கொன்னுட்டீங்களடா”.
மாடத்தி அம்மாளின் கதறலில் அந்த மருத்துவமனை வளாகம் அதிர்ந்தது.
– “புதிய பயணம்” சனவரி – 2009