நீரில் பால் கலப்பது போல, கழியும் இரவின்மையிருளில் உதயத்தின் வெண்மை பரவிக் கொண்டிருந்தது. நிலத்தில் சிதறிக் கிடக்கும் இலைகளின் மேல் பலாமரங்கள் சொரியும் பனித்துளிகளின் ஏகதாள சப்தம் அவ்வைகறையின் நிசப்தத்திற்குப் பங்கம் விளைவித்தது. அப்பனித்துளிகளின் குளிர்ந்த ஸ்பரிசம் பட்ட மாத்திரத்தே; அருங்கோடையின் காய்ச்சலினால் உயர்ந்து முறுகிப் போயிருந்த நிலம் ஒரு அற்புத மான மண் வாசனையைக் கக்கியது.
பலா மரத்தின் கிளை ஒன்றில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த புள்ளடியன் உறக்கம் கலைந்து, தன் வலப்புறச் சிறகிற்குள் புதைந்து கிடந்த தன் தலையை வெளியே இழுத்துச் சுற்றும்முற்றும் பார்த்தது. ‘என்ன, இரவின் கரும் போர்வை அகன்று விட்டதா? சரிதான். இந்தப் பனிக்குளிரில் நேரம் போவதே தெரியவில்லை…’
அந்த வைகறைப் பொழுது உயிர்த்த ஜீவசக்தி புள்ளடியனுடைய வக்கரித்த நரம்புகளிலும் பாய்ந்தது. அதற்கு உயிர் வாழ்வதில் ஒரு புது ஆசையையும் ஊக்கத்தையும் கொடுத்தது. உயிர் வாழ்வதே பெரிய இன்பம்! தினமும் வைகறையில் கண் விழித்து எப்பொழுதும் தன் உடலில் இன்னும் ஜீவன் குமுறிக் கொண்டிருக்கிறது என்ற உணர்ச்சியே புள்ளடியனுக்கு புளகாங்கிதம் உண்டாக்கிற்று.
வாழ்க்கையில் என்ன குறை? எதற்காக ஏங்கி அழ வேண்டும்? வாழ்க்கையில் கோர உருவம், உருவத்திற்கு ஒரு உறுத்தும் விஷக்கொடுக்கு இருக்கிறதென்பது புள்ளடியனுக்கு இதுவரை தெரியாது. தேக்கிக்கொண்டு நின்ற ஆசை, பேடைக் குலம் முழுவதையுமே சுட்டெரித்து பஸ்பமாக்கி விடுவது போல் இருந்தது.
அன்று வந்ததும் வராததுமாக அது வேலியில் உள்ள துவாரத்தின் வழியாக மறுபுறம் எட்டிப் பார்த்தது. புள்ளடியனுடன் குப்பை கிளறிக் கொண்டிருந்த வெள்ளைப் பேடையைக் கண்டு விட்டது.
இரண்டு நாளாகப் பட்டினி கிடந்தவன் அறுசுவை உண்டியைக் கண்டதுபோல் இருந்தது. அதற்குப் பேடையின் வாசனை என்பதே அறியாமல் ஒரு பகலும் இரவும் கோழிக்கார சாயுபுவின் கூடைக்குள் அடைபட்டுக் கிடந்த பிறகு இந்த மனோகரமான காட்சி. ‘ஆ’ அதன் நரம்புகள் ஒவ்வொன்றும் விண்பூட்டி இருப்பது போல் தெரிந்தது.
மறுகணம் வேலியைத் தாண்டி மறுபக்கத்தில் குதித்தது. அப்பொழுதுதான் வெள்ளைப் பேடை தனியாக இல்லை என்பது அதன் கண்களில் பட்டது. பேடையை அணுகிவிட வேண்டுமென்ற ஆசை தடைபட்டு அவ்விடத்திலேயே ஒரு ஏக்கப் பார்வையோடு நின்றுவிட்டது.
இந்தச் சச்சரவைக் கேட்ட வெள்ளைப் பேடும் குப்பை கிளறும் வேலையை நிறுத்திவிட்டு தலைநிமிர்ந்து பார்த்தது. கோழிக் குலத்தின் மன்மதன் போல் நின்றிருந்த புதுச் சேவல் அவளுடைய மனதில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டது. யார் இது? புது ஆசாமி. ஆனால் அதன் அழகு, என்ன நிறம். என்ன கம்பீரம், எங்கிருந்து, எப்பொழுது, ஏன் வந்தது?
அவள் இதுவரை புள்ளடியனுடைய தனி ஆட்சிக்கு உட்பட்டிருந்ததிற்குக் காரணம் ஒன்றே ஒன்றுதான். அந்த வட்டாரத்தில் புள்ளடியனைத் தவிர வேறு சேவல் கிடையாது; ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரை. புள்ளடியன் மூப்படைந்து பலம் குன்றி இருந்தாலும் சேவல் சேவல்தான்.
ஆனால் இன்று அவளுடையகெனவுகளை வடித்துப் பிழிந்து எடுத்த ரூபம் போல் நின்றிருந்த புதுச் சேவலைக் கண்டதும் அவளுக்கு உண்மையாகவே தலை கிறுக்கிவிட்டது.
பேடையின் கவனம் கலைந்ததைக் கண்ட புள்ளடியன் தலைநிமிர்ந்து பார்த்தது. “ஆகா, அப்படியா சங்கதி?”
பெட்டையைக் கண்டிப்பது போலப் புள்ளடியனும் ஒரு தரம் கொக்கரித்தது. அதன் அர்த்தம் புரிந்துகொண்ட பேடை, ‘பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று நினைத்து மறுபடியும் கிளறும் வேலையில் ஈடுபட்டது.
இப்பொழுது ஆகக்கூடிய காரியம் ஒன்றுமில்லையென்று புதுச்சேவலுக்குப் பட்டுவிட்டது. “இன்று மத்தியானம் எப்படியும்…” என்று நினைத்து வேறு பக்கமாகத் திரும்பி நடந்தது.
மறுகணம் அதை யாரோ கைகளால் தூக்கி எடுப்பது போல் இருந்தது. தன் எஜமானனான கமக்காரர்களின் கைகள் தான்! எஜமானுடைய குரல் இரக்கத்தினால் குழைந்து இருந்தது.
“அடசீ! இந்தக் கிழட்டு வயதிலும்கூட உனக்கு பொம்பிளை ஆசை விடவில்லையே! வீணாகச் சண்டை பிடிச்சு உன் கண்களைக் கெடுத்துவிட்டாயே. நீதான் என்ன செய்வாய் பாவம்! அவள் கொழுத்த குமரி! தூ!…”
– வெள்ளிப் பாதசரம், முதற் பதிப்பு: ஜனவரி 2008, மித்ரா ஆர்ட்ஸ் அண்ட் கிரியேஷன்ஸ், சென்னை.
* இக்கதையை செங்கை ஆழியான் அனுப்பி உதவியுள்ளார். இந்தக் கதை முழுமையாகக் கிடைக்கவில்லை என்கிற எண்ணம் இதனை வாசிக்கும் பொழுது ஏற்படச் செய்கின்றது.