கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 18, 2021
பார்வையிட்டோர்: 6,643 
 
 

(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“நீரில் பால் கலப்பது போல, கழியும் இரவின் மையிருளில் உதயத்தின் வெண்மை பரவிக்கொண்டிருந்தது. நிலத்தில் சிதறிக் கிடக்கும் இலைகளின் மேல் பலா மரங்கள் சொரியும் பனித்துளி களின் ஏகதாள சப்தம் அவ்வைகறையின் நிசப்தத்திற்குப் பங்கம் விளைவித்தது… அப்பனித்துளிகளின் குளிர்ந்த ஸ்பரிசம்பட்ட மாத்திரத்தே, அருங்கோடையின் காய்ச்சலினால் உலர்ந்து முறுகிப் போய் இருந்த நிலம் ஒரு அற்புதமான மண் வாசனையைக் கக்கியது.

பலா மரத்தின் கிளை ஒன்றில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த புள்ளடியன் உறக்கம் கலைந்து, தன் வலப்புறச் சிறகிற்குள் புதைந்து கிடந்த தன் தலையை வெளியே இழுத்து சுற்றும் முற்றும் பார்த்தது. ‘என்ன, இரவின் கரும் போர்வை அகன்று விட்டதா? சரிதான், இந்தப் பனிக்குளிரில் நேரம் போவதே தெரியவில்லை…’

அந்த வைகறைப் பொழுது உயிர்த்த ஜீவசக்தி புள்ளடிய னுடைய வக்கரித்த நரம்புகளிலும் பாய்ந்தது. அதற்கு உயிர் வாழ்வதில் ஒரு புது ஆசையையும் ஊக்கத்தையும் கொடுத்தது. உயிர் வாழ்வதே பெரிய இன்பம்! தினமும் வைகறையில் கண்விழித்து எப்பொழுதும் தன் உடலில் இன்னும் ஜீவன் குமுறிக் கொண்டிருக்கிறது என்ற உணர்ச்சியே புள்ளடியனுக்கு புளகாங்கிதம் உண்டாக்கிற்று.

வாழ்க்கையில் என்ன குறை? எதற்காக ஏங்கி அழவேண்டும்? வாழ்க்கையின் கோர உருவம் புள்ளடியன் கண்களில் இதுவரை படவில்லை. அந்த கோர உருவத்திற்கு ஒரு உறுத்தும் விஷக் கொடுக்கு இருக்கிறதென்பது புள்ளடியனுக்கு இதுவரை தெரியாது.

ஏன் தெரியப் போகிறது? அதன் ஐந்து வருட வாழ்வு பூராவிலும் அது கவலைப்பட்டதில்லை. ஆசைகள் நிராசை ஆகவில்லை. வேண்டியதெல்லாம் வேண்டியபடியே கிடைத்து வந்தது. உண்பதற்கு கறகறப்பான நெல், கிளறுவதற்கு உயரமான குப்பை மேடு, சுகிப்பதற்கு நல்ல அழசான தடித்த பேடைகள்…!

புள்ளடியன் தன் இறகுகளை பட பட என்று அடித்து தலையை உயரத் தூக்கி, பல நாளைய அனுபவத்தால் விளைந்த ஒரு அலட்சியத்தோடு, தன் பரம்பரைப் பல்லவியைப் பாடியது. ‘கொக்கரக்கோ…ஓ…ஓ!.’

திடீரென்று அந்த வட்டாரமே சிலிர்த்துக்கனைத்துக் கொண்டு எழுந்தது போன்ற ஒரு பரபரப்புக் காணப்பட்டது பனை யோலைக் ‘கடகங்களை’ தலைமேல் சுமந்து கொண்டு பனங்காய் பொறுக்கப்போகும் சிறுவர் சிறுமியர்; கலப்பை சகிதமாக உழவு மாடுகளை ஓட்டிக் கொண்டு வயலிற்குச் செல்லும் குடியானவன்; அழுக்கு மூட்டைகளைத் தோளில் சுமந்து கொண்டு குளக்கரை செல்லும் வண்ணான்.

பொழுது நன்றாக புலந்துவிட்டது. புள்ளடியனும் மற்றக் கோழிகளும் மரங்களை விட்டு இறங்கின.

அந்த வளவில் வளர்ந்து அந்த பத்துப் பன்னிரண்டு பெட்டைக் கோழிகளுக்கு புள்ளடியன் ஒரு தனிநாயகன் மாதிரி. மகாராஜாக்களைப் போல புள்ளடியனுக்கு மோகமும் எல்லையற்று இருந்தது. பெண்பித்து மகாராஜாக்களுக்கு இருப்பது போலவே புள்ளடியனுக்கும் ஒரு பட்ட மகிஷி இருந்தாள் – தூய வெள்ளை நிறம் பொருந்திய தடித்த ஒரு பேடை.

இந்தப் பேடையிடத்தில் புள்ளடியனுக்கு ஒரு தனிப்பிரேமை ஒரு தனி அருள். முட்டையிட்டு அடைகாக்கும் நேரம் தவிர, மற்றப்படி இரண்டும் சதா ஒருமித்தே இருக்கும். புள்ளடியனுக்கு ஐந்து வயதாகிறது. முன்னிருந்த துடிதுடிப்பு இப்பொழுது இல் லைத்தான். வீர்யமும் தளர்ந்துபோய் விட்டது. ஆனால் வெள்ளைப் பேடை மேலிருந்த மோகம் மட்டும் சிறிதும் குறையவில்லை. அன்னியன் ஒருவனுடைய பார்வை பேடையின் மேல் விழுந் தால் விழுந்து தான் பார்க்கட்டுமே!

அன்று காலையில் தான் அடுத்த வளவிற்கு ஒரு புதுச் சேவல் வந்திருந்தது.

அதன் நிறமும் வெள்ளை. பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருந்தது. கழுத்தடியில் விரிந்து சடைத்த இறகுகள், பூம்பந்தல் போல் அகன்று பரந்த வால், தலையிலும் தாடையிலும் தெறித்துக் கொண்டிருந்த சூடுகள்! அதன் நடையிலே ஒரு ராஜகம்பீரம் தொனித்தது.

அதன் இளமை இப்பொழுதுதான் பூரண மலர்ச்சி பெற்றிருந்தது. அந்தப் பூரண மலர்ச்சி அதற்கு வேதனையே கொடுத்து அதன் கனவுகளையும் நினைவுகளையும் தேக்கிக் கொண்டு நின்ற ஆசை பேடைக்குலம் முழுவதையுமே சுட்டெரித்து பஸ்மமாக்கி விடுவது போல் இருந்தது.

அன்று வந்ததும் வராததுமாக அது வேலியில் உள்ள துவா ரத்தின் வழியாக மறுபுறம் எட்டிப் பார்த்தது. புள்ளடியனுடன் குப்பை கிளறிக் கொண்டிருந்த வெள்ளைப் பேடையைக் கண்டுவிட்டது.

இரண்டு நாளாகப் பட்டினி கிடந்தவன் அறுசுவை உண்டி யைக் கண்டது போல் இருந்தது அதற்கு. பேடையின் வாசனை என்பதே அறியாமல் ஒரு பகலும் இரவும் கோழிக்கார சாயபுவின் கூடைக்குள் அடைபட்டுக் கிடந்த பிறகு இந்த மனோகரமான காட்சி! ஆ! அதன் நரம்புகள் ஒவ்வொன்றும் விண்பூட்டி இழுப்பது போல் தெறித்தன.

மறு கணம் வேலியைத் தாண்டி மறுபக்கத்தில் குதித்தது. அப்பொழுதுதான் வெள்ளைப் பேடை தனியாக இல்லை என்பது. அதன் கண்களில் பட்டது. பேடையை அணுகிவிடவேண்டு மென்ற ஆசை தடைப்பட்டு அவ்விடத்திலேயே ஒரு ஏக்கப் பார்வையோடு நின்றுவிட்டது.

இந்த சச்சரவைக் கேட்ட வெள்ளைப் பேடும் குப்பை கிளறும் வேலையை நிறுத்திவிட்டு தலைநிமிர்ந்து பார்த்தது. கோழிக் குலத்தின் மன்மதன் போல் நின்றிருந்த புதுச்சேவல் அவளுடைய மனதில் பெரும் புயலைக் கிளப்பி விட்டது. யார் இது? புது ஆசாமி ஆனால் அதன் அழகு என்ன நிறம், என்ன கம்பீரம் எங்கிருந்து. எப்பொழுது, ஏன் வந்தான்?

அவள் இதுவரை புள்ளடியனுடைய தனி ஆட்சிக்கு உட்பட் டிருந்ததிற்கு காரணம் ஒன்றே ஒன்றுதான். அந்த வட்டாரத்தில் புள்ளடியனைத் தவிர வேறு சேவல் கிடையாது. ஆலையில்லா ஊருக்கு ‘இலுப்பைப்பூ சர்க்கரை’ புள்ளடியன் மூப்படைந்து பலம் குன்றி இருந்தாலும் சேவல் சேவல் தான்!

ஆனால் இன்று அவளுடைய கனவுகளை வடித்து பிழிந்து எடுத்த ரூபம் போல் நின்றிருந்த புதுச் சேவலைக் கண்டதும் அவளுக்கு உண்மையாகவே தலை கிறுக்கிவிட்டது.

பேடையின் கவனம் கலைந்ததைக் கண்ட புள்ளடியன் தலை ‘நிமிர்ந்து பார்த்தது.ஆகா , அப்படியா சங்கதி.

பேட்டையக் கண்டிப்பது போல. புள்ளடியனும் ஒரு தரம் கொக்கரித்தது. அதன் அர்த்தம் புரிந்து கொண்ட பேடை, பிறகு பார்த்துக்கொள்ளலாம், என்று நினைத்து மறுபடி குப்பை கிளறும் வேலையில் ஈடுபட்டது.

இப்பொழுது ஆகக்கூடிய காரியம் ஒன்றுமில்லையென்று புதுச் சேவலுக்கு பட்டுவிட்டது. ‘இன்று மத்தியானம் எப்படியும்..’ என்று நினைத்து வேறுபக்கமாகத் திரும்பி நடந்தது.

மத்தியான வெயில் யுகாந்த காலாக்கினி போல் எரிந்து கொண்டிருந்தது. தொலைவில் கானலின் என்ற மிதிப்பு மர ஏணிகள் காற்றில் சற்றே அசைந்தன.

கோழிகள் எல்லாம் ஒருமாதுள மரத்தின் கீழ் தம் இறகுகளை கோதிக் கொண்டு படுத்திருந்தன. அந்த உக்கிரமான வெயில் அவற்றின் பரபரப்பை அடக்கிவிட்டது.

புள்ளடியனுக்கு பலத்த யோசனை. ‘அட இவன் எங்கிருந்து வந்தான்? யாரைத் தேடி?’

மயிர்ப்புழு ஒன்று மாதுளமரத்தின் கிளையொன்றில் இருந்து கொடி விட்டு, புள்ளடியனின் தலைக்கு மேலாக இறங்கிக்கொண் டிருந்தது. அதைக் கண்ட புள்ளடியன் லபக் என்று அதை தன் அலகுகளில் கௌவிக் கொண்டது. திட்ட வந்ததை விட்டுவிட்டால்..

மறுபடியும் அந்த புதுச் சேவலைப்பற்றிய யோசனை. “காத்திருந்தவன் பெண்னை நேற்று வந்தவன் கொண்டு போவதா? ஆனால்” எங்கே வெள்ளைப் பேடை? புள்ளடியன் சுற்று முற்றும் பார்த்தது. அதைக் காணவில்லை. உடனே புள்ளடியனுக்கு எல்லாம் விளங்கிவிட்டது. தூ! என்ன பெண்குலம் இப்படியுமா?

புள்ளடியன் வயதடைந்து உதவாக்கரையாகப் போய்விட்டது உண்மைதான். ஆனால் அதற்காக இப்படி நட்டாற்றில் கை விட்டு நேற்று முளைத்த அற்பனோடு -! போகிறாள். எப்படியும்:

ஆனால் –

புள்ளடியன் விரைவாக எழுந்து குப்பை மேட்டை நோக்கி ஓட்டம் பிடித்தது வெள்ளைப் பேடும் புதுச் சேவலும் ஒன்றாக நின்று குப்பை கிளறின. அவை இரண்டினதும் போக்கிலும் ஒரு உல்லாசம், ஒரு திருப்தி. ஒரு ஆனந்தம், காணப்பட்டது? அவள் போகிறாள் எப்படியும். ஆனால் புள்ளடியனுடைய அவம் திக்கப்பட்ட ஆண்மை காப்பாற்றப்பட வேண்டாமா? அதுவும் குல கோத்திரம் இல்லாத பதரினால்…

கணப் பொழுதில் மங்கல் நிறமாக இருந்த புள்ளடிய னுடைய சூடுகள் ஏத்தம் ஏறி செக்கச் செவேல் என்று சிவந்து விட்டது. அதன் கழுத்தில் இருந்த ரோமங்கள் குத்திட்டு நின்றன. சிறகுகளைப் பலமாக அடித்துக் கொண்டு ஒரு பயங்கரமான கொக்கரிப்போடு புதுச் சேவலை நோக்கிப் பாய்ந்தது. புதுச்சேவலும் தயாராகவே நின்றது.

புள்ளடியன் விட்டுக் கொடுக்கவில்லை. ‘உயிர் போனால் போகட்டும்.’

திடீரென்று புள்ளடியனுக்கு உலகம் எல்லாம் இருண்டு போனது போல் காணப்பட்டது. ஒன்றும் தெரியவில்லை தன் கழுத்திலும் முகத்திலும் வேகமாக விழும் கூர்மையான கொத்துகள் தான் அதற்குத் தெரிந்தது –

மறுகணம் அதை யாரோ கைகளால் தூக்கி எடுப்பது போல் இருந்தது. தன் எஜமானனான கமக்காரரின் கைகள் தான்! எஜமானுடைய குரல் இரக்கத்தினால் குழைந்து இருந்தது.

‘அட சீ! இந்த கிழட்டு வயதிலும் கூட உனக்கு பொம்பிளை ஆசை விடவில்லையே. வீணாகச் சண்டை பிடிச்சு உண் கண்களைக் கெடுத்து விட்டாயே. நீ தான் என்ன செய்வாய், பாவம்! அவள் கொழுத்த குமரி – தூ!’

– ஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள், முதற் பதிப்பு: ஜூலை 1973, முன்னோடிகள் கலை இலக்கிய விமர்சகர் குழு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *