கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 11,090 
 
 

தூரத்தில் ஈஸ்வரன் வருவதைக் கண்டதும் சட்டைப் பையில் இருந்த பணத்தை எடுத்து அவசர அவசரமாகக் கணக்கு நோட்டுக்குள் ஒளித்துவைத்தேன்.

”யேண்ணே… ஒரு பத்து ரூபாய்க்காக அப்போ பிடிச்சுக் கேட்டுக்கிருக்கேன். இல்லவே இல்லேண்டு சாதிக்கிறீக…’ – கடை வாசலின் வலது கோடியில் காலைத் தொங்கப்போட்டு உட்கார்ந்து இருந்த வேல்கண்ணன் சடைப்புமிக்க குரலில் பேசினான்.

”ஆமாடே… நானே ஒரு வாரமா வூட்டுக்கு நூறு ரூவா கொண்டுட்டுப் போக முடியாமக் கெடக்கேன். இன்னிக்கின்னு ஊர்ல இருந்து தங்கச்சி வேற வந்திருக்கு. அது கையில ஏதாச்சும் குடுத்துவிடணும். அதுக்காவாச்சும் ஒரு ஏவாரம் வரணும்னு கும்பிடு போட்டுக்கிருக்கேன். நீ வேற தொணதொணன்னு!”

ஆடி மாதம் பிறந்துவிட்டாலே மற்ற தொழில்களுக்கு எப்படியோ, சமையல் சார்ந்த தொழில்பாடுகள் அப்படியே உட்கார்ந்துவிடும். அதுவும் மாதத்தில் முதல் பதினெட்டு நாட்களுக்குக் கடும் வறட்சிதான். யார் கையிலும் ஐந்து காசு புரளாது. பதினெட்டாம்பெருக்குக்கு மேல்தான் ஆவணி மாத வேலைக்கான அட்வான்ஸ் தொகை வந்துவிழும். அதுவரைக்கும் என்னைப் போன்ற வாடகைப் பாத்திரக் கடைக்காரர் களுக்குப் பெரும் திண்டாட்டம்தான். சொந்தத் தேவைகளைவிடக் கடைக்கு வந்துபோகும் சமையல் புள்ளிகளுக்கான செலவு மற்றும் அவர்களுடைய தேவைகளைச் சமாளிப்பதுதான் பெரும்பாடு.

லூஸு ஓனர்”நாங்க வேற எங்க போவோம்ணே. வருஷம் பூராத்தைக்கும் ஒங்க கடையிலதான் பாத்தரம், பண்டம் வாடகைக்கு எடுக்கறோம். இந்த மாதிரி சீஸன் வெட்டையான சமயத்துல ஆயிரம் ரெண்டாயிரம்னு குடுத்து ஒதவுனா, ஒங்களையே சுத்திக்கிட்டு கிடப்போம்ல. இதெல்லாம் பார்ட்டிங்களைத் தக்கவெச்சுக்குற சூட்சுமம்ணே… ஒங்களுக்கு நான் சொல்லி விளங்க வேண்டியதுல்ல…’ – ஒவ்வொரு நபரும் பணம் வாங்குவதற்காக இதற்கு மேலும் பேசுவார்கள். இனிமேல் அடுத்த கடையில் பில் போட மாட்டோம் எனக் கையில் அடித்துச் சத்தியம்கூடச் செய்வார்கள்.

நகரில் பாத்திரங்களை வாடகைக்கு விடும் கடைகள் நிறைய இருந்தன. கல்யாணச் சத்திரங்கள் பெருத்ததுபோலவே இந்த மாதிரியான கடைகளும் பெருத்துவிட்டன. ஒவ்வொரு கடையும் ஆரம்பிக்கும் சமயத்தில் தூங்கிக்கொண்டு இருக்கும் சமையல்காரர்களை எல்லாம் எழுப்பி அட்வான்ஸ் கொடுத்த காலம் ஒன்று இருந்தது. அப்போதெல்லாம் ஒரு சில கடைக்காரர்கள் புரோநோட்டில் கையெழுத்து வாங்கிக்கொண்டு அட்வான்ஸ் கொடுத்ததுகூட உண்டு. ஆனால், தர்ம நியாய சிந்தனையும் இயல்பாகவே பயந்த சுபாவமும் கொண்ட ஒன்றிரண்டு பேர் மட்டுமே ஒரே கடையில் வரவு செலவு வைத்துக்கொண்டு இருந்தனர்.

”அதெப்பிடி? ஒங்களுக்கு எல்லா சமையல்காரங்களும் வேணுங்குற மாதிரி எங்களுக்கும் எல்லாக் கடைக்காரவுளும் வேணும்ல!” என்று தனக்குச் சாதகமான கோணத்தில் பொது நியாயத்தைச் சாய்த்துப் பேசும் சரவணன் போன்றவர்களையும் சமாளிக்க வேண்டும்.

‘எல்லாக் கடைக்காரர்களும் வேணும்னா, எங்கிட்ட எதுக்குக் காசு கேக்குற?”

”ஒங்ககிட்டயும் பாத்தரம் எடுக்குறோம்ல…’

”எங்கிட்ட காசு வாங்கிட்டு அப்பறம் அடுத்த கடைலயும் போய்ப் பாத்தரம் எடுக்கறியே..?’

”அவரும் காசு குடுத்துருக்கார்ல…”

”வரவு – செலவுன்னா ஒரே ஆள்கிட்டதேன் வெச்சுக்கணும் தெரியுதா. அதுதான் தொழிலுக்கு அழகு…’

”அப்படீன்னா ஒங்க கடையில ஒரு சமையல்காரர்ட்ட மட்டுமா வரவு – செலவு வெச்சிருக்கீங்க? ஒங்க கையில பத்துப் பேர் இருக்காகள்ல… ஓனர்னா ஒங்களுக்கு ஒரு ஞாயமா..?’

‘கடைங்கிறது ஒரு ஸ்தாபனம்பா. 10 பேர் வந்து போனாத்தேன் அது கடை. ஒன்ன மாதிரி உதிரி ஆளுங்களுக்குப் பார்ட்டிகதான் ஸ்தாபனம்…’

‘அந்த டகால்ட்டி வேலையெல்லாம் நம்பகிட்ட பேசாதீக முதலாளி. நீங்க படிச்சவருன்னா… நாங்க ஒலகத்துக்கே கஞ்சி காச்சி ஊத்தறவங்க…” தொழில் சூட்சுமத்தை நன்றாகப் புரிந்துவைத்துள்ள சரவணன் போன்ற சமையல்காரர்களுடன் தொடர்ந்து மல்லுக்கட்டிக்கொண்டு இருக்கக் கூடாது. இவன் இன்னும் சில பேர் மனசைக் கெடுத்துவிடுவான். இவனுக்கு எதைச் சொல்லியும் புரியவைக்க முடியாது என்று நாம் தெளிவாகும் புள்ளியில் இருந்து, சரவணன் புதிதாக பேச்சைத் துவங்குவான்.

”அப்படீன்னா எனக்கு இப்ப ஒரு 70 ரூவா வேணும்… தருவீங்களா?”

”எதுக்கு..?”

”குவார்ட்டர் சாத்தணும்.”

”காலைல 30 வாங்குனேல்ல… அது என்னாச்சு?”

”அது கெடக்கட்டும்… இப்ப நான் தூங்கணும்ல. நீங்க தர மாட்டீங்கன்னா சொல்லிடுங்க… விட்டுர்றேன். இப்படியே நடந்து தெக்கு கடைக் குப் போனா அவரு தருவாரு…” என்றான் எங்கேயோ பார்த்துக்கொண்டு.

நூறு, இருநூறு என அவ்வப்போது வாங்குவதைக்கூட ஏதாவது ஒரு கணக்கில் வைத்துக்கொள்ளலாம். பின்னால் எதாவது ஒரு யாவாரத் தில் கழித்துக்கொண்டுவிடலாம். ஆனால், இந்த முப்பது இருபது ரூபாயெல்லாம் எந்தக் கணக்கிலும் சேரவே சேராது. அப்படியும் இறுக்கமாகக் கட்டிப் போட்டாலும் ருசி கண்ட காளைகள் அடுத்த படப்பைத் தேடிப் போய்விடுவதுபோல நம்மிடம் சில்லறையைப் பார்த்துவிட்டு அடுத்த கடைக்குப் போய்விடுகிறவர்களும் உண்டு. அந்த வகையில் ஈஸ்வரன் பரவாயில்லை. லூட்டியாக வந்து நிற்பான். சட்டைப் பையில் இருப்பதைப் பறிப்பதைப் போலத் தாட்டியமாகக் கேட்பான்.

”எனக்கு அவசரமா வேணும்ணே…”

”இல்லியேப்பா…”

”ணே… நான் வேற யார்ட்டயும் போய் நிக்க மாட்டேன்னு ஒங்களுக்கே தெரியும்ல… குடுண்ணே…”

”மொடையா வேணும்னா? எங்கிட்ட இருந் தாத்தானப்பா குடுக்க…”

”பக்கத்துல யார்கிட்டயாவது வாங்கிக் குடுங்கண்ணே… சாயங்காலம் தந்திடலாம்..”

”அந்தக் கழுதைய நீயே கேட்டு வாங்கிக்கிட வேண்டியதுதானே?”

எத்தனை தரம், எவரிடம் வாங்கித் தந்தாலும் கொடுத்த பணம் எந்தச் சாயங்காலத்திலும் திரும்ப வந்து சேர்ந்தது கிடையாது. அடுத்த ஒரு கோரிக்கையுடன் அந்த சாயங்காலமே வந்து நிற்பான். அதில் இருந்து தப்பும் வழி எதுவெனத் தேடுவதே அப்போதைய பாடாக இருக்கும் நமக்கு.

”ணே… நீங்க ஓனரு. என்னாருந்தாலும்

நா, எச்சி எலை எடுக்குறவந்தானேண்ணே…”

இந்த வார்த்தைகள்தான் ஈஸ்வரன் போன்றோ ருக்கு முக்கிய அஸ்திரம்.

”ஆமா… நீ எச்சி எலை எடுக்கிற வேலைக்குப் போனா அஞ்சாயிரத்த எண்ணிட்டு வந்துடறே. உங்ககிட்ட பாத்தரம் வாடகைக்கு விடுற எனக்கு எம்புட்டு வாடகை வருது. ஒரு அறநூறு… இல்ல எழநூறு..? அட, ஆயிரம்னே வெச்சுக்கயேன். எச்சி எல மெஜாரிட்டியா… இல்ல ஓனர் மெஜாரிட்டியா?”

”அடடா… என்னாண்ணே கணக்க இப்புடிப் போடுறீக. அஞ்சாயிரத்தையும் நானேவா வெச்சுக்கிடறேன். கூடமாட வேலைக்கு வர்ற பக்கிப்பதவல்களுக்கு யாரு கூலி குடுக்குறது?”

”ஆமா… நீயி சம்பளத்த அப்படியே கிளுக்கின்னுதான் அள்ளிக்கிட்டுக் குடுத்துருவ…’

”அண்ணே இப்புடிப் பேசாதீக… ஒங்க வாடகைக் காசக்கூட ஆட்டயப் போட்ருவேன். ஆனா, நான் கூலிக்காரங்களுக்கு என்னைக்கும் சம்பளத்த நிப்பாட்டவே மாட்டேன். ஏன்னா… நீங்க ஓனரு…”

”ஆமா… ஓனருன்னா அவருக்கு வாயி வவுறு கிடையாது. புள்ளகுட்டி இல்லாத வெறும் ஆளு. நம்மள மாதிரி நாலு பேரு வாடகைக் காசைப் நிப்பாட்டுனா… அவரோட கடை வாடகைக்

கஞ்சிப்பாட்ட யார் பாப்பாங்க..?” – முனியம்மா எனக்கு ஆதரவாகப் பேசியது ஆறுதலாக இருந்தது. முனியம்மாவும் இந்த நகரத்தில் ஒரு கை தேர்ந்த சமையல் ஆள். சீஸன் சமயத்தில் நம்ம கடையில்தான் பாத்திரம் வாடகைக்கு எடுக்கும். சாப்பாட்டில் மட்டுமல்ல; காசு கொடுக்கல் வாங்கலிலும் கை சுத்தம்.

”யம்மா… நான் ஆட்டயப் போட்ருவேன்னுதான் சொன்னேன். போட்டேன்னு சொல்லலியே. வார்த்தைய நல்லாக் காதுல கேட்டுப் பேசணும். இன்னி வரைக்கும் எத்தன பில்லு பாக்கி வெச்சிருக்கேன்னு அவரைச் சொல்லச் சொல்லு. இப்ப இந்த நிமிஷத்துல கட்றேன். சம்பந்தம் இல்லாம எங்கிட்ட ஆஜராகாதே, தப்பாயிரும்” – ஈஸ்வரன் உடனடியாக முனியம்மா விடம் சண்டைக்குக் கிளம்பினான். அவர்களுக்குள் இருக்கும் தொழில் போட்டியின் மிச்சமாக இதுபோன்ற வார்த்தைகள் வெடிப்பது இந்தத் தொழிலில் சகஜம்.

”என்னா தப்பாயிரும்? என்னா செஞ்சிருவே? நான் பொதுவாப் பேசுனா… ஒனக்கெதுக்கு சுரீர்ங்குது? நானும் எங்காத்தாகிட்ட பால் குடிச்சு வளந்தவதான். ஒருத்தனப் போல தப்பிலிப் பால் குடிச்சு வளரல”- முனியம்மாவும் விசும்பிக்கொண்டு நின்றது.

”அப்ப நான் தப்பிலிப் பால் குடிச்சவனா?” – ஈஸ்வரன் முறுக்கிக்கொண்டு நின்றான்.

முனியம்மா எப்போதும் முடிகிறபோதுதான் பேச்சைத் துவக்கும். பெரும்பாலும் அதன் பேச்சு கடைக்காரர்களுக்குச் சாதகமாகவே அமையும். அதனாலேயே பெரும்பாலான சமையல்காரர்கள் முனியம்மாவோடு துவந்த யுத்தத்திலேயே இருப்பார்கள்.

”நான் பொதுவாத்தேன் பேசுவேண்ணே. சமையல்காரங்களுக்கு என்னையும் சேத்துத்தான் சொல்றேன். போனஸ் குடுக்கறதெல்லாம் வேஸ்ட்டு. ஏன்னு கேளுங்க… வாடகைக்கு எடுக்குற பாத்தரத்துக்கு நூத்துக்கு இம்புட்டுனு கமிஷன் குடுத்திடுறீக. இதுக்கு மேல நீங்க போடுற பில்லுல வீட்டுக்காரவுக கொஞ்சம் கொறப்பாங்க இல்லியா… நீங்க போட்ட மொதலுக்கு வட்டியக் கட்டி, சேதாரம் பாத்து… காணாமப்போற பொருளத் தேடி, கடை வாடகை குடுத்து, ஒங்க செலவு, சம்பளத்தப் பாத்து… இம்புட்டுக்கு மேல இவுகளுக்கு நீங்க போனஸும் குடுக்கணும்னா… இவிங்க வேலையச் செஞ்சுப்புட்டு வெறுங்கையவா வீசிட்டு வாரானுக? ஒண்ணு கமிஷன் வாங்காம இருக்கச் சொல்லுங்க… போனஸ் தந்துடலாம். அதாண்ணே ஞாயம்?” என்று வியாபார நியாயத்தைப் பேசும் முனியம்மாவைக் கையெடுத்துக் கும்பிடத் தோன்றும்.

சமையல் வாடகைப் பாத்திரத் தொழிலில் வியாபாரம் பார்ப்பது, லாபம் காண்பது… இவை எல்லாவற்றையும்விட இந்த மாதிரியான விவகா ரங்களைச் சந்திப்பதுதான் ஆகப் பெரிய வேலை. ஒரு வார்த்தையில், ஓர் எழுத்தில், ஓர் உச்சரிப்பின் தொனியில் உணர்ச்சிவசப்பட்டுவிடுவார்கள். அதிலும் உற்சாக பானம் உள்ளே போய்விட்ட நிலையில் இருந்தால், சந்தைக் கடையைவிடக் கேவலமாகிவிடும். கடை வைத்திருக்கிற இந்தக் கட்டடத்தின் உரிமையாளர் இதை எல்லாம் பார்க்க நேரிட்டால், உடனடி யாகக் கடையைக் காலி செய்யாமல் விட மாட்டார். அந்த அளவுக்கு உச்சகட்டக் களேபரங்களை அவ்வப்போது காணலாம். அதேபோல, அரை நொடியில் சமாதானம் ஆகி இரண்டு பேர் நாலு பேராகச் சேர்ந்து வேலைக்குப் போவதும் ஒரே கிளாஸில் மயக்க நீர் அடிப்பதும்கூட நடக்கும். இந்த இரண்டுக்கும் இடையில் நாம்தான் பொருளுக்கும் சேதாரம் இல்லாமல் நம் பேருக்கும் பாதகம் இல்லாமல் நடந்து தப்பிக்க வேண்டும். திட்டினால் இருவரையும் ஒரே மாதிரியான வார்த்தையால் திட்ட வேண்டும். அடித்தால் அல்லது விலக்கிவிடுவதாக இருந்தால், இரண்டு பேரையும் சம தூரத்தில் தள்ளி விலக்கிவிட வேண்டும். தவறும்பட்சத்தில் அவனுக்கு எந்த விதத்தில் இவன் குறைந்தவன் என்பதை அவன் திருப்தியுறுகிற விதமாக நிரூபித்தாக வேண்டும்.

அதனால் அன்றைக்கு முனியம்மாவைத்தான் முதலில் கண்டிக்க வேண்டிவந்தது. ”முனியம்மா… நிறுத்து. அவன் பாட்டுக்கு என்னத்தியோ பேசிட்டுப் போறான். அவன்ட்ட நீ எதுக்கு வம்புகட்ற?” – அநேகமாக இந்த வார்த்தைகள் இருவரையும் பாதிக்காது என நம்பினேன்.

”ணே… நான் இது வரைக்கும் ஒங்ககிட்ட எத்தன பில் நிப்பாட்டி இருக்கேன்?” என்ற ஈஸ்வரன் தொடர்ந்து, ”போன மாசம் முல்லை நகர் பில் ஒண்ணு, அப்பறமா… சுக்கோடம்பட்டி பில் ஒண்ணு. ரெண்டும் வீட்டுக்கார நாய்ங்க ரப்ச்சர் பண்ணதால நின்னுபோன பில்லுங்க. அங்க என் சம்பளமும்ல சேர்ந்துபோய் நிக்குது. வேற எதுண்ணே வரணும். சொல்லுண்ணே…”

சொன்னால் எதுவும் வரப்போகிறதா என்ன? பொதுவாக இரண்டு நாளைக்குள் பில் தொகை வசூல் ஆகாவிட்டால், அது காந்தி கணக்குதான். வீட்டுக்காரரிடம் கேட்டால், சமையல் வேலைக்கு வருவதற்கு முன்பே மொத்தத் தொகையையும் வசூலித்து விட்டார்கள் என்றும்… வேலை முடிந்தவுடனேயே பாத்திரத்துக்கான வாடகையை எல்லாம் கொடுத்துவிட்டதாகவும் ஒப்பிப்பார்கள். நெருக்கிப் பிடித்தால் யாரும் கடைப் பக்கம் எட்டியே பார்க்க மாட்டார்கள். என்ன செய்வது? இந்தத் தொழிலுக்குப் பின்னால் இருக்கிற கறுப்புப் பக்கங்கள் இவை.

”சொல்லுண்ணே… பாக்கி வெச்சிருக்கனா?” – மருளாளியைப் பிடித்து உலுப்புவதைப் போல உலுக்கினான் ஈஸ்வரன்.

‘ஆமாண்டா பாக்கி வெச்சிருக்கே!’ என எளிதாகச் சொல்லிவிடலாம்தான். ஆனால், சொல்ல முடிவது இல்லை. அப்படிச் சொன்னால், ‘உன்கிட்ட ஈஸ்வரன் மட்டும் பாக்கி நிறுத்தலாம், நாங்க நிறுத்துனா ஆகாதா?’ என மற்ற சமையல்காரர்களும் ஆரம்பித்துவிடுவார்கள்.

”அப்படி நான் சொன்னனா ஈஸ்வரா? சில்லற சில்லறயா அம்பது நூறுனு கொஞ்சம் நிக்கும். அவ்வளவுதான்!” அந்த வார்த்தையை மட்டும் வேகமாகச் சொன்னேன்.

”அதுக்கு எனக்கு உரிம இருக்கு” – ஈஸ்வரன் என்னிலும் இன்னும் வேகமாக இதனைச் சொன்னான். நான் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தேன்.

”ஏன்னா, ஒருத்தனப் போல ஒரு நாளைக்கு ஒரு கடையத் தேடுறவன் நான் இல்ல. நெசமா, இல்லியாண்ணே? நான் சாகத்தண்டியும் எனக்கு ஒங்க கடைதான். எனக்கு நீங்கதான் ஓனரு. நீங்க எனக்கு கமிஷன் கொடுத்தாலும் சரி… கொடுக்காட்டியும் சரி.”

அது என்னவோ ஈஸ்வரனைப் பொறுத்தவரை அவன் சொல்வது உண்மைதான். மண்டபத்து வேலையைத் தவிர, மற்ற எல்லா வேலைகளுக்கும் அது ஐம்பது நூறு கிலோ மீட்டர் தூரம் என்றாலும்கூட என் கடையில் இருந்துதான் டெம்போவைத்து பாத்திர பண்டங்களை அள்ளிக்கொண்டு போவான். அதனால்தானோ என்னவோ ஒரு நாள் போதைவயப்பட்ட நிலையில் கடைக்கு வந்தவன், ”ண்ணே… நான் ஒங்களப் பத்தி ஒருத்தங்கிட்ட ஒரு வார்த்தை விட்டுட்டேன். தப்பா நெனச்சுக்கப்படாது… சரியா?” என்றான்.

நான் என்ன வார்த்தை எனக் கேட்க விரும்பவில்லை. அந்த வார்த்தை எதுவாக இருந்தாலும் பெரிய பாதிப்பை உண்டாக்கப் போவது இல்லை.

”நீதான் தப்பா பேச மாட்டேல்ல…’ என்று பொத்தாம்பொதுவாகப் பூசி மெழுகி னேன். பல சமயங்களில் அப்படித்தான் பேச வேண்டும் எனப் பழகிப்போயிருந்தது. பழக்க தோஷம் மாதிரி இது தொழில் தோஷம். ”இல்லண்ணே…’ அவன் மேலும் விளக்கம் அளிக்கலானான்.

”நான் என்ன செஞ்சாலும் நீங்க என்னிய விட்டுத்தர மாட்டீக. அதேபோல நானும் ஒங்களவிட்டுப் போக மாட்டேன். ஏன்னா, நான் ஒரு லூஸு… நீங்க இந்த லூஸுக்கு ஓனரு? லூஸு ஓனரு… லூஸு ஓனரு!” – இமைகள் படபடக்க என் முகம் நோக்கினான். ”நான் சொல்றது தப்புன்னா, என்னிய செருப்பக்கொண்டி அடிங்க…” – செருப்பைக் கழட்டித் தந்தான்.

இதிலும் அவனோடு ஆத்திரப்பட்டு சண்டை போடவும் முடியாது. ஆமோதித்தலும் ஆகாது. வாடகைக் கடை என்பது உருண்டுகொண்டே இருக்க வேண்டிய ஒரு தொழில். கட்டிப்போட்டால் துருப்பிடித்துப் போகும். பத்துக்குப் பாதி வந்தாலும் ஓட்டம் நிற்கக் கூடாது. இந்த ஏற்பாட்டில், ‘யார் லூஸு’ என்பதைத் துப்பறிவதில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

கடைக்குள் நுழைந்த ஈஸ்வரன் வாசல்படி ஓரமாக அரிவாள்மணைப் பையை வைத்துக்கொண்டே ”லே… வேலு. என்னா ஓனரை கரெக்ட் பண்ணி ஒக்காந்திருக்கபோல…” என்றான் எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சமையற்கார வேலுவைப் பார்த்து.

”ஒரு பத்து ரூபா காசுக்காக இன்னிக்கி கொறப்பொழுது இங்ஙனயே தவங்கெடக்கேன். மனசுவைக்க மாட்டேங்கிறாரு…’ தனது வன்மத்தைக் கொட்டினான் வேலு.

”சமையல்காரவுகள ஆடி மாசப் பொழுதுல கொஞ்சம் அனுசரிச்சுவெச்சுக்கங்கண்ணே. அடுத்த மாசமெல்லாம் நீங்க தேடுனாலும் நாங்க கெடைக்க மாட்டம்” என்ற ஈஸ்வரன், ஒரு பீடியை எடுத்துப் பற்றவைத்து இழுத்தான்.

”வேலைக்கா ஈஸ்வரா?” – வேலுதான் கேட்டான்.

‘ஆமா, ஆண்டிபட்டில. பாய் வீட்டு வேல. மண்ட பத்துல கல்யாணம்” என்றவன் தொடர்ந்தான். ”நாங்கூட வீட்ல வெச்சுக்கச் சொன்னேன். நம்ம கடைலேர்ந்து பாத்தரம் பண்டமெல்லாம் அள்ளீட்டுப் போயிறலாம்லயா. பில்லு எப்பிடியும் ஆயிரம் ரெண்டாயிரம் தேறும். ஆடி வெட்டையில நம்ம ஓனருக்கு ஒரு நாலு நாள் பொழுது ஓடும்ல” – சொல்லிக்கொண்டே என் பக்கம் திரும்பினான். நான் நம்புவதுபோல தலையாட்டிக்கொண்டேன்.

”மாப்ளகாரன் சரீன்னுட்டான். அவுக ஆளுகள்ல கலியாணச் செலவெல்லாம் பொண்ணு வீட்டுச் செலவாம்ல. அதனால எம் பேச்சு எடுபடல…” சொல்லி முடித்துவிட்டு, வேலுவைப் பார்த்து ”வேலு, சும்மாருந்தா வேலைக்கு வர்றியா…” எனக் கூப்பிட்டான்.

ஏதோ யோசனைக்குப் பின் ”ம்ஹூம்…” என மறுத்தான்.

”பெரிசா ஒண்ணும் வேல இல்லண்ணே… சம்பளம் அரப்பச்ச (ஐநூறு) வாங்கிக்க. ஒரு நேரத்துச் சாப்பாடுதான் தயார் பண்ணணும். என்னாண்ணே கேட்டுச் சொல்லுங்க…” அமைதியாக இருந்த என்னை உசுப்பினான் ஈஸ்வரன். நான் சொன்னால் வேலு கேட்பான் என நம்புகிறான்.

ஆனால், அப்படியெல்லாம் சொல்லி நான் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. எவ்வளவோ பார்த்தாயிற்று. வேலை இல்லாமல் இருக்கிறான் பாவம் என்றோ, வேலைக்கு ஆள் இல்லாமல் திண்டாடுகிறான் என்றோ… பச்சாதாபப்பட்டு ஆளை அனுப்பிவைத்தால், கூலிப்

பஞ்சாயத்தில் நம் தலைதான் கிடந்து உருளும்.

”நீங்க சொன்னதுனாலதான் அவன்கூட வேலைக்குப் போனேன். சம்பளக் கணக்கு முடிக்கல பாருங்க” என்று வீட்டில் வந்து நிற்பார்கள்.

”இவன் ரெண்டு தேங்காயைத் திருவ நாலு நாளா நீட்டுறான். பொம்பள ஆள் சம்பளம்கூடத் தர மாட்டேன்…” எனப் புகார் வரும். வீட்டில் நிம்மதியாகத் தூங்க முடியாது.

”ந்தா… ஒக்காந்து இருக்கான்ல பேசிக் கூப்புட்டுப் போ!” என்றேன்.

”எனக்கு ஆளெல்லாம் இருக்கு. நம்ம கடைகிட்ட ஓராளு உம்முனு ஒக்காந்திருக்கானேனு கூப்பிட்டேன். வர்றதுன்னா வரட்டும்!”

”ஆவணிக்கு அட்வான்ஸ் வாங்கப் போகணும்… பஸ் சார்ஜுக்கு ஒரு பத்து ரூவா இருந்தா குடுத்துட்டுப் போ, ஈஸு…” – வேலு கெத்துவிடாமல் பேசினான்.

”நானே… அதுக்குத்தேன் எங்க ஓனரப் பாக்க வந்திருக்கேன். ஆண்டிபட்டிக்கு ஆள் கூப்பிடப் போகணும். ஒரு நூறு ரூபா குடுண்ணே… நாள சாயங்காலம் வேல முடிச்சதும் கொண்டாந்து தந்திடுறேன்”- அலுங்காமல் வந்த விஷயத்தை எடுத்துவைத்தான் ஈஸ்வரன்.

”யே… நானே ஒரு வாரமா வீட்டுக்கு அஞ்சு ரூவாயக்கூடக் குடுக்க முடியலேனு இப்பதான் இவன்கிட்ட பொலம்பிட்டு இருக்கேன்… நீ பாட்டுக்கு…” முகத்தைத் திருப்பிக்கொண்டேன்.

”ஓனரு அப்பிடி எல்லாம் பேசக் கூடாது… ஒரு அம்பதாச்சும் குடுங்க. ஒங்க கையில வாங்கிட்டு வேலைக்குப் போனாத்தேன் ராசி.”

”இங்க பாரு ஈஸ்வரா. சத்தியமா எங்கிட்ட பைசா இல்ல. வேணும்னா சேப்பக்கூடப் பாத்துக்க…” – சட்டையின் மேல் பையைக் கவிழ்த் துக் காண்பித்தேன்.

”ணே… நேரமாச்சுண்ணே… ஆளுக காத்துக் கெடப்பாக. சீக்கிரமா குடுங்கண்ணே…”

”என்னமோ குடுத்துவெச்ச காசக் கேக்குற மாதிரி கேக்குற..? கல்லாப் பெட்டியே காத்தாடிக் கெடக்கு பாரு!” – மேசையின் டிராவை இழுத்துக் காண்பிப்பதுபோல இழுத்துக் காட்டிவிட்டு, கணக்கு நோட்டை அதற்குள்வைத்து மூடினேன். யதேச்சையாக நோட்டைப் புரட்டினால், உள்ளே இருக்கும் எழுபது ரூபாய்க்கும் ஆபத்து வந்துவிடும்.

”ப்ச்… வேணும்ணே வெளாடாதீக. பக்கத்துக் கடையிலயாச்சும் வாங்கிக் குடுங்க…”

”ஈஸ்வரா… லைட் போடற நேரம். அந்த ஆட்டைக்கெல்லாம் நான் வரலை” – கை எடுத்துக் கும்பிட்டேன்.

அந்த நேரம் மூன்று பேர் கடைக்கு வந்தனர்.

”வாங்க…” – பார்த்த ஞாபகமாக இருந்தது.

”தலைவா… ஆடி பதினெட்டுக்கு டிரம்மு இருக்கும்ல?”- வந்தவர்களில் ஓர் ஆள் கேட்டார்.

விருட்டென ஈஸ்வரன் எழுந்தான். ”சமையலா..?”

”அன்ன தானம்.”

”ஆள் பேசியாச்சா..?”

”வெளியூர்லேர்ந்து வாராக…”

”ம்… டிரம்மு மட்டும் வேணுமாக்கும். எத்தனை?”

”எட்டு… பத்து இருந்தாக்கூட குடுங்க.”

”பாத்தரம்…” – விடாமல் கேள்வி எழுப்பியபடி நின்றான் ஈஸ்வரன்.

”அதெல்லாம் சொல்லிட்டாங்கப்பா!” – அடங்கு என்பதைப் போல ஈஸ்வரனைக் கை காட்டி அதட்டினேன்.

”சொல்லியா… ச்…சா…” வார்த்தை வடிந்துபோனது ஈஸ்வரனுக்கு.

”அப்ப டிரம்மையும் சேர்த்துக் குறிச்சுக்கங்க…” என்றான்.

”மொத நாள் வந்து எடுத்துக்கறம்ணே’ – சொல்லிவிட்டுக் கிளம்பியவர்களைப் பார்த்து, ”அப்போ அட்வான்ஸ் பண்ணிடறீங்களா..?” எனத் தடாலடியாகக் கேட்டான் ஈஸ்வரன்.

”ஓனர் பேசாம இருக்காரு” – கையில் மஞ்சள் காப்பு அணிந்தவர் இடக்காகச் சிரித்தபடி கேட்டார்.

அதே சிரிப்பை திருப்பிச் சிரித்த ஈஸ்வரன், ”ஓனரு எப்பிடிக் கேப்பாரு… முந்துறவங்களுக்கு சிட்டயப் போட்டு வாங்கப்போறாரு…”

மறுபேச்சுப் பேசாமல் முன்னூற்று ஒரு ரூபாய் அட்வான்ஸ் தொகையாக வந்தது. இருநூற்று ஒரு ரூபாயை எடுத்துக் கல்லாவில் வைத்துவிட்டு, நூறு ரூபாயைத் தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான் ஈஸ்வரன். மறக்காமல் அரிவாள்மணைப் பையைக் கையில் பிடித்துக்கொண்டு ஆண்டிபட்டி வேலைக்குக் கிளம்பினான்.

நீண்ட நேரமாகக் கடையின் வாசல்படியில் காத்துக்கிடந்த வேலு வுக்குக் காசு கொடுக்க கணக்கு நோட்டைத் திறந்தேன் நான்.

– செப்டம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *