லீலையில் ஒரு வேலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 8, 2022
பார்வையிட்டோர்: 6,114 
 
 

சென்னை வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள ஆல்பா சென்டர் . ஒரு புறம் ஜவுளிக்கடைகள், இன்னொருபுறம் நகைக் கடைகள், இதற்கிடையே ஜனநாட்டம். பைக்கட்டுகளோடும் குழந்தை குட்டிகளோடும் ஊர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு கால் நூற்றாண்டுக்குப் பிறகு மீண்டும் களைகட்டி இருக்கிறது அந்தப் பகுதியில் வெறிச்சோடிக் கிடந்த ஆல்பா சென்டர், ஏதோ புதுப் பொலிவு பெற்றமாதிரி களை கட்டியிருந்தது. நடிகர் திலகம் கட்சி தொடங்கியபோது இருந்த அதே பரபரப்பு. அதற்குப் பிறகு வானத்தை வில்லாக வளைக்கும் முக்கிய நிகழ்வு எதுவம் நடந்து விடவில்லை. “அப்புறமென்ன கத்தரிக்காய்க்கு பரபரப்பா இருந்துச்சு…” என்று கேட்கலாம். ஒன்றுமில்லை. தமிழில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள வட இந்தியத் தொலைக்காட்சிக்கு வருவதும் போவதும்… போவதும் வருவதுமாக இருந்தார்கள் மீடியாவில் பணிபுரிபவர்கள். ஏனென்றால் அடிமாட்டு விலைக்கு பணியில் சேர்ந்த அவர்கள், மாமாங்களைத் தாண்டியும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பொருளாதாரம் இன்னும் “நக்கிக்கோ தொடச்சுக்கோ” என்றுதான் இருக்கிறது. சேனல் மாறினால் இது ஓரளவுக்கு மாறும் என்ற நப்பாசையால் புதிய கம்பெனிக்குப் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மார்ச் ஐந்தாமதேதி ஒரு நல்ல நேரம் பார்த்து தொலைக்காட்சி தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. அப்போதைய முதலமைச்சர் அந்த தொலைக்காட்சிக்கு வாழ்த்து தெரிவித்து சுமார் அரைமணி நேரம் உரையாற்றினார். டிவி ஓடுவதை விட நாட்கள் வேகமாக ஓடிக்கோண்டிருந்தன. வேலைக்கு ஆள் எடுபிபது கைவிடப்பட்டதோ ஒத்தி வைக்கப்பட்டதோ தெரியவில்லை. மற்ற மீடியா நண்பர்களின் வருகை படிப்படியாக குறைந்தது.

ஒருநாள் செய்திப் பிரிவுக்கு வந்த சேனல் ஹெட் சந்திரசேகர் செய்தி ஆசிரியர் ஜலாலை நோக்கிச் சென்று கோண்டிருந்தார். செய்தியில் புதுவிதமாக என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்பார் என்றுதான் அவரும் தயாராக இருந்தார். ஆனால் அவர் அதைப்பற்றி கேட்கவில்லை.

“என்ன ஜலால், டிவியை ஆரம்பிச்சாச்சு. ஒழுங்காப் பாத்துக்கோங்க… ஜெய ஸ்ரீ இங்கே வாங்க சார் கேக்குறதை செஞ்சு கொடுங்க…”

“சார் என்ன இப்டி சொல்றீங்க…நீங்க இருக்கும்போது நா எப்டி சார் நிர்வாகம் பண்ண முடியும்..?

“நா இருந்தா தானே நடக்கிறதையெல்லாம்…போற போக்கப் பாத்தா நா கூடிய சீக்கிரம் செயிலுக்குப் போய்விடுவேன் போல…

“அப்டி என்னசார் நடந்துச்சு…”

“நான் காரை எடுத்துக்கிட்டுப் பொறப்படும்போதும். வரும்போதும் ஒருத்தென் குறுக்கெ குறுக்கெ பாயிறான், அவனுக்கு வேற வண்டியெ கெடைக்கெல போல…”

“எந்த எடத்திலெ சார்..?”

“வேறெ எங்கெ…..எல்லாம் நம்ம ஆபிசுக்கிட்டத்தான்…….இப்ப நா பொறப்படும்போது வந்து பாருங்க. யாருனு தெரிலை…ஆனா ஒரு காட்டெருமை மாதிரி இருக்கான்…”

மாலை ஆறு மணி அடித்தது. எல்லா செய்திகளையும் திருத்தி முடித்துவிட்டு சேனல் ஹெட் சந்திரசேகருடன் படியிறங்கினார் ஜலால்.

“கையிலெ எதுவம் இல்லாம போறாரே எதுக்கு…? காப்பாத்தப்போறாரா… இல்லை தற்கொலை பண்ணிக்கிறதை பாக்கப்போறாரா” என்று அலுவலகத்துக்குள் பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள்

காரை எடுத்துக் கொண்டு புறப்பட ஆயத்தமானார் சந்துரு. அப்போது அவருக்கு நன்றி தெரிவித்தவர்களுக்கு பதில் வணக்கம் கூட வைக்க சந்துருக்கு அவகாசம் இல்லைபோல….அந்த அளவுக்குப் பயம்

கார் கேட் வாயிலை அடைவதற்கு மூன்று அடி இருக்கையில் அதே காட்டெருமை மறுபடியும் தோன்றியது. “சார்…சார்…” என்று குறுக்கே பாய்ந்த்து. அப்போது கண்ணுச்சாமி “இங்கெ வாங்க என்ன பண்றீங்க” என்று பெயர் சொல்லி அழைத்தார் செய்தி ஆசிரியர் ஜலால்.

உடனே காரை நிறுத்திவிட்டு வேர்வை முத்து முத்தாக முகத்திலிருந்து வழிய இறங்கி வந்த சந்துரு “என்ன ஜலால் இவரை ஏற்கனவே தெரியுமா?” என்றார்.

“ஆமா சார் நம்ம ஆள்தான். பத்து வருசத்துக்கு முன்னாலெ எங்கிட்ட வேலை செஞ்ச பையன்தா” என்று சொல்லிவிட்டு “என்ன கண்ணுச்சாமி தற்கொலை செய்ய வேறு எடமே கிடைக்கலையா ஒங்களுக்கு” என்றார்

“இல்லை சார். சார்ட்டெ பேசணும்னுதா ட்ரை பண்ணேன்”.

“இப்டியா ட்ரை பண்ணுவீங்க, எனக்கு ஒருவாரமா தூக்கம் போச்சுப்பா நீ பண்ண வேடிக்கைனாலெ” என்றார் சந்துரு

“என்ன ட்ரை பண்ணீங்க கண்ணுச்சாமி” என்று கேள்வி எழுப்பினார் ஜலால்

“வேலையில்லாமெ இருக்கேன். ரொம்ப கஷ்டமா இருக்கு அதான் பேசி ஒரு வேலை கேக்கலாமெ அப்டினுதான் காரை மறிச்சேன் சார்….”

“நாளைக்கு வந்து பாருங்க சரி கிளம்புங்க” என்று சொல்லி விட்டு சந்துருவுடன் ஜலால் சென்று விட்டார் காரை ஓட்டிக் கொண்டிருக்கும்போதே பெருமூச்சு விட்ட சந்துரு..”இப்பத்தான் ஜலால் நிம்மதியா இருக்கு. எங்கெ எங்கார்லெ பாஞ்சிடுவோனோனு பயந்துக்கிட்டே இருந்தேன். பரவாயில்லெ இந்தப் பிரச்சினைய நல்ல படியா முடிச்சு வச்சிட்டீங்க…”

“அதுக்கென்ன சார். நாளைக்கு வந்தா வேலைக்கு எடுத்துக்கலாமா…?”

“மறுபடியும் நா பிரச்சனை இல்லாம இருக்கணும்னா எடுத்துத்தான் ஆகணும்…”

“நியூசுல அப்டி என்னத்தை புதுசா பண்ண முடியும்…பரபரப்பு, அதிர்ச்சி, பீதி ன்னுதானே போடுறாங்க…இதெ அடிச்சிறமாட்டானா சேத்துக்கலாம். இதெ விட்டோம்னா எப்பவாயிருந்தாலும் என்னெ உள்ளெ தள்ளிடுவான்போல….”

“சரி சேத்துக்கலாம்” என்று சொல்லி விட்டு விடைபெற்றார் ஜலால்.

மறுநாள் காலை ஒன்பது மணி இருக்கும். நெற்றியில் விபூதியும் குங்கும்முமாக அலுவலக வாசலில் நின்று கொண்டிருந்தான் கண்ணுச்சாமி. இன்றைக்கு குறுக்கே பாயும் திட்டமெல்லாம் இல்லை என்பது அவனுடைய ஜோடனையில் தெரிந்தது. சுமார் பத்து மணிக்கு கண்ணுச்சாமியை அழைத்தார்கள். சந்திரசேகரும் ஜலாலும் அவனுக்கு எதிரே அமர்ந்து கொண்டு கேள்விகளைக் கேட்டார்கள்,

“இந்த டிவியைத்தவிர நீங்க வேற எங்கேயும் ட்ரை பண்ணலையா…?”

“பண்ணேன் சார்…. நியூசு தெரிஞ்சவன இப்ப எங்கெ சார் எடுக்குறாங்க…அந்தக்காலம்லாம் மலையேறிப் போச்சு சார்…இப்பலாம் டைப் ரைட்டிங் தெரிஞ்சவனைத்தா சார் சேத்துக்கிறாங்கெ…”

“உங்களுக்கு டைப் ரைட்டிங் தெரியாதா..?”

“தெரியும்சார்…வேகமா அடிக்கணுமாம். தப்பா அடிச்சாலும் பரவால்லேங்கிறாங்க…”

“காலம் ரொம்ப மாறிப்போச்சு கண்ணுச்சாமி…. அரைமணி நேரம் நியூசை ஓட்டியாகணும். அவ்வளவுதான் அந்த நிலை வந்துடுச்சு…. நியூசுக்கு வியூவர்ஸ கெடையாதுல்லெ…தப்பா போனாலும் யாரும் அதைப்பாத்து போன் பண்றதில்லை, அதுனால இந்த முடிவுக்கு வந்துட்டாங்க போல..! எவ்வளவு எதிர்பார்க்குறீங்க..?”

“நீங்க எவ்வளவு கொடுத்தாலும் ஏத்துக்கிறேன் சார்.”

“சரி வர்ற ஒன்னாம் தேதி ஜாயிண்ட் பண்ணிருங்க…”

“நாளைக்கு ஹெச் ஆரைப் பாத்து ஆபர் லெட்ரை வாங்கிக்கோங்க…”

“அவ்வளவுதான் நீங்க கெலம்பலாம்…இன்னோன்னு பஸ்ஸூ நிக்கலேனு குறுக்கெ ஓடிறாதீங்க என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்..”

வேலை கிடைத்த விசயத்தை கண்ணுச்சாமி நண்பர்களிடம் பகிர்ந்து கோண்டான்.

அப்போது “அங்கெ எப்டி உனக்கு வேலை கிடைச்சது”? என்று ஒரு நண்பர் கேட்டிருப்பார் என்று நினைக்கிறேன்..

“கண்ணுச்சாமினா ஏனோதானோன்னு நினைச்சீங்கலாடா,…கண்ணுச்சாமினா கில்லிடா..” என்று சிரித்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *