(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அவள் ஒரு மாதிரியானவள் என்று எல்லாரும் பேசி கொள்வார்கள் நானும் அவளைக் கவனித்திருக்கிறேன்.
சட்டைக்காரி என்கிறார்களே, அந்த வகையான ஒரு தோற்றம் உள்ளவள். வயது இருபத்து ஐந்துக்குள் இருக்கும். நல்ல உடற்கட்டு. சந்தன நிறம். கவர்ச்சிமிக்க சதைப்பிடிப்பான கன்னங்கள். அழகிய முட்டை வடிவமுகம்.
ஏதாவது ஒன்றை எப்போதும் தின்று கொண்டேயிருப்பாள் மிட்டாய், கல்கண்டு போன்ற ஏதாவது ஒன்று! அதன் சாறு உதடுகளில் வழிந்து… செம்மையாகப் பளப்பளத்துக் கொண்டி ருக்கும்.
கவுன் போட்டிருப்பாள், கழுத்துக்குக் கீழே பருவத்தின் விம்மிய செழிப்புகள்! ஒல்லியான இடுப்பு அவற்றை எடுப்பாகக் காட்டும்.
நடக்கும்போது அவளுடைய நீண்ட கழுத்து ஒரு பக்கம் வளைந்தாற்போல் இருக்கும். அந்தச் சாய்வுதான் தொலைவில் வரும் போதே அடையாளம் காட்டக் கூடியது.
அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆகியிருந்தால் இரண்டு குழந்தைகளுக்காவது தாயாகியிருப்பாள்.
ஒரு மாதிரியானவள் என்பதால் மாப்பிள்ளை கிடைக்க வில்லையோ என்னமோ?
அவளுடைய உண்மைப் பெயர் என்னவென்று தெரிய வில்லை. ஆனால் எல்லோரும் லில்லி என்று கூப்பிடுவார்கள்.
நாங்கள் வசிக்கும் பதினாறு மாடி அடுக்கு வீட்டில் லில்லிக்குப் பதினைந்தாம் மாடி.
அவள் தாயும் தந்தையும் காலையில் வேலைக்குப் போய் அவர்கள் வரும்வரை இரவில் தான் வீடு திரும்புவார்கள், வீட்டில் லில்லி என்ன தான் செய்வாளோ தெரியாது. ஆனால் மின் தூக்கி (லிப்டு) யில் கொஞ்ச நேரத்துக்கு ஒரு தரம் கீழே வருவதும் மேலே போவதுமாகவே இருப்பாள்.
ஆரம்பத்தில் ஏதோ குழந்தைத்தனம் விளையாட்டு போக்கு என்று எண்ணியவர்களுக்குப் போகப் போகத்தான் அவள் ஒரு மாதிரியானவள் என்பது புலப்பட்டது.
அது புலப்பட்ட பிறகு தான் பல பேர் அவளைத் தனி அர்த்தத்தோடு பார்க்கத் தலைப்பட்டார்கள், தனி அர்த்தம் உள்ள வார்த்தைகளைப் பேசவும் தனி அர்த்தம் நிறைந்த சிரிப்பைச் சிந்தவும் தொடங்கினார்கள்.
பள்ளிக்கூடத்துக்குப் போகும் பையன்களிலிருந்து, பல்லுப் போன கிழவர்கள் வரை லில்லியிடம் எதை எதையோ எப்படி எப்படியோ பேசுவார்கள்
ஆகா! நீ கண்ணுக்கு எவ்வளவு நேர்த்தியாக கருப்பு மை தடவியிருக்கிறே!
மேனாட்டுக்காரியின் தலைமுடி மாதிரி உன் தலைமுடி பொன்னிறமாக மின்னுதே!
நீ பூசியிருக்கிற டால்கம் பவுடர் கமகமன்னு மயக்குது லில்லி!
இந்த மஞ்சள் கலர் கவுன்லே உன்னைப் பார்த்துக்கிட்டேயிருக்கனும்னு தோணுது!
இப்படியெல்லாம் பாதி நகைச் சுவையாகவும் மீதி நச்சுச் சுவையாகவும் பேசுவார்கள்.
பதிலுக்கு லில்லி, ஒ! அப்படியா? நிஜமாகவா? என்னும் பாவனையில் தன் உதடுகளைக் குவித்து, கண்களை அகலவிரித்து. தலையை ஒரு தினுசாகச் சாய்த்து குலுக்குவாள்!
அது எதற்கு அடையாளமோ?
வேலிக்கு உள்ளே மாமரம் இருக்கும். அதிலே மாம்பழம் பழுத்துக் குலுங்கும். வழியிலே போகிறவர்கள் முதலில் மாம்பழத்தை ஜாடையாக பார்ப்பார்கள். அப்புறம் உன்னிப் பாகக் கவனிப்பார்கள் பிறகு அதன் மீது’ஒரு கல்லை எடுத்து எறிவார்கள்: பழம் வேலிக்கு உள்ளேயே விழும். சுாவல் கிடையாது என்று தெரிந்ததும் தைரியம் தானாகவே வரும். துணிந்து வேலியைத் தாண்டுவார்கள்.
லில்லியைக் காவல் இல்லாத மாமரத்துக் கனி என்று சிலர் கணக்குப் போடுவதாக ஒரு கசமுச பரவியது வதந்திதான்!
அந்த அசுர வதந்திக்கு மறுப்பாக மற்றெரு பேய் வதந்தியும் கிளம்பியது,
மாமரத்துக் கனியே போகிறவர்களை மனத்தைக் கெடுத்து மயக்கி இழுக்கிறதாம்!
மின்தூக்கியில் அவளோடு தனியாக ஆண்கள் யாராவது சென்றால் அவளே வம்பு பண்ணுகிறாள் என்பதுதான் அந்தப் பச்சையான வதந்தி.
அதை உண்மையாக்குவது போல் மின்தூக்கி அடிக்கடி பழுதுபட்டு எங்காவது ஒரு மாடியில் மூடிய நிலையில் நின்று விடுவதும் பிறகு தானாகவே சீராகித் திறந்து கொள்வதும், அதனுள்ளிருந்து லில்லியும் அதனுடன் யாராவது ஒருவனும் வெளியே வருவதும்… வதந்தியும் ஒன்றையொன்று மிஞ்சு வதற்குத் தலை விரித்து ஆடின.
லில்லியின் குழைவான பேச்சு ஒருக்களித்த பார்வை கிறங்கலான சிரிப்பு ஆகியன அதை நம்பவைத்தன,
அது தான் உண்மை என்றார்கள் சிலர். இதுதான் மெய்யாகவே நடப்பது என்றார்கள் வேறு சிலர் அதை நம்ப முடியாமல் குழம்பினார்கள் என்னைப் போல் இரண்டொருவர்.
இந்தச் சமயத்தில் அதாவது மின்தூக்கி பழுதாவதும் சீராவதுமாக இருந்த சமயத்தில் தான்… ஒரு பயங்கர அநு பவத்தை உண்டாக்கின.
எனக்கு மட்டுமா? இல்லை அந்த லில்லிக்கும் தான்!
அன்று சனிக்கிழமை இரவு ஒன்பதரை மணி இருக்கும்.
நான் வெளியே சென்று திரும்பிய போது மின்தூக்கி காலியாக நின்றது. நான் ஒருவன் மட்டுமே உள்ளே புகுந்து அதன் பொத்தானை அழுத்தினேன். அது மேல் நோக்கி ஏறியது.
தரையிலிருந்து நான்காம் மாடிக்கு அது சில வினாடி களில் சென்று நின்றது கதவு திறந்ததும் உள்ளே விசுக் கென்று தாவினாள் லில்லி!
எனக்குப் பகீர் என்றது
மின் தூக்கி மீண்டும் மேல் நோக்கிப் போனது. உள்ளே நானும் அவளும் மட்டும்தான், அவளோ ஒரு மாதிரியானவள் என்று பேர் எடுத்தவள்! வழியில் போகிறவர்களை மயக்கி இழுக் கும் மாமரத்துக்கனி என்கிறார்கள்!
அவள் என்னையே பார்த்துக் கொண்டு நின்றாள் என் முகத்திலேயே அவள் விழிகள் மொய்த்திருந்தன. விழுங்கி விடுவது போல் என்கிறார்களே, அப்படியொரு விபரீதபார்வை!
நான் அவள் முகத்தைப் பார்க்கலாமா, வேண்டாமா என்று முதலில் தயங்கினேன். பிறகு பார்ப்பதும் திரும்பிக் கொள்வது மாகத் தடுமாறினேன். முடிவில் அவளையே கூர்ந்து பார்த்துக் கொண்டு நின்றேன்:
இன்னும் ஒரிரு வினாடிகளில் மின் தூக்கி எனது பதின்மூன்றாம் மாடியில் நிற்கப்போகிறது என்பதால் எனக்குப் பயம் கிடையாது. அவளும் பார்க்கிறாள்.நானும் பார்க்கிறேன். பார்ப்பதிலே என்ன தப்பு?
பதின்மூன்றில் மின் தூக்கி நின்றது. கதவு திறக்கப் போகிறது என்று வெளியேறத் தயாரானேன்.
என்ன அதிர்ச்சி!
அது பழுதாகி அப்படியே நின்றுவிட்டது. திறக்கவில்லை மூடியிருக்கும் மின் தூக்கிக்குள்ளே அவளும் நானும்!
விலகியிருந்த பயம் என்னை வேகமாகக் கல்விக் குலுக்கியது தெளிந்திருந்த மனம் கலங்கிக் குழம்பியது. என்ன செய்வாளோ?
எப்பேற்பட்ட பழிபாவத்துக்கு ஆளாகப் போகிறேனோ?
என் மனைவி, மக்கள், உற்றார் உறவினர், நண்பர்கள், பெரியவர்கள் அறிந்தவர், தெரிந்தவர் எல்லாரும் மனக்கண்ணில் தோன்றினர்.
அவ்வளவு பேருக்கும் முன்னால் என்னைத் தலைகுனிய வைக்கப்போகிறாளோ?
முடியாது என்றால் என்ன செய்வாள்? சரி என்றால் என்ன நடக்கும்?
நொடிப்பொழுதில் ஆயிரமாயிரம் எண்ண அலைகள் என் இதயத்தில் பேரிரைச்சலிட்டு மோதிச் சிதறின.
என் உடம்பு முழுதும் குப்பென்று வியர்த்துக்கொட்டியது. உதடுகள் வறண்டு உலர்ந்தன. கண்களில் ஏதோ பூதாகரமான ஒன்று மறைப்பது போல் தெரிந்தது.
அப்போது அவள் சிரித்தாள் கிறங்கலான சிரிப்பு!
பார்த்தாள்! ஒருக்களித்த பார்வை;
பேசினாள்! குழைவான பேச்சு!
என்ன பேசினாள்?
நீ ஒருத்தன் தான் சும்மா நிற்கிறே! இந்தப் புளோக்கிலே உள்ளதெல்லாம் பன்றிகள். மனுசனுங்க இல்லே அதுகளாயிருந்தா இந்நேரம் என் கையைப் பிடிக்கும். கன்னத்தைத் தொடும். என்னென்னமோ செய்யப் பார்க்கும் நான் பைத்தியக்காரின்னு அவனுகளுக்கு நினைப்பு, நினைச்சுக்கட்டுமே. இந்த லிப்டுக்குள்ளே ஒருத்தனைச் செருப்பாலே அடிச்சிருக்கேன்: ஒருத்தன் மூஞ்சியிலே காறித்துப்பியிருக்கேன் ஒருத்தனோடே எல்லாரும் கையைக் கடிச்சுக் குதறியிருக்கேன். அவனுங்க இப்பக் கதையைத் தலைகீழா மாத்தி எதை எதையோ உளறிக் கிட்டுத் திரியுறானுங்க. அவனுங்க மறுபடி என்கிட்டே வசமாய் சிக்காமலா போயிடுவானுங்க? அதுக்காகத்தான்யா லிப்டிலே ஓயாம ஏறி இறங்கிக் கொண்டிருக்கேன்! இன்னிக்கு நீ வந்து சிக்கியிருக்கிறே! நீ மனுசன் மனுசங்களை நான் ஒண்ணும் செய்யமாட்டேன். எனக்குப் பைத்யமா, என்ன?
பேசி முடித்தவள் கலகல வென்று சிரித்தாள்! அதே ஒருக்களித்த பார்வையால் என்னைப் பார்த்தாள்.
நான் திடுக்கிட்டு நின்றேன். திகைத்துப் போனேன், வியப்பாலும் மகிழ்ச்சியாலும் என் விழிகள் விரிந்து மின்னின.
கடவுளோ, இயற்கையோ அவளுக்குக் கொஞ்சம் கூடுதலாக வெகுளித்தனத்தையும், வெள்ளை உள்ளத்தையும் கொடுத்து விட்டதன் விளைவை எண்ணி வேதனைப்பட்டேன். சே என்ன கொடுமை,
அடுத்த வினாடி மின் தூக்கியின் கதவு தானாகவே திறந்து கொண்ட டது.
எதுவுமே நடக்காதது போல் அவள் வெளியேறினாள். கைகளை வீசியபடி நடந்தாள்.
அங்கு நின்ற சிலர் அவளையும் என்னையும் எருவிதமாசுப் பார்த்தார்கள், எதையோ தெரிந்து “கொண்ட பாவனையில், ஏதோ ஒருவித அர்த்தம் தொனிக்கச் சிரித்தார்கள். என்னமோ பேசிக் கொண்டார்கள்.
கிடக்கிறார்கள் அறிவில்லாதவர்கள்.
லில்லி ஒரு மாதிரியானவள் அல்லவே அல்ல. இவர்கள் தாம் ஒரு மாதிரியானவர்கள்.
– சிங்கப்பூர்க் குழந்தைகள் (சிறுகதை தொகுப்பு), முதற் பதிப்பு:1989, சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம், சிங்கப்பூர்.