கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 18, 2021
பார்வையிட்டோர்: 4,755 
 
 

சமையலறையில் ஏதோ வேலையாக இருந்த கல்யாணி மாடிப் படிக்கட்டில் யாரோ உருண்டு விழுவது போல் சத்தம் கேட்டு, வாசலுக்கு ஓடி வந்தாள்.

மாடிப் படிகட்டுகளிலிருந்து கீழே உருண்டு வந்து விழுந்த அவள் கணவர் வாசு, எழுந்து உட்கார்ந்து கொண்டு, உடைந்து போன தன் மூக்கு கண்ணாடியை பொறுக்கிக் கொண்டிருந்தார்.

பக்கத்து வீட்டுப் பரமசிவம் யார் பேச்சையும் கேட்காத கர்வம் பிடித்த மனிதர்! அவர்கள் வீட்டு காம்பௌண்ட் சுவருக்கு இரண்டடி தள்ளி வரிசையாக தென்னை மரங்களை அவர் வீட்டில் நட்டு வைத்திருந்தார்.

வாசு வீட்டு மாடிக்குப் போகும் படிக்கட்டுகள் காம்பௌண்ட் சுவருக்கு மறு பக்கம் இரண்டடி தள்ளி வாசு வீட்டில் தொடங்குகிறது. பரமசிவம் வீட்டு தென்னை மரத்தின் மட்டை ஒன்று எட்டடி உயரத்தில் வாசு வீட்டு மாடி படிக்கட்டில் பாதி வரை நீட்டிக் கொண்டு வந்து விட்டது. வாசு தன் வீட்டு மாடிக்குப் போகும் பொழுதும், வரும் பொழுதும் அது முகத்தில் இடித்துக் கொண்டே இருக்கும்! அதை வாசு கைகளால் தள்ளிக் கொண்டு தான், ஒவ்வொரு முறையும் அவர்கள் வீட்டு மாடிக்குப் போய் வருவார்.

அந்த மட்டை தங்களுக்கு இடையூறாக இருப்பதை பல முறை வாசு பரமசிவத்திடம் சொல்லிப் பார்த்து விட்டார். அவர் அதை கண்டு கொள்ள வில்லை!

பரமசிவம் படித்து அரசில் உயர் பதவியில் இருப்பவர். நிறையப் படித்து பெரிய பதவியில் இருப்பவர்கள் எல்லாம் நல்ல பண்போடு, அக்கம் பக்க குடும்பங்களை அனுசரித்துப் போவார்கள் என்று நாம் எதிர் பார்க்க முடியாது!

பரமசிவம் தான் உயர்ந்த பதவியில் இருப்பதால், மற்றவர்கள் எல்லாம் தன்னிடம் ஒரு பய பக்தியோடு நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு! அவர் மேல் யார் புகார் சொன்னாலும், அவர் சண்டைக்கு வந்து ஏதாவது ஒரு விதத்தில் இடையூறு செய்வார்! அவர் சொல்லும் விஷயங்களை உள்ளூர் காவல் துறை அதிகாரிகள் பய பக்தியோடு செய்வதை அக்கம் பக்கம் குடியிருப்பவர்கள் பார்த்திருக்கிறார்கள்!

அந்தத் தெருவில் குடியிருப்பவர்கள் எல்லோருமே நடுத்தர மக்கள். பரமசிவமும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் தான்! அவர் படிப்பு அவருக்கு உயர் பதவியை வாங்கிக் கொடுத்து விட்டது! பதவி நல்ல பண்புக்குப் பதிலாக ஆணவத்தைக் கொடுத்து விட்டது! அக்கம் ப்பக்கம் குடியிருப்பவர்கள் நமக்கு எதற்கு வம்பு என்று பரமசிவம் விஷயத்தில் எல்லோரும் ஒதுங்கிப் போய் விடுவார்கள்!

அதனால் தன்னைக் கண்டால் தெருவே பயப்படுகிறது என்ற கர்வம் எப்பொழுதும் பரமசிவத்திற்கு உண்டு.

வாசுவின் நிலையைப் பார்த்த கல்யாணி, “ஐயோ!…ஐயோ!… போன மாசம் தானே பத்தாயிரம் செலவு செய்து கண்ணாடி போட்டீங்க!………அதற்குள் பத்தாயிரம் போச்சா!. அந்த அறிவு கெட்ட மனுஷனிடம் எத்தனை தடவை சொல்வது?.. அவரவர் வீட்டு மரம் அவரவர் வீட்டு எல்லைக்குள் தான் இருக்க வேண்டுமென்று… முதலில் அதை வெட்டி எறியுங்க!.” என்று கூச்சல் போட்டாள்.

அதுவரை உள் அறையில் பத்திரிகை படித்துக் கொண்டே, பக்கத்து வீட்டில் நடப்பதை எல்லாம் ஜன்னல் வழியாக கவனித்துக் கொண்டுதானிருந்தார் பரமசிவம்! கல்யாணி வாசலுக்கு வந்து தன்னை திட்டுவதைக் கேட்டவுடன் கோபமாக வெளியே வந்தார்.

“என்னம்மா…வாய் ரொம்ப நீளுது!… ஒட்ட அறுத்து விடுவேன்!.. மரத்தை தொட்டுப் பார்…..கை இருக்காது……… ஜாக்கிரதை!…” என்று சத்தம் போட்டுக் கொண்டே ஆத்திரத்தோடு வாசு வீட்டு கேட்டைத் தள்ளிக் கொண்டு வாசு வீட்டிற்குள்ளயே போய் விட்டார் பரமசிவம்.

அதுவரை தெருவில் இரு புறமும் அக்கம் பக்கத்து வீட்டு வாசல்களில் ஆண்களும், பெண்களும் நின்று வாசு விழுந்து எழுந்து, உடைந்த மூக்குக் கண்ணாடியைப் பொருக்குவதையும், கல்யாணி உள்ளே இருந்து வந்து கூச்சல் போடுவதையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதானிருந்தார்கள்!

பரமசிவம் அத்து மீறி வாசு வீட்டிற்குள் நுழைவதைப் பார்த்தவுடன், ஏதேனும் பெரிய விபரீதம் ஏற்பட்டு விடும் என்று பயந்து சில ஆண்கள் வாசு வீட்டிற்குள் ஓடிப் போய், பரமசிவத்தை சமாதானப் படுத்தினார்கள்!

அதில் ஒரு பெரியவர் சொன்னார்.

“அந்தம்மா உங்க தென்னை மரத்தை வெட்டச் சொல்ல வில்லை!..அவங்க வீட்டு மாடிப் படியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மட்டையைத் தான் வெட்டச் சொல்கிறாங்க… அது நியாயம் தானே?… இப்ப அவர் தடுக்கி விழுந்து பத்தாயிர ரூபா கண்ணாடி உடைஞ்சு போச்சு… நாளைக்கு அந்தம்மாவே மட்டை இடிச்சு மாடிப் படிகளில் உருண்டு விழுந்து காலை ஒடைச்சுக்கலாம்…… உங்க தென்னை மர மட்டையை நீங்களே வெட்டி விடுங்க…… பிளீஸ் ! எதுக்குங்க வீண் பிரச்னை?…..” என்று தயவாக கேட்டுக் கொண்டார்!

அவர் சொல்வதை எல்லோரும் ஒரு மனதாக ஆதரிப்பதைப் பார்த்து, “சரி!… நானே அந்த மட்டையை ஆளை விட்டு வெட்டச் சொல்கிறேன்! … அந்தம்மாவை இனி மேலாவது கொஞ்சம் மரியாதையாப் பேசச் சொல்லுங்க!..” என்று ஊருக்காக ஒரு பெரிய தியாகத்தைச் செய்தவரைப் போல் பரமசிவம் தன் வீட்டிற்குத் திரும்பிப் போனார்.

ரிஷி என்ற பெயர் வைத்து, வாசு ஆசையாக வீட்டில் வளர்க்கும் லேப் ரேடார் நாய் ஒன்று வாசு வீட்டு வாசலில் படுத்திருந்தது!

அந்த ரிஷி ரொம்ப புத்திசாலி! வாசு அது பிறந்த இரண்டாம் நாளில் இருந்து செல்லமாக வளர்த்து வருகிறார். இந்த ஒரு வருடத்தில் அது ஒரு சிங்கம் போல் மிக உயரமாக ஆள் உயரத்திற்கு வளர்ந்து விட்டதால், பார்க்கத்தான் கொஞ்சம் பயமாக இருக்கும்! மற்றபடி அது குழந்தை தான்! அந்த தெருவில் இருக்கும் எல்லோரையும் ரிஷிக்கு அடையாளம் தெரியும்! அந்த தெருவாசிகள் எல்லோரும் ரிஷிக்கு வேண்டியவர்களே!.. யாரை பார்த்தாலும் வாலை ஆட்டும்!

அந்த தெருவில் குடியிருக்கும் அனைவரும் ரிஷியை வழியில் பார்த்தால், அதை தடவிக் கொடுத்து விட்டுத் தான், நகர்வார்கள்!

அன்று வாசுவின் வீட்டிற்கு அந்தத் தெருவில் அக்கம் பக்கம் குடியிருக்கும் நிறையப் பேர் வந்ததில் ரிஷிக்கு ஒரே கொண்டாட்டம்! ஒவ்வொருவர் பக்கத்திலும் போய் நின்று தன் வாலை ஆட்டி ஆட்டி அவர்கள் வருகைக்கு தன் சந்தோஷத்தைக் காட்டிக் கொண்டது!

பொதுவாக பரமசிவத்தை யாருக்கும் பிடிக்காது. வசதி, படிப்பு, அரசியல் செல்வாக்கு, ஆள் பலம் எல்லாம் பரமசிவத்திற்கு உண்டு என்பது அந்த தெருவாசிகள் அனைவருக்கும் தெரியும்! அதனால் நடுத்தர மக்கள் அவரிடம் பிரச்னை வராமல் ஒதுங்கிப் போவதையே விரும்பினார்கள்!

பரமசிவம் வீட்டில் முன்னால் ஒரு முருங்கை மரம் இருந்தது. அதில் கொத்துக் கொத்தாக முருங்கைக் காய், காய்த்து தொங்கிக் கொண்டிருந்தது. வெளியில் மரத்தின் முன்னால் டிராயரோடு நின்று கொண்டு பரமசிவம் ஒரு தடியால் காய்களைத் தட்டி கீழே விழச் செய்து, அவைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் பக்கத்து தெருவில் ஒரே சத்தம்… பலர் கூச்சலிட்டுக் கொண்டே பரமசிவம் குடியிருந்த தெருவுக்குள் ஓடி வந்தார்கள்.

முதலில் வந்தவர் “ சார்!.. சீக்கிரம் வீட்டிற்குள் ஓடிப் போய் விடுங்க!.. பக்கத்து தெருவில் ஒரு வெறி நாய் பார்த்தவர்களை எல்லாம் துரத்தித் துரத்திக் கடித்துக் கொண்டிருக்கிறது.. இதுவரை இருபது பேர்களுக்கு மேல் கடித்து விட்டதாம்!…ரேபிஸ் என்ற நோய் வந்தால் உயிருக்கே ஆபத்தாம்!………. பலர் அதை அடித்து கொல்ல தடியை வைத்துக் கொண்டு அந்த நாயை துரத்திக் கொண்டிருக்கிறார்கள்! …”

“அப்படியா?… நாய்க்கா இந்த ஓட்டம்?.. எங்கிட்டயும் தடி இருக்கு… ஓரே போடு!.. அதை ஒழித்து விடுகிறேன்!…” என்று சிரித்துக் கொண்டு முருங்கைக் காய் பறிப்பதில் பரமசிவம் கவனம் செலுத்தினார்!

சில நிமிடம் கூட இருக்காது. மேலே இருந்த ஒரு முருங்கைக் காயை அடித்து விட்டு, காயை அடிக்க கீழே வந்த தடியை மேலே தூக்கப் போகும் பொழுது தான் கவனித்தார்.

அவர் காலுக்குப் பக்கத்தில் அந்த வெறி நாய் வாயை பிளந்து நின்று கொண்டு, அவரையே பார்த்துக் கொண்டிருந்தது! அதன் வாயில் நுரை தள்ளிக் கொண்டிருந்தது. கோரைப்பற்களைப் பார்க்கவே பயமாக இருந்தது.

அந்த வெறி நாயின் கண்கள் வேறு கோவைப்பழம் போல் சிவந்து கிடந்தன. அது பரமசிவத்தையும், அவர் கைகளில் இருந்த தடியையுமே விடாமல் பார்த்துக் கொண்டிருந்தது! தடியை ஓங்கினால் பாய்ந்து விடும்! பரமசிவத்திற்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது!

அந்த நேரம் பார்த்து, பக்கத்து வீட்டு ரிஷி ஆக்ரோஷமாகக் குரைத்துக் கொண்டு, ஓடி வந்து அந்த வெறி நாய் மேல் சிங்கம் போல் ஓரே பாய்ச்சலாகப் பாய்ந்தது! அந்த வெறி நாய் வாலை சுருட்டிக் கொண்டு நாலுகால் பாய்ச்சலில் அந்த தெருவில் வேறு பக்கமாக ஓடி விட்டது!

ரிஷி பரமசிவத்தைப் பார்த்து வாலை ஆட்டிக் கொண்டே, அமைதியாக பரமசிவத்தின் பக்கத்தில் போய் நின்று கொண்டு வாலை ஆட்டியது! பரமசிவம் அவர் வீட்டிற்குள் போனவுடன் சிறிது நேரம் சுற்றியிலும் பார்த்து விட்டு, வாசு வீட்டில் தனக்கு ஒதுக்கிய இடத்தில் போய் படுத்துக் கொண்டது!

அக்கம் பக்கம் வசிப்பவர்கள் எல்லாம் நமக்கு வேண்டியவர்களே! அவர்களை எல்லாம் அனுசரித்து, ஒருவருக்கு ஒருவர் உதவியாக வாழக் கற்றுக் கொண்டால் நம் தினசரி வாழ்க்கை ஆனந்தமாகவும், நிம்மதியாகப் போகும் என்று அந்த நாய் கூட தெரிந்து வைத்திருக்கிறது!

படித்து பட்டம் பெற்று, உயர் பதவிக்கு வந்தும் கூட, மனிதர்களால் இந்த சாதாரண உண்மையை இன்னும் புரிந்து கொள்ள முடிய வில்லையே!

– மே 2021

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *