ராஜாராமனின் ராஜினாமா, கம்பெனியில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திடுக்கிடும் ராஜினாமாவால் சற்று நிலைகுலைந்த மேனேஜிங் டைரக்டர், மேலாளர் சுனில் மேனனிடம், ராஜாராமனைப்போல் வேலை செய்வதற்கு இன்னொருவன் புதிதாக பிறந்து வரவேண்டும். ஆனாலும் அவனைப்போலவே இன்னொருவனை கண்டுபிடித்து அவனை வேலையில் உடனே அமர்த்து என்று ஆணையிட்டார்.

ஆழ்ந்த யோசனைக்கு பிறகு மேலாளர் சுனில் மேனன் ஒரு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் மூலம் பத்திரிக்கையில் ஒரு விளம்பரம் கொடுத்தார். அந்த கன்சல்டன்சி நிறுவனத்திற்கு ஏராளமான விண்ணப்பங்கள் வேலை தேடி வந்தன. சுனில் மேனன் அதில் ஒன்றை மட்டும் தேர்ந்து எடுத்து, என்ன விலை கொடுத்தாவது அந்த விண்ணப்பதாரரை தேர்வு செய்ய கன்சல்டன்சியை கேட்டுக்கொண்டார்.
ராஜாராமனுக்கு மாற்றாக ஒரு நபரை தேர்ந்தெடுத்தவுடன், எம். டி. யை சந்தித்து, ”நீஙகள் சொன்னது போலவே ராஜாராமனுக்கு இணையாக சமமாக ஒருவரை தேர்ந்தெடுத்து அவரும் வேலையில் சேர சம்மதித்து விட்டார்” என்றார் சுனில் மேனன்.
அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரில் கையெழுத்து போட்ட எம். டி திடுக்கிட்டு சுனில் மேனனை பார்த்தார்.
அந்த அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர், சம்பள குறைவால் விரக்தி அடைந்து புதிதாக வேறு வேலை தேடி, பல கன்சல்டன்சி கம்பெனிகளுக்கும் அப்ளை செய்த அதே ராஜாராமனுக்குத் தான்.