கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 22, 2024
பார்வையிட்டோர்: 550 
 
 

கல்யாண மண்டபத்தை அடைந்த இளங்கோவன் அந்தக் காட்சியைக் கண்டதும் ஆடிப்போனார். மேனேஜர் அவசரமாக தன்னை வரச் சொன்னதின் காரணம் புரிந்தது. இடப்பக்கம் அலங்காரத்திற்காக வைத்திருந்த வாழைமரம் இடிவிழுந்து கருகிப்போய் வலப்பக்கம் நின்றிருந்த அழகான அந்தச் சிலையின் காலடியில் விழுந்திருந்தது. கனமழையும் இடி யும் மின்னலும் இப்படியொரு அசம்பா விதத்தை உண்டுபண்ணும் என்று கனவிலும் நினைக்கவில்லை இளங்கோவன். ஆனால் வலப்பக்கம் இருந்த வாழைமரமும் சிலையும் எந்தவித சேதாரமும் இல்லாமல் காணப்பட்டது. நல்லவேளையாக கட்டிடம் சேதாரமில்லாமல் தப்பித்தது.

இளங்கோவன் புதுசாக ஒரு கல்யாண மண்டபம் கட்டினார். ஏ.சி . யுடன் எல்லா செளகர்யங்களும் கொண்டது. இந்த மாதிரி கல்யாண மண்டபம் அந்தப் பகுதிக்குத் தேவையாய் இருந்தது. கட்டி முடி க்கப்பட்டு ஏற்கனவே தயாராக இருந்தது. அந்த மண்டபம் திறக்கப்பட இன்னும் இரண்டேநாள்தான் இருந்தது. அதற்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் செய்தாகி விட்டது. ஆனால் அதற்குள் இப்படி யொரு அசம்பாவிதம் நடக்கும் என்று இளங்கோவன் எதிர்பார்க்கவில்லை

மனசு பட படவென அடித்துக்கொ ள்ள மொபைலில் மனைவியை தொடர்பு கொண்டார் இளங்கோவன். “காயத்ரி நடக்கக் கூடாடதது நடந்து போச்சு.” பிசிரும் குரலில் சொன்னார்.

“என்ன ஆச்சு?” காயத்ரி கவலை தோய்ந்த குரலில் கேட்டாள்.

“வந்து..” தயங்கியபடி “அலங்காரத்துக்காக வச்சிருந்த ஒரு வாழை மரம் இடி விழுந்து கருகிப் போச்சு காயத்ரி.” என்றவர் அழும் நிலைக்கே வந்து விட்டார்.

மறுமுனையில் திடுக்கிட்ட காயத்ரி, “இது ஒரு கெட்ட சகுனம்ங்க. இதுக்கு நீங்க நேத்து வாங்கி வந்த அந்த சிலைதான் காரணம். அதோட ராசி சரியில்ல. மொதல்ல சிலையை அப்புறப்படுத்துங்க. இல்லேன்னா மேலும் மேலும் அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடந்துக்கிட்டே இருக்கும்.” எச்சரிக்கை விடுத்தாள்.

அதுதான் சரி என நினைத்தார் இளங்கோவன் “காயு, நீ சொல்றது கரெக்ட். அப்படியே செய்திடறேன்” என்று மொபைலை அணைத்தவர், “மேனேஜர்..இதை அப்புறப்படுத்துங்க. வேற ஒரு வாழை மரம் வாங்கி கட்டிடுங்க. அப்புறம்… இந்த சிலை இனி இங்கிருக்கக்கூடாது…”

“சார்… ஆசைப்பட்டு வாங்கினீங்க. இப்போ அப்புறப்படுத்தச் சொல்றீங்க. எங்க சார் கொண்டுபோறது?”

“தூக்கி வெளியே கெடாசுங்க. இந்தச் சிலை வந்தப்புறம்தான் இப்படி நடந்திருக்கு!” என வார்த்தைகளை உஷ்ணமாய்க் கூறிவிட்டு காரில் ஏறிப் புறப்பட்டார் இளங்கோ.

‘அடப்பாவிங்களா! நேத்து சாயந்தரம் உன் பெண்டாட்டி மகன் எல்லாரும் சேர்ந்து என்னைப் பாராட்டுனீங்க என்னோட செல்பி வேற எடத்துக்கிட்டீங்க! இப்ப இடி விழுந்து வாழைமரம் கருகிப் போனதுக்கு நான்தான் காரணம்னு எம்மேல பழி போடறீங்க. உங்களுக்கு நாக்கு எப்படி வேணாலும் புரளும்போல இருக்கு!’ சிலை மனத்தில் பொருமியது.

அடுத்த சில கணங்களில் சிதைந்த வாழை மரம், சிலையோடு பிளாட்ஃபார்முக்கு இடம் பெயர்ந்தது. துக்கம் துக்கமாய் இருந்தது சிலைக்கு. தான் பேசாமல் தன்னைச் செதுக்கிய ஸ்தபதிக்கிட்டேயே இருந்திருக்கலாம். இப்படி வந்து அவமானப்பட்டிருக்க வேணாம் என வேதனைப் பட்டது.

அடுத்த சில நாட்களில் சினிமா தயாரிப்பாளர் கோதண்டராமனின் ஸ்டூடியோவுக்கு புலம் பெயர்ந்தது சிலை. அவமானம் தொலைந்து நிம்மதி வந்து ஆட் கொண்டது சிலையை.

ஆனால் அங்கும் அதன் இருப்பிடம் நிரந்தரம் ஆகவில்லை. ஒரு திரைப்படத்திற்காக ஸ்டூடியோவின் நான்காவது தளத்தில் ஐம்பது லட்ச ரூபாய்க்கு போடப்பட்டிருந்த செட் வீணாகிப்போனது. தலையில் கை வைத்துக்கொண்டார் கோதண்டராமன். சொந்தத்தில் படம் எடுக்க பூஜை போட்டும் ஷூட்டிங் தொடரமுடியாத நிலைமை! அடிமேல் அடிவிழ துவண்டுபோன கோதண்டராமன் கடைசியில் சிலை வந்த பிறகுதான் இப்படி நொடித்துப் போகும்படி ஆயிற்று. சிலையோட ராசி சரியில்லை என்று நினைத்தார். உடனே சிலை மறுபடியும் பிளாட்ஃபாமுக்கு வாசம் புகுந்தது. இந்தத் தடவை சிலையை ஓர் ஓரமாக படுக்க வைத்துவிட்டார்கள்.

‘அடேய்…என்னை ஏண்டா இப்படி படுக்க வைக்கறீங்க? பேசாமல் குழி தோண்டி புதைச்சிடுங்க. அப்போதான் யாரும் என்னைக் கொண்டு போகமாட்டாங்க. இரண்டாவது தடவை பட்ட அவமானம் சிலையால் தாள முடியவில்லை.

மூன்றாவதாக சரவணன் வந்தான். சரவணன் ஜவுளிக் கடைக்கு சொந்தக்காரன். அருமையாக தோற்றறளிக்கும் ஒரு இளம்பெண்ணின் சிலை. உதடுகளில் புன்முறுவலுடன், விரிந்த விழிகள் கதை சொல்ல, இரு கரம் குவித்து வணங்குவது போல் தத்ரூபமாகச் செதுக்கப்பட்டிருந்த சிலையைப் பார்த்து மயங்கினான். இவ்வளவு அழகான சிலையை யார் கொண்டுவந்து இங்கு போட்டார்கள்?. மனத்தில் வியந்தவன் அக்கம் பக்கம் விசாரித்தான் சரவணன். ஒண்ணும் தெரியாது என்று கூறிவிட்டனர். தன் கடைக்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டான். உடனே லாரியைக் கொண்டு வந்தவன் மெல்ல சிலையை லாரியில் பக்குவமாக ஏற்றினான்.

‘அப்பா..நீ மூணாவது ஆள்! நீயாவது என்னை நிரந்தரமாக வச்சிப்பயா?’ பரிதாபமாக மனத்தில் கேட்டுக் கொண்டது சிலை.

அடுத்த சில நிமிடங்களில் தன் கடைக்கு முன்னால் வாசலில் சிலையைக் கொண்டு போய் வைத்தான் சரவணன்.

சிலை வந்த ராசி கடந்த சில நாட்களாக நொடித்துப் போயிருந்த சரவணனின் வியாபாரம் நன்கு சூடு பிடிக்கத் தொடங்கி சக்கை போடு போட்டது. சிலைக்குப் பெருமை பிடிபடவில்லை. தான் சரியான இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டோம் என மகிழ்ந்தது. இப்பொழுது கொஞ்ச நாளாக சிலை உதட்டில் புன்சிரிப்பு முன்பைக் காட்டிலும் சற்று அதிகமாக விரிந்து தென்படுவதைப் போல் காணப்பட்டது!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *