ராசாக்கிளி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 21, 2022
பார்வையிட்டோர்: 3,019 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு நாட்ல – ஒரு ராசா இருந்தாரு. அந்த ராசாவுக்கு ஒரு மந்திரி இருந்தாரு. காடாரு மாசம் – வீடாறு மாசம் ஆண்டுகிட்டு இருக்காரு. காட்ல ஆறுமாசம் வாழணும். நாட்ல ஆறு மாசம் வாழணுங்றது முனிவரோட சாபம்.

ராசா காட்ல இருக்கயில, மந்திரி நாட்ல எல்லாத்தயும் பாத்துக்கிருவாரு. ராசா காட்ல இருக்கபோது, ராசாவுக்கு தொணக்கி, ஒரு ஆசாரிய போகச் சொல்வாரு. எப்பயுமே; அந்த ஆசாரிதா ராசாகூடப் போவா.

அப்ப: ராசாவுக்கு ஒரு கூடு, ஆசாரிக்கு ஒரு கூடு. ராசா கூடக் கிளியும் போகுது. போயி -, காட்ல இருக்காங்க. இருக்கயில், அந்த வனத்ல, ஒரு மரத்ல ஆங்கிளியும் – பொங்கிளியும் ஆனந்தமா கொஞ்சிக் கொலாவிக்கிட்டிருக்கு. இத: ராசா பாத்தாரு, மனசுல சந்தோசம் வந்து, தம் பொண்டாட்டிய நெனச்சுக்கிட்டு, கூட்ட விட்டு வெளிய போனாரு.

போகவும் -, இந்த ஆசாரிப்பய, ராசா கூட்டுக்குள்ள மொளஞ்சுகிட்டு, நேரா ராணிகிட்ட வாரா. வரவும் – ஆறுமாசம் முடியுங்குள்ள ராசா வந்திட்டாருண்டு, ராணி அரமணக்குள்ள நொளய விட மாட்டேங்குறா.

அப்ப: ராசா! அங்கிட்டெல்லாம் அலஞ்சுட்டு, கூட்டுக்குத் திரும்பி வந்து பாக்கயில், கூடு இல்ல. அதுலதா, ஆசாரி நொளஞ்சு போயிட்டானே. ராசா காட்டுக்குள்ள அலயுறாரு. கிளி பறந்து போயி, ஆயிரங் கிளிகளோட சேந்துகிருச்சு.

அந்தக் காட்ல, ஒரு வேட, இந்தக் கிளிகளுக்கு கண்ணி – வச்சிருக்கா. வைக்கயில, ஒருநா, இந்த ஆயிரங்கிளிகளும் கண்ணில் பட்டுக்கிருச்சு. பட்டுக்கிட்டு, வலையில இருந்து தப்பிக்கறதுக்கு வழி தேடுதுக. அப்ப, இந்த ராசாக்கிளி, நம்ம இப்ப – வலையில பட்டுக்கிட்டோம். இதுல இருந்து தப்பிக்கணும்ண்டா, நம்ம ஒண்ணு செய்யணும்ண்டு ராசாக்கிளி சொல்லுச்சு. சொல்லவும் -, என்னா செய்யணும்ண்டு கிளிக கேட்டுச்சுக.

அப்ப: வலையில நம்மெல்லாம் செத்தது மாதிரி கெடக்கணும். வேட் வந்து பாத்திட்டு, கிளிக செத்துப் போச்சுண்டு நெனச்சு, நம்மள ஒண்ணொண்ணா எடுத்துக் கீழ போடுவா. போடயில, மொதல்ல விழுகுற கிளி, எண்ண ணும், சரியா, ஆயிரஞ்சத்தம் கேக்கவும், பறந்திறணும்ண்டு சொல்லுச்சு சொல்லவும், கிளிக – சரிண்ட்டு இருக்குக.

விடியவும் வேட் வந்தர். கிளிக வலையில் மாட்டிக் கிருச்ண்ட சந்தோசத்துல வரா. மரத்ல ஏறிப்பாக்கயில, கிளிக செத்துக்கெடக்குக. செத்துப் போச்சேண்ட கவலையில, ஒண்ணொண்ணா எடுத்துப் போட்டா. போடப் – போட மொதல்ல விழுந்த கிளி எண்ணிக்கிட்டிருக்கு. தொள்ளாயிரத்தித் தொன்னுத்தொம்பது கிளிக விழுந்திருச்சு. இன்னும் ஒரு கிளி விழுந்தா, பறந்திரலாம்ண்டு இருக்கயில, அவ இடுப்ல இருந்த கத்தி, நழுவி டம்ண்டு விழுந்திருச்சு.

விழுகவும், ஆயிரங்கிளியும் விழுந்திருச்சுண்ட்டு , கீழ கெடந்த கிளிக விருட்ண்டு பறந்திருச்சுக. அப்ப: ராசாக்கிளி, வேட கையில இருக்கு. இந்தக் கிளிக நம்மள ஏமாத்திருச்சேண்ட கோவத்ல, ராசாக்கிளியப் புடிச்சு கழுத்த திருகினா, திருகவும்,

அட வேடா! என்னயக் கொல்லாத

செட்டியாரு கடயில குடுத்திட்டு – நீ

வேணும்ண்றத வாங்கிக்க – ண்டு

ராசாக்கிளி சொல்லுச்சு. சொல்லவும், கிளியப் புடிச்சுக்கிட்டு, செட்டியாரு கடைக்குப் போறா. போயி, செட்டியாருகிட்ட, செட்டியாரண்ணே ! என்னய வாங்கிக்கிட்டு; இந்த வேடனுக்கு வேணும்ண்றதைக் குடுண்ணேண்டு கிளி சொல்லுச்சு. சொல்லவும், செட்டியாரு, கிளிய வாங்கிக்கிட்டு வேடனுக்கு வேணும்ண்றதைக் குடுத்திட்டாரு. கிளிய, கடைக்கு முன்னால, ஒரு கூட்ல வச்சுத் தொங்க விட்டுட்டாரு செட்டியாரு.

அப்ப கிளி, அங்கிட்டு வீதில போறவங்களப் பாத்து,

அண்ணே ! இங்க வாங்க

அக்கா! இங்க வாங்க

நாங்க உண்டனா சாமா தரோம்ண்டு

கிளி சொல்லுது. சொல்லவும் -, கிளி பேசுதுடாண்ட்டு, கடைக்குக் கூட்டம் நெறயா வருது. நெறயா ஏவாரம் ஓடுது.

இருக்கயில, அந்த ஊர்ல பொன்னிங்ற தாசி ஒருத்தி இருந்தா. அவகிட்டப் போறவங்க, ஆயிரம் பொன் குடுக்கணும். அந்தக் கடக்காரச் செட்டியும் பொன்னிங்ற தாசி வீட்டுக்குப் போவாரு. வருவாரு. ஒருநா -, அந்த ஊரு எளந்தாரிக, ஆத்ல மாடு குளுப்பாட்டிக்கிட்டிருக்காங்க. அதுல ஒருத்த, பொன்னிங்ற தாசி வீட்டுக்குப் போனது போல கனாக்கண்டேண்டு சொன்னா. இதக் கேட்டுக்கிட்டிருந்த தாசியோட தோழிக, இதக் கேட்டுட்டுப் போயி, பொன்னிங்ற தாசிகிட்டச் சொல்லிப்பிட்டாங்க.

சொல்லவும் -, அவங்ககிட்ட, ஆயிரம் பொன் வாங்கணும்ண்ட்டு , தாசி ஊரக் கூட்டிட்டா. பைசலும் தீரமாட்டேங்குது. யாராலயும் தீர்க்கமுடியல. எப்டித் தீரும். தீரல.

அப்ப: பைசலுக்கு ராசாக்கிளி வந்திச்சு. வந்து, ஆயிரம் பொன்ன, கம்பத்ல கட்டித் தொங்க விடச் சொல்லுச்சு. கட்டித் தொங்கவிட்டாங்க. அதுக்குக் கீழ கண்ணாடிய வச்சு, அந்தக் கண்ணாடில படுறமாதிரி வச்சாங்க. வச்சிட்டு. பொன்னிங்ற தாசியக் கூப்ட்டு, ஆயிரம் பொன்ன எடுத்துகிறச் சொல்லுச்சு கிளி. சொல்லவும், அதெப்டி எடுக்க முடியுங்கிறா தாசி. அப்ப, கிளி – ஒன்னய கனவுலதான பாத்தா. நேராப் பாக்கலயில. கனவுல பாத்ததுக்கு, இப்டித்தா தர முடியும்ண்டு கிளி சொல்லி ருச்சு. பைசலும் முடிஞ்சிருச்சு. கிளிமேல, தாசி கோவமா இருக்கா. அப்ப, அவ!

ஒம்மண்டயக் கொறிக்கலண்டா நானு, பொன்னிங்ற தாசி இல்லண்டு சம்பிராயம் போடுறா. அதுக்குக் கிளி, கந்தத் துணியக் கட்டி, ஒன்னயக் கழுத மேல ஊர்வலம் வர வக்யலண்டா நானு விக்கிரமராசா கிளி இல்லண்டு கிளி சொல்லுது. இப்டி இருக்கயில், இந்தப் பொன்னிங்ற தாசி, தெனமும் குளுச்சு முழுகிட்டு, காளி கோயிலுக்குப் போயி -, “தாயே! நா உசுரோட கைலாசம் போகணும்ண்டு” சாமி கும்புடுவாளாம்.

இந்தச் சமயத்ல, கடக்காரச் செட்டி மக, பொன்னிங்ற தாசி வீட்டுக்குப் போறா, போகவும், செட்டி மகங்கிட்ட நல்லதக் கில்லதப் பேசி “நர் கிளிக் கொளம்பு சாப்டணும், ஒங்க கடயில இருக்ற கிளியக் குடுங்கண்டு கேட்டா. செட்டி மகனும் கிளியக் கொண்டு வந்து தாசிக்கிட்டக் குடுத்திட்டா. ஒண்ணும் பேசாம, கிளியக் குடுத்திட்டா. குடுக்கலண்டா முடியுமா! இவனுக்குக் காரியம் முடியணுமே! குடுத்திட்டா.

குடுக்கவும், கிளிய அடிச்சு, கொளம்பு காச்சச் சொல்லிட்டு, தாசி, கோயிலுக்குப் போயிட்டா. எல்லாக் காரியத்தயும் செஞ்சுட்டு, வேலக்காரி, கிளியப் புடிக்கப் போனா. போயிப் பாக்கயில, கிளி செத்தது போல கெடக்கு. கிளி செத்துப் போச்சுண்டு, வெளிய எடுத்துப் போட்டா. வெளிய எடுத்துப் போடவும் கிளி பறந்திருச்சு.

தாசி, நம்மள வைவாண்ட்டு, அவக்குத் – தொவக்குண்டு ஒரு கோழியப் புடிச்சு, அடிச்சுப் பறிச்சு, அறுத்துக் – கிருத்து கொளம்பு வச்சு எரக்கி வச்சிட்டா.

அப்ப: கோயில்ல இருந்து தாசி வந்தா. வரவும் போட்டு வச்சா. போட்டு வக்யவும், திண்டுகிட்டு, கிளியே! ஒம் மண்டய கொறிச்சுட்டேன்ல்ல. இப்ப; நிய்யி செயிச்சயா? நாஞ் செயிச்சனா? – ண்டு பேசுறா. இதக் கிளி கேட்டுக்கிட்டிருக்கு. அதுக்குப் பெறகு, அவ எங்கெங்க போறாளோ, அங்கெல்லாம் கிளியும் போகுது, அண்ணக்கி விடியவும், தாசி, கோயிலுக்குப் போறா. போயி – தாயே! நா உசுரோட கைலாசம் போகணும்டு சொல்லிக் கும்புடுறா. இதக் கிளி கேட்டுக்கிட்டு, மரத்த விட்டு எரங்கி, செலக்கிப் பின்னால வந்து ஒக்காந்துகிருச்சு. ஒக்காந்துகிட்டு, பொன்னிங்ற தாசி! நிய்யி உசுரோடதான கைலாசம் போகணும். இப்ப உடுத்தி இருக்ற துணிகளக் கழத்திப் போட்டுட்டு,

கந்தத் துணி யுடுத்தி

கரும்புள்ளி – செம்புள்ளி குத்தி

கழுத மேலேறி வந்தா, நிய்யி –

உசுரோட கைலாசம் போகலாம்ண்டு சொல்லுது. சொல்லவும் -, காளிதா பேசுதுண்ட்டு , வீட்டுக்குப் போயி -, சொத்துகள வித்து, தான தர்மஞ் செஞ்சுட்டு, கரும்புள்ளி – செம்புள்ளி குத்தி, கழுத மேல ஏறி வாரா. வரயில, கிளி வீதியோரத்ல இருந்த மரத்து மேல ஒக்காந்துகிட்டு, ஏ…. பொன்னிங்ற தாசி! சபதத்ல, நிய்யி செயிச்சியா? நாஞ் செயிச்சனா? ஓசுச்சுப் பாருண்டு கேட்டுச்சு. கிளியப் பாத்தா.

கிளியப் பாக்கவும் – இவளுக்குப் பாதி உசுரு போச்சு. கிளிகிட்டத் தோத்துப் போனோமேண்ட்டு, அவமானம் பொறுக்க மாட்டாம, அதே எடத்ல நாண்டுகிட்டுச் செத்துப் போயிட்டா. அதப் பாக்க விக்கிரமராசா வந்திருக்காரு.

அந்தக் கூட்டத்ல, விக்கிரம ராசாவ, கிளி பாத்திருச்சு. அவந்தோள்ல போயி ஒக்காந்திச்சு. ஒக்காரவும் ராசாவுக்கு மகிழ்ச்சி பொறுக்கல. அப்ப, ராசாவும் – கிளியும் அரமணக்கிப் போறாங்க.

போற வழில, ஆசாரி செம்மறிக் கெடாய்கள முட்டவிட்டுப் பாத்துக்கிட்டிருக்கா. அப்ப: ராசா வளத்த கெடா, ஆசாரி வளத்த கெடாக்கூடமுட்டுது. முட்டயில, ஆசாரி கெடா தோத்துப் போச்சு. கெடா தோத்துப் போகவும், ஆசாரி, கூட்டவிட்டு வெளிய வந்தா. வெளிய வரவும் -, அந்தக் கூட்டுக்குள்ள ராசா போயி மொளஞ்சுகிட்டாரு. பெறகு, தொரோகஞ் செஞ்ச ஆசாரிய, சுண்ணாம்புக் காளவாசல்ல வச்சு நீத்துப்பிட்டு, அரமணயில இருந்து நல்லாப் பொளச்சாங்களாம்.

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், பண்பு விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *