ரவநேரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 20, 2024
பார்வையிட்டோர்: 224 
 
 

அழைப்பு மணி அடிக்கிற சத்தம் கேட்டது. படுத்துக்கொண்டிருந்த காமாட்சி எழுந்து வந்து கதவைத் திறந்தாள். வாசலில் செல்லமுத்து நின்றுகொண்டிருந்தார். “ஏன் இவ்வளவு லேட்டு?” என்று கேட்டாள்.

“கடைக்கிப் போயிட்டு வரன்” என்று சொல்லிவிட்டு கையிலிருந்த இரண்டு பைகளை காமாட்சியிடம் கொடுத்தார். “படுத்திருந்தியா?” என்று கேட்டுக்கொண்டே வீட்டிற்குள் போனார். கதவை சாத்திவிட்டு பைகளைக்கொண்டுபோய் சமையலறையை ஒட்டிவைத்தாள். புடவையை சரிசெய்தாள். தலைமுடியை ஒதுக்கிவிட்டாள். கழிப்பறைக்குப் போன செல்லமுத்துவிடம் “டீ போடட்டுமா?” என்று கேட்டாள். “போடன்” என்று சொல்லிவிட்டு கழிப்பறை கதவை சாத்திக்கொண்டார்.

சமையலறைக்கு வந்து பால்குண்டானை எடுத்து அடுப்பில் வைத்தாள். பிரிட்ஜிலிருந்து பாலை எடுத்து ஊற்றினாள். அடுப்பைப் பற்ற வைத்தாள். டீ தூளை எடுத்து கொஞ்சம்போல பாலில் கொட்டினாள். கழிப்பறையிலிருந்து வெளியே வந்து ஹாலுக்குப்போன செல்லமுத்துவிடம் “ஏதாச்சும் சாப்புடுறிங்களா?” என்று கேட்டாள். “டீ மட்டும் போதும்” என்று சொல்லிவிட்டு முகம், கை, கால் என்று துண்டால் துடைத்துக்கொண்டே சோபாவில் உட்கார்ந்தார். தொலைக்காட்சிக்கான பட்டனை போட்டார். ரிமோட் கண்ட்ரோலை கையில் எடுத்து, ஒவ்வொரு சேனலாக மாற்ற ஆரம்பித்தார். காமாட்சி கொண்டு வந்து கொடுத்த டீயை வாங்கி ஒரு மிடறு குடித்துவிட்டு “பாப்பாகிட்ட பேசினியா?” என்று கேட்டார்.

“பேசிட்டன்.”

“தம்பிகிட்ட?”

“ரெண்டுமுற கூப்பிட்டன். எடுக்கல” என்று சொல்லிவிட்டு செல்லமுத்து உட்கார்ந்துகொண்டிருந்த சோபாவுக்குப் பக்கத்தில் தரையில் உட்கார்ந்துகொண்டாள்.

“நீ டீ குடிக்கலியா?”

“அஞ்சுமணிக்கே வந்துடுவிங்கன்னு டீ போட்டன். வரலன்னதும் நான் குடிச்சிட்டன்” என்று காமாட்சி சொன்னதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் தொலைக்காட்சியைப் பார்த்தவாறே டீயைக் குடித்துக்கொண்டிருந்தார். திடீரென்று “அடப் பாவமே” என்று சொன்னதைக் கேட்டு “என்னாச்சி?” என்று கேட்டாள்.

“புருசன் பெண்டாட்டி சண்டயில ரெண்டு குழந்தைக்கி விஷத்தக் கொடுத்திட்டு தாயும் செத்திடுச்சி. செத்துப்போன பொண்ணுக்கு வயசு முப்பதுதான்” என்று சொன்னதும் காமாட்சி தொலைக்காட்சியைப் பார்த்தாள். அதற்குள் செல்லமுத்து சொன்ன தகவல்போய், அடுத்த செய்தியை படித்துக்கொண்டிருந்தார்கள்.

விஷம் குடித்து இறந்துபோன பெண்ணிற்காகவும், இறந்துபோன குழந்தைகளுக்காகவும் செல்லமுத்து ரொம்பவும் வருத்தப்பட்டுப் பேசிக்கொண்டிருந்தார்.

“பேண்ட் சட்டய மாத்துங்களன்.”

“மாத்துவம்” என்று சொல்லிவிட்டு காமாட்சியைப் பார்த்தார்.

“டல்லா இருக்கிற மாதிரி தெரியுது.”

“குளிக்கல. துணி மாத்தல.”

“பள்ளிக்கூடத்துக்குப் போற நாளிலதான் அவசரஅவசரமா குளிப்ப. இப்ப மெடிக்கல் லீவுலதான இருக்க? சௌரியமா குளிச்சா என்ன?” என்று கேட்டுவிட்டு லேசாக சிரித்தார்.

“வீட்டுல வேற யாருமே இல்லாதது போரடிக்குது.”

“வீட்டுல இருந்தா பள்ளிக்கூடத்துக்குப் போகணுமின்னு தோணும். பள்ளிக்கூடத்தில இருந்தா லீவ் போட்டுட்டு வீட்டுல இருந்தா தேவலாம்னு தோணும்” என்று சொன்ன செல்லமுத்து பெரிய நகைச்சுவையை சொல்லிவிட்டதுபோல் தானாகவே சிரித்தார்.

“புள்ளைங்க இல்லாம வீட்டுல இருக்கிறது என்னமோபோல இருக்கு” என்று சொன்னாள்.

“ஆமாம்” என்று சொன்னார். சிறிது நேரம் எதையோ யோசித்துக்கொண்டிருப்பதுபோல் இருந்தார். “இந்த காலத்தில என்னா படிப்பு படிச்சாலும் வேல கெடைக்கிறது அபூர்வமாயிட்டிருக்கு” என்று வருத்தமான குரலில் சொன்னார். பிறகு தொலைக்காட்சியைப் பார்த்தார். காதலிக்க மறுத்த பெண்ணின் மீது ஆசிட் ஊற்றிய பையனை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர் என்ற செய்தியைக் கேட்டதும், செல்லமுத்துவின் முகம் மாறிவிட்டது. வெறுப்படைந்த மாதிரி “இந்த மாதிரி பசங்களயெல்லாம் நடுரோட்டுல வச்சி சுடணும்” என்று சொன்னார். ஆசிட் ஊற்றப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பெண்ணிற்காக வருத்தப்பட்டு பேச ஆரம்பித்தார். பேச்சை மாற்றும்விதமாக “வந்ததிலிருந்து துணிய மாத்தாம இருக்கிங்க” என்று சொன்னாள். காமாட்சி சொன்னதை காதில் வாங்கிக்கொள்ளாமல் ஆசிட் ஊற்றப்பட்ட பெண் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். இப்போதைக்கு தொலைக்காட்சியைவிட்டு எழுந்திருக்க மாட்டார் என்று தெரிந்ததும், காமாட்சி எழுந்து வீட்டிற்கு பின்புறம் காயப்போட்டிருந்த துணிகளை எடுத்து மடித்துக் கொண்டு வந்து வைத்தாள். காமாட்சி வீட்டிற்குள் வருவதற்காகவே காத்துகொண்டிருந்த மாதிரி “ஐ.டி. கம்பனியில எல்லாம் பாதிக்கு பாதி ஆள் குறைப்பு செய்யப் போறாங்களாம்” என்று செல்லமுத்து மிகமுக்கியமான செய்தி ஒன்றை சொல்வதுபோல் சொன்னார். அதற்கு “அப்படியா?” என்று மட்டுமே கேட்டாள். அப்போது பிளாஷ் நியூசில் ஆறாம் வகுப்பு மாணவியை சீரழித்த ஆசிரியர் கைது என்று செய்தி ஒளிப்பரப்பானது. 

“என்ன மனுசனுங்க?” என்று பொறுமித்தள்ளினார் செல்லமுத்து.

“அவனெல்லாம் ஒரு வாத்தியாரா?” என்று திட்டிவிட்டு, வீட்டைக் கூட்டினாள். வாசலைக் கூட்டினாள். கோலம் போட்டாள். அடுப்படியை சுத்தம்செய்தாள். அதற்குள் காமாட்சிக்கு நன்றாக வியர்த்துப் போய்விட்டது. காலையிலிருந்து குளிக்கவில்லை. வியர்த்துப் போய்விட்டது என்பதால் குளிப்பதற்காகப் போனாள். குளித்துவிட்டு, துணிகளை மாற்றிக் கொண்டு வந்து, ஹாலில் ஓடிக்கொண்டிருந்த மின் விசிறியில் தலைமுடியைக் காயவைத்தாள்.

“என்னா இன்னிக்கி சோப்பு வாசன தூக்குது?” என்று சிரித்துக்கொண்டே செல்லமுத்து கேட்டார்.

“தூக்கும் தூக்கும்” என்று கிண்டலான குரலில் சொன்ன காமாட்சி லேசாக சிரித்தாள்.

காமாட்சியை புதிதாகப் பார்ப்பதுபோல் பார்த்த செல்லமுத்து “என்ன இன்னிக்கி நீ ஒரு தினுசா இருக்கிற மாதிரி தெரியுது?” கேட்டதும் பொய்யாகக் கோபப்பட்ட காமாட்சி “என்னா பேச்சு இது? புதுசா இருக்கு, பழசா இருக்கு, தினுசா இருக்குன்னுகிட்டு?” என்று கேட்டாள். தலையிலிருந்து கால்வரை புது ஆளைப் பார்ப்பதுபோல் பார்த்த செல்லமுத்து “மேடத்துக்கிட்ட இன்னிக்கி என்னமோ மாத்தம் இருக்கு” என்று சொல்லிவிட்டு கள்ளத்தனமாக சிரித்ததைப் பார்த்த காமாட்சியின் பார்வை செல்லமுத்துவின் மேலேயே முழுமையாகக் குவிந்தது.

“மேடம்” என்ற வார்த்தையை இருபத்தியொரு வருசம் கழித்து மீண்டும் கேட்டிருக்கிறாள். காமாட்சிக்கு ஆச்சரியமாக இருந்தது. இருபத்தியொரு வருசத்திற்கு முன்பு கல்யாணம் கட்டிக்கொண்டு வந்த முதல் வாரத்தில் எப்போது கூப்பிட்டாலும் “மேடம்” என்றுதான் செல்லமுத்து கூப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்படி கூப்பிடுவது பிடித்திருந்தாலும் “நான் ஒங்களுக்கு மேடமா?” என்று காமாட்சி கேட்டாள். அதற்கு “ஆமாம் மேடம்” என்று சொன்னார். ஒரு வாரம் கழிந்த பிறகு “மேடம்” என்று கூப்பிடுவதை விட்டுவிட்டு “டீச்சர்” என்று கூப்பிட ஆரம்பித்தார். அப்படி கூப்பிடுகிற ஒவ்வொரு முறையும் “எனக்கு பேரு இல்லியா?” என்று கேட்டாள். “இருக்கு டீச்சர்” என்று சொல்லி சிரித்தார். “மேடம்” என்றும், “டீச்சர்” என்றும் கூப்பிடும் போதெல்லாம் வீட்டிலுள்ளவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற கவலை காமாட்சிக்கு இருந்தது.

கல்யாணமாகி நான்காவது மாதத்தில் வயிற்றில் குழந்தை உருவாகியிருக்கிறது என்பது தெரிந்தபிறகு “மேடம்”, “டீச்சர்” என்பதெல்லாம் போய் “காமாட்சி” என்று செல்லமுத்து கூப்பிட ஆரம்பித்தார். முதல் குழந்தை பிறந்து, இரண்டாவது குழந்தை வயிற்றில் உண்டாகிவிட்ட செய்தி தெரிந்த பிறகு “காமாட்சி” என்று கூப்பிடுவதும் நின்றுபோய் “ஏய்” என்று கூப்பிட ஆரம்பித்தார். இன்றுவரை செல்லமுத்து காமாட்சியை கூப்பிடும்போதெல்லாம் “ஏய்” என்றுதான் கூப்பிடுவார். “ஏய்” என்று கூப்பிட ஆரம்பித்த போது “எனக்கு பேர் இல்லியா?” என்று கேட்டாள். செல்லமுத்து எந்தப் பதிலும் சொல்லவில்லை. “ஏய்” என்று கூப்பிடுவதையும் மாற்றிக்கொள்ளவில்லை.

செல்லமுத்து சீண்டிய மாதிரியே பதிலுக்கு காமாட்சியும் “சாருக்கு இன்னிக்கி என்னாச்சி?” என்று கேட்டு சீண்டினாள்.

“மேடம்னு கூப்பிடுறது நல்லாத்தான் இருக்கு” என்று சொல்லி சிரித்தார். ஆச்சரியத்துடன் செல்லமுத்துவைப் பார்த்த காமாட்சி தலைமுடியை நன்றாக தட்டிவிட்டுக்கொண்டே போய் குளியலறைக்குப் பக்கத்திலிருந்த ஆள் உயர கண்ணாடியின் முன் நின்று பொட்டு வைத்துகொண்டாள். லேசாக தலைமுடியைத் தட்டிவிட்டு, முடியின் முனையில் சிறுமுடிச்சு போட்டுவிட்டாள். “நெறயா நரச்சிப் போச்சிப்போல” என்று சொல்லிக்கொண்டே ஹாலுக்கு வந்தாள்.

“இந்த பொடவயும் ஜாக்கெட்டும் ஒனக்கு நல்லா இருக்கு. எடுப்பா இருக்கு” என்று சொன்னதைக் கேட்டு காமாட்சி ஆராய்வதுபோல் செல்லமுத்துவையே பார்த்தாள். “மனுசனுக்கு இன்னிக்கி என்னாச்சு?” என்று யோசித்தாள். கல்யாணம் கட்டிக்கொண்டு வந்த இருபத்தியொரு வருசத்தில் செல்லமுத்துவிடமிருந்து இப்படியான ஒரு வார்த்தையை அவள் இன்றுதான் கேட்டிருக்கிறாள். தன்னையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் செல்லமுத்துவுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமே என்ற எண்ணத்தில் “பழய புடவ தான்” என்று சொன்னாள்.

“பழசா இருந்தாலும் நல்லா இருக்கு”

“புதுபொண்டாட்டியப் பாக்குற மாதிரி என்ன பார்வ?” என்று கேட்டு குறும்பாக சிரித்தாள். பிறகு செல்லமுத்து உட்கார்ந்துகொண்டிருந்த சோபாவை ஒட்டி தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்த நிலையில் உட்கார்ந்தாள்.

செல்லமுத்துவுக்கும், காமாட்சிக்கும் கல்யாணம் நடந்தது, குழந்தைகள் பிறந்தது, வளர்ந்தது, படித்தது, மேல்படிப்பிற்கு சென்னைக்கு சென்றதுவரை என்று ஒவ்வொரு கதையாக சொல்லசொல்ல “ஆமாம்” என்பதுபோல் தலையை ஆட்டிக்கொண்டேயிருந்தாள். அதே நேரத்தில் செல்லமுத்து ஒவ்வொரு விஷயத்தை சொன்னவிதமும், அவருடைய குரலும் அவளுடைய மனதிலும் மறந்துபோயிருந்த பழைய நினைவுகள் எல்லாம் ஞாபகத்திற்கு வந்தன.

“பையன் பொறக்கிறதுக்கு முன்னாடிதான் நாம்ப ரெண்டு பேரும் தனியா இருந்தம். அதுக்குப் பின்னால இந்த பத்து நாளாதான் தனியா இருக்கம்” என்று செல்லமுத்து சொன்னார். “ஆமாம்” என்பதுபோல் தலையை ஆட்டிவிட்டு “கல்யாணம் கட்டுனா புள்ள பொறக்கும். புள்ள பொறந்தா கூடத்தான் இருக்கும். தனியா இருக்கணுங்கிறதுக்காக புள்ள பெத்துக்காம இருக்க முடியுமா?” என்று காமாட்சி கேட்டாள்.

“காலம் ஓடிப்போயிடிச்சி” என்று ஏக்கமான குரலில் சொன்னார் செல்லமுத்து. “ஒனக்கு கொஞ்சம் கூடுதலா நரச்சிடிச்சிப்போல” என்று சொன்னதோடு நிற்காமல், காமாட்சியின் தலையில் கையைவைத்து பார்த்தார். பிறகு லேசாக சிரித்துக்கொண்டே “தல நரச்சிட்டாலும் ஆளு வாட்டமாதான் இருக்க” என்று சொன்னார்.

“என்னா பேச்சு இது?” என்று கேட்டாள்.

“நிசமாத்தான் சொல்றன்” என்று சொன்னதோடு காமாட்சியின் தோளில் செல்லமாகத் தட்டினார்.

செல்லமுத்து பேசுவது, தலையில், தோளில் தட்டுவதெல்லாம் புதுசாக இருந்தது. “ஆளு ஜோர்ல இருப்பார்போல” என்று நினைத்தாள். ரகசியமாக ஓரக்கண்ணால் செல்லமுத்துவைப் பார்த்தாள். செல்லமுத்துவும் அவளை ரகசியமாகப் பார்ப்பது தெரிந்ததும் “மூடுல இருப்பார் போல” என்று எண்ணிய காமாட்சி “போயி சாப்பாட்ட ரெடி பண்றன்” என்று சொல்லிவிட்டு எழுந்தாள்.

தோசை தட்டு, சாம்பார், சட்னி, தண்ணீர் என்று கொண்டு வந்து ஹாலில் வைத்தாள். பேண்ட், சட்டையை கழற்றிவிட்டு கைலியைக் கட்டிக்கொண்டு வந்து சாப்பிட உட்கார்ந்தார் செல்லமுத்து. சாப்பிட்டுக்கொண்டே பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த காமாட்சியின் தொடையில் தட்டி “ஆளு பிரஷாதான் இருக்க” என்று சொல்லிவிட்டு சிரித்ததும், “என்னா பேசறதுன்னு இல்லியா?” என்று கேட்டு பொய்யாகக் கோபத்தைக் காட்டினாள். சாப்பிட்டு முடிக்கும் வரை தொடையில் தட்டுவதும், தோளில் தட்டுவதுமாக இருந்தார். “இது என்ன பழக்கம்? புது  பொண்டாட்டிக்காரன் மாதிரி” என்று கேட்டாலும், தொடையில் தட்டியதும், தோளில் தட்டியதும் காமாட்சிக்கு பிடித்துதான் இருந்தது.

சாப்பிட்டு முடித்ததும் பாத்திரங்களை எடுத்துக்கொண்டுபோய் கழுவி வைத்தாள். சாப்பிட்ட இடத்தை ஈரத்துணியால் துடைத்தாள். படுக்கை அறையைக் கூட்டினாள். “ஏ.சிய போட்டு வைக்கணுமா?” என்று கேட்டாள்.

“போடன்” என்று செல்லமுத்து சொன்னார்.

வாசல்கேட்டை பூட்டினாள். கதவை சாத்தினாள். பின்புறக் கதவை சாத்தினாள். தோட்டத்து விளக்கை அணைத்தாள். கேஸ் நிறுத்தப்பட்டிருக்கிறதா என்று பார்த்தாள். சமையல்கட்டு சன்னல்களை சாத்தினாள். சமையல்கட்டு விளக்கை அணைத்தாள். ஹாலில் ஏதாவது பொருட்கள் கிடக்கிறதா என்று பார்த்தாள். கடைசியாக செல்லமுத்துவிடம் வந்து “படுக்கறிங்களா? லேட்டாவுமா?” என்று கேட்டாள்.

“நீ போயி படு. நான் அஞ்சி நிமிஷத்தில வந்திடுறன்.”

“வரும்போது மறக்காம டி.வி.ய ஆப் பண்ணுங்க. லைட்ட ஆப் பண்ணுங்க. ஃபேன ஆப் பண்ண மறந்திடாதிங்க” என்று சொல்லிவிட்டு படுக்கை அறைக்குள் போனாள்.

பத்து நிமிஷமாயிற்று. இருபது நிமிஷமாயிற்று. செல்லமுத்து தொலைக்காட்சியை அணைக்காததால், படுக்கையைவிட்டு எழுந்து வந்து “நேரத்தில படுக்கணுமின்னு சொன்னிங்களே” என்று கேட்டாள்.

“படு வரன்.”

“காலயில நேரத்திலியே ஸ்கூலுக்குப் போகணுமின்னு சொன்னிங்களே.”

“படு வரன்” என்று செல்லமுத்து சொன்னதும் அடுத்து எதுவும் பேசாமல் திரும்பிப்போய் படுத்துக்கொண்டாள்.

தொலைக்காட்சியின் சத்தம் அதிகமாக இருப்பதுபோல் இருந்தது. “சத்தத்த கொறச்சிவச்சா என்ன?” என்று நினைத்தாள். ஏ.சி. கொஞ்சம் கூடுதலாக இருப்பதுபோல் தெரிந்தது. செல்போனை எடுத்துப் பார்த்தாள். மணி பதினொன்று என்பது தெரிந்தது. செல்லமுத்துவைக் கூப்பிட்டு படுக்க சொல்வதா வேண்டாமா என்று யோசித்தாள். தானாக வரட்டும் என்று நினைத்தாள். ஆனால் செல்லமுத்து தொலைக்காட்சியைவிட்டு எழுந்து வருகிற மாதிரி தெரியவில்லை. கோபம் வந்தது “டி.வி. பாக்குறதுக்கும் ஒரு நேரம் காலம் இல்லியா?” என்று நினைத்தாள். தொடையில் தட்டி, தோளில் தட்டி செல்லமுத்து பேசியது நினைவுக்கு வந்தது. எதையெதையோ யோசித்தபடி படுத்துக்கொண்டிருந்தாள். அடுத்த அரைமணி நேரம் கழித்தும் செல்லமுத்து வராததால் பொறுமையிழந்து போய் எழுந்து வெளியே வந்து “படுக்கலியா?” என்று கேட்டாள். அப்போதுதான் படுக்க வேண்டும் என்ற எண்ணமே வந்ததுபோல் சட்டென்று எழுந்து தொலைக்காட்சியை அணைத்தார். மின்விசிறியை நிறுத்தினார். காமாட்சி எதுவும் பேசாமல் போய்ப் படுத்துக்கொண்டாள். விளக்கை அணைத்துவிட்டு வந்து செல்லமுத்துவும் படுத்துக்கொண்டார்.

செல்லமுத்து ஏதாவது சொல்வார், ஏதாவது பேசுவார் என்று எதிர்பார்த்தாள். விளக்கை நிறுத்தியதும் இருட்டாகிவிடுவதுபோல் படுத்தவுடனேயே தூங்கிவிட்டார். காமாட்சியும் தூங்கிவிடலாம் என்று நினைத்தாள். ஆனால் தூக்கம் வரவில்லை. செல்லமுத்து தொடையில் தட்டியதும், தோளில் தட்டியதும் ஒரு மாதிரி பேசியதும் நினைவுக்கு வந்தது. செல்லமுத்துவை ஒட்டி நகர்ந்து படுக்கலாமா என்ற யோசித்தாள். மறுநொடியே வேண்டாம் என்று நினைத்தாள். வந்து படுத்ததும் அவராகத் தொடுவார் என்று எதிர்பார்த்தாள். தொடாதது மட்டுமல்ல, “தூக்கம் வருதா?” என்று கூட கேட்காமல் படுத்துவிட்டார். படுத்த வேகத்தில் தூங்கியும் விட்டார்.

“என்னங்க” என்று கூப்பிட நினைத்தாள். தூக்கத்தில் எதற்கு கூப்பிட்டு தொந்தரவு செய்கிறாய் என்று கேட்டால் அசிங்கமாகிவிடும் என்று நினைத்தாள். எதையும் நினைக்காமல் தூங்க முயன்றாள். எவ்வளவு முயன்றும் தூக்கம் வரவில்லை. புரண்டு படுக்க நினைத்தாள். புரண்டு படுக்கும்போது, கைகால் பட்டுவிட்டால்? வேறு மாதிரி புரிந்துகொள்ளலாம் என்று அசையாமல் படுத்துக்கொண்டிருந்தாள். சாதாரணமாக படுத்த சிலநொடிகளிலேயே தூங்கிவிடுவாள். இன்று என்னவோ தூக்கம் வரவில்லை. போர்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டு, கண்களை மூடிக்கொண்டு கிடந்தாள். அப்படியும் தூக்கம் வரவில்லை. தூக்கம் வராதது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.

நேரமாக நேரமாக செல்லமுத்து விடுகிற குறட்டை சத்தத்தின் அளவு கூடிக்கொண்டேயிருந்தது. தூக்கம் வராததைவிட, குறட்டை சத்தம்தான் பெரிய தொந்தரவாக இருந்தது. பொறுத்துபொறுத்துப் பார்த்தாள். பொறுக்க முடியாதபோது எழுந்து வெளியே போய்விடலாமா என்று நினைத்தாள். “வீடே இடிஞ்சிப் போற மாதிரியா குறட்ட விடுவாங்க?” என்று ஆத்திரத்தில் முனகினாள். சிறிது நேரம் காதுகளை மூடிக்கொண்டிருந்தாள். அப்படியும் குறட்டை சத்தம் கேட்டபடிதான் இருந்தது. நேரமாக நேரமாக குறட்டை சத்தத்தால் அவளுக்கு தலையை வலிக்க ஆரம்பித்தது. கல்யாணம் கட்டிக்கொண்டு வந்ததிலிருந்து செல்லமுத்து விடுகிற குறட்டை சத்தத்தைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறாள். இன்றுதான் முதன்முதலாக அவளுக்கு அவருடைய குறட்டை சத்தம் பெரும் தொந்தரவாக மாறியிருந்தது. குறட்டை சத்தத்தை குறைப்பதற்கு என்ன வழி என்று யோசித்தாள். ”ஏங்க” என்று கூப்பிட்டாள். “ம்” என்று செல்லமுத்து சொன்னார். அடுத்த சில நொடிகளில் மீண்டும் குறட்டை சத்தம் ரோடுரோலர் போகிற மாதிரி கேட்க ஆரம்பித்துவிட்டது.

“ஏங்க” என்று கூப்பிட்டாள். செல்லமுத்துவிடமிருந்து எந்த சத்தமுமில்லாததால் மீண்டும் “ஏங்க” என்று கூப்பிட்டாள். அப்போதும் பதில் இல்லை. காமாட்சிக்கு கோபம் வந்தது “படுத்த உடனே தூங்கறது என்னா பழக்கம்?” பல்லைக்கடித்தப்படி சொன்னாள். கோபம் கூடியது. விஷம் குடித்து செத்துப்போன பெண்ணிற்காக வருத்தப்பட முடிகிறது, முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்ட பெண்ணிற்காக வருத்தப்பட, ஐ.டி.கம்பனியில் வேலை இழப்பவர்களுக்காக வருத்தப்பட முடிகிறது. டிக் டாக்கில் நடிக்கிற பெண்களின் குடும்பம் பற்றியெல்லாம்  கவலைப்பட்டு பேச முடிகிறது. ஆனால் பக்கத்தில் படுத்துக்கொண்டிருப்பவள் பற்றி மட்டும் யோசிக்கத் தெரியவில்லை என்று நினைத்ததுமே “மரமண்ட” என்று சொன்னாள். இருபத்தியொரு வருச குடும்ப வாழ்க்கையில் முதன் முதலாக செல்லமுத்துவை “தூங்கு மூஞ்சி, மரமண்ட” என்று சொல்யிருக்கிறாள். அப்படி சொன்னது அவளுக்கே சிரிப்பாக இருந்தது. 

புரண்டு ஒருபுறமாக ஒருக்களித்து படுத்த காமாட்சிக்கு “சேந்து எத்தன மாசம் இருக்கும்?” என்ற கேள்வி எழுந்தது. என்ன இப்படியெல்லாம் யோசிக்கிறோம்?* அந்த கேள்வியை மறக்க முயன்றாள். திரும்பவும் அந்தக் கேள்வியை யோசிக்கக் கூடாது என்று நினைத்தாள். மனதை மாற்ற முயன்றாள். சிந்தனையை மாற்ற முயன்றாள். பையன் ஏன் பேசவில்லை. மகள் தூங்கியிருப்பாளா என்று தன்னிடமே கேட்டுக்கொண்டாள். காலையில் என்ன சமைப்பது, எப்போது எழுந்திருப்பது என்பது பற்றியெல்லாம் யோசித்தாள். எதிலும் மனம் ஒன்றவில்லை. “சேந்து எத்தன மாசம் இருக்கும்?” என்ற கேள்வியைத்தாண்டி அவளால் வேறு எதையும் முழுமையாக யோசிக்க முடியவில்லை, பாராங்கல் மாதிரி அவளுடைய மண்டைக்குள் அந்த கேள்வி உட்கார்ந்துகொண்டிருந்தது. ஒரு சில மாதங்களாக மறந்துபோயிருந்த விஷயம் எப்படி நினைவுக்கு வந்தது என்று யோசித்தாள். அந்த எண்ணம்தான் இப்போது அவளுடைய மனதில் பெரிய சுமையாக இருந்தது.

இருபத்தியொரு வருசத்தில்  தானாக ஒரு முறைகூட அவள் செல்லமுத்துவை தொட்டதில்லை. தொடவேண்டும் என்றும் நினைத்ததுமில்லை. அதற்கான அடையாளத்தைக்கூட அவள் இதுவரை காட்டியதில்லை. செல்லமுத்துவின் விருப்பம்தான். இஷ்டம்தான். காமாட்சியிடம் எப்போது வந்தாலும் பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டியிடம் பகல் நேரத்தில் போனது மாதிரிதான். கல்யாணமான புதிதில்தான் அப்படி இருந்தார் என்று சொல்ல முடியாது. எப்போது வந்தாலும் ரயிலைப் பிடிக்கப் போகிற அவசரம்தான். “சொந்த பொண்டாட்டிதான? எதுக்கு அவசரம்?” என்று கேட்டபோதும், அவர் மாறவில்லை. சில நாட்களில் “இப்பதான் சாப்புட்டன். அப்பறம் பாத்துக்கலாம்” என்று சொன்னாலும் கேட்க மாட்டார். சேர்ந்திருக்கும் போது கூட சொல்வதை கேட்க மாட்டேன் என்கிறாரே என்று கோபம் வரும். விலகிப் படுத்த பிறகு “மாராக்க சரியாபோடு”, “பொடவ விலகி கெடக்குப்பாரு”, “எதுக்கு மல்லாந்து படுத்திருக்கிற? ஒருக்களிச்சுப் படு. சின்னப்புள்ள மாதிரி வர முற இல்லாம தூங்குறது?” என்று பலவிதமாக சொல்லும்போதுதான் காமாட்சிக்கு கடுமையான கோபம்வரும். கோபம் வந்தாலும் எதுவும் சொல்ல மாட்டாள். “அவரோட புத்தி” என்று விட்டுவிடுவாள். 

செல்லமுத்து லேசாக அசைந்துப் படுத்தார். அப்போது அவருடைய கால் காமாட்சியின் கால்களின் மீது விழுந்தது. கால்களை நகர்த்திக்கொள்ளாமல் விழித்துக்கொண்டார் போல் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு படுத்திருந்தாள். புரண்டு படுக்கும்போது மட்டும்தான் குறட்டை சத்தம் நின்றது. அதுவும் ஒரு நொடிதான். அடுத்த நொடியே குறட்டைசத்தம் வர ஆரம்பித்துவிட்டது. தன்னுடைய கால்களின்மீது கிடக்கும் செல்லமுத்துவின் காலை என்ன செய்வது என்று யோசித்தாள். எரிச்சலாக இருந்தது. கோபமாக இருந்தது. ஆத்திரமாக இருந்தது. “பாராங்கல் மாதிரி இருக்கு” என்று முனகினாள். கொஞ்சம்கொஞ்சமாக கால்களை நகர்த்திக்கொள்ளும்போது மட்டும் குறட்டை சத்தம் மட்டுப்பட்டது. கால்களை நகர்த்திக்கொண்ட பிறகு மீண்டும் ’கர்புர்’ என்று குறட்டை சத்தம் கேட்க ஆரம்பித்துவிட்டது. குறட்டை சத்தத்தை கேட்பதைவிட விஷம்குடித்து சாவது எளிதானது என்ற எண்ணம் அவளுக்கு உண்டானது. வேண்டுமென்றே கால்களைத் தூக்கிப் போடலாமா என்ற யோசனை வந்தது. கால்களை போடவும் செய்தாள்.

“சீ என்ன அசிங்கம். மானம் போயிடும்.” என்று தன்னையேத் திட்டிக்கொண்டாள். உடனே கால்களை நகர்த்திக்கொண்டாள். ‘மானம் போயிடும்’ என்ற வார்த்தையை திரும்பத் திரும்ப சொன்னாள். “புடவ நல்லா இருக்கு. ஜாக்கெட் நல்லா இருக்கு. அது நல்லா இருக்கு. இது நல்லா இருக்குன்னு சொல்லிப்புட்டு தூங்கறத பாரன்” என்று சொல்லி முனகினாள். எதையும் யோசிக்க வேண்டாம் என்று நினைத்துக்கொண்டு தூங்குவதற்கு முயன்றாள். என்ன முயன்றும் தூக்கம் வரவில்லை. காதில் வைத்து சங்கை ஊதுவதுபோல் குறட்டை சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அந்த சத்தத்திலிருந்து தப்பிப்பதற்கு எங்காவது ஓடிப்போய்விட்டால் தேவலாம் என்றிருந்தது. குறட்டை சத்தத்தில் பைத்தியம் பிடித்துவிடும்போல் இருந்தது. இந்த சத்தத்தை இத்தனை வருசமாக எப்படி பொறுத்துக்கொண்டிருந்தோம் என்பது அவளுக்கே வியப்பாக இருந்தது. பொறுத்துபொறுத்துப் பார்த்தாள். முடியாதபோது எழுந்து வெளியே வந்தாள். நேராக சமையலறைக்குச் சென்று தண்ணீர் குடித்தாள். விளக்கைப் போட்டாள். தொலைக்காட்சியைப் போட்டாள். மின்விசிறியைப் போட்டாள். ரிமோட் கண்ட்ரோலை கையில் எடுத்துக்கொண்டு சோபாவில் உட்கார்ந்து தொலைக்காட்சியைப் பார்க்க ஆரம்பித்தாள். வாசனை திரவியம் போட்டிருந்ததற்காக ஒரு பையனை மூன்று நான்கு இளம்பெண்கள் கட்டிப்பிடித்து முத்தமிடுகிற காட்சி ஓடிக்கொண்டிருந்தது. “என்னா சனியன் இது?” என்று சொல்லிவிட்டு சேனலை மாற்றினாள்.

“டி.வி.பாக்குற நேரமா இது?” என்று செல்லமுத்து படுக்கை அறையிலிருந்து கேட்டதும், காமாட்சிக்கு கண்மண் தெரியாத அளவிற்கு கோபம் வந்தது. வேண்டும் என்றே பதில் சொல்லாமல் உட்கார்ந்திருந்தாள். நல்ல கைலி ஒன்றினை கட்டியிருந்ததற்காக ஒரு ஆளை இரண்டு பெண்கள் போட்டியிட்டு கட்டிப்பிடித்துக்கொள்கிற விளம்பரம் ஓடியது. “நடு ராத்திரியிலயுமா விளம்பரம் போடுவானுங்க?” என்று சொன்ன காமாட்சி சேனலை மாற்றினாள்.

“புருசன் பொண்டாட்டி சந்தோசம்ங்கிறதெல்லாம் முத புள்ள பொறக்குறவரைக்கும்தான். அப்பறம் புருசன் பொண்டாட்டி சந்தோசம்ங்கிறதெல்லாம் கவர்மண்ட் வேலக்கிப்போற மாதிரிதான்” என்று ராமஜெயம் ஆசிரியை போனவாரம் மதிய உணவு இடைவேளையின்போது சொன்னது நினைவுக்கு வந்தது. ராமஜெயம் ஆசிரியை சொன்னதையே யோசித்துக்கொண்டிருந்தாள். ராமஜெயத்திற்கு ஐம்பத்தி ஏழு வயது இருக்கும். காமாட்சி வேலை செய்யும் பள்ளிக்கூடத்தில் பனிரெண்டு ஆசிரியைகள் இருந்தாலும் அவருக்கு மட்டும்தான் நல்ல பெயர் இருந்தது. ராமஜெயம் சொன்னபோது என்ன இப்படி சொல்கிறார் என்ற எண்ணம் இருந்தது. 

ராமஜெயம் சொன்ன விஷயங்களை ஒவ்வொன்றாக யோசித்துப் பார்க்க ஆரம்பித்தாள்.

“முத புள்ள வயித்தில தங்குறவர வாரம் ஒண்ணு ரெண்டுன்னு இருக்கும். செய்தி தெரிஞ்ச பின்னால மாசத்துக்கு ஒண்ணு, ரெண்டுன்னு மாறிடும், ரெண்டாவது புள்ள பொறந்த பின்னால ரெண்டு மூணு மாசத்துக்கு ஒண்ணுன்னு ஆயி, அப்பறம் எப்பயாச்சும் நெனப்பு எடுத்துக்கிட்டா நடக்கும். அப்பறம் அந்த பழக்கமே மறந்திடும்.”

ராமஜெயம் சொன்னதை நினைத்ததும் லேசாக சிரிப்பு வந்தது. ராமஜெயம் சொன்னதும் “எங்க சார் அப்படி”, “எங்க சார் இப்படி” என்று மற்ற ஆசிரியைகள் சொன்னதும், தானும் “எங்க சார் அப்படி, இப்படி” என்று சொன்னதெல்லாம் நினைவுக்கு வந்தது. ராமஜெயம் மட்டும்தான் உண்மையை பேசின ஆள் என்ற எண்ணம் உண்டானது. “பொய் சொல்றதில பொம்பளங்கள ஜெயிக்கவே முடியாது” என்று வாய்விட்டே சொன்னாள். 

“பொம்பள பிள்ளைக்கி அப்பா அம்மாகூட இருக்கிற வரதான் சந்தோசம். புருசன் வீடுன்னுபோன நாளிலிருந்து வீடுகூட்ட, வாசல்கூட்ட, சமைக்க, திங்க, தூங்க, புள்ள பெக்க, புள்ளயோட பீ துணிய அலச, அடுத்த புள்ள பெக்க அதோட பீ துணிய அலச, பால் கொடுக்க, வளக்கன்னு காலம் போயிடும்.” ராமஜெயம் சொன்னது நினைவுக்கு வந்ததும் காமாட்சியின் நினைவு தடம் மாறியது.

மகனைப் பற்றியும், மகளைப் பற்றியும் யோசித்தாள். பிள்ளைகள் வீட்டில் இருந்தபோது ஒரு நாள்கூட இந்த மாதிரி தூங்காமல் அவள் விழித்துக்கொண்டிருந்ததில்லை. அவசரமாக காலையில் பள்ளிக்கூடத்திற்குப்போகவும், சாயங்காலம் வந்து வீட்டு வேலைகளைப் பார்க்கவுமே நேரம் சரியாக இருக்கும். ஒவ்வொரு நாளும் எப்போது படுப்போம் என்றுதான் இருக்கும். பையன் படிப்பதற்காகப்போய் இரண்டு வருசமாகிறது. மகள் படிப்பதற்காகப் போய் பதினைந்து நாட்கள்தான் ஆகிறது. மகனோ, மகளோ வீட்டில் இருந்திருந்தால் எப்போதோ தூங்கிப்போயிருப்பாள். எதற்காக இந்த நடு இரவில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி எழுந்ததும் “புத்திகெட்ட மனசு” என்று சொன்னாள்.

செல்லமுத்து விடுகிற குறட்டை சத்தம் தொலைக்காட்சியின் சத்தத்தையும் மீறி கேட்டுக்கொண்டிருந்தது. அந்த சத்தம் ஊசியால் குத்துவதுபோல் இருந்தது “என்ன பொறப்போ” என்று சொல்லிவிட்டு தொலைக்காட்சியின் சத்தத்தைக் கூட்டினாள். அவளிடமிருந்த நிதானம் போய்விட்டது. மறுநிமிஷமே படுக்கை அறையிலிருந்து எழுந்து வந்த செல்லமுத்து “என்னிக்கும் இல்லாம என்ன இன்னிக்கு ஒரு மணிவர முழிச்சிக்கிட்டிருக்க? தூங்க வாணாமா?” என்று கேட்டுவிட்டு கழிவறைக்குப்போனார். காமாட்சி எந்தப் பதிலும் சொல்லாமல் மௌனமாக உட்கார்ந்துகொண்டிருந்தாள். கழிவறையிலிருந்து திரும்பி வந்த செல்லமுத்து “சீக்கிரம் வந்து படு” என்று சொல்லிவிட்டுப் போய்ப் படுத்துக்கொண்டார்.

செல்லமுத்து எழுந்து வந்தது, கேள்விகேட்டது, கழிவறைக்குச் சென்றது, திரும்பப்போய் கதவை சாத்திக்கொண்டு படுத்துவிட்டது என்று ஒவ்வொரு விஷயமும் காமாட்சியை ஆத்திரப்படுத்துவதாக இருந்தது. “தூங்கிப்புட்டு கேக்கிறத பாரு” என்று சொல்லிவிட்டு முகத்தைக் கோணங்கிக்காட்டினாள். “மரமண்ட.” என்று அழுத்தமாகச் சொன்னாள்.

இன்றிரவு தனக்கு ஏன் தூக்கம் வரமாட்டேன்கிறது என்று யோசித்தாள் காமாட்சி. மூடியிருந்த படுக்கை அறையின் கதவைப் பார்த்தாள். அந்தப் பக்கமே பார்க்கக் கூடாது என்று நினைத்தாள். சுவரில் மாட்டியிருந்த கல்யாண போட்டோவை பார்த்தாள். எடுத்து சுக்குநூறாக உடைக்க வேண்டும்போலிருந்தது. எழுந்து காலாற எங்காவது போய் நடந்துவிட்டு வர வேண்டும் என்று தோன்றியது. அவளுடைய மனம் தொலைக்காட்சியிலும் நிலைக்கவில்லை. “நரகம்தான்” என்று சொன்னாள். அவளுடைய உடலும் மனமும் இறுக்கமாயிற்று.

“என்ன மனுசன்?” என்று சொன்னாள். செல்லமுத்து மீது அடக்க முடியாத அளவிற்கு ஆத்திரம் உண்டானது. கோபத்தில் ரிமோட் கண்ட்ரோலை தூக்கி அடித்தாள். எழுந்து சமையலறைக்கு வந்தாள். இருட்டில் சிறிது நேரம் அப்படியே நின்றுகொண்டிருந்தாள். பிறகு கழிவறைக்குள் போனாள். இன்று என்ன காரணத்தினாலோ இரண்டு மூன்று முறைக்கு மேல் சிறுநீர் வந்துகொண்டே இருந்தது. ஐந்து நிமிஷத்திற்குமேல் கழிவறையிலேயே உட்கார்ந்திருந்தாள். காலில்  வலி எடுத்ததும் எழுந்து வந்து முன்பு உட்கார்ந்திருந்த இடத்தில் உட்கார்ந்துகொண்டு தொலைக்காட்சியைப் பார்த்தாள். தொலைக்காட்சியில் என்ன ஓடிக்கொண்டிருந்தது என்பது அவளுடைய மனதில் பதியவில்லை. வெறுப்புடன் படுக்கை அறையின் கதவைப் பார்த்தாள். பூட்டு போட்டு பூட்டிவிடலாமா என்ற எண்ணம் உண்டாயிற்று. சம்பந்தமே இல்லாத வீட்டில் படுத்துக்கொண்டிருப்பதுபோல அவளுக்கு தோன்றியது.

”பேர பாரன். சனியன் செல்லமுத்து. செல்லம்தான். போ. கிழட்டு குரங்கு.” என்று சொல்லி முகத்தைச் சுளித்தாள். “தல பூராவும் நரச்சி போச்சி. வயிறும் விழுந்துபோச்சி. ஆளும் அட்டக் கருப்பு. கை காலுல நகம் கூட வெட்டுறதில்ல. சுத்தப்பத்தமா இருக்கிறதில்ல. என்ன பொறப்போ. இதுல வாத்தியாரு வேற.” என்று சொல்லி திட்டினாள். மறுநிமிஷமே செல்லமுத்துவைப் பற்றி யோசித்தாள். அவருக்கு ஐம்பத்தி நான்கு வயது. காமாட்சிக்கு ஐம்பது வயது. கல்யாணம் கட்டிக்கொண்டு வந்த நாளிலிருந்து காய்கறி கடைக்கு, மளிகைக் கடைக்கு என்று எங்கும் அனுப்பியதில்லை. ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போதே அடுத்த நாளுக்குத் தேவையான காய்களை வாங்கிக்கொண்டு வந்துவிடுவார். பிரி.கே.ஜி.யிலிருந்து, பிளஸ் டூ படிக்கும்வரை இரண்டு பிள்ளைகளையும் தூக்கத்திலிருந்து எழுப்புவதிலிருந்து, பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதுவரை எல்லா வேலைகளையும் அவர்தான் பார்த்துக்கொள்வார். பையனும், பொண்ணும் பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ படிக்கும்போது டியூசனுக்கு அழைத்துக்கொண்டு போனது, திரும்ப வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்ததெல்லாம் அவர்தான். காலையில் சரியான நேரத்திற்கு காமாட்சியைக் கொண்டுவந்து பஸ் ஏற்றி விடுவார். அதே மாதிரி சாயங்காலம் எந்த பஸ்ஸில் வருகிறாய் என்று கேட்டு, பஸ் வரும் நேரத்திற்கு வந்து வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வருவார். உள்ளூரிலேயே பள்ளிக்கூடம் என்பதால், வீட்டுவேலைகளை எல்லாம் அவரே பார்த்துக்கொள்வார். “வாக்கிங் போறன்” என்று சொல்லிவிட்டு காலையிலும், மாலையிலும் ஒன்றிரண்டு மணி நேரத்தை வீணடிக்க மாட்டார். சமையல் வேலையிலும் உதவி செய்வார். வீண் செலவு என்று ஒரு பைசா செலவு செய்ய மாட்டார். “பள்ளிக்கூடத்துக்கு பொடவக்காரன் வந்தான். ரெண்டு புடவ எடுத்தன்” என்று சொன்னாலும் “அப்படியா?” என்ற கேள்விக்கு மேல் அடுத்த கேள்வி கேட்க மாட்டார். சொந்தக்காரர்களுடைய விசேஷத்திற்கு போகவேண்டும் என்றாலும் முடிந்தவரை தனியாகவே போய்விட்டு வந்துவிடுவார். தவிர்க்க முடியாத விசேஷத்திற்கு மட்டும்தான் கூட்டிக்கொண்டு போவார். செல்லமுத்து மீது குற்றம் சொல்ல, கோபப்பட காரணம் இல்லாததே காமாட்சிக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. “சோறு, குழம்பு, ரசம் எல்லாம் இருக்கு. ஆனா எதிலயும் உப்பில்ல” முணுமுணுத்தாள். என்ன இப்படி பேசுகிறோம் என்று அவளுக்கே விசித்திரமாக இருந்தது.

காமாட்சி ஆசிரியையாக வேலைக்கு சேர்ந்ததிலிருந்து, குழந்தைகள் பிறந்தபோது, மாமனார், மாமியார் இறந்தபோது, தன்னுடைய அப்பா, அம்மா இறந்தபோது மட்டும்தான் மருத்துவ விடுப்பு எடுத்திருக்கிறாள். வீடு கட்டும்போதுகூட அவள் மருத்துவ விடுப்பு எடுக்கவில்லை. பிள்ளைகள் பத்தாவது, பனிரெண்டாவது படிக்கும்போது தேர்வு சமயத்தில்கூட அவள் மருத்துவ விடுப்பு எடுத்ததில்லை. போன வெள்ளிக்கிழமை உடம்பு என்னவோ செய்வதுபோலிருந்தது. வயிற்றையும் வலித்தது, மாத தொந்தரவாக இருக்குமோ என்ற நினைத்தாள். அதுவும் இல்லை. ஆனாலும் அடி வயிற்றில் தொடர்ந்து தொந்தரவு இருந்ததால் ஐந்து நாட்களுக்கு மட்டும் மருத்துவ விடுப்பு கொடுத்துவிட்டு வீட்டிலிருந்தாள். தூக்கம் வராததற்குக்காரணம் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்ததுதான் என்று தெரிந்தது. பள்ளிக்கூடத்திற்குப் போயிருந்தால் காலையிலிருந்து சாயங்காலம்வரை வேலை, வேலை என்று நேரம் ஓடியிருக்கும். பள்ளிக்கூடம்விட்டு வீட்டுக்கு வந்தால் வீட்டுவேலை என்று நேரம் போயிருக்கும். மறுநாள் பள்ளிக்கூடத்திற்கு போகவேண்டுமே என்ற எண்ணத்தில் நேரத்திலேயே படுத்திருப்பாள். படுத்ததும் தூக்கமும் வந்திருக்கும். இரவு இரண்டு மணிவரை விழித்துக்கொண்டிருக்க வேண்டியிருக்காது. மருத்துவ விடுப்பு போட்டு இரண்டு நாட்கள்தான் முடிந்திருந்தது. விடுப்பை ரத்து செய்துவிட்டு நாளைக்கே பள்ளிக்கூடம் போய்விடுவோம் என்று நினைத்ததும்தான் அவளுக்கு மனது லேசாக அமைதியடைந்த மாதிரி இருந்தது. பெண்கள் ஏன் இரவும் பகலும் வேலை வேலை என்று செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது அவளுக்கு இப்போதுதான் புரிந்தது. “ஒரு ராத்திரி தூங்காம இருக்கறதே இம்மாம் நரகமா இருக்கே. தெனம் தெனம் தூக்கம் வராம இருந்தா எம்மாம் நரகமா இருக்கும்? படுத்ததுமே தூங்கிப்போற நான் அதிர்ஷ்டசாலிதான். தூக்கம்தான் கடவுள் போல இருக்கு” என்று நினைத்துக்கொண்டாள்.

“ரவ நேரத்துக்காக எத்தன மணி நேரம் ஒக்காந்திட்டம்” என்ற நினைத்ததுமே காமாட்சிக்கு வெட்கமாக இருந்தது. உடனே தொலைக்காட்சியை அணைத்தாள். விளக்கை அணைத்தாள். சோபாவிலேயே படுத்துக்கொண்டாள்.

“புள்ளைங்க பொறந்ததா, அப்பறம் வளந்ததா, புள்ளங்க முன்னாடியான்னு ஓதுங்குனதுதான். அப்பறம் அந்த ரவ நேரம் பத்தின எண்ணமே இல்லாமப் போயிடிச்சி. இப்ப மறந்தும் போயிடிச்சி.” என்று ராமஜெயம் சொன்னது நினைவுக்கு வந்தது. காமாட்சி கண்களை மூடினாள். சிறிது நேரத்தில் அவளையும் அறியாமல் தூங்கிவிட்டாள். 

காமாட்சி விட்ட குறட்டை சத்தம் ஹாலை நிறைத்தது.

– அந்திமழை – ஜூலை 2021

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *