ரயில் பயணம் ஒன்றில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 4, 2023
பார்வையிட்டோர்: 1,654 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இந்த இட்டாலோ அதிவேக தனியார் ரயில் வெனீஸ் நகரை நோக்கி கிட்டத்தட்ட முன்னூறு கிலோமீட்டர்கள் வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது. வெனீஸ் நகரத்திற்கு எல்லோரும் ஜோடியாக ஊர் சுற்றப்போவார்கள். நான் வியாபர நிமித்தமாய் தனியாகப் போய் கொண்டிருக்கின்றேன்.

ஒரு வரிசையில் மூன்று இருக்கைகள், இடதுபுறத்தில் ஒற்றை இருக்கை, நடுவில் நடப்பதற்கான நல்ல அகலமான பாதை, வலது புறத்தில் இரண்டு அகலமான இருக்கைகள், இப்படியான ரயில் பெட்டியில் எனது பயணம். எனக்கு வலதுபுறம் சன்னலோரத்தில் இருந்த பெரியவர், ரோமில் தூங்க ஆரம்பித்தவர், பொலொன்யா நிலையம் வர சற்று முன்னர்தான் தான் இறங்கும் முன்னர் எழுந்தார், இறங்கிப் போய் விட்டார். நீங்கள் நினைப்பது படி நான் உடனே சன்னல் ஓரம் மாறிக்கொள்ளவில்லை. இந்த நெடும் பயணத்தில் முக்கால் வாசி தூரம் குகைப்பாதைகள் தான். வேடிக்கைப் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை. மேலும் நான் என்னிடத்திலேயே அமர்ந்து கொண்டிருப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

எந்த இனத்து ஆணாக இருந்தாலும், ஆண்களுக்கே உரிய சபலம், எனக்கு கொஞ்சம் அதிகமாகவே உண்டு. ரோமிற்கு வந்து இறங்கியதில் இருந்து பார்க்கும் வசீகரமான இத்தாலிய பெண்களை எல்லாம் கண்களால் காதல் செய்து கொண்டிருக்கின்றேன். இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கின்றன, நேரிடைக் காதல் செய்ய வசீகரத்தைத் தேடிக்கொண்டு இருக்கின்றேன். நடக்கும் பாதைக்கு அந்தப் பக்கம் ஒற்றை இருக்கை இருக்கின்றது என சொன்னேன் அல்லவா, அங்கு ஒரு இத்தாலியத் தேவதை அமர்ந்து இருக்கின்றாள். காலை இறுக்கப்பிடிக்கும் லெக்கின்ஸின் மேல், முட்டிக்கு கொஞ்சம் மேலே வரை வரும்படி ஒரு குட்டைப்பாவாடை அணிந்து இருக்கிறாள், அதுவும் உட்காரும்பொழுது, கிட்டத்தட்ட தொடை வரை வந்துவிட்டது, என் பார்வையில் இருந்து தப்பிக்க அவளும் பலமுறை அதை இழுத்துவிட்டுக்கொண்டே இருக்கிறாள். இடுப்புக்கு மேல் நான் வர்ணிக்காதன் காரணம், வர்ணனைத் தரப்படாதவை சிறப்பானவை… நான் அவளைக் கவனிக்காத பொழுது என்னைப் பார் யோகம் வரும் வகையில், சீண்டல் பார்வை வேறு தந்து கொண்டிருக்கின்றாள். அவளது மடிக்கணினியில் ஏதோ ஒரு கிளுகிளுப்பான காட்சி வேறு ஓடிக்கொண்டிருந்தது.

இவள் வெனீஸை சேர்ந்தவளாக இருந்தால், வார இறுதிக்கு சந்திக்க தூண்டில் போடலமா என யோசிக்கையில், இருக்கையை விட்டு எழுந்தாள். மடிக்கணினியை பையினுள் வைத்தாள். தனது குளிருக்கான மேலங்கியை அணிந்து கொண்டாள், எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு நகர, படோவா நகரம் நெருங்குகின்றது என அறிவிப்பு வந்தது.

மகிழ்ச்சி பலூன் உடைந்த சோகத்தில், அடுத்த நிமிடத்தில் வந்தடைந்த ரயில் நிலையத்தை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தேன். படோவா நிலையத்தில் மீண்டும் நகர ஆரம்பித்த பின்னர் அவள் அந்த இடத்தில் மீண்டும் பழைய படி அமர்ந்து இருந்ததைக் கவனித்தேன். அடடா.. கழிவறைக்கு சென்று வந்திருக்கிறாள். தன் அத்தனை உடைமைகளையும் தன்னுடன் எடுத்துக் கொண்டு போவதற்கு, என் மேல் இருக்கும் பயம் கூட காரணமாக இருக்கலாம், நாங்கள் இருவரும் இருக்கும் இந்த ரயில் பெட்டியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலரே இருந்தனர். வருத்தமாக இருந்தாலும், அவள் திரும்ப வந்ததே மகிழ்ச்சியாக இருந்தது. சபலங்கள் அவமானங்களைப் பொருட்படுத்துவதில்லை.

°நீயும் வெனீஸ் நகரத்திற்குத்தான் போகிறாயா° என ஆங்கிலத்தில் கேட்டேன். சபலங்கள் அசட்டுத் தைரியங்களையும் தரும்.

இத்தாலிய உச்சரிப்பில், ஆங்கிலம் பேசினாள். இன்னும் சரியாக 45 நிமிடங்கள், நடுவில்

வெனீஸ் நிலப்பகுதி ரயில் நிலையம், இதற்குள் நட்புக்கு அடிப்போட்டுவிட்டால், வார இறுதிக் கொண்டாட்டமே…

எதிர்பார்த்ததைவிட, நட்பாகப் பேசினாள். வெனீஸ் மெஸ்ட்ரே ரயில் நிலையம் நெருங்க,

இயற்கை உந்துதல் எட்டிப்பார்க்க, கழிவறையை நோக்கி செல்லும்பொழுது,

“பார், நீ யாரையும் நம்பாமல் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டுப்போனாய், நான் மனிதர்களை நம்புபவன்”

என்பதை, என் கண்களில் அவளுக்குக் காட்டுவதாக நினைத்துக் கொண்டேன்.

கழிவறைகள் தான் நிஜமான போதி மரங்கள், வண்டியின் ஆட்டம் நின்றது. அவசரம் அவசரமாக கையைக் கழுவிக்கொண்டு, கழிவறைக் கதவைத் திறக்கும் முன்னர் இருந்த மைக்ரோ

வினாடிகளில் என் யோசனை எல்லாம், அவள் அங்கு இருப்பாளா, என் உடைமைகள் எல்லாம் பத்திரமாக இருக்குமா, என்பதாகத்தான் இருந்தது.

– வினையூக்கி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2014, மின்னூல் வெளியீடு:http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *