வழக்கம்போல கார்த்தியும் ரம்யாவும் மதிய உணவு இடைவெளியில் தனியாக போய் அமர்ந்து சாப்பிடும்போது, ரம்யா மெல்ல கிசுகிசு குரலில் பேச்சை ஆரம்பித்தாள்.
“கார்த்தி, நம்ம டீம் லீட் மோகன் ஒரு 70K (70,000) வாங்குவார் தானே”
“ம்ம் 20K கூடவே இருக்கும், என்ன திடீர்னு ஒரு கேள்வி, நெக்ஸ்ட் அப்ரைசல்ல நானும் அந்த ரேஞ்சுக்கு வாங்கிடுவேன்”
“ஆமா, ஆமா, ஊரில சொல்லிக்கிட்டாங்க அப்ரைசலா , ஆப்புரைசல் வச்சி வெளியேத் துரத்தப்போறாங்களான்னு தெரியல”
கார்த்தி அவளின் சாப்பாட்டுத்தட்டில் இருந்து வத்தல் குழம்பு ஒரு கவளச்சோற்றை எடுத்து ருசித்தபடியே
“பின்ன எதுக்கு இந்த கேள்வி, !!!”
“இவ்வளவு சம்பாதிக்கிற ஆளு, நாளைக்கு மதுரைக்கு அவரு போறதா இருந்த டிரெயின் டிக்கெட்டை கேன்சல் செய்ய சொல்லி நம்ம ஆபிஸ் ஆளு நாரய்யா வை மதியம் இந்த வேகாத வெயில்ல அனுப்பிச்சி இருக்காரு, டிக்கெட் கேன்சல் பண்ணி திரும்ப கிடைக்கப்போற பணத்தினாலா இவருக்கு என்ன பெரிய லாபம், அதை கேன்சல் பண்ணால் என்ன, பண்ணலாட்டி என்ன?”
“ம்ம்ம்ம்”
“இதுல கிடைக்கிறப்ப பணத்தை வச்சி கோட்டையா கட்டப்போறாரு, ”
“சரி, விடு ரம்யா , அவர் கேரக்டர் அப்படி, நீயும் நானும் சொல்லித்தான் யாரும் மாறனும்னு அவசியம் இல்லை, சண்டே என்ன படம் போகலாம்,”
“முதல்ல தக்ஷன்சித்ரா, போகலாம், டைம் இருந்தா மாயாஜால்ல ஏதாவது மூவி பார்த்துட்டு , பாசிரா ல டின்னர், சரியா”
“அப்படியே ஆகட்டும் மதமசல் ” மனதுக்குள் இந்த வாரம் இரண்டாயிரம் ரூபாய் காலி என்ற எண்ணத்துடன் வேற வழியில்லை என்று ரம்யாவிடம் பொய்யாய் சிரித்து வைத்தான்.
ooOoo
அன்று மாலை,
“தீஸ்கோ ரா, ஜாமிட்டிரி பாக்ஸு, ஸ்கெட்ச் பாக்கெட்”
“தாங்க்ஸ் நைனா” என்று நாரய்யாவின் 6 வதுபடிக்கும் பையன் மகிழ்ச்சியாய் வாங்கிக்கொண்டபோது மோகனுக்கு நாரய்யா மனதில் நன்றி சொல்ல மறக்கவில்லை.
ooOoo
நகரத்தின் மற்றொரு பகுதியில், ஒருவர் தனது மதுரைப்பயணத்திற்கான பயணச்சீட்டின் காத்திருப்பு நிலை எண் 1 ஆக இருந்தும் கடந்த மூன்று நாட்களாக அது உறுதி செய்யப்படாமல் இருக்கிறதே என்றக் கவலையுடன் , இணையத்தில் நிலவரத்தைப்பார்வை இட, S4 – 17 என்பதைக்கண்டவுடன் ,” எந்த புண்ணியவானோ கேன்சல் பண்ணிட்டாரு, தாங்க் காட், கடைசி நிமிச டென்ஷன் மிச்சம்” என்ற மகிழ்ச்சியுடன் உறுதி செய் பொத்தானை கிளிக்கினார்.
– பெப்ரவரி 28, 2008