ரத்தினம் அப்பா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 22, 2020
பார்வையிட்டோர்: 6,756 
 

வெளியே செல்ல முடியாத வெயில்.வியர்வையும் புழுக்கமும் ஏதோ ஒரு அரிகண்டமான நிலையில் நெளிகிறார் ரத்தினம் அப்பா. அந்த வார்ட்டில் உள்ள மறைவுக் கட்டில்களில் ஒன்றின் சொந்தக்காரர் அவர்.தன் மறைவை எடுத்துவிட்டு வெளியே நோக்குகிறார்.’மிஸி’ என்றழைக்கிறார்.யாருக்கோ ஊசி மருந்து கொடுத்துக் கொண்டிருந்த தாதி ராஜி நிமிர்கிறாள்.

‘மிஸி பிள்ளை,இங்க வா மோனை ஒருக்கா’ ரத்தினம் அப்பாவின் அழைப்பை ஏற்றுக்கொண்டு விரைகிறாள் அவரிடம்.

‘சீச்சீ என்ன வெயில், என்ன புழுக்கம், அப்பப்பா’ வெறும் வியர்வைப் புழுக்கம் மட்டுமில்லை அவருக்கு.வேதனைப் புழுக்கமும்தான் என்று ராஜிக்குத் தெரியும்..அதிகாலையில் ஒரு நோயாளியை அவர் அருகில் கிடத்தப்போய்,’என்ன குலமோ என்ன கோத்திரமோ’ என்று அவர் இழுத்ததும்,அதற்கு அவள்,’ நீங்கள் பெரியவர்கள்,படித்தவர்கள்,இப்படிக் கூறலாமா? இது ஒரு பொது இடம். எல்லோருக்கும் ஒரே மாதிரி. இப்படியெல்லாம் மற்றவர் மனதைப் புண்படுத்தக் கூடாது’ என்று அவள் கூறியதும்,அவள் காதில் ஒலிக்கிறது.

‘என்னப்பா வேணும்?’

‘இந்தக் காற்றாடியை ஒருக்காப் போட்டுவிடு ராசாத்தி’

மின்விசிறி சுழல்கிறது.

ராஜி செல்கிறாள்.

மூன்றாம் வார்ட் தெரியும்தானே உங்களுக்கு? யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியின்’ அக்ஸ்டென்ட் வார்ட்’.அதிலே எட்டாம் கட்டிலில் இருந்தவர்தான் ரத்தினம் என்ற பெரிய படிப்பாளர்,பணக்காரர்.அவருக்குத் தாதி பராமரிப்பு செய்தவர்தான் எங்கள் ராஜி;. முதல் நாளே இருவருக்கும் இந்த ‘என்ன குலமோ கோத்திரமோ’என்பதில் பிரச்சினை தொடங்கி விட்டது.

அதாவது அவள் டியுட்டிக்கு வந்தவுடன் அவரின் உஷ்ணத்தை அளவிட தேமாமீட்டரை வாயுள் வைக்கப் போனாள்.அப்போது பதறினார் அந்தப் பெரியவர்.

‘ஐயோ பிள்ளை வேண்டாம் ராசாத்தி.இதெல்லாம் எந்தப் பறையன் பள்ளன்களுக்கு வைத்ததோ? அதைப்போய் என் வாய்க்குள் வைக்கிறியே? வேண்டாம் ராசாத்தி. எனக்குக் காய்ச்சலும் இல்லை மண்ணுமில்லை.’ ராஜிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.தனது நேர்ஸிங் அனுபவத்தில் எத்தனையோ பிரச்சினைகளைக் கண்டவள் அவள்.ஆனால் திவிரமான சாதி வெறியரை இதுவரை கண்டதேயில்லை.

‘அப்பா இந்த எட்டாம் கட்டில்தான் உங்களின் படுக்கை.புதுத்துணி மாற்றிப் போட்டிருக்கிறேன்.சரியா?’ மூக்குக் கண்ணாடிக்குள்ளால் அவளுடைய தீட்சண்யமான பார்வை அவரை ஊடுருவுகின்றன.அவரோ பக்கத்து நோயாளரை எல்லாம் எடைபோடுகிறார்..அவருடைய முகம் கோணுகிறது,அகத்தைப்போல.

‘என்னப்பா பார்க்கிறீர்கள்.?’

‘இல்லை ராசாத்தி, பக்கத்தில படுத்திருப்பவன் என்ன குலமோ? எல்லாம் என் தலைவிதி இதையெல்லாம் அனுபவிக்க,உம், என்ன பண்ணட்டும்?’ அலுத்தபடி படுக்கையில் சாய்கிறார் அவர். ராஜி நகர்கிறாள்.

ஓருநாள்..

ஏழாம் கட்டில் நோயாளி ஒரு வாலிபர்,வயிற்றில் சத்திர சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. காய்ச்சல 103 பரனைட்டுக்;கு மேல் போய்விட்டது. ‘ஜஸ்’ பையை நோயாளியின் தலைக்கு வைத்துவிட்டு அந்த நோயாளியருகில் நின்று நெற்றிக்குக் குளிர்துணியால் ஒத்தடம் போட்டுக் கொண்டிருக்கிறாள்; ராஜி. அதைத் திரும்பிப் பார்த்த ரத்தினம் அப்பா பதறிப்போய்,’ மிஸி பிள்ளை-மிஸி கண்ணாடி மிஸி’ என அலறுகிறார்.

‘என்னப்பா ‘அவசரத்துடன் விரைகிறாள் அவள்.

‘பிள்ளை,நான் சொல்கிறன் என்று கோவியாதையணை,அந்தப்பெடியன் எனக்குத் தெரிந்தவன்,எளிய சாதி..’ அவர் முடிக்கவில்லை.ராஜியால் பொறுக்க முடியவில்லை.

‘தயவு செய்து இப்படியெல்லாம் பேசவேண்டாம். என்னுடைய கடமையைச் செய்ய விடுங்கள்.என் கடமை பணி புரிவது,அதில் சாதியில்லை,மதமில்லை,ஏழ்மையில்லை,செல்வமில்லை, இப்படியெல்லாம் இனிச் சொல்லவேண்டாம்.’ அமைதியாக,ஆனால் உள்ளத்தில் பதியும்படியும் கூறிவிட்டு நகர்கிறாள் அவள்.

‘ஓமோம்,.இப்ப நல்லதிற்குக் காலமில்லை.’என்றபடி சாய்கிறார் ரத்தினம்.பக்கத்து நோயாளருக்கு எல்லாமே தெரியும்.ரத்தினத்தின் குறுகிய உள்ளத்தை அவர் விசித்திரமாகப் பார்த்தார். இத்தனை பெரிய மனிதரிடம் எத்தனை கீழான குணம்,.

ராஜியின் ஊசி வண்டில் எட்டாம் கட்டிலைத் தாண்டிப் போய்விட்டது.அவள் மனம் மட்டும் எட்டாம் கட்டில்,ரத்தினம் அப்பாவுடன் நிற்கிறது.என்ன சாதிக் கொடுமையிது?

அவளுக்குப் புரியவில்லை.அவளுக்கு இளவயது,அதனால் இன்னும் விளங்கவேண்டியது அனேகமிருக்கலாம்.அவளுடைய பரந்த மனத்தைப்போல் அவளுடைய விரிந்த சேவையும் களங்கமற்றது. புண்பட்டோர் நெஞ்சிற்கும் பண்பட்ட பணிபுரியும் புனித சேவை.

ரத்தினம் அப்பாவின் ஜோடி பதினேழாம் கட்டில் சுந்தரம்.அவர் ஏதோ உயர்ந்த சாதியாம்.சத்திர சிகிச்சைக்காகக் காத்துக்கொண்டிருக்கும் அவர்கள் ஓய்வு நேரத்தில் அலட்டுவது இந்த பாவ வசனங்களைத்தான்.

ஓருநாள் ஒரு வயோதிபர் காரில் அடிபட்டுப் பதினெட்டாம் கட்டிலுக்கு வந்தார்.நாலைந்து தாதிகள் சேர்ந்து அந்த நோயாளியைத் தூக்கிக் கட்டிலில் வைத்து ,கட்டுத்துணிகளை அகற்றிக் காயத்திற்கு மருந்திடப் போதும் போதுமென்றாகி விட்டது.அதன் பின் ஒருபடியாகக் கண்திறந்தார் கிழவர்.’தாயே,புண்ணியவதி,நன்றாயிருப்பாயம்மா என்குழந்தைபோல’ என்றார். பக்கத்துக் கட்டில் சுந்தரத்திற்கு வாய் சும்மா கிடவாது.

‘மிஸி அவர் மகள் போல இருப்பியாம்அவர் ஆர் தெரியுமோ?’ அவர் சொல்ல வந்ததை முடிக்க விடவில்லை ராஜி.ஒரு பார்வை பார்த்தாள். சுந்தரம் வாயடைத்து விட்டான்.ராஜி சென்று விட்டாள்.

ரத்தினம் அப்பாவுக்குச் சத்திர சகிச்சை முடிந்து விட்டது. ஆனால் அதன் பிறகும் இரத்தப் பெருக்கு இருந்ததால் கட்டாயம் இரத்தம் ஏற்ற வேண்டிய நிலை.ரத்தினத்தின் ஒரேமகன் உயர்ந்த பதவி வகிப்பவர். உடல் நிலை சரியில்லையாம்.இரத்தம் கொடுக்க முடியாதாம். அடுத்து அவருடைய ஒரே மகள்.அவளாலும் முடியாது. அவள் கணவர் வரவேயில்லை கொழும்பிலிருந்து.ரத்தினம் அப்பாவின் நிலை மோசமாகிக்கொண்டு வருகின்றது.

‘இதோ பாருங்கள்,காசு கொடுத்தால் யாரும் இரத்தம் தருவார்கள்.வெளியில் யாரையும் கேட்டுப்பாருங்கள்.’ராஜி சொல்கிறாள்.

‘அப்படியா மிஸி,நான் போய்ப் பார்க்கிறேன்.’ மகள் போய்விட்டாள்.

நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது.

‘மிஸி அம்மா’ கைகட்டி வாய்புதைத்து உடம்பைக் குறுகி வைத்திருக்கும் ஒரு நெடிய உருவம்.கன்னங்கரிய உடல் எண்ணெய்ப் போத்தல்போல் பள பளக்கிறது.

‘என்ன வேணும்?’ ராஜி வினவுகிறாள்.

‘ரத்தினம் என்டு யாரும் இருக்கினமே இங்கை?’

‘ஆமாம் என்ன வேணும்?

‘அவருக்குத்தானே இரத்தம் கொடுக்கோணுமின்னிங்க?’

‘ஆமாம்,அதுக்கு நீங்க இரத்தம் கொடுக்க வந்தீர்களா?’

‘ஓமம்மா, அவரு மக வந்து கெஞ்சினா,பாவமாயிருந்துதம்மா,இங்கே வரச்சொன்னாங்க,அவரைக் கொஞ்சம் கூப்பிடுறீங்களா?’

ரத்தினம் அப்பா பிழைத்து விட்டார்.

உயர்ந்தெழுந்த அந்த மாடிக்கட்டிடத்தில், மாணவ வைத்திய சாரணிகள ;கலாசாலை மாடி ஜன்னலொன்றில் இருவிழிகள் இருளகலும்போதில் உலகின் துயிலெழுகையை ரசிக்கின்றன.மின் விளக்கின் கீழே தன் ‘வண்டியை’ நிறுத்திவிட்டு வெற்றிலை போடுகிறான் ஒரு தோட்டி.கன்னங்கரிய உடலமைப்பு.நீண்டு நெடியுயர்ந்த நெஞ்சமைப்பு! ராஜி கண்கொட்டாமற் பார்க்கிறாள்.அன்றைக்கு ரத்தினம் அப்பாவுக்கு உதிரம் கொடுத்தவன்தான் அவன்.!

ஆரம்பமாகிவிட்டது அவளின் டியுட்டி.

‘ரத்தினம் அப்பா குட்மோர்னிங்’

‘குட்மோர்னிங் ராசாத்தி.இந்த ஏழாம் கட்டிலில ஒரு புதுக் கிழவன். என்ன குலமோ?’ ரத்தினம் முனகுகிறார்.

ராஜியைப்பொறுத்தவரையில்,இந்த முனகல் வெறும் அர்த்தமற்ற முனகல்தான்.அவள் நெஞ்சில் தோட்டியின் நல் செயலே நிறைந்து போயிருந்தது.

(யாழ்ப்பாணத்தில் படிக்கும்போது ‘எழில் நந்தி’ என்ற புனைபெயரில் சாதிக்கொடுமை ரீதியாக’மல்லிகையில்’ எழுதிய கதை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *