கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 17, 2024
பார்வையிட்டோர்: 1,793 
 
 

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம்-10

லேடி டாக்டர் லாசரஸ் எனக்கு அடிக்கடி வைத்தியம் பார்ப்பவர். பேய் பிடித்துக்கொண்டது என்று சொன்னபோது கோபித்துக் கொண்டு, வீட்டுக்கு வருவதை நிறுத்திக் கொண்ட லாசரஸ், பிறகு பலதடவை கூப்பிட்டு அனுப்பியும் வருவதில்லை. “ஓ! முதலியார் வீட்டு அம்மாவுக்கா! டாக்டர் எதுக்கு? மந்திரக்காரனை அழைக்கட்டும் போ!” என்று கோபமாகக் கூறி அனுப்பிவிடுவார்கள். அதே லாசரசை அழைத்துக் கொண்டு வரும்படியாக, வேலைக்காரிக்குக் கூறினேன். அவள் மேலும் ஆச்சரியப்பட்டாள். “ஏண்டி! ஆந்தைபோல விழிக்கிறாய். அம்மாவுடைய போக்கே மாறிவிட்டதே என்று ஆச்சரியப்படுகிறாயா? இப்போது மாறித்தான் போய்விட்டாள். பழைய அம்மா இல்லை” என்று நான் கூறிவிட்டுச் சிரித்தேன். “அம்மா எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது நீங்கள் அதிகாரம் செய்ய ஆரம்பித்தபோது. ஆனால், பிறகோ எனக்குப் பயமாகிவிட்டது” என்றாள் அந்தப் பேதை. “ஏண்டி, பயம்? ஓஹோ! பிசாசு பயமா?” என்று கேட்டேன். ‘ஆமாம்’ என்று தலையசைத்தாள். “பைத்தியக்காரி, பேயும் கிடையாது, பூதமும் கிடையாது. லாசரஸ் டாக்டர் சொல்லுகிறதுபோல, எல்லாம் நரம்புக் கோளாறு. மேலும், மனிதர்களின் சுபாவத்தைக் கெடுக்க, மனிதரே போதும்” என்று நான் சொன்னேன். அவள் புரிந்து கொள்ளவில்லை. “மாறிவிட்டேன் என்று கூறுகிறாயே, அதுகூட உண்மை அல்ல; நானாக மாறிவிடவில்லை. மாறுதலை உண்டாக்கி விட்டார்கள்” என்றேன்; அதுவும் அவளுக்குப் புரியவில்லை. “அடி! உனக்குப் புரிகிறபடி கூறுகிறேன் கேள். சாணி இருக்கிறதே அது எப்படி இருக்கிறது? ஈரமாக, ‘கொள கொள’ வென்று, பழுப்புக் கலரில் இருக்கிறதல்லவா? பிறகு, அதே சாணி ‘வறட்டி’ யாகி எரிக்கப்பட்ட பிறகு, எப்படி மாறிவிடுகிறது?” என்று கேட்டேன். “சாம்பலாயிடுது” என்றாள் வேலைக்காரி. “சாணி சாம்பலாவது யாரால்? நம்மால்தானே?” என்று கேட்டேன். “ஆமாம். நாம் அடுப்புக்கு உபயோகப்படுத்துகிறோம்; சாணி வறட்டியாகி, பிறகு சாம்பலாகிறது” என்று கூறினாள். “சாம்பல் வேண்டும் என்ற எண்ணத்துக்காகவா நாம் வறட்டியை எரிக்கிறோம்? இல்லையல்லவா? நாம், எதற்காகவோ ஒரு வஸ்துவை உபயோகிக்கிறோம். நம்முடைய உபயோகத்திற்குப் பிறகு, அந்த வஸ்து வேறு உருவம், வேறு குணம் கொண்ட வேறு வஸ்துவாகி விடுகிறது. இது, நம்மால் நேரிட்ட மாறுதல் என்பது பற்றிக்கூட நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. இப்படி மாறும் என்பது தெரிந்தும், நாம் காரியம் செய்வதில்லை. அதைப்போல, மனிதரை மனிதர் பயன்படுத்தி, மாற்றிவிடுகிறார்கள். இதையே தெரிந்து செய்வதும் உண்டு. பால் தயிராவது எப்படி? நாம்தானே ‘புரை’ தெளித்து, பாலைத் தயிராக்குகிறோம். அது போலவேதான் மனிதரால் மனிதரின் சுபாவம், உருவம்கூட மாற்றப்படுகிறது இந்தக் காரியம் உலகில் ஒவ்வோர் விநாடியும் நடைபெற்றபடி இருக்கிறது. இவ்விதமாக ஏற்பட்டதே என் மாறுதலும்! இதைப் பேயும் செய்யவில்லை, பூதமும் செய்ததல்ல! என் கணவரேதான் என் மாறுதலுக்குக் காரணம்” என்று நான் விரிவாக விளக்கினேன். அவள் பாவம்; சாணி சாம்பலாவது, பால் மோராவது இவைகளைப் புரிந்துகொண்ட அளவு, என் மாறுதலைப் புரிந்துகொண்டு வரவேண்டும் என்பதை மறுபடியும் அவளுக்குக் கூறிவிட்டு நான் வெளியே புறப்பட்டேன்.

வாடகை வண்டியைக் கூப்பிடுவதற்கு எனக்குக் கூச்சமாக இருந்தது. வண்டிக்காரனின் கூச்சம் எனக்கு இருந்ததைவிட அதிகமாக இருந்தது.

“முதலியார் வீட்டு அம்மாவா? ஏனுங்க? நம்ம வண்டி எங்கேங்க?”

“கடைக்குப் போயிருக்கு.”

“போயிருந்தா என்னங்க. நான் போயி கூட்டிக்கொண்டு வருகிறேனுங்க.”

“ஏன்? உன் வண்டிக்கு என்ன?”

“ஒண்ணுமில்லைங்க. ஆனா, நீங்க இதிலே வருகிறதுன்னா…”

“ஏன், வேறே எங்காவது நீ போகணுமா?”

“ராமா! ராமா! அதுக்குல்லீங்க. இது, ‘வில்’ வண்டிகூட இல்லை. ஒரே ஆட்டமா ஆடித் தொலைக்கும். அதுக்குத்தான் பார்க்கிறேன்.”

“பரவாயில்லை.”

இவ்வளவு பேச்சுக்குப் பிறகுதான் வண்டியில் இடம் கிடைத்தது. பெரிய பணக்கார வீட்டு மகள், வாடகை வண்டியிலே போவது கௌரவக் குறைச்சல் என்று அவன் கருதினான்! அந்த எண்ணத்தைப் போக்கவே நான் அவனிடம் அவ்வளவு பேசவேண்டி இருந்தது. என்னைத் தன் வண்டியிலே ஏற்றிக்கொண்டு போவதாலே அவன் ஒருவித ‘கௌரவம்’ அடைந்தான். வழக்கமாக, வழியிலே வருகிறவர் போகிறவர்களுடன், ‘வம்பளப்பவன்’ அவன் என்று தெரியவந்தது. ஏனெனில் வழியிலே பலபேர் அவனிடம் பேசினார்கள். பெரும்பாலான பேச்சு அவசியமற்றது. அவனோ ஒவ்வொருவரிடமும் பேச்சை வளர்த்தாதீர்கள் என்று ஜாடை காட்டினான். அவர்களும் வண்டியிலே நான் உட்கார்ந்து கொண்டிருப்பது கண்டு மரியாதையாகப் போயினர்! வண்டிகள் எதுவந்தாலும் இவன் வழி சரியாக விடவே இல்லை. “போப்பா ஓரமாகப் போ” என்று அதட்டிக் கொண்டே சென்றான். அதாவது வண்டியிலே நான் இருக்கும்போது, வழக்கமாகக் காட்டும் பணிவுகூடத் தேவை இல்லை என்று அவன் எண்ணிக்கொண்டான். “அம்மா கால் வைத்தது எனக்கு அதிர்ஷ்டம்தான்” என்றான். பாவனைக்கு அல்ல; உண்மையாகப் பூரித்துப் போய்ச் சொன்ன வார்த்தை அது. அவனும் அதுவரை வண்டியை எங்கே ஓட்டவேண்டும் என்று என்னைக் கேட்கவில்லை; நானும் சொன்னவளல்ல. வண்டி மட்டும் போய்க்கொண்டே இருந்தது. அவன் ஏதேதோ தன் குடும்பக் கதையைப் பேசிக்கொண்டே இருந்தான். கொஞ்ச நேரத்தில் வண்டியை நிறுத்திவிட்டான். அப்போதுதான் தெரிந்தது அவன் வண்டியை, என் அப்பா வீட்டுக்கு ஓட்டிக் கொண்டு வந்திருக்கிறான் என்பது. என்ன செய்வது! அவன், நான் போகக்கூடிய இடம் அதுதான் என்று எண்ணம் கொண்டு அவ்விதம் செய்தான். அவன் மீது தப்பு இல்லை.

“வண்டியை அவிழ்த்துவிடட்டுங்களாம்மா” என்று கேட்டான். “வேண்டாம் இதோ வந்துவிடுகிறேன்” என்று கூறிவிட்டு, உள்ளே நுழைந்தேன்.

வீட்டிற்குள் நுழைந்தேன், எதிர்பாராத சம்பவம்; ஆனால் ஆச்சரியப்படும்படி, தங்கம் ஓடோ டி வந்தாள். என்னைக் கண்டதும், “அக்கா! வா! நானே வரலாம் என்று இருந்தேன்” என்றாள். எனக்குத் திகைப்பு ஏற்பட்டது. நான் உட்காரப் பாய் விரித்தாள்; இரண்டு தலையணைகளும் போட்டாள். அப்பா வெளியே போயிருக்கிறார் என்று நான் கேளாமல் அவளே சொன்னாள். வண்டியை ஏன் அவிழ்த்து விடவில்லை என்று கேட்டுவிட்டு, வண்டிக்காரனைக் கூப்பிட்டு அவிழ்த்துவிடும்படி உத்தரவிட்டாள். வேலைக்காரியை ஓட்டலுக்கு அனுப்பினாள்!

தங்கமா, துளசியா என்று நான் சந்தேகிக்கவேண்டி இருந்தது, அந்த உபசாரங்களைக் கண்டு. என் வாழ்க்கைக்கு ஒரு முள்ளான அவள், என் கணவரின் மனதை மாற்றிவிட்டவள், எனக்கு இழிவும் பழியும் ஏற்படும்படி செய்த தங்கம், இப்படி என்னை உபசரித்தால் எனக்கு எப்படி இருக்கும். என்னவோ கதை சொல்வார்களே, யாரோ ஒருவன் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான், பகல் வேளையில். வெயில் அவன் முகத்தில் பட்டது; அதைக் கண்டு ஒரு நாகப்பாம்பு படமெடுத்து, அவன் பக்கத்தில் இருந்துகொண்டு முகத்திலே வெயில் படாதபடி குடை பிடித்தது என்று சொல்வார்களே, அதைப் போல் இருந்தது தங்கம் எனக்கு உபசாரம் செய்தது. நான் எந்தவிதமாக நடந்து கொள்வது என்று தீர்மானத்துக்கு வரவே சிரமமாக இருந்தது. தங்கம் ஏன் தன்னுடைய போர்முறையை மாற்றிக் கொண்டாள் என்பதே விளங்கவில்லை. கேலி செய்கிறாளா? வெறும் பாவனையா? ஒருவேளை இப்படித்தான் நடக்கவேண்டும் என்று அப்பா கட்டளையிட்டாரோ? அல்லது என் கணவரே ஒரு சமயம், “என்ன இருந்தாலும் அவள் முதல், நீ இரண்டாவது தான். மேலும் அவள் உன் அக்கா; அவளிடம் நீ குரோதம் காட்டக்கூடாது” என்று யோசனை சொன்னாரோ என்று பலப் பல எண்ணங்கள் உண்டாயின.

காலையில் வந்தேன் – பரவாயில்லை – இப்போது மயக்கம் கிடையாது – ஆமாம் மாதம் நாலு – என்று இப்படித் துண்டு துண்டாக என் சேதிகளைச் சொன்னேனேயொழிய, எனக்குக் கலந்து பேசவோ அவளைப் போலக் கொஞ்சிக் குலாவவோ முடியவில்லை. எப்படியோ அவள், அவ்வளவு சாமர்த்தியமாக நடித்தாள். அந்தச் சமயத்திலே யாரேனும் கண்டால், “தங்கம், தங்கமான பெண் – இந்த ரங்கம் ஒரு ‘முசடு’; தங்கத்துக்கு அவள் அக்காளிடம் பிராணன்; ரங்கம் மகா கர்வம் பிடித்தவள்” என்று தான் சொல்வார்கள்.

“தங்கம்! உண்மையைக் கூறிவிடு. ஏன் இன்று என்றுமில்லாத் திருக்கூத்தாக இருக்கிறது? என்னை, உன் ஜென்ம விரோதியாக எண்ணியவளாயிற்றே, எதற்காக இன்று என்னிடம் இவ்வளவு கெஞ்சுகிறாய்? இது என்ன தந்திரம்? என்ன விபரீதத்துக்காக இந்த முன் ஏற்பாடு?” என்று கேட்டுவிடலாமா என்று யோசித்தேன். கேட்கும் துணிவு வரவில்லை. தங்கம், எனக்குக் காப்பி தயாரிப்பதாகச் சொல்லிவிட்டு சமையற்கட்டுக்குச் சென்றாள். நான், யோசனையிலாழ்ந்தபடி படுத்துக் கொண்டிருந்தேன். வீட்டிலே யாரும் இல்லை. வேலைக்காரியும் வெளியே போயிருந்தாள். வண்டிக்காரன், மிக மரியாதையாக உள்ளே வந்து தனக்கு அவசர வேலை இருப்பதாகவும், வேறு வண்டி கொண்டு வந்து விட்டுவிட்டுப் போவதாகவும் சொன்னான். “நீ போ அப்பா, நான் வேறு வண்டி கூப்பிட்டுக் கொள்கிறேன்” என்று சொல்லி அனுப்பிவிட்டேன். தங்கம் சமையற்கட்டிலிருந்து வருவதற்குள் அவளிடம் சொல்லாமலேயே வெளியே போய்விடலாமா என்று தோன்றிற்று. மறுபடியும் சே! அவள் என்னை ஒரு பைத்தியக்காரி என்றல்லவா எண்ணிக் கொள்வாள் என்ற எண்ணம் உண்டாயிற்று. என்னால் என்ன செய்வது என்று தீர்மானிக்க முடியாமல் திண்டாடினேன். ஏன் இங்கே வந்து சிக்கிக் கொண்டோ ம்? ‘மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்’ என்ற பழமொழியையும் மறந்து இங்கே வந்தோமே. “வலிய வந்தவளை வாவென்று கூட உபசரிக்காமல் எப்படி இருப்பது? அவள் இலச்சை கெட்டு வந்தாள்; நான், வெட்கங் கெட்டவளே! போடி வெளியே என்று எப்படிக் கூறுவது? என்ன இருந்தாலும் கூடப்பிறந்த பிறப்பல்லவா?” என்றெல்லாம் பேசுவாளே இந்தத் தங்கம். இதற்கெல்லாம் நாம் இடம் கொடுப்பதா? என்ன பைத்தியக்காரத்தனமான வேலை செய்தோம்? வீட்டிற்குள் நுழைகிற போதே அப்பா இருக்கிறாரா? என்று கேட்டுவிட்டு, அவர் இல்லை என்று தெரிந்ததும், பிறகு வருகிறேன் என்று கூறிவிட்டுப் புறப்பட்டிருக்கலாகாதா? ஏன் இப்படி விழிக்கவேண்டும் என்று எண்ணி என்னை நானே நொந்துகொண்டேன். எவ்வளவு சாமர்த்தியமாக நடிக்கிறாள் தங்கம்! விரோதத்தைத் துளியும் வெளியே தெரிய ஒட்டாதபடி தானே மூடி வைத்துக்கொண்டு பேசுகிறாள். நம்மால் முடியவில்லையே அதுபோல். ‘என்னையே இவ்வளவு திறமையாக மயக்குகிறாளே, இவளிடம் என் புருஷர் எப்படி மயங்காமலிருக்க முடியும்?’ என்று எண்ணி வெட்கமடைந்தேன்; பொறாமையும் கொண்டேன். அந்தத் திடீர்ச் சிரிப்பு. எனக்கு வரவில்லை! அவள் பேச்சுடன் கலந்துவரும் ஒருவகை ‘நாதம்’ என்னிடம் இல்லை. என் கூந்தல் நெற்றியில் புரள்வது எனக்குத் தெரிவதற்குமுன், அவளல்லவா அதைச் சரிப்படுத்துகிறாள்! எங்கிருந்து கற்றுக்கொண்டாள் இந்த வித்தையை! என்னோடு பிறந்தாள். என்னையே வெல்கிறாளே! என்று ஆச்சரியமடைந்தேன். என்னால் இவ்விதமாகவெல்லாம் யோசித்துக் கொண்டிருக்க முடிந்ததேயொழிய, ஒருவிதமான தீர்மானத்துக்கும் வரமுடியவில்லை.

வேலைக்காரி பலகாரப் பொட்டலங்களுடன் வந்தாள். அவளை நிறுத்திக்கொண்டு, என் மனதிலிருந்த பாரத்தைப் போக்க அவளிடம் பேசலானேன்.

“ஏண்டி! என்ன இது, உங்க தங்கம் என் மீது இவ்வளவு அன்பு காட்டுகிறாளே!” “இல்லாமே போவுங்களா! கூடப் பிறந்த பொறப்பல்லவா? மேலும், தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்னு சொல்வாங்களே!”

“அந்தக் கதை கிடக்கட்டும்டீ! இவ என்ன உண்மையாகவே தானா என்னை உபசரிக்கிறாள்?”

“நான் என்னத்தைக் கண்டேனுங்க. நீங்க ரெண்டு பேரும் இப்படி அன்பா வாழணும், நான் என் கண்குளிரப் பார்க்கணும், அவ்வளவுதான் எனக்கு வேண்டியது.”

“அது கிடக்கட்டும்டீ! சதா சர்வாகலமும் என்னைத் திட்டிக் கொண்டிருப்பதுதானே தங்கத்தின் வேலை.”

“அதெல்லாம் ஏம்மா, இப்போ பேசணும். என்னமோ அது மனசு மாறியிருக்கும். இனிமேலாவது நீங்க ரெண்டு பேரும் சண்டை சச்சரவு இல்லாம இருங்களேன். நல்லதுதானே.”

“நல்லது கெட்டது இருக்கட்டும். திடீருன்னு இவளுடைய நடவடிக்கை மாறினது ஏன்? அப்பா ஏதாவது சொல்லி இருப்பாரா?”

“இருக்கும்.”

“உனக்குத் தெரியாதா?”

“தெரியாதுங்களே.”

இதற்குள் தங்கம் காப்பியுடன் வந்துவிட்டாள். சாப்பிட்டாலொழிய விடமுடியாதென்று பலவந்தம் செய்தாள். எனக்குத் திடீரென்று ஒரு பயம் தோன்றிவிட்டது. என்மீது தீராப் பகை கொண்ட இவள், ஒரு சமயம், தனியாக வந்து சிக்கிக் கொண்ட என்னை ஒழித்துவிடுவதற்கே, என்னிடம் தந்திரமாகச் சிரித்துப் பேசி பலகாரத்திலோ, காப்பியிலோ ஏதாவது விஷத்தை வைத்து விடுகிறாளோ என்ற பயம் பிறந்துவிட்டது. தந்திரக்காரத் தங்கம் அதையும் தெரிந்து கொண்டாள் போலிருக்கிறது. “சாப்பிடக்கா! இந்த அல்வா நன்றாக இருக்கும்” என்று கூறிக்கொண்டே, கொஞ்சம் அதிலே எடுத்துத் தின்றாள். அதுபோலவே ஒவ்வொரு பலகாரத்தையும் கொஞ்சம் கொஞ்சம் தின்றாள். எனக்கே வெட்கமாகிவிட்டது. நானும் தின்றேன். காப்பி சாப்பிடும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. உடனே அவள் காப்பியிலேயும் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு, “அக்கா! சர்க்கரை போதாது போலிருக்கே” என்று கேட்டாள். ‘போதும்’ என்று கூறிக்கொண்டே நான் அதையும் சாப்பிட்டுவிட்டேன். கை அலம்புவதற்குச் சமையற்கட்டுப் பக்கம் சென்றேன். தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள். வெற்றிலைத் தட்டை இழுத்தேன்; அவள் சுண்ணாம்பு தடவி வெற்றிலை மடித்துக் கொடுத்தாள். குறிப்பறிந்து நடந்துகொண்டாள். என்னைக் கொல்வதற்குப் பதில் உபசாரத்துக்குமேல் உபசாரம் செய்தாள். என்ன காரணம்? என்ன சூழ்ச்சி இது? எனக்கொன்றும் புலப்படவே இல்லை. என்னைச் சந்தோஷப்படுத்தி என்ன காரியத்தைச் சாதித்துக் கொள்ளப் போகிறாள்! ஒரு வேளை அன்பாக நடந்து கொள்வதன் மூலம், என்னுடைய சம்மதத்தையே பெற்று, கலியாண ஏற்பாட்டை முடித்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறாளா என்று எண்ணினேன். பலப்பல எண்ணினேனே யொழிய, வாய் திறந்து அவளை எதுவும் கேட்கத் தோன்றவில்லை. ‘போய்விட்டு வருகிறேன்!’ என்று பத்துத் தடவைக்கு மேல் சொல்லிப் பார்த்தேன். ஒவ்வொரு தடவையும், “இரு அக்கா! போகலாம் இரு” என்று உபசாரம் பேசிப் பேசி என்னைத் தடுத்துக்கொண்டே இருந்தாள். “நேரமாகிறது தங்கம்…” என்றேன். குழந்தை பாலுக்கு அழுமோ? இப்போது ஏதுக்கா! இன்னம் கொஞ்சம் நாள் கழித்துத்தானே!” என்று கேலியும் பேசினாள்.

“அக்கா! நான் ஏதாவது தவறு செய்து இருந்தால் என்னை மன்னித்துவிடு” என்றாள் திடீரென்று. நான் மிரள மிரள விழித்தேன். அவள் கண்களிலே நீர் தளும்பிற்று.

“என்னடி தங்கம்? உன் நடத்தையே இன்று பைத்தியக்காரச் சேஷ்டையாக இருக்கிறதே!” என்று நான் கேட்டேன்.

“அக்கா! நான் தவறு செய்துவிட்டிருக்கிறேன் என்பது எனக்கே தெரியும். இந்த வாழ்க்கையைச் சதம் என்று நம்பி, உலகத்திலே எத்தனை பொய், சூது, வஞ்சனை நடக்கிறது. அதுபோல, நானும் ஏதேதோ மனக்கோட்டை கட்டி, உன் மீது வீணாக விரோதம் கொண்டு கெடுதிகள் செய்தேன்…” என்று கூறிக்கொண்டே விம்மினாள்.

“தங்கம்! என்ன உனக்கு பைத்தியமா? ஏதோ என்னுடைய தலைவிதிக்கு ஏற்றபடி கஷ்டங்கள் நேரிட்டன. நீ என்ன செய்வாய் அதற்கு? உனக்கும் எனக்கும் பகை மூண்டது கூட என் பொல்லாத வேளைதான்” என்று நான் சொன்னேன். எனக்கும் கண்களிலே நீர் கசியலாயிற்று.

“அக்கா! நான் எப்படி என் வாயால் சொல்லுவேன்…”

“என்ன? எதை? இதென்னடி தங்கம் இப்படி விம்முகிறாயே.”

“அக்கா! நாம் பிறந்தது இருவர்…”

“என்னடி உளறி…!”

“அக்கா! நாம் இருவர் வாழக் கடவுளுக்கு விருப்பம் இல்லையே…”

“என்னடி அசடே! என்ன சொல்லுகிறாய் இப்போது?”

“அக்கா! நான் இன்னும் ஆறு மாதம்…”

“என்ன ஆறு மாதம்…”

“ஆறாம் மாதம்…”

“யாருக்கு? என்னடி உளறிக்கொட்டுகிறாய்! ஆறாம் மாதமா? உனக்கா?”

“அதல்ல அக்கா! இன்னும் ஆறு மாதத்தில் நான் செத்துவிடுவேனாம்…” என்று கூறிவிட்டுத் தங்கம் கோவென்று அழுதாள்.

அத்தியாயம்-11

தங்கம், தனக்குச் சில மாதங்களில் மரணம் சம்பவிக்கும் என்று சோதிடன் எவனோ கூறினது கேட்டு, என்னிடம் கூறிக் கோவென அழத்தொடங்கியதும், அதுவரை மற்போருக்காக ஒருவர் வலிவை, மற்றவர் அறியும் பொருட்டு எதிர் எதிர் நின்று உற்று நோக்கியபடி இருப்பது போல் இருந்து வந்த நான், அவளை அருகே இழுத்து அன்புடன் அணைத்துக் கொண்டு, கண்ணீரைத் துடைத்து, “அடி பேதைப் பெண்ணே! உன்னை நான் மகா புத்திசாலி, தைரியசாலி என்று அல்லவா எண்ணிக் கொண்டிருந்தேன். என்ன பித்தமடி உனக்கு. எவனோ பிதற்றியதைக் கேட்டுக் கொண்டு அழலாமா? அடி அசடே! யார் அந்த மடையன்? எப்படித் துணிந்து சொன்னான் அந்த வார்த்தையை? அவனிடம் நீ என்ன கேள்வி கேட்டாய்? அவன் வாய்த்துடுக்குக் கொண்டவனாக இருக்கவேண்டும். இல்லையானால் இவ்விதமான அவலட்சணப் பேச்சைக் கூறுவானா? அவன் கூறினதைக் கேட்டுச் சிரித்துவிட்டு, ‘போடா மகா பெரிய அறிவாளிதான் நீ’ என்று கூறுவதை விட்டு, அவன் பேச்சை உண்மை என்று நம்பி அழலாமா! தங்கம்! இதோ பார் இப்படி! என்னடி உனக்கு? எவனோ ஒரு மூடன் உரை கேட்டு, இப்படி மதி மயங்குவதா?” என்று பலப்பல கூறி அவளைத் தேற்றினேன். தங்கமோ விம்முவதை விடவில்லை. “அக்கா, நானும் சோதிடர்களின் உரையை நம்புவதில்லை. உனக்கே தெரியுமே, நான் தான் எதற்கும் துருவித் துருவிக் காரணம் கேட்பவளாயிற்றே. எந்தப் புரட்டையும் உடனே நம்பிவிடும் பேதையல்ல. இந்தச் சோதிடன் சொன்னது கேட்டு மட்டும் நான் நம்பினதற்குக் காரணம் இருக்கிறது. ஒன்று சொல்கிறேன், கேள் அக்கா! பெரும்பாலும் இந்தச் சோதிடர்கள், உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களிடம் முகஸ்துதியான வார்த்தை பேசி, மூன்று உலகமும் உங்கள் காலடியில் விழும்! உம்முடைய எதிரிகள் மூக்கிலும் வாயிலும் இரத்தம் வழிந்து ஒழிவார்கள்! உங்கள் மனம் கருணை வெள்ளம் கொண்டது! என்றெல்லாம் கூறுவார்கள் என்பது எனக்குத் தெரியும். அதனாலேயே நான், என் ஜாதகத்தைச் சோதிடனிடம் கொடுத்தபோது வள்ளியின் ஜாதகம் என்றேன். அவன் நம்புவதற்காகவே, என் ஜாதகக் குறிப்பை வேறோர் காகிதத்தில் எழுதி, என் பெயரைப் போடாமல் வள்ளி என்று போட்டுத் தந்தேன். அவன் அந்த ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, இன்னும் ஆறு மாதத்திலே இந்த வள்ளி இறந்துவிடுவாள் என்று கூறினான். நான் நம்பாமல் எப்படி இருக்க முடியும்?” என்று கூறிவிட்டு மறுபடியும் அழ ஆரம்பித்தாள். இதென்னடா சங்கடம் என்று நான் எண்ணினேன். “வள்ளி! யாரவன் அந்த வாயாடி?” என்று கேட்டேன். அவள், “அவர் பெரிய சோதிடர்தானம்மா! வாழ்முனி அவருக்குப் பிரத்யட்சம்” என்றாள். “சரியான மூடத்தனம்! நீயும் சேர்ந்துதான் இப்படி, தங்கத்தின் மனதைக் குழப்பி விட்டிருகிறாய்” என்று அவளையும் கண்டித்தேன். தங்கம் சோகத்துடன், “அக்கா! உனக்கு என் மேல் இருக்கும் ஆசையின் காரணமாக இப்படிப் பேசுகிறாய். எனக்கென்னவோ அவன் சொன்னது முதல், மார்பு கூட அடிக்கடி ஒருவிதமாக வலிக்கிறது. இரவிலே தூக்கம் நிம்மதியாக இருப்பதில்லை. கெட்ட நினைவுகள்! என் மனதிலே ஒரு விதமான திகில் பிடித்துக் கொண்டு விட்டது” என்று சொன்னாள். அவளைச் சமாதானப் படித்த நான், சோதிடத்தின் போக்கு, சோதிடர்களின் புரட்டு, அவர்களின் வார்த்தைக்குப் பலவகையான அர்த்தம் இருக்கிற வேடிக்கை ஆகியவற்றைச் சொன்னேன். அவளோ திருப்தியடையவில்லை. “அப்பாவிடம் சொல்லி அவனை நையப் புடைக்கச் சொல்கிறேன்” என்றேன். தங்கம், “அப்பா காதிலே விழுந்தால் அவனை அடிப்பார். ஆனால் அவரும் என்னைப் போலவேதான் வேதனைப்படுவார். ஏனெனில், அவருக்கு அந்தச் சோதிடனிடம் ரொம்ப நம்பிக்கை. நமது மிராசு கேஸ், மேல் கோர்ட்டில் இருந்தபோது அவன் கூறிய சோதிடம் பலித்தது. அதிலிருந்து அப்பாவுக்கு அவன் வார்த்தையிலே அபார நம்பிக்கை. ஆகையாலேதான் நான் அவன் சொன்னதை அப்பாவிடம் சொல்லக்கூட இல்லை. சொன்னால், அவர் இந்த வயோதிகப் பருவத்திலே இதுபற்றி வேறு மனம் கஷ்டப்படுவார். ஏற்கெனவே உன்னால் அவர் ஏக்கம் அனுபவிக்கிறார். இனி என் கதியும் இப்படி ஆகும் என்று தெரிந்துவிட்டால் படுத்த படுக்கையாகிவிடுவார். அக்கா நாம் இருவர் பிறந்து அவரைப் படாதபாடு படுத்திவிட்டோம்” என்று கூறித் துக்கித்தாள்.

“நீ என்ன சொன்னாலும் சரி; நான் துளிகூட நம்ப மாட்டேன். எனக்கு இப்போது இப்படிப்பட்ட புரட்டர்களின் போக்கு மிக நன்றாகத் தெரிந்துவிட்டது. போகட்டும்! இந்த மாதிரி புரட்டர்கள், ஆபத்து வரும், மரணம் சம்பவிக்கும், கிரஹம் போதாது என்றெல்லாம் கூறிப் பயங்காட்டுவதோடு நிறுத்திக்கொள்ள மாட்டார்களே! இந்த ஆபத்து நீங்க ஆயிரம் கண்ணுடையாளுக்கு அபிஷேகம் செய்யவேண்டும்! இலட்ச தீபம் ஏற்றவேண்டும்! சொர்ணத்தால் சர்ப்பம் செய்து சொக்கநாதன் கோயிலுக்குத் தானம் தரவேண்டும். நூறு பண்டாரங்களுக்குச் சோறு போடவேண்டும் என்று ஏதாவது உளறுவார்களே! அதுபோல இவன் ஒன்றும் சொல்லவில்லையா?” என்று கேட்டேன். “சொன்னான்” என்றாள் தங்கம். “என்ன?” என்று கேட்டேன். தங்கம் அதற்குப் பதில் கூறவில்லை. நெடுநேரம் ஏதேதோ பேச்சை மாற்றியபடி இருந்தாளே தவிர, என் கேள்விக்குப் பதில் கூறவில்லை. நானோ விடவில்லை. சொன்னால்தானாயிற்று என்றேன். “சொல்லி என்ன பயன்?” என்று சோதித்தாள் தங்கம். “சொல்லடி! என்னதான் செய்ய வேண்டுமாம். ஆபத்து போக” என்று கேட்டேன். அவள் அதற்கு நேர்முகமாய்ப் பதில் கூறவில்லை.

“அக்கா! இன்று நாம் இருவரும் எதையும் மறைக்காமல் பேசவேண்டும். அத்தானை நான் கலியாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்பது உனக்கு ஆத்திரத்தைத்தானே ஊட்டிவிட்டது” என்று கேட்டாள். இவ்வளவு தைரியமாகச் சிக்கல் நிறைந்த விஷயத்தை மிகச் சாதாரணமாகப் பேசுகிறாள். தங்கத்தின் சாமர்த்தியம் அதுதானே.

“தங்கம்! மனதிலுள்ளதை மறைக்காமல் தானே பேச வேண்டும்? ஆத்திரமா எனக்கு என்று கேட்கிறாய். இருக்காதா? பிறக்காதா?” என்று நான் அவளைக் கேட்டேன்.

“உன்னை ஆத்திரப்படச் செய்வதால் எனக்கென்ன அக்கா இலாபம்? யோசித்துப் பதில் சொல்லு. உன்னுடைய அன்பைப் பெறவேண்டும் என்று நான் எண்ண முடியுமே தவிர, உன் கோபத்தைக் கிளப்பிவிடுவதிலே எனக்கு விருப்பம் இருக்க முடியுமா? நீயே சொல்லு!” என்று அவள் வேறோர் கேள்வி, முன்னதைவிடக் கூர்மையான அம்பு போட்டாள்.

நான் பேசின பேச்சைக் கேட்ட அந்தப் பேயோட்டி என்னை வக்கீல் பேய் பிடித்துக் கொண்டது என்று சொன்னான்; தங்கம் பேசுவதைக் கேட்டால், என்ன சொல்வானோ தெரியவில்லை.

“தங்கம்! வளைத்துப் பேசுவது வம்பில்தான் போய் முடியும். எனக்கு உன் மீது இருந்த அன்பு மாறினதும், நமக்குள் பகை மூண்டதும், உண்மையில் நீ என் கணவரைக் கலியாணம் செய்து கொள்ள ஏற்பாடு நடைபெறுகிறது என்று நான் அறிந்ததால்தான். நான் மட்டுமல்ல! உலகிலே எந்தப் பெண்ணும் ஆத்திரமடையத்தான் செய்வாள். மரக்கட்டையா நான்? என் கணவர் வேறொருத்தியை, அவள் என் கூடப் பிறந்தவளாகக் கூட இருக்கட்டும், எதற்காக இன்னோர் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டும்? யாருக்குத்தானடியம்மா, கோபம் வராது!” என்று நான் கேட்டேன். எனக்குக் கொஞ்சம் கோபந்தான். அவளோ சாந்தமாகப் பேசினாள். “அக்கா! நான் பேசுவதைப் புரிந்துகொண்டு பதில் சொல்லு. நான் நீ ஆத்திரப்பட்டது தவறு, ஆத்திரப்படக்கூடாது என்று சொல்லவில்லையே. அத்தான் என்னைக் கலியாணம் செய்துகொள்ள எண்ணுகிறார் என்று தெரிந்த பிறகுதானே ஆத்திரம் பிறந்தது என்று கேட்டேன். ஆமாம் என்று ஒப்புக் கொண்டாய். அடுத்த கேள்வி நான் கேட்டது உன் ஆத்திரத்தைக் கிளப்பி நான் அடையப் போகும் இலாபம் என்ன என்பது. அதற்குப் பதில் கூற வேண்டிக்கொள்கிறேன். பதில் கூறாவிட்டால் போகிறது! அக்கா கொஞ்சம் யோசித்துப்பார் நீயாக, தனியாக இருக்கும் போதாகிலும்!” என்று தங்கம் சொன்னாள். என் கோபம் அதிகரித்தது. “என்ன இருக்கிறது யோசிக்க! சிறு பிள்ளைகள் தும்பியைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை அவர்கள் விளையாட்டு என்று எண்ணுகிறார்கள். அது போல நீ என் வாழ்விலே நஞ்சு கலந்துவிட்டு, அது சர்வ சாதாரண விஷயம் என்று எண்ணுகிறாய். தைரியமாக என்னையே கேள்வி கேட்கிறாய். என் வாழ்வைப் பாழாக்கப் பார்க்கிறாய். என் உள்ளத்திலே இருக்கும் சந்தோஷத்தை அழிக்கிறாய். இது தெரியவில்லையா உனக்கு. இதை யோசித்து வேறே பார்க்க வேண்டுமா நான். நீ சுகப்பட்டு, சந்தோஷப்பட்டு இருக்க எண்ணங்கொண்டு, என் வாழ்வைக் குலைக்கிறாய்” என்று சொன்னேன். தங்கத்தின் புன்னகை, என்னை ஈட்டிபோல் குத்திற்று. அவள் தந்த பதிலோ பளிச்சென்று கன்னத்தில் அறைவது போலிருந்தது.

“அக்கா! அவரவர்கள் தங்கள் தங்கள் வாழ்வு சுகமாக, சந்தோஷமாக இருக்கவேண்டுமென்றுதான் எண்ணுவார்கள், அது தவறல்ல! நானும் அதுபோல எண்ணிடுவதிலே குற்றம் இல்லை. ஆனால் ஒரு விஷயத்தை யோசிக்காமலே நீ பேசுகிறாய். நானும் சந்தோஷமாக இருக்கவும் நீயும் சந்தோஷமாக இருக்கவும் முடியாதா? உன் வாழ்வைக் கெடுத்துத்தானா நான் சுகம் தேடிக் கொள்ள வேண்டும்? ஏன் அக்கா, அதை எண்ணிப் பார்க்கவில்லை நீ?” என்று கேட்டாள்.

“எப்படி முடியும்? நீதான் என் கணவருக்கு மனைவியாகி, மனமகிழ்ச்சி தேடிக்கொள்ள முனைந்து விட்டாயே! சக்களத்தியாகக் கிளம்பிவிட்டு, சாவதானமாகப் பேசிக் கொண்டும் இருக்கத் துணிகிறாய். தங்கம்! இதோ பார். நீ சுகப்படுவதற்காக என் வாழ்விலே வேதனையை அனுபவிக்க வேண்டுமா? ஏனடி உனக்கிந்த கெடுமதி?” என்று பதைபதைத்துக் கேட்டேன்.

“அக்கா! நான் சுகமடைய, வாழ்விலே சந்தோஷம் தேட ஏன் வேறு ஒருவரை மணம் செய்து கொள்ளக்கூடாது! உலகிலே ஆடவரே இல்லையா? இருக்கும் ஆடவர் அத்தனை பேரும் தங்கம் குரூபி என்று தாலி கட்ட மறுத்துவிட்டார்களா? நான் உன் தங்கைதானே! அழகற்றவளல்லவே! செல்வமும் சீரும் நமக்குள் சமமாகத்தானே இருக்கிறது! நான் வேறொருவரைக் கலியாணம் செய்துகொண்டு இன்பமாக இருக்கலாம்; அது போலவே நீயும் இருக்கலாமல்லவா?” என்றாள்.

“என்னடி இது! நான் கேட்கவேண்டிய கேள்வியை நீ கேட்கிறாய்? உன்னை மணம் செய்து கொள்ள யாருக்குத்தான் மனம் இராது. என்னிலும் நீதான் அழகி! அதைக் கண்டு பூரித்த கண்கள்தானே இவை! உன் வயதும் வசீகரமும் வளர வளர, என் மனதிலே, உன் மீது அன்பும் வளர்ந்தபடிதானே இருந்தது. உனக்குத் தக்கமணாளன் கிடைத்துத் திருமணம் நடக்க வேண்டும், கண்ணால் கண்டுகளிக்க வேண்டும் என்று தானே நான் ஆவலாக இருந்தேன். நீதானே என் ஆசையிலே கல் வீசத் துணிந்தாய். யார் வேண்டாமென்றார்கள், நீ ஓர் மணாளனைத் தேடிக் கொள்வதை?” என்று நான் கேட்டேன்.

“இருவருமே ஒரே விதமான கேள்வியை கேட்டுக்கொள்கிறோமே அக்கா! அதற்குப் பதில்தான் என்ன? அழகு, இளமை, செல்வம், வசதி எல்லாம் இருக்கிறது. வேறு ஒருவரைக் கலியாணம் செய்துகொண்டு சுகப்படலாம்; சந்தோஷமாக இருக்கலாம்; நீ துக்கப்பட்டு அதனாலே நான் சந்தோஷப்பட வேண்டும் என்பதில்லை. இருவருமே சந்தோஷமாக இருக்கலாம். அதற்கான சௌகரியத்துக்குக் குறைவில்லை! ஆனால் அது முடியவில்லை! ஏன் அக்கா?” என்று மறுபடியும் கேள்வி போட்டு மடக்கினாள்.

“ஏனா! பேராசை பிடித்த என் புருஷர், பணத்தாசைக்கு அடிமையாகி, நமது குடும்பச் சொத்திலே உனக்கு வரவேண்டிய பாதி பாகம், நீ வேறு யாரையாவது கலியாணம் செய்து கொண்டால், அவனுக்குப் போய்விடுமே என்று எண்ணி உன்னையும் தானே கலியாணம் செய்து கொண்டு, மொத்தச் சொத்தையும் தானே அடைய வேண்டுமென்ற கெட்ட எண்ணங் கொண்டு, உன் மீது வலை வீசினார்; நீ அதிலே விழுந்தாய். இருவரும் சதிசெய்து என்னை இக்கதிக்குள்ளாக்கினீர்கள். பேய் பிடித்தவள் பித்தம் பிடித்தவள் என்று தூற்றினீர்கள்” என்று ஆத்திரமும் அழுகையும் பொங்கும் குரலிற் சொன்னேன்.

“நீ சொன்னது அத்தனையும் உண்மை. நான் மறைக்கவில்லை. அத்தான், பணத்தாசை பிடித்துத்தான் என்னை மணம் செய்து கொள்ளத் தந்திரமெல்லாம் செய்தார். அவர் எண்ணத்தையும் ஏற்பாட்டையும், தெரிந்துதான் கூறியிருக்கிறாய்! ஆனால், முக்கியமான விஷயத்தை மறந்துவிடுகிறாயே அக்கா! அத்தான், தன் சுயநலத்துக்காக, இந்தச் சூது செய்திருக்கிறார். அது விளங்கிவிட்டது. நானும் அதனை மறைக்கவில்லை. ஆனால், அந்த ஏற்பாட்டுக்கு அவருடைய தந்திரத்துக்கு, சூதுக்கு, நான் ஏன் சம்மதிக்கிறேன்? அதற்கு காரணம் என்ன? அதை யோசித்தாயா?” என்று கேட்டாள்.

“வலையில் வீழ்ந்துவிட்டாய்” என்று நான் பதில் சொன்னேன். ஆனால், எனக்கே, அந்தப் பதில் திருப்திகரமாக இல்லை. அவள் இலேசாகச் சிரித்துவிட்டு, “அத்தானால், தன்னிடம் வியாபார நிமித்தமோ பஞ்சாயத்துக் காரியமாகவோ வருபவர் மீது வலைவீச முடியும்! அக்கா! என்னைச் சரியாகப் பார்த்து விட்டுச் சொல்லு. என் மீது அவரால் முடியுமா? அவர் அந்தஸ்தின் அறிகுறி, செல்வத்தின் சின்னம், கௌவரமான நடை, நொடி பாவனை, அவரால் ஊரிலே மதிப்புத் தேடிக் கொள்ள முடியும். அவ்வளவுதான் முடியுமே ஒழிய, ஒரு இளமங்கையின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள அவரிடம் என்ன இருக்கிறது! அவர் வலை வீசினார். அதிலே நான் வீழ்ந்தேன் என்று கூறுகிறாய், என்னை அறிந்துகொள்ளாமல். உன் தங்கை ஏமாளியல்ல; அத்தான் மங்கையரை மயக்கிடும் மாந்தரீகரல்ல! அவர் வலைவீசியது என் மீதுமல்ல, சொத்தின் மீது; ஆனால் அந்தச் சொத்தைக் காட்டி அவரைச் சொக்கவைத்து என் அருகே வரும்படி செய்தவள் நான்; வலையை நானும் வீசினேன் அவர் மீது! ஆனால் அவருக்காக அல்ல! அவரிடம் மயங்கி அல்ல! உலகிலே அவரே கடைசி ஆடவர் என்பதற்காக அல்ல! உன் வாழ்வை வேதனையுள்ளதாக்க வேண்டும் என்பதற்காகவும் அல்ல! எனக்காக – அக்கா – என் உயிருக்காக – நான் பிழைக்க சோதிடன் குறிப்பிட்ட பேராபத்திலிருந்து தப்ப” என்றாள்.

அத்தியாயம்-12

உயிருக்கு ஆபத்து வரும் என்று எவனோ ஒரு சோதிடன் சொன்னதைக் கேட்டு, மருண்டு போனதாகவும், அந்த மருட்சியின் காரணமாகவே, என் கணவரைத் தன் புருஷராக்கிக் கொள்ளத் துணிந்ததாகவும், என் தங்கை என்னிடம் சொன்னது கேட்டு, நான் சிரித்தேன். சிரித்தேனே தவிர கொஞ்சம் பரிதாபம் பிறந்தது. “போடி! பைத்தியக்காரப் பெண்ணே!” என்று கேலி செய்தேன். அவளோ திருப்தி பெறவில்லை. சோகத்துடனேயே பேசலானாள், “அக்கா! சோதிடன் குறிப்பிட்ட ஆபத்திலிருந்து தப்புவதற்கும் அத்தானைக் கலியாணம் செய்து கொள்வதற்கும் என்ன சம்பந்தம் என்று நீ கேட்கவில்லையே, ஏன்? அது உனக்கு ஆச்சரியமாக இல்லையா?” என்று தங்கம் கேட்டாள். நான் எவ்வளவு அசடு பார் தம்பி? நானாகக் கேட்டிருக்கத்தானே வேண்டும் அந்தக் கேள்வியை? கேட்கவேண்டுமென்று தோன்றவே இல்லை. அவள், தான் கிளப்பிய கேள்விக்குத் தானே பதிலும் கூறிவிட்டாள்.

“அக்கா! கன்னி கழியாமல் நான் இறந்துபோனால் குடும்பத்துக்கு ஆகாது. ஆகவே, இறந்துபோகு முன்பு, கலியாணம் செய்து கொண்டாக வேண்டும். வேறு யாரையேனும் மணம் செய்துகொண்டு, அவர்கள் மனதை உடைக்க நான் இஷ்டப்படவில்லை. அத்தான் கொஞ்சம் அழுத்தமான நெஞ்சுள்ளவரல்லவா! நான் இறந்துபோனால் அவர் சகித்துக்கொள்ள முடியும். மேலும், நீ இருக்கிறாய். ஆகவே தான், நான் அத்தானைக் கலியாணம் செய்து கொள்ளத் தீர்மானித்தேன். இதை நீ நம்பினாலும் சரி, நயவஞ்சகம் என ஒதுக்கினாலும் சரி, எனக்குக் கவலை இல்லை. என் கவலை எல்லாம் இறக்கும்போது நான் கன்னியாக இருந்து குடும்பத்துக்கு நாசம் ஏற்படும் நிலை வரக் கூடாது என்பதுதான்” என்று சொன்னாள்; இரண்டோ ர் சொட்டுக் கண்ணீர் என் விழிகளிலே இருந்து கிளம்பிற்று. ஒரு இளம் பெண் சொந்தத் தங்கை அவள் எவ்வளவு கெட்ட நினைப்புக்காரியாகத்தான் இருக்கட்டும்; அவள், தான் சாக நேரிடும் என்று தன் வாயாலே கூறினால், எப்படி அதைக் கேட்டுச் சகிக்கமுடியும். தங்கமோ அசடல்ல, புத்தி உள்ளவள்; புத்திக் கூர்மை என் வாழ்வையே துளைக்குமளவு இருந்தது அவளுக்கு. அவள் பெயரைச் சொன்னாலே எனக்கு ஆத்திரம் பிறக்கும். இருந்தும், அன்று அழுகுரலில் அவள் சொன்ன சேதி கேட்டபோது என் மனம் என்னவோ பாகாகிவிட்டது. என்ன கூறியாவது அவளைத் தேற்றவேண்டும் என்று துடித்தேன். என் மனதிலேயே இரண்டு வகையான எண்ணங்கள் ஏககாலத்திலே கிளம்பித் தீரவேண்டிய நிலை. அவளுக்குத் தைரியம் தர என்ன கூறுவது என்று யோசிக்க வேண்டி இருந்தது. அதே சமயத்தில், அவள் கூறுவது உண்மையா, நடிப்பா; நடிப்பாகவும் உண்மையாகவும் இல்லாவிட்டால், ஒரு சமயம் யாராவது சோதிடன் உண்மையிலேயே ஏமாளியாக்கிவிட்டானா! அப்படியும் இருக்குமானால், சோதிடன் தானாகவே இக் காரியத்தைச் செய்தானா, அல்லது யாராவது தூண்டிவிட்டார்களா? ஒரு வேளை, என் கணவரே இதற்குக் காரணமோ? எவனாவது சோதிடனை ஏவி விட்டுத் தங்கத்தின் மனதிலே, பயத்தைத் தூவ வைத்தாரோ? அவர் எதற்கும் துணிந்தவராயிற்றே. அவர் மட்டுமா! பெண்கள் விஷயத்திலே, ஆடவரில் பெரும்பாலோர் இப்படித்தானே நடந்து கொள்கிறார்கள். உத்தமபுத்திரர் கூட, இந்த ஒரு விஷயத்திலே மட்டும் ஏனோ எவ்வளவு தலைகீழ் வாதம் புரியவும், தகாத முறையைக் கையாளவும் எண்ணம் பிறக்கிறது. தர்மத்தின் காவலரென்றும், சாது சன்மார்க்கி என்றும் பெயரெடுத்த தர்மபுத்திரர் கூட திரௌபதி விஷயத்திலே எப்படி நடந்து கொண்டார். ஆணழகன் அர்ஜுனனை அடைந்தோம், வில் வீரன் விஜயன் நமக்கு மாலையிட்டான், இனி நமக்கு இன்ப வாழ்வுக்கும் கௌரவத்துக்கும் என்ன குறை என்றுதானே திரௌபதி எண்ணி இருந்திருப்பாள். இதனை, எவ்வளவோ நுட்பமான தத்துவங்களை எல்லாம் ஆராய்ந்தறியும் ஆற்றல் படைத்த தருமர் தெரிந்து கொண்டிருக்க மாட்டாரா! ஆனால் என்ன செய்தார்? தம்பிக்கு மட்டுமல்ல; தனக்குமல்லவா திரௌபதியைத் தாரமாக்கிக் கொண்டார். கர்ப்பிணியைக் கானகத்துக்குத் துரத்திய இராமரை, மகாவிஷ்ணுவின் அவதாரம் என்றல்லவா கூறுகிறார்கள். அப்பா! பெண்கள் விஷயம் என்றாலே, உத்தமர்கள், தத்துவம் தெரிந்தவர்கள், தபோதனர்கள், திரு அவதாரம் செய்பவர்கள் என்பவர்களெல்லாங்கூடத் தவறு செய்தே இருக்கிறார்கள்.

ரங்கோனில் ஒரு நாள் ஒரு வேடிக்கை நடந்தது கேள். நாயுடு இங்கே இன்று துன்புறுத்தினாரல்லவா, அதுபோல, அங்கேயும் செய்வதுண்டு. ஆனால் சில சமயங்களிலே தந்திரமாகவும் நடப்பார். ஒரு நாள் ‘குஷாலாக’ இருக்கப் பணம் தேவைப் பட்டது. கேட்டார்; இல்லை என்றேன். உண்மையிலேயே இல்லை. ஆனால் அவர் தம் நண்பர்களிடம் வாக்களித்தார் போலிருக்கிறது; ஆகவே என் கழுத்துச் சங்கிலியைக் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தினார், அடகுவைக்க. நான் மறுத்தேன். அவர் கோபித்துப் பார்த்தார். நான் பிடிவாதமாகவே இருந்து விட்டேன். என்ன செய்தார் தெரியுமோ? பாசாங்கு! பேசாமல் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, முகத்தைக் கரங்களால் மூடிக்கொண்டு தேம்பலானார். கொஞ்சநேரம் அதனைக் கவனியாமல் இருந்து பார்த்தேன், முடியவில்லை. “இதென்ன சனியன்! ஏன் அழுது தொலைக்கிறீர்கள்” என்று கேட்டேன். “ஒன்றுமில்லை. உனக்கென்ன என் விதி விட்ட வழிப்படி நடக்கட்டும்” என்று பலப்பல கூறினார். நெடுநேரத்துக்குப் பிறகு, “ரங்கம்! இன்று ஒரு பெரிய ஆபத்திலே சிக்கிக் கொண்டேன். ராதா, ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி கேட்டது. அதை வாங்கக் கண்ணாடி கடைக்குப் போனேன். அங்கே ஒரு அருமையான பெரிய நிலைக்கண்ணாடி, நாலு அடி உயரம், இரண்டடி அகலம் இருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அது ஒரு அலங்காரப் படிகட்டின் மீது வைக்கப்பட்டிருந்தது. நான் அதைச் சரியாகக் கவனியாமல், அந்தப் படியைப் பிடித்து இழுத்துப் பார்த்தேன். கண்ணாடி கீழே விழுந்து நொறுங்கி விட்டது. பயத்தால் நான் அசைவற்று நின்றேன். கடை ஒரு பர்மாக்காரனுடையது. அவன் தீப்பொறி பறக்கும் கண்களுடன் என்னை நோக்கி வந்தான். கும்பிட்டேன். கூத்தாடினேன். 300 ரூபாய் தந்தாக வேண்டும், எடு என்றான். இன்று இரவு கொடுத்து விடுகிறேன் என்று சத்யம் செய்துவிட்டு வந்தேன். நாளைக் காலையிலே அவனுடைய கத்திக்கு நான் பலியாக வேண்டும். என் விதி அப்படி இருக்கும்போது என்ன செய்வது” என்று கூறிக் கோவென அழுதார். மறு வார்த்தை பேசாமல் சங்கிலியைக் கழற்றிக் கொடுத்தேன். ஏழு நாட்களுக்குப் பிறகே, அவர் அன்று சொன்னது பொய் என்பது தெரிந்தது. வருத்தப்பட்டேன்; வயிறு எரிந்து திட்டினேன். மறு இரவு நாங்கள் மூவரும் நாடகம் பார்க்கச் சென்றோம், வள்ளி கல்யாணம். தமிழ்நாட்டுப் பிரபல நடிகர்கள் என்று விளம்பரம் அன்று நல்ல வசூலைக் கொடுத்தது. நாடகத்திலே, முருகன் வேடுவப் பெண்ணை யானையைக் காட்டி மிரட்டும் காட்சி நடக்கும்போது, நாயுடு என்னைக் குறும்புத்தனமாகப் பார்த்துச் சொன்னார், “ரங்கம் என்மீது பிரமாதமாகக் கோபித்துக் கொண்டாயே, இதோ பார், சாட்சாத் முருகன் கூடத்தான், யானையோ, பூனையோ எதையோ காட்டி, எதைப் பற்றியோ பேசி, வள்ளியைத் தன் வழிக்குக் கொண்டு வருகிறார். இது சகஜமான காரியம்” என்றார். உண்மைதான்; ஆண்களே அப்படித்தான் என்று அன்றும் சொன்னேன்; இன்றும் சொல்கிறேன். உன் அப்பா சுபாவத்திலேயே தந்திரக்காரர், அதிலும் சுயநலம். எனவே, எவனையாவது சோதிடனைத் தயார் செய்து தங்கத்தின் மனதிலே மரண பயம் ஏற்படும்படி செய்திருப்பாரோ என்று எண்ணினேன்.

இப்படி இரண்டு வெவ்வேறு விதமான எண்ணங்களை ஏக காலத்தில் கொண்டதால், தெளிவான நிலையே கெட்டு விட்டது. வீண் பயம் – பைத்தியக்காரத்தனம் – சோதிடம் முழுப் பொய் – இதை எல்லாம் நம்பாதே – என்று ஏதேதோ கூறினேனே தவிர, தங்கம் தந்த தகவலை மறுத்துக்கூற என்னால் முடியவில்லை. என் தங்கையின் உயிருக்கு ஆபத்து என்று அவளே கூறிடக் கேட்டால் என்ன தான் பகையிருந்தாலும், மனம் பதறாதா? தங்கம் என் குழப்பத்தைத் தெரிந்துகொண்டாள்.

நான் அவள் விஷயமாகப் பரிதாபப்பட்டேனே தவிர, எப்படி என் கணவரை அவளுக்கு மணம் முடிக்க மனம் வரும். எனவே, நான் வேறு ஏதேதோ பேசி அவளுடைய கவலையைப் போக்கப் பார்த்தேன். அவளும் என்னை வற்புறுத்தவில்லை. கொஞ்ச நேரம் சென்றதும், வேலைக்காரியை வண்டி கொண்டு வரச்சொல்லி, நான் வீட்டுக்குப் புறப்பட்டேன். வாசற்படி வரை வந்து, என்னைத் தங்கம் வழியனுப்பி வைத்தாள்.

வம்பு பேசின அந்தச் சோதிடனைக் கண்டுபிடித்து, அவனைத் தூண்டிவிட்டவர் உன் அப்பாதானா என்பதைக் கண்டறிய வேண்டுமென்று ஆசை கொண்டேன். ஆனால் நேரமாகிவிட்டது. லேடி டாக்டர் லாசரஸ் வீட்டுக்கு வந்திருப்பார்களோ என்ற எண்ணம் வேறு. எனவே சோதிடன் விஷயமாகப் பிறகு பார்த்துக் கொள்வது என்று தீர்மானித்து, நேரே வீட்டுக்குச் சென்றேன். உள்ளே நுழையும்போதே, முன்பு கொண்டிருந்த எண்ணத்தின்படி, அவரிடம் மல்லுக்கு நிற்பது என்ற துணிவுதான். அவர்தான், சோதிடனைக் கொண்டு தங்கத்தநயும் ஏய்த்திருக்கவேண்டும் என்ற எண்ணமும் குடிபுகுந்ததால், வலியவேணும் சண்டைக்கு நிற்பது என்ற எண்ணம் மேலும் வலுத்தது.

“வாங்கோ! என்னம்மா, நம்மை, இப்படிக் காக்கப் போட்டுப் போயிட்டிங்க” என்று லாசரஸ் கேட்டார்கள். லேடி டாக்டர் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அவர் உலவிக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் சீறி விழுவார். உடனே நாமும் பதிலுக்குப் பதில் சுடச் சுடத் தருவது என்று நினைத்தேன். “லேடி டாக்டரை இங்கே வரச்சொல்லி விட்டு எங்கே போய்விட்டாய்? அந்த அம்மாள் வந்து எவ்வளவு நேரமாயிற்று. இப்படியா அவர்களைக் காக்கப் போடுவது” என்று கேட்பார், அலட்சியமாக ஏதேனும் பதில் கூறவேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அவரோ நான் எதிர்பார்த்தபடி ஒன்றும் கேட்கவில்லை. அதற்கு மாறாக, லேடி டாக்டரிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியே போய்விட்டார். நான், லாசரசிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். லேடி டாக்டர் பிறகு என்னைப் பரிசோதித்து, “உடம்புக்கு ஒன்றுமில்லை. ஆனால் சுகப்பிரசவத்துக்குத் தக்க மருந்தை இப்போதிருந்தே தந்து விடுகிறேன். சாப்பிட்டுக் கொண்டிருங்கள்” என்று அன்புடன் கூறிவிட்டுச் சென்றார்கள்.

வெளியே போனவர், இரவு நெடுநேரத்துக்குப் பிறகே வந்தார். எனக்குத் தூக்கம் பிடிக்காமல் புரண்டு கொண்டுதான் இருந்தேன். அவர் கதவைத் தட்டினதும் பழைய வழக்கம் காரணமாகச் சரேலென எழுந்தேன், போய்க் கதவைத் திறக்க வேண்டுமே என்று! ஆனால் அறை வாயிற்படிவரை சென்றதும், நான் கையாள வேண்டிய புதிய முறை கவனத்துக்கு வந்தது. உடனே வேலைக்காரியை அதட்டிப் போய்க் கதவைத் திறக்கச் சொல்லிவிட்டு, நான் படுக்கை அறை சென்றேன். கதவைத் தாளிடவில்லை.

– தொடரும்…

– திராவிடநாடு, 1947.

– ரங்கோன் ராதா (நாவல்), முதற் பதிப்பு: 2002, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *