அதிகாலை நடைப்பயிற்சி. நடு சாலையில் கிடந்தது ஒரு இளநீர். தூரத்துப் பேருந்து நிலையத்தின் அருகில் தினம் ஒரு இளநீர் வண்டி உண்டு. அதில் வாங்கிச் சென்ற எவரோ ஒருவர்தான் வழியில் தவற விட்டிருக்கிறார்கள்! – தெளிவாகத் தெரிந்தது.
இது போக்குவரத்திற்கு இடைஞ்சல். மேலும் சைக்கிளில் பள்ளிப் பிள்ளைகள் டியூசன் சென்று வருகிற வேளை. தடுக்கி விழா வாய்ப்பு உண்டு.
எடுத்தேன்.
இரு நிமிட நடையில் அந்த இளநீர் வண்டியை அடைந்தேன்.
“என்ன சார்..?” வியாபாரி கேட்டான்.
“உன்கிட்ட வாங்கிப்போன யாரோ ஒருத்தர் தவற விட்டுப் போயிருக்காங்க. வழியில கிடந்தது. தேடி வந்தா கொடுத்துடு” – நீட்டினேன்.
வாங்கிய அவன்… அடுத்து என்னைப் பிரமிப்பாய்ப் பார்த்தான்.
அப்போது பைக் இளைஞன் ஒருவன் வந்து நின்று அழைத்ததைக் கூட அசட்டை செய்து விட்டு அந்த இளநீரை உடனடியாகச் சீவி என்னிடம் நீட்டி…
“குடிங்க சார்!” என்றான்.
“எதுக்குப்பா..? நான் பணம் எடுத்து வரலை..” மறுத்தேன்.
“பரவாயில்லே குடிங்க…” அவன் நீட்டியக் கையை மடக்கவில்லை.
“…..”
“என்ன சார் தயக்கம்..? நீங்க மட்டும் சாலையில் கிடக்குறதை நேர்மையா கொண்டு வந்து கொடுத்து யோக்கியமா நடந்துக்கலாம். நான் யோக்கியனா நடக்கக் கூடாதா..? இது உங்களுக்கு நான் கொடுக்கும் அன்பு பரிசு சார். உங்களை மாதிரி நல்லவங்க இருக்கிறதுனாலதான் நாட்டுல கொஞ்சமாவது மழை பெய்யுது” என்றான்.
அவன் மனம் புரிய வாங்கிக் குடித்தேன்.
வியாபாரி திருப்தியாய்த் திரும்பி..
“சார் ! உங்களுக்கு இளநீயா..?” என்று இளைஞனிடம் வியாபாத்தைத் தொடங்கினான்.
“வேணாம்!”
“ஏன் சார்..?”
“ரெண்டு நேர்மையானவர்களைப் பார்த்த திருப்தியே எனக்கு ஆயிரம் இளநி குடித்தத் திருப்தி. நான்தான் அந்த இளநியைத் தொலைச்சவன். வர்றேன்”
சொல்லி அவன் வேகமாகச் சென்றான்.
நானும் வியாபாரியும் சிலையாக நின்றோம்.