யூட்யூபர் – பிரியாணி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 14, 2024
பார்வையிட்டோர்: 781 
 
 

சுரேஷ் காலேஜிற்கு போவதை நிறுத்தி இன்றுடன் மூன்று மாதங்களாகிறது. வறுமை, குடும்ப இப்பிரச்சனையெல்லாம் ஒன்றும் இல்லை, படிப்பேறவில்லை அவ்வளவுதான். சில சமையம் காலேஜ் வாசலில் காலை அல்லது மலையில் போய் நின்றுகொள்வது அவன் நண்பர்களை சந்திக்கமட்டுமின்றி வீரலட்சுமியின் தரிசனம் பெறுவதற்காகத்தான். அப்பாவின் மளிகை கடையில் ஒத்தாசைக்கு போனாலும் பழிச்சொல்லிலிருந்து தப்பித்திருக்கலாம் ஆனால் முழுநேர யூட்யூபர் ஆனதிலிருந்து வீட்டாரிடமிருந்த கடைசி சொட்டு கரிசனமும் போய்விட்டது. அம்மா, பெற்றகடனுக்கு உணவளித்தாள், அப்பா படுக்க மட்டும் இடம்கொடுத்தார். இந்நிலையில் வீரலட்சுமி விவகாரம் வேற.

ஓரிரண்டு முறை நேரடியாக வீரலட்சுமியை சந்திக்க முயன்றான் ஆனால் முடியவில்லை. “அந்த மூஞ்சிபயனா?” என தூது சென்ற நண்பனிடம் வீரலட்சுமி சொன்னதும் கூட பொருட்படுத்தாமல் ஒருதலை காதல் தொடர்ந்தது. வீரலட்சுமியின் தகப்பன் பாலு அந்த ஏரியாவின் பெரிய புள்ளி. ஏற்கனவே கொலை முயற்சி, ஆக்ரமிப்பு என பேராரங்களை சூடிக்கொண்டிருப்பவரின் ஒரே மகள், வீரலட்சுமி. அந்த ஏரியாவில் முதல் பிரியாணி கடையை துவக்கிய பெருமை பாலுவிற்கு உண்டு. “பாலு மிலிட்டரி பிரியாணி கடை” ஆக்ரமிப்பு நிலத்தில் அமைந்திருப்பதாக புகார் இருந்தது. கோர்ட்டில் வழக்கு நடப்பதாக கேள்வி. மூன்று மாதங்கள் முன்பு அதே வீதியில் “குமார் பிரியாணி கடை” துவக்கிய பழனி குமாரை மிரட்டியதாகவும், ஆள் வைத்து அடித்ததாகவும் இன்னொரு வழக்கும் பதிவாகியிருந்தது.

“டேய் இதெல்லாம் உனக்கு செரிவாரது டா, பேசாம உங்கப்பா கடையில போய் சேந்துக்க” அறிவுரை கூறிய நண்பனை முறைதான் சுரேஷ்.

“உன்கிட்ட கேட்டேன் பாரு”

“வேற என்ன பண்ண போறே. காலேஜுக்கு போய் பிடிச்சிருந்தா ஏதாவது வேலையையாவது பார்க்கலாம். வேலைய காட்டி பொண்ணு கேட்டிருக்கலாம். இந்த யூட்யூப் வீடியோ போடறதெல்லாம் அவ அப்பனுக்கு பிடிக்காது” என்றான் நண்பன்.

இதையும் பொருட்படுத்தாமல் மாரியம்மன் கோவில் கூழ் ஊத்துவிழா, புள்ளிங்கோ டியோ பைக் ரேஸ், தலையின் பட ரிலீஸின் போது நடந்த கட்-அவுட் பால் அபிஷேகம், மீன் பஜார் காசி வௌவ்வால் மீன் கூறு போடும் டெக்னீக் போன்ற வீடியோக்களை “Bubblyboy 42 ” என்ற காணலியில் மேலேத்தி ஓரளவுக்கு பெயர் சம்பாதித்திருந்தான். பணம் இன்னும் சம்பாதிக்க வேண்டியிருந்தது.

“சரி ஒன்னு பண்ணு, அங்கிள் பாலு கிட்ட போய் அவரோட கடை பிரியாணியை பத்தி உன் செனல்ல ஒரு வீடியோ போடறதா சொல்லு. என்ன சொல்லறாருன்னு பார்க்கலாம்” என்றான் நண்பன்.

“டேய் போடாங்…”

“எவ்வளவு நாள் தான் காலேஜு கேட்டுல நின்னு சைட் அடிச்சிகிட்டுருப்பே?”

அன்று மலை நண்பன் சொன்னதில் தப்பேதுமில்லை என தோன்றியது. அடுத்தநாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பாலுவிடம் சென்றான்.

“அங்கிள், என் பெரு சுரேஷ். நான் ஒரு யூட்யூப் சேனல் வெச்சிருக்கேன். போன மாசம் நம்ம மாரியம்மன் கோயில் திருவிழாவை கூட நான்தான் கவர் பண்ணினேன். பதினைஞ்சாயிரம் வியூஸ் வந்தது. உங்க ஹோட்டல் பிரியாணி ரொம்ப ஃபேமஸ். உங்க கடைய பத்தி ஒரு வீடியோ எடுத்து என் சேனல்ல போடலாமா அங்கிள்?”

ஒரு நிமிடம் முறைத்து பார்த்தான் பாலு.

“அதெல்லாம் ஒன்னும் வேணாம் கிளம்பு” என்றவரிடம்,

“அங்கிள் ஒரு நிமிஷம் இதை பாருங்க”. தன் கையிலிருந்த ஃபோனில் போன மாதம் கோவில் திருவிழாவின் விடியோவை காட்டினான். அதற்க்கு வந்திருந்த விமர்சனங்கள் மற்றும் பார்வைகளை காண்பித்தான்.

“எவ்வளவு ஆகும்?” என்றான் பாலு,

“ஒன்னும்மில்ல அங்கிள். பார்க்கறவங்க என் செனலுக்கு சப்ஸ்கரைப் பண்ணிப்பாங்க. உங்களுக்கு செலவே இல்ல” கொஞ்ச நேரம் யோசித்து,

“சரி நாளைக்கு வா பார்க்கலாம்” என்றான் பாலு.

அடுத்தநாள் மதியம் சுரேஷிற்கு பலத்த உபச்சாரம்.

“பாருங்க இதுதான் பாலு பிரியாணி சென்டர். இந்த ஏரியாவிலேயே மிக பிரபலமான பிரியாணி இங்கதான் கிடைக்கும். மீன் வருவளுக்கு ஃபேமஸ்…இவருதான் கடையோட முதலாளி பாலு. சார் நீங்க எவ்வளவு நாளா இந்த கடையை நடத்தறீங்க?”

“பதினைஜு வருசமா” பெருமிதத்துடன் சொன்னதை அடுத்து நேர்காணல் தொடர்ந்து மீன் வறுவல், மட்டன் பிரியாணி, சிக்கன் லாலிபாப் என உபச்சாரம் தொடர்ந்தது. முடிவில்,

“பாலு பிரியாணி சென்டர்ல கிடைக்கறமாதிரி ஒரு நல்ல பிரியாணி எந்த ஏரிவுலையும் கிடைக்காது. ருசியோ ருசி” என முடித்தான் சுரேஷ். வீடியோ அப்லோட் செய்ததிலிருந்தது அவன் எதிர்பார்த்ததை விட அதிக பார்வைகள் கிடைத்தது. பாலு பிரியாணி கடை விற்பனை களைகட்டியது. பாலுவிற்கும் சுரேஷுக்குமிடையே நட்பு வளர்ந்தது. இது நடந்த அடுத்தவாரம் ஒரு நாள் சுரேஷ், பாலுவின் கடைக்கு சென்ற போது,

“வா பா, டேய் ஒரு மீன் வறுவல் எடுத்து வை டா” என்றான் பாலு

“அதெல்லாம் வேண்டாம் அங்கிள்”

“அட எடுத்துக்கோ பா. நீ போட்ட வீடியோவை பார்த்துட்டு விற்பனை சூடு பிடிச்சிடுச்சு. ஏற்கனவே இந்த கடையை வித்திருலாம்னு யோசிச்சிகிட்டு இருந்தேன் ஆனா விலை குறைச்சலாத்தான் கேட்டாங்க. இப்ப ஃபேமஸ் ஆனதுக்கப்புறம் எதிர் கடை குமார்கிட்டேயே வித்துட்டேன்”

“அப்படியா அங்கிள்”

“அதுமட்டுமில்ல பா, அவரோட ஒரே மகனோட என் பொண்ணுக்கும் பேசி முடிச்சுட்டேன். எல்லாம் உன்னால தான்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *