யுவதியும், குப்பைத் தொட்டியும் ஒரு கடிதமும்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 125 
 
 

“இங்க தா பாக்கலாம் – நான் சொல்ற தக் கேள்… கீழே கெடக்குறதும் நீ பொறக்கி அடுக்கு சரிதானே.. நான் வாளியில் உள்ளது களைத் தேடி எடுக்கிறேன்… ”

“ஹாய்… அக்கா இங்கேபார்… இங்கே இங்கே. ஷோக்கான ஒரு படம் …”

“ஹ்ம்”

தம்பியுடன் அதிகம் பேச்சுக் கொடுப்பது ஆகாது. ஆள் பேசத்தொடங்கினால் தொடங்கினது தான். வேலை நின்றுவிடும். இன்னும் கொஞ்ச நேரத்தில் அரசாங்கக் குப்பை லொறி வந்த மாத்திரத்தில் எல்லாம் முடிந்துவிடும்.

“அக்கா நேத்து அங்கேபோல ஐம்பது சதம் இருந்தால்…!”

தம்பியின் முகம்பூராச் சிரிப்பு. விசரன்…! தினமும் ஐம்பது சதம் எங்கே கிடக்கப் போகிறது. ஆள் தேடுறது கடதாசிகளை அல்ல: ஐம்பது சதக் காசுகளைத் தேடுகிறான்.

“ஐய்யே இது… இது என்ன அசிங்கம்…”

தம்பி திடீரென்று பின்வாங்கினான். தெருவிற் சென்ற ஒரு ஜீப் பீப்! என்றவாறு பறந்து சென்றது.

“அந்தக் கானுக்குள் வீசு. தம்பி இன்னமும் இவ்வளவுதானா சேர்த்தாய் …?”

“அக்கா, ஏதோ நாத்தமடிக்குது இல்லையா?”

“அதோ … அதோ இருக்குது …!”

“அம்மோவ் …! எலியா அது பண்டி மாதிரி இல்லையா அது இருக்குது – முழுங்கி முழுங்கி கொழுத்திருக்கிற கொழுப்பு ……! சீய்ய்யா தாங்க ஏலாது நாத்தம் …”

நான் அவசரம் அவசரமாக வாளியிலிருந்து தாள்களைத் தெரித்து மடங்கிய இடங்களை விரித்து விட்டு கான் கட்டின்மேல் அடுக்குகிறே. தம்பியும் கான்கட்டின் மேல் உட்கார்ந்தான். தம்பியின் முழங்காலில் உள்ள புண்ணைச் சுற்றி ஈக்களும், கொசுக்களும். தம்பி அதைப் பொருட் படுத்தவேயில்லை.

“அக்கா இங்கே …!”

“என்ன …?”

“ஷோக்கான எழுத்து …”

“அச்சடிச்சதா …?”

“இல்லை கையெழுத்து… இந்தா…”

நான் தம்பியின் கையிலுள்ள தாளை வாசிப்பதற்காக வாங்கினேன். என்றாலும் அந்த இழவினால் என்ன பலன்? நான் அதை எடுத்து கால் கட்டின்மேல் வைக்கிறேன். அந்தத் தாள் துண்டு அதிகம் நைந்திருக்கவில்லை. அழகான எழுத்துக்கள். வாசிக்கத் தோன்றுகிறது.

“நாங்கள் இன்று ஒரு வட்டக்காயை அவித்துக் கொண்டே முழு நாளையும் கழித்தோம்….”

நான் வாசித்தேன். ஒரு முறை…இரு முறை மூன்று…மூன்று முறை…

“தம்பி இதைப் பார்….இதைக் கேள் சரியா… நாங்கள் ஒரு வட்டக்காயை (சர்க்கரைப் பூசணி) அவித்துக்கொண்டே முழுநாளையும் கழித்தோம்”

“என்ன அக்கா…?”

“எனக்குத் தெரியாது. யாருடையவே கடிதம்.”

“இன்னமும் வாசியேன், அவ்வளவுதானா?”

“…இந்த யுகத்தின் அவ… அவ… ஆ.. அவசியங்களை நிறைவேற்றுங்கன் என்றே காலம் எங்களைக் கட்டாயப் டுத்தி வேண்டி நிற்கிறது…”

“ஊய்யா பைத்தியம்…… இதென்ன இது….?”

“ஏதோ எனக்குத் தெரியாது தம்பி, நாங்கள் கடதாசிகளைப் பொறக்குவோம். எங்க ளுக்கு அதுகள் வௌங்காது…”

“எண்டாலும் முத்தின கொஞ்சம் எண்டால் வெளங்கிச்சிது … வட்டக்கா திண்டாங்கனாம் இல்லயா? அக்கா நாங்கள் இண்டைக்கு கோதும் ரொட்டி திம்போமா?”

தம்பியின் பேச்சு நன்முகத்தான் இருக்கிறது… ஒரு கோதுமை ரொட்டி இருபத்தைந்து சதம்… … அத்த மட்டுக்கு நாங்கள் இன்னும் தான் சேர்க்கவில்லையே. அம்மா பதினைந்து சதம் மட்டுமே தந்து சென்றார்கள். நான் ஓர் அழிரப்பரும் வாங்கவேண்டும். அம்மா அன்று வாங்கிவந்த பென்சில் படுமோசம்… கூர் சும்மாவே உடைகிறது. பென்சில் சரி இல்லாவிட்டால், எழுத்தும் மகா மோசம். அப்போது டீச்சரின் முகமும் நீண்டு, கையும் நீண்டு, தலைக்கு ஒரு குட்டும்…

கான் கட்டின் மேல் உள்ள தாள்மீது எனது பார்வை தானே செல்கிறது. அதில் அழகான எழுத்துக்கள், அவை பேனையால் எழுதப்பட்டுள்ளன. நான் மீண்டும் ஒருமுறை அத்தாளை வாசிக்கிறேன்.

“… குப்பை வாளியைக் கிளறும் காலத்தில் வாழும் மனிதர்கள் …”

அத்தாளில் அவ்வாறு எழுதப்பட்டிருக்கிறதது. நான் நன்றாக வாசித்தேன். ஆம், அவ்வாறுதான் எழுதப்பட்டிருக்கிறது.

“தம்பி இதைக் கேள்… இதோ … குப்பை வாளியைக் கிளறும் காலத்தில் வாழும் மனிதர்கள்…”

“ஆ……! எங்களைப்பத்தி எழுதி இருக்கிறது. இல்லையா?… அக்கா எங்களைப்பத்தி எழுதி இருக்குது இல்லையா?”

தம்பி கான் கட்டின்மேல் எழுந்து நின்றான்.

“…நாம் எமது வாழ்வுகளை ஈடு வைத்து மனிதர் பசியிலிருந்து விடுபட வழிகாட்டுவோம்…”

தம்பி நின்றவாறே. அத் தாளிலுள்ளவைகளை வாசித்தான். எனக்கோ சிரிப்பு. கடந்த முறை தவணைப் பரீட்சையில் தம்பி வாசினைக்கு எண்பது புள்ளிகள் எடுத்தான். ஆளுக்கு இப்போது நன்றாக வாசிக்க முடியும்.

“என்ன அக்கா எழுதி இருக்குது?”

“எனக்குத் தெரியலை தம்பி, எனக்கு விளங்கவும் இல்லை…”

“பசியிலிருந்து விடுபடணுமாம் …!”

தம்பி கெக்கலிகொட்டிச் சிரிக்கிமூன்.

“அப்படியானால் கோதுமை ரொட்டி ரெண்டு திம்போமா …?”

சிரிப்பினூடே தம்பி “என்னிடம் கேட்கிறான். நானும் சிரிக்கிறேன்… தம்பியும் சிரிக்கிறான்.

“ஐம்பது சதம்” என்கிறேன் நான்.

“ஒரு ரூபாயில் பாதி” தம்பி சொல்கிறான்.

தம்பி வாளிக்குள் கையை ஓட்டி, மீண்டும் தாள் பொறுக்குகிறான். தம்பியின் முழங்காலைச் சுற்றி கொசுக்கள், கான் ஓரத்திலிருந்து ரீங்காரமிட்டு வந்த ஓர் ஈ, நேரே புண்ணை மறைத்தது. தாள்கள் கொஞ்சத்தையும் சுருட்டுக் கடைக்கு விற்றுவிட்டு, அப்போதே ஐந்துசதப் பிளாஸ்திரி ஒன்றை வாங்கி, புண்ணில் ஒட்ட வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது. அப்புண்ணுக்கு பிளாஸ்திரி போடுவதே அம்மாவுக்கு வேலை. சுகாதார பாடத்தின் போது வாத்தியார் ஐயா புண் இப்படிச் சுகமாகாது. அதிக நாள் பட்டால் தோல் கழன்று போகுமென்று படிப்பித்தார்… அது சரியாகவிருக்கும்…

“அக்கா …!”

“ஹ்ம்”

“இப்போ குப்பைலொறி வருதாயிருக்கும்.”

“ஆமாம் அதுதான் சுறுக்குப்படுத்துவோம் … தம்பிதானே சுணக்கம் …”

“அக்கா இன்னைக்கு ஒரு கோதும் ரொட்டி வாங்கி ஆளுக்குப் பாதி திம்போமா …?”

தம்பி கணக்குப் பண்ணுவது. இம்மாதிரி ஒன்றுக்காகத்தான் …

“வயறு நெரம்பாதே …”

“இன்னைக்கு மாத்திரம் தானே…… நான் ஸ்கூலில் பணிஸ் ஒண்ணை அக்காக்குத் தாறேன் … சரியா …? திம்போம் ஆ …?”

எனக்குத் தம்பிமீது இரக்கமேற்படுகிறது. என்றாலும் எனக்கு ஒரு கோதுமை ரொட்டியில் பாதி போதாது. குப்பை லொறி வரமுன் தாள்கள் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டால் ஐம்பது சதம் வாங்கிக்கொள்ளலாம். சுருட்டுக்கடை மனிதர் லோபி என்றாலும் நான் அன்றுபோல, “முடியாட்டி நாங்க அடுத்த கடைக்குப் போறோம்” என்றவுடனேயே மனிதர் ஐம்பது சதந் தருவார்…

தம்பி பரபரப்புடன் தாள் சேர்க்கிறான். வாளியிலிருந்து பொறுக்கிய மேலும் சில தாள்களை முன்பு வாசித்துப் பார்த்த கடிதத்தின் மேல் நான் வைத்தேன். ஒரு காக்கை பறந்து வந்து தனது சொண்டினால் எலியின் உடலைக் கொத்துகிறது …

– கருணா பெரேரா – சிங்களத்திலிருந்து தமிழில்: எஸ்.எம்.ஜே.பைஸ்தீன் – “எக்கமத எக்க ரட்டக்க’ (ஓரே ஒரு ஊரில்) என்த கதைத் தொகுதியிலிருந்து

– அலை 16 – தை-பங்குனி – 1981

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *