யுகம் மலரும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 28, 2024
பார்வையிட்டோர்: 332 
 
 

ஊரே அந்த இளைஞனை வியப்புடன் பார்த்தது. இரண்டுநாட்கள் முன்பு தன் இல்லத்திற்கு மகன் ஆதித்யாவுடன் அவன் நுழைந்தபோது விஜயசாரதியும் இதேவியப்புடன் தான் அவனை ஏறிட்டார்.

நெற்றியில் மெல்லிய சந்தனக்கீற்று.. எட்டுமுழம் வேட்டி. கதர் துணியில் முழுக்கை சட்டை. பணிவான தோற்றம். புன்னகை ததும்பும் முகம். ‘வணக்கம்!’ என்று வந்ததும் தமிழில் பேசி கைகுவித்த விதத்தில் தெரிந்த பணிவு!

அப்பாவின் வியப்பினைப்புரிந்துகொண்டாற்போல ஆதித்யாவும்,”அப்பா! இவன் என்னோடு அமெரிக்காவில் படித்தவன் பெயர் ராபர்ட் .. பிறப்புவளர்ப்பு எல்லாம் அமெரிக்காவில்தான். ஆனால்  இவனுடைய அப்பா ராபர்ட் சிறுவயதாயிருக்கும்போது இந்தியாவிற்கு இவனை அழைத்து வந்தாராம். இருவரும் பல இடங்களை சுற்றிப்பார்த்தார்களாம். அப்போதிலிருந்து ராபர்ட்டுக்கு நம் இந்தியாமீது ரொம்ப அபிமானம்.  நமது வேதம் இதிகாசம் புராணம் என்று ஆரம்பித்து விவேகானந்தர், மகாத்மா காந்தி வரை ராபர்ட்டுக்கு இந்தியா சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த ஈடுபாடு. அதனால்தான் எம் எஸ் படிப்பு முடித்து நான் இந்தியா திரும்பி வரக்கிளம்பியபோது தானும் சில நாட்கள் வர ஆசைப்பட்டான் என்று என்னோடு கூட்டிக்கொண்டுவந்தேன்.“ என்றான் பெருமையுடன்.

“ரொம்ப நல்லது ஆதித்யா! நம் ஊர் சிறு கிராமம் தான். டவுன் கூட அருகாமையில் இல்லை. சற்றே உள் புறமான சின்ன ஊர். ஆனால் கோயில் குளம் வயம் வாய்க்கால் என அழகு வாய்ந்தது.

அதை விட இந்த சின்ன கண்ணனூர் கிராமத்து மக்களின் ஒற்றுமை உணர்வு இந்தப் பையனுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும். ஊரின் முக்கியமான விழா வேற வரப்போகிறது. அதையும் ராபர்ட் பார்க்கணும்” என்றார்.

“ஆமாம் அப்பா அதற்காகத்தான் அவன் நம் ஊருக்கே வந்திருக்கிறான்!”

”ராபர்ட் இங்கே எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தங்கிக்கொள்ளலாம்.. எனக்கும் உன் அம்மாவுக்கும் இதைவிட சந்தோஷம் வேறென்ன இருக்கப்போகிறது?” என்றார் விஜயசாரதி.

சின்னக்கண்ணனூரில் எல்லோருமே கோயில் தெய்வமான சின்னக்கண்ணனுக்குப் பிறகு சுவாமி விவேகானந்தரின் பக்தர்களாக இருந்தனர்

சொந்த மண்ணை நேசிப்பவர்களாக இருக்கக் காரணம், விஜயசாரதியும் பள்ளிஆசிரியர் சிவநேசனும் தான் இருவரின் இடைவிடாத முயற்சியில் கிராமத்து மக்கள் யாவரும் மாற்றம் ஏதுமில்லா நல்ல மனநிலையில் இருந்தனர்.. ஆனால் மகன் அழைக்கிறான் என சிலவருடங்கள் முன்பு ஊரைவிட்டு துபாய்க்குச்சென்றுவிட்ட துரைலிங்கம் ,  மிகவும் மாறிப்போயிருந்தார்.

அக்கிரஹாரத்தில் விஜயசாரதியின் வீட்டிற்கு எதிரில் தான்அவர் குடி இருந்த வீடு இருந்தது .பூட்டிவிட்டுப்போயிருந்தவர் திடீரென மகன் ப்ரபுவுடன் வந்து நின்றார். அவருடைய உடை பேச்சு மற்றும் ப்ரபுவின் மேல்நாட்டு மோக உடை நடை பாவனைகளும் ஊரில் அனைவரையும் அசூயைப்படுத்தியது. ஆனாலும் யாரும் எதுவும் கேட்கவில்லை.

துரைலிங்கம் மட்டும் ஆதித்யாவைப் பார்த்ததும், ”என்னப்பா அமெரிக்கா ரிடர்ன் , படிப்பு முடிச்சிட்டு ஊர் திரும்பிட்டியா? இங்க என்ன இருக்குன்னு வந்தாயோ போ!” என்றார் கிண்டலாக.

ஆதித்யா மரியாதை காரணமாக அதிகம் பேசாமல் மௌனமாய் சிரித்து வைத்தான். அதற்குள் ப்ரபு இடக்காக, ”என்னை மாதிரி எல்லாரும் வெளிநாட்டு நாகரீகத்தை ஃபாலோ பண்ணமாட்டாங்கப்பா..இன்னமும் கண்ட்ரீஃப்ரூட்டாத்தான் இருப்பாங்க..” என்றான்.

நண்பனை கிண்டலடிப்பது ராபர்ட்டுக்கு எரிச்சலாக வரவும், ”இந்திய நாகரீகத்துக்கு என்ன குறைச்சல்? பாரத நாடு பழம்பெரு நாடு! உலகக்கலாசாரத்தின் முன்னோடி” என்றான்.

அவனையே தலையோடு கால் பார்த்தபடி துரைலிங்கம், ”யாருடாப்பா இந்த வெள்ளைக்காரன்? இந்த குக்கிராமத்தை சுத்திக்காட்ட அழைச்சிட்டு வந்துட்டியாக்கும்?” என்றார் ஆதித்யாவிடம்  எகத்தாளமான குரலில்.

“இவன் என் அத்யந்த நண்பன். பாரத தேசத்துப்பெருமை அறிஞ்சவன்”

“பாரத தேசம் ஒருகாலத்தில் பெருமையாபேசப்பட்டதுதான் அழகாய் செல்வ செழிப்பாய் இருந்தது தான். அதெல்லாம் எப்போதோ ராஜாக்கள் ஆண்ட காலத்தில், இப்போது பாரத நாடு அழகு இழந்து எங்கும் நீர்ப்பஞ்சம்,  போராட்டம், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலைமை, அரசியல்வாதிகளின் சுயநலம் என்று அநியாயங்கள் அக்கிரமங்கள். மொத்தத்தில் நாடேஅசிங்கமாய்போச்சு” என்று கைகொட்டி சிரித்தபடி முடித்தான் ப்ரபு.

இப்போது ஆதித்யா அவனருகில் கோபமாய் சென்றவன், ”உன்னைப் பெற்ற அம்மா கூட ஒரு காலத்தில் அழகாய் இருந்தவர் தான், வயதாகிவிட்டாலும் அவரை அப்படியே உன்னால் பார்க்கமுடியுமா? அழகின்றி அசிங்கமாகிப்போனதால் பெற்றவரை கேவலமாய்ப்பேசத்தான் முடியுமா?

வெளிநாடே கதி என்பவர்கள் முதலில் பிறந்த தேசத்தை நேசிக்கத் தெரிந்து கொள்ளுங்கள். பகைமையற்ற நேசமுள்ள நெஞ்சங்களால்தான் தேசத்தை நேசிக்க முடியும்.” என்று சீறிவிட்டு திரும்பிப்பாராமல் நடந்தான். ராபர்ட்டும் அவனைத் தொடர்ந்தான்.

“பார்த்தீங்களாப்பா. என்னை விட நாலைஞ்சிவயசு சின்னவன் இந்த ஆதித்யா, பேசற பேச்சைப்பாத்தீங்களா? அதுவும் ஒரு அந்நிய நாட்டுக்காரன் முன்னால? இவனுக்கு வரப்போகிற ரத ஊர்வலத்தில் நல்ல நோஸ்கட் கொடுக்கணும். அயோக்கிய ராஸ்கல் எத்தனை தைரியமிருந்தால் என் அம்மாவோட இந்த உருப்படாத தேசத்தை கம்பேர் செய்யமுடியும்?”

ப்ரபு ஆங்காரமாய் காலால் தரையில் உதைத்தான்.

இரண்டொருநாளில் ஊரின் முக்கியத்திருநாள் வந்துவிட்டது!

“ஊரின் முக்கிய விழாவும் ரம்ஜான் திருநாளும் ஒன்றாக அமைந்துவிட்டதுதான் இந்த வருடத்தின் சிறப்பு அம்சம்!” மகிழ்ச்சி பொங்க விஜயசாரதி ராபர்ட்டிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

வழக்கமாக பல்லக்கில் பவனி வரும் அந்த திரு உருவச்சிலை இப்போது அழகிய ரதத்தில் மையப்பகுதியில் வைக்கப்பட்டுவிட்டது.

ரத யாத்திரை இன்னும் சற்று நேரத்தில் புறப்பட இருந்தது.

காலை மணி ஆறு. ரதத்தின் மீது பெரிய ஏணியைவைத்து ஏறி கலசங்களுக்குசீரியல் செட்டைப்பொருத்தி்க்கொண்டிருந்தான் அப்துல்லா. கீழே ஏணியை அழுத்தமாய் பிடித்துக்கொண்டு நின்றிருந்த ஆதித்யா,” டேய் பத்திரம்டா..கீழே விழுந்துடபோறேன்னு கவலையா இருக்கு ..இத்தனை நாளா நோன்புன்னு விரதம் இருந்த நீ இன்னிக்கு பெருநாளுக்கும் வீட்டில் இருக்காமல் இங்கே வந்ததில் மகிழ்ச்சிடா?” என்றான் .

“ஏண்டா ஆதி, நீ படிச்சிமுடிச்சி அமெரிக்காவில் டாலர் சம்பளத்துக்கு ஆசைப்படாமல்  ஊருக்கு வந்தி்ருக்கிறியாம்! இதே ஊர்க்காரனான நான் சென்னைக்கு வேலைக்குபோயிட்டேன். பெருநாள் சமயம்  லீவுக்கு ஊர் வருகிறவன்இந்த வேலைகூட செய்யலேன்னா எப்படிடா? அதுவும் சிகாகோ சென்று உரையாற்றிய சிங்கத்துக்கு நாம் இதனை செய்வது மனசுக்கு நிறைவு தருகிறது”

”உண்மை அப்துல்லா!…ஹிந்து மதம் என்பதன் உச்ச பட்சமான நன்மைகளை அனைத்தையும் உள்ளடக்கிய மூர்த்தியாய் பரமஹம்சரைக் கண்ட விவேகாநந்தர் அவருடைய வாழ்க்கையைத்தான் ஹிந்துக்களின் பாரம்பரியமாக சிகாகோ மேடையில் முழங்கியிருக்கிறார்.

“இதைப்பார்க்கத்தான் ராபர்ட்டும் ஆசையாய் வந்திருக்கிறான் என்றாயே! ஆனால் ராபர்ட்டைப்பார்த்தால் அமெரிக்காகாரர் மாதிரியே இல்லைடா.. நம்ம ஊருப்பையன் மாதிரி இருக்கிறார். நேத்தே நிறைய பேசினோம்.நம்ம நாட்டுமேல அவருக்கு என்ன ஒரு பக்தி! பேச்சில் ரொம்ப அமைதி. “

“ ஆமாம் ….ராபர்ட் ஒரு விவேகானந்த பக்தர்~ அப்புறம் சொல்ல..மறந்துட்டேனே நேத்து துபாய்லேருந்து ப்ரபு வந்திருக்காண்டா..ஆளே மாறிப்போயிட்டான்..”

“ அவந்தான் அங்கபோனதுமே அவன் அப்பாவையும் அம்மாவையும் கூட்டிட்டுப்போயிட்டானே இப்ப எங்க வந்தானாம்? பூட்டி இருக்கற வீட்டை விற்கத்தான் திட்டம் இருக்கும்”

“தெரியல..”

 அப்துல்லாவின் தங்கை சலீமாபேகம் பூக்கூடையுடன் மூச்சிறைக்க ஓடிவந்தாள்..”ஆதியண்ணா! நேத்திக்கே டவுன் சந்தைக்குப்போயி பூமார்க்கெட்ல அள்ளிட்டுவந்திட்டேன் ரதத்தை அலங்கரிக்க வேண்டாமா?..“ என்றாள்.

“ஏம்மா …வீட்ல இன்னிக்கு பாயசம் வைக்கற வேலை இருக்கும்.உங்களோட முக்கியமான பண்டிகை..நோன்பு முடிச்சி நல்லா சாப்பிடற நாளிலும் இப்படி கோயிலுக்காக பூக்கட்டி நேரம் செலவழிக்கணுமா ?” அக்கறையாய் ஆதித்யா கேட்கவும் அப்துல்லா,

”ஆமாண்டா இவ பத்து மணி வரைக்கும் தூங்குவா…இவளாவது அம்மாக்கு உதவியா பாயசம் வைக்கிறதாவது? பதினாலு வயசுக்கு பொறுப்பே கிடையாதுன்னு அம்மா திட்டிட்டே இருக்காங்க.. ..” என்று அப்துல்லா கிண்டல் செய்ய சலீமாபேகம் செல்லக்கோபமாய் அவனை அடிக்க கை ஓங்கினாள் ஆதித்யா அவள் தோளைத்தட்டி ‘நீ போம்மா இவனை நான் கவனிச்சிக்கிறேன்’என்று ஜாடையில் சொல்லி கண்ணடிக்க, ராபர்ட் எல்லாவற்றையும் ரசித்துப்பார்த்துக்கொண்டிருந்தான்.

காலை மணி எட்டுக்கு ரதம் நிலையைவிட்டுக்கிளம்பத்தயாரானது.  தேர் அளவு பெரிதில்லை என்றாலும் கோரதம் என்று சொல்கின்ற அளவிலான அழகானதேர்தான்.முன்பக்கம் பாய்ச்சலுக்குதயாராகும் நிலையில் இருபக்கமும் குதிரை பொம்மைகள்.. மேலே வண்ணக்கலசங்கள். சீலைத்தோரணங்கள். பூஅலங்காரங்கள். தேர் மையத்தில் உயர்ந்த மரப்பீடம்,

அதன் மீது கைகளை கட்டிக்கொண்டு பார்வையில் தீட்சண்யம் தெறிக்கும் விழிகளுடன் விவேகானந்தரின் நான்கடி வெண்கலஉருவச்சிலை.ரத ஆட்டத்தில் சிலை நகராமலிருக்க அதனை பின்புறமாக இறுகப்பிடித்தபடி ஆதித்யாவின் அப்பா விஜயசாரதி.அருகில் அமர்ந்திருந்தார்,

“வழக்கமாய் வருடாவருடம் பல்லக்கில் தான் சுவாமியை பவனி அழைத்துப்போவோம் ஆனால்இந்த ஆண்டு முக்கியமானதாயிற்றே!472 வார்த்தைகள் அடங்கிய பெருமிதம் மிக்க முழக்கத்தால் சுவாமிஜி பாரதத்தின் பெருமையை உலகுக்குப் பறை சாற்றிய பொன்னாள் !1893ஆம் ஆண்டு, அமெரிக்காவில் சிகாகோவில் மதங்களுக்கான உலக நாடாளுமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றி 125 ஆண்டுகள் நிறைவடைகிறது. விவேகானந்தரின் இந்த எழுச்சிமிக்க உரை, சர்வதேச நாடுகளில் மத்தியில் இந்தியாவை வலுவான நாடாக அறியச்செய்தது. நூற்றி இருபத்தி ஐந்தாவது தினம் வரும் இந்த ஆண்டுமட்டும் மிகச்சிறப்பானது!

இப்படிப்பட்ட 125ம் ஆண்டு வைபவத்தை  நாங்கள் முன்னமேயேகொண்டாடப்போகிறோம். காரணம்அந்த தினத்தில் இந்தஊரே வங்கம் தந்த சிங்கத்தை வழிபடுவதற்காக அவர் பிறந்த மண்ணுக்கு செல்லப்போவதால் சற்று முன்கூட்டி இதனை செய்கிறோம்.. ’செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும். ’ என்னும் விவேகானந்தரின் தத்துவம் எங்கள் தாரகமந்திரம்!” என உணர்ச்சிவசப்பட விஜயசாரதி முடித்தபோது ராபர்ட் அவரை பிரமிப்புடன் பார்த்தான்.

கடவுளுக்குசமமாக ஒரு இந்தியதவப்புதல்வரை மதித்துப்போற்றும் ஊருக்கு தான் வந்திருப்பதில் அவன் நெஞ்சு பூரித்தது.

ரத யாத்திரை தொடங்கிவிட்டது. ஊர் மக்கள் வயதுவித்தியாசமின்றி கூடி நின்றனர். அனைவரும் உரக்கசொல்ல ஆரம்பித்தனர்.

“வங்கத்து தங்கம் வாழ்க!”

உற்சாகமாய் கூட்டம் கூவிக்கொண்டு ரதமிழுத்துவந்தது.

அப்போது…

 மூன்று கிலோமீட்டருக்கு அப்பால் இருந்த நெடுஞ்சாலையிலிருந்து  சின்னக்கண்ணனூர் திரும்பும் மண்பாதைக்குள் பெரிய வேன் ஒன்று நுழைந்தது.

ராபர்ட் அதை முதலில் பார்த்தவன் ஆதித்யாவிடம்,” ஆதி! இந்த ஊர் இங்கிருப்பதே பலருக்குத்தெரியாது. நெடுஞ்சாலைக்கே மூன்றுகிலோமீட்டர் நடந்தாகவேண்டும்.இன்னமும் ஊருக்குள் பஸ் வசதி வராத கிராமம் என்று நீ சொல்லியிருந்தாய், ஆனால்இப்போது வெளியூர் வேன் நுழைகிறது…” என்றான்.

“அப்படியா? இன்றைக்குப்பார்த்து யார் வரமுடியும்?..இதுவரை நாங்கள் இந்த ஊர்வலத்தைப்பற்றி விளம்பரப்படுத்தியதில்லை… எதற்கும் அப்பாவிடம் கேட்கிறேன்” என்று விஜயசாரதியிடம் போய் விஜாரித்தான். அவரும் குழப்பமாய்,” எனக்கு ஒன்றும் தெரியலையேப்பா” என்றார்.

வேன்  நேராக அக்ரஹாரத்தில் ப்ரபுவீட்டு வாசலுக்குப்போய் நின்றது .

“ஓஹோ இவன் ஏற்பாடுதானா?” என்று ஆதித்யா தனக்குள் கேட்டுக்கொண்டான்.

சற்று நேரத்தில் கையில் காமிராக்களுடன் இருவர் ரதத்தின் அருகே வந்தனர் அவர்களின் பின்னே ப்ரபு நடந்து வந்தவன் ஆதித்யாவிடம்,” உனது அமெரிக்க நண்பனைப்போல இவங்க எனது துபாய் நண்பர்கள். இந்தியாவில் தமிழ்த்தேனி என்று தொலைக்காட்சி நடத்தறாங்க.. அவர்கள் விவேகானந்தருக்கு ரதம் எடுப்பதை வீடியோ எடுக்கப்போகிறாங்க..” என்றான்

“இதென்ன புதுப்பழக்கம், நம் ஊரில்  இதை இதுவரை அனுமதித்ததில்லையே?” என்றான் ஆதித்யா.

“இது நல்லவிஷயம்தானே! இதைப்பார்க்கத்தானே நீ அமெரிக்காலேருந்து ஆள் அழைச்சிட்டுவந்திருக்கிறே?”

“ராபர்ட்க்கு விவேகானந்தர்மீது பெரும் மதிப்பு. அவனாய் விரும்பி என்னோடு வந்திருக்கிறான். அவன் கையில் காமிராவோ செல்போனோ இல்லை”

 “ இருக்கட்டும். ஊர்ல இப்படி ஒருவிஷயம் பலவருஷமாய் நடக்கறது நாலுபேருக்குத்தெரிஞ்சா ஊர்ப்பெருமை தெரியவரும். உலக அளவில் பேசப்படும்” ப்ரபு நக்கலாய் பதில் சொன்னான்.

“நம் கிராமம் விளம்பரத்தை விரும்பியதில்லை கிராமத்து மக்கள் எல்லோரும் இதற்கு இதுவரை ஒத்துழைப்பு தந்துகொண்டிருக்கிறார்கள்”

“அமெரிக்கா போய் படிச்சும் உனக்கு அறிவு வளரலடா… இப்ப இதுல என்ன பாதிப்பு ஆகப்போகுதுங்கிறே? கிராமத்தலைவரே பர்மிஷன் கொடுத்தாச்சி.. நீ என்னடான்னா உங்கப்பாகிட்ட போய் கேட்கிறே?”

ஆதித்யா ஏதோபேசுவதற்குள் விஜயசாரதி,” ரத யாத்திரைக்கு நல்ல நேரம் கடந்துபோவதற்குள் ஆரம்பிக்கணும். இனி எதுவும் செய்ய இயலாது. அவர்கள் படம் எடுக்கட்டும்…” என்றார்.

ஆதித்யா பிறகு ஏதும் பேசவில்லை.

ஆனால் ரதத்தின் வடத்தை  இழுத்தபடிகிராமத்து மக்கள்”சுவாமிஜிக்கு ஜே!” என்று கூவியபடி இழுத்துக்கொண்டிருக்கையில்  இன்னொரு வேன் வந்து நிற்க அதிலிருந்து பத்து பதினைந்து பேர் வந்து கூட்டத்தில் சேர்ந்துகொள்ளவும் ஆதித்யா திகைத்தான்.ராபர்ட் சட்டென அவர்களை மோப்பம் பிடித்துவிட்டான்.” ஆதி! அவங்களப்பார்த்தா சந்தேகமா இருக்கு” என்றான் கிசுகிசுப்பான குரலில்

ஆதித்யா ப்ரபுவிடம்”யாரிவங்க?” என்று கோபமாய்கேட்டான்.

“அவங்க.எல்லாம் படபிடிப்பைச்சேர்ந்தவங்கதான்..”

“இதென்ன சினிமா ஷூட்டிங்கா இத்தனை பேர் உதவிக்குவர்ரதுக்கு?”

”உதவியாளர்கள் ரெண்டுபேர் …மத்தவங்க என் தூரத்து சொந்தக்காரங்க ”

ப்ரபுவின் அலட்சியமான பேச்சில் அங்கே வந்த அப்துல்லா கடுப்பாகிவிட்டான்.

“வேணாம் ப்ரபு. எல்லாரையும்.படப்பிடிப்பை நிறுத்திட்டுப்போகச்சொல்லு..அந்நியர்களை இந்தமாதிரி விழாக்களில் அனுமதிப்பதில்லை” என்றான்.

“வாடா அப்துல்லா! உனக்குத் தெரியுமா இந்த மகான் ஒரு இந்து இவருக்கான வைபவத்தில் நீ கலந்துக்கலாம் இவங்க கலந்துக்க அனுமதி கிடையாதோ?” என்று ப்ரபு, சொல்லியதும் ஆதித்யா சற்றே பொறுமை இழந்தான்.

”ப்ரபு! வாயை மூடுகிறாயா? சுவாமி அன்று சிகாகோவில் மதங்களுக்கான உலக மாநாட்டில் என்ன உரையாற்றினார் என்பதை நினைத்துப்பார்த்தாயா?”பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதிப்பது, அவற்றை ஏற்றுக் கொள்ளும் பண்புகளை உலகத்திற்கு கற்பித்த மதத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமையடைகிறேன். உலகளாவிய சகிப்புத்தன்மையை மட்டும் நாங்கள் நம்பவில்லை, அதோடு எல்லா மதங்களும் உண்மை என்பதையும் ஒப்புக் கொள்கிறோம்.’ என்றார் அல்லவா அவர் வழி வந்தவர்கள் நாங்கள்!” என்றான்.

 ஊர்பள்ளிக்கூடத்து வாத்தியார் சிவநேசன்  இடையில் புகுந்து ,”பதட்டம் வேண்டாம் ஆதித்யா….நடப்பது நடக்கட்டும்” என்று சமாதானம் செய்யவும் பதில் சொல்லாமல் நகர்ந்தான்.

”போராடு போராடு, போராட்டத்தில்தான் ஞானம் பிறக்கும்!” கூட்டம் விவேகானந்தரின் வீர வரிகளை முழங்கியபடி வடத்தை இழுக்க ஆரம்பித்தது.  வியர்க்கவிறு விறுக்க ஜாதிமத பேதமின்றி அனைவரும் ஒன்றுகூடியதை தொலைக்காட்சி நிறுவன ஒளிப்பதிவாளர் படமெடுக்க ஆரம்பித்தார்.

ஊர்மக்களே ஐநூறு பேருக்குமேலிருப்பார்கள் ஆகவே மக்கள் வெள்ளத்தில் கலந்துவிட்ட புதிதாய் வந்தகூட்டத்தை யாராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை..

”அனைவரும் உரக்க சொல்லுங்கள்’பரமஹம்சர் பாதங்கள் போற்றி! ராமகிருஷ்ணரின் திருவடி போற்றி!”” கூட்டத்தில் ஒருவர் குரல்கொடுத்தார்.

“என்னய்யா இது ரம்ஜானும் அதுவுமா  இங்க வந்து நின்னுக்கிட்டு ் இப்படிக் கூவசொல்றே? வூட்டுல பிரியாணி யும் பாயசமும் பொண்டாட்டி கையால இனிப்பு வகைகளும் தின்னுட்டு இருக்கவேண்டியவனைஇங்க அளைச்சிட்டுவந்து கொடுமைடா..” என்றான் வேனில் வந்து இறங்கியவர்களில் ஒருவன்.

“யாருப்பா அது? இந்த ரத வடம் இழுக்கறப்போ இப்படித் தான் சொல்லணும்..இந்த ஊர் வழக்கம்?” என்றார் ஊர்க்காரபெரியவர் ஒருவர்.

“ ஊருக்கு புதுசா தம்பி..” இன்னொருவர் அப்பாவித்தனத்துடன் கேட்டார்.

அவ்வளவுதான்..

“யாருக்கு யார் தம்பி? யோவ் பெருசு, உன் வயசென்ன என் வயசென்ன  என்னப்போயித்தம்பிங்கறீங்க?’

“யாரது சண்டைபிடிக்கன்னே வந்தீங்களா? உங்களை யாரு ஊருக்குள்ள விட்டது?” என்று அப்துல்லாவின் நண்பன் ரஹ்மான் கூச்சலிட்டான்.

“அப்போ..அப்போ..நாங்க சண்டைக்காரங்களா? ஊரைப்பாக்கவந்தா என்னவோ கண்டபடி பேசறீங்க?”

“அதானே நாம் வேனிலேருந்து எறங்குறப்பவே இவங்கபார்த்த பார்வை சரி இல்ல..”

“டேய் ப்ரபு…என்னவோ ஊராம் , விவேகானந்தரை தெய்வமா மதிக்கிறாங்களாம் பெருமையடிச்சிக்கிறாங்க..ஆனா வந்தவங்களைப்பெருமைப்படும் விதமா நடத்த தெரியலையாம்” ஒருவன் உசுப்பிவிட்டான் வேண்டுமென்றே.

ரதம் நகர்ந்துகொண்டே இருந்தது..பட்டாசு வெடிச்சத்தம் காதைப்பிளந்துகொண்டிருந்ததால் பலருக்கு புதிதாய் ்நுழைந்தவர்களின் நக்கல் பேச்சு காதில் விழவில்லைானால் காதில் கேட்டசிலருக்குப்பொறுமையே போய்விட்டது. அவர்களும் வெறுப்பில் ஏதேதோபேச அரம்பித்துவிட்டனர்.

ராபர்ட் இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்தவன்அப்துல்லாவை தேடிக்கண்டுபிடித்து விஷயத்தை சொல்லிவிட்டான்

உடனே அப்துல்லா ப்ரபு இருந்த இடத்திற்கு விரைந்தான்.

”ப்ரபு !எல்லாரையும் கூட்டிக்கிட்டு ..உடனே கிளமபு” என்றான் கண்டிப்பான குரலில்.

அதற்குள் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுவிட்டது ரதத்தின் வடம் சட்டென கீழே விழுந்தது. வடம் பிடிக்க வந்த புதிய கரங்கள் சில வன்முறையில் இறங்க ஆரம்பித்தன.கரத்தாக்குதல்களில் ஈடுபட்டன.உள்ளூர் மக்களில் சிலர் எதிர் தாக்குதலை தொடங்கிவிட்டனர்.

அப்துல்லா ஆதித்யாவிடம்,”என்னடா இது , ரதத்தை நகர்த்தவிடாமல் இப்படி கலாட்டா பண்றாங்க? வன்முறையை வலியப்புகுத்தறாங்க?”என்றான் எரிச்சலுடன்.

மறுபடி ப்ரபுவிடம்பேச நகர்ந்தவன் அவன் ஒளிப்பதிவாளர் தனது காமிராவில் கூட்டத்தின் வன்முறைகளை மும்முரமாய் படம் பிடிப்பதை ரசித்துக்கொண்டிருப்பது தெரிந்தது,

“பாத்தியாயாடா ஆதித்யா…மக்களைத்தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறாங்க. ப்ரபு இதற்கு உடந்தை.. முதல்ல ஒளிப்பதிவை நிறுத்த சொல்லணும்” என்று வீறிட்டவன்  காமிராவை பிடுங்கச்சென்றான்.

 ”இல்லப்பா..இதெல்லாம் ஒளிபரப்ப மாட்டோம்… “என்று ஒளிப்பதிவாளர்சமாளிக்கவும் அப்துல்லா ஆத்திரத்துடன் அவர் கையிலிருந்த  வீடியோ காமிராக்கருவியைப் பிடுங்கி தூர வீசினான்.அதன் பாகங்கள் கழண்டு சிதறி விழுந்தது.

ஒளிப்பதிவாளர் கோபமுடன்,” என்னப்பா இளைஞர்களான உங்களுக்குப்பொறுப்பு இல்லையா இப்படியா விலைஉயர்ந்த பொருளை வாங்கிக்கீழே வீசி எறிவீங்க?’ என்று கத்தினார்.

அதற்குள் ஊர்மக்கள்கூட்டம் அவர்களைச்சுற்றிக்கொண்டு குற்றவாளிகளைப்போல பார்த்தது.

“சின்னக்கண்ணனூர் பற்றியும் இப்படி வித்தியாசமாய் விழா எடுப்பது பற்றியும் வெளி உலகுக்கு அறிமுகப்படுத்த ஆசையாய் வந்தவங்களை அவமானப்படுத்தி அனுப்பறீங்க இல்ல? எந்த யுகத்தில் இருக்கீங்கடா நீங்கள்ளாம்?” சீறினான் ப்ரபு..

அப்துல்லாவிற்கும் எரிச்சல் தலைக்கேறினாலும் நிதானமாய் பேச ஆரம்பித்தான்.

“இப்படி வன்முறையத் தூண்டி அதனைப்படம் எடுக்க வைப்பதுதான் உன்னுடைய நோக்கமென்றால் எங்களுக்கு அது தேவை இல்லை. மின்சாரத்தை உபயோகித்து ஒருவரை கொலை செய்யலாம் ஒருவீட்டை பி்ரகாசிக்கச்செய்யலாம் ஒரு குழந்தையை நீரில் மூழ்கடிக்கச் செய்யலாம் அல்லது அதைக் கொண்டு தாகம் தணிக்கலாம். ஒருவரின் சொந்த மனத்தில் உள்ள எண்ணங்கள் தான் நல்லதையும் கெட்டதையும் தீர்மானிக்கின்றன. உன் எண்ணம் நல்லதாக இல்லை….உனது நோக்கம் எங்களுக்குப்புரிந்துவிட்டது. அப்பாவி ஜனங்களுக்கு பிரிவினை என்ன என்பதை சொல்லித்தர வந்திருக்கிறாய்! ஊர்ப்பற்றும் தேச நேசமும் இருந்தால் நீ இப்படி ஒரு கீழ்த்தரமான திட்டத்தை தீட்டி இருக்கமாட்டாய்! உனக்குத் தெரியுமா, மேல்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருத்தி (ஜோசஃபின் மெக்லவுட்) சுவாமி விவேகாநந்தர் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தாள். அவள், ”சுவாமி! உங்களுக்கு நான் எந்தவிதத்தில் உதவ முடியும்?’ என்று கேட்டாள்.

சற்றும் தயங்காமல் விவேகானந்தர் சொன்னார், ”இந்தியா என்னும் தேசத்தை நேசிப்பது ஒன்றுதான் நீங்கள் எனக்கு செய்யக்கூடிய உதவி நீங்கள் அதைச்செய்தாலே போதும்” என்றார்.

தேசத்தை நேசித்தல் என்பதேவிவேகானந்த யுகம்! உனக்கு சொந்த ஊர் மீது பற்றில்லை. தாய் மண்ணை வணங்கும் பண்பு இல்லை..தனது சொந்த ஊரை நேசிக்கிறவர்களால்தான் ஒருநாட்டை நேசிக்க முடியும். தேசம் முழுவதும் விவேகானந்த யுகம் மலரும் என்று காத்திருக்கிறோம். அதற்கான முயற்சியை சொந்தமண்ணிலிருந்து ஆரம்பிக்கிறோம். எங்களுக்கு விளம்பரம் தேவை இல்லை. ஆகவே அத்தனை பேரும் உடனேயே கிளம்புங்கள். நீங்கள் போகும்வரை ரதமும் இங்கிருந்து கிளம்பாது” என்று முடித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *