அவனுடைய கண்கள் இருக்கவேண்டிய இடத்தில் இரண்டு ஆழமான பள்ளங்கள் இருந்தன. வாழ்வின் பெரும்பேறான கண்ணொளியை அவன் இழந்துவிட்டான்.
அவனுடைய முகத்தில் அழகு என்பது சிறிதும் இல்லை . திருமகள் அதை முழுதும் புறக்கணித்திருந்தாள். அது சுடு காடு போலப் பாழடைந்திருந்தது. முதல் முதலாக அந்த முகத்தைப் பார்ப்பவர் களுடைய மனத்தில் அருவருப்பு உண்டாகும்.
ஆனால் அவன் தன்னுடைய யாழைக் கையில் எடுத்து விட்டால் இந்த உடற்குறைபாடெல்லாம் கேட்போர் கண்களுக்குத் தோன்றாமல் மறைந்துவிடும். அவர்களுடைய கண்கள் தம் வேலையைச் செய்ய மறுத்துவிடும். செவிகள் மெய்ம் மறந்து கேட்டுக் கொண்டிருக்கும்.
யாழ் நரம்புகளின் இயக்கம் ஒலியின் அலைகளாய், நாதக் கடலாய், இசையின் சாகரமாய், இன்பத்தின் பிரளயமாய் முடி வடையும். முடிவென்பதே அதற்கு இல்லை யென்றுதான் சொல்ல வேண்டும். அணுக்களாய் கண்டங்களாய் உலகங்களாய் அண்டங்களாய் பேரண்டங் களாய் முடிவடைகிறதோ அல்லது அப்பாலும் போகின்றதோ? யாருக்குத் தெரியும்?
அவனுடைய கண்களின் முன் எல்லையில்லாத அழகுல கங்கள் திறக்கப்படுகின்றன; அவற்றின் மேம்பாட்டில் அவன் தன்னை இழந்துவிடுகிறான். இப்பொழுது அவன் வயிற்றுச் சோற்றுக்கே அல்லற்படும் யாழ்ப்பாடி அல்ல, அழகின் கொழுந்தாய் விளங்கும் அமரனோ ?
யாழோசை உச்சஸ்தாயியை அடைகிறது. அவனும் மேலே போவது போலத் தெரிகிறது; மேலே மேலே….
அதுதான் பூமி, அதுதான் சுவர்க்கம், அதுதான் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், காலை வேளையின் மாயம், மாலையின் மந்திரம், இரவின் அதிசயம், ஆம்; வசந்தத்தின் மோகனம் எல்லாம் அதுதான்.
மனம் இப்படியான மாய உலகங்களில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும். செவிகளோ சும்மா கேட்டுக்கொண்டிருக்கும். படித்தவனையும் பாமரனையும் ஒருங்கே மதிமயங்க வைக்கும் சக்தி வாய்ந்தவை அவன் கீதங்கள்.
சங்கீதம் முடிந்ததும் அவன் மறுபடி பழைய குருடன்தான். கேட்டுக் கொண்டிருந்தவர்களும் பழையபடியே கவலைப்படும் வாழ்க்கைச்சேற்றில் கிடந்து புரளும் அற்ப மனிதர்களாகி விடுவார்கள்.
அவனுடைய ஊர் தென்னிந்தியாவில் ஒரு கிராமம். பெயர்? பெயர் கிடையாது. எல்லோரும் அவனை யாழ்ப்பாடி என்று தான் அழைத்தார்கள். ஆனால் அவனுடைய மனைவி மட்டும் அவனை அழைப்பது “குருட்டுப் பிணம்” என்று. எந்நேரம் பார்த் தாலும், “குருட்டுப் பிணம், குருட்டுப் பிணம்” தான்; அவள் அவனுடைய வாழ்வின் துர்த்தேவதை. மாதிரி.
“இரண்டு காசு சம்பாதிக்கமாட்டாத குருட்டுப் பிணத்திற்கு இசை என்னத்துக்கு? யாழ் என்னத்துக்கு? ஒரு தெருக்கோடியில் போயிருந்து வாசித்தாலும் யாராவது இரண்டு காசு போடு வார்கள். அதில்லாமல் எந்நேரமும் வீட்டிற்குள் குந்திக்கொண்டு யாழை வைத்துத் தட்டிக் கொண்டிருந்தால் யார் கவனிக்கப் போகிறார்கள்? சீ! வெட்கமில்லை. பெண்ணாய்ப் பிறந்தவள் உழைத்துக் கொடுக்க குந்திக் கொண்டிருந்து சாப்பிடுவதற்கு?” – இந்த வார்த்தைகள் அவனைத் தினமும் வைகறையில் துயிலெழுப்பும் வாசகங்கள்.
அவன் இவற்றையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. அவனுக்குச் சாப்பிட்டாலும் ஒன்றுதான்; பட்டினி கிடந்தாலும் ஒன்றுதான். நினைத்த நேரம் அமரர் உலகில் ஏறி அங்குள்ள இன்பங்களைச் சுவைத்துவிட்டு வருவதற்குத்தான் இசையின் பட்டு நூலேணி இருக்கிறதே. துயரம் எங்கே? கவலைகள்? அவை வெகு தூரத்தில் இருக்கின்றன. அவனுக்கு வாழ்க்கை எல்லையில்லாத ஓர் ஆனந்த நிருத்தம்…
எதற்கும் ஓர் எல்லை உண்டு. பொறுமைக்குந்தான்.
யாழ்ப்பாடியினுடைய மனைவி வழக்கம்போல அன்றும் தன்னுடைய தூற்றல் திருப்பள்ளியெழுச்சியைப் பாடினாள்; கொஞ்சம் உரமாகவேதான் பாடினாள். ஒருநாளுமில்லாதவாறு அது யாழ்ப்பாடியினுடைய மனத்தில் சுறுக்கென்று தைத்தது; விஷம் ஏற்றப்பட்ட ஊசிபோலத் தைத்தது. அவனுக்கே அதன் காரணம் விளங்கவில்லை.
“தொட்டுத் தாலி கட்டிய கணவனென்று கடுகளவுகூட மரியாதை காட்டக்கூடாதா?” அவன் கூறியது இவ்வளவுதான்.
“உழைத்துப் போடுவது போதாதென்று மரியாதை வேறே வேண்டுமா? நீ என்ன செய்வாய், பாவம்! நான் கஷ்டப்பட்டுச் சோறு போட நீ சுகமாக இருந்து சாப்பிடுகின்றாய். கொழுப்பேறி விட்டது. பார், இன்று உனக்கு…” இன்னும் ஏதேதோ எல்லாம் சொன்னாள்.
அவளுடைய வார்த்தைகளை அவன் பொருட்படுத்த. வில்லை. ஒருபொழுதும் பொருட்படுத்தியதில்லையே!
ஆனால் கடைசியாக இந்த வார்த்தைகளுக்கு ஒரு முடிவு கட்டுவதுபோல வந்தது துடைப்பம் – ஆமாம் அது துடைப்பந் தான் – அவனுடைய உணர்ச்சி நரம்புகளைத் தட்டி எழுப்பி விட்டது. சதா பூரணமாக இருந்த அவனுடைய பொறுமைப் பொக்கிஷம் காலியாகிவிட்டது.
அவனுக்குக் கோபம் வரவில்லை. அது வெகுதூரம். ‘இனிமேல் இவ்விடத்தில் இருக்கக்கூடாது’ என்ற எண்ணந்தான் உண்டாயிற்று.
அழுக்கடைந்த சால்வையை உதறித் தோளிற் போட்டுக் கொண்டான். ஒரு கையால் யாழை மார்போடு அணைத்துக் கொண்டான். மற்ற கையில் ஒரு தடியை எடுத்துக்கொண்டு வெளிக் கிளம்பினான்.
எங்கே போவது? அவனுக்கே தெரியாது.
‘ஏதோ வைராக்கியத்தில் போகிறான். வயிற்றில் பசி கடித்தவுடன் திரும்பி வருவான்’ என்று மனைவி நினைத்தாள். ஆனால்… அவன் திரும்பி வரவேயில்லை.
அதன்பிறகு அவனை இலங்கையில் பார்க்கிறோம். இந்த வறிய குருடன் எப்படிக் கடலைக் கடந்து இலங்கையை அடைந்தான் என்று யாருக்குமே தெரியாது. “வந்து சேர்ந்தான்” என்று மட்டுந்தான் இலங்கைச் சரித்திரம் கூடச் சொல்லுகிறது.
அக்காலத்தில் இலங்கையின் தலைநகராகிய அநுராத புரத்தில் வாலகம்பா என்னும் சிங்கள மன்னன் செங்கோலோச்சி வந்தான்.
அவன் ஓர் இசைப்பித்தன்; அவனே பெரிய இசை வல்லுநன். அவனுக்கு இசையென்றால் போதும்; வேறொன்றுமே வேண்டிய தில்லை. இசைப்புலவர்கள் வேண்டினால் தன்னையே அர்ப்பணம் செய்துவிடக்கூடிய வள்ளல் அவன். இந்தியா, பர்மா, சீயம் முதலிய தேசங்களிலிருந்தெல்லாம் இசைப்புலவர்கள் அவனை நாடி வந்தார்கள். அவர்களுடைய கானவலையில் சிக்கிய மன்னன் அவர்களுக்கு யானைத் தந்தம், முத்து, ரத்தினங்கள் முதலிய வற்றைப் பரிசாக வழங்கினான்.
அந்தக் குருட்டு யாழ்ப்பாடியும் அவ்வரசனை நாடி வந்தான். பரிசில் பெறவா? இல்லை; அது அவனுடைய நோக்கமன்று. மன்னன் மகிழ்வதைக் கண்டு தானும் மகிழவேண்டும்; அதுதான் அவனுடைய ஆசை.
அரசவையில் இருந்தவர்களுடைய மனத்தில் யாழ்ப் பாடியைப் பற்றி ஓர் அலட்சியமான நினைவு எழுந்தது. “இந்தக் குருடனுக்கு என்ன இசை தெரியப்போகிறது! இவனைப் பார்த்தால் தெருவில் பிச்சைக்கு யாழ் வாசிக்கும் நாடோடி போல்லவோ இருக்கின்றான்? யாரிடத்திலாவது சிக்ஷை பெற்றுக் கொண்டானா? இவனுடைய பாமர சங்கீதத்தை, இசைக் கடலைக் கரைகண்ட எங்கள் அரசன் எங்கே ரசிக்கப் போகிறான்? பொரு ளாசை பிடித்து வீணாக அலைகின்றான்!” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
ராஜகுருவின் ஆஞ்ஞைப்படி அரசனுக்கும் அந்தகனுக்கும் இடையில் ஒரு தடித்த திரை போடப்பட்டது; கண்ணிழந்தவன் முகத்தில் விழித்தால் அவசனுக்கு அதிர்ஷ்டக்குறைவாம்.
திரைக்கு ஒரு பக்கத்தில் யாழ்ப்பாடி யாழைச் சுதி கூட்டித் தயாராக வைத்துக்கொண்டிருந்தான். மற்ற பக்கத்தில் அரசன் போர்க்கோலத்தோடு தோன்றினான். தனக்கு முன்னால் ஒரு வீரன் நிற்பதாக யாழ்ப்பாடி அறிந்துவிட்டான். எப்படி? அது அவனைத்தான் கேட்டு அறிந்து கொள்ளவேண்டும்.
யாழ்ப்பாடி யாழ் நரம்புகளைத் தெறித்தான். அந்த ஸ்வரங் களில் ஒரு எழுச்சி, ஒரு மிதப்பு காணப்பட்டது. காம்பீரியமும் அகங்காரமும் அவற்றில் தொனித்தன. நாதம் மேலே மேலே போகிறது….
“யானைக் கூட்டத்தில் ஆண் சிங்கம் போன்றவன் அரசன்! அவனுடைய கால்களிற் கட்டிய வீரக் கெண்டை மணியின் ஓசையே பகைவர்களை நடுங்கச் செய்கிறது. அவனுடைய வெற்றி விறலைக் கேட்டு மருட்சியடைந்து நாலாபக்கமும் சிதறியோடு கிறார்கள். கோடையிடிபோல் முழங்குகிறது அவனுடைய வில் வளையின் நாதம்; தீயாயும் சண்டமாருதமாயும் பாணங்களைச் சொரிகிறான்.
“சற்றுமுன் படைத் திரளால் நிறைந்திருந்த அமர்க்களம் இப்பொழுது பிணத்திரளாகி நிறைந்து கிடக்கிறது. ரத்தம் ஆறு போல் ஓடுகிறது. நாய்களும் பேய்களும் ‘நான் முந்தியோ, நீ முந்தியோ’ என்று சண்டையிடுகின்றன அந்த விருந்தை உண்பதற்கு.
“அரசனுடைய வெற்றிச் சங்கநாதம் வானைப் பிளக்கிறது. வீரலட்சுமி அவனைச் சரணடைகிறாள்.”
யாழொலி ஓய்ந்துவிட்டது. ஆனால் அவன் எல்லோர் மனத்திலும் எழுப்பிவிட்ட போர்க்களக் காட்சி மட்டும் இன்னும் மறையவில்லை. பித்துப் பிடித்தவர்கள் போல், உட்கார்ந்திருக்கிறார்கள் சபையோர்கள்.
மறுபடியும் அரசன் திரைக்கு அப்பால் தோன்றுகின்றான் ராணியின் உடையில். யாழ்நரம்புகள் பழையபடி இயங்குகின்றன. ஆனால் இம்முறை மென்மையாக – ஆ! எவ்வளவு மென்மையாக இருக்கிறது அந்த இசை!
அன்னத்தின் நடை, மயிலின் ஆடல், கோகிலத்தின் தொனி, சந்திரனின் குளிர்ச்சி, அனிச்ச மலரின் மென்மை – ஆமாம்! தாமரையின் மலர்ச்சி – இவையெல்லாம் பிறக்கின்றன அந்த யாழோசையில்….
“அரசி காதல் நோயால் வருந்துகிறாளா? நக்ஷத்திரங்கள் மின்னும் எல்லையில்லா வானத்தையும்விட எல்லையற்று இருக்கிறதா அந்தக் காதல்? நீலக் கடலைவிட ஆழமானதா?
“எத்தனை இரவுகள் தான் காதலனுடைய பிரிவினால் இப்படி விரக வேதனைப்பட வேண்டும்? அவனுக்கு இரக்க மென்பது சிறிதுமில்லை போலும்! சூரியன் ஒரு தினம் உதிக்கா விட்டால் கமலமலரின் மெல்லிதழ்கள் வாடிச் சோர்ந்து போகாவா?
“அதோ, அதோ, அவனுடைய தேரிற் கட்டிய மணிகளின் ஓசை. மழையில்லாமல் வாடி வதங்கிக் கிடக்கும் நெற்பயிருக்குச் சூல்கொண்ட மேகத்தின் முழக்கம் போலல்லவா இருக்கிறது…”
யாழ்ப்பாடி யாழைக் கீழே வைக்கிறான். கரகோஷம் செய் வதற்குக்கூட ஒருவரிடமும் சுய அறிவு இல்லை. மது அருந்திய மந்திகள் போல எல்லோரும் மதி மயங்கிக் கிடக்கின்றார்கள்.
அரசனுக்கு மனம் பூரித்துவிட்டது. அவன் மானசீகமாக அநுபவித்த போர்க்களக் காட்சியும் காதற் காட்சியும் இன்னமும் அவன் கண்களின் முன் நிற்கின்றன. ‘மானிட உருவில் வந்த கந்தர்வனா இவன்!’ என்று அதிசயிக்கிறான்.
இலங்கையின் ஒரு பகுதியான மணற்றிடல் என்ற தீவை யாழ்பபாடிக்குப் பரிசிலாக வழங்கினான்.
யாழ்ப்பாடி அதில் தன் இனத்தவர்களைக் கொண்டு வந்து குடியேற்றி, காடுகெடுத்து நாடாக்கிக் குளம் தொட்டு வளம் பெருக்கினான் என்று இலங்கைச் சரித்திரம் கூறுகின்றது.
அந்த மணற்றிடல்தான் இப்பொழுது யாழ்ப்பாணம் என்று வழங்கப்படுகின்றது.
– வெள்ளிப் பாதசரம், முதற் பதிப்பு: ஜனவரி 2008, மித்ரா ஆர்ட்ஸ் அண்ட் கிரியேஷன்ஸ், சென்னை.