கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினத்தந்தி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 22, 2024
பார்வையிட்டோர்: 1,922 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கணேசனுக்கு முதலில் ஆச்சரியமாக இருந்தது. அப்புறம் திகைப்பாக இருந்தது. அவன் ‘ராமகிருஷணா ரெஸ்டாரண்’டில் அமர்ந்து முதலில் வடை சாப்பிட்டு விட்டு திரும்ப மசால் தோசை ஆர்டர் கொடுத்தபோது தான் ‘அவன்’ வந்தான்.

“ஹாய் கணேசன், எப்படியிருக்கே” என்று ஹாயாக கையை நீட்டி கணேசனின் கையைப் பிடித்து கைகுலுக்கி விட்டு எதிரில் அமர்ந்தான்.

“நீங்க..” என்று புரியாமல் கேட்டான் கணேசன்.

“ஹேய்… என்னை தெரியவில்லையா? நான் தான் ராஜ்குமார். உன் கூட ஐந்தாம் கிளாஸ் வரை படித்தேனே…”
“நீங்க..?”

“என்னடா பிரண்டாக இருந்து கொண்டு நீங்க.. வாங்கன்னு கூப்பிட்டுக் கொண்டிருக்கிறாய். சும்மா ராஜ்குமார்னே கூப்பிடு.”

“அது சரி ராஜ்குமார், எந்த ஸ்கூலிலே, என்னோடு படித்தே, எனக்கு ஞாபகமில்லையே?”

இன்னும் கணேசனுக்கு மலைப்பாக இருந்தது. புயல் போல வேகமாக வந்தான். கண்டிப்பாக என் நண்பர்கள் குரூப்பில் இவன் ஞாபகம் என் நினைவில் துப்புரவாக இல்லை.

“அதை விடு கணேஷ் என்ன சாப்பிட்டாய்?”

“வடை சாப்பிட்டேன்” என்று கணேசன் சொல்ல, சர்வர் மசாலா தோசை கொண்டு வைத்தான்.

“நீ பொறுமையாக சாப்பிடுகிற ஆள். ஒண்ணு பண்ணு. நான் இதைச் சாப்பிடுகிறேன்” என்று கணேசனிடம் சொல்லி விட்டு “சர்வர், இன்னும் இரண்டு மசாலா தோசைகள், ஒரு பிளேட் வடை, ஒரு ஆனியன் ஊத்தப்பம். இரண்டு காபி கொண்டு வாங்க” என்று சொல்லி விட்டு வேகமாக சாப்பிட ஆரம்பித்தான்.

“ராஜ்குமார்… எனக்கு உங்களை… உன்னை அடையாளம் தெரியவில்லை. நீ எந்த ஊர்லேர்ந்து நம்முடைய அரசாங்க பள்ளிக்கு வந்தாய்? ஏன்னா நான் அந்த பாம்பன் குளம் ஊரைச் சேர்ந்தவன். கண்டிப்பாக அந்த ஊர்க்காரானாக இருந்திருந்தால், எனக்கு உன்னை தெரிந்திருக்கும்”.

“அது… அது.. அதையேண்டா இப்போ கேட்டுக் கொண்டிருக்கிறாய். உனக்குக் கல்யாணமாயிருச்சா?பிள்ளைகள் இருக்கிறதா?” என்று வேகமாக சாப்பிட்ட ராஜ்குமார் அடுத்து வந்த மசாலா தோசையையும் வடையையும் சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.

“எனக்கு கல்யாணம் ஆகி ஒரு பையன் கூட இருக்கான். அது கூட தெரியாமல் நீ எனக்கு நண்பன் என்கிறாய்?” சந்தேகத்தில் மசாலா தோசையை மெதுவாக பிய்த்து தின்ன ஆரம்பித்தான்.

“இல்லே கணேசன். உன்னுடைய கல்யாணத்தில் பார்த்தது. அதன் பிறகு பார்க்கவில்லையா… அதுதான் ஏதோ ஞாபகத்தில் கேட்டேன்” என்றவன், வேகமாக சாப்பிட்டு விட்டு அடுத்து வந்த வெங்காய தோசையைச் சாப்பிட ஆரம்பித்தான்.

இன்னும் சந்தேகத்தோடு கணேசன் பார்த்துக் கொண்டிருக்க, “என்னடா பார்த்துக் கொண்டிருக்கிறாய். சாப்பிடு மசாலா தோசை காய்கிறது. சூடு ஆறிப்போனால் ருசி இருக்காது” என்றான்.

“என்னவோ ராஜ்குமார் எனக்கு இன்னும் உன்னை ஞாபகத்திற்கு கொண்டு வர முடியவில்லை” என்றான் கணேசன்.

“இப்படித்தான், சின்ன வயசிலே ஞாபக மறதியிலே வாத்தியாரிடம் அடிக்கடி அடி வாங்குவாய். இன்னும் உனக்கு அந்தப் பழக்கம் அப்படியே இருக்கிறது” சிரித்தவாறு சொன்னவன் காபி! கொண்டு வைத்த சர்வரிடம் “இன்னும் இரண்டு பஜ்ஜியும், போண்டாவும் கொஞ்சம் வேகமாக கொண்டு வாப்பா” என்றான்.

கணேசனுக்கு கொஞ்சம் கோபம் மேலேரியது. “என் கல்யாணத்திற்கு வந்தேன் என்கிறாய். அது எனக்கு மறந்து விட்டது என்றே வச்சிக்குவோம். அப்புறம் ஏன் கல்யாணமாகி குழந்தை குட்டிகள் இருக்கிறதா என்று கேட்டாய்!”

“அப்படியாவது நான் சொல்வது.. என்னை ஞாபகப் படுத்திக் உதவுமா என்றுதான்” என்றான் ராஜ்குமார்.

“என்ன உளறுகிறாய்” மசாலா தோசையை சாப்பிட விரும்பாமல் காபி குடிக்க ஆரம்பித்தான் கணேசன்.

வந்த பஜ்ஜிகளையும், போண்டாவையும் விழுங்கி விட்டு காபி குடிக்க ஆரம்பித்த ராஜ்குமார் வேகமாக குடித்து விட்டு “நானா உளறுகிறேன். ஒரு நல்ல நண்பனை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாத நீ தான் உளறுகிறாய். நாம் ரெண்டு பேரும் குச்சிக் கம்பு விளையாடி உன் வலது கன்னத்தில் அடிபட்ட தழும்பு இன்னும் இருக்கிறது. அதாவது நினைவிருக்கிறதா?” என்றவாறு எழுந்து கையைக் கழுவச் சென்றான் ராஜ்குமார்.

“என்ன விளையாடுகிறாயா? இந்தத் தழும்பு நான் கல்லூரியில் கபடி விளையாடும்போது பட்டது. தெரியுமா? என்னிடமே பொய் சொல்கிறாயா?” என்று கையைக் கழுவ எழுந்தான் கணேசன்.

“ருச்சிக் கம்பில் பட்ட புண்ணில் வந்த தழும்பு போல தெரிந்தது கணேசன், அது சரி, நீ போய் கையை கழுவி விட்டு வா'” என்று கர்ச்சீப்பால் கையைத் துடைத்துக் கொண்டு அசால்ட்டாக “நீ கூட என் பிராண்ட் சிகரெட் தான் பூஸ் பண்ணுகிறாய்…” என்றவாறு கணேசன் பாக்கெட்டிலிருந்த வில்ஸ் பாக்கெட்டை எடுத்து ஒரு சிகெரெட் எடுத்து சர்வரிடம் தீப்பெட்டி வாங்கி பற்ற வைத்துக்கொண்டு மீதி சிகரெட் பாக்கெட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.

கணேசன் கையைக் கழுவி விட்டு வரவும், “கொஞ்சம் அவசரமாக ஒரு போன் பண்ணிவிட்டு. வருகிறேன்” என்று எழுந்த ராஜ்குமார், “சர்வர் எவ்வளவு பில்?” என்றான் தன் பையில் பணம் எடுக்க முனைந்து கைகளை விட்டவாறு.

“மொத்தம் நூற்று மூன்று ரூபாய் சார்” என்று சொல்லியவாறு பில்லை சீரகம் நிறைந்த கிண்ணத்தில் வைத்து விட்டுப் போனான் சர்வர்.

“நூற்று ஐந்து ரூபாயாக வைத்து விடு கணேசன். பாவம் சர்வருக்கும் இரண்டு ரூபாய் கிடைக்கட்டும். நான் கொஞ்ச அவசரமாக என் பார்ட்டனருக்கு போன் பண்ண வேண்டும். வரட்டுமா?” என்று எழுந்தவன். “சர்வர் என் பிரண்ட் பில்லை செட்டில் பண்ணி விடுவார். இதை வைத்துக் கொள்ளுங்கள்'” என்று சர்வர் கையில் இரண்டு ரூபாயைத் திணித்து விட்டு வேகமாக நடந்தான் ராஜ்குமார்.

தான் எவ்வளவு அருமையாக ஏமாந்து போனோம் என்று உணர்ந்த கணேசன் வேகமாகப் போய்க் கொண்டிருந்த ராஜ்குமாரை பார்த்துக் கொண்டே தலையில் அடித்துக் கொண்டான்.

மனசுக்குள்ளே பர்சில் ரூபாய் நூற்றி மூன்று இருக்குமா என்று எண்ணம் பயமாக எழ ஆரம்பித்தது கணேசனுக்கு.

– 2004, ஞாயிறு மலர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *