Рассказ Hеизвестного человека : யாரோ சொன்ன கதை
மூலம் : அன்டன் செக்ஹோவ்
தமிழில் : மா. புகழேந்தி
ஐந்தாம் நூற்றாண்டில், இப்போதைப்போலவே, சூரியன் ஒவ்வொரு காலையிலும் உதித்தது ஒவ்வொரு மாலையிலும் ஓய்வெடுக்கச் சென்றது. விடியலில் கதிரொளி பனித்துளியை முத்தமிட்ட போது, பூமி புத்துணர்ச்சி பெற்றது, காற்று உற்சாகமான நம்பிக்கை ஒலிகளால் நிறைந்தது. மாலையில் அதே பூமி இருளுக்குள் மூழ்கி அமைதியானது. ஒரு நாள் இன்னொரு நாளைப் போல இருந்தது, ஓர் இரவு இன்னோர் இரவைப் போல இருந்தது. எப்போதாவது புயல் மேகங்கள் இடி மின்னலுடன் சீறி வந்தன, அல்லது கவனிக்கப் படாத விண்மீன் வானிலிருந்து விழுந்தது, அல்லது வெளுத்த துறவி ஓடி வந்து சக துறவிகளிடம் தான் புலி ஒன்றைப் பார்த்ததாகவும் அது மடத்துக்கு ரொம்ப தூரத்தில் இல்லை என்றும் சொல்வார், அதைத் தவிர எல்லா நாளும் ஒன்று போல்தான்.
துறவிகள் வேலை செய்தார்கள் தொழுகை நடத்தினார்கள், தலைமைப் பாதிரியார் ஆர்கனில் லத்தீன் பாடல்களை இசைத்துக் கொண்டிருப்பார். அந்த அதிசயத்தக்க மனிதர் அசாதாரணத் திறமையைக் கொண்டிருந்தார். ஆர்கனில் அத்துணை கலை நயத்துடன் அவர் இசைக்கும் போது, அந்த இன்னிசை அவரது அறையிலிருந்து பரவி மடம் முழுக்க நிறைந்து இருக்கும், அப்போது கேட்கும்திறன் வயதானதால் குறைந்து போன துறவிகள் கூட தங்களது கண்களில் தோன்றும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உருகி விடுவர். அவர் எதைப் பற்றிப் பேசினாலும், அது மிகச் சாதாரணமானதாக இருந்தாலும், மரத்தைப் பற்றியோ காட்டு விலங்கைப் பற்றியோ அல்லது கடலைப் பற்றியோ இருந்தாலும், அவர்கள் புன்னகையோ கண்ணீரோ இல்லாமல் கேட்க முடியாது. ஆர்கனில் இருந்து வெளிப்படும் இசை வெள்ளத்தைப் போலவே பேச்சும் இருக்கும். அவர் கோபம் கொண்டாலோ மகிழ்ச்சியில் திளைத்தாலோ கடுமையாகப் பேச ஆரம்பித்தாலோ ஏதோ ஓர் உந்துதல் அவரை ஆட்கொண்டு விடும், ஒளிகொண்ட கண்களில் நீர் திரையிடும், முகம் சிவந்து விடும், குரல் இடியைப் போல உரத்துக் கேட்கும், மற்ற துறவிகள் கவனத்துடன் கேட்பார்கள், அவர்களது மனம் அவரின் உணர்ச்சிப் பெருக்கான பேச்சில் கட்டுண்டு போகும்; அம் மாதிரியான குறிப்பிடத்தக்க அதிசயமான நேரங்களில் அவர்களின் மேலான அவரது ஆளுமை எல்லையில்லாமல் இருக்கும், அவர் தனது சகாக்களைக் கடலுக்குள் குதிக்கச் சொன்னாலும் , அவரது கட்டளையை நிறைவற்ற அவர்கள் எல்லோரும், ஒவ்வொருவரும் அதைச் செய்வார்கள்.
இசையில், பேச்சில், பண்ணில் -கடவுளை, சொர்கத்தை, பூமியை- அவர் புகழ்ந்து துதிக்கும் போதெல்லாம் துறவிகளுக்கு தொடர்ந்து மகிழ்ச்சியினை அளிப்பதாக இருந்தது. அவர்களது ஒரே வகையான துறவு வாழ்க்கையானது மரங்கள், பூக்கள், வசந்த காலம், குளிர் காலம், எல்லாவற்றையும் மறக்கச் செய்திருந்தது, அவர்களது காதுகளுக்குக் கடலோசை சலிப்பூட்டியது, பறவைகளின் ஒலிகள் வெறுப்பூட்டியது, ஆனாலும் தலைமைப் பாதிரியாரின் திறமைகள் அவர்களுக்குத் தேவையாய் இருந்தது தினசரி உணவினைப் போல.
பல்லாண்டுகள் கழிந்தன, ஒவ்வொரு நாளும் வேறொரு நாளைப் போலவே இருந்தது, ஒவ்வோர் இரவும் வேறோர் இரவைப் போலவே இருந்தது. பறவைகள் விலங்குகள் தவிர்த்து வேறு எந்த உயிரினமும் மடத்துக்கு அருகில் வரவில்லை. மனிதர்கள் வாழும் மிக அண்மைக் குடியிருப்பு வெகு தூரத்தில் இருந்தது. மடத்தில்ருந்து அதற்கும், அதிலிருந்து மடத்துக்கும் செல்ல பாலைவனத்தின் வழியே எழுபது மைல்கள் கடக்க வேண்டும். வாழ்வை வெறுத்தவன் இன்பத்தைத் துறந்தவன் மட்டுமே பிணக் குழிக்குள் போவதைப் போல மடத்துக்கு பாலைவனத்தைக் கடந்து வருவான்.
துறவிகளுக்கு என்ன ஆச்சரியம் என்றால், ஓர் இரவில் ஒரு மனிதன், நகரத்தில் உள்ள எல்லோரையும் போல வாழ்வை நேசிக்கும் பாவிகளில் ஒருவன், மடத்தின் வாயில் கதவைத் தட்டிக் கொண்டு இருந்ததுதான். அவனோ தொழுவதற்கும் தலைமைப் பாதிரியாரின் ஆசியைக் கேட்பதற்கும் முன்னர் ஒயினும் உணவும் கேட்டான். எவ்வாறு நகரம் விட்டு பாலைவனத்தைக் கடந்து இங்கே வந்தாய் என்று கேட்கப் பட்டதற்கு, நீண்டதாய் பதிலளித்தான், வேட்டையாடச் சென்றதாகவும், அதிகமாகக் குடித்து விட்டதாகவும், அதனால் வழி தவறியதாகவும் சொன்னான். மடத்தில் சேர்ந்து கொண்டு உயிரைக் காப்பாற்றிக் கொள் என்ற ஆலோசனைக்கு, “நான் உங்களுக்குச் சரியான சகா அல்ல!” ,என்று புன்னகையுடன் கூறினான்.
உண்டும் பருகியும் முடித்தபின் தனக்குப் பணிவிடை செய்த துறவிகளைப் பார்த்து திருப்தியில்லாமல் தலை அசைத்தான், “துறவிகளே நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். நீங்கள் சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் தவிர எதற்கும் ஆகாதவர்கள். இது தான் ஓர் உயிரைக் காப்பாற்றச் சிறந்த வழியா? சிந்தித்துப் பாருங்கள், இங்கே நிம்மதியாக உட்கார்ந்து கொண்டு, உண்டு, குடித்து பேரின்பத்தைப் பற்றிக் கனவு கண்டுகொண்டு இருக்கிறீர்கள். மற்றவர்கள் எல்லாம் துன்பத்தில் உழன்று கொண்டு நரகத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். நகரத்தில் என்ன நடக்கிறதென்று போய்ப் பாருங்கள். சிலர் பட்டினியால் சாகிறார்கள். சிலர் தங்களது தங்கத்தையும் செல்வத்தையும் என்ன செய்வதென்று தெரியாமல் வாழ்கிறார்கள், மிகையான செல்வத்தால் தேனில் விழுந்த ஈயைப் போலக் கிடக்கிறார்கள். அவர்களை எல்லாம் நல்வழிப் படுத்துவது யாருடைய வேலை? அது என்னால் ஆகாது, விடிந்ததிலிருந்து பொழுது விழுவது வரை குடித்துக் கொண்டே இருப்பேன். அமைதியான மனம், கருணை கொண்ட இதயம், கடவுள் மேல் நம்பிக்கை.. இவை எல்லாம் உங்களுக்குக் கொடுக்கப் பட்டு இருக்கிறது ஆனால் நீங்கள் எல்லாம் எதுவும் செய்யாமல் இந்த நான்கு சுவருக்குள் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்.”
நகரத்து மனிதனின் வார்த்தைகள் கடுமையாக இருந்தாலும் பெரிய தரமாக இல்லாவிட்டாலும், தலைமைப் பாதிரியாரின் மேல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தலைமைப் பாதிரியார் மற்ற துறவியருடன் பார்வைகளைப் பரிமாறிக் கொண்டார், முகம் வெளுத்துப் போனார், பிறகு சொன்னார்,
“எனது சகோதரர்களே, அவர் உண்மையைச் சொன்னார், உங்களுக்கே தெரியும். உண்மைதான், ஏழைகள் வறுமையில் உழன்று கொண்டிருக்கிறார்கள், புரிந்து கொள்ள முடியாததால் தவறுகளை இழைக்கிறார்கள், இவை எல்லாம் நமக்குச் சம்பந்தமே இல்லை என்பதுபோல் நாம் தலையிடாமல் இருக்கிறோம். ஏன் நான் நகரத்துக்குச் செல்லக் கூடாது? அவர்கள் மறந்து விட்ட ஏசுவை அவர்களுக்கு நினைவூட்டப் போகிறேன்.”
நகரத்து மனிதனின் வார்த்தைகள் அவரைக் கடுமையாக பாதித்தது. அடுத்த நாள் மடத்தில் பணிபுரியும் அனைவரையும் அழைத்தார், அனைவரிடமும் விடை பெற்று நகரத்தை நோக்கிக் கிளம்பினார். துறவிகள் தனித்து விடப்பட்டார்கள், இசை இல்லை, பாடல்கள் இல்லை, அவரது சொற்பொழிவுகள் இல்லை. ஒரு மாதம் இவ்வாறே கழிந்தது, ஆனாலும் தலைமைப் பாதிரியார் திரும்பவே இல்லை. மூன்று மாதம் கழிந்த்தது பொறுக்க முடியாமல் துறவிகள் நகரத்திற்குச் சென்று தலைமைப் பாதிரியாரிடம் கேள்விமேல் கேள்வி கேட்டுத் துளைத்தெடுத்தனர், அவர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடையாமல், தலைமைப் பாதிரியார் கசப்புடன் அழுதார், ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவர் மெலிந்தும் மூப்படைந்தும் இருந்ததை துறவிகள் கவனித்தார்கள். அவர் முகம் எதையோ இழந்ததைப் போலவும் மீளாத்துயரில் இருப்பதைப் போலவும் தெரிந்தது, அவர் அழுதது அவமானத்தால் பதிக்கப் பட்டவனைப் போல இருந்தது.
துறவிகளும் அழுதார்கள், அனுதாபத்துடன் ஏன் அழுகிறீர்கள் என்றும் கேட்டனர். ஏன் உங்களது முகம் இருளடைந்து இருக்கிறது என்றும் கேட்டார்கள், ஆனால் அவரோ ஒரு வார்த்தை கூடப் பேசாமல் தன் அறைக்குள் புகுந்து பூட்டிக் கொண்டார். ஏழு நாட்களுக்கு அவர் தன் அறையிலேயே இருந்தார். எதையும் சாப்பிடவோ குடிக்கவோ இல்லை, அழுது கொண்டிருந்தார், ஆர்கனில் இசைக்கவும் இல்லை. கதவருகில் நின்று , துயரத்தைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டிய துறவிகளுக்கு, இடையறா அமைதியில் பதிலளித்தார்.
இறுதியாக அவர் வெளியே வந்தார். அனைத்துத் துறவிகளையும் அழைத்தார், கண்ணீர் வடிந்திருந்த முகத்துடன் சோகமும் வெறுப்பும் சூழ, மூன்று மாதங்களாக என்ன நடந்தது, என்று சொல்ல ஆரம்பித்தார். மடத்திலிருந்து நகரத்துக்கு பயணித்ததைச் சொல்லும் போது, அவரது குரல் மென்மையாக இருந்தது, அவரது கண்கள் புன்னகை புரிந்தன. சாலையில் பறவைகள் தன்னிடம் பாடின தாகவும் , ஓடைகளில் நீர் தன்னிடம் பேசினதாகவும், இனிய மனது ஆர்ப்பரித்தது எனவும் , முன்னேறும் போது ஒரு போர் வீரனைப் போல உணர்ந்ததாகவும் நிச்சயிக்கப் பட்ட வெற்றிக்காகப் போர்க் களம் செல்வதாக உணர்ந்ததாகவும், கனவுகளுடன் நடந்த தாகவும், பண் இயற்றியதாகவும் பயணம் முடிவுற்றதே தெரியாமல் வந்து சேர்ந்ததாகவும் அவர்களிடம் தலைமைப் பாதிரியார் கூறினார்.
அவருடைய குரல் நடுங்கியது, கண்கள் மின்னின, நகரத்தைப் பற்றியும் அதன் மக்களைப் பற்றியும் பேசும் போது கடும் கோபத்தில் இருந்தார். அவருடைய வாழ்க்கையில் பார்த்திராத, நினைக்கக் கூட முடியாத பலவற்றையும் நகரத்திலே கண்டார். வாழ்வில் முதல் முறையாக, தள்ளாத வயதில், அதையெல்லாம் கண்ணுற்றார், சாத்தான் எவ்வளவு வலிமை படைத்தது என்று அறிந்தார். மகிழ்ச்சி கொள்ள முடியாத ஒரு சந்தர்ப்பத்தால் கொடியவர்களின் கூடாரத்தில் நுழைய வேண்டியிருந்தது. ஏறக்குறைய ஐம்பது பேர் ஏராளமான பணத்துடன் வரைமுறை இல்லாமல் உண்டுகொண்டும் குடித்துக் கொண்டும் இருந்தனர். போதை தலைக்கேறியதில் கேவலமான பாட்டுக்களை கூச்சமே இல்லாமல் பாடிக்கொண்டிருந்தனர், நல்ல மனிதர்கள் பேசுவதற்கு அச்சப் படும் வார்த்தைகளில் அவை இருந்தது. ஆனால் அவர்களோ சுதந்திரமாக கட்டுப்பாடில்லாமல் தன்னம்பிக்கையோடு மகிழ்ச்சியாக பாடினர். அவர்கள் கடவுளுக்கோ சாத்தானுக்கோ மரணத்துக்கோ அஞ்சவில்லை, அவர்கள் என்ன நினைத்தார்களோ அதைப் பேசினார் சிற்றின்பங்களைத் துய்த்தனர். அவர்கள் குடித்த மது தெளிவாக பொன்னிறமாக ஒளிர்ந்தது, அது அனேகமாக சுவையாகவும் மணமாகவும் இருக்க வேண்டும். குடித்த ஒவ்வொருவரும் உற்சாகத்தில் மிதந்தனர், மீண்டும் மீண்டும் குடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர். குடிக்கக் குடிக்க மது அவர்களை மேலும் உற்சாகப் படுத்தியது. சாத்தான் தனது முகத்தை மதுவின் சுவைக்குள் ஒளித்து வைத்திருந்தது.
தலைமைப் பாதிரியார், உரிமம் பெற்றவரைப் போல தான் கண்டதை அழுது கொண்டே விரித்துரைக்கலானார். ஒரு மேசை மேல் கும்மாளமிட்டுக் கொண்டிருந்த குடிகாரர்களின் நடுவே, ஒரு பெண், அரை நிர்வாணமாக நின்று கொண்டிருந்தாள். இயற்கையில் அவளது அழகை விட வேறெதையும் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியாததாக இருந்தது. அந்தப் பாம்பு, இளமையாகவும், நீண்ட முடியுடனும், கறுப்புத் தோலுடனும், கருநிறக் கண்களுடனும், முழுமைபெற்ற உதடுகளுடனும், அச்சம், மடம், நாணம் போன்ற எதுவுமில்லாமல், வெண்ணிறப் பற்கள் பளிச்சிட சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள், “நான் எவ்வளவு அழகு, எவ்வளவு நாணமில்லாதவள், பார்” , என்று சொல்வதைப் போல. பட்டிலே செய்த மாராப்பு, அழகான மடிப்புகளில் அவளது தோள்களில் இருந்து சரிந்து கொண்டிருந்தது. ஆனால் அவளது அழகை அந்த மாராப்பினால் மறைக்க முடியவில்லை, அவை ஆர்வத்துடன் மடிப்புகளைத் தாண்டி எட்டிப் பார்த்தன, வசந்தத்தில் இளம் புல் நிலத்தை விட்டு வெளியே எட்டிப் பார்ப்பதைப் போல. அந்த வெட்கம் கெட்டவள் மதுவைக் குடித்தாள், பாட்டுப் பாடினாள், அவளை யார் விரும்பினாலும் கூடப் போய்விடுவாள் போல் இருந்தது.
பிறகு அந்த வயதானவர், கடும் கோபத்தில் கைகளை ஆட்டியபடி, குதிரைப் பந்தயம், காளைச் சண்டை, நாடகக் கொட்டகைகள், ஓவியர்கள் சிற்பிகள் ஆகியோரது தொழிற்கூடங்கள், அங்கே எப்படி அழகான நிர்வாணமான பெண்களை படமாக வரைகிறார்கள் களிமண் பொம்மைகளாக வடிக்கிறார்கள் என்றும் விவரித்தார். அவர் உந்துதலுடன் பேசினார், அவர் ஏதோ கண்ணுக்குத் தெரியாத இசைக்கருவியை வாசிப்பது போல் இருந்தது, துறவிகளோ அசையாமல் சிலைபோல பேராசையுடன் அவரது பேச்சை விழுங்கிக் கொண்டு மூச்சு விடக்கூட மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.
சாத்தானின் கவர்ச்சியையும் தீயவழியின் அழகையும் பெண் மோகத்தையும் விவரித்த பின்னர் அந்தப் பெரிய மனிதர், சாத்தானைச் சபித்து விட்டு தனது அறைக்குள் நுழைந்து பூட்டிக் கொண்டார்.
காலையில் அவர் தனது அறையை விட்டு வெளியே வந்து மடத்தைப் பார்த்த போது ஒரு துறவியைக் கூடக் காணவில்லை; அனைவரும் நகரத்துக்கு ஓடி விட்டிருந்தனர்.
– பெப்ரவரி 5, 2011