யாருக்கு விரோதி?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 11, 2024
பார்வையிட்டோர்: 158 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆண்டுதோறும் கோடை விடுமுறைக்கு முன்னால் ‘பரீட்சை என்னும் பாதக’த்தை நடத்தி முடித்துவிடும் அதிகாரிகளின் புத்திசாலித்தனத்தை எண்ணி வியந்து கொண்டே, நக்கீரன் தன்னுடைய சொந்தக் கிராமமான தாழம்பேடுக்குப் புறப்பட் டான். ஏறக்குறைய இரண்டு மாத காலம் அங்கே எந்த வித மான சலனமுமின்றி அமைதியுடன் காலத்தைக் கழித்துவிட்டு வரலாம் என்று நினைத்தபோது அவனுக்கு எவ்வளவோ ஆறுதலாயிருந்தது. முன்னாலாவது அந்தக் கிராமத்தில் சிலர் கள்ளையும் சாராயத்தையும் குடித்துவிட்டு வந்து அங்கங்கே சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள். இப்போது அதுவும் இருக்காது; ‘காந்தி ராசா’ புண்ணியத்தால்தான் மதுவிலக்குச் சட்டம் அமுலுக்கு வந்து விட்டதே! 

இவ்வாறு எண்ணி மகிழ்ந்தவண்ணம் அவன் தன்னுடைய கிராமத்தை அடைந்தபோது இருள் சூழும் நேரம்: கிராமக் குடிசைகளெல்லாம் அநேகமாகப் புகைய ஆரம்பித்து விட்டன: குடிசைகள் புகைய ஆரம்பித்துவிட்டன என்றால், அவற்றிலுள்ள அடுப்புகள் எரிய ஆரம்பித்து விட்டன என்று அர்த்தம்- அடுப்புகள் எரிந்தால்தானே அந்தக் குடிசைகளில் அடைபட்டுக் கிடக்கும் அப்பாவி ஜீவன்களின் அடி வயிறாவது கொஞ்சம் நிரம்பும்? 

புகைந்து கொண்டிருந்த குடிசைகளுக்கு இடையே புகை யாமலிருந்த சில குடிசைகளும் இருக்கத்தான் இருந்தன. அவற் றைக் கண்டதும் நக்கீரனுக்கு என்னவோ போல் இருந்தது. கள்ளரக்கன் ஒழிந்த பிறகுமா இந்தத் தரித்திரம் ?’ என்று எண்ணி அவன் ஒரு கணம் ஏங்கினான். மறுகணம், ‘மதுவிலக்கால் மட்டும் மக்களின் வறுமையைப் போக்கிவிட முடியாதல்லவா?” என்று எண்ணியவனாய் மேலே நடந்தான். 

வழியில் ஒரு தேநீர்க் கடை குறுக்கிட்டது. அந்தத் தேநீர்க் கடையைக் கண்டதும் அதற்கு முன்னால் அங்கே இருந்த கள்ளுக்கடை அவன் மனக்கண் முன்னால் காட்சியளித்தது. ஆடலும் பாடலும் அடிதடிச் சண்டையுமாயிருக்கும் அந்த இடத்திலே, இப்போது அமைதி குடி கொண்டிருப்பதைக் கண் டதும் அவனுடைய அகமும் முகமும் ஒருங்கே மலர்ந்தன. தன்னை மறந்த நிலையில் அவன் தேநீர்க் கடைக்கு முன்னால் சிறிது நேரம் அப்படியே நின்று விட்டான். 

கள்ளுக்கடை இருந்த நாட்களில் அங்கே கூடும் மனிதர்களை நக்கீரன் எத்தனையோ முறை கவனித்திருக்கிறான். அப்பொழு தெல்லாம் அவர்கள் அனைவரும் மனிதர்களாகவே தோன்றுவ தில்லை அவனுக்கு – அதே இடத்தில் தேநீர்க் கடை இருக்கும் இந்த நாளிலோ, அங்கே கூடியிருந்தவர்களெல்லாம் அவனுக்கு மனிதர்களாகவே தோன்றினார்கள். இந்த அதிசயத்துக்கு மத்தி யில் இன்னும் ஓர் அதிசயத்தையும் அவன் காண நேர்ந்தது. அதாவது, தேநீரையும் அந்த ‘மாஜி குடியர்கள்’ கள்ளைப் போலவே பாவித்துக் கண்ணை மூடியவண்ணம் குடித்துக்கொண் டிருந்தனர்!-அந்தக் காட்சி பார்ப்பதற்கு வேடிக்கையாயிருந்த தோடு மட்டுமல்ல, வேதனையாகவும் இருந்தது. 

அவர்களில் ஒருவன் இன்னொருவனை நோக்கி, “என்ன, இசக்கிமுத்து அண்ணே! நம்ம பேச்சிமுத்துவைக் காணவே காணோமே?’ என்று விசாரித்தான். “அவனுக்கென்னப்பா, மவராசன்!” என்றான் இசக்கிமுத்து. 

“நல்லாச் சொன்னே, போ! மவராசனாவது மண்ணாங்கட்டி யாவது! காலையிலேயிருந்து சாயந்திரம் வரை ரெண்டு ரூவாக் காசுக்கு அவன் குப்புக் கொல்லன் பட்டறையிலே என்னோடு சேர்ந்து இல்லே சம்மட்டி அடிச்சிக்கிட்டு இருந்தான்?” 

இந்தத் தகவலைக் கேட்டதும், ”நிசமாவா, நல்லமுத்து?” என்று வியப்புடன் கேட்டான் இசக்கிமுத்து. 

“ஆமாங்கிறேன்!” என்றான் நல்முைத்து. 

“அப்படின்னா நான் நெனைச்சது சரிதான்; அவன் ‘துத்தா’ போட்டுகிட்டு வரத்தான் போயிருப்பான்!” என்றான் இசக்கி முத்து. 

இந்தத் ‘துத்தா’ என்ற வார்த்தையைக் கேட்டதும் நக்கீரன் திடுக்கிட்டான். அந்தப் பக்கத்துக் குடியர்கள் ‘துத்தா’ என்று சொன்னால் ‘மது’ என்று அர்த்தம். மதுவிலக்கைப் பற்றி என்னவெல்லாமோ எண்ணிக் கொண்டு வந்த அவனுக்கு இந்த வார்த்தையைக் கேட்டதும் எப்படி இருக்கும்?-முகத்தில் அசடு வழிய இசக்கிமுத்தையும் நல்லமுத்தையும் இமை கொட்டாமல் பார்த்தவண்ணம், மேலே என்ன பேசுகிறார்கள் என்று கவனித்தான். 

“என்ன சொன்னே, துத்தாவா? அது எங்கேப்பா இப்போ கெடைக்குது ?” என்று கேட்டான் நல்லமுத்து. 

”உனக்குத் தெரியாதா?-அதானே பார்த்தேன்; தெரிஞ் சிருந்தாத்தான் நீயும் அவனோடு போயிருப்பியே?” என்றான் இசக்கிமுத்து. 

“அவனைப் போல என்னையும் மானங்கெட்ட பயலுன்னா நெனைச்சுகிட்டே? நியாயமாப் பார்க்கப்போனா அந்தக் காந்தி ராசா பேச்சைக் கேட்டு நாமே கள் குடிப்பதை நிறுத்தியிருக் கணும். அதுதான் இல்லேன்னா, காலையும் கையையும் பிடிச்சுக் கிட்டுக் குழந்தைக்கு மருந்து ஊத்தறாங்களே, அந்த மாதிரி நம்ம ராசாங்கம் கள்ளுக்கடையை எடுத்த அப்புறமாவது கள் குடிப்பதை நிறுத்தியிருக்கணும். ரெண்டுமில்லாம திருட்டுத் தனமா குடிக்கிறதுன்னா அது அக்குறும்பு இல்லே?” 

“அக்குறும்புதான்: ஆனா அதைக் கேட்க யாரு இருக்காங்க?” 

”ஏன் இல்லே ? போலீசு ஜவானுங்க இல்லையா? அவங்க கிட்ட மாட்டிக்கிட்டா இல்லே சங்கதி தெரியும்?” 

”ஊம், விட்டுத் தள்ளு! அவங்க இல்லே இப்போ அந்த அக்குறும்புக்காரனுங்ககிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறானுங்க!’ 

“என்ன!”

“ஆமா அண்ணேங்கிறேன்! நேத்து மேலத் தெருவிலே ரெண்டு பயலுங்க குடிச்சுப்பிட்டு வந்து சண்டை போட்டுகிட்டு இருந்தானுங்க. அந்தப் பக்கமாய் போன ரெண்டு ஜவானுங்க அவனுங்களைப் பிடிச்சிக்கிட்டுப் போக ஓட்டமா ஓடி வந்தாங்க! – அவ்வளவு தான். அண்ணே! அந்தத் தெருவாரெல்லாம் ஒண் ணாக் கூடிக்கிட்டு அவங்களை ‘அடி, அடி’ன்னு அடிச்சுப் போட்டுட்டாங்க!” 

“அப்பாலே?” 

“இன்ச்சுபெட்டரு, அவங்க, இவங்க எல்லாம் வந்து, அந்தத் தெருவிலே இருந்த முரட்டுப் பயல்களையெல்லாம் பிடிச்சுகிட்டுப் போறாங்க!” 

“என்ன புத்தி கெட்ட பயலுங்க பார், அண்ணே! இவ னுங்க பெண்டாட்டி பிள்ளை பிழைக்கத்தானே கள்ளு குடிக்க வேணாம்னு சொல்றாங்க? அதைக் கேட்டு ஒழுங்கா இல்லாம திருட்டுத்தனமா சாராயம் காய்ச்சறதும், கள்ளு குடிக்கிறதும் என்ன வேலைங்கிறேன்? இப்படிப்பட்டவனுங்களை நாமே பிடிச்சுப் போலீசு ஜவானுங்ககிட்டே ஒப்படைச்சாக்கூடக் குற்றமில்லை தான்!- நீ என்ன சொல்றே, அண்ணே?” 

“நல்ல ஆளப்பா, நீ ! நம்ம பெண்டாட்டிமாருங்க கழுத் திலே தாலி இருக்கக்கூடாதுங்கிறது உன் எண்ணமா?” 

“அட, நீ கூட இப்படிப் பயந்து சாவுறியே! ஆறிலுஞ் சாவு, நூறிலுஞ் சாவு!–அப்படியா நம்ம தலையை அவனுங்க ‘நறுக்’குன்னு கிள்ளி எறிஞ்சிடுவானுங்க?” 

“ஒண்ணுந் தெரியாம நீ பாட்டுக்குச் சும்மாப் பேசாதே, யாரு காதிலாச்சும் விழுந்து வைக்கப் போவுது!” 

“எல்லாம் தெரிஞ்சித்தான் பேசறேன் ! எனக்கு இன்னும் என்ன தெரியணுங்கிறே நீ?” 

“நிசமாச் சொல்றேன், அண்ணே! இந்தக் கிராமத்திலே திருட்டுச் சாராயம் காய்ச்சறதுக்கு யார் பணம் கொடுக்கிறாங்க எங்கிற விசயம் உனக்குத் தெரிஞ்சா நீ இப்படியெல்லாம் பேசவே மாட்டே!- ஆமாம்!” என்று முன்னும் பின்னும் பீதி யுடன் பார்த்துக் கொண்டே சொன்னான் இசக்கிமுத்து. 

“அடடே! அந்த ஆளை உனக்கு மட்டுந்தான் தெரியும்னு நீ நெனைச்சுக்கிட்டிருக்கியா? போ அண்ணே, போ! அந்தக் குடி கெடுக்கும் மனுசனை எனக்கும் தான் தெரியும்!” என்றான் நல்லமுத்து அலட்சியமாக. 

அதற்கு மேல் அவனுடைய வாயைக் கிண்டிவிட விரும்பாத இசக்கிமுத்து, ஐயையோ! நம்ம தலைக்கு ஆபத்து இல்லே வந்துடும் போல இருக்குது? அந்த மனுசன் பேரை நீ வெளியே கிளியே சொல்லிப்பிடாதேப்பா!” என்று கிசுகிசுத்துக் கொண்டே அவனுடைய வாயை இறுகப் பொத்தினான். 

நக்கீரன் உள்ளம் உடைந்தவனாய்த் தன்னுடைய வீட்டை நோக்கி மெல்ல நடந்தான். அப்போது அவனையும் அறியாமல் அவனுடைய உள்ளத்திலிருந்து ஏனோ ஒரு கேள்வி எழுந்து, எங்கெல்லாமோ சுற்றியலைந்து, பதிலைத் தேடித்தேடித் திரிந்தது. அந்தக் கேள்வி வேறெதுமில்லை; இதுதான்: 

“சட்டத்தை மீறிச் சாராயம் காய்ச்சும் அந்தக் ‘குடி. கெடுக்கும் மனுசன்’ யாராயிருக்கும்?” 


இசக்கிமுத்துவும் நல்லமுத்துவும் தேநீர் குடித்து முடிந்ததும் பழைய கள் குடித்த ஞாபகத்தில் மீசையை ஒதுக்கி விட்டுக் கொண்டே தங்களுடைய குடிசைகளை நோக்கி நடந்தனர். 

அந்த சமயத்தில் மருக்கொழுந்து!” என்னும் ‘வையம் பெறும் வழங்கோசை’ எங்கிருந்தோ வந்து, அவர்களுடைய காதில் ‘கணீ’ரென்று விழுந்தது. அந்த ஓசையைத் தொடர்ந்து மருக்கொழுந்தின் வாசமும் வந்தது. அடுத்த விநாடி அவர் களுக்கு எதிரே மருக்கொழுந்து கூடைக்காரி ஒருத்தி, ‘இட்ட அடி நோக ஆனால் ‘எடுத்த அடி கொப்புளிக்’காமல் ‘வட்டில் சுமந்து மருங்கசைய’ வந்து கொண்டிருந்தாள். அவளை வழி மறித்து நிறுத்தி, ‘என்னா புள்ளே! இந்த மருக்கொழுந்து வாசம் உன்மேலேயிருந்து வீசுதா ? இல்லே, மருக்கொழுந்திலே யிருந்துதான் வீசுதா?” என்று கேட்டான் இசக்கிமுத்து. 

“எப்படி வேணுமானாலும் வச்சுக்கேன்!” என்று இடை யிலிருந்த கூடையை எடுத்து அவனுக்கு எதிரே நீட்டினாள் அவள். 

உடனே இசக்கிமுத்து பத்துபைசாவுக்கு மருக்கொழுந்து வாங்கித் தன்னுடைய மடியில் வைத்துக்கொண்டு, நல்லமுத் தைப் பார்த்துக் கண் சிமிட்டினான். 

“என்னா அண்ணே, உனக்கும் சோக்குப் பொறந்துடிச்சிப் போல இருக்குது!” என்றான் நல்லமுத்து. 

“நல்லாயிருக்குது அண்ணே, நீ சொல்றது! நான் மட்டும் என்ன; உனக்கு மனுசனாகத் தோணலையா?” 

“என்னியிலேருந்து நீ மனுசனானே, கள்ளுக்கடையை எடுத்த நாளிலேயிருந்து தானே?” 

“நீ மட்டும் அதுக்கு முன்னாலேயே மனுசனாயிருந்தியா? போ அண்ணே, போ ! வெளியே சொன்னா வெக்கக் கேடு; அழுதாத் துக்கக்கேடு. நம்ம அழகை நாமே எடுத்துச் சொல்லிக் கணுமாக்கும் ?” 

“சரி அண்ணே, நானும் மருக்கொழுந்து வாங்கிக்கிறேன். எனக்கும் சோக்குப் பொறக்கட்டும் ! ” என்று சொல்லிக் கொண்டே நல்லமுத்தும் பத்து பைசாவுக்கு மருக்கொழுந்து வாங்கித் தன் மடியில் வைத்துக்கொண்டான். 

இருவரும் மேலே நடந்தனர். 

சிறிது தூரம் சென்றதும் எங்கிருந்தோ சாராய நெடி குப் பென்று வந்து அவர்களுடைய மூக்கைத் துளைத்தது. திடுக்கிட்டுத் திருதிருவென்று விழித்துக்கொண்டே இருவரும் சுற்றுமுற்றும் பார்த்தனர்- என்ன கண்ணறாவிக் காட்சி இது ! கண்ணுக்கெட்டிய தூரத்தில் பேச்சிமுத்து பேச்சுமூச்சற்றுக் கீழே விழுந்து கிடந்தான்! 

இசக்கிமுத்து அவனை நெருங்கி இப்படியும் அப்படியுமாக இரண்டு உருட்டு உருட்டிப் பார்த்தான்; ஆசாமி அசைந்து கொடுப்பதாயில்லை. நல்லமுத்து ஒரு பெரும் பிரயத்தனம் செய்து அவனைத் தூக்கி உட்கார வைத்தான். அவ்வளவுதான் 

கபகப வென்று வாயிலெடுத்து விட்டான் அவன்! 

இதனால் அவனுடைய மயக்கம் கொஞ்சம் தெளிந்தது. கண்களை அகல விரித்துத் தனக்கு எதிரே இருந்தவர்களைப் பார்த்தான்; இருவர் நால்வராகத் தோன்றினர்! 

அடுத்த கணம், ”ஐயையோ, மாட்டிக்கிட்டேன்! நான் இந்தப் போலீசுக்காரப் பயலுங்ககிட்ட மாட்டிக்கிட்டேன்!” என்று அலறிக்கொண்டே அவன் எழுந்து ஓட முயன்றான்; முடியவில்லை! 

“என்ன தம்பி, இந்த லோகத்திலேதான் இருக்கியா? இல்லே, வேறே எந்த லோகத்திலாச்சும் இருக்கியா?” என்று அவனுடைய தலையைப் பிடித்து ஓர் உலுக்கு உலுக்கிக் கேட் டான் நல்லமுத்து. 

அவனுடைய கேள்விக்குப் பேச்சிமுத்து பதில் சொல்ல வில்லை. அதற்குப் பதிலாக, “கபர்தார்! கபர்தார்!” என்று அவன் சம்பந்தமில்லாமல் உளறினான். 

‘கபர்தார்!’ என்ற வார்த்தையைக் கேட்டதும் இசக்கி முத்தும் நல்லமுத்தும் ஒருவரையொருவர் ஜாடையாகப் பார்த் துச் சிரித்துக் கொண்டனர். 

“என்ன அண்ணே, விசயம் புரிஞ்சுதா?” என்று கேட்டான் இசக்கிமுத்து. 

“ரொம்ப நல்லாப் புரிஞ்சுது !” என்று தலையைப் பலமாக ஆட்டினான் நல்லமுத்து. 

அதற்குள் ஓரளவு சுய உணர்வு பெற்ற பேச்சிமுத்து தட்டுத்தடுமாறி எழுந்து நின்று இசக்கிமுத்தையும் நல்லமுத்தை யும் மாறி மாறிப் பார்த்தான். 

“என்ன, தம்பி! நல்லாயிருக்குதா, ஞாயம்?’ என் அவனுடைய தோளைப்பிடித்துக் குலுக்கியவண்ணம் கேட்டான் நல்லமுத்து? 

பேச்சிமுத்து தலையைச் சொறிந்துகொண்டே, “குரலைப் பார்த்தா நல்லமுத்து அண்ணனாட்டம் இருக்குது; ஆனா பார்க்கிற பார்வைப் பார்த்தா போலீசு ஜவானாட்டம் இருக்குதே?’ என்று முணுமுணுத்தான். 

“பயப்படாதே, நல்லமுத்து அண்ணன்தான்!” என்றான் நல்லமுத்து. 

“நல்லமுத்து அண்ணனா? நல்ல சமயத்திலே வந்து சேர்ந் தேப்பா! இதோ, உன் பக்கத்திலே நிற்கிறாரே, இவரு யாரு?” 

“இசக்கிமுத்து அண்ணன்!” 

“அப்படியா சங்கதி? நீங்க போலீசு ஜவானுங்களாக்கும்னு நெனைச்சி நான் பயந்தே போயிட்டேன்!” என்றான் பேச்சி முத்து. 

“அப்படிப் பயந்துகிட்டு இந்த ஜோலிக்கு ஏன் போகணும் தம்பி?” 

“என்னமோ போனேன்! மனசு கேக்குதா?” 

”ஆமாம், ஆறுமாசம் உள்ளே தள்ளி வச்சாத்தானே மனசு கேக்கும் ! 

“அப்படின்னா நீ என்னைப் போலீசு ஜவானுங்ககிட்ட காட்டிக் கொடுத்துடப் போறியா?”

“பின்னே, அப்போத்தானே உனக்குப் புத்தி வரும்?” 

“அண்ணே, அண்ணே! உன் காலிலே விழுந்து கேட்டுக் கிறேன், அண்ணே ! நீ என்னை வேணும்னா காட்டிக்கொடு; அந்தக் கபர்தார் ஐயா’ வை மட்டும் காட்டிக் கொடுத்திடாதே!” 

“கொடுத்தா என்ன தம்பி?” 

”ஐயையோ,என் தலை போயிடும்! அவரு கொடுக்கும்போதே சொல்லித்தானே கொடுக்கிறாரு- அடே, உன்காசு எனக்குப் பெரிசில்லே! என்னமோ கஷ்டப்பட்டுக் களைச்சுப்போறியேன்னு கள்ளத்தனமா இந்தச் சாராயத்தைக் காய்ச்சிக் கொடுக்கிறேன். குடிச்சிட்டுப்போய்ப் பேசாம குடிசையிலே படுத்துக்கிடணும். வழியிலே தப்புத் தண்டாவுக்குப்போய்ப் போலீஸ்காரப் பயலுங்க கிட்ட மாட்டிக்கிட்டியோ, என் பேரை வெளியிலே சொல்லக் கூடாது. அடியோ, உதையோ, குத்தோ, ஜெயிலோ எதுவா யிருந்தாலும் நீதான் அனுபவிச்சித் தீரணும். அதிலே என்னை யும் மாட்டிவிட்டியோ, உன் தலை என் புழக்கடையிலே கிடந்து உருளும் – ஆமாம், கபர்தார்’! என்று ஒருதடவை ரெண்டு தடவையில்லே, ஓராயிரந்தடவை சொல்லித்தானே கொடுக்கிறாரு?” 

“புழக்கடையிலே தலைகிடந்து உருளும்னா அவரு என்ன இந்த ஊருக்கு ராசாவா?” என்று கேட்டான் நல்லமுத்து. 

“சங்கதி தெரியாதுபோலே இருக்குது! போனவாரம் அவரு வீட்டுப் புழக்கடையிலே புதுசா ஒரு கிணறு தோண்டினாங்களாம். தோண்டத் தோண்ட ஒரே மனுசனுங்க மண்டையும் எலும்புமா வந்ததாம்! அத்தனைபேரை அவரு அக்கம் பக்கம் தெரியாமே வேலை தீர்த்துப்பிட்டு இருக்காரு, தெரியுமா சங்கதி?” என்றான் பேச்சிமுத்து. 

இதைக் கேட்டதும் நல்லமுத்துக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்துவிட்டது; அவன் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம் பித்துவிட்டான். 

இசக்கிமுத்துவுக்கு அவன் சிரித்தது பிடிக்கவில்லை. “உனக்கு எல்லாம் வேடிக்கையாகத்தான் இருக்கும்!’ என்றான் அவன். 

“நீ கூடவா அண்ணே, அதைநம்பறே? விசயம் என்னான்னா, அவரு வீடுஇருந்த இடத்திலே முன்னே இடுகாடு இருந்ததாம். அதுதான் அந்த இடத்திலே எங்கே தோண்டினாலும் மனுசனுங்க மண்டையும் எலும்புமா கெடைக்குதாம்!” என்றான் நல்ல முத்து. 

“இருந்தாலும் இருக்கும்; நீ வா, போவோம்!” என்று சொல்லிக்கொண்டே அவர்கள் இருவரும் நடையைக்கட்ட, பேச்சிமுத்து அவர்களுக்குப் பின்னால் ‘பின்னல் நடை’ நடந்து சென்றான். 


மறுநாள் மாலை வழக்கம்போல் அங்கொன்றும் இங்கொன்று மாக அந்தக் கிராமத்துக் குடிசைகள் அப்பொழுதுதான் புகைய ஆரம்பித்திருந்தன. அந்தக் குடிசைகளுக்கு முன்னால், அதுவரை பசியை மறப்பதற்காகப் புழுதியில் புரண்டுகொண்டிருந்த குழந்தைகள், கூரைக்குமேலே ‘குபு, குபு’ வென்று வந்த புகை யைக் கண்டதும் துள்ளி எழுந்து ‘குதி, குதி’ யென்று குதித் தன ஆம், அன்றிரவு நிச்சயம் சோறு கிடைக்கும் என்ற நம்பிக்கை அந்தக் குழந்தைகளை அப்படி ஆட்டி வைத்தது? 

மாஜி குடியர்’ களில் சிலர் தேநீர்க்கடையை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்; அவர்களுடைய விழி ‘ராஜவிழி’யாயிருந்தது. இன்னும் சிலர் ‘திருட்டுச் சாராயம்’ குடிப்பதற்கா கத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றனர்: அவர் களுடைய விழி ‘திருட்டுவிழி ‘யாயிருந்தது. 

தலையை வாரிமுடிந்து கொள்ளக்கூட நேரமில்லாத-நேர மிருந்தாலும் விருப்பமில்லாத கிராமத்துப் பெண்களில் பலர், நீர்க்குடத்துடன் கிணற்றடியில்நின்று, தங்களுடைய தரித்தி ரத்தை ஓரளவு மிகையாகவே உருவகப்படுத்தி உலகத்துக்குக் காட்டிக் கொண்டிருந்தனர். 

மாலை நேரத்துப் ‘புத்துணர்ச்சி அளிக்கும் பானங்க ளுக்குப் பிறகு திண்ணைக் கச்சேரிகளிலும் மரத்தடிக் கச்சேரிகளிலும் கூடி யிருந்த ‘பரசிரம ஜீவிக’ளின் கூச்சலோ பெருங் கூச்சலாயிருந் தது. அவர்களுடைய கூச்சல் பொழுதுவிடிந்ததும் குளக்கரை யில் மல்லாந்து படுத்துவிடும் மழைக்காலத்து மண்டூகங்களின் ஓசை நயத்தோடு கூடிய இரைச்சலை ஒத்திருந்தது. 

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, ஆறுமாதங்களுக்கு ஒரு முறை காசைக் கண்ணால் பார்க்கும் அந்தக் கிராமத்துச் ‘சுய சிரம, ஜீவிக ளோ, ‘களைப்பாற்றும் கஞ்சித்தண்ணீ ‘ருக்காக அடுப்படியில் காத்துக்கொண்டிருந்தனர். 

உலர்ந்த வெற்றிலைச் சருகைப்போட்டுக் குதப்புவதிலேயே இந்த உலகத்தையும் – ஏன், சோற்றையும்கூட மறந்துவிடும் கிராமத்துக் கிழவர்களும், கிழவிகளுமோ தங்களுடைய பேரப் பிள்ளைகளை அழைத்துக் கொஞ்சம் வெற்றிலைப் பாக்கு நறுக்கித் தருமாறு வேண்டிக்கொண்டிருந்தனர். 

மாடும் மனிதனும் ஒன்றாக ஓய்வுபெறும் அந்த வேளையிலே, தன்னுடைய ஆற்றங்கரைப் பங்களாவின் அழகிய வாந்தாவிலே இப்படியும் அப்படியுமாக ராஜ நடை போட்டுக்கொண்டிருந் தான் நக்கீரன். 

கிராமத்தின் ஒரு கோடியில் தனியாக இருந்த அந்தப் பங்களா வின் முன்னால் அவனுடைய கவனத்தைக் கவருவதற்கு எத்தனையோ காட்சிகள் இருந்தன. எனினும் முதல்நாள் எழுந்த கேள்வி அவனுடைய உள்ளத்தில் ஏனோ இன்னும் இடம் பெற் றிருந்தது. 

‘சட்டத்தை மீறிச் சாராயம் காய்ச்சும் அந்தக் குடி கெடுக்கும் மனுஷன்’ யாராயிருக்கும்?’ 

அவனுடைய சிந்தனை மேலும் மேலும் விரிந்து கொண்டே சென்றது. அவ்வாறு விரிந்த சிந்தனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கத்தானோ என்னவோ, ‘மாஜி குடியன்’ ஒருவன் அங்கே வந்து சேர்ந்தான். 

அவனைக் கண்டதும், “யார் அப்பா, நீ ?” என்று கேட்டான் நக்கீரன். 

“பேச்சி முத்துங்க!” என்றான் வந்தவன். 

‘பேச்சிமுத்து’ என்ற பெயரைக் கேட்டதும் முதல் நாள் தேநீர்க் கடையில் நடந்த உரையாடல் நக்கீரனின் நினைவுக்கு வந்தது. அவன் ஒரு கணம் திடுக்கிட்டான்: மறு கணம் இன்னொரு சந்தேகம் எழவே, அது சரி; உனக்கு இசக்கி முத்தைத் தெரி யுமா?” என்று கேட்டான். 

“தெரியுமுங்க?” 

“நல்லமுத்து? ” 

தூக்கிவாரிப் போட்டது பேச்சிமுத்துக்கு, *தெரியுமுங்க….” என்று சொல்ல ஆரம்பித்தவன், “தெரியாதுங்க!” என்று குழறினான். 

அந்தப் பயல்கள் ஒரு வேளை ‘கபர்தார் ஐயா’வைப் பற்றி இந்தப் பிள்ளையாண்டானிடம் சொல்லி விட்டார்களோ, என்னவோ என்ற சந்தேகம் வந்து விட்டது அவனுக்கு. 

அந்த அப்பாவியின் நிலையை ஒருவாறு உணர்ந்த நக்கீரன் பேச்சை மாற்ற எண்ணி, “சரி, இப்போ நீ எதற்காக இங்கே வந்திருக்கிறே?” என்று கேட்டான். 

அதற்குள் தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்ட பேச்சி முத்து, “என்ன சாமி, ஒன்றும் தெரியாத மாதிரிக் கேட்கிறீங் களே! இந்த நேரத்தில், இப்படிப் பதுங்கிப் பதுங்கிப் பார்த்து முழிச்சுக்கிட்டு வேறே எங்கே வருவேனுங்க?” என்றான். 

“எனக்கு உண்மையிலேயே ஒன்றும் தெரியாது. நான் இந்த ஊருக்குப் புதுசு; நீயே விஷயத்தைச் சொல்லு?” என்றான் அவன். 

பேச்சி முத்துக்கு மீண்டும் சந்தேகம் வந்துவிட்டது. “அப்படின்னா நீங்க யாருங்க?” என்று கேட்டான். 

இந்த சமயத்தில் உள்ளே யிருந்து வந்த, ஒரு நெடிதுயர்ந்த மனிதர், “என்னடா பேச்சிமுத்து, இவனை உனக்குத் தெரிய லையா? இவன் தான் என் மகன் நக்கீரன். பட்டணத்திலே படிச்சிகிட்டு இருந்தான்; இப்போ லீவிலே ஊருக்கு வந்திருக் கிறான்!” என்று அறிமுகப்படுத்தி வைத்தார். 

“அப்படியா சாமி, இவரு பட்டணத்திலே படிச்சிக்கிட்டு இருந்தவரா? அதான் இவருக்கு ஒண்ணுமே தெரியல்லே!” என்றான் பேச்சிமுத்து. 

“ஆமாம், உன்னை நான் புழக்கடைப் பக்கமாகத் தானே வரச் சொன்னேன்? நீ ஏன் இந்தப் பக்கமா வந்தே?” என்று கேட்டார் அந்த ஆஜானுபாகு. 

அந்தப் பக்கமாத்தான் வந்தேன், சாமி ! அங்கே இந்த நல்லமுத்துப் பய இல்லே. அவன் நின்னுக்கிட்டிருந்தான். அவனுக்கு நம்ம விசயம் தெரிவானேன்னு இப்படி வந்துட்டேன்!” என்றான் பேச்சிமுத்து? 

“தெரிஞ்சா என்னடா? அந்தப்பய உன்னை வெல்லத்திலே வச்சி முழுங்கிடுவானா? அந்த மாதிரிச் சோனிப் பயல்களுக் கெல்லாம் நீ ஒண்ணும் பயப்பட வேணாம். நாளையிலேயிருந்து நீ புழக்கடைப் பக்கமாவே வா ; உன்னைப் போல எத்தனையோ பேர் அந்தப் பக்கமா வரப்போ, நீ மட்டும் இந்தப் பக்கம் வருவானேன்? என்று ஊக்க மூட்டிய வண்ணம் அவனைப் புழக் கடைக்கு அழைத்துச் சென்றார் அவர். 

இப்போது தான் எப்போது பார்த்தாலும் அங்கே பூட்டி வைக்கப்பட்டிருந்த ஓர் அறை நக்கீரனின் ஞாபகத்துக்கு வந்தது. முதல் நாள் இரவு அதைப் பார்த்த போது, அதற்குள் என்ன இருக்கிறது?’ என்பதைத் தெரிந்து கொள்ள அவன் விரும்ப வில்லை. இன்று தன்னுடைய தகப்பனார்,பேச்சிமுத்தைப் புழக் கடைப் பக்கமாக அழைத்துச் செல்லவே, அந்த அறைக்குள் என்ன இருக்கிறது?’ என்பதைத் தெரிந்து கொள்ள அவன் விரும்பினான்; 

ஆனால், தன் மகன் தன்னுடன் வருவதைத் தகப்பனார் விரும்பவில்லை. அவர் அவனைத் தடுத்து நிறுத்தி, இதெல்லாம் பெரியவங்க காரியம்; நீ ஒண்ணும் கண்டுக்கிடாதே! போ போய் உன் வேலையைப் பாரு! இல்லாட்டா, ஏதாச்சும் ஒரு புத்தகத்தை எடுத்து வச்சுகிட்டுப் படி!” என்றார். 

“இருக்கட்டும், அப்பா! உங்களுடைய வேலையை நானும் தான் கொஞ்சம் பார்க்கிறேனே?” என்றான் அவன். 

“அப்படின்னா எனக்கும் அது சந்தோசமாத்தான் இருக்கும். ஆனா இந்த விசயம் அக்கம் பக்கம் தெரியக்கூடாது-ஆமாம். கபர்தார்” என்று அதே ‘கபர்தா’ரைச் சொல்லி, அவனையும் எச்சரித்தார் அவர். 

அவன் சிரித்தபடி, “அக்கம் பக்கத்திலேதான் யாரும் இல்லையே ?” என்று சொல்லிக் கொண்டே அவர்களைத் தொடர்ந்தான். 

ஐயோ, இது என்ன? அங்கே பூட்டியிருந்த அறை திறந்தி ருந்தது. அந்த அறைக்கு முன்னால் பத்துப் பன்னிரண்டு பேர் கூடியிருந்தனர். அதற்குள் போட்டிருந்த ஒரு நாற்காலி யின் மேல் பெரிய ஜாடி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே பயங்கர ஆகிருதியுடன் ஒருவன் நின்று கொண்டி ருந்தான். அவனுடைய கிண்ணம் கையில் ஓர் அளவுக் இருந்தது. அந்த ஆசாமி உள்ளே வந்த வாடிக்கைக்காரர்களுக் கெல்லாம் நாட்டுச் சாராயத்தை அளந்து ஊற்றிக் கொண்டிருந்தான். 

அதாவது, மதுவிலக்குப் பிராந்தியத்தில் அசல் சாராயக் கடை ஒன்று திறந்துவைக்கப்பட்டிருந்தது! 

அருவெறுக்கத்தக்க இந்தக் காட்சியைக் கண்டதும் நக்கீர னின் கண்களில் தீப்பொறி பறந்தது. அப்பா! நீங்கள் தானா சட்டத்தை மீறிச் சாராயம் காய்ச்சும் அந்தக் குடிகெடுக்கும் மனிதர்?” என்று அவன் வியப்புடன் கேட்டான். 

அவன் குரல் நடுங்கிற்று! 

“ஆமாண்டா, ஆமாம்!” என்று சொல்லிவிட்டு, அவர் ஒரு பயங்கரச் சிரிப்புச் சிரித்தார். 

அவன் தலை சுழன்றது! 

“அப்பா, இது சட்டவிரோதம்!” என்று ஆரம்பித்தான் அவன். 

“அது எனக்குத் தெரியும்; அப்புறம்?” என்று உறுமினார் அவர். 

“மனித தர்மத்துக்கும் விரோதம், அப்பா!” 

“அதுவும் எனக்குத் தெரியும்; அப்புறம்?” 

“அப்புறமா? திருட்டுச் சாராயத்தைக் காய்ச்சிஊற்றி இந்த ஊமை ஜனங்களை அணு அணுவாகக் கொல்வதைக் காட்டிலும் விஷத்தை ஊற்றி ஒரேயடியாய்க் கொன்றுவிடலாம், அப்பா!” என்றான் அவன். 

“அடேய், என்னசொன்னே ? நேற்றுபிறந்த பயல், நீ ! நீயா எனக்கு வந்து புத்தி சொல்றே? ‘இதெல்லாம் பெரியவங்க காரியம்; நீ ஒண்ணும் கண்டுக்கிடாதே!’ என்று நான் உனக்கு முன்னாலேயே சொன்னேனா, இல்லையா?- வீணா என்னுடைய கோபத்துக்கு ஆளாகாதே, போ” 

“இந்த அக்கிரமத்தை நீங்கள் நிறுத்தாதவரை என் உயிரே போவதாயிருந்தாலும் சரி, நான் இங்கிருந்து நகர மாட்டேன்!” 

“அட, பெரியசீமான் இவரு? போடா, நாயே! இந்தக் ‘கபர்தார் கண்ணாயிரம்’ கிட்டவா வந்து, நீ கணக்குப்பண்றே, கணக்கு? இந்த இடத்தைவிட்டு மரியாதையாய்ப் போறியா? இல்லே, நானே கழுத்தைப்பிடிச்சி வெளியே தள்ளட்டுமா?” என்று அவர் சிம்மநாதம் செய்தார். 

அவ்வளவுதான்; மகன் ஆட்டுக்குட்டியாக அடங்கி நின்ற இடத்திலேயே நின்றான். 

கபர்தார் கண்ணாயிரம் தம்கண்கள் ‘ஜிவ்’வென்று சிவக்க, மீசைமுறுக்குக் கலைந்து துடிக்க, அவனை ஏறிட்டுப்பார்த்தார். 

அப்பொழுதும் அவன் அசைந்துகொடுக்கவில்லை! 

அவ்வளவுதான்; ‘பளீர், பளீர்’ என்று இரண்டு அறைகள் அவனுடைய கன்னத்தில் மின்னலிட்டன். 

அவன் அசந்து போனான்! 

அதற்குப் பிறகு அவன் அங்கே நிற்கவில்லை: கன்னத்தைத் தடவிக் கொண்டே தன் அறைக்கு வந்து விட்டான். 

கள்ளச் சாராய வியாபாரம் எந்த விதமான இடைஞ்சலு மின்றி வழக்கம் போல் இரவு பத்து மணி வரை தொடர்ந்து நடந்து முடிந்தது! 

பத்து மணிக்குப் பிறகு புழக்கடை அறையை பூட்டிக் கொண்டு வந்த கபர்தார், நக்கீரனின் அறைக்குள் ஆவேசத் துடன் நுழைந்தார். 

அவருடைய ஆவேசத்தைக் கண்டதும் அவன் தன்னை யறியாமலே எழுந்து நின்றான். 

“எனக்கு முன்னமேயே தெரியும். நீ இப்படி ஏதாச்சும் ‘தத்துப் பித்து’ன்னு உளறுவேன்னு! பேசாம நான் சொல்ற தைக் கேளு? உனக்கும் எனக்கும் இனிமே சரிப்பட்டு வராது; பட்டணத்துப் படிப்புப் படிச்சி உன் புத்தி கோணலாப் போயி டிச்சு! ‘காத்துள்ளபோதே தூத்திக்கணும்’ எங்கிறாப் போல, கள்ளுக்கடையை எடுத்திருக்கிற இந்த நாளிலேதான் நாலு காசு சம்பாதிக்கணும்னு நான் இருக்கேன். அதுக்கு இடைஞ் சலா நீ இருந்தியோ, எனக்கு ரொம்பக் கோவம் வரும் – ஆமாம், கபர்தார்! அந்தக் கோவத்திலே நான் உன்னை என்ன வேணுமானாலும் செய்துப்பிடுவேன். அதனாலே இன்னிக்கு ராத்திரியே நீ திரும்பிப் பட்டணத்துக்குப் போயிடறதுதான் நல்லது. இந்தா, அம்பது ரூவா ; வச்சுக்கோ! அப்புறம் மாசா மாசம் உன் செலவுக்கு நான் வழக்கம் போலப் பணம் அனுப் பறேன் – என்ன?’ என்று நயத்துடன் கொஞ்சம் பயமும் காட்டிப் பார்த்தார் கண்ணாயிரம். 

“இருக்கிற காசே ஏழு தலைமுறைக்குப் போதுமே, அப்பா!” என்று மீண்டும் ஏதோ சபலத்துடன் ஆரம்பித்தான் அவன், 

“இந்த உபதேசம்தானே நான் வேணாங்கிறேன்?” என்று கர்ஜித்தார் அவர். 

நக்கீரனுக்கு அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரிய வில்லை; வாயடைத்துப் போனான். 

கபர்தார் கண்ணாயிரமோ அவனுடைய கையில் ஐம்பது ரூபாயைப் பலவந்தமாகத் திணித்தார். 

அவன் அந்தப் பணத்தையும் அப்பாவின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான். அதற்குப் பிறகு எதிர்ச் சுவரில் மாட்டியிருந்த தன் தாயாரின் புகைப்படத்தையும் பார்த்தான்: ஒரு நீண்ட பெருமூச்சுக்குப் பிறகு, ‘அம்மா இன்று உயிருடன் இருந்திருந்தால்?’ என்று எண்ணி, அவன் மனம் ஆறுதலடைந்தது. 

சிற்றன்னையோ அந்தப் பக்கம் தலையைக் காட்டவேயில்லை; கபர்தார் கண்ணாயிரத்தைக் கண்டால் அவளுக்கு அவ்வளவு தைரியம்! 

அவன் நின்றது நின்றபடி நின்று, மேலே என்ன செய்வ தென்று யோசித்தான். கபர்தார் பொறுமையிழந்து, “என்ன சொல்கிறாய்?” என்று அதட்டினார். 

“அப்படியே ஆகட்டும், அப்பா!” என்று சொல்லிவிட்டான் அவன். 

அந்த நிமிஷம் அப்பாவின் யோசனை அவனுக்கும் ஒரு விதத்தில் நல்லதாகவே தோன்றிற்று; ஆனால் அடுத்த நிமிஷம்?…… 

அவனுடைய மனத்திலே ஒரு பெரிய போராட்டம் எழுந் த்து. அந்தப் போராட்டத்தின் காரணமாக அவனுடைய யோசனை வேறு திக்கை நோக்கிச் சென்றது. அந்தத் திக்கிலே தன் பெயருக்குக் காரணமான ஒரு தமிழ்ப் புலவன், ‘நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே!’ என்று அருந்தமி ழைப் பெற்றெடுத்த ஆதிசிவனையே எதிர்த்து நின்ற காட்சியை அவன் அகக்கண்ணால் கண்டான். 

அவ்வளவுதான்; அவன் உள்ளத்தில் குமுறிக்கொண்டிருந்த எரிமலை வெடித்தது! 

அதன் பலன்?…… 

அன்றிரவே வீட்டை விட்டுச் சென்ற நக்கீரன், மறுநாள் காலை கபர்தார் கண்ணாயிரம் கொஞ்சம் எதிர்பாராதவிதமாகப் போலீஸ் அதிகாரிகளுடன் உள்ளே நுழைந்தான். அப்புறம் என்ன?-புழக்கடையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த அறை அவ ருடைய உத்தரவில்லாமலே திறக்கப்பட்டது. அதற்குள்ளிருந்த சாராய ஜாடிகளெல்லாம் போலீஸாரால் கைப்பற்றப்பட்டன. 

அவர் கைதியானார்! 

காட்டுத் தீ போல் பரவிய இந்தச் சேதி தாழம்பேடு முழு வதையுமே ஒரு கலக்குக் கலக்கிவிட்டது. அதன் காரணமாக நக்கீரனைச் சிலர் வைதார்கள்; சிலர் வாழ்த்தினார்கள். நல்ல முத்தோ அவனைத் ‘தெய்வம்’ என்றே கொண்டாட ஆரம் பித்து விட்டான்! 

நக்கீரன் எதையும் பொருட்படுத்தவில்லை யென்றாலும், அவ னுடைய இதயத்தின் அடிவாரத்தில் மட்டும் இன்னதென்று விவரிக்க முடியாத ஏதோ ஒரு வேதனை குடி கொண்டது. அந்த வேதனையுடன் அவன் சிற்றன்னையை நெருங்கி, ‘சித்தி, என்னை மன்னித்து விடுங்கள். சித்தி!” என்றான் தழதழத்த குரலில் 

“என்னதான் இருந்தாலும் இப்படிக் கூடச் செய்யலாமா நீ?” என்றாள் அவள். 

நக்கீரன் அதற்குப் பதில் ஒன்றும் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டான். அவனுடைய கண்களிலிருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர்த் துளிகள் கீழே விழுந்து சிதறின. 

“சொல் தம்பி, உன்னைப் பெற்று வளர்த்தவர் இல்லையா, அவர்?” என்றாள் அவள் மீண்டும். 

அதற்கும் அவன் குனிந்த தலை நிமிராமல், “ஆமாம்” என்றான். 

“நக்கீரன் என்று அழகாகப் பெயரிட்டு, நாவினிக்க அழைத்தவர் இல்லையா, அவர்?” 

“ஆமாம்.” 

“நீ படித்து முன்னுக்கு வரவேண்டும் என்பதற்காகப் பணத் தைத் தண்ணீராகப் பாவித்துச் செலவழித்தவர் இல்லையா, அவர்?” 

“ஆமாம்.” 

எல்லாவற்றுக்கும் அவன் ‘ஆமாம், ஆமாம்’ என்று சொல் லவே, அவள் இன்னும் கொஞ்சம் அவனை நெருங்கி, “அப்படிப் பட்டவரா உனக்கு விரோதி?” என்றாள் கொஞ்சம் வேகமாக. 

அவ்வளவுதான்; ”அவர் எனக்கு விரோதி இல்லை!” என்று சொல்லிக்கொண்டே அவன் தலை நிமிர்ந்தான். 

“பின்னே யாருக்குத் தம்பி, விரோதி?” என்றாள் அவள். 

“சட்டத்துக்கு விரோதி, சமூகத்துக்கு விரோதி; நீதிக்கு விரோதி,நேர்மைக்கு விரோதி!” என்றான் அவன்.

– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.

விந்தன் என்று அறியப்படும் கோவிந்தன் (செப்டம்பர் 22, 1916 - ஜூன் 30, 1975) புதின எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார். கோவிந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் வேதாசலம், ஜானகி ஆகியோருக்குப் பிறந்தார். சென்னை சூளைப் பகுதியில் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார். இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *