கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 5, 2023
பார்வையிட்டோர்: 1,299 
 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

…பணத்தை மட்டும் சேர்த்துவிட்டால் போதுமா? அதற்காகவே, உண்ணாமல் உறங்காமல் ஒடினால் போதுமா? ஒற்றைக்கு ஒரே மகன்; காலங் கடந்து பிறந்த செல்லப்பிள்ளை என்னும் உணர்ச்சிச் சூழல்களில், அவனை நல்லபடி வர்த்து உருவாக்கும் பொறுப்பைச் சோரவிட்ட குற்றம் மாஸ்டரைச் சார்ந்ததே. ஆமாம்; பையன் சதுரங்க ஆட்டத்தின் ஆரம்பக் கட்டங்களில் தவறுகள் இழைத்தது போல, அவனுடைய தந்தையும் பிள்ளை வளர்க்கும் பொறுப்பில் தவறு இழைத்து விட்டவரே…

-பேராசிரியர் சாலை இளந்திரையன்

செருக்களத்திலே

கஜ ரத துரக பதாதிகள் அணி வகுத்து நிற்கின்றன. யானையின் பலம், குதிரையின் காம்பீரியம், தேரின் வேகம்…

இவற்றை மறைப்பது போலக் காலாட்சிகளின் உபரி.

இரு பக்கமும் சமபலம்.

கட்டிலிலே பெரியவர் சுருண்டு கிடக்கிறார். எதையோ நினைத்துக் கொண்டவராகப் படுக்கை நிலையிலேயே புரண்டு டயறியைப் புரட்டுகிறார். பென்சிலை வாயிலே கவ்விக் கொண்டு மனக்கணக்கிலே லயிக்கிறார். வருமான வரிக்கான கணக்குகளுக்கு மட்டுமே எழுத்துக் கணக்குத் தேவை. தேவையும் மறுமுனை உந்துதலின் விளைச்சல். மற்றும்படி எந்த பெரிய கொடுக்கல் வாங்கலையும் மனத்திலே பதித்து வைத்துக் சீராக நடத்தக் கூடிய ஆற்றல் அவருக்கு உண்டு.

படுக்கையிலே கிடந்து பழங் கணக்குப் பார்க்கும் பெரியவர்.

செருக்களமோ? படுக்கையோ?

இது சதுரங்கப் பலகை!

அதன் இரு புறமும் மோகனும், அவனுது நண்பனும் அமர்ந்திருக்கிறார்கள்.

ஆரம்பக் கட்டத்திலே ‘மூவ்’ ஆக ‘காஸ’லிங்’செய்கின்றான். யானை தன் இருப்பிடம் பெயர்ந்து அரசனுக்குப் பக்கத்தில் வந்து நிற்கின்றது. கோட்டை கட்டிக் காவல் செய்த பின்னரே, தன் படையின் பலத்தை எதிரி சங்காரத்திற்கு முன்னனுப்பும் யுக்தி!

“தம்பீ…!” உள்ளேயிருந்து தகப்பனது குரல் வலிக்கின்றது.

“வன் மினிற்…நௌ இட் இஸ் யுவர் மூவ்…” எனக்கூறி எழுந்து, ஆட்டப் பலகையை ஒருமுறை பருந்துப் பார்வையால் மனத்திலிருத்திய பின்னர் உள்ளே செல்கின்றான்.

“தம்பி, அவர் ராமச்சந்திரனைப் போய்ப் பாத்தியா? வரேக்கை புத்தகக் கடைக்கும் போயிட்டு வரச் சொன்னான்…”

அவர் ஆடமுடியாவிட்டாலும், மோகனை ஆட்டி வைக்க எவ்வளவோ பிரயத்தனம் எடுத்துக் கெள்கின்றார்.

“நான் போன் பண்ணினன்…அவர் அங்கையில்லையாம்…புத்தகக் கடைக்கும் டெலிபோன் பண்ணினனான்… இன்னமும் அந்த செக் ரியலைஸ் ஆகி வரேல்லையாம்.”

மோகன், தான் இருந்தவிடத்திலிருந்தே செய்து முடித்தவற்றை எல்லாம் ஒப்புவிக்கின்றான்.

“சரி…தம்பி, நீ ஒண்டும் இன்னமும் விளங்கிக் கொள்ளேல்லை. நேரிலை போய்ப் பார்த்தால்தான் எங்கடை அவசரம் அவங்களுக்கு விளங்கும். டெலிபோன் எண்டால் தெரியாதே? ஆறுதலாக்கும் எண்டு நினைச்சுக் கொள்ளுவாங்கள். எதுக்கும் ஏழரை மணிபோலை ஒருக்காப்போய்ப் பாத்திட்டு வா…ஏழுமணிக்கெல்லாம் அவர் வீட்டை வந்திடுவார்.”

“ஓ…அதுக்கென்ன போய்ப் பாத்திட்டு வாறன்…நேரம் கிடக்குதுதானே.”

பெரியவர் பெருமூச்சு ஒன்றை அவஸ்தையுடன் வெளியேற்றுகின்றார்.

விறாந்தைக்கு மீண்ட மோகன் தன் நண்பன் செய்த ‘மூவ்’வை அலசுகின்றான்.

இவன் என்ன செய்யப் போகிறான்? டெலிபோனிலை எல்லாவற்றையும் முடித்துக் கொள்ளலாமெண்டு நினைக்கிறானே. ஒரு முறைக்கு ஆயிரம் முறைபோய் நச்சரித்தாலும் குடுத்ததை வாங்கிக் கொள்ளுறது பெரும்பொறுப்பாக இருக்கிற இந்தக் காலத்திலை என்னரை கண்ணுக்கு முன்னாலேயே இவனுக்கு இந்த அலுவல்களிலே கரிசனை உண்டாக்கி விடவேணும் எண்டுதான் நானும் பாடுபடுறன்…ஒண்டுக்கும் ‘மசியமாட்டன்’ என்கிறான்.

அவள், தாய்தான் செல்லம் குடுத்து எல்லாத்தையும் பழுதாக்கினது.

அவளை ஏன் குறை சொல்லுவான்? எட்டு வருஷம் பிள்ளையை இல்லையே எண்டு ஏங்கிக் கிடந்தவள். இவனுக்காகத் தவம் கிடந்தவள்.

நான் மட்டும் என்ன? அந்த நேரத்திலை கண்டிச்சு வைச்சிருந்தால் இப்பிடியா வளர்ந்திருப்பான்?

விளையாட்டு நெருக்கடிக் கட்டத்தை அடைந்து, களை கட்டுகின்றது. தகப்பன் வெளியே வரமாட்டார் என்னும் உணர்வும் தென்புதர, கைகள் தாமாகவே ‘பக்கெற்றை’ப் பிரித்து சிகரெட் ஒன்றை உதட்டிற் பொருத்துகின்றன. இவன் நீட்டிய பக்கட்டிலிருந்து நண்பனும் ஒரு சிகரட்டை எடுத்துக் கொள்ளுகிறான். அவன் தட்டிய நெருப்புக் குச்சியிலேயே இவனும் பற்றவைத்துக் கொள்ளுகின்றான்.

தகப்பனுக்கு முன்னால் மோகன் புகைப்பதில்லை. அந்த அளவுக்கு மரியாதை உண்டு. ஆனால், தாய் நெருப்புப் பெட்டி எடுத்துக் கொடுப்பதுண்டு என்பது பிரஸ்தாபம்.

இருவரது உதடுகளும் சிகரெட்டுகளைக் கவ்விய படியிருக்க, கண்கள் ஆட்டப் பலகையை நோட்டமிடுகின்றன. சாம்பல் உதிராது உப்படியே யிருக்க, சிகரெட்டுகளிலிருந்து நீலப் புகை நிலை குத்தாக மேல் நோக்கி எழுகின்றது. நண்பன் இடக்கை ஆள்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கு மிடையே சிகரெட்டை இடுக்கிச் சாம்பலைத் தட்டுகின்றான். அவன் ஓர் இழுவை புகையை நெஞ்சுக்குட் புகுத்தி, இரண்டு புகை வளையங்களை வெளித் தள்ளியபடி குதிரையொன்றினால் ‘செக்’ கேட்கிறான். அரசனைக் காப்பாற்றிய மோகன் குதிரையின் பின்னங் காலடியினால் யானையை இழக்கின்றான். கோட்டை கட்டி அதற்குக் காவலாக வைக்கப்பட்ட யானை முன் யோசினையில்லாது அசைந்ததால் இப்படிக் குதிரைப் பாய்ச்சலுக்குள் சிக்கிவிட்டது.

கையிலே கன்னத்தைச் சாய்த்து, கழுத்தை ஒரு கோணத்திலே திருப்பி, காகப் பார்வையினால் ஆட்டப் பலகையை அலசுகிறான் மோகன்.

உள்ளே பெரியவர் உடல் குலுங்க ஒரு பாட்டம் இருமுகிறார். உழைத்து உழைத்து நைந்துபோன உடல், நோயின் உபாதையைத் தாங்க இயலாது குலுங்குகின்றது.

பம்பரம் சுழன்று கொண்டிருக்கும் வரை தன் அச்சை நிமிர்த்தி, அசைவிலேயே உறுதிச் சமநிலை போன்ற ஒரு தோற்றந் தருகின்றது. சுழற்சி மந்த கதியடைய, தள்ளாட்டம் ஏற்படுகின்றது. தள்ளாடி விழப்போகும் நிலை…

வைத்தியரின் கட்டாயத்தின் பேரில் அவர் கட்டிலிலே சுருண்டு படுத்துக் கிடக்கின்றார்.

மிஷன் பாடசாலையில் உதவி ஆசிரியராக மட்டும் வாழ்ந்திருந்தால், இன்று அவர் ஓர் ஓய்வுபெற்ற ஆசிரியராகவே மதிக்கப்பட்டிருப்பார். ஆனால், இன்று அவர் நிலை வேறு. பென்ஷன் பணத்தை எடுத்து, எண்ணி எண்ணிச் செலவு செய்யவேண்டிய அவல நிலையுமில்லை.

சிலர் அவரை மாஸ்டர் என அழைத்தாலும் அது பெயருக்கமைந்த பட்டப் பெயராகவே பயிலப்படுகின்றது. அவர் ஒரு லட்சாதிபதி என்பதை யாவரும் அறிவர்.

வடக்கேயிருந்து வயிற்றுப் பிழைப்புக்கென்றே வரும் உத்தியோகத்தர் பலர் ஒரு காலைக் கந்தோரிலும், மறுகாலைப் புகை வண்டியிலுமாக வைத்து ‘வீக்கென்ட்’ பயணத்திலேயே காலத்தை விரயஞ் செய்து, இங்குமில்லாத அங்குமில்லாத திரிசங்கு நிலையிலே தொங்கி, ஊருக்கு நல்ல பிள்ளையாக, போன இடத்தில் ‘பாயோடு ஒட்டிவிடாது’ தப்பித்துக் கொள்ள விழையும் முயற்சியில் எதையும் சாதித்துவிடாது அல்லற்படும் காலத்தில், ஸ்திரமாக இரண்டு கால்களையும் வந்த இடத்திலேயே ஊன்றி, தன்னம்பிக்கையையும் விடா முயற்சியையும் உரமாகப் பெய்ய, ஆணிவேர் ஆழமாகச் சென்று நிலைபெற்று, மரம் தலைநிமிர, பக்க வேர்களும் சல்லிவேர்களும் பரவிப் பெருக, தனி மரமே குளிர்தரும் தோப்பாக மாறிவிட்ட பெருமை!

அந்த நிழலையும் தண்மையையும் அநுபவிப்போர் பலர்…நாணயஸ்தர் என்னும் பெயரை நிலை நாட்டியதும், அந்தப் பெயரே முதலாக நின்று திருமகளை அழைக்கின்றது. அந்தப் பெயரை உருவாக்குவதற்குத்தான் எவ்வளவு காலம்; எவ்வளவு பிரயத்தனம்.

தேடுவதைவிட, தேடியதை நாலு தலைமுறைக்கு நிலைக்கப் பண்ணுவதிலேயே பெருமை அதிகம். இருந்தும் ஆயிரம் பொன், இறந்தும் அயிரம் பொன் என்றிருக்க வேண்டுமே, யானைபோல!

சதுரங்க விளையாட்டில் நண்பனின் யானை ஒன்றை வெட்டி, அதற்காகத் தன் தேரினைப் பறிகொடுக்கின்றான். மோகன்

யானைக்கும் அடி சறுக்கும்…உண்மை தான்.

நான் எவ்வளவு நிதானமாக, மதங் கொள்ளாத யானையாக வாழ்ந்து விட்டேன். ஆனால்…

மோகனை இப்படிப் பொறுப்பில்லா தவனாக வளர்த்துவிட்ட குறை என்னையுஞ் சாரும்.

அன்றொரு நாள், பள்ளிக்கூட இன்டர்வெல் நேரத்திலை, முற்றவெளியில் கூட்டாளிகளோடு சேர்ந்து சிகரேட் புகைப்பதைப் பார்த்து, அவ்விடத்தில் வைத்தே ஒர் அறை அறைந்தேன். ஆத்திரத்தில் அது பலமாகத்தான் விழுந்துவிட்டது. வீட்டுக்கு வந்தவன், ‘நச்சுக்காய் தின்று செத்துப் போவேன்’ எனத் தாய்க்காரியுடன் தர்க்கம் பண்ணி கடைசியிலை நான் சமாதானஞ் செய்து பத்து ருபாக் காசும் குடுத்துப் படம் பார்க்க அனுப்பி வைச்சன்.

ஒரு அலுவலிலும் அக்கறை இல்லை. அதுதான் பெரிய யோசினை. கிரிக்கெற் எண்டு எவ்வளவு தொந்தரவு பண்ணி விட்டான். வீட்டிலை பிரக்டீஸ் பண்ணுவதற்கு ஒரு ‘பாற்’ (BAT) வாங்கி விளையாடினான். அதிலை ஒண்டுமில்லை. எழுபத்தைந்து ரூபாதானே? போனால் போகுது. ஒரு மாட்சிலே நல்லா விளையாடினானாம். எனக்கென்ன தெரியும்?

அவங்கள் வாத்திமாரும் சேந்துதான் பழுதாக்கினது.

வீட்டிலை படிப்பும் இல்லை, ஒண்டுமில்லை. கிரிக்கெற்தான்! பின்னர், சம்பியன் மாட்சிலே தோற்றுப் போனாங்களாம். தோற்கறதிலை ஒண்டுமில்லை. வெற்றி தோல்வி இருக்கிறதுதானே? விளையாட்டை விடுவம்.

படிக்கிறதுக்கு எத்தினை டியூஷன்? ஒவ்வொரு பாடத்திற்கும் திறம் திறம் வாத்திமாரை வைத்து டியூஷன் சொல்லிக் குடுத்தன். நான் படிக்கிற காலத்திலை இப்படி வசதியிருந்திருந்தால் எப்ப நான் இருக்க வேண்டிய நிலை என்ன?

அது சரி…இப்பத்தான் என்ன குறைவோ?

பெரியவர் மீண்டும் இருமித் தள்ளுகிறார்.

சதுரங்க விளையாட்டு, இறுதிக் கட்டத்தினை நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

ஆட்டப் பலகையிலே, காய்கள் பாலைவனத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உயிர்ப்புப் பெற முயலும் புல் பூண்டைப் போலிருந்தன.

அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் வீடுகளையும் வளவுகளையும் பெரியவர் வாங்கினார். எல்லாமே இப்பொழுது உயிர்ப்புக் கொண்டுவிட்டன. கைராசிக்காரர். தொட்டதெல்லாம் பொன்னாகின.

மோகனது காய்கள் ஒவ்வொன்றாகக் குறைந்து வருகின்றன. அரசனுக்குத் துணையாக மூன்று காலாள்களே எஞ்சியிருக்கின்றன. எதிரியின் நிலை ஏதோ படைப் பலம் பொருந்தியதல்ல. இருந்தாலும், யானையொன்று மேலதிகமாக நின்று அரசனுக்குத் துணை செய்கின்றது.

ஊருணி நீர் நிறைந்தற்றே உலகு-அவாம் பேரறிவாளன் திரு

படுக்கையிலே கிடக்கும் பெரியவரின் நினைவுகள் வேறொரு தடத்தில் கிளை பிரிகின்றன.

ஆசிரியர் தொழிலிருந்து ‘பிறி மட்சூராக’ ஓய்வுபெற்ற பொழுது பிரியாவிடை ஒன்று நடைபெற்றது. அதிலே பலர் எழுந்து பேசினார்கள். அவர்களுட் பலர் கடமைப்பட்டவர்; சிலர் கடன் பட்டவர். கடன்பட்டவர்தாம் பேரறிவாளன் திருவையும் ஊருணியையும் பிணைத்துப் பேசினர்.

ஊருணிக்கு நீர் கிடைத்த வரலாறு…அது யாருக்குத் தெரியும்? யுத்த காலத்தில் ஏறாவூரிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அரிசி ‘ஏற்றுமதி…’ பொலீஸ் கட்டுக் காவல் எல்லாவற்றிலும் மண்தூவி ‘மற்றது’ இறக்குமதி…சட்டென்று விளைந்த மூலதம்…பண வருவாய்க்கு பதில் சொல்ல சின்னச் சின்னக் ‘கொந்தராத்துகள்…’ அதுவே பெரிய பிஸ’னஸ் ஆக மாற, பல்கிப் பெருகிய பெரிய கொந்தராத்துகள்!

கண்ணுக்குள் எண்ணெய் ஊற்றிக் கொண்டுதான் போட்ட முதலைத் திருப்பி யெடுக்கவேணும் ஊருணியிலிருந்த வெள்ளத்தை வந்த வெள்ளம் கொண்டு போகாமற் தடுக்கப் பாடுபட்டதெல்லாம் யாருக்குத் தெரியும்?…எத்தனை சந்தர்ப்பங்களில் அவன்ரை இவன்ரை காலிலை கையிலை விழுந்து ஒவ்வொரு ‘ஸ்ரேஜா’கப் ‘பாஸ்’ பண்ண வைத்திருக்கிறன். ஒண்டென்று விட்டிட்டு இருக்க முடிந்ததா….? பலதையும் பத்தையும் ஒரு நேரத்தில் பாத்தாத்தான் ஊருணிக்கு நீர் வரும். வாற வெள்ளம் கொஞ்சம் தங்கும்.

யானைப் பலமும் ஞாபகமும் வேண்டுமே.

நிலத்தில் விழுந்த ஊசியையும் பொறுக்கி எடுக்கத்தான் வேண்டும்.

ஊசிபோக இடம் விட்டால், உலக்கையும் போய்விடும்…

நினைவுக் கிளையின் பிறிதொரு கிளை

அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் துயில் எழுந்திருத்தல் அவரது வழக்கம். எல்லோரும் விடியற்காலை குளிரிலே குதிரும் உறக்க இன்பத்தில் மூழ்கிக் கிடப்பார்கள். பிளாஸ்கிலிருக்கும் கோப்பியைத் தானே ஊற்றிக் குடிப்பார். இருபது மைல்களுக்கு மேல் கார்களிலும், லொறிகளிலும், வசதிபோல பஸ்ஸ”களிலும் தொற்றி ‘சேர்கிட்’டை முடிப்பார். ஆங்காங்கு கொந்தராத்துத் தளங்களைப் பார்த்து, அததற்குத் தேவையான மணல், சீமேந்து, ஷ“ற் ஒழுங்குகளைக் கவனித்துத் திரும்புகையில் மணி எட்டை நெருங்கும். வந்ததும் வராததுமாக நாலு வாளியைத் தலையில் ஊற்றிக் கொண்டு எதையாவது கொறித்துவிட்டுப் பள்ளிக்கூடத்தை நோக்கிச் சைக்கிளைத் தள்ளுவார். பள்ளிக்கூட வேலையோடு அலுத்துப் போகிறவரல்லர். இரவு எத்தனை மணிக்கு அலுவல்கள் ஓயுமென்பது அவருக்கே தெரியாது.

ஒரு யானையை மட்டும் அதிகமாக வைத்துக்கொண்டு மோகனை மடக்கிவிட முடியவில்லை. யானையின் நேர்ப்போக்கு மூலைக்குள் மடக்கியடிக்கும் தன்மையற்றதே. மோகனின் அரசனுக்கு அங்குமிங்கும் ஒரு குறிக்கோளற்று அலைய வேண்டிய நிலையேற்பட்டிருக்கிறது. நாலு, ஐந்து ‘மூவ்’கள். மூச்சுவிட அவகாசங் கிடைத்தால் காலாளை ஏற்றி விடலாம். ஆட்டத்தின் போக்கும் மாறும். ஆனால், மூச்சுக்கு மூச்சு ‘செக்’காகவே இருக்கின்றதே…அரசனில் வைத்த கையை எடுக்காமலேயே, ஒவ்வொரு செக்கிற்கும் ஒவ்வொரு இடமாகத் தள்ளிக் கொண்டிருக்கின்றான்.

ஊதாரித்தனமாகக் காய்களை இழந்ததால் ஏற்பட்ட தவிப்பு.

எத்தினை பேருக்கு எத்தினை இடத்திலை ‘அப்போயின்ட்மெண்ட்’ எடுத்துக் குடுத்திருக்கிறன். அந்தப் பொடியளும் என்னவோ கவனமாக வாழ்ந்து, கச்சிதமாக மூன்று நாலு சேர்த்திருக்கிறார்கள்.

இவனுக்கு என்ன வந்தாலும், தாங்குவதற்குத் தாராளமாக இருக்கிறது என்ற எண்ணம்.

‘இங்கை இந்த அலுவல்களைப் பாக்க விருப்பமில்லாட்டில் கொழும்பிலை போய்ப் படியன்’ என்று அனுப்பினன். அங்கே வெட்டிப் பிளந்தது எதுவுமேயில்லை.

நாகரீகப் பழக்கங்களுடன் வந்து சேர்ந்திருக்கிறான்!

உழைத்துச் சேர்க்க வேண்டாம்; சேமித்து வைத்துள்ளதை அதம்போகாது பேணவாவது தெரியுமா?

‘செட்’டாகச் செலவழித்து, உடலை வருத்தினாத்தான் செல்வம் எங்களோடை தங்கும். றெயிலடியிலை இருந்து வீட்டுக்கு வாடகைக் காரிலை வந்திறங்கத் தெரியாதே? வீணாக ஏன் இரண்டு ரூபாய் குடுப்பான், சைக்கிளை றெயிலடியில் கொண்டு வந்து மோகன் வைச்சிட்டுப் போனால் சிலவு மிச்சம்.

ஆனால் அவன்….?

சைக்கிளை றெயிலடியிலை எனக்காக வைத்துவிட்டு, வாடகைக் காரிலை அவன் வீட்டு ககு வந்துவிடுவானாம். இதைப் பார்க்கத் தாய்க்காரிக்கு பகிடியாகவும் இருக்கிறதாம்.

மோகனது அரசன் தனியனாகிவிட்டான். காலாள்கள் வெட்டப்பட்டு விட்டன.

பெரியவர் தனியனாகக் கிடந்து மீண்டும் பழங்கணக்குப் பார்க்கின்றார்.

புதுக் கணக்கு ஆரம்பிக்க வேண்டியவன் தனி அரசனைக் காப்பாற்றும் பிரயத்தனத்திலே தவிக்கின்றான். ஆரம்ப கட்டங்களில் இழைத்த தவறுகளின் கூட்டு விளைவாகப் போக்கிடமில்லாத அவதியை உண்டாக்கியிருக்கிறது.

நண்பனுடைய சிந்தனையற்ற ஒரு ‘மூவ்’. செக் அல்ல. ஆனாலும், மோகனின் அரசனால் எங்கும் செல்ல முடியாத நிலை. ‘ஸ்ரேல் மேற்’!

ஒபீஸ் அறையில் டெலிபோன் மணி கிணுகிணுக்கின்றது.

“தம்பி, என்னெண்டு போய்க்கேள்…”

பெரியவர் கட்டிலிற் கிடந்து குரல் கொடுக்கின்றார்.

“ஓம்…” என்று உரத்துக் கூறியபடி மோகன் டெலிபோனை நோக்கிச் செல்கின்றான்.

நண்பன் ஆட்டப் பலகையை வெறித்துப் பார்த்தபடி இருக்கின்றான்.

“என்னவாம்?”

கட்டிலிலே சுருண்டு கிடக்கும் பெரியவர் கேட்கின்றார்.

– சிறு கை நீட்டி, முதற் பதிப்பு: அக்டோபர் 1998, மித்ர வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *